தாரமங்கலம் வளவன்
முன் சீட்டில் தனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த பையனைக்காட்டி டிரைவர் மாரி,
“ வாடகைக்கு ஓடற காருக்கு கிளீனர் வைச்சி சம்பளம் கொடுக்க முடியுங்களா.. எனக்கு கட்டுபுடி ஆகுங்களா… நீங்களே சொல்லுங்க..” என்றான்.
நான் சென்னையில் ஒரு சிறிய பாக்டரி வைத்திருக்கிறேன். சூரிய ஒளியில் இருந்து வெந்நீர் தயாரிக்கும் சோலார் வாட்டர் ஹீட்டர் செய்யும் பாக்டரி. போட்ட பணத்தை எடுப்பது சிரமமாய் இருக்கிறது. கஷ்டப்பட்டு நடத்திக் கொண்டு வருகிறேன். இந்த ஊரில் இருக்கும் ‘குட் ஹோம்’ அனாதை ஆசிரமத்திற்கு இரண்டு வாட்டர் ஹீட்டர் சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ஏற்கனவே முக்கியமான பாகங்கள் சப்ளை செய்யப் பட்டு விட்டன. கையில் சில உதிரி பாகங்களை எடுத்துக் கொண்டு, காலையில் பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இந்த பையன் வந்து கேட்டான்.
‘ டாக்சி ஏதாவது வேணுங்களா சார்..’ என்று.
பையனைப் பார்த்தால் சற்று நம்பிக்கை ஏற்பட, ‘ஆமாம்..’ என்றேன்.
நான் எடுத்து வந்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு டாக்சியை நோக்கி நடந்த அந்த பையனை பெயர் என்ன என்று கேட்டேன். ராமு என்று சொன்னான். தன்னுடைய முதலாளி பெயர் மாரி என்று சொன்னான். நான் ‘ குட் ஹோம் அனாதை ஆசிரமம்’ போக வேண்டும் என்று சொன்னவுடன் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அனாதை ஆசிரமத்திற்கு போவதற்கு மாரி சொன்ன தொகை எனக்கு சரியாக தோன்ற, அதிகம் பேரம் பேசாமல் நான் ஓகே சொன்னேன்.
கார் அனாதை ஆசிரமத்திற்குள் நுழைய ஆரம்பித்தது. திடீரென்று எங்கள் காரை நோக்கி பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் ஓடி வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு. ஒரு வேளை என்னை சினிமா நட்சத்திரமாகவோ, கிரிக்கெட் வீரனாகவோ நினைத்து இருப்பார்களோ.. ஏன் இப்படி ஓடி வருகிறார்கள்,
கார் நின்றது. நான் செலிபிரட்டி இல்லை என்று ஓடி வந்த மாணவர்களிடம் சொல்லி விடலாமா என்று மனதில் தோன்றிய அதே சமயத்தில், அதற்கு அவசியம் இல்லை என்றும் தோன்றியது. அவர்கள் ஓடி வந்தது, என்னைப் பார்க்க அல்ல, காரின் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த ராமுவைப் பார்க்க.
“ ராமு அண்ணா.. எப்படி இருக்கீங்க..” என்று அந்த மாணவர்கள் கேட்க, அதற்கு அவன் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தான்.
நான் எடுத்த வந்த பொருட்களை வாங்கிக் கொண்ட அந்த சிஸ்டர், ராமுவைக் காட்டி, “ இந்த ராமு எங்க ஹோமில் வளர்ந்த பையன் தான்.. ஹோமை விட்டு போய் நாலு மாதம் தான் ஆகுது..” என்றார். சிஸ்டர் அவனிடம் பேச முயன்ற போது, ராமு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
ஆசிரமத்தை விட்டு திரும்பி வரும் போது, “ ஏன் ராமு இப்படி நடந்து கொள்கிறான் ” என்று கேட்டேன் மாரியிடம்.
“ இந்த ராமு பனிரெண்டாம் கிளாசில பெயிலாயிட்டான். பாஸ் பண்ணியிருந்தா வேற ஆசிரமத்துக்கு அனுப்பி மேல படிக்க வைச்சி இருந்திருப்பாங்க.. இந்த அனாதை ஆசிரமத்து ரூல்ஸ்படி பதினெட்டு வயசுக்கு மேல இங்க இருக்க முடியாது.. வெளியே போய் ஆகணும்.. ஆசிரமத்துக்கு பாரமா இருக்கக் கூடாது.. ஆசிரமத்திலேயிருந்து அவனை போகச் சொல்லும் போது, அவனால இந்த ஹோமை விட்டு வர முடியல.. அப்பா அம்மா இல்லாத இந்த அனாதைக்கு இருந்த ஒரே ஆதரவு இந்த ஹோம் தான். அதிலேயிருந்தும் போகணும்னா கஷ்டம் இல்லீங்களா.. சொந்தமா சம்பாதிக்கவும் முடியல.. இது சின்ன ஊரு.. இந்த ஊர்ல எப்படி வேலை கெடைக்கும்.. அதனால, இந்த ஹோம் மேல இவனுக்கு கோபம்…”
“ ஹோம்ல இருந்து ராமு போகணும்னு ஆயிட்டதனால, நீ வேலை கொடுத்தியா..”
“ ஆமாம் சார்..” என்றான் மாரி.
நான் ஒரு முடிவு செய்தேன். நான் சிரமப் பட்டு நடத்திக் கொண்டு இருக்கும் என்னுடைய சோலார் கம்பெனியில் ராமுவுக்கு வேலை கொடுக்கலாம் என்று.
ராமுவிடம் என்னுடன் வர சம்மதமா என்று கேட்டேன்..
“ சார்.. நான் இங்கிருந்து கண்காணாத தூரத்துக்கு போகணும் சார்… என்னை கூட்டிக் கிட்டு போயிடுங்க சார்.. இதே ஊர்ல, இந்த ஹோமை விட்டு வெளியில என்னால இருக்க முடியல..” என்றான் ராமு அழுகையுடன்.
மாரியிடம் கேட்டேன் “ ராமுவைக் கூட்டிக் கொண்டு போக சம்மதமா..” என்று.
“ சார்.. சார்.. கண்டிப்பா கூட்டிக் கிட்டு போயிடுங்க.. என்னோட வருமானத்தில இவனுக்கு சம்பளம் கொடுக்க முடியல.. என் பொண்டாட்டி திட்றா சார் என்னை..” என்றான்.
சென்னைக்கு கூட்டி வந்து என்னுடைய கம்பெனியில் ராமுக்கு வேலை கொடுத்தேன். சம்பளமாக எட்டாயிரம் கொடுத்தேன்.
ராமு பாக்டரியிலேயே தங்கிக் கொள்வான். ரூம் என்று எதுவும் எடுக்க வில்லை.
மாதக் கடைசியில், தன் செலவு போக சேமித்த மூவாயிரத்தை தன்னை வளர்த்த அனாதை ஆசிரமத்திற்கு அனுப்ப வேண்டும் என்றான் ராமு. அனாதை ஆசிரமத்து கணக்கில் ராமுவின் சம்பளத்தில் இருந்து மாதா மாதம் மூவாயிரம் விழுந்தது.
விழுதுக்கு ஆல மரத்தின் மீது கோபம் இல்லை. மாறாக அந்த விழுது, வேர்பிடித்து, அந்த ஆலமரத்தை தாங்கிப் பிடிக்க முயற்சிக்கிறது என்பது எனக்கு தெரிந்த போது, மகிழ்ச்சியாய் இருந்தது.
- 1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு
- ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்
- மிதிலாவிலாஸ்-23
- தொடுவானம் 73. இன்பச் சுற்றுலா
- தூக்கத்தில் தொலைத்தவை
- சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து
- காஷ்மீர் மிளகாய்
- “உன் கனவு என்ன?” – ரஸ்கின் பாண்ட்
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11
- சீப்பு
- இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்
- சங்க இலக்கியத்தில் வேளாண் பாதுகாப்பு
- நாடக விமர்சனம் – கேஸ் நெ.575/1
- புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.
- அமராவதிக்குப் போயிருந்தேன்
- பா. ராமமூர்த்தி கவிதைகள்
- செய்தி வாசிப்பு
- வேர் பிடிக்கும் விழுது
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2015 மாத இதழ்
- கும்பக்கரை அருவியும் குறைந்து வரும் கோயில் காடுகளும்
- பிரம்மலிபி- நூல் மதிப்புரை
- மஞ்சள்
- வால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது