வேல்விழிமோகன்
இன்னிக்கு எப்படியாவது அந்த கவுன்சிலர பாத்தே ஆகனமுன்னு அந்த தெருவுல நடந்து போறப்ப எனக்கு அப்படி பத்தாவது முறையா அந்தாள தேடப்போறது சங்கடமா இருக்குது. ஆனா அந்தாளு சொல்லியிருக்கான் உறுதியா.. என்னோட வேலைய முடிச்சுட்டுதான் மறுபடியும் என்னோட முகத்தல முழிப்பேன்னு..
ஒண்ணுமில்ல. என்னோட வீட்டுக்கு பின்னாடி கொஞ்சமா இடமிருக்குது. வீட்ட ஒட்டி பின்னாடியும் காம்பவுண்டு சுவர் போகும். பின்னாடி தெருவு பிரிச்சா மாதிரி.. அத அடுத்த தெருக்காரங்க கேக்கறாங்க. அந்த தெருக்காரங்க சுத்திட்டு போறாங்கன்னு. அந்த தெரு என் வீட்டு பின்னாடி வந்து முட்டிக்குது. அதுக்கு நான் என்ன செய்ய..? அப்படி பாத்தா அந்த இடத்த காலியா வச்சுக்கிட்டிருந்தது தப்புன்னு இப்போ தோணுது. கவுன்சிலரு அடுத்த தெருவுக்கு அடுத்த தெருக்காரன். அவன்கிட்ட சொன்னேன் இதைய பத்தி. அவன் ஏதோ தன்னோட இடப்பிரச்சன மாதிரி மேலேயும் கீலேயும் குதிச்சான். “எப்புடி இதையெல்லாம் சகிச்சுக்கறீங்க..?”ன்னு என்னைய லூசுங்கிற மாதிரி கேட்டான்.
நான் அமைதியா இருந்தேன். அவனே அப்பறமா “சரி.. சரி.. இதெல்லாம் தப்பு. அவங்களுக்கு இடமிருந்தா இப்படி விட்டுத்தருவாங்களா..?”ன்னு கேட்டு அனுப்பிச்சு வச்சான். இது நடந்து ஏறக்குறைய ஒரு மாசம் ஆயிடுச்சு. ஏறக்குறைய அதுக்கப்பறமா நிச்சயமா இது பத்தாவது முறையாவோ அல்லது பத்துக்கு மேலேயோ இருக்கும். “என்னாச்சி..?”ன்னு கேட்டு அவன்கிட்ட நேரடியா இப்ப கூட கேக்கறதுக்குதான் போறேன். ஒவ்வொரு முறையும் இது கடைசியா இருக்குமுன்னு நினைச்சுக்கறேன். காரணம் எனக்கு இது சுமூகமா முடியனமுன்னு நினைக்கறேன். ஆனா நடக்கறத பாத்தா அப்படி தோணல. ஒருத்தன் கலெக்டருக்கிட்ட மனு கொடுக்கறேன்னு சொல்றான். இன்னொருத்தன் பின்னாடி சுவரை நைட்ல இடிச்சுட்டு போய்டுவோமுன்னு சொல்லறான். இன்னொருத்தன் நல்லது செய்யப்பான்னு தத்துவம் பேசறான்.. பொம்பளைங்க ஒரு கூட்டமா வந்து அழாத குறையா கண்ல தண்ணிய விட்டு என்னைய தியாகியா மாறச்சொல்லிட்டு போறாளுங்க. எல்லாத்துக்கும் ஒரு லிமிட்டு இருக்குது. அந்த இடம் என்னது. எங்கப்பாது. என் தாத்தாது. எல்லாத்துக்கும் ரெக்காடு இருக்குது. நானா தந்தா அது நல்லது. என்னைய எதுக்கு தொந்தரவு தந்து புடுங்க பாக்கனும்..? அதுவுமில்லாம ஒரு தெருவுல ஒரு பக்கம் மூடியிருக்குதுன்னா அடுத்த பக்கத்துல போக வேண்டியதுதானே. பிரச்சனை என்னாதுன்னா என் வீட்டை தாண்டினா அடுத்த மெயின் ரோடுக்கு வந்துடலாம். சுத்திட்டு மூணாவது தெருவுக்கு போயிட்டு வந்தா அஞ்சு நிமிசம் லேட்டாகும். அவ்வளவுதான். இந்த அஞ்சு நிமிசத்துக்கு என்னைய பாடா படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.
இப்ப நான் தீர்மானிச்சுக்கறேன். இன்னிக்கு கடைசி அந்த கவுன்சிலர பாக்கறது. அவன் ஒத்து வரலைன்னா அடுத்து தனியா இறங்கிட வேண்டியதுதான் போலிஸ் அது இதுன்னு.. முடுஞ்சா வக்கீல பாக்க வேண்டியதுதான், இப்படி தீர்மானம் போட்டு உள்ளுக்குள்ளாற எரிச்சலோட அவன் வீட்டுப்பக்கமா போனா அவன் அப்பதான் என்னைய தாண்டி வீட்டுப்பக்கமா போறப்ப அந்த பழைய டூ வீலர நிறுத்தி திரும்பி என்னைய பாத்து ரொம்ப களைப்பா “இப்பதாம்பா நானும் வர்றேன்..”னு சொல்லறான். எனக்கு புஸ்ஸூன்னு ஆயிடுச்சு. இதுக்கு மேல அவன்கிட்ட பேசறது வேஸ்டுன்னு நினைச்சுக்கிட்டு “அப்ப இத்தன நாளா சொல்லிட்டே இருக்கறது சும்மாதானா..?”ன்னு வெடுக்குன்னு கேக்கறேன். அப்படி இதுக்கு முன்னாடி அவன்கிட்ட பேசினதில்ல நான்.
அவன் ஆச்சரியமா முகத்த வச்சுக்கிட்டு என்னைய மேலேயும் கீழேயும் பாத்துக்கிட்டு “இன்னிக்கு முடிச்சுக்கலாம்..”
“ஒண்ணும் வேணாம்.. நானே பாத்துக்கறேன்..”
“நான் பேசாமலா இருப்பேன். அந்த தெருக்காரங்க இந்த விழயத்துல ஒத்துமையா இருக்காங்க. அதனாலதான் நானும் தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்கேன்..”
“தள்ளிப்போட்டா எனக்குதானே பிரச்சன..?”
“இல்ல. தள்ளிப்போடறது சமூகமா முடியறதுக்கு. கோர்ட்டுக்கு போனா யாருது நிக்கும்..? எல்லாம் தெரிஞ்சு அவங்க ஏன் போராடனும்..? இப்ப இந்த விசயத்துல உங்க பக்கம் நியாயமுன்னு தெரிஞ்சும் உங்களால நிம்மதியா இருக்க முடியுதா..? அதனாலதான் நானும் தள்ளிப்போட்டுக்கிட்டே வர்றேன்..”ன்னு சொன்னவன் நேரா பாத்து “மொதல்ல பேச்சு வார்த்தைல முடிக்க பாக்கலாமுங்க. உங்க பக்கம் நாலு பேரை கூப்புட்டுக்கோங்க. நான் இவங்கள தள்ளிட்டு வர்றேன். இன்னிக்கு நம்ம வீட்டு மொட்ட மாடில..” மேலே காட்டி “முடிச்சுக்கலாம்..”
““இதெல்லாம் எனக்கு தெரியாதா..?”
“என்னதான் எதிர் பாக்கறீங்க என்கிட்ட..?”
“அவங்க என் விசயத்துல சம்பந்தப்படக்கூடாது..”ன்னு சொன்னதும் அவன் ரொம்ப யோசிக்கறாப்ல மேலேயும் கீழேயும் பாத்துட்டு அப்பறமா வீட்டுக்குள்ளாற தெரிஞ்ச பொண்டாட்டிய பாத்ததும் “சரி.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்குது. அப்பறமா போன் பண்ணறேன் நானே. நீங்க வீட்டிலேயே இருங்க..”
“என்னா பண்ணப்போறீங்க..?”
“நான் போன் பண்ணறேனே..”ன்னு சலிப்பா சொல்லிட்டு அவன் பாட்டுக்கு உள்ளாற போயிட்டான். எனக்கு அந்த இடத்துல நான் அவனுக்கு தொந்தரவு கொடுக்கறதா அவன் நினைச்சுக்கிட்டதா நினைச்சுக்கிறேன். கோவமா “எப்புடி ஓட்டு கேக்கறதுக்கு வர்றேன்னு பாத்துக்கலாம்..”னு உள்ளுக்குள்ளாற கறுவிட்டே திரும்பறப்போ ஓட்டுக்காகதான் அவனும் சுமூகமா போக பாக்கறான்னு எனக்கு புரியாம இல்ல. அவனுக்கு நான் ஒரு ஓட்டுதான். அல்லது என் குடும்பத்த சேத்துனா நாலு ஓட்டு வரும். நாலு ஓட்டுக்காக நானூறு ஓட்டுங்கள இழக்கறதுக்கு விரும்பமாட்டான். அவன் மேல எனக்கு கோவமா வந்து கடைசில புத்திய காட்டிட்டானேன்னு நகர்றேன் அங்கிருந்து. ஆனா வீட்டுக்கு போக தோணல. காரணம் உள்ளுக்குள்ளாற ஆத்தரமா இருக்குது. யாரு அப்பன் வீட்டு சொத்த யாரு கேக்கறதுன்னு புழுங்கிட்டே அந்த சலூன் கட பக்கமா போயிட்டு உள்ளாற உக்காந்துக்கறேன். ரண்டு மூணு பேரு இருந்தாங்க. பேப்பரு படிச்சுட்டு.. பேசிட்டு.. ஒரு ஆளுக்கு சிரைச்சுட்டு இருந்தான் அந்த சலூன்காரன். என்னைய பாத்ததும் ஒரு சிரிப்பு சிரிச்சான். எனக்கு சிரிக்க தோணல. வழக்கமா வர்ற இடம்தான். ஆனா மூணாவது சந்துல இருக்குது ரோடை ஒட்டி. அப்ப அங்க சத்தம் நின்னுடுச்சு. அந்த மூணு பேரும் அமைதியா ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்கிட்டு அப்பறம் பக்கத்துல இருந்த பேப்பர பிரிச்சு தலைய குத்திக்கிறாங்க.
“ஓ.”ன்னு கத்தனும் போல இருந்துச்சு. என்னா மைத்துக்குடா என்னைய வச்சு நாடகம் ஆடறீங்கன்னு ஒவ்வொருத்தனையும் குமட்டைல குத்தி கேக்கனும் போல இருந்துச்சு. நான் என்னோட தெருக்காரங்கள நினைச்சுக்கிட்டேன். எல்லாருமே எனக்கு எதிராதான் இருப்பாங்க. ஏன்னா ஒருத்தனுக்கு சொத்து போதுன்னா சந்தோசப்படத்தானே செய்வாங்க.
எனக்கு இந்த பிரச்சனைன்னு எங்க தெருவுல எல்லாருக்கும் தெரியும். எந்த கம்மனாட்டியும் வந்து பக்கத்துல இருந்து அடுத்து என்னா செய்யறதுன்னு கேக்கலையே..? ஆனா வழியில பாத்தா சிரிக்கறானுங்க. பேச கூட செய்யறானுங்க. சம்பந்தமில்லாம என் தெருவுல இருந்துட்டே எம் பொண்டாட்டி நல்லா இருக்காங்களான்னு கேக்கறானுங்க. அட பொசக்கெட்ட நாய்ங்களான்னு “தூ..”ன்னு உள்ளாற காறித்துப்பிட்டு நானும் வெறுப்பா “உம் பொண்டாட்டிய பத்தி கூட கேக்கலாமுன்னு இருந்தேன். நல்லாருக்காங்களா..?”ன்னு திருப்பி அடிச்சா காதுல விழாத மாதிரியே போறானுங்க. நடிக்கறானுங்க. நடிக்கறானுங்க. எவன் சொத்து போனா என்னா..?
நாம சௌகரியாமா இருக்கோமா..? அவ்வளவுதான். எம் பொண்டாட்டி கூட சொல்லுது. “விட்டு தொலைச்சுடு அந்த இடத்தை..”ன்னு. நானா விடுவேன்..? எம் பொண்டாட்டி வூட்டு சொத்தா..? ஒரு கை பாத்துடறதுன்னு அந்த சலூனுக்குள்ளாற என்னா செய்யறதுன்னு யோசிக்கறேன். அந்த சிரைச்ச முகத்த கொழந்த மாதிரி தடவிட்டே எழுந்த ஆளு மேல எதையோ தெளிச்சுட்டு கமகமன்னு திரும்பி வெளிய கிளம்பறப்ப என்னைய பாத்துட்டு “அண்ணாச்சி.. வணக்கம்..”னு பவ்யமா கும்புடு போடறப்ப எனக்கு கோவமான கோவமா வந்துருச்சு. என்னா காரணமுன்னா அந்தாளு என்னைய விட வயசான ஆளு. இந்த செவுரு பிரச்சனைல கிண்டலடிக்கறான்னு எனக்கு தெரிஞ்சப்ப நான் உடனே அவன் காலுக்கு பக்கமா பல்டி அடிக்கற மாதிரி உடம்ப வளைச்சு பதிலுக்கு வணக்கம் சொல்ற மாதிரி செஞ்சதும் அந்தாளுக்கு முகம் திருகி மூக்கு ஒரு பக்கமா திரும்பி காதுங்க கூட ஆட ஆரம்பிச்சிருச்சு. உடனே பலமா சிரிக்கறான் அந்த சலூன்ல முடியெல்லாம் பறந்து காத்துல அலையற மாதிரி சிரிக்கறான். இப்ப அங்க இருந்தவங்களும் சிரிக்கறாங்க. கூட சலூன்காரனும் சேந்துக்கறான். நான் விடுவேனா..? நானும் சேந்துக்கறேன் அவங்களோட..
“க்க்கெக்க.. பிஇஇக்கக..”ன்னு சிரிக்கறேன் அவங்களுக்கும் மேல. அப்படியே ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்கிட்டு சிரிக்கறப்ப சட்டுன்னு அமைதியாயிடுது அந்த இடம். அந்த ஆசாமி “அண்ணாச்சி நல்லா தமாஸ் பண்ணறாரு..”ன்னு சொல்லிட்டு இடத்து காலி பண்ணறாரு. நான் மத்தவங்கள பாக்கறேன். அவங்க என்னைய பாக்கறாங்க. சலூன்காரன் எங்கள பாக்கறான். நான் இத்தான் சமயமுன்னு “என்னா ஏழுமல..?”ன்னு கேக்கறேன் சலூன்காரன்கிட்ட.
அவன் திருதிருன்னு பல்ல காட்டிக்கிட்டு இன்னொருத்தன்கிட்ட “கட்டிங்கா..? ஷேவிங்கா..?”ன்னு கேக்கறான். நான் இந்த சமயமா பாத்து இருக்கற அந்த ஒத்த சேர்ல போயிட்டு உக்காந்துக்கறேன். இன்னும் அமைதியாயிடுது அந்த இடம். எல்லாரும் முழிக்கறானுங்க. அந்த ஏழுமல “உங்களுக்கு முன்னாடி மூணு பேரு இருக்கானுங்க..”ன்னு எச்சில முழுங்கிட்டே சொல்லறான். நான் உர்ர்..ருன்னு பாத்துட்டு “ஒரு விசயம் சொல்லட்டா..?”
“சொல்லுங்க..”
“போலிசுக்கு போலாமுன்னு இருக்கேன்..”
“எதுக்கு..?”
“அப்பறம் வக்கீல பாக்கலாமுன்னு இருக்கேன்..”
“எதுக்கு..?”
“யாரெல்லாம் என்னைய தொந்தரவு பண்ணறாங்களோ அவங்க மேல கேச போட்டு..”ன்னு சொல்லிட்டிருந்தப்பவே அந்த ஏழுமல புசுபுசுன்னு பின்னாடி பாக்கறான். நான் கண்ணாடி வழியா பாத்தா பின்னாடி இருந்தவனுங்க திருதிருன்னு விழிச்சுக்கிட்டே அந்த இடத்த வேகமா காலி பண்ணறானுங்க. இந்த ஏழுமல என்னைய பாத்து பரிதாபமா “உங்க பிரச்சனைய வெளியில வச்சுக்க வேண்டியதுதானே.. பாருங்க போயிட்டானுங்க மூணு பேரும்..”
“அவங்க சிரிச்சப்ப நீயும் சேந்துதானே சிரிச்ச..”
“ஆமா..”
“அப்ப மட்டும் உறைக்கலையா உனக்கு..?”
“எனக்கு எதுக்கு உறைக்கனும்..? நீங்க பண்ணது நல்லாயிருந்துச்சு. நல்லா காமடியா”
“காமடியா பண்ணேன் நான்..?”
“ஆமாங்க. எல்லாருக்குமே புடுச்சுருந்தது. ஆமா எதுக்கு போலிசு..? வக்கீலு..? வீட்ல பிரச்சனையா..?”ன்னு அவன் கேட்டப்ப எனக்கு என்னா செய்யறதுன்னு தெரியல. எனக்கு தப்பா ஏதாவது தோணிருச்சோன்னு தோணுது. வர வர அக்கம் பக்கத்து தெருவுல யார பாத்தாலும் சந்தேகமா இருக்குது. வில்லனுங்கள பாக்கற மாதிரி. இப்ப இங்க யாருமில்ல. அதனால அவன்கிட்ட வெளிப்படையா கேக்கறேன். “நான் எந்த தெருவுல இருக்கறேன்..?”னு கேக்கறேன்.
அவன் புரியாத மாதிரி “முதல் தெருவுல..”
“இது எத்தனையாவது தெரு..?”
“மூணாவது தெரு..”
“கவுன்சிலரு எந்த தெரு..?”
“இந்த தெருதான்..”
“ரண்டாவது தெருவுல என்னா பிரச்சன..?”
“பிரச்சனையா..?” என்றவன் ஒரு சில நோடிகள் யோசித்து “அந்த பூசாரி பொண்டாட்டி ஓடிப்போயிட்டதா சொல்லறாங்க..”ன்னு சொன்னப்ப எனக்கு எரிச்சலா வந்துச்சு. நடிக்கறானோன்னு மறுபடி சந்தேகம் வந்தப்ப அவன் விடாம “அப்பறம் கிரிக்கெட்டு விளையாடறப்ப பந்து காணாம போயிடுச்சுன்னு ரண்டு பசங்களுக்குள்ளாற சண்டை..”
“அடடா..”
“பஞ்சாயத்து பண்ணி நாலு மணி நேரம் உக்காந்து பேசி அதை தீத்து வச்சாரு கவுன்சிலரு..”
“ஓ..”
“இப்போ மறுபடி கிரிக்கெட்டு விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க..”
“இதெல்லாம் நியூஸ்ல வந்துடுச்சா..?”
“எந்த நீயூஸ்ல..?”
“டெக்கான் ஹெரால்டு.. த இந்து.. இந்தியன் எக்ஸ்பிரஸ்.. அப்பறம் இந்துஸ்தான் டைம்ஸ்..”
“என்னாங்க இதெல்லாம்..?”
“எல்லாம் வெளிநாட்டு பத்திரிகைங்க..”ன்னு சொன்னதும் அவன் சிரிச்சுட்டே “என்னாங்க தமாசு பண்ணறீங்க..?”
“யாரு பண்ணறது..?”ன்னு கேட்டப்ப அவன் இன்னும் சீரியஸா “இன்னொரு முக்கியமான விசயத்த விட்டுட்டேனே..?”
“அந்த ரண்டாவது தெருவ பத்தி..?”
“ஆமாங்க..”
“சொல்லு..”ன்னு உசார் ஆகறேன். பதபதன்னு ஆகுது. அவன் என்னோட இடத்த பத்தி பேசினான்னா அவன் முகத்துல குத்திட்டு நேரா போலிஸ் ஸ்டேசனுக்கு போயிடலாமுன்னு தீர்மானிச்சுக்கறேன். அப்ப அவன் சொன்னது என் காதுல சரியா விழலை. நான் அவனையே பாத்துட்டு “இன்னொரு முற சொல்லு..”ன்னு கேக்கறேன். அவன் நிதானமா “யாருக்கும் சொல்லாதீங்க..”
“சொல்ல மாட்டேன்..”
கிசுகிசுப்பாக “பொழப்பு கெட்டுப்போகுமுங்க..”
“சொல்ல மாட்டேன்..”
“நான் சொன்னேனில்ல.. அதாவது பூசாரி பொண்டாட்டி போயிட்டான்னு..”
“ஆமா..”
“அவ யாரு கூட போயிட்டான்னு எனக்கு தெரியும்..”னு சொன்னப்ப எனக்கு உண்மையிலேயே அவனைய குத்தறதா வேணாமான்னு குழப்பமா போச்சு. பேசாம எழுந்திருச்சு அவனைய பாத்துக்கிட்டே வெளில வந்தப்ப அவன் என்னைய பாத்து கெஞ்சறான்.
“ஏற்கனவே மூணு பேரு போயிட்டானுங்க. காசு போச்சு. நீங்களாவது செரைச்சுட்டு போங்க..”
0000
எனக்கு மொத முறையா குழப்பமா போச்சுது. என்னாடான்னு வீட்டுக்கு போறப்ப கைய சொறிஞ்சுக்கிட்டு யோசிச்சுட்டே போறேன். அப்ப அந்த போண்டா கட வருது. பக்கத்துல இனிப்பு கட. வெளியூர்ல இருந்து வந்து ஜிலேபி போட ஆரம்புச்சு அதுக்கு கூட்டம் சேத்தி அப்புடியே ஜாங்கிரி.. ரசகுல்லா.. மைசூரு பாக்கு.. அப்பறம் என்னாங்க அது.. உம்.. நூல் நூலா வருமே.. ம்.. சோன்பப்புடி.. இதெல்லாம் போட்டு இன்னும் கூட்டத்த சேத்தி அப்படியே பருப்பு.. கடல.. முக்கடல.. பச்ச பட்டாணின்னு காரத்தையும் மசாலையும் சேத்தி இன்னும் கூட்டத்த சேத்தி.. இப்ப அவன் பெரியாளு. இந்த ஏரியாவுல வீட்டு விசேசத்துல ஆரம்புச்சு முதலிரவுக்கு தட்டுல லட்டுக்கு வரைக்கும் இங்கதான் வருவானுங்க. இவனெல்லாம் இன்னிக்கு நிம்மதியா இருக்கும்போது பரம்பர பரம்பரயா இங்கேயே இருக்கற என்னைய ரண்டு மாசமா தூங்காம வச்சுட்டானுங்க இவனுங்க. விடமாட்டேன் இவனுங்கள. முக்கியமா அந்த கவுன்சிலரு பையல. யாரையும் நம்பக்கூடாது. அந்த சலூன்கார பையல கூட. தெரியாத மாதிரி பூசாரி பொண்டாட்டிய பத்தி பேசி விசயத்த மறைக்கறான். நடிகர் திலகமுன்னு நினைச்சுக்கிட்டு. இருங்கடா டேய்.. யாருக்கிட்ட.. ஒத்தையா நிப்பேன்டா எல்லாத்துக்கும்.. ஒருத்தனையாவது உள்ளாற தள்ளாம விடமாட்டேன்டான்னு நினைச்சுக்கிட்டே அந்த இனிப்பு கடைக்குள்ளாற நுழையறேன். அங்க முன்னாடி உக்காந்து சாப்புடறதுக்கு கொஞ்சமா இடமிருக்கும். இன்னொரு பக்கம் ஓரமா எட்டிப்பாத்துட்டு பலகாரம வாங்கிட்டு போகலாம். கண்ணுக்கு முன்னாடி செய்யறோமுன்னு காட்டறதுக்காக ரண்டு பொம்பளைங்கள பொம்ம மாதிரி மேலாக்க துணி சுத்தி தலைக்கு கூட மஸ்லீன் துணி மாதிரி குல்லா வச்சு சுத்த பத்தம் காட்டி.. உம்.. புத்திசாலி பைய. இப்போ அந்த சின்ன பையன் வந்து “என்னா வேணும்..?”னு கேட்டப்ப மொதலாளி பைய உள்ளாற இருந்து எட்டிப்பாத்து “அடடே.. வாங்க அண்ணாச்சி..”ன்னு சொல்லறான். இது மரியாத. அந்த சின்ன பைய கூட பெருசா வணக்கம் போட்டு இப்போ “என்னா வேணும்..?”னு கேக்கறான் மரியாதையா..
“இப்பதான் வணக்கம் போட தோணுச்சா..?”ன்னு முகத்த உர்ர்..ருன்னு வச்சுட்டு கேட்டப்ப அவன் முதலாளிய காட்டி “எங்கப்பாவே மரியாத தர்றாரு பாருங்க உங்களுக்கு..”
“அதுக்குதானா.. இந்த ஏரியாவுல பெரிய மனுசனுங்கள தெரிஞ்சுக்கோப்பா..”
“சரிங்க அண்ணாச்சி..”
“உனக்கும் அண்ணாச்சியா..?”ன்னு கேக்கறப்ப அந்த முதலாளி பைய கண்ணாடி கூண்டு பலகாரங்கள தாண்டி எங்கிட்ட வந்து “அண்ணாச்சி.. எங்க ஆளையே காணோம் ரொம்ப நாளா..?”ன்னு கேட்டப்ப இதான் சமயமுன்னு “ஒரு விசயம்பா..”
“சொல்லுங்க அண்ணாச்சி..”
“ஜிலேபி போடறதுக்கு பொண்டாட்டிக்கு தெரியல..”
“அனுப்புச்சு விடுங்க. கூட இருந்து பாக்கட்டும்..”
“எப்போ..?”
“எப்ப வேணுமுன்னாலும்..”னு சொல்லிட்டு வேற ஆளுக்கிட்ட “அய்யாவுக்கு அரக்கிலோ ஜிலேபிய கட்டுங்க..”ன்னு சொல்லறப்ப அவன் நம்ம பக்கம் திரும்புவான்னு அவன் முகத்தையே பாத்துட்டு இருக்கேன். அவன் திரும்பாம அப்படியே உள்ளாற போறப்ப குரல கனைக்கிறேன். அவன் திரும்பி பாத்து “அட்டா..மறந்துட்டேன் அண்ணாச்சி..”ன்னு சொல்லிட்டு பையன்கிட்ட “என்னடா சொன்னாரு அவரு சாப்புடறதுக்கு..?”
“ஓண்ணும் சொல்லலை..”ன்னு சொன்னதும் எம் பக்கமா திரும்பி “சொல்லுங்க அண்ணாச்சி.. ஜிலேபி சொல்லவா..? இப்பதான் போட்டுச்சு.. இதமா பதமா சூடா வாயில போட்டா அப்படியே கரைஞ்சு..”ன்னு இழுத்தப்ப நான் “நம்ம தெருவுல ஏதாவது பிரச்சனைன்னு சொன்னாங்களா..?”ன்னு கேக்கறேன்.
அவன் திருதிருன்னு விழிச்சுட்டு நிக்கறான். பிறகு கிட்டக்க வந்து “என்னாங்க அண்ணாச்சி..?”
“நம்ம ஏரியாவுல ஏதாவது பிரச்சனைன்னு..?”
“சொன்னாங்களே..”
“அப்படியா..?”ன்னு யோசிக்கறப்ப எனக்கு பதபதன்னு இருக்குது. இப்ப சொல்லப்போறான்னு காத தீட்டிக்கிட்டு கேட்டா அவன் கிசுகிசுப்பா “பூசாரி பொண்டாட்டி போயிட்டாளாமே..”ன்னு சொல்லறான். எனக்கு என்னா சொல்லறதுன்னு தெரியல. அவனைய திரும்பி பாத்தா அவன் “பேபேபே…”ன்னு முழிச்சுக்கிட்டே இப்ப கொஞ்சம் சத்தமா பக்கத்துல பையன் இல்லாதத கவனிச்சு “யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. எதுக்கு வம்பு..”ன்னு உள்ளாற வியாபாரத்துக்கு போயிடறான். நான் இதுக்கு மேல இங்கிருக்க முடியாதுன்னு கிளம்பி நம்ம தெருவுல திரும்பறப்போ என் வீட்டு வாசல்ல யாரோ நிக்கறத கவனிக்கறேன்.
நம்ம கவுன்சிலரு..
0000
அந்தாளு என்னைய பாத்ததும் அவனாவே என்னைய பாத்து வந்தான். வீட்டுக்கு வெளிய இருந்து எம் பொண்டாட்டி பாக்கறா. கிட்டக்க வந்தவன் “ஜிலேபி சாப்புடலாமா..?”ன்னு கேக்கறான். இவன் இப்ப வந்தது எனக்கு புடிக்கல. ஆனா இவனுக்கு ஜிலேபி வாங்கி கொடுத்துட்டு அவன் நச்சு.. நச்சுன்னு சப்பிட்டு இருக்கறப்போ விட்டுட்டு வந்துடலாமுன்னு அவனோட திரும்ப அந்த கடைக்கு வந்தப்ப அந்த பையன் மறுபடி சிரிச்சுட்டு வந்து நிக்கறான். “வெளிய வந்து பாத்தேன். நீங்க இல்லை..”ன்னு வேற சொன்னதும் கவுன்சிலரு என்னயை பாத்துட்டு “அப்போ ஜிலேபி சாப்புட்டாச்சா..?”ன்னு கேக்கறான்.
“அட.. இங்க வந்துட்டு சும்மாச்சும் உக்காந்துட்டு கெளம்பிட்டேன்..”ன்னு சொல்லிட்டிருந்தப்ப அந்த முதலாளி பைய என்னைய பாத்து கண்ணை சிமட்டறான். ஏதோ சிக்னல் வேற பண்ணறான். அப்பறம் கிட்டக்க வந்து பையன கோவமா பாக்கற மாதிரி பாத்திட்டு “அண்ணாச்சி கிளம்பிட்டாரு. என்னடா கவனிச்சே அவரைன்னு திட்டிட்டு இருந்தேனுங்க..”ன்னு சொன்னவன் கவுன்சிலர பாத்துட்டு “அய்யாவும் வந்துருக்காரு.. ஜிலேபி கொண்டாடா..”ன்னு சொல்லறப்ப கூட என்னைய பாத்து கண்ணால ஏதோ சிக்னலு பண்ணறான். எனக்கு இங்க எதுக்கு வந்தோமுன்னே மறந்துப்போச்சு. அப்ப கவன்சிலரு என்கிட்ட “நான் பேசிட்டேனுங்க..”ன்னு சொல்லறான்.
எனக்கு புரியல. அத புருஞ்சுட்டு “அதாங்க உங்க பிரச்சனைய பத்திதான்..”
“யாருக்கிட்ட..?”
“யாருக்கிட்ட பேசுவாங்க..?”
“நீங்கதான் சொல்லனும்..”
“அட அந்த ரண்டாவது தெருவுலதான். விடாப்புடியா இருந்தானுங்க. நான் விட்டாத்தானே. அவங்களுக்கு சட்டமெல்லாம் தெரியாதுங்க. யாராச்சும் சொல்லறத கேட்டு ஆடுவானுங்க. அப்பறமா உள்ளாற போயிட்டு மாட்டிக்குவானுங்க. ரொம்ப நாளா பிடி கொடுக்காம இருந்தானுங்க. அந்த கொக்கி ராமுடு இருக்கான் பாருங்க. அவன்தாங்க பிரச்சன. எல்லாரையும் தூண்டி விட்டுக்கிட்டு கோர்ட்ல கூட தெருக்காரங்களுக்கு சாதகமா முடியுமுன்னு நம்பவச்சு.. பிரச்சாரம் மாதிரியே பண்ணிட்டு.. உங்க இடத்த அபகரிக்கனமுன்னு திட்டம் போட்டு அதே மாதிரி நடிச்சுட்டு.. ஆனா இன்னிக்கு கப்சுப்புன்னு பண்ணிட்டேனில்ல அவனுங்கள..”
“அவனுங்கன்னா..?”
“அதாங்க அந்த கொக்கி ராமுடு ஆளுங்கள..”
“கொக்கி ராமுடுவா..?”
“அவன் பேரு அத்தான்னு நினைக்கறேன். வேற பேரு இருக்குமுங்களா..?”ன்னு கேட்டதும் எனக்கு அந்த கடக்காரனோட சிக்னலோட சேந்து இதுவும் புரியாம ஆனா அந்த ராமுடுங்கிற பேரு சுருசுருன்னு எனக்குள்ள ஏத்துது கோவத்த.. “யாருங்க அவன்..?”னு சத்தமா கேட்டதும் என்னாவோ ஏதோன்னு முதலாளி பைய ஓடி வர்றான். அட இவனோட வேறன்னு நினைச்சுட்டு கண்ணால அவனுக்கு ஏதுமில்லங்கிற மாதிரி சொல்லிட்டு அவன் அப்பாடான்னு போனதும் மறுபடியும் “யாருங்க அது..?”ன்னு கேக்கறேன்.
அதுக்கு அந்தாளு சிரிச்சுக்கிட்டே “என்னாங்க கொக்கி ராமுடு யாருன்னு தெரியாதுங்கற மாதிரி கேக்கறீங்க.. “
“தெரியாதுதான்..”
“அதாங்க அந்த கான்ட்ராக்டர் பையன். போன வருசம் அடிதடி ஆகி தியேட்டரு பக்கம் போலிஸ் புடுச்சுட்டு போனாங்க பாருங்க அவனைய. நான்தானே முன்னாடி நின்னு வெளிய கூட்டாந்தேன்..”
“அப்படியா..?”
“கான்ட்ராக்டரு என்னைய தெய்வமா பாப்பாருங்க அதுக்கப்பறமா. பையன சென்னைல பிசினஸ் பண்ண அனுப்புச்சுட்டாரு. அவன்தான் இங்க வரும்போதெல்லாம் உங்க இடத்த பத்தி தெரிஞ்சுக்கிட்டு பிரச்சன பண்ணியிருக்கான். ஏன்னா அவங்க வீடு உங்க சுவருக்கு பக்கத்துலதானே வருது..”ன்னு சொன்னப்ப நான் அந்த கான்ட்ராக்டர பத்தி யோசிக்கறேன். அப்புடி ஒருத்தரு இருக்காரான்னு குழப்பமா இருக்குது. நிறைய பேரு வர்றாங்க.. போறாங்கன்னு தோணும் இந்த ஏரியாவுல ஒரு சிலர பாக்கும்போது. அப்படிப்பட்ட ஆளா இருக்குமோன்னு நினைக்கறப்ப கவுன்சிலரு அவனுக்கு வந்த ஜிலேபிய சப்பிட்டே மெல்ல ஆரம்பிச்சான். அவன் ஜிலேபிக்காக வந்திருக்கானோன்னு தோணுச்சு. என் வீட்டை தாண்டி நாலு வீடுகளை தாண்டினா மெயின் ரோடு. பின்னாடி தெருவுல என் வீட்டு தடுப்ப தாண்டி ரோட்ல இருந்து அந்த நாலு வீடடுக்கு தெரு தொடர்ந்து போகும். அப்படி பாத்தா எங்க பரம்பரையிலேயே போராட்டம் இருந்திருக்கலாமுன்னு தோணுது. முன்னாடி பெரிய விறகு மண்டி இருக்குது. இடது பக்கமா திரும்புனா ஒரு டீக்கடைய தாண்டி அப்பால ஒரு டைலர் கடைய தாண்டி அந்த பின்னாடி தெரு.. அத தாண்டினா இந்த ஸ்வீட் கட. நான் அந்த கான்ட்ராக்டர பத்திதான் யோசிக்கறேன். அந்தாளு இங்கேயே பல வருசமா இருக்கற ஆளுன்னா நான் நிச்சயமா பாத்திருப்பேன். வீட்டுக்கு பின்னாடி பக்கத்துலதான் வீடுன்னு சொல்லறான். மேல மாடில இருந்து பாத்தா கூட அந்த வீட்ட ஒரளவுக்கு பாக்கலாம். எனக்கு அந்த தெருவுல ஒரு வாத்தியாரு.. சண்முகம்.. வெங்கடாசலம்.. கோபி இவனுங்கெல்லாம் நல்லா பழக்கம்தான். இந்த ரண்டு மாசமா அவனுங்கள ரோட்ல பாத்தா கூட நான் பேசறதில்லை. கண்டுக்காம போயிடுவேன். கோபி நின்னுட்டு ஒரு நா ஆச்சரியமா பாத்தான். சர்தான் போடான்னு போயிட்டேன். எல்லாரும் எனக்கு எதிரா வேல செய்யும்போது நட்பாவது ஒண்ணாவது. அந்த சண்முகம் இருக்கான் பாருங்க. உள்ளாளு.. என்னா நினைக்கறான்னே தெரியாது. ஆனா பேச்சுல பாயாசத்த தடவிட்டு பேசுவான். அவன் ரட்டை மனுசன் அப்படீன்னு நினைக்கறப்ப யாருதான் ரட்டையா இல்லாம இருக்காங்கன்னு சமாதானம் பண்ணிக்கறேன். வாத்தியாரு காலைல ரோட்ல வாக்கிங் பண்ணறப்ப கூட வருவாரு. பெரும்பாலும் ஸ்கூல பத்திதான் பேசுவாரு. ரொம்ப போரடிக்கும். ஒரு விசயத்த பத்தி நாலு நாள் கழிச்சு மறுபடி அதை பத்தியே பேசுவாரு. பெரும்பாலும் பொம்பள டீச்சருங்கள பத்தி பேசுவாரு. அப்படியே நகந்து வார்த்தைல பொடி வைப்பாரு.
வெங்கடாசலமும் கூட இருப்பான். அவனுக்கு இந்த பொடி வச்சு பேசற வார்த்தைங்கள புடிக்கும். இன்னும்.. இன்னும் அப்படீங்கற மாதிரி தூண்டிவிட்டு வாத்தியார பேச வைப்பான். அவரு இன்னும் கொஞ்சம் வார்த்தைங்கள சேத்துவாரு. பெரும்பாலும் எல்லாம் அவரோட கற்பனையா இருக்குமோன்னு நான் நினைச்சுக்குவேன். ஆகாத போகாத விசயங்கள பெருசு பண்ணி கில்லாடித்தனமா சொல்லுவாரு. அப்பறம் எந்த பொம்பள டீச்சருங்கள புடிக்குமோ அவங்கள பத்தி ஏத்தி சொல்லுவாரு. அந்த பொம்பளைங்க இவர தூரமா வச்சிருப்பாங்கன்னு தோணும். அல்லது இவர அலட்சியமா நினைச்சிருக்கலாமுன்னு தோணும். அல்லது இவருக்கு அந்த பொம்பளைங்க உடம்பு எப்பவும் குறுகுறுன்னு இருக்குமுன்னு தோணும். தன்னைய இந்த இடத்துல தெனவுக்கு சொறிஞ்சுக்கிறாரோன்னு கூட நினைச்சுக்குவேன். அப்ப பயமா இருக்கும் அவரோட வார்த்தைங்க. எத்தன பொம்பளைங்கள இப்புடி நாலு பேருக்கு முன்னாடி கதையா அவுத்து விட்டிருப்பாருன்னு நினைக்கறப்ப எம் பொண்டாட்டிய பத்தி கூட நினைச்சுக்குவேன்.
நான் இல்லாதப்ப எம் பொண்டாட்டிய பத்தி கூட பேசலாம். ஒரு ஆளு நியாயமான ஆளா இருந்தா என்னா செய்யனும்..? இந்த மாதிரி பேசறத தடுக்கனும் இல்லையா..? நான் அத அப்பப்போ செஞ்சேன். அது அந்த வாத்தியாருக்கும் புடிக்காது. வெங்கடாசலத்துக்கும் புடிக்காது. அந்த வெங்கடாசலம் இருக்கான் பாருங்க. பச்சையா பேசுவான். அதுக்கு வாத்தியாரே பரவாயில்ல. வெங்கடாசலம் பேசும்போது பொண்டாட்டிக்கிட்ட கிடைக்காதத கதையா சொல்லற மாதிரி இருக்கும். பின்னாடி ஒரு ஆதங்கம் இருக்கற மாதிரி தோணும். ஆனா வேற பொம்பளைக்கிட்ட அனுபவிச்சத பத்தி பேசும்போது அந்த வாத்தியாரு பைய மாதிரி கத விடறான்னு நினைச்சுக்குவேன். புதுசு புதுசா சொல்லி இப்படி ஒண்ணு இருக்குதான்னு யோசிக்க வச்சு கூட வர்றவங்கள குறுகுறுப்பா வீட்டுக்கு அனுப்பி வீட்டுக்கு போனதும் பொண்டாட்டிய தனியா தள்ளிட்டு போயிட்டு தாகத்த தீத்துக்கிட்டாதான் ஆகும் அப்படீங்கற மாதிரி பண்ணிடுவான். நான் கூட ஒரு முற தாங்கமாட்டாம வீட்டுக்கு போனதும் பொண்டாட்டிய பாத்ரூமுலேயே.. உம்.. கதையா சொன்னாலும் நெஜம் அப்படீங்கற மாதிரி சொல்லி உசுப்பேத்தி அவனுங்க புத்திசாலி ஆயிடறானுங்களே..? இதையெல்லாம் பத்தி நினைக்கறப்ப எம்மேல கோவமா வருது. எல்லாம் ரண்டு மாசத்துல போச்சு. வெளிய போறதில்லை. பழகறதலை. பேசறதலை. பாத்தாலும் பாக்காத மாதிரி போறதுக்கு பழகிட்டேன். பொம்பளைங்கள பாத்தா இன்னும் கோவமா வருது. வீட்டுக்கு ஒரு கோஷ்டி வந்துட்டு போன பிறகு அவங்கள்ள ஒருத்திய பாத்தா கூட அசிங்கமா நினைப்பு வருது. ரொம்ப கட்டுப்படுத்திட்டு யோக்கியன் மாதிரி முகத்த வச்சுக்கிட்டு கண்ண கூட நல்லத்தனமா வச்சுக்கிட்டு நடிக்கறதுக்கு கஸ்டமா இருக்குது. எனக்கு பலமும் அதிகாரமும் இருந்தா அன்னைக்கு வந்த பொம்பளைங்கள வீட்லேயே வச்சு மாத்தி மாத்தி.. உம்.. கற்பனைக்கு நல்லாதான் இருக்குது.
நெஜம்..?
அந்த கவுன்சிலரு ஜிலேபிய கடிச்சது இல்லாம ஊட்டுக்கு வேற பார்சலு சொன்னான். அதுவும் ஒரு கிலோன்னு. அவன் கடிக்கறதுக்கு நான் காசு கொடுப்பேன். வீட்டுக்கு வாங்கிட்டு போறதுக்கு..? அவனா குடுத்தாலும் நம்மள எதிர்பாப்பானோன்னு ஒரு எண்ணம் வந்தப்ப அப்படியெல்லாம் செஞ்சாதான் விழயத்த நமக்கு சாதகமா கொண்டு போவான்னு நினைச்சுக்கிட்டப்ப எனக்கு எம் மேலேயே வெக்கமா இருந்துச்சு. ஆனா அவன் சட்டுன்னு பைல இருந்து பணத்த எடுத்துக்கொடுத்து “சாப்புட்டதுக்கு.. வீட்டு பார்சலுக்கு..”ன்னு சொல்லிட்டு என்னைய பாத்து “வீட்டுக்கு வாங்கிட்டு போங்க. ஒரு கால் கிலோ கட்டுப்பா இவருக்கும் சேத்தி..”ன்னு மறுபடியும் அழுத்தமா சொல்லிட்டு என்னைய பாத்தப்ப நான் “வேணாம்.. வேணாம்..”னு சொன்னத பாத்து சிரிச்சுட்டே “நீங்க கவலப்படாம வூட்டுக்கு போங்க.. மத்தத நான் பாத்துக்கறேன்..”னு இன்னொரு ஜிலேபிய கடிச்சான்.
அவன் கடிச்சத பாத்து எனக்கு என்னாவோ வாத்தியாரு பைய சொன்ன ஒரு ஜிலேபி கத ஞாபகத்துக்கு வந்திருச்சு. அந்தாளு “ஜிலேபிய கடிக்கற மாதிரி கடிச்சப்போ ஒழுக ஆரம்பிச்சுருச்சு..”ன்னு சொன்னதுதான் நான் ஒரு நாளு பொண்டாட்டிக்கிட்ட வூட்டுக்கு வந்து பாத்ரூமுல உடம்போட உடம்பா சண்ட போட்டதுக்கு காரணம். அப்போ அவ ரண்டு நாளா “வலிச்சுட்டே இருக்குது..”ன்னு சொல்லிட்டே இருந்தா. எனக்கு அதுவும் சேத்தி வெக்கமா இருந்துச்சு இப்ப. அவன் ஜிலேபிய கடிக்கறத பாக்கறத விரும்பாம அவனும் அப்படிதான் வூட்ல பொண்டாட்டிக்கிட்ட நடந்துக்குவானோன்னு நினைச்சுக்கிட்டப்ப வாத்தியாரு பைய ஏன் இப்படி கற்பனையா கத விடறான்னு புரியற மாதிரி இருந்துச்சு. இப்ப பிரச்சன அதுவா இதுவான்னு என் மேலேயே கோவிச்சுக்கிட்டு அவன்கிட்ட “கான்ட்ராக்டரு பேரு என்னா..?”ன்னு கேட்டேன். அதுக்கு அவன் என்னைய ஆச்சரியமா பாத்துட்டு “அந்தாள பத்தி விசாரிக்கவே இல்லையா நீங்க..?”ன்னு கேட்டப்ப ஒரு எரிச்சலு கூட ஓரமா தெரிஞ்சா மாதிரி இருந்துச்சு. அவன் எனக்கு எல்லாம் தெரிஞ்சுருக்குமுன்னு நினைச்சுட்டு இருக்கான். முக்கியமா கான்ட்ராக்டரு அப்பறம் அந்தாளோட பையன பத்தி.. ஆனா உடனே முகத்த பழைய மாதிரி வச்சுக்கிட்டு “அத்தாங்க வெல்லத்துக்காரு..”
“ஓ.. வெல்லம் விக்கறவனா..?”ன்னு சொன்னப்ப அவன் உடனே என்னைய பாத்து “பெரிய மனுசனுங்க..”
“என்னா பெரிய மனுசன். எப்புடி கான்ட்ராக்டரு தொழில்ல இறங்கினான்..?”
“பையன் மெட்ராஸ்ல பிசினஸ் பண்ணறான் இல்லையா..?”
“ஆமா..”
“அதுல வந்த வாய்ப்பு. வெல்லம் எடுத்து சென்னைக்கு அனுப்பறாரு. பையன்தான் அப்பனோட தொழில அங்க பெருசு பண்ணிட்டான். நல்லா சம்பாதிக்கறான்..”ன்னு சொன்னவனுக்கு போன் வந்து உடனே எழுந்திருச்சு “வீட்ல இருந்து கூப்புடறாங்க..”ன்னு சொன்னவன் தலையாட்டிட்டே வேகமா போயிட்டான். நான் அங்கேயே உக்காந்திட்டு வேடிக்க பாத்துட்டு இருக்கேன். தகதகன்னு எரிய ஆரம்பிச்சுருச்சு. வெல்ல ஆசாமிய தெரியும். கவுன்சிலரு சொன்னா மாதிரி பெரிய மனுசன்தான். ஆனா இதுக்கப்பறம் என்னா மரியாத வேண்டிக்கிடக்கது அவனுக்கு..? இந்த ஏரியாதான் அவனும். என்னைய மாதிரி பரம்பரையா இருக்கறவன். அந்த பையனையும் தெரியும். மாடியில இருந்து பாத்தா அவங்க மாடில சில சமயம் இருப்பாங்க. அதிகமா பழக்கமில்ல. எப்பவாச்சும் நேர்ல பாத்துக்கிட்டா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவான். பின்னாடி தெருவுல வீட்ட ஒட்டிதான் அவனோட வீடும் வருது. இதுதான் சங்கதியான்னு வீட்டுக்கு திரும்பறப்ப கடக்காரன் பக்கத்துல வந்து நின்னுட்டு “பூசாரி பொண்டாட்டிய பத்தியா பேசனீங்க..?”ன்னு கேக்கறான். எனக்கு அந்த சமயத்துல என்னா சொல்லறதுன்னு தெரியல.
“ஆமா..”ன்னு சொல்லி அவனைய தொந்தரவு பண்ணனமுன்னு தோணுச்சு. ஜிலேபிய சரியா போடமாட்டான்னு தலையாட்டிட்டு கிளம்பிட்டேன். என் கைல ஜிலேபி பொட்டலத்த வச்சு அழுத்தி “அக்காக்கிட்ட குடுங்க. ஜிலேபிய கடிக்கக்கூடாது. வாயில வச்சா சர்ர்..ருன்னு கரைஞ்சுரும். அக்காக்கிட்ட சொல்லுங்க..”ன்னு சொல்லறான் சிரிச்சுக்கிட்டே.
“சொல்லமாட்டேன்..”னு சொல்லறேன்.
0000
எம் பொண்டாட்டி ஜிலேபி சாப்பிடறத பாத்துட்டு இருந்தேன். அவளுக்கு அறுங்கோணத்துல ஒரு பொட்டு இருக்கும் எப்பவும் நெத்தில. இப்பவும் வச்சிருந்தா. அவ எப்பவுமே அழகா இருப்பா. அவளுக்கு திமிரு இருக்கோ இல்லையோ எனக்கு திமிரு கழுத்து வரைக்கும் இருக்கும். வெயில்ல வாடிப்போய் வீட்டுக்கு வேர்வை வழிய வந்தா இவள பாத்ததும் எனக்கே பொறாமையா இருக்கும். பவுடரு செண்டுன்னு ஏதும் இல்லாம சாதாரணமாத்தான் இருப்பா. ஆனா அவ இருக்கற இடத்துல வாசனையா இருக்கும், அதுக்கு காரணம் என்னான்னு நானும் மண்டைய குழப்பிட்டு எல்லா இடத்திலேயும் தேடிப்புடுச்சு படிச்சு பாத்துட்டேன். உகும். அவளுக்கே தெரியல. எனக்கு இருக்கற திமிரு அவளுக்கு இல்ல. “என்னைய புடுச்சுருக்கா..?”ன்னு ஆரம்பத்துல கேட்டத இப்பவும் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். அவ திருப்பி “உங்களுக்கு ரொம்ப காம்ப்ளக்ஸ்..”ன்னு சொல்லுவா. உண்மையாவே இருந்துட்டு போட்டுமே. இப்ப இந்த ரண்டு மாசமா அவளுக்கு என் மேல ஒரே இது. அதாவது எரிச்சலு.. வெறுப்பு.. அப்பறம் கோவம். இன்னும் என்னான்னா இருக்கோ அதையெல்லாம் சேத்திக்கலாம். அந்த இடத்து பிரச்சனைல நான் அவளோட வாசனைய பத்தி பேசலையாம். மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டுகூட இருந்து பாத்தா. எனக்கு எம்மாங் கவலைன்னு எனக்குதான் தெரியும். பாட்டன் முப்பாட்டன் சொத்த பாதுகாக்கனுமேன்னு நைட்டும் பகலுமா யோசிச்சு பக்கத்து தெருக்காரங்களுக்கு சாபம் கொடுத்து கொடுத்து எனக்கே வெறுத்துப்போனது எனக்குதானே தெரியும்..
இப்ப அந்த ஜிலேபிய அவ கடிச்சு வாய்க்குள்ளாற சுத்த விட்டத பாத்து பிச்சக்காரன் மாதிரி கெஞ்சி கொஞ்சம் கேக்கலாமான்னு இருந்தப்ப அவ பேச்சு கொடுக்கறா என் கண்ண பாத்துக்கிட்டே..
“வேணுமாக்கும்..”
“ஆங்..” பேந்த பேந்த விழிச்சுட்டு இருக்கறப்போ அவ கிட்ட வந்து உக்காந்திட்டு அவ புடவையால என் முகத்த துடைச்சுட்டு என் மடி மேல படுத்துட்டு என்னைய பாத்து அந்த சோபாவுல கால நல்லா நீட்டிக்கிட்டு நெஞ்சு மேல என் கைய எடுத்து குறுக்கால போட்டு கண்ண மூடிக்கறா. அவ சில சமயம் இப்படி செய்வா. அது அவளுக்கு நிம்மதிய தர்ற மாதிரி நான் நினைச்சுக்குவேன். அப்ப அவ தலைய தடவி விடுவேன். அப்படியே கையையும்.. அப்படியே முகத்தையும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கை உடம்புல கிடைக்கற இடத்துல தடவும்போது ஏறக்குறைய அவ தூக்க கலக்கத்துக்கு போயிட்டு திரும்ப வருவா. ஒரு குழந்தையோட கால.. கைய.. முகத்த தடவும்போது கிடைக்கற சுகம் எனக்கு கிடைக்கும். அவ வளந்த குழந்தையா தெரிவா அப்ப. நானும் என்னைய சின்ன குழந்தையா நினைச்சுக்குவேன், பொண்ணும் பையனும் காலேஜ்ல இருந்து திரும்பற நேரம்கிறதால அப்பப்போ வாசல்ல கேட்டு திறக்கற சத்தம் கேக்குதான்னு நான் கவனிச்சுட்டு இருக்கேன். சத்தம் கேட்டா வெடுக்குன்னு எழுந்திருச்சு உக்காந்துக்குவா. கொஞ்சம் அசந்துட்டான்னா அப்படியே விட்டிருவேன். தூக்கத்துல பொண்டாட்டிய எழுப்பறது கஸ்டமா இருக்கும்.
இப்ப பொண்டாட்டி என்னோட முகத்தை பாத்துட்டே “கடைசியா என்னாதான் முடிவெடுக்க போறீங்க..?”ன்னு கேக்கறா. நான் ஏதும் பேசாம அவளையே பாத்துட்டு இருக்கேன். இப்ப அவ தொடர்ந்து “சொல்லுங்க..”
“சட்டம் இருக்கது. விதி இருக்குது. பத்தரம் இருக்குது. ஆதாரம் இருக்குது. ஏன் கவலைப்படனும்..?”
“யாரு கவலைப்பட்டது..?”ன்னு திருப்பி கேட்டு எழுந்திருச்சு உக்காந்திட்டு என் கைய விட்டுட்டு “ஒண்ணும் சரியில்ல நீங்க பண்ணறது..?”
“நீ கூடத்தான் இடத்த குடுத்திடலாமுன்னு சொன்னியாம்..”
“குடுத்துதான் தொலைப்போமே..”
“இது பூர்வீக சொத்து..”
“நாலு பேருக்கு பயன்படுது இல்ல..”
“இருந்துட்டு போகட்டும். சொத்த பாதுகாக்கறது என்னோட வேல..”ன்னு சொல்லிட்டு அவளையே பாத்துட்டு இருக்கேன். அவளுக்கு நான் சந்தோசமா இல்லாம இருக்கறது புடிக்கல. எப்படா இந்தாளு இந்த விசயத்த விட்டு வெளியே வருவான்னு காத்துட்டு இருக்கா. நான் என்னா செய்யட்டும்…? இப்ப அவ எழுந்திருச்சு என் முன்னாடி நின்னுக்கிட்டு “நீங்க தைரியசாலிதான். நான் ஒத்துக்கறேன்..”
“நான் என்னோட இடத்த விட்டுத்தரமாட்டேன்”
“சந்தோசம்”
“ஆனா ஏதோ சொல்ல வர்ற மாதிரி தெரியுது..”
“ஆமா.. இதப்பத்தி உங்கப்பாக்கிட்ட பேசனீங்களா..?”
“இல்லை..”
“ஏன்..?”
“தயக்கம். அவருக்கு உடம்பு சரியில்ல. அம்மாவும் முடியாம இருக்காங்க. கிராமத்துல அவங்க தனியா இருக்கறது பிடிக்காம அவங்களும் வராம அது ஒரு பக்கம் வருத்துமா இருக்கறப்ப இதைப்பத்தி பேசி எதுக்கு அவங்களுக்கு துயரத்த தரனமுன்னு”
“தப்பு.. நீங்க பேசுங்க இப்ப..”
“இப்பவா..?”ன்னு ஆச்சரியமா பாத்தப்ப அவ “இதுக்கு ஒரு முடிவு கிடைச்சாகனும். எதுக்கு அப்பாக்கு தொந்தரவுன்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியாம இல்ல. அதே சமயம் இந்த தொந்தரவு உங்களுக்கு மட்டும் இருந்திருக்காது”
“அதை பத்தி யோசிச்சுட்டேன்..”
“நீங்க இதுக்கு முன்னாடி இந்த பிரச்சனைய பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா..?”
“இல்ல..”
“சொல்லியிருக்க மாட்டாங்க. உங்கப்பா புத்திசாலி. பையன்கிட்ட எதுக்கு சொல்லி வருத்தப்பட வைக்கனமுன்னு அவரோடவே வச்சுக்கிட்டாரு. ஆனா அவரு சொல்லாததால இப்போ பிரச்சன உங்களுக்குதான். தைரியமா இருந்தாலும் இத எப்படி கொண்டு போறதுன்னு தினமும் யோசிச்சு குடும்பத்த விட்டு ரொம்ப தூரத்துக்கு போயிட்டீங்க..”ன்னு சொன்னப்ப அவ அழற மாதிரி தெரிஞ்சது. ஆனா அழலை. ஆனா சிரிச்சுக்கிட்டேதான் என்னைய பாக்கறா. ஆனா அழற மாதிரிதான் தெரியுது. எனக்கு தெரியாதா என்னா அவளைய பத்தி..? அவ ரொம்ப வருத்தப்படறது தெரிஞ்சு எனக்கு இப்பதான் உறைக்குது. உடனே அப்பாக்கு போன் பண்ணறேன். அவரு தெளிவாதான் பேசறாரு. சந்தோசமா இருக்குது. அவரும் அம்மாவும் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்னு நினைச்சுக்கிட்டு ஆனா ஒண்ணா இல்லையேன்னு நினைச்சுக்கிட்டு வழக்கமா சொல்லற மாதிரி சொல்லாம “அப்பா.. நான் உன் கூடவே வந்திடலாமுன்னு இருக்கேன்..”னு சொல்லறேன்.
அவரு இத எதிர்பாக்கல. இப்படி நான் பேசினதில்ல. அவருக்கு என்னா பதில் சொல்லறதுன்னு தெரியல. இப்ப அமைதியா இருக்காரு. அவருக்கு சொந்த கிராமத்துல வாழறது ரத்தத்துல ஊறிப்போச்சு. எனக்கு அவரோடவும் அம்மாவோடவும் இருக்கனமுன்னு நினைக்கறது ரத்தத்துல ஊறிப்போச்சு. சில சமயம் பொண்டாட்டிக்கிட்ட கேப்பேன். “நான் நினைக்கற மாதிரிதானே நீயும் நினைப்பியாம்..”னு..
அவ சிரிச்சுட்டே “பெத்தவங்கள பாத்துக்கறது பசங்களோட கடமை. என்னோட தம்பி நல்லாத்தான் பாத்துக்கறான் என்னைய பெத்தவங்கள. ஆனா..?”ன்னு இழுத்தா. அப்ப கூட இப்படிதான் அழுகையும் சிரிப்பையும் ஒண்ணா காட்டினா. அப்பறமா “நீங்க சொல்லறது சரிதான். பொண்ணுங்களுக்கும் அம்மா அப்பா நல்லாருக்கனமுன்னு நினைப்பு இருக்கும்..”னு சொன்னா. பெத்தவங்களா இருந்தா என்ன..? மாமனாரு மாமியாருன்னு இருந்தா என்னான்னு சமமா பேசினது அவளுக்கு புடுச்சுப்போச்சு. அப்படிதான் அவளும் நடந்துக்கறா. பேதம் பாக்காம. இப்ப நான் பேசறத கேட்டுக்கிட்டு மறுபடியும் பக்கத்துல உக்கார்றப்ப என் கைய எடுத்து மடியில வச்சுக்கறா. நான் அப்பாக்கிட்ட தொடர்ந்து பேசறேன்.
“என்னாப்பா சொல்லறீங்க..?”ன்னு. அவரு இப்பக்கூட அதுக்கு பதில் சொல்லாம “நீயே முடிவு பண்ணு..”
“அதுவும் சரிதான்..”
“வேற ஏதாவது பிரச்சனையா..?”
“அப்படீன்னா..?”
“அந்த இடத்து பிரச்சன..?”ன்னு சொன்னதும் நான் பொண்டாட்டிய பாக்கறேன். அவ குறும்பா சிரிச்சுக்கிட்டே என் மடில படுத்துக்கறா மறுபடியும். அப்பா தொடர்ந்து “மருமக பேசுச்சு.. இப்படீன்னு. ஏன் என்கிட்ட சொல்லலை..?”
“உங்களுக்கு தெரிய வேணாமுன்னு..”
“நானும் அப்படி நினைச்சுருக்கேன். எனக்கு எங்கப்பா சொல்லி கொடுத்தாரு. இதை எப்படி டீல் பண்ணனுமுன்னு.. நான் உனக்கு சொல்லலை..”
“இப்படி ஒரு பிரச்சன இருக்கறதே இப்பதான் தெரியுது..”
“அது நம்ம புத்திய பொருத்து. சில சமயம் பிரச்சனைய பத்தி தெரியாதப்ப நானே நினைப்பேன். ஏன் இத தெருவுக்கே தானம் பண்ணிடக்கூடாதுன்னு. உனக்கு தோணியிருக்கா..?”ன்னு சொன்னப்ப நான் யோசிச்சு லேசாக வெக்கத்தோட “இல்ல”
“தோணும் உனக்கும் இனிமே. பிரச்சனை வந்த பிறகு எனக்கும் அப்படி தோணியிருக்குது. அந்த இடத்தை தானாமா கொடுத்துடலாமுன்னு நானாதான் சிந்திச்சேன். எனக்கு பெரியவங்க கூட அப்படி யோசிச்சிருக்காங்க. ஆனா தானமா வேணாமுன்னு தெருவாசிங்க பணத்தோட வந்து நின்னிருக்காங்க..”
“அப்படியா..?”
“ஆமா.. அந்த இடத்தோட மதிப்பு அவங்களுக்கு தெரியும். அதுக்கு மேல ரண்டு மடங்கு பணத்த தர்றோமுன்னு வந்து நின்னாங்க என்கிட்ட. நான் உன்னைய மாதிரி என்னோட அப்பாக்கிட்ட.. அதாவது தாத்தாக்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்டேன். காரணம் நான் தானாமா தந்துடலாமுன்னு நினைச்ச அளவுக்கு தரனமுன்னு தோணலை. பணத்துக்கு கூட..”ன்னு அவரு சொன்னப்ப அவரும் நானும் இந்த இடத்துல ஒத்துப்போற மாதிரி இருந்துச்சு. அவரு தொடர்ந்து பேசறப்ப “அந்த கவுன்சிலரு.. அந்த வெல்லத்துக்காரு.. அப்பறமா அவரோட பையன்.. அந்த தெருவாசிங்க பத்தியெல்லாம் மருமக சொல்லுச்சு. கவுன்சிலரு இந்த விழயத்துல டிராமா ஆடறான். இடம் தெருவுக்கு சேந்த மாதிரி காட்டினா இவனுக்கு பேரு வரும். அடுத்த முற ஈஸியா ஜெயிச்சுட்டு போயிடலாம் பாரு..”
“அப்ப என்கிட்ட சொல்லறது..?”
“பொய்யி.. உள்ளுக்குள்ளாற கான்ட்ராக்ட்காரனை தூண்டி விட்டு அந்தாளு பையன் மேலேயும் காரணம் சொல்லி கூட்டா ஏதோ செய்யறானுங்க. ஒரு முகம் உனக்கு சாதகமாவும் இன்னொரு முகம் எதிராவும் காட்டறது உன்னைய குழப்பறதுக்கு. எல்லாம் அரசியல். எனக்கும் இப்படி நடந்திருக்குது. இந்த வெறுப்புலதான் நான் இடத்த தக்கவச்சுக்கிட்டேன்னு நினைக்கறேன். இதுல ஒரு சீன் மட்டும்தான் உண்ம..”
“என்னது..?”
“சட்டத்த மீறி எதுவும் பண்ண முடியாதுன்னு அந்த கவுன்சிலரு சொன்னான்னு நீ சொன்னதா மருமக சொன்னது. அதனாலதான் இந்த விழயத்துல அரசியலும் உள்குத்தும் இருக்குது. மத்தபடி பொம்பளைங்க கூட்டமா வந்திட்டு பேசறது.. மிரட்டல்.. பஞ்சாயத்து பண்ணறது.. இதெல்லாம் வரும் போகும். அவங்க நம்ம இடத்துல இருந்தா இதையெல்லாம் பண்ணமாட்டாங்க. எல்லாம் சுயநலம். நீ முடிவெடுத்துக்கலாம். அந்த தெருவிலேயே வேற இடம் கேட்டு வாங்கி அதுக்கு சமமாவோ அதிகமாவோ பணத்த கழிச்சுக்கலாம். அல்லது இடம் கிடைக்கலைன்னா பணத்த வாங்கிட்டு விட்டுடலாம். பணத்துக்கு பணமாச்சு. பேருக்கு பேராச்சு. ஏன் சொல்லறேன்னா முடிவு உன்னோட கைல. உம் பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாண வயசு நெருங்கிடுச்சு. அதுக்கு பிறகு நீ நினைச்சா மாதிரி என்னோட வந்து இருக்கலாம். அதுவரைக்கும் நாங்க தெம்பாதான் இருப்போம். ஆனா உன்னோட குடும்பம் பிரியுதே.. உம் பசங்களுக்கு நீங்க வேணாவா..?”ன்னு அப்பா முடிக்கும்போது என் மேல பெரிய பாரத்த போட்ட மாதிரி இருந்துச்சு.
முன்னோர்கள நினைச்சுக்கிட்டேன். அவங்க வழிவழியா காப்பாத்திட்டு வந்த சொத்து. ஒரு சொத்த இன்னொரு சொத்தா கூட மாத்திக்கலாம். ஆனா பணமா வேணாமுன்னு நினைச்சுக்கிட்டேன். அப்பறமா அப்பா அம்மாவ மீறி அவங்கள என்னோட இடத்துக்கு கொண்டு வர்றது அவங்களுக்கு புடிக்காது. அதே சமயம் அவங்க தனியா இருக்கறதும் எனக்கு புடிக்கல. நாம போயிடலாமுன்னு பாத்தா அப்பா சரியாத்தான் சொன்னாரு. உன்னோட பசங்கள பத்தி நினைச்சு பாருன்னு. அவரு அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லன்னு நான் புருஞ்சுக்கறேன் இப்ப. ஆனா அவங்க தனியா இருக்காங்க அப்படீங்கற கஸ்டத்த எத்தன நாளைக்கு நானும் சுமக்கறது..?
ஒண்ணும் புரியல.. பொண்டாட்டி முகத்த பாக்கறேன். அவ ஒரு ஜிலேபிய எடுத்து கடிச்சுட்டே என்னைய பாக்கறா..
நான் சொல்லறேன். “கடக்காரன் சொன்னான். ஜிலேபிய கடிக்காம சாப்புட சொல்லுங்கன்னு..”
“அப்படியா..?”ன்னு அவ எழுந்திருச்சு என் மடி மேல உக்காந்திட்டு எனக்கு உதட்டுல முத்தம் கொடுக்கறப்ப ஜிலேபியையும சேத்து கொடுக்கறா. அப்போ வெளிய கேட்டு திறக்கற சத்தம் கேக்குது. எழுந்திருச்சு பக்கத்துல உக்காந்திட்டு என்னைய பாத்து சிரிக்கறா. கடக்காரன் சொன்னா மாதிரி ஜிலேபி அதுவா நாக்குல கரையுது.
எம் பொண்டாட்டிக்காக நானும் சிரிக்கறேன். சிரிக்க தோணாம. பசங்க உள்ளாற வர்றாங்க. அவங்கள பாத்தா நல்லா வளந்துட்டாங்கன்னு தோணுது. பொண்ணுதான் பெருசு. பையன் அக்காக்கிட்ட ஏதோ சைகை செய்யறான். அம்மா நீட்டின பொட்டலத்துல இருந்து ஆளுக்கு ஒரு ஜிலேபிய எடுக்கறாங்க. பொண்ணு “அப்பா வழக்கம் போல ரொம்ப கவலையா இருக்காரு போல..”ன்னு சொல்லுது. அதுக்கு பையன் சிரிக்கறான். எம் பொண்டாட்டியும் கூட சேர்ந்து சிரிக்கறா. அப்ப பொண்டாட்டிய பாத்து நான் கேக்கறேன்.
“நீங்க சிரிக்கறது பாத்தா விழயமெல்லாம் தெரியும் போல இவங்களுக்கும்..?”
“ஆமா.. விழயமும் தெரியும்.. முடிவும் தெரியும்..”னு சொல்லறா. நான் பசங்க முகத்த பாக்கறேன். அவங்க முகத்துல எந்த குழப்பமும் தெரியல. அது எனக்கு எரிச்சல தருது. “என்னா முடிவு..?”ன்னு கேக்கறேன் வேகமா. அந்த எரிச்சல புருஞ்சுட்டு எம் பொண்ணு “தாத்தா பாட்டியோட போயிட்டு இருக்கலாம்..”னு சொல்லறா. நான் அப்படியே கொஞ்ச நேரம் எங்கேயோ பாத்துட்டு இருக்கேன். ஆனா எம் பையன் மறுபடியும் சிரிக்கறான். சிரிச்சுட்டே என்னைய பாத்து “பின்னாடி அந்த காலியிடத்த பத்திதானே யோசிக்கறீங்க..?”
“ஆமா..”ன்னு தயக்கமா சொல்லறேன்.
அவன் இன்னமும் சிரிச்சுட்டே “அடுத்த எலக்சனுக்கு நீங்க கவுன்சிலருக்கு நிக்க போறீங்களா..?”ன்னு கேக்கறான்.
அந்த கேள்விய நான் எதிர்பாக்கல. எல்லாரும் என் முகத்தையே பாத்துட்டு இருக்காங்க. சட்டுன்னு அங்க ஒரு பெரிய அமைதி வந்துட்டதா நினைக்கறேன். அந்த கவுன்சிலரு அப்படீங்கற வார்த்த என்னைய பெரிய மனுசனா காட்டறதா நினைச்சுக்கறேன். நான் சொல்லற பதில்ல எல்லா முடிவும் கிடைச்சுடுமுன்னு எனக்கு தோணறப்ப திகைப்பா இருக்குது. இதெல்லாம் யாரோட புத்திசாலித்தனமுன்னு எம் பொண்டாட்டியோட முகத்த பாக்கும்போது அவ சின்னதா புன்னகை செய்யறத கவனிக்கறேன்.
“எல்லாம் அரசியல்..”னு அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. குடும்பத்திலேயும் அரசியலான்னு பையன பாக்கறேன். அவன் என் பதிலுக்காகதான் காத்திருக்கான்.
நான் பதில் சொல்லாம லேசா சிரிக்கறேன். அதுக்கு எம் பொண்டாட்டி சொல்லறா..
“ரண்டு மாசத்துக்கு அப்பறமா உங்கப்பா இப்பதான் சிரிக்கறாரு..”
0000
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்