மிதிலாவிலாஸ்-27

This entry is part 5 of 20 in the series 26 ஜூலை 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

      tkgowri@gmail.com

sulochanaraniகாலையில் சித்தூ விழித்து பார்க்கும் போதே ஊரிலிருந்து அன்னம்மா வந்து விட்டிருந்தாள். பையை உள்ளே கொண்டு போட்டவள், “ரமாகாந்த் திரும்பவும் துபாய்க்கு போய் விட்டான். அவன் மாமியார் வீட்டில் என்னை இருக்கச் சொன்னான். அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ, அவன் மாமியார் இது என்ன சத்திரமா சாவடியா என்று அடிக்க வந்து விட்டாள். ஒரு வாய் காபி கூட கொடுக்கவில்லை. இருந்தாலும் வளர்த்து ஆளாக்கியவள் நான். பேரனிடம் இருக்கும் உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்? டேய் சித்தூ! நான் வந்து விட்டேனடா” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தாள்.

தினமும் காலையில் சித்தூ எழுந்து கொண்டதும் மைதிலி தலை மீது கையை வைத்து, “விழித்துக் கொண்டு விட்டாயா கண்ணா! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்லையா?’ என்பாள். அவளைப் பார்த்தால் அவனுக்கு தன் இஷ்டதேவதை பிரத்யட்சமாகி விட்டது போல் இருக்கும். எழுந்து கொள்ளும் போதே அந்த குசல விசாரிப்பு அவனுக்கு தைரியத்தை, உற்சாகத்தை அளிக்கும்.

தொடக்கத்தில் அம்மா என்று அழைப்பதற்கு அவன் நாக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் இப்பொழுது ரொம்ப சகஜமாக அவன் வாயிலிருந்து அந்த அழைப்பு வருகிறது. கிட்டத்தட்ட முடியப்போகும் இந்த இரண்டு மாதங்களும் அவனுக்கு புதியதொரு உலகத்தை உருவாக்கி இருந்தன. தாயின் அனுசரணையில், கொஞ்சலில் ஒவ்வொரு நாளும் ஒரு புது சந்தோஷம்! இந்த உணர்வுகள் அவனுக்கு வாழ்க்கையில் கிடைத்த அபூர்வமான வைரக் கற்கள் போல் இருந்தன. தினமும் ஒரு பண்டிகையாய் அவன் மனம் ஆனந்தத்தில் திளைந்து கொண்டிருந்தது.

மலர்ந்த முகத்துடன் வளைய வந்து கொண்டிருந்த மகனைப் பார்க்கும் போது மைதிலியின் மனம் நிறைவாக இருந்தது. அவள் துணிகளை தோய்த்தால், அவன் தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவான், அவள் காயப் போட்டால் அவன் கையில் எடுத்துக் கொடுப்பான். அவள் சமைக்கும் போது அதென்ன இதென்ன, எப்படி செய்வார்கள் என்று கேட்பான். அவள் சொல்லும் பதில்கள் அவனுக்கு வியப்பாக இருக்கும். அவன் கண்களை உயர்த்தி தன்னுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அவன் இருபது வயது பையனாக தென்பட மாட்டான். இரண்டு வயது குழந்தையின் சாயல் அந்தக் கண்களில் தென்படும். இருவது வருடங்களுக்கு பிறகாவது தனக்கு இந்த சந்தோஷம் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையின் முழுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் மைதிலி.

உள்ளே இருந்து சித்தூவுக்கு பிரஷ்ஷும் பேஸ்டும் எடுத்து வந்து கொடுத்த மைதிலியைப் பார்த்ததும் அன்னம்மா வாயைப் பிளந்தாள். மைதிலிக்கு அவளுடைய பார்வை முட்கள் குத்தியது போல் இருந்தது. மௌனமாக உள்ளே போய் விட்டாள்.

“என்ன? இந்த மகாராணி இருப்பிடத்தை இங்கே மாற்றிக் கொண்டு விட்டாளா?” என்றாள்.

“பாட்டீ! நீ இங்கே இருக்கணும் என்றால் அனாவசியமான பேச்சு பேசாமல், வாயைத் திறக்காமல் இருக்கணும். அப்படி இருந்தாய் என்றால் உனக்கு எந்தக் குறையும் இங்கே இருக்காது.” சித்தூ ஆட்காட்டி விரலை நீட்டியபடி தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு போய் விட்டான். மைதிலி சித்தூவுக்கு காபி கொடுத்த போது அந்தம்மாவுக்கும் கொடுத்தாள்.

“நீயும் குடிம்மா” என்றான் சித்தூ. உள்ளே இருந்து அம்மாவுக்கு கொண்டு வந்து கொடுத்தான்.

“உன் கண்கள் ஏன் சிவந்து இருக்கு?” மைதிலி கேட்டாள்.

“இரவு முழுவது விழித்து புதிதாக ட்ரெஸ் டிசைன் வரைந்தேன்.”

“அவ்வளவு பணம் நம்மிடம் எது கண்ணா?”

சித்தூ தலையை அசைத்தான். “பணம் நம்மிடம் இல்லைதான். அவற்றை ரோஷன்லால் கம்பெனிக்கு விற்று விடுவேன். ரொம்ப நாளாக  தன்னிடம் வேலை செய்யச் சொல்லி கேட்கிறார்கள் அம்மா.”

“ரோஷன்லாலுக்கா?” என்றாள் வியப்புடன்.

“ஆமாம். எனக்கு பணம் வேண்டும்.” சித்தூ வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். “என்னுடைய அம்மா இப்படி கஷ்டப்படக் கூடாது. வசதியாக இருக்க வேண்டும். கொஞ்ச நாட்கள் ரோஷன்லாலிடம் வேலை செய்தால் நாமே சுயமாக ஏதாவது தொடங்கலாம். நான் இந்த டிசைன்களை கொடுத்து விட்டு வருகிறேன். நீ பார் நான் போட்டதை” என்று எடுத்து வந்து காண்பித்தான்.

“ரொம்ப நன்றாக இருக்கிறது. எப்போ வரைந்தாய்?”

“இரவு நேரத்தில் நீ தூங்கிய பிறகு மூன்று நாட்களாக வேலை செய்கிறேன்.”

மைதிலுக்கு சந்தோஷமாக இருந்தது. சித்தூ கிளம்பி விட்டான். “போய் வருகிறேன் மம்மி!” சைக்கிளை எடுத்துக் கொண்டே சொன்னான். “பாட்டீ! அம்மாவைத் தொந்தரவு செய்யாதே. வேண்டியதை கேட்டு வாங்கி சாப்பிடு.”

மைதிலி அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். சித்தூ சைக்கிளை எடுத்து உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே, “வருகிறேன் மம்மி!” என்று போய் விட்டான். சித்தூவிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. முன்னைப் போல் ஊமையாய் இருக்கவில்லை. வாயைத் திறந்து மனதில் இருப்பதை வெளிப்படுத்துகிறான்.

அன்று இரவு தாயின் மடியில் தலை வைத்து படுத்தவன் சொன்னான். “அம்மா! என்னைப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.”

“எதற்காக கண்ணா?”

“என்னால் இவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்று இதுவரையில் தெரியாது. இதற்கு முன் நான் யாரோ ஒருவனாக, சாலை ஓரத்தில் கிடக்கும் அனாதையாக தோன்றும். இந்த உலகத்துடன் எனக்கு சம்பந்தம் இல்லை என்று தோன்றும்.”

“இப்போது?”

“எனக்கு நானே ராஜாவாக உணருகிறேன். இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கிறது! இப்படியே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பு வருகிறது.”

மைதிலி அவன் தலையை வருடிக் கொண்டு மௌனமாக இருந்துவிட்டாள்.

அவள் கையைப் பற்றிக் கொண்டு, “அம்மா! நீ என்னுடன் இருப்பதற்கும், இல்லாமல் போவதற்கும் இருக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தாயா?” என்றான்.

பதிலுக்கு மைதிலி, “என் கண்ணே சித்தூ!” என்றாள்.

*********

மைதிலியின் மனதில் கலவரம் கடல் அலைகளை போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. சித்தூ சந்திக்கப் போன நபர் யாரென்று தனக்கு தெரியும். ரோஷன்லால் தம் குடுபத்திற்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவன்தான். அவனுக்கு அபிஜித்தைக் கண்டால் பொறாமை. எப்போ வாய்ப்பு கிடைத்தாலும் அபிஜித்தை வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பான். இதற்கு முன்னால் இருந்த செகரெட்ரி ஹீராலால் சொல்பேச்சைக் கேட்டுக் கொண்டு அவனிடம் போய் சேர்ந்து சீரழிந்தான். திரும்பவும் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அபிஜித் கேட்டுக் கொள்ளவில்லை. அதே போல் வியாபாரத்தில் இரண்டு கூட்டாளிகள் வேண்டாத எண்ணத்தில் பிரிந்து போன போது அவர்களுக்கும் அதே கதிதான் நேர்ந்தது.

சித்தூவை இந்த முயற்சியிலிருந்து தடுப்பது தன் கடமை. அபிஜித்துக்கு ஏற்கனவே நடந்த நஷ்டம் போதும். மைதிலி திடமான முடிவுடன் சித்தூவின் வருகைக்காக காத்திருந்தாள். அபிஜித் பெயரைச் சொன்னால் சித்தூ கேட்டுக் கொள்ள மாட்டான். வேறு ஏதாவது காரணம் சொல்ல வேண்டும்.

சித்தூ கிளம்பிப் போனதும் அன்னம்மா சமையல் அறைக்குள் புகுந்தாள். வேண்டுமென்றே கிண்ணங்களை ஒசைபடுத்திக் கொண்டே, “இந்த வீடு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு அவனை வளர்ந்தேன். நடுவில் யாரோ வந்து கழுகு போல் கொத்திக் கொண்டு போனால் சும்மா இருப்பேனா? நேரம் வந்தால் போக வேண்டியவர்கள் அவர்களாகவே திரும்பிப் பார்க்காமல்  போய் விட வேண்டும். என் வாழ்க்கையில் இது போன்றவை எத்தனையோ பார்த்திருக்கிறேன்” என்று உரத்தக் குரலில் கத்திக் கொண்டிருந்தாள்.

மைதிலி மௌனமாக உடகார்ந்து இருந்தாள். அவளுக்கு பதில் சொல்லுவது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. மதியம் ஆகிவிட்டது. சித்தூ இன்னும் வரவில்லை. மைதிலியின் கவலை மேலும் அதிகரித்தது.

வாசலில் கார் வந்து நின்றது. மைதிலி திரும்பிப் பார்த்தாள்.

மிசெஸ் மாதுர், சார்தா மாமி இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். மைதிலி அவர்களை எதிர்கொண்டு நின்றாள். தான் எந்த தவறும் செய்யவில்லை. ஒளிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மைதிலி தைரியமாக அவர்களை வரவேற்றாள்.

உட்கார்துகொள்ள பாயை விரித்தாள். ஒரு நிமிடம் சங்கடமாக பார்த்தாலும் இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். மிசெஸ் மாதுர் உட்காரும் முன் மைதிலியின் வாயில் இனிப்பை ஊட்டிவிட்டு அழுத்தமாக கட்டிக் கொண்டாள்.

“தாங்க்ஸ் மைதிலி! இந்த உலகத்தில் நிஷா விஷயத்தில் யாருக்காகவது நன்றியைச் சொல்லணும் என்றால் அந்த நபர் நீயே தான்.”

“என்ன நடந்தது மிசெஸ் மாதுர்?”

‘நிஷாவை கல்யாணம் பண்ணிக் கொள்வதாகச் சொன்ன நபரை இன்னொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டான் அபிஜித். அவனுக்கு அந்தப் பெண்ணுடன் ஏற்கனவே நான்கு வருடங்களாக தொடர்பு இருக்கிறதாம். போலீஸ் அவனை அரெஸ்ட் செய்து விட்டார்கள். நிஷாவும் தன் தவறை உணர்ந்துவிட்டாள். நாங்களும் சமாதானத்திற்கு வந்து விட்டோம். அவள் விரும்பிய பையனுடன் திருமணம் நிச்சயம் செய்து விட்டோம். இதெல்லாம் நீ கொடுத்த தைரியம், அபிஜித் செய்த உதவி. நீங்க இருவரும்தான் எங்களுக்கு துணையாய் இருந்தீங்க.”

மைதிலி கேட்டுக் கொண்டிருந்தாள். சாரதாம்பாள் அருகில் வந்தாள். “மைதிலி! நீ எதற்காக இங்கே இருக்கிறாய்? என்னதான் நடந்தது? அபிஜித்தைக் கேட்டால் வாயைத் திறந்து எதுவும் சொல்ல மறுக்கிறான். உன்னைக் காணாமல் நீ என்னதான் ஆகிவிட்டாயோ என்று கவலைப் பட்டோம். கடைசியில் மிசெஸ் மாதுர் வீட்டில் வேலை செய்யும் டைலர் ஒருத்தன் நீ இந்த தெருவில் இருக்கிறாய் என்றும், அதுவும் சித்தார்த்தாவுடன் தங்கி இருக்கிறாய் என்றும் சொன்னான். என்ன இந்த விபரீதம்?” என்றாள்.

மைதிலி பதில் பேசவில்லை.. “அவன் நான் பெற்ற மகன்” என்று உரத்தக் குரலில் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் இதழ்களை இறுக்கிக் கொண்டாள். தன்னுடைய முதல் திருமணம் அவர்களுக்கு தெரியாது. சொன்னாலும் புரியாது.

மிசெஸ் மாதுர் மைதிலியின் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள். “மைதிலி! நான் வயதில் பெரியவள். உன்மீது இருக்கும் அன்பினால் சொல்கிறேன். இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. எங்களுக்கு பிரச்சினை வந்த போது உறுதுணையாய் இருந்து அமைதி ஏற்படுத்திக் கொடுத்தீங்க. இதென்னது? உங்கள் குடித்தனத்தை இப்படி நாசமாக்கிக் கொள்ளலாமா? அபிஜித் எப்படி சும்மா இருக்கிறான்?” என்றாள்’

“அபிஜித் போன்ற பெரிய மனிதன் சும்மா இருக்காமல் என்ன செய்வான்? வெளியில் சொன்னால் மானக்கேடு! மைதிலி! உனக்கு மூளை கலங்கி விட்டதா? பைத்தியம் போல் என்ன இந்த வேலை?” சாரதாம்பாள் கோபமாகச் சொன்னாள். “போக்கத்த ஒருவனுக்காக கடவுள் போன்ற கணவனை விட்டு வந்து விடுவதாவது? எல்லோரும் சிரிக்கிறார்கள். குழந்தை வேண்டும் என்ற வெறியில் நீ இவனுக்காக வந்து விட்டாய் என்று எள்ளி நகையாடுகிறார்கள்.”

“அது உண்மைதான்!”

“உண்மைதானா! எவ்வளவு துணிச்சலுடன் சொல்கிறாய்?” அந்தம்மாள் வியந்து போனாள்.

“நான் எந்த தவறும் செய்யவில்லை.”

“போதும் நிறுத்து. தவறு எதுவும் செய்யவில்லையாம். உன் சுகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டாய். அபிஜித்துக்கு எவ்வளவு வேதனை தருகிறாய் என்பதை நீ உணரவில்லை. சித்தார்த்தா மீது இருக்கும் வியாமோகம் உன் கண்களை மறைத்துவிட்டது. வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டு வருகிறாய். அந்தப் போக்கத்தவன் உன்மீது ஏதோ மயக்க மருந்தை போட்டுவிட்டான்.”

“சித்தூவை நீங்க ஒன்றும் சொல்லாதீங்க.” மைதிலி வேண்டுகோள் விடுத்தாள்.

“ஒன்றும் சொல்லக் கூடாதா? வரைமுறை எதுவும் வேண்டாமா? ஆதரவு கொடுத்தவர்களின் கையை வெட்டும் ஜாதி. இருந்தாலும் வயதில் பெரியவள். உனக்கு மூளை எங்கே போச்சு?”

ஏற்கனவே அங்கே வந்த அன்னம்மா இதையெல்லாம் கேட்டாள். “அப்படி புத்தி சொல்லுங்கம்மா. என் பேரனை எனக்கு இல்லாமல் செய்துவிட்டாள். இவளை அழைத்துக் கொண்டு போய் என் பேரனை மீட்டுக் கொடுங்கள்.” அன்னம்மா கும்பிடு போட்டாள். “அந்தம்மாளின் கணவன் ஏன் அழைச்சுகிட்டு போக மாட்டேங்கிறான்? எதற்காக சும்மா இருக்கிறான்?”

“அன்னம்மா!” பற்களைக் கடித்தபடிச் சொன்னாள் மைதிலி.

“என் பேரனை சனியை போல் பிடித்துக் கொண்டு விட்டாள். இந்த பீடையை என்னால் ஒழிக்க முடியவில்லை.”

சாரதாம்பாள் எழுந்து வந்தாள். இழுத்து அன்னம்மாவின் கன்னத்தில் ஒன்று கொடுத்தாள். “நாக்கை அடக்கிப் பேசு கிழவி! யாரைப் பற்றிப் பேசுகிறாயோ தெரியுமா? உன் பேரன்தான் சனியாய் இவள் குடித்தனத்தில் விஷத்தைக் கொட்டி இருக்கிறான். அபிஜித் எவ்வளவு வருத்தப் படுகிறான் தெரியுமா? அவன் என்ன கையாலாகாதவன் என்று நினைத்தாயா? மைதிலி தானே திரும்பி வந்து விடுவாள் என்று காத்திருக்கிறான்.” அந்தம்மாள் மைதிலியின் பக்கம் திரும்பினாள். “ஏற்கனவே பலவிதமான வதந்திகள் வேகமாய் பரவிக் கொண்டு இருக்கு. சுயநினைவுடன் நடந்து கொள் என்று சொல்லத்தான் வந்தோம். நீ யாருடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறாய் தெரியுமா? இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் நீ வீட்டுக்கு வந்து விட வேண்டும். இல்லை என்றால் எப்படி அழைத்துகிட்டு போகணும் எனக்குக்குத் தெரியும்” என்றாள்.

சாரதாம்பாளின் வார்த்தைகள் மைதிலிக்குப் புரியாமல் இல்லை. குடும்பத்தில் அக்கறை உள்ளவளாக, நெருக்கமானவளாக அந்த உரிமையும், அதிகாரமும் அந்தம்மாளுக்கு இருக்கிறது. அதனால்தால் பதில் அளிக்கவில்லை.

“உங்களால் அவளை அழைத்துப் போக முடியாது.” பின்னாலிருந்து குரல் கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எப்போது வந்தானோ தெரியாது. சித்தார்த்தா வாசலில் நின்றிருந்தான். அவன் முகம் செக்கச் சிவக்க கன்றி இருந்தது. நெற்றியில் வியர்வை பொடித்திருந்தது. கைப்பிடிகள் இறுகி இருந்தன, “என் உடலில் உயிர் இருக்கும் வரையில் அவளை அழைத்துக் கொண்டு போக முடியாது. உங்களை தூது அனுப்பிய அந்த பெரிய மனிதரிடம் இந்த வார்த்தையைச் சொல்லுங்கள்.”

“சித்தூ!” மைதிலி கலவரத்துடன் அருகில் சென்றாள்.

சித்தூ தாயின் தோளைச் சுற்றி கையைப் போட்டான். “நான் சொல்கிறேன். இவள் எனக்கு சொந்தமானவள். அவரை விட எனக்குத்தான் இவளிடம் உரிமை இருக்கிறது. எனக்குப் பிறகுதான் அவர். அவள் வாழ்க்கையில் முதல் இடம் எனக்குத்தான்.”

“சித்தூ! சித்தூ!” மைதிலி கையை நீட்டி வலுவில் அவன் வாயைப் பொத்தினாள். அவன் தலையை தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“உன்னை விட்டுவிட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ எதுவும் பேசாதே.”

மைதிலி இப்படிச் சொன்னதும் சாரதாம்பாளும், மிசெஸ் மாதுரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வாங்க போகலாம். இது வெறும் பேச்சால் நடக்கும் காரியம் இல்லை.” அருவெறுப்புடன் பார்த்தாள் சாரதாம்பாள்.

“மைதிலி! உன்னுடன் இரு நூறு குடும்பங்களின் வாழ்க்கை முடிச்சு போட்டு இருக்கு” என்றாள் மிசெஸ் மாதுர்.

“பேசாதீங்க. வாங்க.” சாரதாம்பாள் மிசெஸ் மாதுரை இழுத்துக் கொண்டு போனாள்.

அவர்கள் போய் விட்டார்கள். சித்தார்த்தா அப்படியே தாயை கெட்டியாக பிடித்துக் கொண்டான், எங்கே அவளும் போய் விடுவாளோ என்பது போல். இளம்துளிராய் அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

“சித்தூ! சித்தூ!” மைதிலி அவள் முதுகில் தடவிக் கொடுத்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

Series Navigationதொடுவானம் 78. காதல் மயக்கம்ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *