ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022

This entry is part 7 of 10 in the series 3 ஏப்ரல் 2022

 

குரு அரவிந்தன்
 
 
இந்த வருடம் ஒஸ்கார் விருது வழங்கும் விழா சென்ற 27 ஆம் திகதி மார்ச் மாதம், ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கோவிட் – 19 காரணமாக கடந்த வருடம் இந்த விழா சிறிய வட்டத்திற்குள் நடத்தப்பட்டது. இம்முறை, சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘கோடா’ படத்திற்குக் கிடைத்தது. போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த 10 படங்களில் இருந்து கோடா திரைப்படம் தெரிவானது. ‘த பவர் ஒவ் த டோக்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஜேன் கம்பெயினுக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. ஒஸ்கார் சிறந்த இயக்குநர் விருது பெற்ற 3வது பெண்மணி இவராவார். ‘டியூன்’ என்ற திரைப்படத்திற்கு 6 விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனு என்பவர் இயக்கியிருந்தார். சர்வதேச திரைப்படத்திற்கான விருது யப்பானிய படமான ‘டிரைவ் மை கார்’ என்ற படத்திற்குக் கிடைத்தது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது ‘என்காண்டோ’ என்ற திரைப்படத்திற்குக் கிடைத்தது. சிறந்த ஆவணப் படத்திற்கான விருது ‘சமர் ஒவ் ஸேல்’ படத்திற்கும், சிறந்த ஆவண குறும் படத்திற்கான விருது ‘த குயின் ஓவ் பாஸ்கட்போல்’ என்ற படத்திற்குக் கிடைத்தது.
 
 
உலகத் தரமான சிறந்த படங்களுக்கும், அதில் சிறப்பாகப் பங்கு பற்றியவர்களுக்குமான விருதுகள் வழங்கும் விழாக்களில் ஒஸ்கார் விருது விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தவிழா சினிமா சமூகம் வாழும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வருடா வருடம் நடைபெறுகின்றது. அந்த வரிசையில் இம்முறை 94 வது  ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இடம் பெற்றது. லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் உள்ள டால்பி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் விழாத் தொகுப்பாளர்ளாக வாண்டா சைக்ஸ்,  ஏமி ஸ்கூமர்,  ரெஜினா ஹால் ஆகியோர் கலந்து கொண்டனர். 2018 ஆம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக மூன்று பெண்கள் சேர்ந்து இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.
 
 
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கர் விருது ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்துக்குக் கிடைத்தது. 53 வயதான, பிலடெல்பியாவில் பிறந்த இவர் நடித்த ‘கிங் ரிச்சர்ட் என்ற திரைப்படத்திற்காக இவருக்கு இந்த ஒஸ்கர் விருது கிடைத்தது. இவர் ஏற்கனவே வேறுபல விருதுகளைப் பெற்றிருக்கின்றார்.  தொலைக்காட்சிப் படங்களில் நடித்த இவர், 1986 ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்குள் வந்தார். வில் ஸ்மித் சின்ன வயதிலேயே சின்னத்திரை படங்களில் தனது இயற்கையான நடிப்பின் மூலம் பிரபலமானவர். அதன் மூலம் தனக்கெனப் பெரியதொரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கி இருந்தார். இவர் படத்தயாரிபாளருமாவார். இவரது 13 வது வயதிலே இவரது பெற்றோர்கள் தனித்தனியே பிரிந்திருந்தார்கள்.
 
 
விழா நடந்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகரான கிறிஸ்றொக் மேடையில் நின்றபடி வில் ஸ்மித்தின் மனைவியின் கூந்தல் பற்றி விமர்சனம் செய்தார். வில் ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் ‘அலோபீசியா’ என்ற முடியுதிரும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அதைப்பற்றிக் கிண்டல் செய்த போது வில் ஸ்மித் மேடையில் ஏறி அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்தார். அங்கிருந்தபடியே ‘எனது மனைவி பற்றி பேசவேண்டாம்’ என்று உரத்த குரலில் சத்தம் போட்டுச் சொன்னார். இது நகைச்சுவைக்காக நடந்ததா, அல்லது உண்மையாகவே நடந்ததா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர். ஆனால் வில் ஸ்மித் தனது உரையின் போது நடந்ததற்காக மேடையில், விழா அமைபாளர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
 
 
சிறந்த திரைக்கதை, வசனத்திற்கான விருது ‘பெல்பாஸ்ட்’ திரைப்படத்திற்குக் கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது ‘த ஐஸ் ஒவ் ரம்மி பே’ படத்தில் நடித்த ஜெசிகா ஹெஸ்ரெயின் என்பவருக்குக் கிடைத்தது. சிறந்த துணை நடிகருக்கான விருது, ‘கோடா’ திரைப்படத்தில் நடித்த ரோய் கோட்சூர் என்பவருக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது, ‘வெஸ்ட் சைட் ஸ்ரோரி’ படத்தில் நடித்த அரியானா டிபோஸ் என்பவருக்கும் கிடைத்தன. இம்முறை மொத்தம் 23 விருதுகளில் இருந்;து தெரிவு செய்யப்பட்ட சில விருதுகள் கொடுப்பதை மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
 
 

கடந்தகால ஒஸ்கார் விருதுகளை எடுத்துப் பார்த்தால், 1957 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் டானியல் டே லூவிஸ் மூன்று தடவைகள் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றிருந்தார். வயதில் குறைந்த நடிகைக்கான விருதை ‘பேப்பமூன்’ படத்தில் நடித்த 10 வயதான ரட்ரும் ஓ நில் என்ற சிறுமி பெற்றிருந்தார். வயதில் குறைந்த சிறந்த நடிகருக்கான விருதை 29 வயதான அட்ரின் புறோடி பெற்றிருந்தார். ஒஸ்கார் விருது பெற்ற வயதில் கூடியவர் என்ற பெயரை கிளின்ட் எஸ்ற்;வூட் 74 வயதில் பெற்றார். ‘லோறன்ஸ் ஓவ் அரேபியா’ படத்தில் நடித்த பீட்டர் ஓ டூல் தான் அதிகமாக ஒஸ்கார் விருதுக்காகச் சிபார்சு செய்யப்பட்ட நடிகராவார். வயதில் குறைந்த இயக்குநருக்கான விருதை 2021 ஆண்டு டமீயன் செசிலி தனது 32 வயதில் ‘லா லா லான்ட்’ படத்திற்காகப் பெற்றுக் கொண்டார். ஒஸ்கார் விருதுகள் பொதுவாக வெண்கலத்தில் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசப்படுவது வழக்கம். கோடிக்கணக்கில் வருமானம் பெறும் திரைப்படங்கள் ஹொலிவூட்டில்தான் உருவாகின்றன. ‘வானபிறதேஸ்’ ஸ்ரூடியோவுக்குச் சென்ற போது சில திரைப் படங்களின் படப்பிடிப்புகளைக் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு பெற்றோல் எண்ணெய் நிலையத்தில் நின்ற எண்ணெய் காவு வண்டியில் தீ பிடித்த போது அது எப்படி எல்லா இடமும் வேகமாகப் பரவியது என்பதைச் செயல் முறையில் செய்து காட்டிய காட்சி இப்பொழுதும் மனதில் பதிந்திருக்கின்றது. ஹொலிவூட்டில் பிரமாண்டமான படங்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதும் அப்போது புரிந்தது.

 
 
Series Navigationபோப்பாலஜிஇரு கவிதைகள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *