எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 18 in the series 3 ஜனவரி 2016

Baskaran Photo01எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண்

” ஓலைதேடி எழுத்தாணி தேடி ஆளோய்ந்திருக்கும் மூலதேடி
மூக்குக் கண்ணாடி முகத்திற் பொருத்தி வேளைவருமட்டும்
காத்திருப்பார் ” கவிதையெழுத முற்படுபவர் என்று சொல்லப்
படும் நிலையில் நம் கவிஞர் பாஸ்கரன் இல்லை என்றுதான் எண்ணுகின்றேன்.
பாஸ்கரன் அவர்களுக்குக் கவிதை இயல்பாக வருகின்றது.அவரால் மரபாயும் பாடமுடிகிறது. நவீனமாயும் பாடமுடிகிறது. சந்தம்வந்து சிந்தும்
விளையாடுகிறது.வசனம்கூட வண்ணக் கவிதையாகி நிற்கிறது.
கற்பனைகள் சிறகடித்தும் அவர்கவிதைகள் வருகின்றன.கருத்துக் குவியல்
களாகவும் அவர்கவிதைகள் கதைசொல்லி நிற்கின்றன.தத்துவமும் அதனூடே
தனைக்காட்டியும் நிற்கிறது.
அண்மையில் பாஸ்கரன் அவர்களது ” முடிவுறாத முகாரி ” என்னும் கவிதை
நூல் வெளியீடுசெய்யப்பட்டது. அத்தருணம் எனது கையிலும் அக்கவிதை நூல்
வந்து சேர்ந்தது.
பாஸ்கரன் அவர்களை நான் எனது வாழ்நாளில் கண்டதேயில்லை. அன்று
தான் முதன் முதலாகக் கண்டேன்.அவுஸ்த்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்
சங்கத்தின் பதினைந்தாவது எழுத்தாளர் மாநாட்டில் கலந்து பேசுவதற்காக
சிட்னியில் இருந்து துணைவியாருடன் மெல்பேண் வந்திருந்தார். அவரிடம்
நான் பேசியது கூட ஒருசில நிமிடங்கள் என்றே நினைக்கின்றேன்.
அவரின் நீண்ட நெடுந்தோற்றமும் , தீட்சண்யமான கண்களும் என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டுவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது.
தனது கவிதை நூலினை தனது கையொப்பத்தோடு எனக்கு அன்புடன்
தந்தார்.
அப்போது அவர்பற்றிய எந்த அவிப்பிராயமும் என்னுள் எழவில்லை. விழாவும்
நிறைவு பெற்றது. வீட்டில் வந்தபின்பு எப்படி இருக்கிறது ? என்னதான் எழுதி
இருக்கிறார் என அவரது கவிதை நூலைப் பார்க்க முற்பட்டேன்.
” படிப்பறியா மிகஏழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைக்கொட்டி
துளைமிகுந்த கந்தலுடை சுருக்கிக்கட்டி
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமைவாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென் றார்த்திங்கு
அடித்துரைத்து ஆவேசம் கொள்வானென்றால்
அப்பாட்டின் பெருமைசொல யாரோவல்லார் “ எனப் பாரதியின் கவிதா
சக்தி பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பாடிய பாடல் தான் என்னுள்
புகுந்து நின்றது.

Baskaran-Book-Cover
பாரதியின் ஆவேசம் , பாரதியின் அஞ்சாமை , பாரதியின் கற்பனை , பாரதி
யின் நாட்டுப்பற்று , அத்தனையும் .. பாஸ்கரனின் கவிதைகளில் கண்டேன்.
இது வெறும் புகழ்சியல்ல. நிச்சயமான உண்மையாகும் .இக்கவிதைகளை
உள்ளத்தால் வாசித்தால் மட்டுமே இந்த நிலையைக் கண்டுகொள்ள முடியும்
என்பது எனது எண்ணக் கிடைக்கையாகும்.
ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மகாகவி , முருகையன் , இருவரையும் பாஸ்கரனின் கவிதைகளில் காண்கின்றேன். அவர்களது கவிதை வடிவங்கள்
இந்தநூலில் களிநடம் புரிவதை ஊன்றிப்படித்தால் உணர்ந்து கொள்ளலாம்.
முதல் பகுதியில் பத்தொன்பது தலைப்புகளிலும் , இரண்டாம் பகுதியில்
இருபத்தொன்பது தலைப்புகளில் கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றிருக்
கின்றன. தனி மரத்தடியில் , எழுதாத காகிதமாய் , காதல் மலைமுகடு ,
காற்றில் மிதக்கிறோம் , மார்கழியும் காலைப் பொழுதும், மனம் ஏங்குது ,
நிலவொன்று அழுகிறது , நிலவைத் தேடும் வானம் , ஏக்கம் , நீளவயல் வெளியும் சோகக் குயிலொன்றும்ஆகிய
கவிதைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு ஏனயவற்றை எடுத்தோமானால்
அங்குதான் பாஸ்கரனின் ஆத்மா நிற்கிறது எனலாம்.
புலம்பெயர்ந்தவர்கள் பட்டகடனை அடைப்பார்கள். ஊரிலுள்ளவர்களுக்கு
படமெடுத்து அனுப்புவார்கள். எப்படியெல்லாமோ உழைத்து வீடு வாங்வார்கள்.
கார் வாங்குவார்கள் .கல்யாணம் செய்ய நல்ல சீதனத்தோடு முயற்சியும் செய்வார்கள். கிடைக்கும் விடுதலையில் ஊர்சென்று தம்பட்டமும் அடித்து
வருவார்கள். அத்தோடு நில்லாமல் புலம் பெயர்ந்த நாட்டினிலும் தமது பரம்பரைப் பழக்கங்களை அரங்கேற்றியும் நிற்பார்கள்.
இதுதான் பெரும்பாலனாவர்களது நிலையாகும்.ஆனால் பாஸ்கரனின்
சிந்தனைகள் இவற்றையெல்லாம் கடந்து செல்வதையே அவரது கவிதைகள்
காட்டி நிற்கின்றன எனலாம்.
பலநிலைகளில் நல்ல பாடங்களையும், மனவுழைச்சல்களையும் , தனது
வாழ்க்கைப் பாதையில் பாஸ்கரன் பெற்றிருக்கின்றார்.அதனால் அவரின்
இதயம் ரணமாகியிருக்கின்றது. அவற்றை எப்படியும் வெளிப்படுத்த வேண்டும்
என்று நினைத்த நினைப்பே இக்கவிதைகளாகி வந்திருக்கின்றன என்றுதான்
எண்ணமுடிகிறது.
” எல்லாவற்றிற்கும் பழகித்தான் விட்டோம் ” என்னும் முதலாவது கவிதை
பாஸ்கரனின் உள்ளத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறதல்லவா?
“அகதியாய்
வெளியேறிய அன்றிலிருந்து
மனித நேயம்
மாற்றுக்கருத்துக்கள்
எல்லாமே
குளிருறையும் பனிநாட்டில்
கூடவே உறைந்து போனது

போரின் புறங்காற்றைக்கூட
போர்த்திக் கொள்ளாத
கள்ளிச்செடிகூட
இங்கே
மேடையிட்டு
போர்முரசு கொட்டி
புகழ்சேர்க்கும் …
எனப் பலகருக்களைச் சுமந்துவரும் இக்கவிதை பாஸ்கரனின் கவிதா
சக்திக்குக் கட்டியம் கூறி நிற்கிறது.
இந்த முதல் கவிதையை வாசித்தால் பாஸ்கரனின் தெளிந்த சிந்தனை
என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஈழத்தில் நடைபெற்ற பேராட்டம் சரியானதா பிழையானதா என்பது
கேள்வியல்ல ! எத்தனைபேரின் வாழ்க்கையில் கேள்விக்குறியாகவே அந்த
நிகழ்வுகள் இருக்கின்றன என்பதையே பாஸ்கரனின் கவிதைகள் ஆணியறைந்
தாற்போல் காட்டுகின்றன.
இக்கவிதை நூலின் தலைப்பாக வந்துள்ள ” முடிவுறாத முகாரி ” என்னும்
கவிதையை எழுத்தெண்ணி வாசித்துப்பார்த்தால் வேதனைகள் விதைக்கப்
பட்டுள்ளவிதத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.
” தொப்பிள் கொடியறுத்த அன்னை
தொலைந்து போனோர் பட்டியலில்
துணைக்கிருந்த அப்பன்
நடு இரவில் இழுத்துச் செல்லப் பட்டான்
துடிக்கத் துடிக்க மனைத உடலொன்று
மாயமாய்ப்போனது
அவள் நடைப்பிணமானாள்
அயலவர்கூட ஆறுதல் சொல்ல
வரப்பயந்த இரவில்
துணைக்கிருந்தது முகாரி மட்டுமே
அம்மாவின் அணைப்பற்று
அப்பாவின் ஆதரவற்று
அகதிமுகாமில்
அடைக்கலம் தேடியபோது
அவள்கேட்டது முகாரி மட்டும்தான் “

“மானிடத்தின் வதை நிலமாய்
மாறிவிட்ட நம் தேசத்தில்
இன்னமும் எவ்வளவு காலம்தான்
இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி”
இதைவிட ஈழத்தின் சோகத்தை எப்படிக்காட்டமுடியும்? இதைவாசிக்கும்
ஒவ்வொருவருக்கும் நடுக்கம் எடுக்காதா? நடுஇரவில் எழும்பிநின்று புலம்பிடவும் மாட்டாரா ? இது கற்பனையல்ல ! எம் தேசத்தின் சோகக்
கதை. இதைச் சொல்ல எடுதுக்கொண்ட தலைப்பே இக்கவிதை நூலின்
வெற்றி எனலாம். இக்கவிதை நூலுக்கு இதில் வரும் வேறு கவிதைகளின்
பெயர்களையோ அல்லது பொதுவான பெயரையோ வைத்திருப்பின் இந்த
நூல் தனது பெறுமதியைப் பெற்றிருக்கமுடியாது. எனவே இந்தத் தலைப்பைத்
தேர்ந்தெடுத்த பாஸ்கரன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர் என்பதே எனது
அவிப்பிராயமாகும்.
மரக்கிளையில் சோகக் குயில்கூவும்
அவள் வரவில்லை எந்த சேதி வரும்போது
நான் காற்றில் கலந்த கற்பூரமாய் மிதப்பேன் “
படித்துப் படித்து பார்த்தால் பக்குவம் தெரியும். கடைசி வரிகள் பாஸ்கரன்
கவிதையில் கற்பனையில் மூழ்கியுள்ளார் என்பதையே காட்டி நிற்கிறது.
மனத்திலே ஓடும் சோகமும் ஒருவித தாகமும் இவரின் கவிதைகளின்
அடிநாதமாகவே வெளிப்பட்டு நிற்கின்றன.
” எதையோ தொலைத்த ஏக்கம் ” என்னும் கவிதை புலம்பெயர்ந்தவர்களின்
உள்ளத்தைக் காட்டும் கவிதை எனலாம்.மற்றவர்கள் மனதில் தோன்றுவதை
மறைக்க முற்பட்டாலும் உண்மையான நிலை இதுதான். இதனை நான்
உணர்கிறேன் என்று காட்டும் கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியதே !
கவிதைகளுக்கு என எடுத்துக்கொண்ட பொருளும் அதற்காகத்
தேர்ந்தெடுத்த தலைப்புக்களும் மிகவும் அற்புதம். தலைப்புகளைப்
பார்த்தவுடனேயே கவிதையை வாசிக்கவேண்டும் என்னும் ஆவல் எழுந்து
விடுகிறது.இது கவிஞரின் ஆற்றலின் வெளிப்பாடு என்றுதான் சொல்
வேண்டும்.
” தொடுவானம் கடலோடு விளையாடுது
கண் சிவப்பாகி அதனோடு உறவாடுது
புரியாத உணர்வொன்று உருவாவதால்
கடல் அலைமீது நுரை ஒன்று திரை போடுது
தழுவாத அலை ஒன்று கரையேறுது
காதல் கனிவோடு தரை மீது அது மோதுது
இதமான கடல் நீரில் தரை மூழ்குது
அது இனி மீண்டும் நிகழாதா என ஏங்குது
இயல்பான நிலை மிண்டும் உருவாகுது “ … மனம் ஏங்குது என்னும்
இக்கவிதையை வாசிப்பவர்கள் நிச்சயம் இதனை மகாகவிதான் பாடி
இருப்பார் என்றே சொல்லுவார்கள் ! அந்த அளவுக்கு எமது கவிஞர் பாஸ்கரன்
அவர்கள் தமது கவிதை வீச்சைக் காட்டி மகாகவியையே கொண்டுவந்து
நிறுத்தி வெற்றிபெற்று நிற்கின்றார்.
நிலவொன்று அழுகிறது என்பதைச் சொல்வதா, நெருப்புப் பொங்கலை
காட்டுவதா, பொசுங்கிய பூங்குயில்களைப் பார்ப்பதா, போரின் அடையாளம்
போகவில்லை என்பதைக் கேட்பதா , துப்பாக்கி துப்பாத இடத்தைப் பார்பதா,
இப்படிப் பலகோணங்களில் எம்மையெல்லாம் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் கவிஞர் பாஸ்கரன் கவிதையால் கட்டிப் போட்டு
விட்டிருக்கிறார் என்றுதான் எண்ணமுடிகிறது.
“நேற்று இன்று நாளை ” கவிதை அனுபவத்தின் அருமையான பாடத்திட்டம்
ஆகும்.
” சாவிலிருந்து தப்பியவர்களில் சவாரிவிட காத்திருக்கும்
சாதிப்பேயும் பிரதேச வேறுபாடும்
காதல் வரி பாடிக் களித்திருந்த காலம்
மீண்டும் துளிர்விட்டு பசுமை தருமென்று
காத்திருக்கும் பெரிசுகளும்
அம்மன் கோவில் தேராக அசைந்துவரும் காதலியின்
விழிபார்த்து காத்திருக்கும் இளசுகளும்
கேலிச் சிரிப்பும் கெக்களமும்
சேர்ந்து மகிழ்ந்திருக்க
நாம் நடந்த நகரம் – மீண்டும்
திரும்பும் எனக் காத்திருப்போம் “ என்று ‘காத்திருப்போம்’
என்னும் நிறைவுக்கவிதை கொண்டு நூலை நிறைவாக்குகின்றார் கவிஞர்
பாஸ்கரன் அவர்கள்.
பாஸ்கரன் அவர்களது இந்த நூலில் காணப்படும் கவிதைகள் ஒரே
நேரத்தில் எழுதப்பட்டன அல்ல. அவரால் காலத்துக்காலம் அவர் இருந்த
சூழலில் அவரின் மனதைப் பாதித்த அத்தனையும் கவிதைகளின் கருவாகி
வந்திருக்கின்றன.மனதில் பட்டதை எவருக்கும் அஞ்சாமல் சொல்லிய
வகையில் அவரது பாரதி உள்ளம் பட்டென வெளிப்பட்டு நிற்கிறது. தனது
மனட்சாட்சிக்கு மதிப்பளித்து இக்கவிதைகளைப் பிரசவித்திருக்கின்றார்
என்றே எண்ணத்தோன்றுகிறது.
நிலைமைகளைக் கேள்வியுற்று எழுதுவதும் , பார்த்து எழுதுவதும், ஒருவகை.ஆனால் அந்த நிகழ்வுகளுக்குள் சிக்குண்டு , அதனால் தாக்குண்டு
எழுதுவது இன்னொருவகை. பாஸ்கரன் அவர்களின் கவிதைகள் யாவும்
இரண்டாவது வகையில் வெளிவந்திருக்கின்றன என்பதை வாசிப்பவர்கள்
உணர்ந்து கொள்வார்கள்.
மனதில் பட்டதை, தைரியமாகக் கவிதை என்னும் ஊடகம் மூலம் தந்த
அவரது செயல்பாட்டை பாராட்டாமல் இருப்பது பொருத்தமல்ல.இங்கே
சொல்லப்பட்ட விஷயங்களால் நாங்களும் தாக்கப் பட்டிருப்போம்.மனம்கூட
நொருங்கிப் போயிருப்போம். அவற்றை எடுத்துச் சொல்ல எங்களால்
முடியாமலும் போயிருக்கும்.அதற்கான மனவுறுதியும் , துணிவும்கூட எங்களுக்கு வராமல் போயிருக்கலாம்.ஆனால் பாஸ்கரன் அவர்கள் எதைப்
பற்றியும் பாராமல் தன் மனதிற்பட்டதைப் பட்டவர்த்தனமாக யாவரும் படித்து
அறிந்து கொள்ளச் செய்திருக்கிறார். அதற்கு அவர் கையில் எடுத்தது
கவிதை என்னும் சக்தியையாகும். அவரது ” முடுவுறாத முகாரி ” என்னும்
கவிதை நூல் அவரின் சக்தியை சரியான முறையில் எடுத்துச் சென்றிருக்கின்
றது என்பதை அவரது கவிதைகளை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்
என்பது எனது அவிப்பிராயமாகும்.எனவே அவரது கவிதை நூலைவாங்குங்கள்!
வாசியுங்கள்!நான் சொல்லுவது சரிதானா என்பதை நீங்களும் தெரிந்துகொள்
வீர்கள் !

Series Navigationபொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *