காத்திருப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

அமுதாராம்
நோய்வாய்ப்பட்ட பிணம் குளிர்சாதனப் பெட்டிக்குள் பைய நாற ஆரம்பித்ததும் ஆளாளுக்குப் பேசத் தொடங்கிவிட்டிருந்தனர்.மாலை,சாம்பிராணி,ஊதுவத்தி இத்யாதி நாற்றம் துக்கப்பட்டினிக் கிடந்தோருக்கு வெறும்குடலைப் பிறட்டிக்கொண்டு வந்தது.மெல்ல அழுதுபுலம்பியபடி நடப்பவற்றை உணர்ச்சியற்று அரை மயக்கத்தில் மேய்ந்தவாறு ஜீவனின்றிப் பிணத்தின் கால்மாட்டின் மூலையில் சரிந்துக்கிடந்தாள் மீனாட்சிப்பாட்டி.
செத்த கிழவருக்கு வயது தொண்ணூற்றாறை நெருங்கும்.சதத்தை அவ்வூரே ஆச்சரியத்தோடும் சற்றுப் பொறாமையோடும் எதிர்நோக்கியிருந்த சமயம்,காலன் கறாராக சுப்பிரமணியத்தின்மீது மாயச்சுருக்குக் கயிற்றைவீசிக் குரல்வளையினை நெரித்துத் தள்ளிவிட்டான் போலும்.இப்போதும் அந்த பழைய மங்களகரம் மீனாட்சிப்பாட்டியிடம் குன்றிமணியளவு கூடக் குன்றாமல் காணப்பட்டது.எனினும் அதில் பழைய சோபையில்லை.தவிர,இரு கை கொள்ளாத அளவிற்கு புஜம் வரை நீளமுள்ள எப்போதும் நேர்த்தியாய்ப் பின்னி பெரிய வலைக்கொண்டைப் போடப்படும் கோரை வெள்ளிக்கற்றைக் கூந்தல் காணச்சகிக்க முடியாதவாறு வெடித்தப் பஞ்சாய்ச் சிலும்பிக் கிடந்தது.மஞ்சள் அப்பிய அழகிய முகச்சுருக்கங்கள் ஒவ்வொன்றும் அவ்விருவரின் அன்றிலையொத்த தாம்பத்திய வாழ்வின் மேன்மையை எடுத்துக்காட்ட வல்லவை.
சொத்துசுகத்திற்கு அவர்களுக்கு ஒருகுறையுமில்லை.பொன்விளையும்பூமி அவர்களுடையது.இருபோகத்திற்குக் குறையாத விளைச்சல்தான் எப்போதும்.கிழவரும் நல்ல கடும் உழைப்பாளி.சிங்கப்பூர் வெள்ளி,டாலரில் அவருடைய மகனும் மருமகளும் கொழித்துக் கிடப்பதில் மீந்தும் எச்சத்தை இரந்துப் பெற்றுக்கொண்டு ஒருபோதும் எஞ்சிக்கிடக்கும் தம் வாழ்க்கையை ஓட்ட விரும்பாதவர்.அவரவர் உழைப்பு அவரவர்க்கு என்பதில் ஆழ்ந்தப் பற்றுள்ளவர் அவர்.கடைசிவரை தன் சொந்தக் காலில் தன்னையும் தன்னை நம்பிக் கைப்பிடித்த பெண்டாட்டியையும் கைவிடாமல் ஊரும் உறவும் மெச்ச வாழ்ந்தவர் இதோ இப்போது ஆசைக்கும் ஆஸ்திக்கும் உரிய தன் ஒற்றை வாரிசின் வரவுக்காக மூச்சையிழந்துக் கண்மூடி சவப்பெட்டிக்குள் அழுகும் அளவிற்குக் காத்துக்கிடப்பது காலத்தின் கொடுமையாகும்.
“எப்பா பன்னீரு நேத்து கருக்கல்ல போன உசுரு.இந்தா இன்னைக்கி அந்தியாகி இரா நெருங்கப் போவுது.வயசானக் கட்டை.தாங்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.கொஞ்சம் நெலைமையப் புரிஞ்சிக்கிட்டு சல்தியா அவரு புள்ளைய வரச்சொல்லுங்கப்பா.பொண்டுப் புள்ளைகளேர்ந்து எல்லாம் ரெண்டுநாளா கொலைப்பட்டினியாக் கெடக்குது வேற.”
அப்பெரியவரின் உண்மையான அக்கறையினை அங்குக் குழுமியிருந்த பலரும் அதனைச் சரியென்றே ஆமோதித்தவண்ணம் ஆளாளுக்கு ஏதேதோ பேசத் தொடங்கிவிட்டனர்.ஒப்பாரி,டொம் சத்தத்தைத் தவிர வேறெந்த சத்தமும் கேட்காத அந்த இடம் இப்போது மொய்மொய்யென ரீங்கரிப்பதை விரும்பாத பன்னீர் தன் பெரியம்மாவான மீனாட்சிப்பாட்டியின் சம்மதத்துடன் கடைசியாகத் தன் செல்பேசியினை எடுத்துக்கொண்டு தனியே சென்றான். தனக்கு நேர்ந்த இதுமீதான மிகுந்த எரிச்சலையும் மன உளைச்சலையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மருவிக்கொண்டு வேகமாக முடுக்கிவிட்டு எதிர்முனையின் பதிலுக்காக வெகுநேரம் காத்திருந்தான்.நெற்றியிலிருந்து வழிந்து ஓடிவந்த ஓர் ஒற்றை வியர்வைத்துளி எப்படியோ செல்பேசியால் பொத்தியிருந்த வலது காதோரத்திற்குள் புகுந்து நசநசத்தது பன்னீருக்குள் கோபத்தை மேலும் கூட்டியது.
“நேரங்காலந் தெரியாம சனியன் இது வேற.”
இடக்கையால் செல்பேசியினை அனிச்சையாய் வேற்றிடம் மாற்றியபடி வலக்கைச் சுண்டுவிரலால் தலையை வேகமாக வாகாகச் சாய்த்துக்கொண்டு அத்திடீர் காதடைப்பை மூளையையே எட்டிவிடும் அளவிற்கு சுழற்றிச்சுழற்றிக் குடைந்து கொண்டிருந்த சமயம்-மறுமுனையில் சுந்தர் சிக்கிவிட்டான்.
“யப்பா சுந்தர் மொதல்ல நீ எங்கிருக்க?எத்தினிவாட்டி ஒனக்குப் போன் பண்றது?அப்படியே பண்ணாலும் சாமானியத்துல ஒனக்குக் கெடைச்சுத் தொலைய மாட்டேங்குது.இங்க ஆளாளுக்கு எல்லாம் பறந்துக்கிட்டுருக்கு.நீ என்னடான்னா ஏதோ விருந்துக்குப் போறதுக் கணக்கா ஆரஅமர வந்துக்கிட்டுருக்க.என்னால இங்க ஒனக்கொசரம் பதில்சொல்லி மாள முடியுல.”
தனக்குக் கிடைத்த சாக்கை வைத்துக்கொண்டு பன்னீர் சரமாரியாகப் பொரிந்து தள்ளிவிட்டான்; என்றே சொல்லவேண்டும்.மூச்சிறைத்தது.அவனது காதுமடல் மெல்ல சுட ஆரம்பித்தது.இதற்கிடையில் அவனைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டதை எளிதில் களைந்து வெளியேற வழியின்றித் தவித்தவனின் முகபாவனைக்கேற்ப தன்னைச் சுற்றி மொய்த்தவர்களது முகபாவனைகளும் மாறுவதுகண்டு அவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.என்றாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.சபை நாகரிகம் அவனை ரொம்பவே தடுத்தது.ஆனாலும் முகத்தில் உருவான விரிந்த மலர்ச்சியினை என்னசெய்தும் குறுக்க இயலவில்லை.கணப்பொழுதில் அது அவனிடம் கூம்பத் துவங்கிவிட்டது.
“இப்பத்தான் நான் திருச்சி வந்துருக்கேன்.எப்படியும் நான் அங்கு வந்துசேர இன்னும் கொறைஞ்சது மூணு மணிநேரமாவது ஆவும்.அதுவரை எல்லாரையும் பொறுக்கமுடியும்னா இருக்கச் சொல்லு.இல்லாட்டி எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு அவங்கவங்க சோலியப் பார்த்துட்டுப் போவச்சொல்லு.நானும் மனுஷந்தான்.மிஷினுல்ல.பறந்துவர்ற காருக்குள்ள நான் சிட்டுக்கணக்கா பொசுக்குனுப் பறக்கமுடியாது.புரிஞ்சிக்க.”
“அது சரிப்பா.நீ கௌம்புறப்பயே கொஞ்சம் முன்கூட்டிக் கௌம்பியிருந்தா இப்ப இந்த அவஸ்தைக் கெடையாதுல்ல.”
“ஒன்ன மாறி எல்லாத்தையும் அள்ளிக்கொடுத்துட்டு ஒண்டிக்கட்டையாயிருந்தா நீ சொல்றது சரி.நான் குடும்பஸ்தன்.எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டுதானே வரணும்.”ஓர் அசாதாரண விபத்தில் திருமணமான மூன்றே மாதத்தில் வயிற்றில் வளர்ந்த கருவோடு மனைவியை அம்போவென பறிகொடுத்து நீறுபூத்த நெருப்பாக மனத்தின் ஒரு மூலையில் கனன்றுகொண்டிருந்ததை சுந்தர் வேண்டுமென்றே கிளறிவிட்டான்.பன்னீர் அதுகுறித்து மீண்டும் விசனப்படவோ,கோபப்படவோ இது உகந்த நேரமில்லை என்பதை உணர்ந்து தன் விருப்புவெறுப்புகளுக்கு நங்கூரம் பாய்ச்சிக்கொண்டான்.
“இங்க வேற யாருக்கும் குடும்பமில்லப் பாரு.நீ ஒண்டிதான் குடும்பஸ்தன்.என்னமோப்பா வரவர நீ பண்றது ஒண்ணுஞ்சரியில்ல.அதுவுமில்லாம ரொம்ப நீ மாறிட்டே வர்றது யாருக்கும் நல்லதில்ல.”
“விட்டா வளவளன்னுப் பேசுவ.நமக்குள்ள எதுக்கு வீணா மனஸ்தாபம்.போனை மொதல்ல வையி.”அந்தத் திடீர் துண்டிப்பை பன்னீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.பொட்டில் ஓங்கி யாரோ சட்டென அறைந்தது போலிருந்தது.பூமி திடீரென குலுங்கிக் கால் பதித்திருந்த தரை திடுமென உள்வாங்கியிழுப்பது போன்ற உணர்வு உள்ளுக்குள் பளிச்சிட்டதும் பார்வை அப்படியே இருட்டிக்கொண்டு வந்தது.யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் மிகுந்த மனவலியோடு கூட்டத்தைப் பிளந்துகொண்டு சற்று தன்னை முழுஆசுவாசப்படுத்திக் கொள்ள ஓர் இருக்கை அவசியமெனக் கருதி முதலில் அதைத் தேடியமர்ந்தான்.கையையும் காலையும் நன்றாகப் பரப்பி உடம்பை நாற்காலியின் பின்பகுதி முழுக்க சாய்ந்து சரிந்துகொண்டு தன் ஆற்றாமை அனலை உஷ்ஷென பெருஞ்சத்தத்துடன் ஊதித்தள்ளிப் பின் தலையை வெறுமனே அண்ணாந்து ஒரு பெரும் கொட்டாவி விட்டவாறே பத்து விரல்களையும் கோர்த்து உடம்பை வில்லாக்கி நெட்டி முரித்த அழகு காண்போருக்குப் பயத்தை உண்டுபண்ணியது.
“எலே பன்னீரு நீ பண்ற சேட்டைய பார்க்க யாருக்கும் இங்க புடிக்கலை.மொதல்ல நடந்தது என்னன்னுச் சொல்லித்தொலை.”எல்லோரின் சார்பாகவும் சண்முகம் அதட்டிப் பேசினார்.அந்த அதட்டலுக்கு டொம் சத்தம்கூட பயந்து அமைதியானது.அதற்குள் மீனாட்சிப்பாட்டி தன் மெல்லிய சரீரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு கண்ணீரும் கம்பலையுமாக ஒருவித தள்ளாட்ட நடையோடு பன்னீரை வந்தடைந்தாள்.கருவளையம் பூண்ட குழிவிழுந்த மங்கிய விழிகளிரண்டும் அபயமும் உபாயமும் கோரி மன்றாடுவதை பன்னீர் காணச் சகிக்காமல் இழுத்து மூடிய தன் வாயை மெல்ல திறந்தான்.
“திருச்சியத் தாண்டி சுந்தர் வந்துக்கிட்டுருக்கான்.இம்புட்டுப் பொறுத்தாச்சு.அவனுக்காக இல்லாட்டியும் நம்மள வளர்த்து ஆளாக்கி ஒதவிய பெரிப்பாவுக்கும் பெரிம்மாவுக்கும் ஒசரம் நாம கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்கிறதுதான் நமக்கு நல்லது.அதுதான் நாம அவங்களுக்குச் செய்யுற பெரும் கைம்மாறா இருக்கும்.அதுக்கு மேல ஒங்கஒங்க இஷ்டம்.பாக்கி வேலைய நாமப் பார்க்குறத்துக்கும் அவன் வந்து சேர்றத்துக்கும் சரியாயிருக்கும்.என்ன டைலர் மாமா நாஞ்சொல்றது?”
மீனாட்சிப்பாட்டிக்கு இப்போதுதான் போன உயிர் மீண்டிருந்தது.எங்கே தன் ஒரே செல்ல மகன் தன் அப்பாவுக்கு இறுதியாக ஆற்றும் முக்கியக் கடமையான கொள்ளிவைப்பதிலிருந்து தவறிவிடுவானோ என்கின்ற கேள்வியும் குழப்பமும் நிறைந்த பெரும்கவலை இப்போது அவளிடமிருந்து ஒழிந்திருந்தது.இனி-தன் கணவனின் ஆத்மா அங்குமிங்கும் அல்லாடி அலையாது.நிம்மதியோடு மனச்சாந்தியடையும் என்பது நிச்சயம் என்றுணர்ந்ததும் அவளது இடுங்கிய நீலம்பாரித்த கண்களிலிருந்து மெல்ல கசியத் தொடங்கியது தீட்சண்யம்.
கோடிகோடியாகக் கொட்டிக்கொடுத்தாலும் வெளிநாட்டுப் பொழைப்பு வேண்டவே வேண்டாம் என்று அழுதுபுரண்டு கெஞ்சாத குறைதான்.கேட்டாரா மனுஷன்.மகனோடு சேர்ந்து தானும் ஒற்றைக்காலில் நின்று விமானம் ஏற்றியதன் விளைவை இப்போது அனுபவிக்கும் கணவனை மீண்டும் ஒருதடவை அருகில் சென்று அமைதி குடிகொண்டிருக்கும் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டார்.கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.மன்னித்துவிடு மீனாட்சி என்பதுபோல கிழவரின் மௌனம் பதிலளித்தது.
இப்படித்தான் ஒருமுறை பெற்ற பிள்ளை பெற்றோர் பேச்சுக் கேளாமல் உடன் பணியாற்றும் பெங்களுருவைச் சேர்ந்த ஒரு பணக்காரவீட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு ஆசிவாங்க அழைத்ததும் ஒருமாதகாலமாக டைபாய்டுக் காய்ச்சலில் கிடந்து உழன்றவர் துள்ளியெழுந்து கட்டிளங்காளைபோல் பம்பரமாய்ச் சுழன்று பாஸ்போர்ட்,விசா என அனைத்தையும் எப்படியோ வாங்கிவிட்டார்.பன்னீர் உட்பட எல்லோருமே அதுகண்டு அசந்துவிட்டனர் என்பதை திறந்த மனத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.அவருக்கு மட்டுமல்ல பிள்ளைப்பாசம் தன் கண்ணையும் மறைத்துவிட்டதாக மீனாட்சிப்பாட்டி எண்ணினாள்.
எதிர்பாராத விதமாக பயண நாளுக்கு இரண்டுநாள் முன்னதாக குளியலறையில் வழுக்கி மல்லாக்க விழுந்ததில் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்றாலும் கணுக்கால் முட்டியில் பலத்த வலி.தவிர,பெருவிரல் திடீரென மடங்கியதில் இலேசான எலும்பு முறிவு வேறு.சிறிய கட்டு தான்.எனினும்,நெடும்பயணம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே குடும்ப மருத்துவர் பாபு கைவிரித்த தகவல் வெந்தப் புண்ணில் அவருக்குள் வேல் பாய்ச்சியது.வீணாகக் கடிந்து கொள்வதற்கோ,திட்டித் தீர்ப்பதற்கோ,வருத்தப்பட்டுச் சுணங்கிக் கிடப்பதற்கோ இது சரியான நேரமல்ல என்பதைக் கிழவர் சற்றுத் தாமதமாகவே உணர்ந்துகொண்டார்.பொறுத்தார் பூமியாள்வார் என்பதற்கேற்ப பாட்டியும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டாள்.உடல் வலியைவிட அவள்பட்ட மனவேதனை மிக அதிகம்.முருகா முருகாவென மூச்சுக்கு முந்நூறு தடவை சக்திவேல் முருகனைத் துணைக்கு அழைத்துக்கொண்டாள்.அந்தக் கூப்பாடு அவளுக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது.
நாளும் நெருங்கிவிட்டது.தன் கணவரின் பயணத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் மீனாட்சிப்பாட்டி மனம் நோகாமல் தன் உடல் நோவு பாராது புன்னகையுடன் செய்துகொடுத்தாள்.அவளது அடிமனத்தின் ஒரு மூலையில் நொடிப்பொழுதில் பயணத்தைத் தவறவிட்ட வருத்தம் நன்கு காலைநீட்டிப் படுத்தபடி வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.பன்னீர் கொடுத்த தைரியத்தில் கிழவர் ஜரூராகப் புறப்பட்டுவிட்டார்.அவர் தன் மகன் மீது கொண்டுள்ள தீராப் பாசம் அப்போதுதான் மீனாட்சிப்பாட்டிக்குப் புலப்பட்டது.வாய்விட்டுக் கேட்டேவிட்டாள்.
“ஆத்தாடி புள்ள மேல எம்புட்டு ஆசை!”கொட்டிப் பழுப்பேறிப் போன பூனைமுடிக் கணக்கான புருவம் பிறையாய் சுடர்ந்தது கண்டு கிழவருக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது.அவர் வெட்கத்தில் அழகாக நெளிந்ததுகண்டு பாட்டி பாதி பொக்கை வாயுடன் களுக்கென்று சிரித்தேவிட்டாள்.
“அடி போடி இவளே.”பதிலுக்கு அவரும் சிரிப்பை உதிர்த்துவிட்டார்.அந்த வீடே சற்றுநேரம் அவர்களது மாறிமாறி எழுந்த சிரிப்பலையால் பூத்துக்குலுங்கியது.சொர்க்கம் மண்ணில் உடன் உருவானது போன்ற பிரமை இருவருக்குள்ளும் எழுந்தது.அந்த வினாடியில் இந்த உலகமே அழகாய்க் காட்சியளித்தது.அவர்களிடையே திடீரென முகிழ்த்த வண்ணக்குமிழி பல்வேறு போக்குக்காட்டிப் பறந்து பின்னர் உடைந்தாலும் மீனாட்சிப்பாட்டி மட்டும் அதனை அசைபோட்டு அசைபோட்டு உள்ளுக்குள்ளேயே பலமுறை கிழவருக்குத் தெரியாமல் சிரித்துக்கொண்டாள்.அதனை அவரும் அவளுக்குத் தெரியாமல் அறிந்துகொண்டு இப்படிக் கூறினார்.
“இதுல சிரிக்க என்ன வேண்டிக் கெடக்கு.எனக்குன்னு இருக்குறவன் அவன் ஒருத்தன்தானே!”கண்ணில் நீர் குபுக்கென முட்டியது.தோளில் நெடுஞ்சாண்கிடையாகத் தொங்கிய காசித்துண்டின் நுனியால் முகத்தைப்பொத்தி அவர் ஒற்றியது பாட்டியை என்னவோ செய்துவிட்டது.கணப்பொழுதில் மெழுகாய் உருகினாள்.ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.நெடுந்தொலைவு அவர் பத்திரமாகப் போய்ச் சேரவேண்டுமே என்கிற அக்கறை அவளை முழுமையாக இயங்கவிடாமல் பின்னிக்கிடந்தது.சின்னம்மைக்கண்டு சிறுமியாக இருக்கும்போதே அகால மரணமடைந்துவிட்ட தம் மூத்தப் பெண்ணுக்குப்பின் பல்லாண்டு தவமிருந்தும் எல்லாவகை தெய்வத்தை முன்னிட்டும் நோன்பிருந்ததன் பலனாகப்  பன்னிரண்டாண்டிற்குப் பிறகு அவர்கள் பெற்றெடுத்த தவப்புதல்வன்தான் சுந்தர்.என்ன சாபக்கேடோ அவர்களுக்குத் தெரியவில்லை.அவனுக்குப் பின்பு மீனாட்சியின் வயிற்றில் ஒரு புழுப்பூச்சிகூட உருவாகவில்லை.அதன் பின்னர் சுந்தரே கதியென்று இருவரும் ஆகிப்போனர்.
அவர்களுக்கிருந்த பரம்பரை வசதிகள் சுந்தருக்கு நல்ல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தன.சுந்தரும் அவற்றை நன்குப் பயன்படுத்திக்கொண்டான்.அவர்களுக்கு சுந்தரே உலகம்.ஆனால் சுந்தருக்கோ படிப்பே உலகமாகிப் போனது.அப்படியொரு புத்தகப்புழு அவன்.அதனால் கோயம்புத்தூரில் முதன்மையான பொறியியல் கல்லூரியில் அரசு கோட்டாவில் ஐ.டி.துறையில் இலவசமாக இடம்கிடைத்து நன்குப்படித்துத் தேறியதன் விளைவு பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய மெகா காம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி சிங்கப்பூரின் முக்கிய நிறுவனமொன்றில் கைநிறைய சம்பளத்தோடு நல்ல வேலையும் அவனுக்குக் கிடைத்துவிட்டது.கண்ணீரோடுதான் அப்போதும் இவர்கள் அனுப்பிவைத்தனர்.
அன்று இதோ இந்த மீனாட்சிப்பாட்டிதான் வீட்டில் எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெரிய கச்சேரியே நடத்திவிட்டிருந்தாள்.அந்தக் களேபரத்தை சுந்தரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.பெற்றோரின் மீது வீண் எரிச்சலடைந்தான்.முதிர்ச்சியான அப்பா,அம்மாவை வெளிஉலகில் காட்டிச் சொந்தம் கொண்டாட அவனுக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.
அவன் அவர்களிடமிருந்து விலகிவிலகியே ஓட முயற்சித்தான்.ஓடவும் செய்தான்.ஆனால் இது எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை.உலகம் தெரியாத பிள்ளையென்று தமக்குத்தாமே சமாதானம் செய்துகொண்டனர்.வெள்ளந்தியாய்.
கொள்ளிவைத்து எல்லாம் முடிய இரவு எட்டரை மணியைத் தாண்டிவிட்டது.தன் மேல் உயிரையே வைத்திருந்த அப்பாவிற்காக சுந்தர் இலேசாக மண்டியிருந்த மீசையை மட்டும் மழிக்கச் சம்மதித்திருந்தான்.முடி இறக்கவில்லை.யாரோ சொல்வார்களே பொருந்தாத செருப்பிற்காகக் காலைவெட்டித் தைத்துக்கொள்வதுபோல் சுந்தருக்காக அவன் சுற்றமும் நட்பும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த சடங்கு சம்பிரதாயங்களைச் சற்று ஒதுக்கிவைத்து புதுநடைமுறைகளை வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டது.பதிலுக்கு பன்னீர் மொட்டைப் போட்டுக்கொண்டான்.மனமுவந்து.அவனைப் பார்த்து வேறுசில பங்காளி வகையறாக்களும் தலைமுடி மீசையை எடுத்துக்கொண்டனர்.சுந்தர் இதுகுறித்து ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.
மாறாக,சரியான காட்டுமிராண்டிகள் எனவும் பணத்திற்காக எதையும் இழக்கத்துணியும் சந்தர்ப்பவாதிகள் எனவும் அவர்களை மிக இழிவாக நினைத்துத் தனக்குள்ளாக அதுகுறித்து ஒரு நமுட்டுச் சிரிப்பையும் சிரித்துக்கொண்டான்.மொத்தத்தில் சுந்தர் தான் ஒரு மூன்றாம் மனுஷனுக்கும் கீழாக அங்கு எந்தவொரு ஒட்டுதலும் இல்லாமல் உறவும் கொள்ளாமல் தாமரை இலைபோலக் காட்சித்தந்தான்.அதோடு மட்டுமல்லாமல் மீளப்பயணம் புறப்படுவதிலேயே குறியாக இருந்தான்.இத்தகைய அவனது விநோத நடவடிக்கைகள் வாயிலாக ‘இவன் இதற்கு வந்திருக்க வேண்டியத் தேவையே இல்லை’ என்பதாகப் பலரது சிந்தனை அமைந்திருந்ததில் ஒன்றும் வியப்பில்லை.மீனாட்சிப்பாட்டி மட்டும் அவனுக்கு விடாது குடும்பப் பழக்கவழக்கங்களை ஓதிக் கொண்டிருந்தாள்.அவ்வப்போது.எல்லாம் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காக மாறிப்போனதை அவள் உணரவில்லை.தன் மகனை மலையாய் இப்போதும் நம்பியிருந்தாள்.பிள்ளைப்பாசம் அவள் கண்ணைக் கட்டிப்போட்டிருந்தது.ஊரும் உறவுகளும் சொல்வதைக் கேளாமல் வீணாக அவர்களை வெட்டியாகப் பகைத்துக்கொண்டு மகன் விரித்த வலைக்குள் தாய் தன்னையறியாமல் அகப்பட்டுக் கிடந்தாள்.
சுந்தரின் மல்லுக்கட்டுக்கு வேறுவழியின்றி உடனிருந்தோரும் உடன்பட்டதால் அரக்கப்பரக்கப் பத்தாம் நாளே கிழவருக்குக் கருமாதி செய்துமுடித்தாகி விட்டது.அதற்குப் பின்னர் உள்ளவனுக்கே இல்லாத அக்கறை நமக்கெதற்கு என்று அவரவரும் தாமாக ஒதுங்கிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தனர்.பன்னீர்தான் எல்லாவற்றுக்கும் ஓடியலைந்துத் திரிந்து அந்தத் துக்கநிகழ்வை ஒருகுறையுமில்லாமல் நல்லபடியாகக் கரைச் சேர்த்தான்.அதற்கு அவனுடன் உறுதுணையாக டைலர் மாரியப்பன் இருந்ததை இங்குக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.கேட்டதற்கெல்லாம் காசையெடுத்து நீட்டும் முதலாளியாகவும் வரவுசெலவைப் பார்க்கும் கணக்கப்பிள்ளையாகவும் விளங்கவில்லை சுந்தர்.ஏதோ மாமியார் வீட்டுவிருந்துக்கு வந்த புதுமாப்பிள்ளைபோல் அவன் அங்குத் தேமேவென்று இருந்துத் தொலைத்தது மீனாட்சிப்பாட்டிக்கே பிடிக்கவி;ல்லை.கேட்டேவிட்டாள்.
“செத்துப்போனது ஓன் அப்பாடா.நானும் அப்பலேர்ந்துப் பார்க்குறேன்.என்னமோ குத்துக்கல்லாட்டம் யாரோ மாதிரி கம்முன்னுக் கெடக்குறே?”
“எனக்கு ஆயிரம் பிரச்சனை.வீட்லேர்ந்து,கம்பெனிலேர்ந்து.ஒனக்கு இதுவொண்ணுதான்.”
அந்தச் சீற்றம் அவளைக் கோபத்தின் சிகரத்தில் ஏற்றியது.பதிலுக்குத் தாயும் பாய்ந்தாள்.
“இங்க யாருக்குத்தான் தொல்லையில்ல.அதுக்காக யாரும் எதுவும் வேணாமின்னுப் போய்ட முடியுமா?”
“அதைப்பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்ல.ஏங்கவலை எனக்கு.இப்ப நீ என்னாங்குற. நா இங்க இருக்குனுங்கிறீயா?இல்ல இப்பிடியே கௌம்பிப் போணுங்கிறீயா?”குரலை உயர்த்திப் போட்ட அவன் கிடிக்கிப்பிடியில் அவள் அடங்கிப்போனாள்.நாடி வழக்கத்திற்கு மாறாக வேகமாகத் துடித்ததை அவளால் நன்கு உணரமுடிந்தது.முகம் குப்பென்று வியர்த்துக்கொட்டியது.நா எழவில்லை.ஒரே வறட்சி.தவமாய்த் தவமிருந்துப் பெற்றப்பிள்ளை இப்படித் திமிறுகிறானே என்கிற நினைப்பே அவளுடைய உயிரைக் கொத்தித்தின்றது.கலங்கியக் கண்களால் எங்கோ வெறித்தாள்.
எதிரே மாட்டப்பட்டிருந்த கணவரின் புதுப்புகைப்படம் கலங்காதேவென்று ஆறுதல் சொல்வதாக இருந்தது.அது அணைக்கட்டிக் கிடந்த வெள்ளம் பொசுக்கென மடை உடைந்தாற்போல் அவளது குமுறல் வெடித்து வெளிப்பட்டது.யாருக்கும் என்ன செய்வதென்று உடனடியாகத் தோன்றவில்லை.அவரவர் அப்படியப்படியே நின்றிருந்தனர்.அந்த இறுக்கம் அப்பிக்கிடந்தச் சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முனைந்தான் பன்னீர்.
“இதுபத்தி அவனுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. அவனுக்கு என்னத் தெரியும்?அவன் இங்க வந்ததே பெருசு.அதவிட்டுட்டு சும்மா அவன்கிட்டப் போயி நொய்நொயின்னு…”ஏதோ பெரிய ஆபத்திலிருந்து தான் காப்பாற்றப்பட்டு விட்டதாக சுந்தருக்குள் ஒருவித நினைப்பு.அதேசமயம் அம்மாவிடம் அப்படி பேசியிருக்கக்கூடாது என்றும் நினைத்துக்கொண்டான்.நேரே அவளிடம் சென்று சுருங்கி வாடிக்கிடக்கும் இருகைகளையும் அன்பாக அள்ளிப் பற்றிக்கொண்டு சொன்னான்.
“சாரிம்மா.நா ஏதோவொரு வேகத்துல பேசிட்டேன்.கோவிச்சுக்காத.எனக்கும் வேற யாருயிருக்கா.சொல்லு.”அந்தப் பேச்சில் அப்படியே அவள் உருகிப்போய்விட்டாள்.அது அவர்களது தண்ணீருக்குப் பஞ்சமில்லாத போர்செட்டுடன் கூடிய ஒரு வேலி நிலம்,பர்மா தேக்கினால் முச்சூடும் இழைக்கப்பட்ட வீடு,தோட்டம் என அனைத்துப் பூர்விகச் சொத்துக்களையும் விற்றுக் காசாக்கி சிங்கப்பூரில் மகன்,மருமகள்,புதிதாய்ப் பிறந்திருக்கும் பேரப்பிள்ளைகளோடு எஞ்சிய வாழ்க்கையைக் கழித்துவிடும் அளவிற்குக் கொண்டு போய்விட்டது.மேலும்,அவன் ஆசையாசையாகத் தன்னோடுவரக் கூப்பிட்டபோது மனம் முழுக்க அவளுக்கு ஊசலாட்டம்தான்.கூடியிருந்த சொந்தங்கள் கூடயிருந்து தூபம் போட்டதில் இலேசாக மீனாட்சிப்பாட்டிக்குள்ளும் ஆசை துளிர்விட்டது.பன்னீர் இன்னும் கொஞ்சம் அவளுக்குத் தெம்பூட்டியதும் அவ்வாசை விருட்சமாய் வளர்ந்து விஸ்வரூபமெடுத்தது.
எல்லாம் சுந்தர் நினைத்தது மாதிரியே மின்னல் வேகத்தில் அந்த வியாபாரம் நல்லபடியாக நடந்து முடிந்தது.ரியல் எஸ்டேட் கழுகுகள் பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் நல்ல வரும்படிமிக்க சொத்தை சொத்தையாக்கிவிடாமல் கேட்ட தொகையை மறுபேச்சில்லாமல் எப்பாடுபட்டாவது கொடுத்துவிடத் துணிந்திருந்தனர்.புதுரயில் ஸ்டேஷன்,நூறடி ரிங்ரோடு ஆகியவற்றுக்கு மத்தியில் அமையப்பெற்ற அந்த இருபது கோடி ரூபாய் சொத்தை முறையாகப் பாகம்பிரித்து விற்றால் எண்பதிலிருந்து சுமார் நூறு கோடி வரை கிடைக்கும் என்பது அவர்களது இலாபக்கணக்கு.மற்றவையெல்லாம் அதற்கு இனாம் என்று அவர்கள் எண்ணிக்கொண்டனர்.
மேலும்,ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அவர்களுக்கிருந்த காணி இடத்தில் அமையப்பெற்ற பழைய கூரைக்கட்டு வீட்டை இத்தனையும் செய்துமுடித்த பன்னீருக்கு மனமுவந்துத் தாரைவார்க்க அவர்கள் முன்வந்ததை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.அது சுந்தருக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.அதேவேளை அத்தனைப் பணத்தையும் சுந்தர் சட்ட ரீதியாக வெளிநாட்டிலிருக்கும் தன் வங்கிக்கணக்கிற்கு நாயாய்ப்பேயாய் அலைந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மாற்றிக்கொண்டுவிட்டான்.

“இதெல்லாம் பெரிம்மா கையில் நான் இவ்ளோகாலம் சோறுவாங்கித் தின்னதுக்கான ஒரு சின்ன நன்றிக்கடன்.அம்புட்டுதான்.அதுக்குப்போயி இம்புட்டு ஒசந்த கூலிக்கொடுக்க நெனைக்கிறது ஒங்களுக்கு வேணா பெருந்தன்மையாயிருக்கலாம்.ஆனா என்னைப் பொறுத்தவரை அதைப் பல்லிளிச்சுக்கிட்டு வாங்கிக்க நெனக்கிறது ரொம்ப்பத் தப்பு பெரிம்மா”
அதுகேட்டு மீனாட்சிப்பாட்டி மிகவும் நெகிழ்ந்துப் போய்விட்டாள்.வார்த்தை சட்டென வரவில்லை.நொண்டியடித்தது.பன்னீரை அப்படியே ஓடிப்போய் வாரியணைத்துக் கட்டிக்கொண்டாள்.சிறுவயதிலேயே தாய்தந்தையிழந்த பன்னீருக்கு அந்தத் தாய்மைச் சுகம் போதுமானதாக இருந்தது.அப்போது சுந்தர் பன்னீரின் தோளை ஒருதடவை இறுக்கப்பிடித்துப் பின்னர்  இலேசாகத் தட்டிக்கொண்டும் தடவிக்கொண்டுமிருந்தான்.ஆறுதலாக.உள்ளுக்குள் சந்தோசம் தாண்டவமாடிக்கொண்டிருந்தது.அந்தக் கடுகுச்சொத்தும் தனக்கே திரும்பக் கிடைத்த திருப்தியில்.பிறகு பார்த்துக்கொள்வதென அதை இப்போது கிடக்கட்டுமென்று விட்டுவிட்டான்.மீனாட்சிப்பாட்டியை அந்த ஊர் பிரிய தயாராகியது.கடந்த இரண்டு நாட்களாக அவளுக்குப் பொட்டு உறக்கம் என்பது இல்லை.அறுபதாண்டுகால தாம்பத்திய வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றங்கள்,இறக்கங்கள்,சந்தோசங்கள்,சங்கடங்கள்,வரவுகள்,பிரிவுகள்…!எல்லாம் சேர்ந்து அவளை அலைக்கழித்தன.அழுதாள்.அரற்றினாள்.ஏதேதோ பிதற்றினாள்.பிறகு தனக்குத்தானே சமாதானம் அடைந்துகொண்டாள்.
அவர்களுக்கான பயணம் புறப்படும் நாளும் வந்துவிட்டது.பன்னீர் சென்னை விமான நிலையம் வரை காருக்கு ஏற்பாடு செய்திருந்தான்.பன்னீருக்குக் அவர்களோடு கூடப் போக  ஆசைதான்.ஏனோ அவன் கூடவருவதை விரும்பாமல் கண்டதைக்கூறி சுந்தர் சுலபமாக அதனை நிராசையாக்கிவிட்டான்.அடிக்கடி சுந்தர் தன்விலையுயர்ந்த செல்பேசியில் யார்யாரிடமோ சிரித்தும் கொஞ்சியும் கோபித்தும் பேசிக்கொண்டிருக்கலானான்.அவனுக்குள் எழுந்த தீவிர மனக்குழப்பத்தை யாரிடமும் எதுவும் பேசுவதைத் திட்டமிட்டே தவிர்த்து வந்தான்.யார் குடைந்துக்குடைந்துக் கேட்டாலும் ஒரேபதில் மௌனம்.மௌனம் மட்டுமே.சரியான அமுக்குளிப் பயல் என்று மீனாட்சிப்பாட்டி சுந்தரைச் செல்லமாகத் திட்டினாள்.அதற்கு எதிர்வினையாற்றும் மனநிலையில் அவனுமில்லை.
தன் ஈயாடாத முகத்துடன் அவன் அவளை அழைத்துக்கொண்டு எந்தவொரு உணர்ச்சியுமின்றிப் பிறரிடம் தன் பிரிதலை வெறுமனே ஒரு சடங்காகச் சொல்லிக்கொண்டு வேகவேகமாகக் கிளம்பினான்.அவன் வேகத்திற்கு மீனாட்சிப்பாட்டியால் ஈடுகொடுக்க முடியவில்லையென்றாலும் வேறுவழியில்லை.சுருக்காகவும் அதேசமயம் நிதானமாகவும் எல்லோருக்கும் இருவர் சார்பாகவும் கண்ணீரோடு பிரியாவிடை கூறிக்கொண்டு ஒருவிதத் தடுமாற்றத்துடன் காரின் உள்ளே அமர்ந்தாள்.அந்த ஏ.சி.மாருதிசுசுகி ஸ்விப்ட் புகையைக் கக்கிப் புழுதியைக் கிளப்பி அவ்விடத்தைவிட்டுச் சீறிப்பாய்ந்தது.பன்னீர் மட்டும் கார் சென்று மறையும்வரை தன் பனித்தக்கண்களுடன் கையை வெகுநேரம் அசைத்துக்கொண்டிருந்தான்.
சுந்தரின் மனக்குழப்பம் இன்னும் தணிந்தபாடில்லை.போனில் அவன் யாரிடமோ கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தது புரிந்தது.பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை.அதே வேகத்தில் வந்து மீனாட்சிப்பாட்டியின் இத்யாதிகள் அடங்கிய பெரிய துணிப்பையினை அவளிடம் வெறுப்பாகத் திணித்தான்.
அதுமட்டுமல்ல அந்த விமானநிலைய வெளிவாசலில் ஆகாயம் மறைத்து நின்றிருந்த ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அவளை அமரச்செய்து தான் திரும்பவரும் வரை வேறெங்கும் செல்லக்கூடாதென கண்டிப்புடன் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே தலைதெறிக்க ஓடிப்போனவன் போனவன்தான்.நேரம் கடந்துகொண்டே இருந்தது.
யார்யாரோ அங்குப் பலவிதமான உணர்ச்சிகளுடன்  வந்துபோய்க்கொண்டிருந்தார்கள்.எல்லாவற்றையும் அந்தத்தாய் திருவிழாவினை வேடிக்கைப்பார்க்கும் குழந்தைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள்.அந்த அறிமுகமில்லாத இடத்தில் பல்வேறு அந்நிய மனிதர்களின் வாசத்தில் பயந்துபம்மியபடி.
தன்புருஷன் கடைசியாகத் தனக்கு ஆசையுடன் வாங்கிவந்த பிடித்த புதிய நீலக்கலர் சுங்கிடிச்சேலையின் முந்தியால் இறுக்க உடம்பைப் போர்த்திக்கொண்டு மகன் சென்ற திசையையே வைத்தக்கண் வாங்காமல் அந்த உச்சிவேளையிலும் வெறித்து நோக்கிக்கொண்டிருந்ததை நெடுநேரம் அம்மரத்தின் கிளையில் தன் துணைக்குக் காத்திருக்கும் காகமொன்று அசையாமல் அவளைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த அனல்காற்று தன் சக்தியிழந்து அந்த வயோதிக முகத்தை மெதுவாக வருடிச்சென்றது ஏனோ அவளுக்குச் சுகமளிக்கவில்லை.மாறாகப் புழுங்கித் தவித்தாள்.நேரமாக ஆக அவளுக்குள் மூலையில் முடங்கிக்கிடந்த பயம் வாமன அவதாரம் எடுத்துக்கொண்டிருந்தது.
அதில் தொண்டையடைத்து உள்ளுக்குள் குபுக்கென்று பெருக்கெடுத்த சிறுநீர் அவளது கட்டுப்பாட்டைமீறி சின்னதாகக் கசியத் தொடங்கியது.பொசுக்கென தம் அடிவயிற்றை அவள் சுருக்கிக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தன்முழங்கால் இரண்டையும் பின் ஒருசேர இறுக்கிக்கொண்டாள்.தனக்கு ஏற்பட்ட அத்திடீர் இயற்கை உபாதையினை உடன் கழித்து சற்று நிம்மதிப்பெருமூச்சுவிடக் கூடவழிதெரியாமல் விழிபிதுங்கி அந்த முடியாதக் காலத்தில் தன் அவலநிலையினைக் கடிந்தவாறு ரண வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்.அந்திமக்கொடுமை என்பது இப்போதுதான் அவளுக்கு மெல்ல புரிபடத் தொடங்கியது.அந்தப் பாலையாகிப்போன அவளது வாழ்விற்கு உயிரூட்டும் சுனையாக சுந்தர் உடன் நினைவிற்கு வந்தான்.தகிக்கும் தங்க வெய்யிலில் கூசும் பார்வையால் பிள்ளையைத் துலாவினாள்.கடும் முயற்சியெடுத்து.
எங்கோ புகைப்புகையாய்க் காணாமல்போன அவளது அன்புமகனோ இன்னும் அங்கு வந்தபாடில்லை.பிள்ளைக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்று மீனாட்சிப்பாட்டி அந்த உச்சிவேளையில் தட்டுப்பட்ட சிறுநிழலில் ஒண்டிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலானாள்.அப்போது அவள் தலைக்கு மேலே புதிதாகப் பறந்தது விமானமொன்று.ஆவலோடு அண்ணாந்தாள்.அதனுள் சொகுசாகக் கண்ணையிறுக்கிக்கொண்டு யாரை முன்னிட்டோ அவளைக் கைகழுவி விட்ட திருப்தியில் நிம்மதியாக அவள் பெற்ற பிள்ளை சுந்தர் ஜம்மென்று பயணித்திருக்க,கீழே அவன் வருகைக்காக வெக்கையோடு வெகுநேரமாகக் காத்துக்கிடக்கின்றாள் அந்த அப்பாவித்தாய்.

————-

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *