முல்லைஅமுதன் ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் ஏ.ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை. வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது. நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில் மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது. சுந்தரர் இல்ல போட்டி நாடகமான 'மூன்று துளிகள்' கலைஞர் (அமரர்)நற்குணசேகரன் (1933 - 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில் தன் அரச பதவியே இராஜினாமச் செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை அரங்கேறிய அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் லிபர்ட்டி பிலிம்ஸாரின் 'உறங்காத உள்ளங்கள்' திரைப்படத்தை ஆரம்பித்து அதற்கான சில காட்சிகளும் படமாக்கப்பட்ட சூழலில் அது தொடரமுடியாது போனது.…