குரு அரவிந்தன்
ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbourfront), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனேன். இந்த மண்டை ஓடுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதை அறிந்து கொள்வதற்காக, அருகே சென்று பார்த்த போதுதான் தெரிந்தது, அவை எல்லாம் செயற்கையாகச் செய்யப்பட்ட மண்டை ஓடுகள் என்பது. கடந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் நடந்த ‘உயிர்வதைகள்’ (Built on Genocide) பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மண்டையோட்டுக் கோபுரம் செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த மனித, மிருகவேட்டை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கட்டுக்கடங்காத வேட்டைகள் காரணமாக 30 – 60 மில்லியன் எருமை மாடுகள் மனிதரால் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. இதன் காரணமாக 1880 களில் மிகச் சொற்பமான எருமை மாடுகளே எஞ்சியிருந்தன.
1250 எருமை மாடுகளின் செயற்கை மண்டை ஓடுகள் இதற்காகத் தனித்தனியாகச் செய்யப்பட்டன. Created by Indigenous artist Jay Soule | CHIPPEWAR from the Chippewas of the Thames First Nation. இதற்குச் சுமார் ஏழு மாதங்கள் எடுத்திருந்தன. இந்தக் கால்நடைகளின் மேச்சல் தரைகளில் ஐரோப்பியரின் குடியேற்றங்களுக்காகவும், தொடர்வண்டிப்பாதைகள் அமைப்பதற்காகவும் இந்த மிருகங்கள் எண்ணுக் கணக்கற்ற வகையில் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முதற்குடி மக்களின் உணவு, நிலம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவை இதன் மூலம் அழிக்கப்பட்டன.
கொலைக்காரர் சொன்னதை மட்டும்தான் நீங்கள் வரலாற்றில் படித்தீர்கள். அதன் மறுபக்கத்தையும் இப்போது அறிந்து கொள்ளுங்கள் என்று அங்கே இருந்த பதாதைகள் தெரிவித்தன. ‘சிங்கம் வந்து காட்டிலே என்ன நடந்தது என்று சொல்லும்வரை, வேட்டைக்காரன் சொன்னதையே நம்பவேண்டியதுதான்’ என்ற ஆங்கிலப் பழமொழி அப்போது ஞாபகம் வந்தது. நாங்களும்தான், எமக்கு நடந்த அநியாயத்தை எடுத்துச் சொல்ல, மனித மண்டையோடுகளைக் காட்சிப்படுத்திப் பார்த்தோம், யாரும் ஏன் என்று கூடக் கேட்கவில்லையே!
இந்தக் காட்சிப் பொருட்கள் அக்ரோபர் 24 ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சுமார் 20 பதாதைகள் சுற்றிவர வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மண்ணின் முதற்குடிமக்கள் ஐரோப்பிய குடியேற்றவாசிகளாலும், அரசாங்கத்தாலும் எப்படி எல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதன் அடையாளச் சின்னமாக இந்த மண்டையோட்டுக் கோபுரம் இருக்கின்றது என்பதைப் பதாதைகளைப் பார்த்ததும் புரிந்து கொள்ள முடியும். சொந்த மண்ணில் எங்களுக்கு என்ன நடந்ததோ, அதேதான் முதற்குடி மக்களுக்கும் இங்கு நடந்தது!
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்