ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5

This entry is part 9 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 anand-5

 

இடம்:  கோயில் பிராகாரம்.

 

நேரம்: மாலை மணி ஆறு.

 

பாத்திரங்கள்: ஜமுனா, ராஜாமணி, கோயிலில் விளையாடும் சில சிறுவர்கள், மோகன்.

 

(சூழ்நிலை: ஜமுனா கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். அவள் பின்னாடியே ராஜாமணி வருகிறான். பிராகாரத்தைச் சுற்றி ஒரு வட்டம். சிறுவர்கள் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்)

 

 

ராஜாமணி: (மெதுவாக, கனிவாக) ஜம்னா…ஜம்னா…

 

ஜமுனா: (திரும்பிப் பார்த்து) அடடே ராஜு நீ கூட… ஐம் ஸாரி! நீங்க கூட கோவிலுக்கு வர ஆரம்பிச்சாச்சா?

 

ராஜாமணி: இல்லியே, ஏன் இன்னிக்கு, இப்பத்தான் ப்ச்!  நாக்கு என்ன குளர்றது?

 

ஜமுனா: (களுக்கென்று சிரிக்கிறாள்)

 

(சிறுவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து குறுக்கிட்டு ஓடுகிறார்கள்)

 

ஒரு பையன்: டேய், நான் கத்துவேன் நீங்கள்லாம் ஓடி ஒளிஞ்சுக்கணும் ரெடி. கிட்டுதான் தேடிப் பிடிப்பான். ரெடி ஒன் டூ த்ரீ.

 

முதல் பையன்: டேய் பாபு! நான் சொன்னதும் திருப்பிச் சொல்லணும் என்ன?

 

பாபு: ரைட்டோ

 

முதல் பையன்: (உரத்த குரலில் ராகம் போட்டுப் பாடுவது போல்) கில்லித் தாராரையா!

 

பாபு: (அதே நேரத்தில்) ஓடி வாடா பையா, (பிரகாரத்தின் வடக்கு வடமேற்கு மூலையில் சிரிப்பு பீறிடும் ஒலி, ஒருவன் டேய்! ஷ்ஷ் என்று அதட்டும் ஒலி)

 

(ஜமுனா, ராஜாமணி திருதிருவென்று அந்த இடையூறு தாங்காமல் விழிப்பதைப் பார்த்து குறும்புத்தனமாகச் சிரிக்கிறாள்)

 

ராஜாமணி: (சமாளித்துக் கொண்டு) நம்ம காலத்து விளையாட்டு, இப்போ ரொம்ப மாறிப் போச்சு இல்லே ஜம்னா.

 

ஜமுனா: காலம் மாறிட்டது நாமளும் மாறிட்டோம். விளையாட்டும் மாற வேண்டியது தானே (மீண்டும் சிரிக்கிறாள்)

 

ராஜாமணி: நீ எதுக்கு சிரிக்கறேன்னு தெரியறது! நீ இவ்வளவு பிரமாதமா மாறிட்ட சர்ப்ரைஸே எனக்கு ஒரு த்ரில்லா இருக்கு; அதுதான் தடுமாடறேன்.

 

ஜமுனா: நான் என்ன அவ்வளவு பிரமாதமாவா வளர்ந்துட்டேன்.

 

ராஜாமணி: ஓ ஸ்டன்னிங் பியூட்டி நீ!

 

(பிராகாரத்தின் வடமேற்கு மூலையிவல் ஒரு குரல் தனித்து ஒலிக்கிறது, “கில்லித்தாரா ரையா” அதற்கு நேர் எதிர் மூலையில் இன்னொரு குரல் “ஓடி வாடா பையா”)

 

கிட்டு: டேய் கோபு, பாச்சா, கோந்து எத்தனை தரம்டா சுத்தி சுத்தி வர்றது?

 

ராஜாமணி: இந்த வாண்டுப் பசங்களுக்கு வேற எடமே கெடைக்கலியா? கோயில் தானா ஆப்டது!

 

(கிட்டு அவர்களை ஒருமுறை முறைத்து விட்டு நகர்கிறான்)

 

ஜம்னா: நீ கூடத்தான் கம்பீரமா வளர்ந்திருக்கறே. சட் நீ நீன்னே வர்றது.

 

ராஜாமணி: பரவால்லே ஜம்னா, நீ வான்னே கூப்பிடு அப்பத்தான் இயற்கையா இருக்கும்!

 

ஜமுனா: பி.எஸ்.ஸி. ஃபைனல் இயர் வந்துட்டே! பெரிய ஆபீசராகப் போறே!

 

ராஜாமணி: யார், அம்மா சொன்னாளா?

 

ஜமுனா: ஒனக்கு எப்படித் தெரியும் அம்மாதான் சொல்லி இருப்பாள்னு?

 

ராஜாமணி: நீ தினம் நவக்கிரகம் சுத்த கோயிலுக்கு வர்றதா காலையிலே அம்மாதான் சொன்னாள் (சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டான்)

 

ஜமுனா: அம்மா சொன்னதை மோப்பம் பிடிச்சு வந்துட்டே! பசங்க இங்கே லூட்டியடிப்பாங்கண்ணு எதிர்பார்க்காமே… இப்போ முழிக்கறே? (சிரிக்கிறாள்)

 

ராஜாமணி: நீ சிரிக்கிறதப் பார்க்க இன்னும் கொஞ்சம் முழிக்கலாம் போல இருக்கு.

 

ஜமுனா: ஆள்தான் மாறியிருக்கே! குறும்பு தைரியம் அப்படியேதான் இருக்கு.

 

ராஜாமணி: நீ ஆளும் மாறிட்டே! தைரியமும் ஏறிவிட்டது.

 

ஜமுனா: நீ அபாரமா கிரிக்கெட் விளையாடறியாமே.

 

ராஜாமணி: யார் உனக்குச் சொன்னது?

 

ஜமுனா: சுசீலான்னு என் ஃப்ரெண்ட். ஈத்கா மைதானத்துக்குப் பக்கம்தான் அவள் வீடு! தினசரி நீ விளையாடறதை அவள் வாட்ச் பண்றாளாம்.

 

ராஜாமணி: ஓஹோ அது சரி. இன்னிக்கு நீ அனுப்பின பாயாசம் ரொம்ப பிரமாதம்.

 

(ஹையா… ஹையா என்று பையன்கள் கையை ஒரே ராகத்தோடு கொட்டிக் கொட்டி சப்தம் எழுப்புகிறார்கள்)

 

ஒருவன்: அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா. (சிரிப்பொலி)

 

இன்னொருவன்: கிட்டு… அட… கிட்டூஊஊ

 

(லூட்டியைப் பொறுக்க முடியாமல் ராஜாமணி தலையைப் பலமாக உலுக்குகிறான். ஒரு ஐடியா தோன்றுகிறது)

 

ராஜாமணி: (எதிரில் நிற்கிற சிறுவனைப் பார்த்து) டேய் அம்பி ஒங்க லீடர் யாரு?

 

ஒரு பொடியன்: ஏன் சார்?

 

ராஜாமணி: (பாக்கெட்டில் கையை விட்டு சில்லறை எடுக்கிறான் மனசுள் சிறுவர்களை எண்ணுகிறான். ஒன்னு… ரெண்டு மூணு… ஒன்பது பத்து) இந்தாடா பத்துப் பேரும் ஆளுக்கொரு சாக்லெட் வாங்கிக்கோங்கா… அம்பி சாக்லேட்டைச் சாப்பிட்டு மறுபடியும் இங்கே விளையாட வந்துடாதீங்கோ வீதியிலே போய் விளையாடுங்கோ.

 

லீடர் பையன்: (வாங்கிக் கொள்ளாமல் அந்த நாணயத்தையும் அவனையும் யோசனையோடு பார்க்கிறான்)

 

பாபு: வாங்கிக்கோடா…

 

லீடர்: ஏன் சார் ஒங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கா?

 

ராஜாமணி: ஹத்…என்ன துணிச்சல்டா (கையை ஓங்க கூச்சலிட்டு ஓடுகின்றனர்)

 

ஜமுனா: (வாயைப் பொத்தியவாறு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்)

 

ராஜாமணி: டெய்லி கோயிலுக்கு வர்றியே இதே கதை தானா?

 

ஜமுனா: குருக்கள் அதட்டுகிறவரை குதிப்பார்கள். அவங்களுக்கு விளையாட வேற எடமில்லே… பார்க், கிரவுண்ட் எல்லாம் தூரம்!  பொடிப் பயல்கள்…

 

ராஜாமணி: நாம கூட அப்படித்தான்… தண்டபாணி கோவில், தெரு, மடப்பள்ளி சுத்துவோம்.

 

ஜமுனா: பாயசத்தைப் பத்தி சொன்னியே அது நான் செய்ததில்லே.

 

ராஜாமணி: அப்படியா ?… வேற யாரு?

 

ஜமுனா: எங்க ஆத்துக்கு ஒரு மாமி வந்திருக்கா; அவ செஞ்சது.

 

ராஜாமணி: ஓ காலையிலே அவங்க வந்திருக்காங்கண்ணு தானே ரங்கையரைக் கூப்பிட வந்தே! யாரது… பந்துவா?

 

ஜமுனா: யாருண்ணு தெரியலே… நான் இதுவரைக்கும் அந்த மாமியைப் பார்த்ததில்லே; ஒங்க அப்பா கூட வந்து பார்த்து ரொம்ப நேரம் அவரோடு பேசிண்டிருந்தார். அவர் போனப்புறம் எங்கப்பாவைக் கேட்டேன்.  அவர் ஒங்கப்பாவுக்கு ரொம்பத் தெரிஞ்சவராம் ஆனந்தபவன் ஹோட்டல் நடத்த ரொம்ப ஹெல்ப் பண்ணினவளாம்.

 

ராஜாமணி: (யோசனையோடு) அப்படியா? நான் கேள்விப்பட்டதே இல்லியே அந்தம்மா போய்ட்டாளா?

 

ஜமுனா: இல்லே… அவங்க உத்தேசத்தைப் பார்த்தா இன்னும் ரெண்டு மூணு நா இருப்பா போலருக்கு.

 

ராஜாமணி: ஓஹோ… சரி… இனிமே நானும் தினம் கோயிலுக்கு வரலாம்ணு பார்க்கறேன், உன்னை தெரிசிக்க.

 

ஜமுனா: எதுக்கு? (அவள் தலை தாழ்த்திக் கொள்கிறாள்) வாயேன் கோயில் எனக்கு மட்டும் சொந்தமா என்ன? ஜோசியர் எனக்கு டயம் சரியில்லேண்ணு ஒரு மண்டபம் நவக்கிரகம் சுத்தணும்னார். வர்றேன், இன்னியோட அது முடிஞ்சுட்டது.

 

(பின்னாலிருந்து யாரோ இருமும் ஓசை கேட்டு ராஜாமணி திரும்புகிறான். காதுக்குக் கீழே கோடாலி மாதிரி கிருதா வளர்த்து, அயன் பண்ணிய பேண்ட்டோடு, ஆனந்தபவனில் ஆறு மாதமாகச் சாப்பிடும் கஸ்டமர் மோகன் வந்து கொண்டிருக்கிறான். ராஜாமணியைப் பார்த்து அவன் குறும்பாகச் சிரிக்கிறான்)

 

ராஜாமணி: ஹலோ மோகன் சார்!

 

மோகன்: ஹலோ ராஜாமணி… என்ன திடீர்னு கோவில் விஜயம்?

 

ராஜாமணி: ஏன்… நான் எப்பவாவது வர்றது உண்டே!

 

மோகன்: ஒங்க ஹோட்டல்லே நான் ஆறு மாசமாச் சாப்பிடறேன்.ஆறு மாசமா கோவிலுக்கும் வர்றேன்.  இதுவரைக்கும் ஒங்களைப் பார்த்ததில்லே!

 

ராஜாமணி: அது வந்து… நான் காலையிலேதான் வருவேன்… இன்னிக்கு வேலை… கேஷ்ல உட்கார்ந்தேன்! அதான் காலையிலே நீங்க பார்த்தீங்களே! அதனாலே இன்னிக்கு ஈவினிங் வர்றாப்பிலே ஆய்ப்போச்சு.

 

(அதற்குள் ஜமுனா நகர்ந்து விட்டாள்)

 

ஜமுனா: (போகும் போது அவனைக் கூர்ந்து நோக்கி) நான் வர்றேன்.

 

ராஜாமணி: மோகன் சார்! நீங்க ஆபீஸ்லேயா வேலை செய்றீங்க?

 

மோகன்: இல்லியே… என்ன விஷயம்?

 

ராஜாமணி: ஆபீஸ்ல வேலை செஞ்சா இவ்வளவு சீக்கிரம் ஆபீஸ் டயம் முடிஞ்சு கோவிலுக்கு வர முடியாதே… அதுக்காகக் கேட்டேன்.

 

மோகன்: இல்லே… நான் மெடிகல் ரெப்ரஸென்டேடிவ்வா இருக்கேன்.

 

ராஜாமணி: எந்த கம்பெனிக்கு?

 

மோகன்: க்ளெண்டோவ்ல்…

 

ராஜாமணி: நான் கேள்விப்பட்டதே இல்லியே.

 

மோகன்: இப்பத்தான் ஸ்டார்ட் ஆகியிருக்கு.

 

ராஜாமணி: ஐஸீ… ஹெட் ஆபீஸ்?

 

மோகன்: நாக்பூர்

 

ராஜாமணி: ஐ ஸீ… என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு க்ளாக்ஸோவிலயும், ஸ்க்விப்பலயும் ரெப்ரஸென்டேடிவ்வா இருக்காங்க…

 

மோகன்: அவங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்க நியாயமில்லே… ஆறு மாசமாத்தான் இது ஃபங்ஷன் ஆவுது. இப்ப மார்க்கெட் ஸ்டடி பண்ணிட்டிருக்கோம். மெடிஸின்ஸே மார்க்கெட்டுக்கு வரலே!

 

ராஜாமணி: மெடிஸின்ஸ் வராமே நீங்க எப்படி சார் மெடிகல் ரெப்ரஸென்டேடிவ்வா இருக்கீங்க?

 

மோகன்: யூஸீ… பிரிலிமினரி மார்க்கெட் ஸ்டடி. இந்த டிஸ்ட்ரிக்ட் பூரா என்னென்ன வகை மருந்து மூவ் ஆறது? டிமாண்ட் எப்படி இதெல்லாம் ஒரு வீக்லி ரிப்போர்ட் அனுப்பறேன். நெக்ஸ்ட் மன்த் மருந்து வந்துடும்!

 

ராஜாமணி: ஐ ஸீ

 

மோகன்: வரட்டுமா? வேலை இருக்கு. (அவசர அவசரமாக நழுவுகிறான்)

 

ராஜாமணி: (தனக்குள்) வேலையைப் பத்திக் கேட்டதும் அவசர அவசரமா நழுவுறானே… மருந்து இல்லாத மெடிகல் கம்பெனி! அதுக்கு ஆறு மாசமா இதே ஊர்லே முகாம் ஒண்ணும் சரியாத் தெரியலியே.

 

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigationமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 21வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *