நெஞ்சு பொறுக்குதில்லையே…..

1
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

 rape3

சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது

உமா மகேசுவரியின் சடலம்.

யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட

பெண்ணுடலின் அணுக்கள்

அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன.

வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள்

என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்….

ஐயோ தாங்க முடியவில்லையே…..

 

 

உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள்.

நிலைகுலையவைத்தபடி.

ஐயோ தாங்க முடியவில்லையே……

 

 

நிர்பயா,

உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே

இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை.

அதற்குள் இன்னுமின்னுமாய் எத்தனை வன்புணர்ச்சிகள் இங்கே.

பயங்கரம், அதி பயங்கரம், அதீத பயங்கரம் _

ஐயோ, தாங்க முடியவில்லையே…..

 

 

அந்த ஏழை நெசவாளியின் சின்ன மகள்

கதவில்லா வீட்டில் படுத்துறங்கியது அவள் பிழையா?

மறுநாள் விடிந்ததும்

பிறப்புறுப்பெங்கும் ரணகாயத்தோடு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த

அவளுடைய அம்மண உடல்

திரும்பத்திரும்ப என் கண்களைக் குத்திக்கிழித்தபடி

தன் வலியை எனக்குள் என்றைக்குமாய் இடம்பெயர்த்துக்கொண்டிருக்கிறது

ஐயோ, தாங்க முடியவில்லையே……

 

 

படிக்கக்கூடாதா பெண்? பணிக்குச் செல்லலாகாதா?

பொறுக்கிகளின் திரைப்படங்கள், கணிப்பொறி நிறையும் நீலப்படங்கள்

எந்த ஆணுடலும் பெண்ணுக்கு ஆனந்தத்தை வரவாக்கி அருள்பாலிப்பதாய்

உருவேற்றிக்கொண்டிருக்க,

காலை பதினோறு மணி முதல் மாலை நான்கு மணிவரையே

பெண் ‘பரோலில்’ வெளிவரலாம் என்று சமூகக் காவலர்கள் வகுத்துரைத்துக்கொண்டிருக்க,

யோனியைக் கிழித்தால் தானே பலாத்காரம்? தொட்டதற்கே சிறைவாசமா?

என்று அறிவுசாலிகள் சிலர் பிரதிவாதம் செய்துகொண்டிருக்க,

நான்கு வயதுச் சிறுமி வன்புணரப்பட்டாலும் அதற்கு

அவள் ஆடையையே காரணமாக்கும் அறிஞர்கள் நிறைந்திருக்க

வன்புணர்ச்சியாளர்களின் உளவியலைப் பேச சிலர்…….

உரிமைகளைப் பேச சிலர்…..

 

 

தாயே உமாமகேசுவரி………

கன்னியாகுமரி………

ஜோதிப் பிரவாகி………

காற்றெங்கும் உறைந்திருக்கும் உங்கள் சொப்பனங்களின் சுமையில்

சுவாசம் திணறுகிறது.

சுக்குநூறாகிக்கொண்டிருக்கிறது உயிர்.

 

பாதியுயிர் போனதில்

செயலிழந்த சிவனாகும் உலகம்.

 

 

அதிரும் மனம் அதிர

ஊழிப் பிரளயமாய் பெருகியோடிக்கொண்டிருக்கிறது பெண் உதிரம்.

 

 

 

 

0

Series Navigationமருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்மருமகளின் மர்மம் 18நீங்காத நினைவுகள் – 36கொலுஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சிபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 48அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு
author

ரிஷி

Similar Posts

Comments

  1. Avatar
    Dr N.Baskaran says:

    ரிஷி…உங்களின் எழுத்துகள் ஒவ்வொன்றிலும் ரத்தவாடை வீசுகிறது. இனி நம் உமாமகேஸ்வரிகளுக்கு திராவகஎச்சிலை உமிழ்வதற்கு பயிற்சி கொடுப்போம். சிவனுக்குள் விஷம் இறங்கக் கூடாதென்று அவனின் உமாமகேஸ்வரி தொண்டயை நெறித்தாள்.இந்த விஷங்களின் தொண்டயை நெறிக்க நம் உமாமகேஸ்வரிகளுக்கு பயிற்சிகொடுப்போம்.அக்னிகுஞ்சுகளை இனி அவணிதோறும் வைப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *