பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போராட்டங்கள் – சிறைவாழ்க்கை

author
4 minutes, 9 seconds Read
This entry is part 3 of 14 in the series 19 மே 2019


ஜெ. மதிவேந்தன்

(சிறு குறிப்புகள்)

            ஓர் உயிர் வாழ வேண்டுமெனில் தினம்தினம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். போராட்டமே வாழ்க்கையைக் காலங்கடந்து எடுத்துச் செல்லும். பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வடிவங்கள் தான் மாறுபடுகின்றனவே ஒழிய, போராட்டம் என்பது ஏதோ ஒரு இலக்கை நோக்கியே பயணிக்கிறன. இதில் வெற்றி, தோல்வி என்பதையும் காலம், சூழல், இlk; போன்ற பல்வேறு காரணிகளே தீர்மானிக்கின்றன. அந்தவகையில், தமிழில் பல ஆளுமைகள் போராட்டத்தினூடாகவே தங்களுடைய இலக்கினையும் நோக்கத்தினையும் கொள்கைகளையும்  கோட்பாடுகளையும் அடைந்துள்ளனர்.

            பாவலரேறு பெருஞ்சித்திரனார்  தம் வாழ்நாளில் பல்வேறு போராட்டங்களையும் அதனூடான சிறைவாசங்களையும் அனுபவித்துள்ளார். மொழிக்காகவும் நாட்டிற்காகவும் இனத்திற்காவும் அயராது உழைத்தவர்.  இதனைப்  பல்வேறு சான்றுகளின் வழியாகக் கண்டுணரலாம். 1978-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டினை முன்னிறுத்தி அக்கால முதலமைச்சரான எம்.ஜீ.ஆர் அவர்கள் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை  அனைவரும் ஏற்று, பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சி இயக்ககச் சார்பில், இந்த  அறிவிப்பு  வெளிப்பட்டது. ஆணை எண் : 1875/ 19.07.1978   

              இக்குழுவின் தலைவராகத் திரு. மே.வீ வேணுகோபால் அவர்களும் குழு உறுப்பினர்களாகக் கா. அப்பாத்துரையார், பாவாணர், பாவலரேறு உட்பட பதிமூன்று பேர் இருந்தனர். இக்குழுவின் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள  அரசு ஆவணக் காப்பகத்தில் நடைபெற்றது. அக்குழுக் கூட்டத்தில் தமிழின் சில எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்தனர். அதில் ஐ-அய் என்றும் ஒள-அவ் என்பது போன்ற நால்வகையான சீர்திருத்தங்களைப் பாவாணரும் பாவலரேறும் முழுமையாக மறுத்தனர். இவ்வெழுத்துச் சீர்திருத்தங்களின் கேடுகளை விளக்கி, தென்மொழி இதழியில் சுவடி-15, ஓலை- 5,6-இல் பாவலரேறு கடுமையான ஆசிரியவுரைகளை எழுதினார்.

            பாவாணரும் பாவலரேறும் எழுத்துச் சீர்திருத்தம் என்பதை விட, மொழிச் சீர்திருத்தமே முதன்மையானது என எண்ணினர். ஐ, ஒள ஆகிய உயிர் எழுத்துக்களை மாற்றுவதால் ஏற்படும் கேடுகளைச் சுட்டிக்காட்டி விளக்கமாகத் தென்மொழி இதழில் எழுதியதன் விளைவாக ஐ, ஒள தவிர்த்து, மற்ற எழுத்துகள் சீர்திருத்தம் பெற்றன. தமிழக அரசு ஐ, ஒள  என்ற எழுத்துக்களுக்குரிய அரசாணையை மட்டும் திரும்பப் பெற்றுக்கொண்டது. அரசாணை எண் : 4704/த.1/79-2   23.05.1979  இவ்வாறு பாவாணருடன் பாவலரேறும் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டார்.

            இந்தி எதிர்ப்பு, மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு போன்ற மொழிப் போராட்டங்களுக்குப் பாவலரேறு தம் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்தி எதிர்ப்புக்காகப் போராடிய வேளையில் அவரின் கருத்துகள் அனைவராலும் உற்றுநோக்கிக் கவனிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் இந்தி எதிர்ப்பு என்பதினை விட, இந்திய அரசுக்கு எதிர்ப்பு என்பதே முக்கியம் என்பதைக் கடுமையாக வலியுறுத்தினார். அவற்றை அவரின் கூற்றிலிருந்து காணலாம்.

            நம்மைப் பொறுத்தவரையில் இந்தியெதிர்ப்பு என்பதைவிட இந்திய அரசுக்கு          எதிர்ப்பு என்பதே முழுப்பொருளும் தேவையும் பொருத்தமுடையதாகவும் கருத           வேண்டியிருக்கிறது. நம் நாட்டுத் தலைவர்களுக்கு ஏதாவது அன்றாடம் அரசியல்         போராட்டம் நடந்து கொண்டிருக்க வேண்டுமே! என்ன செய்வது.

                                                                                                (வாழ்க்கைச் சுவடுகள்; ப. 251)

 இந்தி எதிர்ப்பினையும் இந்திய அரசுக்கான எதிர்ப்பினையும் நம்மின் அரசியல் தலைவர்களின் போராட்டங்கள் குறித்த மனநிலையினையும் தெளிவாக வெளிப்படுத்துகிறார். 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தென்மொழி இதழின் ஆசிரியவுரையில் தி.மு.க கட்சி நடத்திய ‘இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி’ மாநாட்டினையொட்டி எழுதிய கருத்துகளே மேற்கண்டவையாகும்.

            1963-ஆம் ஆண்டு பிரிவினைத் தடைச் சட்டத்தினை, இந்திய அரசு 16-ஆவது சட்டத்திருத்தமாகக் கொண்டு வந்தது. தனித்தமிழ் நாடு கோரிக்கையை முன்னெடுத்த பாவலரேறு கடுமையாக அடக்குமுறைக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளானார். 1963-1970 வரையிலான காலக்கட்டத்தில் தென்மொழியில்; பிரிவினைத் தடைச்சட்டம், தனித்தமிழ் நாடு, தமிழகம் பிரிதலே தக்கது, பிரிவினை நோக்கித் தள்ளப்படுகிறோம், விடுதலை பெறுவது முதல் வேலை, தமிழகப் பிரிவினைத் தேவையே போன்ற தலைப்புகளில் ஆசிரியவுரை எழுதியதால் அரசின் கண்டிப்புக்கும் பல்வேறு சட்ட சிக்கலுக்கும் ஆளாகினார். 1985-சூன் 7-ஆம் நாள் தமிழகப் பிரிவினைத் தடைச் சட்ட எதிர்ப்புப் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதித்து, கூட்டம் நடத்தவிடாமல் செய்தது தமிழக அரசு. தமிழகம் இந்தியாவிலிருந்து பிரியாமல் இருக்குமானால் பல்வேறு கேடுகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும் என்று அதில் விளக்கியிருந்தார். அவற்றுள்

 • தமிழ்மொழியின் இலக்கண, இலக்கியங்கள் அழியும்
 • குல,சமயப் புரட்டுகள் என்றைக்கும் அகலா
 • சமசுகிருதம் தலையெடுக்கும்
 • தமிழினம் மேலும் சிதறுண்டுப் போகும்
 • இந்தியை விலக்கவே முடியாது. (என்றைக்கேனும் ஒருநாள் ஏற்க வேண்டியே தீரும்.)                                                                         ( மேலது; ப. 265) 

இதுபோன்று பத்து வகையான காரணங்களை முன்னிறுத்தி விளக்குகின்றார். அக்காரணங்கள் இன்றைய சூழலுக்கும் மிகப்பொருத்தமானதாகவே அமைந்துள்ளது. இதனை முன்கூட்டியே சிந்தனைச் செய்து, கருத்துகளை முன்வைத்துள்ளார் பாவலரேறு.

            இதோ நான் ஒருவன் இருக்கின்றேன்

            என்னைச் சிறை செய்யினும் செய்க!

            ஈழத் தமிழரை ஆதரிக்கின்றேன்!

            என் தலை கொய்யினும் கொய்க!                                            (மேலது. ப. 277)

1991-ஆம் ஆண்டு, தடாச் சட்டம் வீறுகொண்டு செயல்பட்ட வேளையில் தம் உணர்வுகளை எழுச்சியுடன் வெளிப்படுத்தினார். 1992-ஆம் ஆண்டு தனித்தமிழ் நாடு கோரிக்கை மாநாட்டினை நடத்த திட்டமிட்டுருந்தார். ஈழப்போராட்டத்தின் விளைவாகவும் தடாச் சட்டத்தின் காரணத்தினாலும் இம்மாநாடு நடைபெறாமல் நின்றது. தனித்தமிழ் நாடு கோருபவர், பிரிவினையை ஏற்படுத்துபவர் போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பாவலரேறு சிறைப்படுத்தப்பட்டார். தடா சட்டத்திலும் மிசா சட்டத்திலுமாகச் சிறை வாழ்வை வாழ்ந்தவர். கடலூரில் வசித்து வந்தபோது மிசா சட்டத்தின்கீழ் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் தி. இலட்சுமி நாராயணன் அவர்களின் ஆணையின்பேரில் 1971- உள்நாட்டுப் பாதுகாப்பு நிலை நிறுத்தல் சட்டம் (நடுவச் சட்டம் – 26/1971 3/(2) ) பிரிவிலும் 3 (1) அல்லது (2) 1975-இல் பாதுகாப்பு நிலை நிறுத்துதல் (திருத்தச் சட்ட எண் 39/1975)  ஆகிய பிரிவுகளில்  பாவலரேறு கைது செய்யப்பெற்றார்.

            ஈழப் போராட்டத்திற்கும் ஆதரவாகவும் தனித்தமிழ் நாடு கோரிக்கையை வலியுறுத்தியும் தமது தமிழ்நிலம் இதழில் பாவலரேறு தொடர்ந்து எழுதி வந்தார். அதில் “இந்திய அரசு தடை செய்தது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அன்று. தமிழின ஒட்டுமொத்த முன்னேற்றத்தையே” (தமிழ்நிலம் இதழ் எண்-156.)  என்று மே மாத இதழியிலும் “தனித்தமிழ் நாடு உருவாவதை எவராலும் தடுக்க இயலாது” (தமிழ்நிலம் இதழ்-159.)  என்று அக்டோபர் மாத இதழியிலும் மேற்கண்ட பதிவுகளைக் காணமுடிகிறது. அதோடு ஈழமறத்தி தணுவின் செயலைப்  பாராட்டி இதழ் வழியாகவும் மேடைகளிலும் எழுத்திலும் தொடர்ந்து பேசியதால், 1991-ஆம் ஆண்டு தமிழகக் காவல்துறை கைது செய்து 15 நாள் சிறைத் தண்டனையும் 10 நாட்கள் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கையொப்பமிட  கட்டாயப்படுத்தப்பட்டார்.

            இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவால், தமது இந்திய  அஞ்சல் துறைப் பணியிணையும் சிறைத் தண்டனையும் அனுபவித்து வாழ்ந்தவர் பாவலரேறு 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலத்தைக்  கண்டித்து தென்மொழியில் ஆசிரியவுரை எழுதியதால் வேலூரில் சிறைத் தண்டனைப்பெற்றார். 1986-ஆம் ஆண்டு தென்மொழி, தமிழ்நிலம் ஆகிய இதழ்களில் வெளியான தமிழகப் பிரிவினைக் குறித்தச் செய்திகளைச் சுட்டிக்காட்டி இந்திய அரசு பாவலரேறு மீது பன்னிரண்டு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எச்சரிக்கைச் செய்து அனுப்பியது. தமிழ்நாடு இளைஞர் பேரவையும் தமிழ்நாடு மாணவர் பேரவையும் இணைந்து வேலூரில் நடத்திய விடுதலைப் புலிகள் அங்கீகரிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பாவலரேறு சிறைப்பட்டார்.

            1981-ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழ்நாடு மதுரையில் நடைபெறவிருந்த சூழலில் முதலில் மாநாட்டில் கலந்துகொள்ள பாவலரேறுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பாவலரேறு தமிழகப் பிரிவினைக்கு வழிவகுக்கும் தனித்தமிழ் நாடு கோரிக்கையை முன் வைப்பதாலும் ‘மிசா’ சட்டத்தில் சிறையில் இருந்தார் என்பதாலும் ஐந்தாவது உலகத் தமிழ்மாநாட்டில் பாவலரேறு பங்கேற்க அனுப்பியிருந்த அழைப்பினைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். இச்செயலினைக் கண்டித்து தென்மொழி இதழியில் கடுமையான ஆசிரியவுரை ஒன்றை எழுதினார். அதோடு பாவலரேறு நீக்கப்பட்டதைக் கண்டித்து மாநாட்டில் மாநாட்டு அரங்கில் கண்டன துண்டறிக்கைகளை அச்சிட்டு வழங்கினர். இதன் காரணமாகவும் பாவலரேறு கைது செய்யப்பட்டார். அதோடு நள்ளிரவு – 2 மணி அளவில் பாவலரேறுவின் வீடு, அச்சகம் உள்ளிட்ட இடங்களைக் காவல் துறையினர்  ஆய்வுச் செய்தனர். அக்கால, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் எனப்படும் ம.கோ.இராமச்சந்திரன் ஆவார்.

            1965-ஆம் ஆண்டு ‘காங்கிரஸ் சிதைக’ என்று எழுதிய காரணத்தினால், அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் கடுங்கோபம் கொண்டு 55 – நாட்கள் வேலூர் சிறையில் அடைத்தார். இதுதான் பாவலரேறுவின் முதல் சிறை வாழ்க்கை என்கின்றனர். அப்போது வயது 32 அடைந்திருந்தார். இதுபோன்று தம் இளவயது தொடங்கி, இறக்கும் தருணம் வரை போராட்டத்துடனும் சிறை வாழ்வினூடாகவும் தம் வாழ்வினை வாழ்ந்து, சிறப்பித்தவர் பாவலரேறு.

அறிஞர்களின் பார்வையில்

            பாவலரேறு பற்றி பல்வேறு அறிஞர்களும் ஆய்வாளர்களும் சக இயக்கத் தோழமை நண்பர்களும் எதிர்நிலைப்பட்ட ஆளுமைகளும் கருத்துகளையும் முரண்களையும் முன்வைத்தனர். பொதுவாழ்விற்கு வந்துவிட்ட பிறகு கருத்திற்கும் விமர்சனத்திற்கும் அனைவரும் உட்பட்டே நடத்தல் வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அவ்வடிப்படையில், பாவலரேறு பற்றி பொதுவுடமைக் கட்சியின் சார்பு இதழான  ‘சாந்தி’ இதழியில், 1984-இல் வெளியான கருத்து பின்வருமாறு

            தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த காலத்தில் ‘தனித்தமிழ்’                        கோஷத்துடன் அறிமுகமானவர் இந்த நபர். இவருடைய தனித்தமிழ் மிகவும்               கொடுரமானது. பண்டிதர்களையே திணற வைக்கக் கூடியது. ………… ………….             ………….. ………. …………… …………. ………….  ……….. இந்தக் கழகமும் அதன்            தலைவர் பெருஞ்சித்திரனாரும் அவரது கூட்டாளிகள் அனைவருமே வடிகட்டிய         சோவியத் எதிர்ப்பாளர்கள்                        (மேலது; ப. 271)

என்று கடுமையான விமர்சனத்தைப் பொதுவுடமை இயக்க இதழும் அதன் சார்பாளர்களாளும் அக்காலக்கட்டத்தில் பாவலரேறு மீது வைத்தனர். இதுபோன்று சில எதிர்வினைகள் இருந்தாலும் நல்வினைகளும் உண்டு. அவை பாவலரேறுவின் இலக்கியச் செயல்பாட்டினை மதிப்பிடும் கவிஞர் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்,

            பாரதிதாசனைப்

            பாதிபாதியாய்ப் பங்கிட்டால்

            ஒருபாதி பெருஞ்சித்திரன்

            மறுபாதி சாலை இளந்திரையன்.        (ஈரோடு தமிழன்பன்: 2003;13).

எனத் தம்முடைய  “இவர்களோடும் இவற்றோடும்” எனும் நூலில் பெருஞ்சித்திரனாரி செயல்பாட்டினைத் திறனாய்வுச் செய்துள்ளார். அதேபோல், மக்கள் கவிஞர் பாவலர் இன்குலாப் அவர்கள் தமிழின் நிலைக் குறித்தும் பாவலரேறுவின் மொழிப்பற்று குறித்தும் விவரிக்கும் பதிவுப் பின்வருமாறு

            சான்றோர் அவைகளில்

            இருந்தே தனித்தமிழ்

            ஒடுக்கப் பட்டோருக்கு

            ஒட்டாது இருந்தது

            ………. ………….

            பெருஞ்சித்திரனார்

            பேசிய தமிழோ

            ஒடுக்கப் பட்டோரின்

            உள்ளத்தைத் தொட்டது.                                 (ஜெ. மதிவேந்தன்; 2016:76).

இவ்வாறாக, பாவலரேறு பெருஞ்சித்திரனார் பல்வேறு அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் கண்டு உணரப்பட்டு வந்துள்ளார். அதுகுறித்து, விரிவாக ஆராயப்பட வேண்டிய தேவை தமிழ்ச்சமூகத்தின் முன் உள்ளது.

தொகுப்பாக

            துரை. மாணிக்கம் என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மொழி, இனம், நாடு எனப் பற்றுக்கொண்டு, தமது நூல்கள், இதழ்கள், போராட்டங்கள், சிறைவாழ்வு வழியாகத் தமிழ் உலகிற்கும் தமிழினத்திற்கும் பல்வேறு அரும்பணிகளைச் செய்துள்ளார். ஈழப்போராட்டம், இந்தி எதிர்ப்பு, மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, தனித்தமிழ் நாடு கோரிக்கை எனப் பல தளங்களில் முன்னின்று நடத்திய பெருமைக்கும் பேறுக்கும் உரிமை உடையவர். இவரது பணியினை மதிப்பீடு செய்வதென்பது கடலில் சிறுதுளியைச் சுவைத்துப் பார்ப்பதற்கு இணையானதே. பாவலரேறுவின் கருத்துகள் அனைத்துச் சூழ்நிலைக்குப் பொருந்துவனவாக அமைந்திருக்கின்றன. இது இவரின் மிகப்பெரிய பலமாகும்.

பார்வை நூல்கள்

*
 • பொழிலன் மா., பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்க்கைச் சுவடுகள், மன்பதைப் பதிப்பகம், 2016.
*
 • மதிவேந்தன் ஜெ., பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்களின் யாப்பமைதி, நெய்தல் பதிப்பகம், 2016.
*
 • பாவலரேறு பெருஞ்சித்திரனார்., திருக்குறள் மெய்ப்பொருளுரை, தென்மொழி பதிப்பகம், 2006.
*
 • பாவலரேறு பெருஞ்சித்திரனார்., இட்ட சாவம் முட்டியது, தென்மொழி பதிப்பகம், 1998.
*
 • ஈரோடு தமிழன்பன்., இவர்களோடு இவற்றோடும், விழிகள் பதிப்பகம், 2003.

இதழ்கள்

 • தென்மொழி
 • தமிழ்நிலம்
 • பாவலரேறு முதலாமாண்டு நினைவு மலர் – 1996.

பின்னிணைப்பு

 • எழுதி முடிக்கப் பெறாத நூல்கள்
 • சிங்கை – மலையகச் செந்தமிழ்ச் செலவு – 1974
 • என் இலங்கைச் செலவு – 1978
 • திருக்குறள் மெய்பொருளுரை -1993
 • என் இயக்கம் பற்றிய சில வினாக்கள் -1968
 • என்னைப் பற்றி நானே கேள்விப்படுவது -1982
 • அறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு – 1964
 • ஒருவழிச் செலவு  கதை – 1965
 • வேத மத இந்தியா – 1977
 • நம் இயக்கத்தின் உண்மை நிலைகள் – 1981
 •  ஐந்து நாடுகளில் ஐம்பது நாள் – 1983
 •  மொழி, இன, நாட்டுக்குழைக்கும் பொதுத் தொண்டர்களுக்கு – 1985-1986
 •  இந்தியாவில் எடுத்த எடுப்பில் பொருளியல் புரட்சியை உருவாக்க முடியுமா? –  1987
 •  தமிழரசன் தம்பிகளுக்கு  – 1988
 •  தாறுமாறான தமிழியக்கங்கள் – 1975
 •  தமிழறிஞர்களின் தமிழ்ப்பணி – 1994 – 1995.
 • எழுத எண்ணி எழுதாமல் போன நூல்கள்
 • பாவனம் எனும் செய்யுள் – 1961
 • நொச்சி மனம் – 1961
 • தேய்பிறை – 1961
 • கள்ளி மலர் – 1961
 • சொற்களின் தொகுப்பு – 1962
 • இரண்டு கனவுகள் – 1976
 • தாத்தாவின் நாய்
 • குயப்பெண் கதை
 • பாவாணர் வாழ்க்கை வரலாறு
 • மெய்பொருள் விளக்கம்.

(குறிப்பு:         அரிய குறிப்புகளைத் தந்துதவிய, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இளைய மகன்                                       ம. பொழிலன் அவர்களுக்கு நன்றி.)

ஜெ. மதிவேந்தன்

முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை – 600 005

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019விருதுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *