யானை ஒரு பாலூட்டி. மூங்கில், கரும்பு போன்ற தாவரங்கள் மற்றும் இலைகள் உண்ணி. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பெரியது. சராசரியாக 70 ஆண்டுகள் வாழக்கூடியது. நிலத்தில் வாழும் உயிரினங்களில் மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் உயிர்வாழும் விலங்கு.
யானை மிகவும் வலிமையான விலங்கு. சிங்கம் புலிகள் கூட நெருங்க முடியாதவை. சிங்கங்கள் கூட்டமாக வந்து, தனியாக இருக்கும் களைத்து இளைத்துப் போன யானையையோ அல்லது நோய்வாய்பட்ட யானையையோ தான் தாக்கிக் கொல்ல முடியும்.
யானைகள் குடும்பமாகத் தான் வாழும். ஆண் யானை தான் பருவம் எய்கின்ற வரை குடும்பத்துடனேயே இருக்கும். பருவம் அடைந்த பிறகு, தனித்துப் போவதும் உண்டு. ஆனால் பெண் யானைகள் ஒன்றாக, குழுவாகத்தான் இருக்கும். ஒன்றுக்கொன்று இழைந்துகொண்டு பிணைப்புடன், தாய், சகோதரி, பெண் என்கிற உறவுடன் குடும்பமாக இருக்கும். பருவ நிலை அடைந்த சமயத்தில் பெண் யானையும் தனியாகப் போவதுண்டு.
ஆசியாவில் உள்ள யானைகளில் ஆண் யானைகளுக்குத் தந்தம் உண்டு. பெண் யானைகளுக்குத் தந்தம் இல்லை. இவற்றின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகள் காணப்படும்.
யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பில் ஈடுபடுகின்றன. யானைகளின் ஜீரண சக்தியும் குறைவு, மந்தமானது. அதனால் அது உண்ணும் இலைகள் போன்ற உணவுகளில் 40 சதவிகிதமே ஜீரணம் ஆகின்றது. ஆகவே இவை நிறைய உணவு உட்கொள்ள வேண்டியிருக்கிறது. நன்கு வளர்ந்த யானைகள் ஒரு நாளைக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.
ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிமனானது. சுமார் 2.5 செண்டிமீட்டர் முதல் 3 செண்டிமீட்டர் அளவுக்குத் தடிமனாக இருக்கும். தடிமனாக இருந்தாலும் மெத்தென்று (மென்மையாக) இருக்கும். ஆகவே தான் கொசு, எறும்பு போன்ற மிகச் சிறிய ஜந்துக்கள் கூட அதைக் கடித்துத் துன்புறுத்தும். யானையின் வாயைச் சுற்றியும் காதுகளின் உட்பகுதியிலும் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விடக் கூடுதலாக முடியைக் கொண்டது.
யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுவதும் பூசிக்கொள்ளும். இது அதன் இயற்கையான குணம். இதனால் அது தன் தோலை சூரிய வெப்பத்திலிருந்தும் கதிர் வீச்சிலிருந்தும் காத்துக்கொள்கிறது. இதன் தோல் தடிமனாக இருப்பதால், யானையின் உணர்திறன் அதிகம். இதனாலேயே அவை சேற்றையோ மண்ணையோ வாரியெடுத்துத் தம் மேல் தூற்றிக்கொள்கின்றன.
யானையின் கால்கள் வலுவானவை. கால்கள் பெருத்த உடலைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், செங்குத்தான மலைப்பாதைகளிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் முடியும். இந்த குணத்தைக் குறியீடாகக் கொண்டுதான் “ஆனைக்கும் அடி சறுக்கும்” என்கிற பழமொழி வழக்கத்தில் வந்தது. மேலும் இந்தக் கால்கள் செங்குத்தாக அகன்ற பாதங்களுடன் இருப்பதால் யானையால் நீண்ட நேரம் இளைப்பாராமல் நிற்க முடியும். ஆப்பிரிக்க யானைகளுடன் ஒப்பிடும்போது, ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. முன்னங்கால்களில் ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். யானைக்கு நன்றாக நீந்தவும் முடியும். யானைகளின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வு கொண்ட ஒலியலைகளைக் கூட உணரக்கூடியவை.
யானையின் சிறப்பே அதன் தும்பிக்கை தான். வேறு எந்த விலங்குக்கும் இப்படி ஒரு அமைப்பு கிடையாது. இந்தத் தும்பிக்கை மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக் கூடியது. தும்பிக்கையின் நுனியில் ஒரு சிறிய இதழும் (ஆப்பிரிக்க யானைகளுக்கு இரண்டு இதழ்கள்) மூச்சுவிடும் துளைகளும் இருக்கின்றன. இந்த உறுப்பைப் பயன்படுத்தி சின்ன விரகுக் குச்சி முதல் பெரிய மரங்கள் வரைத் தூக்க இயலும். தும்பிக்கை பொதுவாக உணவை எடுப்பதற்கும், நீரைப் பருகுவதற்கும் உதவுகிறது. பகை விலங்குகளின் தாக்குதலையும் சந்தித்து, எதிர்த்து முறியடிக்க இந்தத் தும்பிக்கை உதவுகிறது. கழுத்து குட்டையாக இருப்பதால், தும்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
யானையின் அகன்ற மடல் போன்ற பெரிய காதுகள், அதன் உடலின் வெப்ப நிலையைப் பராமரிக்கும் விதத்தில் பங்காற்றுகின்றன. யானையின் காதுகளில் இரத்த நாளங்கள் நிறைய இருப்பதால், சுற்றுப்புறக் காற்று அவற்றின் வழியாக உடலுக்குள் சென்று வெப்பத்தைக் குறைக்கிறது. யானைகள் காதுகளை அசைத்துக்கொண்டே இருப்பதும் தங்கள் உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கத்தான். ஆசிய யானையின் காது மடல்கள் (ஆப்பிரிக்க யானைகளைவிட) சிறியனவாக இருக்கும்.
யானைகளின் கேட்கும் திறனும் மோப்பத் திறனும் சிறப்பானவை. யானையின் கண்கள் கிட்டப் பார்வை கொண்டவை. ஆதலால் யானை தன் கண்பார்வையை விட கேட்கும் திறனையும் மோப்பத்திறனையும் அதிகம் நம்பி வாழ்கிறது. தும்பிக்கையும் உணரும் திறன் மிக்கது. காதுகளும் தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லவை.
தரையில் வாழும் உயிரினங்களில் மனிதருக்கு அடுத்த படியாக அறிவுத்திறன் கொண்டவை யானைகள். தரையில் வழும் விலங்குகளில் இதன் மூளையே பெரியது. ஐந்து கிலோகிராமுக்கும் சற்று அதிகமான எடை கொண்டது யானையின் மூளை. அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தது. யானை அடிப்படையில் இரக்க உணர்வு மிக்கது.
யானைகள் தன்னுணர்வு கொண்டவை. தங்களைத் தாங்களே (நிலைக் கண்ணாடி முன் நிற்க வைத்தால்) அடையாளம் கண்டுகொள்பவை. ஒருவர் சுட்டிக் காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றலும் படைத்தவை.
யானையின் சினைக்காலம் 22 மாதங்கள். பெரும்பாலும் ஒரேயொரு கன்றைத்தான் ஈனும். இரட்டைகள் பிறப்பது மிகவும் அபூர்வம். பிறக்கும் கன்று (குட்டி) 90 முதல் 115 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும். யானை சினையாக இருக்கும்போதும், கன்றை ஈனும் முன்னரும், ஈனும் போதும், ஈன்ற பின்னரும் மற்ற வளர்ந்த யானைகள் அதனைச் சுற்றி இருந்துகொண்டு அதற்கு உதவுகின்றன. யானைக் கன்று பிறந்ததிலிருந்து அதன் கூட்டத்தாலேயே வளர்க்கப் படுகிறது.
யானைகள் வாழ்வதற்குப் பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. இயற்கைச் சூழலுடன் கூடிய மரம் செடி கொடிகள் கொண்ட பகுதிகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள மரம் செடி கொடிகளை அழித்து உண்டு, அங்கிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்கின்றன. இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாகச் சென்று மீண்டும் அவை ஆரம்பப் பகுதிக்கு வரும்போது அழிக்கப்பட்ட மரம் செடி கொடிகள் வளர்ந்து விடுகின்றன. இம்மாதிரியாக அவை அடிக்கடி போகும் பாதை தான் “யானைப் பாதை” என்று வழங்கப்படுகிறது.
- ஐயனார் கோயில் குதிரை வீரன்-தாரமங்கலம் வளவன் சிறுகதைகள்
- காப்பியக் காட்சிகள் 7.துறவு வாழ்க்கை
- எஸ். ராஜகுமாரன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ வண்ணத்துப் பூச்சிக்கு எந்த நிறம் பிடிக்கும் ‘ தொகுப்பை முன் வைத்து …
- தொடுவானம் 122. சிங்கப்பூர் முதல் சிதம்பரம் வரை……..
- திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி
- ஜெயலலிதா கரம், ஸ்டாலின் நிறம், நடுத்தரத்தான் பயம்.
- சூரியனை ஒளிமறைவாய்ச் சுற்றிவரும் ஒன்பதாம் பூதக்கோள் வேறு பரிதி மண்டலத்தில் திருடப் பட்டது !
- அணுசக்தியே இனி ஆதார சக்தி – நூல் வெளியீடு
- குறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி
- இதய வடிவில் ஒரு பிரபஞ்சம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8
- சக்ர வியூகம்
- குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்
- ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு
- யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1