(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்

author
0 minutes, 5 seconds Read
This entry is part 16 of 17 in the series 13 நவம்பர் 2016

கோ. மன்றவாணன்

எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கென ஓர் எழுத்து வல்லமை இருக்கும். அந்த வகையில் வளவ. துரையன் கதைப்பாத்திரங்களின் பின்னால் மனமும் நிழலாகத் தொடரும் விந்தையைக் காணலாம்.
நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே விவரிப்பதில் எந்தச் சிரமும் இல்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத- காதுக்குக் கேட்காத மனதை, ஒருவர் ஒளிப்பதிவு செய்யவோ, ஒலிப்பதிவு செய்யவோ முடியுமா? உருவத்தைப் படம் பிடிக்கலாம். உள்ளத்தைப் படம்பிடிக்க முடியுமா? முடியும் என்றுதான் மெய்ப்பித்துக் காட்டுகிறது வளவ. துரையனின் ஒவ்வொரு கதையும்.
அவரின் கதைகளில் மனிதர்கள் நடமாட்டம் இருந்தாலும் மனதின் நடமாட்டமே மேலோங்கி நிற்கிறது. அவர் அண்மையில் வெளியிட்ட “சாமி இல்லாத கோயில்” என்ற சிறுகதைத் தொகுப்பில் மனதின் எட்டுத் திசைகளையும் காணலாம் நம் அறைக்குள் இருந்தபடியே!
சித்திரங்களும் விசித்திரங்களும் நிறைந்ததுதான் மனம். மனதின் ஆழத்தைக் காண முயன்றால் அதற்கு முடிவில்லை. உலக உருண்டையின் மேல் நிற்கும் பூனையைப் போன்றது மனம். அது எந்தப் பக்கம் குதிக்கும்: எப்போது குதிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் மனதின் குரல்களை வளவ. துரையன் கதைகளில் கேட்க முடியும். மனதின் நாடகத்தை வளவ. துரையன் கதைகளில் பார்க்க முடியும். மனதின் இருள்பகுதியிலும் டார்ச் லைட் அடிக்கின்றன வளவ. துரையனின் கதைகள்.
அதற்கு எடுத்துக்காட்டாக “சாமி இல்லாத கோயில்” தொகுப்பில் இருந்து முதல்கதையைச் சுட்டிக்காட்ட முற்படுகிறேன்.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல்-
ஒரு கூடை ஆரஞ்சு பழங்களுக்கு ஒரு சுளை சுவை என்பதுபோல்-
வாங்கப்போகும் புதிய காருக்கு டெஸ்ட் டிரைவ் அலாதி சுகம் என்பதுபோல்-
அவரின் வார்த்தைச் சாட்டை என்ற சிறுகதை உள்ளது.

மனசின் உள்நுழைந்து பதுக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை எப்படி இவரால் இவ்வளவு மெய்நிகழ்வாக சொல்ல முடிகிறது என்ற வியப்பில் இருந்து மீளவே முடியாது.
தன் நெருங்கிய நண்பன் சந்தானத்துக்குக் கடன்கொடுத்து உதவுவது வழக்கம். உரிய நேரத்தில் அதைத் திருப்பித் தராததால் கோபப்பட்டு சோமுவும் அவரின் மனைவியும் வார்த்தைச் சாட்டைகளால் சந்தானத்தை அடிக்கும் கதை இது.
உரிய நேரத்தில் பணத்தைத் திருப்பித் தராதது சந்தானத்தின் வழக்கம்தான். ஆனால் இந்த முறை மட்டும் ஏன் சோமுவின் மனம் எல்லைதாண்டிக் குதிக்கிறது? அதற்குக் காரணம் சோமுவுக்கே அப்போது பணத்தேவை ஏற்பட்டு விடுகிறது. சாதாரணமாகக் கொடுத்த கடனைத் திருப்பித் தராத நண்பர்களைப் பற்றிப் புலம்பினாலும் கடுமையாக நடந்துகொள்வதில்லை மனம். ஆனால் தனக்கே பணத்தேவை ஏற்பட்டுவிடும்போது, பணத்தைச் சொன்ன நேரத்தில் திருப்பித் தராத நண்பனைப் பகைவனாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. அப்போது பார்த்து, சோமுவின் கோபத்தில் பெட்ரோலை வாரி ஊற்றுகிறார் அவரின் மனைவி. இந்த நிலையில் கண்முன் இல்லாத சந்தானத்தை வார்த்தைச் சாட்டைகளால் விளாசித் தள்ளுகிறார்கள் கணவனும் மனைவியும். கிட்டத்தட்ட நமக்கு ஆகாதவர்களை உருவமாகச் செய்து கொடும்பாவி கொளுத்துவதுபோல்தான் அது. ஒரு வகையில் சீறிச் சினக்கும் மனத்தை ஆறி அவலாக்கும் உளவியல் சிகிச்சைதான் அது. சந்தானத்தைத் திட்டித் தீர்க்கும்போது ஒருவேளை மனது அடங்கி ஓயலாம். ஆனால் இந்தக் கதையில் அதையும் தாண்டி… அதையும் தாண்டி மனம் சினமென்னும் சிகரமேறித் தீப்பிழம்பை உமிழ்கிறது.
சோமு புயலாகப் புறப்பட்டுச் சந்தானத்தின் வீட்டுக்கே போகிறார். அங்கே அவர் இல்லை. அவருடைய மனைவிதான் சோமுவை அன்புடன் வரவேற்கிறார். சந்தானத்தின் குழந்தை “அய் மாமா” என்று ஆசையோடு வந்து காலைக் கட்டிக்கொள்கிறது. அங்கேயும் வார்த்தைகளில் சூடேற்றிப் பேசுகிறார் சோமு. கடைசியில் சந்தானத்தின் மனைவி, “ நேத்துதான் கேட்ட எடத்துல பணம் சாஞ்சுது. இந்தத் தடவையாவது சொன்னபடி குடுத்துடனும் உங்க வீட்டுக்குப் போயிருக்காரு” என்று சொல்கிறார். இது கதையின் போக்கு.
இந்தக் கதையின் ஒவ்வொரு அசைவிலும் மனம், தன்தோற்றத்தைத் திரைவிலக்கிக் காட்டுகிறது.
“இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு அவனைக் கேட்டுப் பாத்துடணும்” என்று தீர்மானித்தான் சோமு” என்று கதை தொடங்குகிறது. அந்த முதல் வரிக்குள்ளேயே மனசு, சிலம்பேந்திய கண்ணகியாகத் தகிப்பதை அறிய முடிகிறது.
பணத்தைத் திருப்பித் தராத சோமுவை நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று எழுதுகிறார். ஒருவர் மீது ஆத்திரப்பட்டு, அவருடைய செயல்கள் பலவற்றை நினைக்க நினைக்க அந்தச் செயல்கள் அனைத்தும் தவறாகவே தோன்றும். ஒரு காலத்தில் நல்ல செயல் என்று நினைத்ததுகூட, அருவருப்பாகத் தோன்றும். அதுதான் ஒரு மனத்தின் இரட்டைவேடம்.
சோமு எப்படிப்பட்டவர் என்பதைக் கதையாசிரியர் விவரிக்கிறார். “கையிலிருந்த செய்தித்தாளை அழகாக மடித்து மேசையின் மீது வைத்தான். அங்கிருந்த புத்தகங்களைச் சரியாக அடுக்கினான். என்று விவரிக்கும்போது எதையும் சரியாகச் செய்ய வேண்டும்: எதுவும் சரியாக நடக்க வேண்டும் என்ற கண்டிப்பானவர் என்பதை அறிய முடிகிறது. இப்படி எதிலும் முழுமை தேடுபவர்களால், மனதின் உணர்வுகளை மறைக்க முடியாது. மேலும் கோபத்தில் வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி அடிப்பதைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். அரிதாகச் சிலரின் கோபத்தின் போது, வீட்டில் சிதறிக் கிடக்கும் கலைந்து கிடக்கும் பொருட்களை உரிய இடத்தில் வைக்க மாட்டீர்களா? எனக் கோபக்கேள்வி எழுப்பிய படியே முறையாக அடுக்கி வைக்கிற மனதின் விசித்திரமும் உண்டு. அதைத்தான் இந்தக் கதையில் பார்க்கிறோம்.
அடுத்ததாக, மகன் குபேரனின் பாடப்புத்தகம் தரையில் கிடப்பதைப் பார்த்த சோமு, “படிச்ச ஒடனே புத்தகத்தைப் பையில வைடான்னு ஒன்புள்ள கிட்ட எத்தன தடவை சொல்றது? எட்டாம் வகுப்புப் படிக்கிறான்: எருமை மாடு கணக்கா வயசாச்சு” என்று எழுதுகிறார்.
சரியாகச் செய்யாவிட்டால் ஆசை மகனாக இருந்தாலும் அங்கு இல்லாத மகனை எருமைமாடு கணக்கா வயசாச்சு என்று சாடுகிறது அப்பா மனது. எட்டாவது படித்தாலும் குழந்தைதான். அதுவரை ஆசையாகக் கொஞ்சிய குழந்தையை எப்படி எருமை மாடு என்று திட்ட முடிகிறது? அங்குதான் மனம் தன் கோரப்பல்லை மெல்ல நீட்டுகிறது. ஆம் பணத்தைத் திருப்பித் தராத சந்தானத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் போது…. புத்தகம் தரையில் கிடப்பதைக் கண் பார்த்தாலும் மனசே மகனைத் திட்டுகிறது. சந்தானத்தின் மீதான எரிச்சல்தான் பிள்ளையின் மீது வழிகிறது.
“புள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்” என்று அவரின் மனைவி சந்திரா சமாதானம் சொல்லுகிறாள். அப்போது தாய்மனம், பிள்ளையின் மீது அன்புப்பாலைப் பொழிகிறது. ஆம். தந்தையின் மனம், மகனை ரணமாக்கும் போது, தாயின் மனம் மருத்துவம் பார்க்கிறது.
“சந்தானத்தைப் பாக்கத்தான் போறேன். வாங்கின ரெண்டாயிரத்தை இந்த வாரம் தரேன்னு சொன்னான்ல்ல. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை வந்துடுச்சில்ல” என்று சோமு சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவரின் மனைவி இடைமறித்துப் பேசுகிறாள்.
“ஆமாங்க அவரு பேச்சைத் தண்ணியில எழுதணும். ஞாயித்துக் கெழமைங்கதான் வந்து போகும். பணம் வராது” என்கிறாள்.
“எப்படியாவது இன்று பணத்தை வாங்கிவிட்டு வந்துவிடுவேன்” என்று கணவன் சொன்னால், எந்த மனைவியும் நம்ப மாட்டாள். எந்த மனைவிக்கும் தன் கணவன் கையாலாகாதவன் என்றும்- லாயக்கு இல்லாதவன் என்றும்- சாமார்த்தியம் இல்லாதவன் என்றும் கருதுகிறவராகத்தான் இருப்பார். அடுத்த வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், அலுவலகத்தின் வேலை செய்கிற வேறு நண்பர்கள்தாம் அவளுக்குச் சாமார்த்தியமானவர்களாகத் தெரிவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதான் எந்த மனமும் எண்ணுகிறது என்பதற்கு இது சான்று.
மனைவி, “உங்களால் முடியாது” என்று சொல்லிவிட்டால், அதை முடித்துக்காட்டுவேன் என்றுதான் எந்தக் கணவனின் மனமும் போட்டிக்குக் கிளம்பும். இது ஒரு வகையில், கையில் வாளைக் கொடுத்துப் போருக்கும் அனுப்பும் மனதின் உசுப்பேற்றும் தந்திர வேலை.
அதன்பிறகு கணவனும் மனைவியும், அங்கு இல்லாத சந்தானத்தின் யோக்கியதாம்சங்களை வார்த்தைக் கத்திகளால் தோலுரித்து வெய்யிலில் காயப் போடுகிறார்கள். அந்த வார்த்தை ஒவ்வொன்றையும் அகழ்ந்து பார்த்தால் புதைந்திருக்கும் மனத்தின் கூரிய நகங்கள் தெரியும்.
வேக ஆவேசமாகப் பேசிய சோமுவுக்குத் திடீரென சந்தேகம் ஒன்று எழுந்துவிடுகிறது. மனசுதான் அவ்வப்போது நற்பயிர்களின் ஊடே சந்தேகப் பயிர்களையும் சேர்த்து வளர்த்து விடுகிறது. “இவன் கொடுக்காட்டா வேற வழியைத்தான் பாக்கணும். சுந்தரம்கிட்ட கேட்டா ஒடனே நமக்குக் கொடுத்திடுவாரு” என்று மனம் அடுத்த கட்ட வேலைக்கும் சோமுவைத் தயார் படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் “என்ன செய்யறது சொல்லு் ஒரே ஊர்க்காரங்க: ரெண்டு தெரு தள்ளி இருந்தாலும் பழக்கம் விட்டுப் போகாம இருக்கட்டுமேன்னுதான் கொடுக்க வேண்டியிருக்கு” என்று மனைவியைச் சமாதானப் படுத்துவதும் சந்தானத்தைக் காப்பாற்றுவதும் அதே மனம்தான். இப்படி சமாதானமான காரணங்களைக் கூறிய சோமுவின் மனம், அடுத்த சில நிமிடங்களில் மனைவியின் கட்சிக்குத் தாவி விடுகிறது. “அது மட்டும் இல்ல சந்திரா: அவனால நமக்கு ஏதாவது இதுவரையில் உதவி நடந்திருக்கா:? பணம் வேணும்னா வெக்கம் கெட்டுப்போய் வர வேண்டியது” என்று மீண்டும் மனவேதாளம் முருங்கை மரத்தைவிட உறுதியானது என நினைத்துப் புளியமரம் ஏறுகிறது. மீண்டும் மீண்டும் சந்தானத்தையே குறிவைத்துச் சொல்லம்புகளால் தைக்கிறார்கள்.
இப்படி இவர்கள் வசைபாடுவதை எப்படி இருக்கிறது எனவும் எழுதுகிறார் ஆசிரியர். “எதிரே சந்தானம் வெற்றுடம்புடன் நிற்பதாகவும் அவனைச் சாட்டையால் மாறிமாறி அடிப்பது போலவும் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்” மனம் தன் ஆத்திரத்துக்கு வடிகாலாகக் கற்பனை செய்து பார்க்கிறது. “நடுரோட்டில் விட்டு அடிக்கணும்” என்று பேசுவார்கள் அல்லவா அதுபோல. மனசு, தான் காண விரும்புவதை வார்த்தைகளில் ஏற்றி ஆறுதல் அடைகிறது.
“இன்னியோட சரி. இவன் கணக்கைத் தீத்துட வேண்டியதுதான் என்று தீர்ப்புக் கூறிவிடக் கிளம்பினான் சோமு” என்று எழுதுகிறார். அதாவது இன்றோடு சந்தானத்தை உதறிவிடுவது; இனி அவரோடு எந்தவித ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தீர விசாரித்து ஆராய்ந்து முடித்தது போல் தீர்ப்பே கூறுவதற்கு அவர்கள் வந்துவிட்டனர். இப்படித்தான் மனம் அடுத்தப் பக்க உண்மைகளைப் பார்க்காமல் எதிர்ப்பக்க நியாயங்களை கண்டுகொள்ளாமல் தீர்ப்பெழுதிவிடும். பின்னர் உண்மை தெரிந்து அதே மனம் தனக்குள் தலைகுனிந்து அவமானத்தை மறைக்கப் பார்க்கும். அதுதான் இந்தக் கதையில் இறுதியில் காணும் மனநிலை.
அப்படி சந்தானம் வீட்டுக்குச் சோமு போகும் போது சாலையில் நிகழும் காட்சிகளை”யும் படம்பிடிக்கிறார் எழுத்தாளர். வெறும் பேச்சுகளால் மட்டுமே கதையை நிகழ்த்திவிட்டால் மனக்கண்ணுக்குக் கலைநயம் தெரியாமல் போய்விடும். கதைத்தளத்தை அறியாமல் நாடகம் பார்ப்பதுபோல் அது அமைந்துவிடும். எந்தக் கதையும் காட்சிப்படுத்தும் போது அக்கதை உயிரோட்டம் பெறும். அந்த வகையில் சோமு போகிற போது…….
“ஞாயிற்றுக் கிழமை என்பதால் எதிரே கிரிக்கெட் மட்டைக் குச்சிகள் சகிதம் ஒரு சிறுவர் பட்டாளம் சென்று கொண்டிருந்தது. ஆற்று மணலை நிரப்பிய டயர் வண்டிகள் வரிசையாய் வந்தன. அவை செல்ல இடம்விட்டு சோமு சற்று ஒதுங்கி நின்றான். அப்போது தெருக்குழாயில் தண்ணீர் வீணாகக் வைக்கப்பட்டிருந்த துணி சுற்றப்பட்டிருந்த குச்சியை எடுத்து அடைத்தான்” என்று எழுதுகிறார். தொடர்ந்து ஒரே மாதிரி காட்சி இருப்பதைவிட, தொடர்ந்து வாசகரை ஒருவித விறைப்பில் வைத்திருப்பதைவிட, சற்று கதையை வேறு தளத்துக்கு நகர்த்தி கொஞ்சம் இளைப்பாற வைப்பதும், படிப்பில் ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதாகும். இங்கு வாசகனின் மனநிலையை அறிந்து, கதை சொல்கிறார் வளவ. துரையன். மேலும் மனம் வேகப்பட்டு இருக்கும் நிலையிலும் எதுவும் சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிற சோமு, வீணாகத் தண்ணீரைப் பாதுகாக்கக் குழாயை அடைப்பதைச் சொல்கிறார். அதே நேரத்தில் ஆவேசப்பட்டிருக்கும் நிலையிலும் சோமுவின் சேவை மனமும் வெளிப்படுகிறது. அவனுக்குச் சேவை மனம் இல்லை என்றால், வட்டி வாங்காமல் சந்தானத்துக்குப் பணஉதவி செய்திருக்க முடியாது அல்லவா? ஆனால் தன் சேவை மனத்தைத் தாண்டி தன் தேவை மனத்துக்கு வரவேண்டிய நெருக்கடியையும் கதையில் சொல்லி உள்ளார்.
தெருவில் இறங்கி நடந்த சோமு, விரைவாக சந்தானத்தின் வீட்டை அடைந்துவிடுகிறார். அது எப்படி சாத்தியம்? அதற்கும் மனம்தான் காரணம்.
சோமு நடக்க நடக்க- ஒவ்வொரு முறையும் உரிய நேரத்தில் பணம்திருப்பித் தராத தருணங்களில் சந்தானம் சொன்ன பல காரணங்களைத் தோண்டி எடுத்து மனம் விசாரித்துக்கொண்டே போகிறது.
பணத்தைத் திருப்பித் தராத அந்த எண்ணங்களே சோமுவை விரைவாக சந்தானத்தின் இல்லம் நோக்கி நடத்திச் சென்றன. மனதின் எண்ணங்கள் நடையின் வேகத்தை அதிகப்படுத்தும் என்ற உளவியல் நுட்பம் தெரிகிறது.
உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஒருவரைப் பற்றிய கோபச் சிந்தனையில் நீங்கள் நடக்கும்போது உங்களை அறியாமலேயே வழக்கத்தைவிட வேகமாக ஓரிடத்தை அடைந்துவிட முடியும்.
வீட்டுக்கு வந்துவிட்ட சோமுவை உள்ளன்போடு உபசரிக்கிறாள் சந்தானத்தின் மனைவி. அன்பாகப் பேசுகிறாள். காபி போட்டு வந்து கொடுக்கிறாள். அதைப் புரிந்துகொள்ள மறுத்துவிடுகிறது சோமுவின் மனம். அந்த நேரத்தில் “அய் மாமா” என்று சந்தானத்தின் குழந்தை வந்து சோமுவின் காலைக் கட்டிக்கொள்கிறது. அப்போது சோமுவின் மனத்துக்கும் உறைக்கிறது. தனக்கு இருந்த கோபத்தில் ஒரு பிஸ்கட் கூட வாங்கி வராத அசுர மனம் தனக்கு வந்துவிட்டதாகச் சோமு நினைக்கிறான் என்று எழுதுகிறார்.
ஆனாலும் அது இமைப்பொழுதுதான். அடுத்த இமைப்பில் குரங்கு வாலில் சுற்றிய தீப்பந்தம் போலச் சூழ்நிலையை எரித்துக் கரியாக்கப் பார்க்கிறது மனம். என்னதான் விஞ்ஞான உலகம் சரியென்று ஒன்றைச் சொன்னாலும், அதை மனம் ஏற்க மறுக்கும். நடைமுறை வாழ்வில் அறிவா மனமா எதுவெல்லும் என்று கேட்டால் பெரும்பாலும் மனமே வெற்றிக்கொடி நாட்டும். கடவுள் வாழ்வதும் பேய் உலாவுவதும் மனத்தால் வந்த வினைதானே!
மாட்டப்பட்டிருந்த படத்தில் இருந்து சந்தானம் இவனைப் பார்த்துச் சிரிப்பதுபோல் இருந்தது என்றும் காட்சிப்படுத்துகிறார். சோமுவைப் பொறுத்து உண்மையிலேயே அவ்வாறு படத்தில் இருக்கும் சந்தானம் சிரித்தால் அது மாயக்காட்சியாக- திரிபுகாட்சியாகத் தோன்றும் ஒருவித உளநோய் ஆகும். ஆனால் இங்கு அத்தகைய மனநோய் ஏதும் இல்லை. பணத்தைக் கொடுத்துவிட்டு நடையாய் நடக்கும் கேனைப்பையல் தானென்று சோமு நினைப்பதன் வெளிப்பாடாக போட்டாவில் இருக்கும் சந்தானம் அவ்வாறு நக்கலாகச் சிரிக்கிறான் என சோமு நினைத்துக்கொள்வது ஆகும். அவ்வாறு நினைப்பது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் அப்போதைய மனநிலையில் மனம் சொல்லும் பொருள்விளக்கம் ஆகும்..
படுக்கை அறைக்கதவு சாத்தி இருப்பதைப் பார்க்கிறார் சோமு. “இன்னுமா தூங்குறான்: ஒருவேளை அவனுக்கு உடம்பு ஏதும் சரியில்லையோ? என ஐயுறுகிறது மனம். அடுத்த நொடியே “அந்தக் கடங்காரனுக்கு என்ன? மண்ணுல புடுங்கிய வள்ளிக்கிழங்கு மாதிரிதான் இருப்பான்.” என்று அதே மனம் மறுப்புரை தாக்கல் செய்கிறது.
சோமுவின் முகம் மாறுபட்டதாக- அவரின் நடவடிக்கைகள் வேறுபட்டதாக- இருப்பதை யாராலும் கண்டறிய முடியும். அதனால்தானே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். சந்தானத்தின் மனைவி கமலாவும் அதை உணர்ந்தாள். சூழலைச் சரியாக்கும் வகையில் அவரை மென்மலராக்கும் முறையில் ”என்னண்ணே… ஒடம்பு ஏதும் சரியில்லையா? வீட்ல அண்ணி நல்லா இருக்காங்களா?” என்று பேச்சுக்கொடுக்கிறாள். இதுவும் அடுத்தவர் மனம்அறிந்து நடக்கும் மற்றொரு மனதின் அன்புத்தோற்றம்.
கோபத்தின் உச்சியில் இருக்கும் சோமு பதிலேதும் பேசாமல் காபியை ஆற்றுவதிலியே இருந்தான். அவளும் காபி குடிக்கட்டும் என்று காத்திருந்தாள். அதற்கான காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள- பிள்ளையின் எதிரில் எதுவும் எதிர்மறையாக நடவாமல் இருக்க “பாலு வாசல்ல போய் விளையாடு என்று மகனை வெளியில் அனுப்புகிறாள். இவை யாவும் மனம் போதிக்கும் அறிவுரைகள்தாம். காபியை ஆற்றும் போது மனமும் ஆற வாய்ப்புண்டு. இன்னொரு செயலில் கவனம் வைக்கும்போது முந்தைய செயலின் விளைவைச் சற்று மறக்க முடியும் அல்லது குறைக்க முடியும். காபி குடித்து முடிக்கட்டும் என்பதில் காபியை மனமாரக் குடிக்க வேண்டும். ஏதாவது நாம் சொல்லப்போய் அதை அவர் குடிக்காமல் விடக்கூடாது என்ற விருந்தின் இலக்கணம் அங்கு உண்டு. நேர நீட்சியால் கோபத்தின் வலிமை கொஞ்சம் குறையலாம் என்பதற்காகவும் அது இருக்கலாம். மகன் போய்விட்டானா என்பதை வாசற்புறம் சென்று ஒருமுறை பார்த்துவந்த கமலாவிடம் பட்டென்று “எங்க சந்தானம்? அவனைப் பார்த்துக்கேக்கணும்னுதான் வந்தேன்” என்று முகம் சிவக்கிறார். அப்போது அவரைப் பார்க்க அவளுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதுவும் இயல்புதான்.
அப்போதுதான் காரணம் புரிகிறது கமலாவுக்கு. அவள் மெதுவான குரலில் “நேத்துதான் கேட்ட எடத்துல பணம் சாஞ்சது. இந்தத் தடவையாவது சொன்னபடி குடுத்துடணும்னு ஒங்க ஊட்டுக்குப் போயிருக்காரு” என்று கூறுகிறாள்.
ஆக இந்தக் காட்சி முழுவதும் சோமுவும் கமலாவும் இருந்தாலும் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. இருவரின் மனங்கள்தாம் அங்குக் காட்சி வலிமை பெறுகிறது.
பணம் கொடுக்கிறானா இல்லையா என்று இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடுவது என்றும்- இனி அவன் உறவே தேவையில்லை என்றும் முடிவோடு வந்த சோமுவுக்கு, அதே நேரத்தி்ல் பணத்தைத் திருப்பித்தர சோமுவின் வீட்டுக்குச் சந்தானம் போயிருக்கும் செய்தி எப்படி இருந்திருக்கும். …யப்பா பணம் வந்துடுச்சின்னு சந்தோஷப்பட்டிருப்பாரா? மீட்டர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் மீசைக்காரருக்கு வேண்டுமானால் அது மகிழ்ச்சியாக இருக்கும். சோமு அப்படிப் பட்டவர் இல்லையே! அவர் பொதுவாக நல்லமனம் படைத்தவர்தானே!
இப்போது சோமுவின் மனம் தடுமாறுகிறது: தள்ளாடுகிறது: அதை ஆசிரியர் விவரிப்பதைப் படியுங்கள்.
“சோமுவுக்கு மலை உச்சியிலிருந்து விரட்டிக் கீழே தள்ளி விட்டது போலிருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகளும் காயமும் பட்டுத் தன்தோற்றமே அருவருக்கத் தக்கதாக உணர்ந்தான். சந்தானத்தின் வீட்டில் இருந்து நடக்கவே முடியவில்லை. திடீரெனப் பத்து வயது கூடிவிட்டது போலக் களைப்பாக இருந்தது. தான் எப்படி இவ்வளவு கீழான குணம் கொண்டவனாக மாறினோம் என்று மனத்துக்குள் சோமு கேட்டுக்கொண்டான்”
இதில் அருவருக்கத் தக்கதாக உணர்ந்தான் என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். நம்முடைய செயல்கள் தவறாகும் போது நமக்குள் மனம் அருவருப்பு கொள்ளும். இத்தகைய அருவருப்புகளைப் பலரும் அனுபவித்து இருப்பார்கள். அப்போது நமக்கு நம்மையே பிடிக்காது. ஆமாம் அத்தகைய தருணங்களில் நம்மனம் நம்மையே குத்திக் கிழிக்கும்.
திரும்பி வருகிறார் தன்வீட்டுக்கு சோமு.
அங்கு அப்போது உரையாடல் சிறிதும் இல்லை. பேச்சுக்கே வேலை இல்லை. ஏனென்றால் பேசவே நாவை எழுப்பாது அவமானப்பட்ட மனம்.
நவீன இலக்கிய உத்தியோடு கலைப்பூர்வமாகக் கதையை முடிக்கிறார் வளவ. துரையன்.
எப்படி முடிக்கிறார்? இதோ…..
“வீட்டின் உள்ளே நுழைந்து சட்டையைக் கழற்றியதும் அவனும் அவன் மனைவி சந்திராவும் பேசிய வார்த்தைகள் கீழே வடுவாகக் கிடந்து முறைப்பதுபோல் அவனுக்குத் தோன்றின. அவற்றை மிதிக்காமல் தாண்டிச் சென்று சந்திராவைப் பார்த்தான். அவளோ சோமுவின் கண்களைக் பார்ப்பதைத் தவிர்த்து மேலே பார்ப்பது போல இருந்தாள்.”
இந்த வரிகளில்,-
ஆர்ப்பரித்து அடங்கிய மனம், திக்குத் தெரியாத காட்டில் தவிப்பதைப் பார்க்கலாம்.
மனதுக்கு உருவம் கொடுக்கிறார் வளவ. துரையன்.

-கோ. மன்றவாணன்

malaranicham@gmail.com

Series Navigationஉண்மை நிலவரம்.டவுன் பஸ்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *