This entry is part 10 of 10 in the series 3 செப்டம்பர் 2017
வான்மதி செந்தில்வாணன்.
மழை நாளொன்றில்
நடைவாசல் திண்ணையில்  அமர்ந்தவாறு
வேடிக்கை  பார்த்த  எனக்கு
சட்டென ஒரு யோசனை .
வீட்டிற்குள்  ஓடி
சர சரவெனக்
காகிதங்களைக் கிழித்து
சிறிதும்  பெரிதுமாய்
சில கப்பல்கள்  செய்து
மிதக்கவிட்டேன்
அக் கிடைமட்ட அருவியில்.
நீரோட்டத்தின் திசையில்
ஒன்றையொன்று  விலகி
மூழ்கிவிடாமல்  பயணிக்கும்
அந்நிகழ்வை
விழிகள் விழுங்கிய  அதேநேரம்
மிக  அழகாய்  மிதந்துபோனது
இதுவரை நான் செய்திடாத
ஒரு  கப்பலாய்
“நீர்க்குமிழி”.
******************
பள்ளி முடிந்து
ஒட்டிய வயிற்றோடு
 வீடு திரும்பிய
 மாலைப்பொழுதொன்றில்
பருவமெய்தி
அறுப்பிற்குத் தயாராகி நின்ற
கம்புப் பசுங்கதிர்கள்
சிலவற்றை  இணுங்கி
புத்தகப்பையுள்  பத்திரப்படுத்தினேன்.
வீடடைந்ததும்
முற்றத்து விறகடுப்பில்
அக்கதிர்களைத் தீயிலிட்டு வாட்டும்போதுதான் கவனித்தேன்.
அந்தியின் ஆகாசப் பறவைகளாய்
இப்போது  இருள்கிழித்துப்
பறக்கத் துவங்கியிருந்தன
“அக்கினிக் குஞ்சுகள்”
**************************
நீ சுகித்த
என் இதழ்கள்
அறுசுவையெனும் பொய்யினை
இன்னொரு முறை
சொல்லிப்போ.
ஆனால்
இம்முறை
இன்னும் வன்முறையாய்.
*****************************
Series Navigationகாதலி இல்லாத உலகம்.