9. தேர் வியங்கொண்ட பத்து

This entry is part 1 of 7 in the series 24 நவம்பர் 2019

                

      தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கும்  ஆசையால் அவன் தேர்ப்பாகனிடம் இன்னும் விரைவாகச் செலுத்துமாறு பணிக்கிறான். இப்படி அவன் தேர்ப்பாகனிடம் கூறும் பத்துப் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. வியங்கொள்ளுதல் என்பது தேரினைச் செலுத்தும் செயலிலிலே விரைவைக் கொள்ளுதல் என்னும் பொருளைத் தரும்.

=====================================================================================

1.சாய்இறைப் பணைத்தோள், அவ்வரி அல்குல்,

சேயிழை மாதரை உள்ளி, நோய்விட

முள்ளிட்டு ஊர்மதி, வலவ! நின்

புள்இயற் கலிமாப் பூண்ட தேரே.

      [சாய்=வளைந்த; இறை=சந்து; பணை=பருத்த; அல்குல்=அடிவயிறு; உள்ளி=நினைத்து; சேயிழை=செம்மையான அணிகலன் அணிந்தவள்; மாதரி=தலைவி; முள்ளிட்டு=தாற்றுக்கோலின் ஆணி, வலவ=பாகனே; புள்இயல் கலிமா=பறவை போல விரைவாகச் செல்லும் குதிரை]

      போன வேலையை முடிச்சுட்டு அவன் திரும்பி தேரில வரான். அப்பத் தேர்ப் பாகன்கிட்ட தேரை வேகமா ஓட்ட சொல்ற பாட்டு இது.

      ”பாகனே! வளைந்த சந்து இருக்கற பருத்த தோள்கள் கொண்டவ அவ. ரொம்பச் சிறந்த நகையெல்லாம் போட்டுக்கிட்டிருப்பா. அழகிய வரியெல்லாம் இருக்கற அடிவயிறு அவளுக்கு இருக்குது. அவளயே நெனச்சுக்கிட்டு இருக்கற என்னோட நோய் தீரும்படிக்கு பறவையைப் போல வேகமாப் போகக்கூடிய குதிரைகள் பூட்டியிருக்கற தேரில இருக்கற குதிரைங்களை தாற்றுக்கோலால் தீண்டி வேகாமா ஓட்டு.”

=====================================================================================2.தெரிஇழை அரிவைக்குப் பெருவிருந்து ஆக

வல்விரைந்து கடவுமதி பாக! வெள்வேல்

வென்றுஅடு தானை வேந்தனொடு

நாள்இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே!

      [தெரி=தேர்ந்தெடுக்கப்பட்ட; அரிவை=தலைவி; வெள்வேல்=வெள்ளிய வேல்; கடவுமதி=செலுத்துக; அடு=போரிடுகி ன்ற; வென்று=வெற்றி பெற்று; 

 தானை=சேனை; சேப்பின்=தங்கினால்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும். அவன் சொல்றது.

“பாகனே! வெள்ளிய வேல வச்சிருக்கற அரசனோட படையிலச் சேந்து சண்டைக்குப் போய்த் திரும்பறேன். வழியில் ஒருநாள் நான் தங்கிட்டாலும் அது ரொம்ப நாளா மாறி  நல்ல நகையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கற அவளை வருத்தும். அதால நான் சீக்கிரம் போய்ச் சேர நீ தேரை வேகமா ஓட்டு.”

================================================================================     

3. ஆறு வனப்புஎய்த அலர்தா யினவே;

வேந்து விட்டனனே; மாவிரைந் தனவே

முன்னுறக் கடவுமதி, பாக

நல்நுதல் அரிவை தன்நலம் பெறவே.

      [ஆறு=வழி; வனப்பு அழகு; அலர்=மலர்; வேந்து விட்டனன்=அரசன் சினம் தவிர்ந்தனன்; தாயின=வீழ்ந்து பரந்தன; மா=குதிரை; முன்னுற=அவற்றுக்கு முன்னாகச்  சென்றடையுமாறு]

      இதுவும் போன பாட்டு மாதிரிதான் அவன் சொல்றது.

”பாகனே! போற வழியிலெல்லாம் அழகா இருக்கற மாதிரி மரமெல்லாம் பூத்திருக்கு. நம்ம அரசனும் சண்டையில வெற்றி பெற்றான். அதால கோபத்தை உட்டுட்டான். ஊட்டுக்குப் போறவங்கக் குதிரையெல்லம் வேகமாப் போகுதுங்க. அழகான என காதலி பிரிவால விட்டிருந்த பழைய அழகை மறுபடியும் அடையறதுக்காக அந்தக் குதிரையெல்லாம் போய்ச் சேர்றதுக்கு முன்னாடி போற மாதிரி தேர்க்குதிரைங்கள வேகமா ஓட்டு.”

=====================================================================================

4. வேனில் நீங்கக் கார்மழை தலைஇ,

காடுகவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து

கடிய கடவுமதி, பாக!

நெடிய நீடினம். நேரிழை மறந்தே.

      [வேனில்=வேனில் பருவ வெம்மை; தலைஇ=தோன்றி; கவின்=அழகு; கொண்டற்று=கொண்டது; பாடு=பெருமை; நெடிய=நெடுங்காலம்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும். அவன் சொல்றது.

“பாகனே! வேனிற்கால சூடு போயிடுச்சு. கார்காலம் வந்திடுச்சு. மழைபெய்யுது. அதாலக் காடெல்லாம் அழகா இருக்கு. நல்ல நகையெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கற அவள மறந்துட்டு ரொம்ப நாளு தங்கிட்டோம். அவளப் போயிச் சீக்கிரம் பாக்கறதுக்குத் தேரை வேகமா ஓட்டு.”

====================================================================================

5. அரும்படர் அவலம் அவளும் தீரப்,

பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க,

ஏமதி வலவ! தேரே

மாமருண்டு உகளும் மலர்அணிப் புறவே.

      [அரும்படர்=பெரிய துன்பம்.; மருண்டு=அஞ்சி; மா=மான்கள்; உகலும்=துள்ளிக் குதித்து ஓடும்; புறவு=முல்லை நிலம்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

“பாகனே! ரொம்ப வருத்தத்தால் அவ அடைஞ்சிருக்கற துன்பம் போகவும், அவளோட பருத்த தோளெல்லாம் பழையபடி அழகா இருக்கவும்,நான் அவகிட்டக் கூடி இருக்கவும் இந்த மானெல்லாம் பயந்துக்கிட்டு ஓடற முல்லை நெலத்துல வேகமாத் தேர ஓட்டு.”

=====================================================================================

6.பெரும்புன் மாலை ஆனாது நினைஇ

அரும்படர் உழத்தல் யாவது? என்றும்

புல்லி ஆற்றாப் புரையோள் காண

வள்புதெரிந்து ஊர்மதி, வலவ!நின்

புள்இயல் கலிமாப் பூண்ட தேரே.

      [ஆனாது=இடைவிடாது; பெரும்புன்மாலை=பெரிய துன்பத்தைத் தருகின்ற மாலை; புல்லி=கூடி; புரையோள்=உயர்ந்தோள்; வல்பு=கடிவாளம்; உழத்தல்=வருந்துதல்; புள்=பறவை; கலிமா=விரைவாகச் செல்லும் குதிரை]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

      ”பாகனே! பெரிய துன்பத்தைத் தர்ற இந்த மாலைக் காலத்துல எப்பவும் என்னை நெனச்சுக்கிட்டு வருந்தற அவ இனிமே வருந்தக்கூடாது. என்னைக் கட்டித் தழுவினா இன்பம் அடையற அவள இன்னிக்கே நான் போய்ப் பாக்கும்படிக்கு கனைச்சுக்கிட்டிருக்கற குதிரையோடக் கடிவாளத்தைப் புடிச்சு வேகமா ஓட்டு.”

=====================================================================================7. இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;

செறிதொடி உள்ளம் உவப்ப,

மதியுடை வலவ ஏமதி தேரே.

      [ஏமதி=செலுத்த; உள்ளும்=நினைக்கும், செறிதொடி=அழகான தொடி; தொடி என்பது தோளில் அணியும் நகை;]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

“பாகனே!இந்தப் பொழுதுதான் பிரிஞ்சிருக்கறவங்க ஒருத்தரை ஒருத்தர் நெனச்சு வருந்தற பொழுதாகும். அதால நல்ல அழகான தோள்நகை போட்டுக்கிட்டிருக்கற அவளோட மனசு மகிழ்ச்சி அடையற மாதிரி நான் இன்னிக்கே ஊருக்குப் போய்ச் சேர்றதுக்கு தார வேகமா ஓட்டு.”

=====================================================================================

8. கருவி வானம் பெயல் தொடங்கின்றே;

பெருவிறற் காதலி கருதும் பொழுதே;

விரிஉளை நன்மாப் பூட்டிப்

பருவரல் தீரக் கடவுமதி தேரே.

      [கருவி=இடி, மின்னல் போன்றவை; வானம்=மேகம்; பெயல்=மழை; விரிஉளை=தலையாட்டம்; மா=குதிரை; பருவரல்=துன்பம்; கடவுமதி=செலுத்துக]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

“இடிமின்னலோட மேகம் மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. பெருமை உள்ள என் காதலி என்னை நெனச்சு வருந்தற பொழுது இதுதான். அதால அவ வருத்தம் தீர்றதுக்காக சீக்கிரம் போய்ச்சேரணும். அதுக்காக தலையாட்டம் உள்ள நல்ல குதிரைகளைப் பூட்டித் தேர வேகமா ஓட்டு.”

====================================================================================

9. அஞ்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப,

மென்புல முல்லை மலரும் மாலை,

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,

நுண்புரி வண்கயிறு இயக்கி,நின்

வண்பரி கடுந்தேர் கடவுமதி, விரைந்தே.

      [அரியினம்=வண்டு; மென்புலம்=காட்டுப் பகுதி;தையல்=தலைவி; நுண்புரி வண்கயிறு=நுண்ணிய பல புரிகளைச் சேர்த்து முறுக்கியமைத்த வலிய கயிறு; உவப்ப=மகிழ; பையுள்=துன்பம்; கடவுமதி=செலுத்துக; வண்பரி=வளமான குதிரை]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்

“பாகனே! அழகான சிறகு இருக்கிற வண்டெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டு மொய்க்கிற முல்லைப் பூவெல்லாம் இந்த மாலைப்பொழுதிலப் பூத்திருக்குங்க. அவ வருத்தம் இருக்கற மனசை வச்சிருப்பா. அவள் மகிழ்ச்சி கொள்ளற மாதிரி வலுவான இந்தக் கயித்த இயக்கி வேகமாப் போகற குதிரைகள் பூட்டிருக்கற தேர வேகமா ஓட்டு.

=====================================================================================10. அந்தீங் கிளவி தான்தர, எம்வயின்

வந்தன்று மாதோ காரே ஆவயின்

ஆய்தொடி அரும்படர் தீர

ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.

      [தீம்=இனிமை; கிளவி=சொல்; எம்வயின்=எம்மிடம்; அரும்படர்=பெரிய துன்பம்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவௌம்.

“பாகனே! அழகா இனிமையா பேசற அவக்கிட்ட நான் சீக்கிரம் போய்ச் சேர்றதுக்கான கார்காலம் இதோ வந்திடுச்சு. நல்ல தோள்நகை போட்டுக்கிட்டு இருக்கற அவளோடப் பெரிய துன்பம் தீர்றதுக்காக அழகான மணியெல்லாம் இருக்கற ஒன் பெரிய தேரை வேகமா ஓட்டு.”

==========================================================================================================================================================================

Series Navigationபேச்சாளர்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *