சிவப்பு முக்கோணம்

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 18 of 29 in the series 19 ஜூலை 2015

 ஜான்ஸ் டேவிட் அன்டோ

 

எழும்பூர் நிலையத்தில் அனந்தபுரி விரைவு வண்டி எந்நேரமும் உரிவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. மாரிசன் தன் குடும்பத்தாருடன் நடைமேடையில் ஓடிக் கொண்டிருந்தார். அவரின் நான்காம் மகள் வைத்திருந்த குரைக்கும் நாய் பொம்மையை தவிர்த்தால் மொத்தம் ஏழு உயிரினங்கள். இளையவனை தவிர  மற்றவர் அனைவருக்கும் ஈரேழரை வயதுக்கு மேல் கடந்து விட்டதால் அனைவருக்கும் சீட்டு எடுத்திருந்தார் மாரிசன். நாற்பத்தி இரண்டு வயசானாலும் கையில் இரண்டு சுமையுடன் ஓடி வந்து கொண்டிருந்த அவருக்கு பின்னால்தான் அவரது குடும்பத்தினர் ஓடியும் ஒடிந்தும் வந்து கொண்டிருந்தனர். ஒருவேளை இவர்தான் குடும்பத் தலைவர் என்று காட்டுவதற்காக கூட அவர் பின்னால் ஓடி வந்திருக்கலாம்.

 

மாரிசன் சென்னையில் கிரானைட் தொழிலில் இருப்பவர். கிரானைட் என்றால் உடனே வேறு எதுவும் நினைத்து விடாதீர்கள். வீட்டு தரைகளுக்கு சிமென்ட் கலவை பரப்பி அதன் மேல் கிரானைட் கல் பதிக்கும் கொத்தனார் வேலை. ஒருநாள் அறுநூறு ரூபாய் வரும்படி வரும். மாரிசனுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். ஆண் ஆண் என்று நாண் மீட்டி நான்கு பெண்பிள்ளைகளுக்கு பிறகு ஜூனியர் மாரிசன் பிறந்தான். அந்த ஐந்து பிள்ளைகளை படிப்பு, மருத்துவம் என்று அவர் வளர்த்த கதையை சொல்வதென்றால் அதற்குள் ஒருவேளை இந்த புகைவண்டி கிளம்பி விட நேரும். அதனால் இப்போது சொந்த கிராமத்துக்கு கோவில் கொடைக்கு போய்க் கொண்டிருக்கிற மாரீசனை தொடரலாம்.

 

பதிவு செய்யப்படாத அந்த கம்பார்ட்மென்ட் நிரம்பி விழி பிதுங்கிக் கொண்டு நின்றது. கூட்டத்தை பார்த்து பக்கத்தில் இருந்த குளிர்சாதன கம்பார்ட்மெண்டில் ஏறப்போன இளையவனை அக்காள் பின்னிழுத்துக் கொண்டாள்.

 

மாரிசன் சாளரங்களின் வழியாக தலை நுழைத்து எங்கேயாவது இருக்கைகள்  தென்படுகிறதா எனப் பார்த்தார். இருக்கைகள் பலகையா ? இரும்பா ? என்பதை யாரும் கண்டுபிடிக்கா இயலா வண்ணம் எங்கும் மனித தசைகள் நிரம்பியிருந்தன. சரி பிள்ளைகளையாவது பெண்களுக்கான பெட்டியில் ஏற்றி விடலாம் என்று நினைத்து அங்கே சென்றால், சில மூன்றாம் தர இயக்குனர்கள் சினிமாவில் காட்டும் பெண் வில்லிகளைப் போல இருவர் வாயிலை அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

சென்னை நகரமே இந்த ரயிலில் அடைந்து கிடக்கிறதா என்ற சந்தேகத்தில் மாரிசன் மறுபடியும் முதலில் சென்ற கம்பார்ட்மென்ட்டுக்கே சென்றார். மந்தையும் அவரை தொடர்ந்தது.

 

வாயிலில் நின்ற ஒரு முரட்டு தாடியை கொஞ்சம் உள்ளே செல்லுமாறு கூறினார். அவன் படியிலிருந்து இறங்கி உள்ளே கை காட்டினான். அங்கே நின்றிருந்தவர்களின் சிறு இடைவெளியிநூடே புகுந்து முன்னேற தொடங்கினார் மாரிசன். தரையை விட அங்கு நின்றிருந்தவர்களின் கால் மேல் கால் வைத்துதான் அவரால் நடக்க வேண்டியிருந்தது. பின்னால் வந்த பிள்ளைகளும் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டு வந்ததன. கொஞ்சம்  கனத்த சரீரம் உடைய மாரிசனின் மனைவியால் அந்த சிறிய இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. மறுபடியும் ஏறிய அந்த முரட்டு தாடியின் அருகாமையிலேயே நிற்க வேண்டியதாய் போயிற்று.

 

கையில் வைத்திருந்த பைகளை மேலே வைக்கப் பார்த்தால் அங்கு, செருப்புகளை மின்விசிறியின் மண்டையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பலகையிலும் நான்கு பேர் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்கள். இருக்கைகளின் அடியில் தள்ளப்பார்த்தார்; அங்கு ஒரு தம்பதியினர் படுத்துக் கொண்டிருந்தனர். தரையில் கிடைத்த ஒரு சிறு இடத்திற்கு இருவர், அவரவர்  தாய்மார்களை கேவலமாக அழைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் பெண் பார்க்க வர இருக்கும் மாரிசனின் மூத்த மகளைப் பார்த்து, அரசு தடை செய்த புகையிலையை மேல் உதட்டினடியில் சுருட்டியிருந்த ஒருவன்,

 

‘பாப்பா வந்து உக்காரியா’ என்று மடியை காட்டினான்.

 

அவன் கால்கள் நேர் எதிரே அமர்ந்திருந்த சல்வார் பெண்ணின் கால்களில் மிக ஆழமாக புதைந்திருந்தது.’

 

‘நான் வரவா மாமா ?’ என்று கேட்ட இளையவனை புறக்கணித்து பார்வையை சாளரத்தின் வெளியே ஓட்டினான் புகையிலைக்காரன்.

 

காலை கட்டியிருந்த மகளை ஒதுக்கி, கையில் வைத்திருந்த நான்கு மாத மகனுக்கு அவசர தொட்டில் ஒன்று தயார் செய்து கொண்டிருந்தாள் ஒரு தாய். மழைக்கு ஒதுங்கும் தென்னையை போல குழந்தைகள் ஐந்தும் மாரிசனை பொதிந்து நின்று கொண்டிருந்தார்கள். திரும்பி மனைவியைப் பார்த்தார் மாரிசன். அந்த முரட்டுதாடி இவர் கூட காட்டியிரா நெருக்கத்தில் அவர் மனைவியின் பின்னால் அணைந்து நின்றிருந்தான்.

 

வெளியே ரயில் மாரிசனின் மன ஓலத்தை விட மிக குறைவான அளவே ஒலியெழுப்பி கிளம்பிக் கொண்டிருந்தது. ரயில் உள் பக்கவாட்டு தகர சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிவப்பு முக்கோணத்தை மாரிசன் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அதன் வாயில் கோர பற்கள் முளைத்து இவரை நெருங்கி வருவதைப் போல தோன்றியது. ஈரம் நிரம்பிய கண்களை சடாரென்று மூடிக்கொண்டார் மாரிசன்.

 

 

Series Navigationகள்ளா, வா, புலியைக்குத்து‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    Arjunan Narayanan says:

    சிவப்பு முக்கோணம் கதை படித்தேன். அது உச்சத்தில் இருந்தது 70 களின் பத்தாண்டு . 50களின் கடைசியில் குடும்பக்கட்டுப்பாடு என்ற திட்டம் தோன்றினாலும் கூட அதைப்புரிந்து கொள்ளும் அளவில் இந்தியாவில் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட ஒரு சமூக அமைப்பு இல்லை. கட்டாயக்குடும்பகட்டுப்பாடு திட்டம் சஞ்சய் காந்தி புண்ணியத்தில் இருந்ததுவும் கூட காலம் பதிவு செய்திருக்கிறது. குடும்பக்கட்டுபாட்டுக்கு ஆள் பிடிக்கும் அந்தக்கொடுமையை பள்ளி ஆசிரியர்கள் வேலையை தக்க வைக்க அலைந்தது திரிந்தது கூட ஒரு கருப்பு காலப்பதிவுதான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *