வீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 12 in the series 5 செப்டம்பர் 2021

 

 

 

வேல்விழி மோகன்

அந்த இடத்திலிருந்து நழுவி வாடகைக்கு வீடு பார்த்தே ஆவது என்று கிளம்பியபோது அப்பா தடுத்து “கிணறு இருக்கனும்..” என்றார் மறுபடியும்..

“பாத்துக்கலாம்பா..”

“பாத்துக்கலாம் இல்லை.. கிணறா இருக்கற மாதிரி பாத்துக்கோ..” 

“சரிப்பா..”

“அப்படியே ரண்டு பெட்ரூமு இருக்கனும். அப்பறமா கிணறு..”

“அதை சொல்லிட்டீங்க..”

“ஆமா.. அப்பறமா அக்கம் பக்கத்துல பசங்க யாரும் இருக்கப்படாது..”

“சரி..”

“அந்த தெருவுல டீக்கட இருக்கான்னு பாத்துக்க. பக்கத்துல ரோட்டுல எங்கேயும் ஒயின்ஷாப்பு இருக்கப்படாது”

“அது எங்கேயாச்சும் அந்த ஏரியாவுல இருக்கும். அது பாட்டுக்கு அது. நாம பாட்டுக்கு நாம..”

“முடியாது.. அதெல்லாம் ஒத்துக்கு முடியாது..”

“சரி.. சரி. அப்பறம்..?”

“அம்புட்டுதான். கெணறு இருக்கற மாதிரி பாத்துக்க..” என்று மறுபடியும் சொல்லி இவன் அந்த நகரத்தின் ஓரங்களில் ஆரம்பித்து இடுக்குளில் வலம் வந்து ஏதும் திருப்தியில்லாமல் காய்கறி மார்க்கெட்டில் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது மறுநாள் அதே இடத்தில் அந்த பாட்டி ஒரு ஆளை அறிமுகப்படுத்தி அந்தாள் “எம் பேரு குணாங்க.. சேத்துப்பட்டி பக்கம் நீங்க சொன்னா மாதிரி இருக்குது. போயி பாத்துடலாங்களா..?”

“ஒயின்ஷாப்பு பக்கமா இல்லையே..?”

“அது கிடக்கதுங்க பைபாஸ்ல..”

“அங்கிருந்து எவ்வளவு தூரம்..?”

“அது கிடக்கதுங்க ரண்டு கிலோ மீட்டரு தாண்டி. அதுக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தமில்ல,,”

“பாக்கலாமுங்க” என்று அந்த இடத்துக்கு போனபோது அது பெரிய மைதானத்துக்கு பக்கத்தில் இருந்தது. அந்த மைதானம் அந்த பகுதிக்கு அழகாக இருப்பதாக தோன்றியது. நடுவில் அழகாக கோடுகள் போட்டு கொடிகள் நட்டு ஓரங்களில் பேனர் வைத்து “சாமி நகர்” பெயரில் விளம்பத்தில் “வாரீர்” காட்டி வரவேற்பில் ஆப்பர் என்று தங்கக்காசு போட்டு ஏழெட்டு வரிசைகளில் ஜிமிக்கி வரைக்கும் பரிசு சொல்லி கட்டம் கட்டியிருந்தார்கள். அதை தாண்டி இடதுபுறம் திரும்பி புது வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்தில் அந்த திருஷ்டி பொம்மை அளவில் ஆச்சரியப்பட்டு திரும்ப பார்த்தபோது அதற்கு எதிரில் மூடியிருந்த வீட்டை காட்டி “இதுதாங்க..” என்ற அந்தாள் இறங்கி “நல்ல ஏரியாங்க இது.. டௌனு இன்ஸ்பெக்டரு கூட இங்கதான் குடியிருக்காரு..”

“அது கெடக்கது. திறந்து காட்டுங்க”

“காட்டிக்கலாங்க. ஆனா ஒரு நிமிசம்” என்றபோது இவன் மறுபடி திரும்பி தொங்கிக்கொண்டிருந்த அந்த திருஷ்டி பொம்பையின் வாயில் சிவப்பு நிறத்தை பார்த்து “அது என்னாங்க வாயில சிவப்பா..?”

“பொட்டுங்க.. குங்குமம்.. எடுத்து அப்பியிருக்காங்க..”

“ரத்தம் மாதிரி தெரியுது..”

“கண்ணு படக்கூடாது பாருங்க.. அதுக்குதான்..” என்ற அந்த ஆள் வேகமாக வீட்டை நெருங்கி வேகமாக கேட்டை திறந்து வேகமாக கதவை திறந்தபோது அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் “மெல்லமா குணால் சார்..”

“குணால் இல்லீங்க.. குணா..” என்ற அவன் “இங்க பாருங்க.. பெரிய இடம் சுத்திலும்.. ரண்டு பெட்ரூமு.. கிச்சனு.. மேல ஒரு ரூம்பு.. பின்னாடி கீர மரம் இருக்குது. அப்பப்போ பறிச்சு கொழம்பு.. பொரியலு செஞ்சுக்கலாம்.. ஆனா ஒரு நிமிசமுங்க..”

“சொல்லுப்பா.. ஏதோ சொல்ல வர்ற..”

“எனக்கு அர மாசத்து வாடக பணம் கொடுத்திடனமுங்க..”

“கமிஷனா..?”

“ஆமாங்க..” என்றதும் இவன் அந்தாளை கழட்டி விட்டுடலாம் என்று நினைத்துக்கொண்டு “வீடு அருமைங்க.. ஆனா வீட்ல பேசிட்டு சொல்லறேன்.. அவங்களும் பாக்கனும்.. இங்கிருந்து ஓயின்ஷாப்பு எவ்வளவு தூரத்துல சொன்னீங்க..?”

“என்னாங்க அதை பத்தியே பேசிட்டு.. அதுக்கு நூறு வீடுங்கள தாண்டி போகனும்.. வேற ஏதாவது கேளுங்க.. அந்த சாமி கிரௌண்டுல இடம் வாங்கிக்கறீங்களா பாருங்க.. நமக்கு தெரிஞ்சா ஆளுதான். கம்மி ஜாஸ்தி பேசி வாங்கிக்கலாம்..” என்றபோது அவசரமாக இவன் மறுத்து “எனக்கு இந்த வீடு புடுச்சுருக்குதுங்க. ஆனா ஒரு குற..”

“என்னாங்க..?”

“அக்கம்பக்கத்துல வீடுங்க அதிகமா இல்ல.. பிசோன்னு இருக்குது..”

“அப்படிதாங்க இருக்கனும்.. பொக அடிக்காது. நல்லா காத்து வரும். சலசலன்னு பேச்சு இருக்காது. துரத்துல பாருங்க ஒரு தோப்பு தெரியுது. நீங்க அங்க காலாற நடந்து அப்படியே போயிட்டு வரலாம். வழியில ஒரு கோயிலு வருது. ரண்டு.. மூணு ஓட்டலுங்க வருது. ஒரு கசாப்பு கட கூட இருக்குது. பின்னாடி போனீங்கன்னா ஒரு மீன் கட கூட வரும்..”

“ஓ..”

“அந்த தோப்பு பக்கம் தேங்கா விப்பாங்க.. இளநீரு கூட கிடைக்கும். நிறைய பேரு வாக்கிங் போவாங்க.. டாக்டருங்க.. வேலைக்கு போறவங்கன்னு நிறைய பேரு இருக்காங்க. மிஸ் பண்ணாதீங்க..”

“சரிங்க..” என்று ஒரு முறை பார்ப்பது போல சுற்றிவிட்டு முகத்தில் வலுக்கட்டாயமாக திருப்தியை வரவழைத்து அந்த குணா பார்த்து கொண்டிருக்கும்போதே அந்த வீட்டை பாராட்டிவிட்டு ஆனால் கூடவே “வீட்ல பாக்கனும்” என்பதை விடாமல் அங்கிருந்து திரும்பும்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி “இந்த பக்கமா ஒரு வீடு இருக்குதுங்க. ஆனா அடுத்த மாசம்தான் காலி பண்ணறாங்க. அத விட நல்லாயிருக்கும். கூட நீங்க சொன்னீங்க பாருங்க வீடுங்கன்னு.. அதெல்லாம் ஏராளமா இருக்குமுங்க. ஜனங்க நடமாட்டம் இருந்துட்டே இருக்குமுங்க. பயமில்ல. ஆனா வாடக அதிகமுங்க. இப்பவே சொல்லி வச்சுட்டா புடுச்சுடலாம்..”

“வேணாமுங்க.. இந்த ஏரியா எனக்கு புடிக்காது” என்றதும் அந்த குணா அங்கிருந்து நகர்ந்து தன்னுடைய வண்டியை அந்த உணவு விடுதிக்கு அருகில் நிறுத்தி “சாப்புட்டு போயிடலாமுங்க. ரயில்வே பக்கம் மாடி வீடு ஒண்ணு இருக்குது. ஓனரு வெளில இருக்காரு. ஓனரு தொல்ல இல்லாத வீடு. அதையும் பாக்கலாமுங்க அப்பறமா. எனக்கு வேற வேல இருக்குது. வாங்க சாப்புடலாம்..”

“இல்லீங்க. வேணாம்..”

“வீட்டுக்கு போயிடறீங்களா..?”

“ஆமாங்க..”

“வீட்ல பேசிட்டு சொல்லுங்க. முன்ன பின்ன பேசிக்கலாம். அப்பறமா டான்சி பக்கமா கூட ஒரு வீடு இருக்குதுங்க. ஆனா சத்தம் வந்துட்டே இருக்கும் உங்களுக்கு. பக்கத்துல இரும்பு அடிப்பாங்க. ஆனா வாடக கம்மிதாங்க. ஒரே பெட்ரூமுதான்..” என்ற அந்தாள் ஓட்டலுக்குள் பார்த்து “வாங்க இட்லி சாப்புடலாம்..” என்றபோது பதிலை எதிர்பார்க்காமல் “ஒரு நூறு ரூபாய கொடுத்துட்டு போங்க..”

“நூறா..?”

“ஆமாங்க.. சாப்பாட்டுக்கு.. டீக்கு.. அப்பறம் இன்னும் ரண்டு இடம் சொன்னேன் பாருங்க..”

“பாக்கலையே..”

“பாக்கலாமுங்களா..?” என்று அவன் வண்டியை எடுத்துபோது இவன் குறுக்கிட்டு அவசரமாக நூறு ரூபாயை எடுத்து அவன் கையில் அழுத்தியபோது “பெட்ரோலுக்கும் சேத்திதாங்க..” என்றான் அவன்..

“வரட்டுமுங்களா..?” என்று இவன் கிளம்பியபோது “போன் பண்ணுங்க” என்று அவன் பின்புறமாக கத்துவது கேட்டது. இவன் அந்த சாலையில் இனி புரோக்கரை பார்க்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று நிதானமாக வண்டியை ஓட்டியபடியே சென்றபோது ஒரு டீக்கடை அருகே “வீடு வாடகைக்கு கிடைக்கும்” அட்டையை பார்த்து நிறுத்தி அந்த டீக்கடையின் வாசலில் ஏழெட்டு பேரை தாண்டி நீள…ள..மாக தேநீரை ஆற்றிக்கொண்டிருந்த கடைக்காரனிடம் “வீடு வாடகைக்குன்னு போட்டிருக்குதே..” என்றபோது அந்தாள் நிமிர்ந்து பார்க்காமல் “அது வந்துட்டாங்க..”

“அட்டை இருக்குதே..”

“கழட்டனமுங்க.. மறந்துட்டேன்..”

“வேற ஏதாவது இந்த ஏரியாவுல இருக்குமுங்களா..?”

“நம்பரு தர்றேன் பேசறீங்களா..?” என்றபோது இவன் சம்பிரதாயத்துக்கு வாங்கி அதற்கு இணைப்பு கொடுக்கும்போது சற்று தள்ளி நின்று அழைப்பு கிடைத்ததும் “ஹலோ..” என்பதற்குள் அந்த குரல் “சொல்லுங்க சார்.. சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்..” என்றது..

“குணால்தானே..?” என்றான் தடுமாறியபடி..

“ஆமா சார்.. அந்த ரயில்வே வீடு பாக்கலாமுங்களா.. ஓனரு தொந்தரவு இருக்காது.. அப்பப்ப டிரெயின் போறது.. வர்றத பாக்கலாம். பசங்களுக்கு புடிக்கும். எத்தன பசங்க உங்களுக்கு..?”

“மூணு.. சரி இருங்க பேசறேன்..” என்று பேசுவதை நிறுத்தியபோது சலிப்பாக இருந்தது. அங்கேயே ஒரு தேநீருக்கு சொன்னபோது “பேசுனீங்களா..?” என்றான் கடைக்காரன்..

“பேசுனேங்க..”

“நல்ல ஆளுங்க. ஆனா கறாரு. காசு சுத்தம் பாப்பாரு. மத்தவங்கெல்லாம் விவரம் தெரியாம புடுங்கிடுவானுங்க. அதுவும் ஒரு தொழிலு பாருங்க..”

“வேற ஏதாச்சும் நம்பரு இருக்குதுங்களா..?”

“இல்லீங்க. எனக்கு இவருதான் நம்பர கொடுத்திருக்காரு. அப்பப்போ டீ குடிக்க வருவாறு. நம்பரு கொடுத்துட்டு விளம்பரம் பண்ணிக்கிட்டாரு. அட்டைல கூட நம்பரு இருக்கும் பாருங்க. எனக்கு நூறு எறநூறுன்னு கொடுப்பாரு. நம்பி போகலாம் அவரோட. அடுத்த தெருல கடைசில ஒரு வீடு இருக்கறதா அவரேதான் சொன்னாரு. வேணும்னா அவருக்கிட்ட பேசிப்பாருங்க..”

“சரிங்க..” என்றபோது அந்த வீட்டை பார்ப்பது தனியாக என்று முடிவு செய்துக்கொண்டபோது தேநீர் வாசனையை முழுக்க இழுத்து அந்த வாசனையில் தன்னை பரவசப்படுத்திக்கொண்டான்.

                              0000

அந்த வீடு அங்கிருந்து நான்காவது தெருவில் இருந்தது. அதற்கு இன்னும் இரண்டு பேரிடம் விசாரித்து அந்த இரண்டாவது தெருவின் முனையில் நான்கைந்து பேரை யோசிக்க வைத்து அவர்கள் இங்கே.. அங்கே என்று தன் பங்குக்கு விசாரித்து “இங்க இல்லீங்க. கோயில் தெருல..”

“அது எங்க இருக்குது..?”

“ஓ.. தெரியாதா..? இங்க இருந்து ரண்டாவது தெரு” என்றதும் இவன் வண்டியை திருப்பி அந்த பகுதி பரவாயில்லை என்று நினைத்தபடியே திரும்பி ரோடுக்கு வந்து அந்த இரண்டாவது தெருவை பிடித்தபோது அதன் நீளமான நேர்திசை அவனுக்கு பிடித்து வீடும் பிடிக்கவேண்டுமென வேண்டிக்கொண்டு நிதானமாக இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்தபடியே நகர்ந்தான். நெருக்கமான வீடுகள். அந்த நேரத்திலும் வெயிலில் தெருவில் நடமாட்டம் இருந்தது. மாடிகளில் பெரும்பாலும் வீடுகள் தென்பட்டது. நிறைய தென்னை மரங்கள். நிறைய நாய்கள். நடுவில் குட்டியாக ஒரு கோயில். ஒரு டைலர் கடை. ஒரு பெட்டிக்கடை. ஒரு அம்மா வடை போட்டுக்கொண்டிருந்தது. ஒரு கார் கூட நின்றுக்கொண்டிருந்தது. ஒரு லாரி உள்ளே வரலாம்.. போகலாம். ஒரு வீட்டுக்கு வெளியே நாமம் போட்டு ஏதோ சிவாச்சாரியார் பெயரை போட்டு சிவப்பாக குண்டுமணி மாதிரி வாசலில் தொங்கவிட்டிருந்தார்கள். ஒரு தூங்குமூஞ்சி மரம் கூட இருந்தது. நேராக அந்த தெருவின் இறுதியில் வண்டியை நிறுத்தி இரண்டு பக்கமும் பார்த்தபோது நேர் வீட்டின் வாசலில் உட்கார்ந்திருந்த பாட்டிகள் இவனையே பார்த்தபடி இருந்தபோது இவன் அவர்களை நெருங்கி “இங்க வீடு காலியா இருக்காமே..?”

“வீடா..” என்று ஒரு கிழவி இன்னொரு கிழவியை பார்க்க.. அந்தம்மா காது கேட்காதது போல விழித்தபோது இந்தம்மா “தெரியலீங்களே..” என்றபோது சப்பென்று இருந்தது இவனுக்கு. அடுத்து வேறு பக்கமாக பார்த்தபோது பின்புறமிருந்து “வீடு பாக்கறீங்களா..?” குரல் கேட்டு திரும்பியபோது அந்த தாடி வைத்த ஆள் சிரித்ததை கவனித்து “ஆமாங்க..”

““அது இந்த தெருல இல்லீங்க..”

“பின்ன..?”

“அடுத்த தெருல. நடுவிலேயே வரும். ஒரு தெரு பைப்பு இருக்கும் பாருங்க. அதுக்கு பக்கம்”

“சரிங்க” என்று வண்டியை திருப்பி கொஞ்சம் வேகமாகவே அந்த வீட்டை வேறு யாராவது பேசி முடித்து விடுவார்களோ என்பது போல ரோடுக்கு வந்து மறுபடி அடுத்த தெருவுக்கு போனபோது அந்த தெரு அவனுக்கு பிடிக்கவில்லை. குறுகலாக ஒரு புறம் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஒரு பக்கமாக குறுக்காக ஓடி தேங்கி நிறைய இடங்களில் கொசுக்கள் பறந்தது. உடனே திரும்பி மறுபடியும் ரோடுக்கு வந்து நின்று என்ன செய்வது என்பது போல பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த தாடி வண்டியில் இவனை கடந்தபோது நிறுத்தி “சார்.. இங்க இல்லையாம்.. அங்கேதானாம். தப்பா சொல்லிட்டேன். திரும்ப போங்க அங்க” என்று நிற்காமல் போனான்.

இவன் சந்தோழமாக “அப்பாடா..” என்று நினைத்துக்கொண்டபோது அந்த தாடியை ஒரு கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு திரும்ப அங்கேயே வந்து நின்று அந்த பாட்டிகள் அங்கேயே இருப்பதை கவனித்து அவர்களும் இவனை கவனிப்பதை கவனித்து ஆனால் அந்தப்பக்கமாக போகாமல் இரண்டு வீடுகள் தள்ளி வெளியே நின்றிருந்த பெண்ணிடம் நகர்ந்து “இங்க வீடு ஏதோ இருக்காமே” என்றபோது அவள் எதிர்புறம் மாடியை பொத்தாம் பொதுவாக காட்டினாள்.

இவன் திரும்பி பார்த்து வரிசையாக வீடுகள் மாடியில் இருப்பதை கவனித்து மறுபடி அவளை பார்க்க அவள் மொபைலில் வேறு யாரிடமோ பேசியபடி இவனை பார்த்தவாறே ஏதும் பேசாமல் மொபைலில் சிரித்தபடியே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததை கவனித்து இவன் திரும்பி எதிர்பக்கமாக நடந்து திறந்திருந்த அந்த வீட்டின் முன்புறமாக நின்றபோது அந்த வீட்டிலிருந்து கண்ணாடி போட்ட ஒரு பெரியவர் வெளிப்புறம் உட்கார்ந்திருந்தவர் திரும்பி பார்த்து “என்னா..?” என்புது போல தலையாட்டினார்.

“இல்லீங்க. வீடு?”

“ஆங்..”

“வீடுங்க. ஏதோ காலியா இருக்கறதா..?” என்றபோது அவர் எதிர்பக்கமாக கையை காட்டிவிட்டு தன்னுடைய பேப்பரில் முகத்தை திருப்பிக்கொண்டபோது இவன் மறுபடி புரியாமல் அந்த பாட்டிகளை பார்த்து அவர்கள் பக்கமாகவே நடந்தான். அதில் ஒரு பாட்டி அந்த காது கேட்காத பாட்டியிடம் இவனை காட்டி ஏதோ சொல்லுவதை கவனித்து இவன் கிட்டே நெருங்கும்போதே “வீடா பாக்கறீங்க..?”

“ஆமாங்க..”

“இதா. இதுதான்..” என்று சற்று தள்ளி குறுகலான கேட் இருந்த வீட்டை காட்டி அப்படியே மேலேயும் காட்டி “மேலங்க..”

“மாடி வீடா..?”

“ஆமாங்க.. ஆனா வீடு காலி இல்லீங்க..”

“பின்ன..?”

“அவரு தரமாட்டாரு. பையனுக்கு ஒதுக்கிட்டாராம் வீட்ட”

“கேக்கலாமுங்களா..?”

“கீழ நம்பரு தருவாங்க. கேட்டு பேசிப்பாருங்க.. “ என்றபோது இவன் கால்கள் அந்தப்பக்கமாக நடந்து அந்த கேட்டருகே நின்று உட்புறம் ஒரு குழந்தையை பார்த்து லேசாக இளித்து அது மிரட்சியுடன் உட்புறமாக ஓடி ஒரு அம்மா எட்டிப்பார்த்து “யாருங்க..?”

“வீடுங்க.. காலியா இருக்கறதா..?”

“எதுவும் இல்லீங்களே..?”

“மாடில சொன்னாங்க..””

“அது தர்றதலைங்க..”

“நீங்கதான் ஓனரா..?”

“இல்லீங்க. வாடகைக்குதான் இருக்கோம்..”

“மாடில வாடகைக்குன்னு சொன்னாங்க..”

“ஆமாங்க.. மொதல்ல அப்படிதான் சொன்னாங்க. இப்ப ஓனரு குடும்பத்துக்கே வச்சுக்கிட்டாரு..”

“நம்பரு தர்றீங்களா..?” என்றபோது அந்த குழந்தை அந்தம்மாவின் கால்களை பிடித்தபடி இவனை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. அந்தம்மா குழந்தையை தூக்கிக்கொண்டு “நம்பரு தந்தா ஏதாவது சொல்லுவாருங்க..”

“சும்மா பேசிக்கறேன். என்ன ஐடியால இருக்காருன்னு..?”

“நான்தான் சொன்னேனே..”

“அப்படின்னா சரிங்க..” என்று இவன் நகரும்போது அவளிடமிருந்து தயக்கமான குரலில் “சரி இருங்க.. தாரேன்..” என்ற பிறகு அவள் தந்த எண்ணுக்கு தனது வண்டியருகே வந்த பிறகு அழுத்தி தொடர்பு கொண்டபோது எதிர் பக்கம் ஒரு பெண்தான் “யாருங்க..?” என்றது.

“சார்.. நான்.” என்றவன் தடுமாறி “நான் உங்க வீட்டு பக்கமா இருந்து பேசறேனுங்க. வாடகை வீடு பாக்கலாமுன்னு..”

“நடராஜனா பேசறது..?”

“இல்லீங்க.. வாடகை வீட்டுக்கு பேசறேன்..”

“காது கேக்கல..”

“வந்து..” என்று இவன் மீண்டும் சத்தமாக சொல்ல முயன்றபோது அந்த பாட்டிகள் இவனையே கவனிப்பதை உணர்ந்து என்ன சொல்லுவது என்று யோசித்தபோது ஒரு ஆண் குரலில் “யாருங்க..?” வந்தது.

“நான் உங்க வீட்ட பாக்கறதுக்கு வந்தேங்க..”

“பிள்ளையார் தெருவிலா..?” என்றபோது ஏதும் தெரியாமல் ஆனால் வேகமாக “ஆமாங்க..”

“வீடு தர்றதலைங்க..”

“அப்படின்னா சரிங்க..” என்று முடித்துக்கொள்ள முயன்றபோது “எதுக்கும் நீங்க ஒரு மணிக்கு மேல போன் பண்ணுங்க. நாலஞ்சு பேரு கேட்டுட்டு போயிட்டாங்க. பிரச்சனையா இருக்குது. பையன் ஏதும் பதில் சொல்லல. அவனுக்குதான் அந்த வீட்ட விட்டேன். இன்னிக்கு கேட்டு சொல்லிடறேன்”

“வேற யாருக்கும் சொல்லிடாதீங்க” என்றான் ஒரு நம்பிக்கையுடன்

“இன்னும் யாரும் பாக்கலைங்க. யாருக்கும் சொல்ல முடியாது” என்று சிரித்து “நீங்க என்னவா இருக்கீங்க?”

“கிளார்க்குங்க. டேக்ஸ் ஆபிஸ்ல”

“கவர்மெண்டுலேயா?”

“ஆமாங்க” என்றான் அந்த வார்த்தையில் அழுத்தத்தை உணர்ந்து. அந்த குரல் தொடர்ந்து “நாலு மணிக்கு மேல பேசுங்க..”

“ஒரு மணிக்குன்னு சொன்னீங்களே..?”

“ஓ.. அப்படியா? அப்படிதான் பண்ணுங்க..” என்றதும் இவன் அங்கிருந்து கிளம்ப முயன்றபோது அந்தம்மா குழந்தையுடன் இன்னமும் இவனை பார்த்தவாறு சிரிக்க முயன்றபோது இங்கிருந்தே “பின்னாடி போன் பண்ண சொன்னாங்க” என்றவன் அந்தம்மாள் ஏதாவது குழப்பினால் என்ன செய்வது என்று “வீடு இல்லைன்னு சொல்லிட்டாங்க..” என்றான்..

“நான்தான் சொன்னேனே..” என்று சத்தமாக சொன்னவள் குழந்தையின் முகத்தை தடவியவாறு “ஏதோ சொன்னீங்களே..?”

“வீடு அவங்க பையனுக்காம்..” என்று சத்தமாக சொல்லியபடியே வண்டியை கிளப்பி கொஞ்சம் முன்புறமாக போனபோது வலதுபுறம் அந்த மரத்தடியில் இருந்த குட்டி பிள்ளையாரை பார்த்து பிள்ளையார் தெருவில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்துக்கொண்டு அந்த பிள்ளையார் தெருவை பிடித்திருக்கிறது என்று உற்சாகமாக வண்டியை செலுத்தியபோது வீடு பிடிக்கவேண்டுமே என்று கவலைப்பட்டான்.

ஆனால் அந்த வீட்டுக்கான பதில் இனிதான் தெரியும் என்று நினைத்துக்கொண்டபோது தன்னை திட்டவும் செய்தான். வேறு வீடு பார்க்கலாம் என்று தேற்றிக்கொண்டபோது அவனுக்கு வந்த மொபைல் அழைப்புக்காக வண்டியை நிறுத்தி பார்த்தான்.

அந்த குணாதான்..

                                    0000

இவன் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு அருகிலிருந்த அந்த சுவரில் இருந்த விளம்பர பலகையை பார்த்தவாறு அந்த குணாவிடம் “சொல்லுங்க..”

“சார். குணா பேசறேன்..”

“தெரியுது”

“வீட்ல பேசிட்டிங்களா..?”

“இப்பதாங்க வீட்டுக்கு போயிட்டிருக்கேன்..”

“இவ்வளவு நேரமாவா..? சரிங்க பேசிட்டு சொல்லுங்க. வகாப்பு நகர்ல கூட ஒரு வீடு இருக்கது. குத்தகைக்கு. தண்ணி தேனு மாதிரி இருக்கும். ஓனரு சென்னைல இருக்காரு. ஆனா ரண்டு வருசத்துக்கு மட்டும்தான் குத்தகை. அஞ்சு லட்சத்துக்கு..”

“சரிங்க..”

“பேசிட்டு சொல்லுங்க. அப்பறம் சிவன் கோவில் பக்கமா ஒண்ணு இருக்குது. ஆனா உங்களுக்கு புடிக்காது. ஆனா வீடு பெருசுங்க”

“ஏன் புடிக்காது?”

“பழைய வீடுங்க. கார வீடு மாதிரி இருக்கும். ஆனா அப்படியே இரும்பாட்டம் நிக்குது. வெயில் காலத்துல ஜம்முன்னு இருக்கும். வாடகை கூட கம்மிதான். உள்ளாற போயிட்டீங்கன்னா அறுபதுல இருக்கற மாதிரி மாறிடுவீங்க. தொங்கு ஊஞ்சலு.. பெருசா திண்ணைங்க.. மாடங்க.. முன்னாடி சதுரமா மண் தர.. நீளமா முன்னாடி நுழைஞ்சா பின்னாடி அடுத்த தெருவுக்கு போயிடலாம். எல்லாம் அந்தக்காலத்து கதவு. வீட்ல பெருசு ஒண்ணு இருக்குது. அப்படியே பத்தரமா வச்சுருக்குது. கவர்மெண்டு உத்தியோகத்துல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் வாடகைக்கு தருவாங்களாம். ஆனா எந்த சேதாரமும் இருக்கக்கூடாதாம். இருக்கறது இருக்கற மாதிரியே இருக்கனுமாம்.. அப்பறம் உள்ளாற எட்டிப்பாத்தா மேலேயே தண்ணி கிடக்குதுங்க..”

“எதுல..?”

“கிணத்துலங்க.. அஞ்சுக்கு அஞ்சுதான் இருக்கும் கிணறு. வத்தறதே இல்லையாமே.. பக்கத்துல சிவன் கோயிலு இருக்கறதால கொளத்து தண்ணிதான் காரணமுன்னு சொல்லறாங்க. தீர்த்தம் மாதிரி இருக்குதாமே..?”

“பாக்கலாமுங்க..”

“வீட்ல பேசிட்டு சொல்லுங்க. அப்பறம் டேக்சு ஆபிஸ்ல ஒரு விசயம் ஆகனமுங்க. தெரிஞ்சவங்களுக்கு..”

“செஞ்சுக்கலாமுங்க..” என்று பதில் சொல்லுவதற்குள் அந்த பேச்சு நின்று டிங்..டிங்.. என்றது. இவன் மறுபடி வண்டியை கிளப்பியபோது வீடுகளின் மீதான சலிப்பும் அப்பா வீடு கட்ட இடம் கூட இல்லாமல் வாடகை வீடு.. வாடகை வீடு.. வாடகை வீடு.. என்று தொடர்ந்து கொண்டிருப்பதும்.. இவனும் இதோ அதோ என்று ஊருக்கு வெளியே சமீபத்தில்தான் ஒரு துண்டு இடத்தை வாங்கிப்போட்டதும் அந்த சலிப்புக்கு பின்னால் இருக்கும் கதை. நிறைய வீடுகள் ஏறக்குறைய இவர்களை துரத்தியது. சின்ன சின்ன அல்லது பெரிய சண்டைகளோடு பிரிந்து அடுத்த வீட்டுக்கு போகும்போது அது தொடரும் என்பதுதான் அவன் பார்த்த வகையில் நிஜமானதாக இருக்கிறது. அந்த நிஜங்கள் அவனை ஒரு இடத்தை வாங்க அலைய வைத்து கடைசியில் அப்படி இப்படியென்று வாங்கிவிட்டான். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வீடு கட்டிக்கொள்ளலாம் என்றால் அதற்கு சாத்தியமில்லை போல. அப்பா கொஞ்ச நாட்களாக “என்னால முடிஞ்சது பணம் புரட்டி தர்றேன்..” என்று சொல்ல ஆரம்பித்த பிறகு இவனுக்கு அடுத்த கனவாக வீடு கட்டுவதில் கவனம் போய்விட்டது. அது வரையிலும் இருக்கிற வீட்டில் சமாளித்துக்கொள்ளலாம் என்றால் சச்சரவு ஆரம்பமாகிவிட்டது. இத்தனைக்கும் இப்போது இருக்கிற வீட்டுக்கு வந்து இரண்டு வருடமாகிவிட்டது. இவனுக்கு நிலம் என்கிற சொத்து வந்தது இந்த வீட்டு ராசியால்தான் என்று அப்பா அவ்வபோது சொல்லும்போது இவன் உள்ளுக்குள் “எனக்குதானே தெரியும் நான் பட்ட கஸ்டம்..” என்று நினைத்துக்கொள்வான்.

போன மாதம் கீழ் வீட்டில் வீட்டுக்காரர் ஸ்கூட்டரை தள்ளியபடியே நிறுத்தியபோது நடுப்பையன் எச்சில் துப்பிவிட்டான். அது அந்த வண்டியின் மீது விழுந்திருந்தால் அப்படியே சமாளித்திருக்கலாம். அந்த ஆள் தலையை துடைத்தபடி மேலே நிமிர்ந்து பார்த்து இவன் கண்களில் விழுந்து உடனே காராசாரமாக வார்த்தைகள் தடித்து புறப்பட்டு “வீட்ட காலி பண்ணுங்க” என்பதில் வந்து முடிந்தது..

ஆனால் பையன் விடாப்பிடியாக “நான் துப்பலை..” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அந்த பொய்க்கும் சேர்த்து “பொய் சொல்றாங்க..” என்று குடும்பமே பொய்க்குடும்பம் என்கிற மாதிரி தெருவில் பேசி மற்றவர்களையும் பேச வைத்து.. ம்.. இவன் “எப்படிங்க உடனே காலி பண்ணறது..? பையன் துப்பலைன்னு சொல்லறான். நீங்க அவன்தான் துப்புனதா சொல்லறீங்க. அது கிடக்குது. வீட்ட காலி பண்ணிடறோம். கொஞ்சம் டைமு கொடுங்க..”

“ஒரு மாசம் எடுத்துக்கோங்க.. உங்க பையன் பொய் சொல்லறான்..”

“இல்லீங்க..”

“நீங்களும் பொய் சொல்லறீங்க.. ஒரே நாத்தம் அந்த எச்சி.. கைய வச்சு பாத்தா பிசுபிசுன்னு வெள்ளயா..”

“அப்படீன்னா அது காக்கா போட்டதா இருக்கும்..”

“இங்க ஏதுங்க காக்கா..?” என்று அந்த மனுசன் ஸ்கூட்டரை நிறுத்திய இடத்தில் தலையை நிமிர்த்தி சற்று தள்ளி இருந்த நெல்லி மரத்தை காட்டி “அது அங்கன இருக்குதுங்க. நான் இங்கன இருக்கேன்..”

“மேல பறக்கும்போது போட்டிருக்குமுங்க..”

“நான்தான் உடனே மேல பாத்தேனே..”

“அதுக்குள்ள அது பறந்து போய் மரத்துல உக்காந்திருக்கும்..”

“நீங்க நல்லா கத விடறீங்க. பரவாயில்ல. வீட்ட காலி பண்ணிடுங்க”

“சரி அப்படியே இருக்கட்டும். பையன் தெரியாம செஞ்சிருப்பான். அதுக்கு போயிட்டு..?”

“அதுக்கில்லீங்க.. பையன் பொய் சொல்லறான். நீங்களும் கூட சேந்துக்கிட்டு..”

“சரிங்க.. காலி பண்ணிடறோம்..” என்ற பிறகு ஏறக்குறைய பத்து வீடுகளுக்கு மேல் பார்த்துவிட்டான். அவன் அப்பனுக்கு வீடு பார்த்து பழகிவிட்டது. இப்போது அவர் சோர்ந்துவிட்டார். ஒவ்வொரு முறையும் பையன் வாடியபடி வீட்டுக்கு வரும்போது “புது வீடு கட்டிடலாம் மகனே..”

“அது பின்னாடி. இப்ப வேற வீடு வேணுமில்ல..?” என்றபோது அவர் குறுகிய கண்கால் வேறு இடத்தில் பார்த்தவாறு “நான் தப்பு பண்ணிட்டேன்..” என்று எத்தைனையாவது முறையாகவோ சொன்னார். இவன் வீட்டில் இருப்பவர்களை நினைத்து பார்த்தான். இவன்.. இவன் மனைவி.. மூன்று பிள்ளைகள்.. அப்பறம் அப்பா.. அம்மா.. அப்பறம் தாத்தா.. பெரிய குடும்பம் என்று சொல்லுவதை விட கூட்டுக்குடும்பம் என்று சொல்லுவதையே விரும்பினான். ஏனென்றால் மாசத்துக்கு இருபது நாள் இவன் தங்கச்சி இரண்டு பசங்களுடன் இங்குதான் இருப்பாள். அவள் இருந்தால் சந்தோசம். அந்த பசங்களுடன் இவன் பசங்களும் விளையாடுவது இன்னமும் சந்தோசம். அவள் வீட்டுக்காரன் அடிக்கடி வியாபாரத்துக்கு போய்விடுவதால் இங்குதான் குடித்தனம் தங்கச்சிக்கு. தங்கச்சி வீட்டுக்காரன் அதில் பாதி நாட்களில் இங்குதான் இருப்பான். வீடு கலகலப்பாக இருப்பது குழந்தைகளின் கைகளில் இருக்கிறது. அவர்கள் உலகத்தில் நுழைய முடியாமல் வேடிக்கை பார்ப்பது பழகிவிட்டது மற்றவர்களுக்கு.

வீட்டுக்காரருக்கு சொன்ன ஒரு மாசத்துக்கு மேல் இரண்டு மாசங்கள் போன பிறகு அவர் இந்த மாசம் கடைசி என்று கெடு வைத்துவிட்டார். இவன்  உர்ர்ர்…ரென்று “இதப்பாருங்க.. ஒரு வீட்ல வண்டிய நிறுத்த இடமில்ல… இன்னொரு வீட்ல தண்ணி பிரச்சன.. இன்னொரு வீட்ல ஓனரு பிரச்சன.. அடுத்த வீட்ல வாடக பிரச்சன.. இன்னொரு வீட்ல இடப்பிரச்சன.. ஒரு வீட்ல கரண்டு பில்லு பிரச்சன.. இன்னொரு இடத்துல நாங்க மட்டும்தான் இருக்கனுமாம்.. தங்கச்சியெல்லாம் இருக்கக்கூடாதாம்.. யாரும் வெளியாளுங்க வந்து தங்கக்கூடாதாம்.. விசேசம் ஏதும் செய்யக்கூடாதாம்.. போகும்போது மறுபடி சுத்தமா பெயிண்டு அடிச்சு குடுத்துட்டு போகனுமாம். இல்லன்னா அட்வான்சு கொடுக்க மாட்டாங்களாம்” என்றபோது அவர் இடைமறித்து “இதுல நானும் இருக்கேனா..?”

“உங்களுக்கு எச்சி பிரச்சன”

“இதிலிருந்தே தெரிஞ்சுக்கோங்க.. நான் அந்த லிஸ்டுல வரமாட்டேன்னு..” என்றபோது அவர் சொன்னது நிஜமாகத்தான் பட்டது. பையன் ஒவ்வொரு முறையும் “காக்காதாம்பா போச்சி.. காக்காதாம்பா அவரு மேல போட்டுட்டு நெல்லிக்கா மரத்துல போயிட்டு உக்காந்திருச்சு..” என்று திரும்ப திரும்ப சொல்லுகிறான். அவனுக்கு நம்மால் இந்த பிரச்சனை என்பது அந்த வயதிலேயே உறுத்துவது இவனை சங்கடப்படுத்தி “கெடக்கறான் அவன்.. நாம வேற வீட்டுக்கு போயிடுவோம்..” என்று சமாதானம் சொல்லுகிறான் ஒவ்வொரு முறையும்..

இதற்காக அலுவலகத்தில் அடிக்கடி லீவு போட வேண்டியிருக்கிறது. இன்றைக்கு ஏதோ ஒரு மத விடுமுறை என்பதை பயன்படுத்தி வீட்டில் பசங்களை வேடிக்கை பார்க்க முடியவில்லை என்பது ஒரு பக்கம் வருத்தமானாலும் இன்னொரு பக்கம் அப்பா “கிணறு.. கிணறு..” என்று நோண்டுவதை ஜீரணிக்க சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கூட வேலை செய்கிற ஆள் இவன் சொன்னதை கேட்டு “பழைய வீட்ல இருக்க விரும்பறாரு. அதைதான் அவரு அப்படி சொல்லறாரு..”

“ஏன் அப்படி..?”

“பழைய வீடுங்கதாங்க வீடுங்க.. இப்ப இருக்கறதெல்லாம் வீடுங்க ஆயிடுமா..? வெயில்ல வேத்து கொட்டுது. காத்தோட்டம் இல்லை. நிம்மதியா வெளியில உக்கார முடியலை.. திண்ணைன்னு ஒண்ணு இருக்குதா..? அழிச்சிட்டாங்க.. அப்பறம் உங்க தங்கச்சிக்கு பொருத்தமா இருக்குமுன்னு நினைக்கிறாரு பெரியவரு. அவரோட யோசனை சரிதான். அந்த காலத்து வீடுங்க கூட்டு குடும்பத்துக்கான வீடுங்க சாமி.. இப்பவெல்லாம் இருக்கறது ஜெயிலுங்க.. எல்லா வீட்டிலேயும் கேட்டு.. நாயி.. ஜன்னலை கூட மூடிட்டு.. வெளிய இருந்து சத்தம் போட்டா யாரும் எட்டிப்பாக்கறது கூட இல்லை.. உள்ளாற கத்தறது கேக்குதா இல்லையான்னே தெரியலை.. அதனாலதான் பெரியவரு அப்படி சொல்லியிருக்காரு..” என்றது இப்போது அந்த சிவன் கோவில் அருகாமையிலான வீட்டை ஞாபகப்படுத்தியது.. ஆனால் அதற்கு அந்த குணாவிடம் பேசவேண்டும். அவன் அரை மாத வாடகை கேட்பான். இப்போது இருக்கும் வீட்டுக்கே ஏழாயிரம் ஆகிறது. இதற்கு குறைவாக வாடகைக்கு வீடு கிடைக்காது என்றுதான் தோன்றியது.

அப்போது அலைபேசியில் அழைப்பு மணி வந்து அது எங்கேயோ பார்த்த எண்ணாக இருப்பதாக குழம்பியபடியே காதில் வைத்தபோது “நீங்கதானே போன் பண்ணது வீட்டுக்காக?” என்கிற குரல் பிள்ளையார் தெருவை ஞாபகப்படுத்தியது. இவன் வேகமாக “ஆமாங்க..”

“வேலைல இருக்கீங்களா..?”

“ஆமாங்க.. டேக்ஸ் ஆபிசு..”

“வீட்ட பாத்தீங்களா..?”

“இல்லீங்க.. நம்பரு மட்டும்தான் குடுத்துச்சு அந்த கீழ் வீட்டம்மா..”

“நான் அவங்களுக்கு போன் பண்ணறேன். சாவி அவங்ககிட்ட இருக்குது. வீட்ட ஒரு முற பாருங்க.. அப்பால போன் பண்ணுங்க..”

“சரிங்க..”

“வாடக ஒம்பதாயிரம்.. அட்வான்சு முப்பதாயிரமுங்க..”

“ஒம்பதாயிரமா..?”

“உங்களுக்கு தேவைன்னா போன் பண்ணுங்க..”

“இல்லீங்க.. தேவைதான்.. அந்த ஏரியா புடுச்சுருக்குது எனக்கு. கொஞ்சம் அதிகம்தான். ஏதாவது ஒண்ண குறைங்க..”

“இல்லீங்க. ஆளுங்க இருக்காங்க உடனே வர்றதுக்கு. எனக்கு நாலு அல்லது  அஞ்சு மணிக்குள்ளாற சொல்லிடுங்க”

“சரிங்க..” என்று பேசுவது நின்றபோது இன்னொரு அழைப்பு காத்திருப்பில் இருப்பது தெரிந்து அது அந்த குணா என்று தெரிந்து “த்சொ..” என்று சலிப்புடன் “என்னாங்க..?”

“சார்.. பிள்ளையாரு தெருல வீட்ட பாத்திங்களாமே..?” என்றதும் இவன் பல்லை கடித்தபடி “அது வந்துங்க..”

““வீட்டுக்காரு போன் பண்ணாரு.. யாரோ பேசுனாங்கன்னு.. மொபைலு நம்பர பாத்து நீங்கதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்..”

“ஓ..”

“டீக்கடல இருந்தும் போன் வந்துச்சு. அந்த வீடு வேணாமுங்க. பையனுக்கும் அப்பனுக்கும் பிரச்சன. இப்ப போன் பண்ணி யாராவது இருந்தா சொல்லுப்பான்னு சொன்னாரு..” என்றதும் இவன் அவசரமாக “என்கிட்ட பேசினாரே..?”

“நீங்களா பண்ணீங்களா..?”

“அவரா பண்ணாரு..”

“அப்படிதாங்க.. வாடக அதிகமா தர்றவங்கள விட்டிருவாங்க”

“எம்புட்டு இருக்கும்..?”

“அட்வான்ஸ் முப்பதாயிரமுங்க. வாடக பத்தாயிரம்..”

“பத்தாயிரமா..?”

“வீடு நல்லா இருக்குமுங்க. அவங்க குடும்பத்துல பிரச்சன இருக்குது. இல்லைன்னா நானே அவருக்கிட்ட கம்மி ஜாஸ்தி பேசி உங்களுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பேன். பயமில்லாத ஏரியாங்க. அங்க போறதுன்னா உங்க விருப்பம். ஆனா புரோக்கரு பீசு வந்திடனமுங்க.”

இவன் உடனே “ஒம்பதாயிரம்தானே சொன்னாரு..?”

“பத்துக்கே ஆளு இருக்குதுங்க. அட்வான்ஸ் சேத்தி கூட தர்றதுக்கு ஆளு இருக்குது. இல்லைன்னா என்கிட்ட எதுக்கு பேசறாரு..”

“வீட்டைய போயி பாத்துட்டு போன் பண்ண சொன்னாரே..?”

“இப்படி நாலு பேருக்கு பண்ணியிருப்பாரு. உங்களுக்கு வேணுமுன்னா சொல்லுங்க பத்தாயிரத்துல இருந்து ஐநூறு கம்மி பண்ண சொல்லறேன்..”

“இருங்க வீட்ல பேசிட்டு சொல்லறேன்..” என்று நிறுத்தி மறுபடி அவருக்கு அழைப்பு விடுத்து “சாரு வீடு புடுச்சிருந்தா இன்னிக்கு கொஞ்சம் பணம் தந்திடறேன் சார். மீதிய ரண்டு மூணு நாள்ள கொடுத்திடறேன். முப்பதாயிரம் அட்வான்ஸ்.. வாடக ஒம்பது.. சரியாப்போச்சுங்களா..?”

“இல்லீங்க.. பையன் வேற யாருக்கோ சொல்லிட்டதா சொல்லறான்.. நீங்க எதுக்கும் வீட்ட போயி பாத்துட்டு நாலு மணிக்கு மேல..” என்ற பேசிக்கொண்டிருக்கும்போதே இவன் பேச்சை முறித்து அப்படியே கொஞ்ச நேரம் இருந்தான். ஒரு அழைப்பு வந்து அடித்தபடியே இருந்தது. பிறகு நின்று அந்த இடத்தில் அமைதி ஏற்பட்டது. இவன் தொடர்ந்து ஏதோ ஒரு இருட்டை நோக்கியவாறு இருந்தான். ஏறக்குறைய ஐந்தாறு நிமிடங்கள் கடந்து இவன் மொபைல் சத்தத்தை உணர்ந்து எடுத்தபோது அந்த குணாதான் மறுபடியும் “ஒம்பதாயிரத்துக்கு பேசிட்டேங்க..” என்றான்.

இவன் அமைதியாக “பையன் வேற யாருக்கோ சொல்லிட்டதா சொன்னாரே..?”

“இதுதாங்க பிரச்சன.. பையனும் அப்பனும் மாத்தி மாத்தி பேசுவானுங்க. உங்களுக்காக பேசி முடிச்சுட்டேன். கிளம்பி வாங்க. வீட்ட பாத்துடலாம்.. எனக்கு நால்ர கொடுத்துடுங்க..”

“வேணாமுங்க..”

“என்னா வேணாம்..?”

அந்த வீடுங்க..”

“ஏங்க திடீருன்னு..?”

“நான்தாங்க பாத்தேன் அந்த வீட்ட..”

“ ஓ.. அப்படியா..? அப்படீன்னா நீங்களே ஓனருக்கிட்ட பேசிக்கோங்க..” என்று அவன் கத்தரித்துக்கொண்ட பிறகு இவன் மறுபடியும் அமைதியாக இருந்தான். அந்த வீடு தன் கையை விட்டு போனது போலிருந்தது. ஆனால் அந்த ஓனருக்கு போன் பண்ண விரும்பினான். இப்போது பண்ணியபோது அவர் பிசியாக இருப்பதாக தகவல் வந்தது. சற்று காத்திருந்து மீண்டும் பண்ணியபோது அழைப்பு போய்க்கொண்டே இருந்தது. நான்கைந்து முறை முயற்சித்து பிறகு சட்டென்று குரல் கேட்டதும் “சார்.. நான்தான் பேசறேன்..” என்றான். அவர் இவனை எதிர்பார்த்த மாதிரி “வீட்டை பாக்க கெளம்பிட்டிங்களா..?”

“ஆமாங்க..”

“வேணாமுங்க. வேற ஆளுக்கு விட்டாச்சு. என் பையன் ஏற்பாடுதான். மாசம் பத்தாயிரமுன்னு. நான்தான் சொன்னேனில்ல உங்களுக்கு..?”

“என்னா சொன்னீங்க..?” என்பதற்குள் பேச்சு முடிந்து இவன் மீண்டும் அப்படியே உட்கார்ந்திருந்தான். ஏறக்குறைய பத்து நிமிடத்துக்கு மேல் ஒரே இடத்தில் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு நிதானமாக எழுந்து அப்பாவிடம் சென்று “சிவன் கோயிலு பக்கமா நீங்க சொன்னா மாதிரி கிணத்தோட வீடு இருக்காம்பா..” என்றான்..

அவர் திரும்பி பார்த்தபோது முகத்தில் எதையும் காட்டாமல்.. “ஒத்து வருமாப்பா வாடக..?”

“வரும்பா..” என்றான்..

                                    0000

 

Series Navigationநட்பில் மலர்ந்த துணைமலராரம்மூன்று பேர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *