எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

 

 

கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைத்துறையில் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கிவரும் கவிஞர் நிலாரசிகன். ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த வெயில் தின்ற மழை, மீன்கள் துள்ளும் நிசி ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து இப்போது கடலில் வசிக்கும் பறவை வெளிவந்திருக்கிறது. எதார்த்தக் காட்சியொன்றை மிகுபுனைவின் வழியாக கனவுக்காட்சியாக விரித்தெடுத்து, அக்காட்சியின் சில கோணங்களைமட்டும் சொற்சித்திரமாக முன்வைப்பவை நிலாரசிகனின் கவிதைகள். இந்த இயங்குமுறை, அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் திகட்டாதபடி சீரான அளவில் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கிறது.

 

அந்த சுவருக்கு அப்பால்

மிகப்பெரிய மலை இருக்கிறதாம்

அதில் மலையாடுகளும்

வெளிமான்களும் துள்ளி ஓடுமாம்

 

என்று தொடங்குகிறது ஒரு கவிதை. கவிதையில் இடம்பெறும் சுவர் அழகான கற்பனை. மனத்துக்குள் நாமே எழுப்பிக்கொள்ளும் சுவர். உறவுகளிடையே நாம் எழுப்பிக்கொள்ளும் சுவர். வாழ்க்கையில் நாமே எல்லை பிரித்துக் கட்டிவைத்திருக்கும் சுவர். எண்ணங்களின் சுவர். இப்படி எந்தத் திசையிலும் இக்கற்பனையை விரிவாக்கிக்கொள்ளலாம். சுவரின் ஒரு பக்கம் நாம் வாழும் உலகம். அதன் மறுபக்கம் நம்மால் காணமுடியாத, அடையமுடியாத, இனிமையான ஓர் உலகம். இந்த உலகத்திலிருந்து அதை நம்மால் கற்பனைமட்டுமே  செய்யமுடிகிறது. அதற்குள் அடியெடுத்துவைக்கவோ, கண்ணாரப் பார்க்கவோ முடிவதில்லை. ஆடுகள், மான்கள் என்றெல்லாம் குறிப்பிடுவது ஒரு பேச்சுக்குத்தான். இன்னும் குறிப்பிடப்படாத பல இனிய அம்சங்கள் எல்லாமே அந்த மறுபக்கத்தில் உள்ளன. சோலைகள், சுனைகள், மரங்கள், கனிகள், பறவைகள், அருவிகள் என ஆனந்தத்துக்கு வழிகாட்டும் ஏராளமான அம்சங்கள் அங்கே நிறைந்துள்ளன. தெரிந்தோ அல்லது தெரியாமலோ,  நல்லூழின் காரணமாகவோ அல்லது தீயூழின் காரணமாகவோ, இனிய அம்சங்கள் எதுவுமே இல்லாத வறட்சியான சுவரின் பக்கத்தில் நாம் அகப்பட்டுவிட்டோம். இதில் நம் தேர்வு என எதுவும் இல்லை. உடைக்கமுடியாத சுவரின் இந்தப் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். கவிதையின் அனுபவத்தை இப்படி சொற்களால் விவரித்துச் செல்வதுகூட, அக்கவிதையை ஏதோ ஒரு சட்டகத்துக்குள் அடைத்துவிடுவது போல மாறிவிடவும் கூடும். ஒரு சட்டகத்துக்குள் கவிதையின் அனுபவத்தைப் பொருத்தாமல் உணர்ந்துகொள்வதும் சற்றே சிரமமாகும்.

 

தராத முத்தமொன்று

மிகப்பெரிய அலையாகி

ஓங்கி அடிக்கிறது கரையை

கரையில் அமைதியாய் முட்டையிட்டு

கடல் திரும்புகின்றன

கடலாமைகள்

கனத்த ஓடுகளைச் சுமந்தபடி

 

அடுத்தடுத்து நிகழும் இரண்டு காட்சிகளை இக்கவிதை கச்சிதமாக இணைத்து முன்வைக்கிறது. ஒன்று அலையின் தவிப்பு. விரகம். இயலாமை. தன்னிரக்கம். இன்னொன்று ஆமையின் அமைதி. எளிமை. நிறைவு. பொறுமை. தவிப்பு வெளியேறி அமைதி உள்ளே திரும்புகிறது. தவிப்பும் அமைதியும் நிகழ்த்தும் இந்தச் சுழலாட்டம் இயற்கையின் இயங்குவிதியையே சித்திரமாக்குகிறது.

 

கூடு திரும்பிய தாய்ப்பறவை

தவித்துப் போனது

குஞ்சுகள் இருந்த இடத்தில்

வெறும் இறகுகள்

அழமுடியாமல்

அசைந்துகொண்டிருந்தது

கரங்கள் வெட்டப்பட்ட காட்டுமரம்

 

ஒருபுறம் குஞ்சுகளைப் பறிகொடுத்த தாய்ப்பறவையின் வேதனை. இன்னொருபுறம், அதன் கூட்டுக்கு தன் மடியில் இடம்கொடுத்த காட்டுமரம் தன்னால் அக்குஞ்சுகளைக் காப்பாற்றமுடியவில்லையே என்னும் வருத்தத்தைப் புலப்படுத்தும் வேதனை. இரண்டு வேதனைகளையும் ஒன்றையடுத்து ஒன்றாக முன்வைக்கிறது கவிதை. அக்குஞ்சுகளின் மரணத்துக்குக் காரணம் ஏதேனும் ஒரு விலங்கா அல்லது யாராவது ஒரு மனிதனா என்னும் குறிப்பு கவிதையில் இல்லை. தன் கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்துவிட்ட மரணத்தை, நிராதரவோடு பார்க்கிற வேதனைமட்டுமே இருக்கிறது. இயற்கை மரணங்கள், இயற்கையின் சீற்றத்தால் நிகழும் மரணங்கள், விபத்து மரணங்கள், கொலை மரணங்கள் என இந்த மண்ணில்தான் எத்தனை எத்தனை மரணங்கள். அனைத்தையும் காலமெல்லாம் மனிதகுலம் கையறுநிலையில் நிராதரவோடு வேதனை ததும்ப பார்த்தபடியே இருக்கிறது. மரணங்களுக்கும் முடிவில்லை. வேதனைக்கும் முடிவில்லை. இரண்டுமே இரண்டு இணைகோடுகளாக நீண்டுகொண்டே செல்கின்றன.

 

வெளிமான்கள் மேய்கின்ற

மலயடிவாரத்தில்

ஒரு வீடு.

அந்த வீட்டில்

ஒரே ஒரு அறை

அந்த அறையின்

யன்னல்வழியே உள்நுழைந்து

பகலெல்லாம் வாழ்ந்து

இரவில் மரிக்கிறது

கடைசி சூரியன்

 

சூரியனின் இருப்பை ஒரு மானுட இருப்பாக மாற்றி, அவனையும் மரணத்தைத் தழுவும் மானுடனாக உருமாற்றிக் காட்டும் ஒரு கனவுக்காட்சியை நிலாரசிகன் முன்வைக்கும் விதம் அவருடைய கவித்துவத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சூரியனின் மரணம் உண்மையானதல்ல. அது ஒரு நாடக மரணம். அடுத்த நாள் காலையில் அது மீண்டும் பிறந்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து வாழத் தொடங்கிவிடும்.

 

சாவு வீட்டின் முற்றத்தில்

விளையாடுகின்றன

இரு அணிற்பிள்ளைகள்

அழுதுகொண்டிருந்த சிறுமி

அணில்களைப் பார்த்துக்கொண்டே

அழுகிறாள்

சற்று நேரம் கழித்து

எதற்காக அழுகிறோம் என்றே

தெரியவில்லை அவளுக்கு

முற்றத்தில் இப்போது

மூன்று அணில்கள்

 

குழந்தைமையின் களங்கமின்மையை சின்னஞ்சிறிய ஒரு காட்சிவழியாக  மிகச்சிறந்த அனுபவமாக மாற்றுகிறது இக்கவிதை. அணில்களின் விளையாட்டு சிறுமியின் துயரை மறக்கவைத்துவிடுகிறது. அணில்களோடு அணிலாகச் சேர்ந்துவிளையாடக்கூட அதற்கு எந்தத் தடையும் இல்லை. இயற்கையின் ஆசிகள் குழந்தைமைக்கு எப்போதும் துணையாகவே இருக்கின்றன. குழந்தைமையின் களங்கமின்மையை நாம் தொலைக்கும் கணத்தில் அந்த ஆசிகள் நம்மைக் கைவிட்டுவிடுகின்றன. மீட்சியே இல்லாத துயரத்தில் நாம் மூழ்கிவிடுகிறோம். காகத்தின் மொழி என்ன என்று கேட்டுவிட்டு, விடை தெரியாத தந்தையிடம் புன்னகை ததும்ப ‘காகத்தின் மொழி பறவையின் மொழி’ என்று சொல்லிச் சிரிக்கும் மழலையின் குழந்தைமையை நிலாரசிகன் இன்னொரு கவிதையில் பதிவு செய்கிறார்.

 

சிதறிக் கிடக்கும் ஸ்டிக்கர் பொட்டுகளில் ஒன்றை மெல்ல இழுத்துச் செல்லும் எறும்பின் பயணத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு கவிதை மிகச்சிறப்பான வெளிப்பாட்டுத்தன்மையைக் கொண்டிருக்கிறது.

 

ஒரு கோணத்தில், நம் கலைமுயற்சிகள் அனைத்தும் ஸ்டிக்கர் பொட்டோடு செல்லும் எறும்பின் பயணம்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் முயற்சிகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவா அல்லது நமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கவா என்பது ஒவ்வொரு கணமும் புதிர் நிறைந்ததாகவே இருக்கிறது.

 

எல்லாப் புலன்களையும் கண்களாக மாற்றி, இந்த வாழ்க்கையையும் உலகத்தையும் ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டே நிலாரசிகனின் கவிதைப்பயணம், பல நல்ல கவிதைகளை எழுத அவருக்கு உற்ற துணையாக இருப்பதை முந்தைய இரண்டு தொகுதிகளைப்போலவே அவருடைய மூன்றாவது தொகுதியும் உறுதி செய்கிறது.

 

(கடலில் வசிக்கும் பறவை. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம் – 635 112. விலை.ரூ.60)

Series Navigation“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.குப்பையாகிவிடவேண்டாம் நாம்!தொடுவானம் 7. தமிழ் மீது காதல்தினம் என் பயணங்கள் – 8 (மேல் செங்கத்தில் மான் வேட்டை)வால்ட் விட்மன் வசனக் கவிதை – 66 ஆதாமின் பிள்ளைகள் – 3கைந்நிலை காட்டும் இல்லத்தலைவிசாட்சி யார் ?நீங்காத நினைவுகள் – 38புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 49ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014திண்ணையின் இலக்கியத் தடம் -26அத்தியாயம்-26 துரியோதனனின் வீழ்ச்சியும், போர் முடிவும்.ஓவிய காட்சிநினைவில் பதிந்த காட்சிகள் – கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’குப்பை சேகரிப்பவன்மருத்துவக் கட்டுரை ஆஸ்த்மா
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *