தமிழ்மணவாளன் கவியுலகம்

author
1
0 minutes, 10 seconds Read
This entry is part 8 of 14 in the series 18 ஜூன் 2017

uritheluthalin ori new11 (1)

தி.குலசேகர்      

தமிழ் மணவாளன் , கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். குறிப்பாகக் கவிதை குறித்த அவரின் செயல்பாடு இடையறாது நிகழ்ந்து கொண்டிருப்பது. என்னைப் போலவே ரசாயனப் படிப்பும், பெட்ரோ கெமிக்கல் துறையில் பணியாற்றும் அனுபவமும் கொண்டிருப்பவர். எளிமையானவர். உதவுவதில் மகிழ்வுறும் மனஈரம் கொண்டவர். தமிழின் மீதான காதலால் தமிழில் முதுகலை படித்தவர். கவிதையின் மீதான காதலால் அதில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவருக்குக் கவிதை சுவாசம். சங்ககாலக் கவிதைகளில் இருந்து, இந்தக் கால கவிதைகள் வரை அடர்காதல் கொண்டிருப்பவர். சந்தக் கவிதை எழுதத் துவங்கி, தமிழ் மணத்தோடான நவீன கவிதைகளின் படைப்புலகம் நோக்கி வந்திருப்பவர். கவிதைகளால் ஆனது இவரது உலகு.

சமீபத்தில் அவர் எழுதிய, ’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, ’புறவழிச்சாலை’, என்கிற இரண்டு கவிதை நூல்களை வாசித்தேன். மளமளவென மிக லெகுவாக வாசித்து விடக் கூடிய கவிதைகள். ஆனால், அவை நிறுத்தி நிதானமாக பரவசிக்கத்தக்க பயணிப்பின் ஆழம் கொண்டவை என்பதை படித்த பின் உணர முடிகிறது.

இவரைப் பற்றி குறிப்பிடுகையில், ’சாதாரணங்களில் இருந்து அசாதாரணங்களை கண்டுபிடிப்பவர்’, என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

எழுத்தாளர் ஜெயந்தன், ’கவி மனது, தான் உணர்வதை உணர்ந்தபடி சொல்லில் வடிக்க முடியாத சோகத்தை தன்னுள் உறைவுறச் செய்து கொண்டிருக்கிறது. அப்படியாகச் சொல்ல முடியாமல் விட்டுச் செல்லப்படுகிற வெற்றிடத்தை நிரப்பி விடத் துடிக்கிற அவஸ்தை தான் கவித்துவத்தின் ஆதார சுருதி. அப்படியான சொல்ல முடியாத அவஸ்தையையே பாடு பொருளாக்கி கவிதை படைப்புகளாக்குகிறார்’, என்று இவரைப் பற்றி குறிப்பிடுகையில் சொல்கிறார்.

’சொல்லையோ, எழுத்தையோ உணர்வு புணர்ந்த மாத்திரத்தில் உருப்பெறும் கவிதை. அதன் பின்னான வாசிப்பு அனுபவத்தில் தோள்மாறும் சிசுவாகவோ, கிளைமாறும் கிளியாகவோ ஏந்துகின்ற இருப்பிற்கேற்ற வடிவமாய் மாறும் நீராகவோ உருமாறுகின்றது. அதில் இயலாமையில் நசுங்கும் மாயமான மனத்தின் பெருமூச்சு பரவிக் கிடக்கிறது’, என்கிறார் தோழி தமிழச்சி தங்கபாண்டியன்.

’சகமனிதர்களது அனுபவங்களை தன் சொந்த அனுபவங்கபளாக பாவித்து அவற்றை அதே இயல்புடன் வார்த்தைகளில் வடிக்க முடிவது இவரின் தனித்தன்மை’, என்கிறார் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்.

 

’எந்தவொரு கவிதையின் வரிகள் நடுநிசியில் திடுமென்று நினைவில் மோதி மனதை நெகிழ்த்துகிறதோ அந்த ரக கவிதை இவருடையது’, என்கிறார் மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன்.

அத்தனையையும் கவிஞர், தன் கவிதைகளில் நிஜமாக்கியிருக்கிறார் என்பதை அவரின் புறவழிச்சாலை, உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் படிக்கையில் உணர முடிகிறது.

தமிழ்மணவாளனின் கவிதைகள் அறிவார்ந்தவை.. அன்பார்ந்தவை..வானச் சிறகால்

மிதந்து மிதந்து பயணித்தபடி இடும் வானவிற் படிமங்கள். தேடலின் குறியீடுகள்.

சிலிர்ப்பின் உணர்பெயர்ப்புகள். அதிநிஜக் கனவுலகக் கண்டுபிடிப்புகளின் சூத்திரங்கள்.

ஒவ்வொருவரின் பார்வையிலும் பிரத்யேக உணர்வெழுதலாய் வடிவெடுக்கும் மாயாஜாலம்.

%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d

கவிதைகளால் பிழைத்திருக்கும் தமிழ் மணவாளன் தன் கவிதைகளின் கடவுச் சொல்லால் கடைத்தேறுகிறார். அவை பிரபஞ்ச ஈரத்தின் கதகதப்பான ஒத்தடங்களை விளிம்பற்ற வெளியெங்கும் பரிசாய் அளித்தவண்ணம் இருக்கின்றன.

 

அடையாளம் அறியப்படாமல் தனிமை காற்றுவெளியில் சஞ்சரிக்கிற கருக்களாய் சில காதல் கவிதைகள். புரிந்து கொள்வதன் மீதூறும் அபத்தம். ‘அதை கனவாக மாற்றிச் சொல்கிறேன். அதற்கு அவள் இதற்குத் தான் சாப்பிட்டவுடன் உறங்கப் போகக் கூடாது’ என்கிறாள். சந்தித்துக் கொள்ளாத வார்த்தைகள். வெவ்வேறு திக்கில் பயணிக்கும் அபத்த அழகு. தேட வைக்கிற திறவுகோல்.

 

சில பார்க்கலாம்.

 

வெளிச்சம் வாங்கலியோ வெளிச்சம்

சோன்பப்டி விற்பவனின் குரல் கேட்டு

இருளில் இருந்து வெளிப்பட்டவர்

அவனிடம் விலைபேசி

வசதிக்கேற்ப வெளிச்சத்தை பொட்டலமாய்

வாங்கிக்கொண்டு போக

வெளிச்சம் காலியான ஜாடி இருளானது

 

வானவீட்டுக் கூரையின் உள்முகட்டில்

ஒட்டடையாய அப்பிக்கிடந்த

மேகத்தை துடைப்பத்தால் சுத்தம் செய்ததில்

உள்ளிருந்த நிலவு வெறிச்சத்தை சொரியத் துவங்க

மறுபடி ஜாடியில் நிரப்பிக் கொண்டவன்

சைக்கிளை மெல்ல நகர்த்துகிறான்

இருள்நோக்கி.

வெளிச்சத்தை பொட்டலம் கட்டி விற்கிற சோன்பப்டி வியாபாரி வெளிச்சம் விற்றுத்தீரும் போது ஜாடியில் இருள்பரவுவது எதன் குறியீடாக மாறுகிரது என்பதை நிலவின் வெளிச்சத்தை மறுபடி நிரப்பிக்கொள்வதன் மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.

*

துயரத்தை பறவையில் காலில் கட்டி பறக்க விட்டேன்

கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாசமாகிறேன்.

உயரப் பறக்கையில் உதறி விடும் அதை

துயரத்தை பறக்க விடக்கூடாதென இப்போது புரிகிறது

பறவை சுமந்துபோய் போட்ட இடத்தில் நாகவிருட்சமாகி

கண்காணா இடமிருந்து காவு கேட்கிறது.

எந்தத் துயரத்தியும் நம்முள் புதைக்காமல் பிறரிடம் பகிர்ந்துகொள்கிற போது எதி கொள்பவர்கள் எல்லோரும் ஒன்று போல் இருப்பதில்லை தானே. புறவின் காலில் பறக்க விட்ட துயரத்தை உயரே போன உடன் உதறி விகீரதாம் புறா.எங்கே? கண்காணா தேசத்திலிருந்து காவு கேட்கிறது அத்துயரம் நாக விருட்சமாய் வளர்ந்து என்கிறார்.

*

 

கொலையும் செய்வாள் பத்தினி என்கிற கவிதையில் கற்பு என்னும் கற்பிதம் வெடித்துச் சிதறுகிறது.

அவ்வொற்றை ஆயுதத்தில் நேர்ந்த கொலைக்கு

பத்தினியாய் இருப்பதும்

இல்லையென்பதும் வேண்டுமென்பதும்

தொடர்புகளற்ற புதிய ஆயுதம்.

கண் சிமிட்டி தலையசைத்து சைகை செய்த வழக்கறிஞரிடம்

பெற்றுத் தரும் விடுதலை முக்கியம் தான்

அதனினும் முக்கியம் நான் வெற வேண்டிய விடுதலை.

 

தேதி குறிப்பிடப்படாமல்

தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

*

நழுவிச்சென்று கண்ணாமூச்சி காட்டி வாழ்வியலில் யதார்த்த திரைக்கதை அமைக்கும் தருணங்களாகிப் போகும் தகிப்புகளுக்கு சமர்ப்பணமிடுகிறது இந்த கவிதை வரிகள்.

 

கோவிலாம்பட்டு கிராமத்திதலிருக்கும்

அவளை சந்திக்கும் வாய்ப்புள்ளதா..

எழும்பூரிலிருந்து தியாகராயநகர் செல்லும் பேருந்தின்

மூன்றாம் இருக்கையில் அமர்ந்திருக்கும்

பயணியை சந்திப்பேனா..

வண்ணத்துப்பூச்சியின் சிறகில் கிறங்கிக் கிடக்கும்

மனஓவியனோடு உரையாடுவேனா..

அர்ச்சனை தட்டோடு கண்மூடி நிற்க தரிசனம் தரும்

கடவுளுக்கு கைகுலுக்கி குசலம்

விசாரிக்கும் சாத்தியமுண்டா..

இப்படி இடையறாது விலகிப்போகும்

பட்டியலில் ஒன்று தானா

நாம் சந்திக்காமலிருப்பதும்..

*

 

நீ மறைத்துமறைத்துச் சொன்ன

உணர்வின் தூரிகை கொண்டு

அவனின் முகத்தை மாற்றிமாற்றி வரைந்து பார்க்கிறேன்

கோடைகாலப் பகலொன்றில் கிட்டிய நுங்காய்

வாய்ஊறி வழிந்தோடும் நினைவு.

*

எண்பது என்பது

இறுதிக்காலம் என்றெண்ணி

இறந்தபின் அடக்கம் செய்ய

பிறந்தவூரில் மயானத்திற்கருகில்

மண் வேண்டுமென ஆசைப்பட்டு

அரை கிரவுண்ட் நிலத்திற்கு

விலை விசாரித்து அதிர்ந்தவர்

அடேங்கப்பா.. இவ்வள வரேட்டா..

எடத்தோட வெலையெல்லாம்

இப்படி எகுறும்னு தெரிஞ்சிருந்தா

இருபது வருசத்துக்கு முன்னாடியே

செத்துருக்கலாம்.

*

தோன்றும் சமயங்களில். எதற்காக பெண்கள் எப்போதும் கணவனின் பெயரையோ, தந்தையின் பெயரையோ தன்னுடைய பெயருக்கு பின்னால் இணைத்துக் கொள்கிறார்கள். அதுவும் நவீன முகநூல் யுகத்தில் அது அளவுக்கதிகமாகவே தென்படுகிறது. ஒரு நாளும் ஆண்கள் தங்களின் பெயருக்கு பின்னால் தாயின் பெயரையோ, மனைவியின் பெயரையோ இணைத்துக் கொள்வதில்லை. அது தேவையுமில்லை. சுயசார்போடு, சுதந்திரமாக பெயரளவில் கூட ஏன் இந்த பெண்களில் பலரால் இயங்க முடியாமல் ஆண்களின் பெயரை ஊன்றுகோலாக பிடித்துக் கொண்டே திரிகிறார்கள்???

 

பரமேஸ்வரி

குருமூர்த்தியின் மகள்

தனபாலனின் தங்கை

மணிகண்டனின் மனைவி

குமாரின் அம்மா

சதீஷின் பாட்டி

தடயங்களேதுமில்லை

பரமேஸ்வரி ஒரு போதும்

பரமேஸ்வரியாக அறியப்பட்டதாக.

 

அப்படியல்லாத சுயத்திற்கு மதிப்பளிக்கிற எத்தனையோ மின்மினிப் பெண் தோழியர்களை தரிசிக்க முடிகிறதென்றாலும், இந்த இருபத்தோறாவது நூற்றாண்டு யுகபெண்மணிகளின் பெரும்பான்மை இன்னுமேன் அதிலிருந்து விடுபடாமல், நிலவுடமை எச்சத்தில் உழன்று அறிந்துமறியாமல் சுயத்தை அடகு வைத்துக் கொள்கிறது???

*

நல்லவன் அல்லது கெட்டவன் என்கிற ஒரு சார்பு பார்வையே இங்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. க்ரே ஏரியா என்று ஒரு முக்கியமான பக்கம் கவனிக்கப்படாமலே கிடக்கிறது. அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கான காரணகாரிணிகளை தேடிக்கண்டுணர்ந்து, கருணையோடு வகை பிரித்து, வள்ளுவம் சொன்னது போல குணம்நாடி குறை நாடி அவற்றும் மிகை நாடி மிக்க கொளல் வேண்டுமென தவிக்கிறது இங்கே ஒரு கவிமனது.

 

ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றிய என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் ஸ்பிக் ஹார்வெஸ்ட் இதழில் சீதைக்காக எழுதிய கவிதை அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தை பதற்றத்தின் உச்சம் கடந்து பொங்கி வழியச் செய்தது. அதில் ராமன் சீதையின் உடல் சார்ந்த கற்பெனும் கற்பிதத்தை ஊருக்கு நிரூபிக்க முனைந்திருந்தால், தினம் ஒரு செய்தி வதந்தி டாட் காமில் ஒலி, ஒளிபரப்பப்படும். அத்தனைக்கும் ஒவ்வொரு தடவை அவள் தீக்குளித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?? அவள் உனக்கு தானே மனைவி. ஊருக்கல்லவே.. என்கிற ரீதியில் அந்த கவிதை பயணிக்கும். அதன் மற்றொரு படிமமாய் இந்த கவிதை.

 

 

அவதார புருசனின் மனைவியாய் வாழ்ந்ததால்

அறிந்தே வைத்திருந்தாள்

சந்தேக சர்ப்பம் நெளியும் அவன் மனத்தினை

அதனால் தான் ராமனுக்கு தானிருக்குமிடும்

தெரிந்துவிடக் கூடாதென்பதில் குறியாயிருந்தாள்

அனுமன் தேடி வந்திருப்பதை அறிந்தவுடன்

காற்றுக்கும் புலப்படாத இருட்பாதாளத்தில்

இறங்கிக் கொண்டாள்

கண்டேன் சீதையை என கம்பனும் பாட இயலாவண்ணம்

அனுமன் திரும்பிப் போனான்

வாய்ப்புகள் வாய்த்தபோதும் வாளாவிருந்த

ராவணன் மீது புகாரேதுமில்லை அவளுக்கு

மண்டோதரியின் தோழமையோ மகிழ்ச்சியை தந்தது

துயில் இறங்கி தன் கற்பை நிரூபிக்க

ஒரு போதும் விரும்பாமல் இபோதும்

அசோகவனச் செடியொன்றில்

பூவாய் பூத்துச் சிரிக்கிறாள் சீதை.

*

 

முரண்களின் முரண் கொள்கிற உலகு எப்படியெல்லாம் சாரமற்ற சடங்குப் படிமங்களால் நிறைத்து வெற்று வாழ்க்கைக்குள் தள்ளிவிடுகிறது என்ப குறியீட்டு படிமங்களில் பதிக்கிறது இந்த கவிதை.

எல்லோருக்கும் யாரிடமேனும் புகார் இருந்து கொண்டேயிருக்கிறது

முறைமையற்ற பாதை வழி வந்து நேரெதிப்படுபவர்களிடம்

முகம் காட்டவே பிடிப்பதில்லை

கசப்பின் நீர்த்தாரையாய் பெருமழைக்கான அதிருப்தி மேகங்கள்

அலைகனிற்ன மனத்தின் வெளியெங்கும்

யாவருக்கும் இலக்குகள் வேறாகும்போது

அவற்றை தேவைகள் மட்டுமன்றி ஆசைகளும் தீர்மானிப்பதால்

எப்படியெல்லாமோ மாறிப் போகின்றன பயணத்தின் சுவடுகள்

எனவே தான் நடித்துக் கொண்டிருக்கிறோம்

உன்னையெனக்கும் என்னையுனக்கும் பிடிக்கவில்லையெனினும் பிடித்தது போலவும்

பிடித்திருந்த போதும் பிடிக்காதது போலவும்.

*

கறக்கம் நழுவும் இரவின் தலையணையில்

இறுக்கித் திணிக்கப்பட்டிருக்கும் இலவம் பஞ்சாய்

கனவுகளை விற்பவர்கள்

மூடி வைக்க முடியாத புத்தகத்தின் வரிகளினூடாகவும்

இசைத்தட்டின் ஒழுங்கமைந்த முழுவட்டக் கோடுகளாகவும்

அலைபேசி வழியும் மெசஞ்சர் வாட்ஸ்அப் எழுப்பும் பீப் ஒலியெனவும்

உறக்கத்திற்கு பின் நிலைபெற வேண்டிய புத்திகளோடு.

 

இரவுகள் கனவின் சந்தை.

 

பகலின் ஓர் உச்சிகாலப்பொழுதில்

கண்ணாடி தம்ளரில் நுரை ததும்ப

கனவினை நிரப்பி தருகிறார் டீ மாஸ்டர்.

*

யதார்த்தத்தின் முரண்கள், கனவிற்கும் நனவிற்குமான இடைவெளியாய் இந்த கவிதையில் படிமம் கொள்கிறது.

 

கொஞ்சநேரம் யானையாய், குதிரையாய், குன்றாய், யாவுமாய்

மேகம் கலையத் தொடங்க

வெறிச்சென்ற வானம்.

*

பின்னோக்கி பாயும் கனவில்

கசிந்துருகுகிறது நிஜம்.

 

இப்போது கூட இசை கேட்டுக் கொண்டிருக்கும்போது

எப்போதாவது ஞாபகத்திற்கு வருகிறாள்

ஒரு கோடை விடுமுறையில் அறிமுகமான சந்தனா

அப்பாவின் பணி மாறுதலின் பொருட்டு எங்கள் ஊர் வந்தவள்

என்னோடு ஒன்பதாம் வகுப்பில்

முதல் முத்தத்தை கொடுத்தபோது முகம் உதறி ஓடியவள்

முந்தைய ஊரில் கற்றுக்கொண்டதை எனக்காக

பாடிக் காட்டட்டுமாவென்ற நாளில்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

என இனிய குரலில் பாடத் தொடங்கியவள்

இனம் புரியாதெவென்

இறுகிய என் முகம் கண்டு பதில் முத்தம் தந்தாள்

பாட்டை சட்டென நிறுத்தி விட்டு.

 

வானம் முழுக்க இசையின் சிறகுகள்

 

பால்யகாலத்தின்  காதல் நினைவுகள் குறிப்பாக முதல் காதல் முதல் முத்தம் யாருக்கும் விஷேசமானது தான் எப்போத முத்தம் கொடுத்தபோது தப்பித்து ஓடியவள் என்றோ பதிலாய்த் தருகிற காட்சிச் சித்திரமாய் விரிகிறது.

.

*

கணவனுக்கு என்னை அவள் அறிமுகப்படுத்திய கணம்

வழக்கமான சந்திப்புகளில் வெடித்துக் கிளம்பும் சப்தங்களேதும் அற்று

மெல்லிய புன்னகையுடன் என் பெயர் பணி சொல்கிறாள்

அதற்கு மேல் என்னைப் பற்றியேதும் அறியாதவள் போலவும்

தனித்தென்னை பேச விசயங்கள் அற்றவளாகவும்

என் மனைவி குறித்தும் பிள்ளைகள் குறித்தும் விவரிக்கிறாள்

குறுகிய நேரத்தில் என்னை குடும்பமாய் மாற்றுவதிலேயேயே குறியாய் இருக்கிறாள்

அவளின் கணவனும் நானும் கை குலுக்குகிறோம் எனினும்

ஒரு விநாடி என்னையவன் உற்றுநோக்க உடனதை கலைக்கறிள்

அவனின் ஓர் இயலுமையும், என்னினோர் இயலாமையையும் பகிரங்கப்படுத்தி..

 

அந்த கணவனுக்கு அவனின் முன்னால் ஞாபகம் நினைவில் முட்டிக் கொண்டு வர, பெரும் ஈரம் திரள, பக்கத்தில் உள்ள இளநீர் கடைக்கு போய் வாங்கி வருவதாக சென்றவன், நெடும்நேரம் கழித்து வந்ததில், பாரம் இறக்கியவனாய் நெகிழ்ந்திருக்கும் கணம் அகத்தின் உயிர்ப்பாகிறது.

 

யதார்த்தவாதத்திலிருந்து, அதியதார்த்தவாதம்.

 

இருப்பதிலிருந்து கடந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறபோது கவிதை புத்தெழில் கொண்டு, தன் வனப்பை கூட்டுகிறது.

*

எப்போதும் போலின்றி இந்த இரவு ஏனோ இமை மூடாது

சர்ப்பம் தீண்டியவன் வாய் பெரும் நுருக் குழம்பென

நேற்றைய மாலையில் ஏழு நிமிடங்கள்

காலாதீதத்தின் எல்லையற்றுக் கடந்து தளும்பி

விசமென ஊறும் உடலத்தை துடைக்க யத்தனிக்கும்

உள்ளங்கை அதனினும் கரகரக்க..

துடைக்கவோ கழுவவோ இயலாத கணத்தின் அழுத்தத்தை

நெஞ்சின் சினம் முற்றெரிந்து சாம்பல் நிரம்பும் சிதையாக்குகிறது.

*

அன்பு ததும்பி வழிந்த நாட்களின் நினைவை சுயிங்கம் போல

சுவைத்துச்சுவைத்து அசை போட்டுக்கொண்டிருந்தேன்

என்ன செய்வது

மென்று தீர்த்த கணத்தில் மெல்ல வலிக்க

துப்பிடிவடச் சொல்லி காலத்தின் உதடுகள் கட்டடளையிடுகின்றன.

 

ஆனாலும்

தொடர்கிறது

அசைபோடல்.

*

பொம்மலாட்டம் என்றொரு கவிதை அபாரமான படிமம்.

 

பின்னிருந்து நூல் பிடித்தாட்டுபவரின் அசிருத்தையால்

மொம்மலாட்டத்தின் கதை மட்டுமன்றி

பாத்திரங்களின் குணாதிசயங்களும் மாறிப் போயின

இதுவரை வேறு மாதிரியிருந்த A நல்லவிதமாகவும்

வாஞ்சையே உருவான B வஞ்சகம் நிறைந்ததாகவும்

பார்வையாளர்களுக்கு ஒரு போதும்

பொம்மைகளின் மனம் குறித்த ஆர்வமேதுமில்லை

அசைவுகளை மட்டும் வைத்தே முடிவு செய்வது சுவாரஸ்யமானது

கொஞ்சம்கொஞ்சமாய் அவர்கள் கொலைவெறி கொண்டவர்களாக

தன்மீது மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி B பொம்மைக்கு தெரியாது

அதனினும் முக்கியம் அந்தப்புறம் அமர்ந்து நூல் பிடித்தாட்டுபவனும்

அறிதலற்று இருப்பது.

*

எதிர்த் திசை போகும் புகைவண்டியில்

மறைக்கும் கன நேர முகம்..

என்கிற வரிகளில் கவிதை படபடத்து உயிர்த்தெழுகிறது.

*

ஒரு கவிதையை எழுதிக் கொண்டிருக்கும் போதே

பேனாவில் மை தீர்வதென வார்த்தை தீர்ந்து போனது

இல்லையெனில் எழுதப்படாத வார்த்தைகளை வாசித்து விட்டு

எப்படி எல்லாமோ எதிர் வினையாற்றி இருப்பாய்.

 

வினையாற்றுகிறது

மொழி கடந்த மொழி.

ஓடும் ரயில்களின் சுமை முழுவதும்

பளபளப்பாய் தண்டவாளத்தில்

…….

ஒரு நள்ளிரவில் வான் பார்த்து எழுதத் தொடங்க

வார்த்தைகளின் வசீகரத்தால் சொற்கள் நட்சத்திரங்களான

சூட்சுமத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.

………

*

மிதக்கும் அதன் அழகினை ரசித்தன்று

தக்கை மீது குவந்து கிடக்கும் கவனம்

மூழ்கும் தருணத்திறகாகவும்

அந்நொடி

……

என உயிர்த்தெழும் படிமம் நிரம்பிக் கிடக்கின்றன.

*

இருள் போர்த்திய பெருங்கடல்

பேரின்பத்தின் பிரமாண்டமாய் விரிந்து கிடக்க

…..

அற்புதத்தை சுவாசித்து சுகித்தேறிய மூச்சுக் காற்றில்

ஒற்றைப்புள்ளியாய் நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கும்

அந்தக் கப்பல் மெல்ல அசைகிறது.

 

இயங்குதலின் படிமம்

*

எல்லா மன்னிப்புகளுமே

தவறு செய்வதால் கோரப்படுபவை அல்ல

தவறென சொன்னவை

தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாலும்

கருத்துகளைக் கூறியதால்

மனம் சங்கடப்பட்டு விட்டார்களோவெனவும்

தவறைச் சுட்டிய பிறகதனைச் சொல்ல

நமக்கு உரிமையில்லை என்று

உணர்ந்த பொழுதும் என கோரப்படுகின்றன

அனேகமாய் மன்னிப்புகள்

யாவும் அவமானங்களை

எதிர்பார்த்தே கோரப்படுகின்றன

மன்னிப்புக் கொருவது ஒரு மகத்தான குணம் எனவும் அதுவே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடக்கூடியதாகவும் நீதி போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மன்னிப்புக் கோரும் போது தன் அதன் வலி புரிந்து கொள்ளக்கூடியதாகிறது.

மன்னிப்புக் கோருதல் மகத்தான குணம் தான் . ஆனால் மன்னிக்கும் குணாம் அதனினும் மகத்தான குணமல்லவா? ஆனால் அது நம் வசம் இல்லாத சிக்கலோடு எதிர் கொள்வதே மன்னிப்புக் கோரும் தருணம்.

.

 

நழுவி நிறைக்கும் காதலிய தருணங்கள் வாழ்வியலின் அனுபவங்களாகவும், வரங்களாகவும் பரிமளித்து தவிப்புலகிற்குள் அழுத்திச் செல்கின்றன.

*

ஆங்காங்கே மரபுக்கவிதையின் தொனி இவரின் நவீன கவிதைகளில் மிச்சமிருக்கின்றன. உதாரணமாக கூட்டு வார்த்தைகள், எதுகைமோனை போன்ற பயன்பாடுகள். சமஸ்கிருத பதங்களையோ, ஆங்கில பதங்களையோ தவிர்க்க முடிகிற இடங்களில் தவிர்க்கலாம்.

தலைப்பின் அவசியமற்று கவிதைகள் ஆணிவேராய் உயிரோடியிருக்கின்றன. தலைப்பு என்கிற அறிமுக விளக்கம் அவசியமற்றதாகவே தோன்றுகிறது. அந்த கவிதையின் பன்முகத்தன்மை, தலைப்பின் மூலம் ஒற்றைப் பார்வையாய் சுருக்கப்படாத தருணங்களில் விரிந்த பார்வைக்கு கவிதையை எடுத்துச் செல்கிற வாய்ப்பும், தரமும் இந்த கவிதைகளில் இருப்பதாகபடுவதால் அப்படி தோன்றுகிறது.

 

எந்தப் படைப்பும் படைப்பாளர் வழியாக பயணித்து பொதுவெளிக்குள் பொருந்தும் போதே சமூகத்திற்கான, எல்லோருக்குமானதாகிறது. அது தனிமனித தவிப்பின் புலம்பல் என்கிற படிநிலை கடந்து அனுபவமாகி பொதுவெளியின், சமூக அனுபவமாக பரிமளிக்கையில் மக்களுக்கானதாகிறது. யாப்பின் கைபிடித்து, நடைபயின்று நவீன கவிதைகளுக்குள் ஓடி வரும் வீரியமான இவரது படைப்புகள் மக்களின் கவிதைகள். மரபைக் கடந்து பயணிக்கும் நவீன படிமங்கள்.

தாராளமாய் தரிசிக்கலாம். அவரவர் ஆழங்களுக்கேற்ப அள்ளிக் கொள்ளலாம்.

 

தி. குலசேகர்

Series Navigationயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16பாரதி பள்ளியின் நாடகவிழா
author

Similar Posts

Comments

  1. Avatar
    தமிழ்மணவாளன் says:

    என்னுடைய கவிதைகள் குறித்த விசாலமான பார்வையோடு பெரியதொரு கட்டுரையை எழுதியிருக்கும் தி.குலசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *