நான்ஸி ஏ யூசூப்
இஸ்லாமிய அடிப்படைவாததால் வரையறுக்கப்படும் பிரதேசத்தில், இஸ்மாயில் முகம்மது தனது கொள்கையான “கடவுள் இல்லை” என்பதை உரத்து கூறுகிறார். அவர் தனியர் இல்லை என்பதையும் கண்டு வருகிறார்.
இஸ்மாயில் முகம்மது யூட்யூப் வழியாக மத்திய கிழக்கு மக்களை நாத்திகத்தின் பக்கம் திருப்ப முயற்சி செய்துவருகிறார்.
மூன்று வருடங்களுக்கு முன்னால், 30 வயதான முகம்மது இஸ்லாமை துறந்தார். அன்றிலிருந்து தனது புது கொள்கையை பற்றி உரத்து கூறவும் பரப்பவும் முயன்றுவருகிறார். அவர் தனது யூட்யூப் சேனலாக Black Ducks என்ற சேனலை துவக்கி, அதற்கு ஒரு கம்ப்யூட்டரும், A4 பக்கத்தில் தனது சேனலின் பெயரை எழுதிய பேப்பருமாக தனது கெய்ரோ வீட்டிலிருந்து செய்துவருகிறார். மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பல முஸ்லீம்கள் இவருடம் ஒரு மணிநேரம் செலவு செய்து தாங்களும் ஏன் இஸ்லாமை துறந்தோம் என்று விளக்குகிறார்கள். இஸ்லாமிய மதம் ஒவ்வொரு துவாரத்தின் வழியேயும் வழியும் இந்த பிரதேசத்தில் எவ்வாறு நாத்திகர்களாக வாழ்வது என்று பேசுகிறார்கள்.
இந்த சேனலில் வீடியோ தகுதி மட்டம். ஆனால், சவுதி அரேபியா போன்று நாத்திகத்தை பயங்கரவாதத்துக்கு சமமாக பார்க்கும் நாடுகள் உள்ள இந்த பிரதேசத்தில் இதன் விளைவுகள் புரட்சிகரமானவை. பலர் இஸ்லாமை விட்டு விலகுவதற்கு மரணதண்டனையே கொடுக்கவேண்டும் என்று நம்புகிறார்கள். இஸ்லாமை கேள்வி கேட்பதோ, இஸ்லாமிய மதத்தை திட்டுவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது.
“நான் இஸ்லாமை விட்டு விலகினேன் என்பதால் நான் கொல்லப்பட வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். இன்னும் நிறைய நாத்திகர்கள் உரத்த குரலில் பேசினால், இது போன்ற அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் குறையும் “ என்று முகம்மது பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் ஏராளமாக தோன்றியிருக்கும் நாத்திக வீடியோ சேனல்கள், பத்திரிக்கைகள், வலைப்பக்கங்களில் ஒன்றுதான் முகம்மதின் இந்த யூட்யூப் சேனல். இதுவே அரபு வசந்தத்தின் நவீன பக்க விளைவு. அரபு இளைஞர்கள் அங்கிருந்த அரசுகளை தூக்கி எறிய விரும்பினார்கள், இப்போது சிறிய, பருண்மையான, கருத்து சுதந்திரம் போன்ற சில லாபங்களை அரவணைக்கிறார்கள்.
இஸ்லாமிய காலிபேட் என்று தன்னை கூறிக்கொள்ளும் அரசின் எழுச்சியும் நாத்திகர்களுக்கு வசதியாக ஆகியிருக்கிறது. புராதன ஷரியா, ஹதீஸ், ஆகியவற்றை அச்சு பிசகாமல் பின்பற்றுவது எவ்வாறு அபாயங்களை தோற்றுவிக்கிறது என்பதற்கு உதாரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று இவர்கள் வாதிடுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாதம், குரூரத்துக்கு மாற்றாக, தாங்கள் முன்மொழியும் பன்மைத்தன்மையான சமூக அமைப்பை முன்வைக்கிறார்கள்.
தாராளவாத இஸ்லாமிய கருத்துக்களையும், வன்முறை தீவிரவாதத்தை எதிர்க்கும் கருத்துக்களையும் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் நாடியா ஓவேய்தத் அவர்கள், “இவர்களது இறுதி நோக்கு, மனிதர்கள் மத அதிகாரத்திலிருந்து விடுபட்டிருக்கும் நிலமே” என்கிறார்.
இணையத்தில் இருக்கும் முன்னாள் இஸ்லாமியர்களை சேனல்களை ஆராய்ந்தால், அவற்றில் 18 சேனல்கள் மதத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. பிரதர் ரசித் என்ற மொராக்க நாட்டவர் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்து மதம் மாறிய பின்னர் கடுமையாக இஸ்லாமிய அறிஞர்களை கேள்விக்குள்ளாக்குகிறார். மாடர்ன் ரீடிங் என்ற சேனலில் முஸ்தபா அல் உமரி என்ற ஈராக்கிய நாட்டவர் நவீன யுகத்தில் இஸ்லாமிய பழங்கால சட்டங்களின் பொருந்தாமை பற்றி பேசுகிறார். பாக்ஸ் ஆஃப் இஸ்லாம் என்ற சேனலில் ஹாமெத் அப்தெல் ஸாமெத் என்ற எகிப்து நாட்டவர், தான் பார்க்கும் இஸ்லாமில் உள்ள குரூரங்களை வெளிக்காட்டுகிறார்.
ஆனால், முகம்மது மட்டுமே அந்த மத்திய கிழக்கில் வசிக்கிறார். மற்றவர்கள் அனைவரும் அந்த மத்திய கிழக்கிலிருந்து தப்பிவிட்டனர்.
மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றிய கேள்விகளுடனேயே, நாத்திகம் நோக்கிய முகம்மதின் சாலை துவங்குகிறது. அவர் பரிணாமவியல் தேற்றத்தை அறிந்ததும் அது நிலைபெறுகிறது.
”அறிவியலை நம்புகிறேனா அல்லது மதத்தை நம்புகிறேனா?” என்று முகம்மது கேட்டார். “அறிவியலின் படி மனிதர்களின் கதை ஆதாம் ஏவாளின் கதை அல்ல. இது என்னை தேட தூண்டியது. நான் பல விஷயங்களை அறிந்து ஆச்சரியப்பட்டேன். நான் மத்திய கிழக்கில் உள்ள மதங்களை படிக்க ஆரம்பித்தேன். நான் ஆபிரஹாமிய மதங்களின் வரலாற்றை படித்தேன்”
ஆங்கிலத்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் கற்ற முகம்மது, கிரிஸ்டோபர் ஹிட்சன்ஸ், சாம் ஹாரிஸ், ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோராலும், அரபியிலும் ஆங்கிலத்திலும் எழுதும் எகிப்திய சிந்தனையாளர்களாலும் பாதிக்கப்பட்டுள்ளார். எப்படி நாத்திகனேன் என்று அவர் பேசுவதை கேட்கும்போது, அமெரிக்க பேச்சாளர் பில் மஹர் பேசுவதை கேட்பது போல உள்ளது.
“பயங்கரவாதத்தை கருத்துக்கள் மூலம் எதிர்கொள்வது மிக மிக முக்கியம்” என்று முகம்மது சொல்லுகிறார்.
அவர் படிக்க படிக்க, பதில்களுக்கு மேலாக, மேலும் பல கேள்விகளுக்கே சென்றதை கூறுகிறார்.
ஹிட்சன்ஸ், “எனக்கு என்னுடைய பயங்களை பற்றி பேச சக்தி கொடுத்தார்” என்று கூறுகிறார். பெற்றோரிடம் தன்னை பற்றி கூறும்போது, அவர் தன் தாயிடம், தங்கள் தெருவில் இருக்கும் கிறிஸ்துவ ஆணும், முஸ்லீம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும் திருமணம் செய்யமுடியாது என்பது சரியா என்று கேட்டார். தனது தந்தையிடம் பரிணாமவியல் பற்றிய புத்தகங்களையும் ஆவணப்படங்களையும் கொடுத்து பார்க்கச் சொன்னார். இருவருமே அவருக்கு “இதுதான் நம் மதம் நமக்கு சொன்னது” என்றே பதில் கூறினார்கள்.
மெதுவாக அவர்கள் விவாதத்துக்கு வந்தார்கள். தனது தந்தை இன்னும் முஸ்லீம்தான் என்று முகம்மது கூறுகிறார். “ஆனால், அவரை மதசார்பற்ற வழியில் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறேன். இப்போது அவரால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் ஒப்புகொள்ள முடிகிறது. மதத்திலிருந்து வெளியேறியது அவருக்கு கடினமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் அவர் இஸ்லாமை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்”
இருப்பினும், தனது கருத்துக்களால் தனியாக உணர்ந்தார். தன்னைப்போல எண்ணும் மற்றவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அறிய ஆசைப்பட்டார். அவர்கள் ஒருவேளை தன்னைப்போல நாத்திகர்களாக இருந்தாலும் அதனை ஒப்புகொள்வார்களா? தன்னுடைய நண்பர்களிடம் கேட்டபோது அவரை மாதிரி உணர்ந்தவர்களை கண்டுகொண்டார். ஆனால் என்னவாக இருந்தாலும் மேலே படர்ந்திருந்த அச்சத்தை விட முடியவில்லை. அதுவே ஒரு தைரியத்தில் கேமராவை வைத்து இந்த வீடியோ நிகழ்ச்சியை உருவாக்க உந்தியது.
நாத்திக ஆதரவாளர்களால், எகிப்தில் இருக்கும் 90 மில்லியன் மக்களில் 3 மில்லியன் மக்கள் நாத்திகர்கள் என்று கணக்கிடப்படுகிறார்கள். கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ அன்றி வேறொரு அடையாளத்தை பகிரங்கமாக எடுத்துகொள்ள மக்கள் அஞ்சும் எகிப்து நாட்டில் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையோ அல்லது அந்த எண்ணிக்கையை சரிபார்க்கவோ முடியாது. அரபு வசந்தத்துக்கு பின்னர், எகிப்து போன்ற நாடுகளில், ஏராளமான பெண்கள் தங்களது பர்தாவை துறந்து வருகிறார்கள் என்பது கேள்விப்படும் விஷயம்.
முதலில் முகம்மது தனது நிகழ்ச்சியில் பங்கு பெற ஆட்களை தேடவேண்டியிருந்தது. யார் பகிரங்கமாக இஸ்லாமை விமர்சிப்பார்கள்? நாத்திக வாதம் எகிப்தில் சட்டத்துக்கு புறம்பானது இல்லை என்றாலும், இஸ்லாமை விமர்சிப்பவர்களை அரசாங்கம் கடுமையாக தண்டிக்கிறது.
”இது மிகவும் ஆபத்தானது என்று அறிவேன். நான் அரசாங்கத்துக்கு பயப்படவில்லை. மிகப்பெரிய அபாயம் சமூகத்திடமிருந்தே வருகிறது. சில வேளைகளில் தெருக்களில் பிரச்னைகளை எதிர்கொள்கிறேன். வீடியோ நிகழ்ச்சி மூலம் என்னை அடையாளம் கண்டுகொள்ளும் சிலர் தெருக்களில் என்னை அடிக்கிறார்கள்.” என்று கூறுகிறார்.
முஸ்லீம் நாடுகளில் ஷரியா சட்டத்தின் ஆதர்வு எப்படி இருக்கிறது என்று 2013 ப்யூ Pew நிறுவனம் ஆராய்ச்சி செய்தபோது, 86 சதவீத எகிப்தியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். இதுவே அரபு நாடுகளில் இந்த விஷயத்துக்கு அதிகபட்ச ஆதரவு அளித்த நாடு. ஜோர்டான் நாட்டில் இதற்கு 82 சதவீத ஆதரவும், ஈராக்கில் 42 சதவீத ஆதரவும் இருக்கிறது.
இந்த எண்ணிக்கைகள் இருந்தாலும், இந்த வீடியோ நிகழ்ச்சி இதுவரை வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். Black ducks நிகழ்ச்சி சூடு பிடித்ததும், இந்த மத்திய கிழக்கு பிரதேசம் முழுவதிலிருந்தும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எப்போதுமே நாத்திகர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை. இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் ஷியா சிறுபான்மை பிரிவைப்பற்றி அறிந்துகொள்ளவும் துனிசியாவிலிருந்து ஷியா பிரிவினர் ஒருவர் இதில் தோன்றி பேசியிருக்கிறார்.
காரணம் முகம்மது இஸ்லாமை தனது நிகழ்ச்சியில் விமர்சிப்பதில்லை. மாறாக மதம் பற்றிய கருத்துக்களை ஒரு விவாதப்பொருளாக மாற்ற முனைந்திருக்கிறார்.
மத்திய கிழக்கு முழுவதும் அரசாங்கங்கள் இந்த நிகழ்ச்சிகளை கவனிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தங்கள் நிகழ்ச்சிகள் மூலம் பதிலளிக்க முயற்சிக்கின்றன. ஒரு எகிப்திய செய்திப்பத்திரிக்கை , நாத்திகர்களை “வர இருக்கும் பூகம்பம்” என்று கூறுகிறது. ஒரு அரசாங்க பத்திரிக்கை, இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அதிகரிப்பதை பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக, பேஷனாக ஆகி வருகிறது என்று இந்த செய்திப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது.
இதுவரை 160 வீடியோக்களை வெளியிட்டுள்ள, முகம்மதின் நிகழ்ச்சியில் சவுதி அரேபியாவிலிருந்து பெண்கள் கம்ப்யூட்டர் வீடியோவில் தங்களது முகத்திரை இன்றி தோன்றுகிறார்கள். இது மத மன்னராட்சியில் ஏறத்தாழ கற்பனை கூட செய்யமுடியாதது. முன்னாள் இமாம்கள், இந்த நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு முன்னாலேயே, தங்களது தாடிகளை சிரைத்துவிட்டிருக்கிறார்கள். மதத்தின் அடையாளமாக மத்திய கிழக்கில் கருதப்படுவது ஆண்களின் தாடி. இந்த நிகழ்ச்சியில் தோன்றிய இன்னொரு பாலஸ்தீன நபரோ, இஸ்லாம் தோன்றிய அதே இடத்திலேயே வாழ்பவர்.
“ஆயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும், இஸ்லாமின் ஒழுக்க விதிகளையும், இந்த நாளில் இஸ்லாமின் பொருத்தப்பாட்டை பற்றியும் கேள்விக்குட்படுத்துவது என்பதை குறைவாக மதிப்பிட முடியாது. சில வருடங்களுக்கு முன்பு வரை, ஏதேனும் ஒரு இஸ்லாமிய அறிஞரை கேள்விக்குள்ளாக்கினாலும் அதன் விளைவுகள் கடுமையாக இருந்தன. சில நேரங்களில் உயிரையே பலிகொடுக்க வேண்டியிருந்தது” என்று ஓவேய்தத் கூறினார்.
மெதுவாக, முகம்மது போன்றவர்கள் உருவாக்கும் விவாதங்கள், உரையாடல்கள் மைய நீரோட்டத்துக்கும் வருகின்றன. சென்ற வாரம் அல் ஹயாத் என்ற அரபு பத்திரிக்கை, ஒரு எகிப்திய இளைஞன் மசூதியில் எழுந்து நின்று இமாம் சொன்னதை மறுத்ததையும் “இதனை எங்கிருந்து பெறுகிறீர்கள். இது குரானில் இல்லை. வெறுமே மக்கள் மனதில் பயத்தை விதைக்கிறீர்கள்” என்று சொன்னான் என்பதையும் செய்தியாக் கூறியிருந்தது.
முக்கியமாக, அந்த மனிதர் எழுந்து நின்று கேள்வி கேட்டதை பார்த்தவர்கள் அவரை பாராட்டியதையும் சேர்த்தே வெளியிட்டிருந்தது.
இந்த செயல் சில தொழுகையாளர்களால் வரவேற்கப்பட்டது என்று அந்த செய்தியை எழுதியவர் எழுதியிருக்கிறார்.
முகம்மது எப்போதுமே நாத்திகவாதியாகவே இருக்கப்போவதில்லை என்றும் கூறுகிறார்.
“நான் என் கருத்துக்களையும் சிந்தனையையும் மாற்றமுடியும். ஒரு உண்மையான மனிதன் தன் கருத்துக்களை மாற்றிகொள்ள வெட்கப்படக்கூடாது” என்று கூறினார்.
- ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்
- நகங்கள் ( 2013 ) – மலையாள திரைப்படம்
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா
- தொடுவானம் 78. காதல் மயக்கம்
- மிதிலாவிலாஸ்-27
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ்
- போராடத் தயங்குவதோ
- கேள்வி பதில்
- மறுப்பிரவேசம்
- ஐயம் தீர்த்த பெருமாள்
- துளி விஷம்
- 1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து
- ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் “மறுபடியும் ஒரு மகாபாரதம்”- ஆங்கில பதிப்பு வெளியீடு
- பொ. செந்திலரசு காட்டும் அழகியல் பரிமாணங்கள்
- தொடு -கை
- ஹாங்காங் தமிழோசை
- சிறுகுடல் கட்டிகள்
- உல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்
- காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )
- மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்