மோ

This entry is part 8 of 17 in the series 5 ஜூன் 2022

 

 

எஸ்.சங்கரநாராயணன்

  • • •

(வாசக நண்பர் ஒருவர் வேடிக்கை போல, சார், ஒரே எழுத்தைத் தலைப்பாக வைத்து கதை எழுதுவீர்களா, என்று கேள்வி போட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெல்லாம் அவர் விளையாட்டு காட்டுகிறவர் அல்ல. செய்யலாமே, என்றேன். அவருக்கு உற்சாகம் ஆகிவிட்டது. வா – போ – தா … இப்படி பொருள் பொருந்திய ஒற்றை எழுத்து வார்த்தைகளை வைத்து அல்ல, பொருள் வராத ஒற்றை எழுத்து… என்றார் புன்னகையுடன். அப்படியே செய்யலாம். அந்த ஒற்றை எழுத்தை நீங்களே சொல்லுங்களேன், என்றபோது சொன்னார்… “மோ.” சரி, என்று யோசிக்க ஆரம்பித்தேன்.)

  • • •

அழகானவள் அல்ல அவள். முன்பல் சற்று தேங்காய்துருவி சாயலில் வெளியே எடுப்பாக நீட்டி யிருக்கும். ஓர் அடர்கருப்பு அவள் சருமம். இருட்டில் திடீரென்று திரும்பி அவளைப் பார்த்தால் துணுக்குறச் செய்யும். நிழலின் நிழலாய், இருளின் இருளாய் இருப்பாள். அநேகமாக பஸ் நிலையப் பக்கம் அவள் காலை சற்று நீட்டி விகாரமாய் உட்கார்ந்திருப்பாள். முழங்கால் வரை தெரியும்படி சொறிந்து கொள்வாள். புடவைதான். உள்பாவாடை கிடையாது.  வியர்த்து உப்பு பாரித்துக் கிடக்கிற புழுதிக் கால் அதில் அவள் விரல் நகம் இழுத்து கோடாய்த் தெரியும். அதைச் சொறியலையும் வேடிக்கை பார்க்க பஸ் ஸ்டாண்டில் நிற்கும் புது சனம். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல, என்பதாலேயே தங்களின் அயோக்கியத்தனங்களை வெளியே காட்டிக்கொள்ள அவர்கள் கூச்சமோ வெட்கமோ பட்டார்களில்லை.

அஞ்சு பத்து நிமிடத்துக்கொரு தரம் எதும் டவுண் பஸ் வந்து சாமி வந்தாப்போல டர்ர் டர்ர் என்று ஆடியபடி நிற்கும். கோவில் யானை என்றும் சொல்லலாம். முருக் முருக்… என கையில் மூங்கில் தட்டுடன் சிறு வியாபாரிகள் பஸ்சுக்குள் பாய்வார்கள். இருய்யா, ஆளு இறங்கண்டாமா… என திட்டல்கள். சைடு ஜன்னல் வழியே காலி சீட்டில் மஞ்சள்பை போடும் சனங்கள். உட்காராமல் அவாள் போக மாட்டார். டவுண் பஸ் ஸ்டாண்டுக்கே ஒரு விசேஷம் உண்டு. திடீர் திடீரென்று பரபரப்பாகி, அடுத்த சிறிது நேரத்தில் மழைத்தண்ணீர் சலசலத்து ஓடிவழிந்தாற் போல அமைதி காக்கும்.

ஒய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் தி ஃபன்… என ஒரு ஸ்கூட்டி விளம்பரம் வரும். அதைப்போல இந்த கிராமத்துப் பெண்கள் அவர்களும் ஆண்களுக்கு சளைக்காமல் சுவர்ப் பக்கமாகப் போய் ஆண்களைப் போலவே மொத்தத் தெருவும் பார்க்கும்படி நின்றுகொண்டே புடவையைச் சிறிது முன் நகர்த்திக்கொண்டு சர்ர் என்று ஒண்ணுக்கு அடித்தார்கள். திடீரென்று அந்த வெயில் வெளிச்சத்தில் நீர்ப் பாம்பு கிளம்பி தரையில் ஊர்ந்தது. தொடைகளில் ஈரமும் கெட்ட வாடையும் அவர்கள் கிட்டே நெருங்க விடாமல் அடித்தது அவர்களுக்கே உணர்ந்தது.

சிறிய பஸ் ஸ்டாண்டு. பிரபலமான கோவில் ஒன்றுக்கு நிறையப் பேர் போகும் வழியில் இந்த ஊர். ஜனங்கள் போகும்போது தலைகொள்ளாத முமடியுடன் போவார்கள். வரும்போது? மொட்டை. கூட்டம் சேர்ந்து விட்டால் கண்டக்டர் டிக்கெட் போடும்போதே சோமனூரில் வண்டி நிக்காது, ஏற வேண்டாம்… என எச்சரிக்கை தருவான். சர்ர்ரென்று முழுக் கூட்டத்துடன் படிகளிலேயே தொங்கும் ஜனத்துடன், போலியோ வந்தமாதிரி ஒருச்சாய்வுடன் வந்து சரிந்து ஸ்டாண்டில் ஒதுங்கும்போது டர்ர்ரென்று ‘ஃபுட் போர்டு’ தெருமண்ணில் எரிச்சலான நாய் போல உரசும். படி மாத்திரம் கழண்டுக்குமோ என்று பயம் வரும்.

அவள் யார்? அவளுக்குப் பெயர் இல்லை. யாருமே அவளுக்குப் பெயர் வைக்கவில்லை. ஸ்தல புராண்ம் அற்ற கோவிலாய் இருந்தாள். அவளைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடவும் யாரும் இல்லை. அதைப்பற்றி அவள் கவலைப் படவும் இல்லை. பஸ் ஸ்டாண்டு பக்கம் அவள் அமர்ந்திருப்பாள். பிச்சைக்காரியா? அவளுக்கே தெரியாது. பெயரே இல்லை, இதுல ‘டெசிக்னேஷன்’ வேறயா?

யாரும் சாப்பிடத் தந்தால், துட்டு தந்தால் பெற்றுக் கொள்வாள். இதில் மறுக்க என்ன இருக்கிறது. கோவிலுக்குப் போகிற, திரும்புகிற கூட்டம் அது. ஆக மனுசாளில் இரக்கத்துக்குப் பஞ்சம் இல்லை. யாராவது அவளுக்கு புடவையோ, உணவோ (வெறும் உணவுப் பொட்டலம் தரக்கூடாது. தண்ணி பாட்டிலும் தர வேண்டும், என்பது ஜோதிடப் பரிகாரம்.) தானம் தந்து, புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். ரவிக்கை கிழிந்திருந்தது அவளுக்கு, என்று பார்த்து இரக்கப் பட்ட யாராவது பழைய, அவளுக்கு தொள தொளத்த ரவிக்கை தந்தார்கள். பஸ் ஸ்டாண்டு ஜனம் அவள் குனிந்து நிமிரக் காத்திருந்தது.  

கோவிலுக்குத் தெப்பக்குளம் உண்டு. இதே தெருவில் சற்று உள்ளே போனால் பச்சையான தண்ணீருடன் குளம். தாமரைக் கொடிகள் இருக்கும் குளம் நடுவரை போகக் கூடாது. பாம்புகள் கிடக்கும். படிகள் இறங்கி இறங்கி தண்ணீரை அடையும். மொட்டை மொட்டையாய் அங்கே துவைத்துக் குளித்துக் கொண்டிருப்பார்கள். பஸ் ஸ்டாண்டுப் பக்கம் சின்ன சைஸில் ரெண்டே குளியலுக்கு வருகிற மாதிரி சோப்புக் குட்டிகள் அல்லது கட்டிகள் கிடைக்கும். உடம்பு ரொம்ப அரித்தால் அவள் அங்கே ஒரு சோப்பு வாங்கிக் கொண்டு குளத்துக்குப் போய்க் குளிப்பாள். அநேகமாக அந்த சோப்பு அவளுக்கு ஒருகுளியலுக்குத் தான் வந்தது.

தவிரவும் நல்ல நாள், விசேஷ நாள் என்றால் ஊரில் நடமாட்டம் அதிகமானது. அப்போது சிறிது முகத்தில் மஞ்சளேற்றி பெரிய குங்குமம் வைத்து குளித்து கிளித்து ஒரு தோரணை காக்க வேண்டி யிருந்தது. அவள் என்றில்லை ஊரில் அவளையொத்த நாலைந்து பொம்பளைகள் அப்படி கலங்கித் தெளிந்தார்கள். தெப்பக்குளம் விடியற்காலையிலேயே அமளி துமளிப் பட்டது.

அப்படி நாட்களில் சில கிராக்கிகளும் அவளுக்கு அமைவது உண்டு. உள்ளூர் மற்றும் மொட்டைகள். பஸ் ஸ்டாண்டு பெட்டிக் கடைகளில் பஞ்சாங்கம், கெட்ட புத்தகங்கள் (குஜிலியுடன் கும்மாளம்), மற்றும் சரக்கடிக்க பிளாஸ்டிக் தம்ளர், கான்டம் என்று கலவையாய் வியாபாரம். அவள் எவ்வளவு கேட்டாலும், “அவ்வளவா?” என்று அதிர்ச்சியுடன் அவர்களின் பேரம் நடந்தது. இவளுக்கும் அவங்களை விட்டால் வழி இல்லை. அவனுகளுக்கும் இவளுகளை விட்டால் போக்கிடம் இல்லை என்று இருந்தது. ஊர் எல்லையில் அந்த ஊர் சாமி பெயரில் ஒரு சினிமாக் கொட்டகை. ரெண்டாவது ஆட்டம் முடிந்து கடைசி பஸ்சை விட்டவர்களும் அவளைத் தேடக் ’கூடும். காலப்போக்கில் சில ஒதுங்கிடங்களை அவள் அறிந்து வைத்திருந்தாள். அதிக பட்சம் இரண்டுநாள்ப் பாடு ஓடும் அளவுக்கு அவளால் சம்பாதிக்க முடிந்தது.

பன்னோ, பிரியாணிப் பொட்டலமோ வாங்கி துணி மூட்டையுடன் வைத்துக் கொள்வாள். பசித்த நேரம் பொதியைப் பிரித்து பாதி சாப்பிடுவாள். எத்தனை பசிக்கும் உணவில் பாதி சாப்பிட்டு மீதியை வைத்துக் கொள்ள பழக்கமாகி யிருந்தது.  பட்டினி அவளை அப்படி எச்சரித்திருந்தது. சில நாட்கள் அந்த பிரியாணி இரண்டாவது தவணை சாப்பிடு முன் ஊசிப் போயிருக்கும். அவள் தூர எறிந்த உணவை நாயும் முகர்ந்து பார்த்துவிட்டு அப்பால் செல்லும். சில உணவு கொழித்த நாட்களில் அவளே அதுங்களை அருகே அழைத்து புளிசாதம் போடுவதும் உண்டு.

பொதுவாக பஸ் ஸ்டாண்டு வளாகத்திலேயே எங்காவது ஒண்டிக் கொள்வாள். வெயில் ஒரு பக்கமாக வர வர மறு திசையில் மாற்றி ஒதுங்குவாள். மாலை மூணரை நாலு ஆனால் பள்ளிக்கூடம் விட, தலையில் புத்தகப் பைநாடாவை மாட்டிக்கொண்ட சிறு பிள்ளைகள் கடகடவென்று ஓடி வருவார்கள். அந்நேரத்துக்கு அந்தப் பக்கம் ஐஸ் வண்டியோ, ஜவ்வு மிட்டாய்க்காரனோ தட்டுப் படுவார்கள். அது ஒரு கொந்தளிப்பு. மற்றபடி திரும்ப வளாகம் அமைதிப்படும்.

அவளுக்குப் பாட்டு தெரியாது. டான்ஸ் தெரியாது. இசையோ கலையோ தெரியாது. என்றாலும் பிள்ளைகளின் சிரிப்பு அவளுக்குப் பிடிக்கும். உலகம் சிறுவர்களுக்கானது. அவர்கள்தான் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் உலகத்தை அழகாக்கி விடுகிறார்கள். அன்றைக்கு ஒரு குழந்தை பஸ் ஸ்டாண்டில் நின்றபடி ஐஸ்குச்சி வாங்கி சப்பிக் கொண்டிருந்தது. தன்னையறியாமல் அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் போல. சட்டென்று அந்தக் குழந்தை “அண்ணாச்சி, இன்னொரு ஐஸ் குடுங்க” என்று வாங்கி அவளிடம் நீட்டிவிட்டது. திகைத்துப் போனாள். அதுவரை அவள் ஐஸ் சுவைத்ததே இல்லை. படுத்துக் கிடந்தவள் எழுந்து வாங்கிக் கொண்டாள். அந்தக் குழந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்கு அதை எப்படித் தெரிவிக்க என்று தெரியவில்லை. அந்தப் பெண் குழந்தையே அவளைப் பார்த்துச் சிரித்து “நல்லா இருக்கா?” என்று கேட்டது.

பெரும்பாலும் சந்தடி அடங்கிய மதிய நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் பஸ் ஸ்டாண்டு பூராவுமே சுட்டுப் பொசுக்கும். மெல்ல எழுந்து தெருக்களில் நடமாடுவாள் அவள். குளத்தடி, பஜார், கரை மண்டபம் என்று அவளுக்கும் தெரு நாய் அளவில் சிறு எல்லைகள் இருத்தன. இரண்டு காலுக்கும் வெவ்வேறு செருப்புகளுடன் அவபள் நடந்து போவாள். சில கடைகளில் வாசலில் போய் நின்றால் அநேகமாக விரட்டி விடுவார்கள். சிலர் எதாவது பழமோ, வேர்க்கடலையோ கிள்ளியோ அள்ளியோ தருவார்கள். அவர்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவள் இந்தப் பக்கம் தான் சுற்றி வருகிறாள். எல்லார்க்கும் அவளைப் பற்றித் தெரிந்திருந்தது.

தான தருமம் மிகுந்த ஊர். இப்போது அங்கே கூட்டம் அதிகரித்து விட்டது. ஊர்க்காரர்களை விட பிச்சைக்காரர்கள் அதிகரித்து விட்டாற்போல இருந்தது. அதிலும் கோவில் திருவிழா, நல்ல நாள், விசேஷ நாள் என்றால் அடுத்த ஊர்ப் பிச்சைக்காரர்கள் கூட இங்கே வந்து கூடினார்கள். கை கால் இல்லா நொண்டி, ஒற்றைக் கண்ணன், போலியோ வந்தவர்கள், குஷ்டரோகி என்று கலவையான னிபச்சைக்காரர்கள். கோவில் வாசலில் யார் அமர்வது என இடத் தகராறெல்லாம் கூட வந்தது. அதிலும் வயதில் இளைய பிச்சைக்காரர்கள் உடல் பலத்தால் இடத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

அவர்களோடு போட்டி போட்டுகொண்டு கோவில் வாசலில் இடம் பிடிக்க எப்பவுமே அவள் முண்டி யடித்தது இல்லை. பெண் என்பதாலும், மஞ்சள் பூசிய திருமுகத்தாலும் அவளுக்கு வருமானம் அப்படி யொன்றும் மோசமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பிச்சைக்காரன் எவனோ சொன்ன பழமொழிதான்.

அரசாங்க அதிகாரியோ, பெரிய தலையோ யாராவது திடீரென்று கோவிலுக்கு வந்தால் அந்த வளாகமே அதிர்வுகள் காணும். பக்கத்து ஊர்ப் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து கான்ஸ்டபிள் வந்து பிச்சைக்காரர்களை அங்கே உட்கார விடாமல் விரட்டுவான். “சரி ஏட்டையா” என்று அவனை பதவி உயர்வாய்ச் சொல்லிச் சிரித்துச் சமாளிப்பாள் அவள். அந்த ஸ்டேஷனில் சில பேர் அவளைத் தேடி வரும் நபர்களாகவும் இருந்தார்கள்.

சில விசேஷ நாட்களில் அந்தப் பக்கம் போக்குவரத்து நெரிசல் பொங்கி வழிந்தது. பல பக்தர்கள் நடைப்பயணமாக செருப்பில்லாமல், காவி தரித்து வந்தார்கள். என்ன விசேஷம் தெரியவில்லை. தெருநாய்களே உற்சாகமாய்த் திரிந்தன. யாரைப் பார்த்தாலும் வாலை ஆட்டி ஆட்டி அவற்றுக்கு வால்வலி கண்டிருக்கும். வசதியானவர்கள் டூ வீலரிலோ, கார்களிலோ சர்ர் சர்ரென்று தெருவில் பறந்தார்கள்.

திடீரென்று அந்தக் கோவில் அதிகப் பிரபலம் ஆகி யிருந்தது. அங்கே புதிதாய்ச் சாமியார் ஒருவர் வந்திருக்கிறதாகக் கூடத் தெரிந்தது. சாமியார் என்றால் யார்? நம்மளை மாதிரி, ஆனால் நம்மளை விட துட்டுக் காரர்கள் என்று நினைத்துக் கொண்டாள் அவள். அந்த சாமியாரைத் தேடி ஒரு அரசியல் பிரமுகர் வந்து போனார். பிறகு சாமியாருக்கு கிராக்கி இன்னும் அதிகம் ஆகிவிட்டது. நிறையக் கார்கள் கோவில் பக்கமாக வந்துபோக ஆரம்பித்து விட்டன.

சின்ன ஊர். இத்தனை போக்குவரத்தை அது தாங்கவில்லை. செம்மண் தெருவில் சர்ர் சர்ரென்று பறந்த வாகனங்களால் புழுதி பறந்து தெருவின் வெள்ளைச் சுவர்களே பழுப்பு நிறம் கண்டன.  ஊரே முகம் மாறினாற் போல ஆகிவிட்டது. குளத்துக்கு எதிரே இப்போது ஒரு உடுப்பி ஓட்டல் வந்து விட்டது. காதில் கடுக்கன் போட்ட செக்கச் சிவந்த ஒருவர் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார். மல் வேஷ்டி. அவர் சிரித்தபோது பற்கள் பளீரென்று இருந்தன.

ஊரில் தேர்தல் வேறு வந்தது. அவளுக்கு தேர்தல் என்றால் என்ன தெரியாது. திடீரென்று ஏதோ கொடியுடன் பத்து நாற்பது பேர் புடை சூழ ஒரு பெரிய மனிதர் தெருவில் போக வருகிற எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே போனார். அவர் அநேகமாய் ஒரு வண்டியில் டாப் திறந்த நிலையில் பின் வெளிச்சத்தில் அநேகமாக மாலையோ காலையோ வந்தார். தெருவில் வந்த பாதிப்பேர் அவரைக் கும்பிட்டார்கள். கும்பிடணும் போல இருக்கிறது, என்று அவளும் எழுந்து உட்கார்ந்து அவரைக் கும்பிட்டாள். அது அவருக்கு ரசிக்கவில்லை.

தினசரி அரசியல் கட்சிகளின் பாட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. சாமியார் புகழ் சற்று மங்கி ஊரெல்லாம் அரசியல் புயல் அடித்தது. வாகனங்கள் நிறைய இங்கும் அங்கும் பறந்தன. பிரமுகரின் கூட வர்றாட்கள் எல்லாருக்கும் பண விநியோகம் நடந்தது. சாமியாருக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்? அதைப் போலவே இந்த கீழ்ப் பணியாளருக்கும் அவளுக்குமே வித்தியாசம் என்று இருக்கிறதா என்ன?

இரவும் பகலும் வித்தியாசம் இல்லாதபடி ஊரே மாறிப் போயிருந்தது. எங்கும் சனங்கள் நடமாடியபடியே இருந்தார்கள். யாரும் என்ன வேலை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. பஸ் போக்குவரத்தும் அதிகரித்திருந்தது. குளக்கரையைச் சுற்றியுள்ள காலி யிடங்களை யெல்லாம் ஆக்கிரமித்து வளையல், பொம்மைக் கடைகள், எதையெடுத்தாலும் பத்து ரூபா கடைகள் வந்துவிட்டன. நம்ம ஊரா இது என்று அவளுக்கே மலைப்பாய் இருந்தது. பஸ் ஸ்டாண்டுப் பக்கம் ஒருத்தி ஒரு பெட்டியை கவிழ்த்துப் போடடுக் கொண்டு, ஸ்டூல் போட்டு அமர்ந்து பூ விற்க ஆரம்பித்தாள். வாகனங்கள் பெருத்துப் போனதில் கோவில் பக்கம் டூ வீலர், ஃபோர் வீலர் நிறுத்த டோக்கன் போட்டு ஒருத்தன் சம்பாதித்தான். சைக்கிளில் தம் டீ என்று தெருவில் அலைந்து திரிந்து விற்றுப் போனான் ஒருவன்.

ஊர் முகமும் எடுப்பும் பரபரப்பும் மாறிப் போனதில் அவள் தினசரி முகத்தில் மஞ்சள் ஏற்றிக்கொண்டாள். சில நாட்கள் குளித்தாள். ஒரு சுற்று அவளே பெருத்திருந்தாள். இடுப்பில் அவளுக்கு சுருக்குப் பையும் அதில் சில்லரை காசுகளும் தங்கின. வாயில் ஒதுக்கிய வெற்றிலையுடன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசியபடி ரெண்டு விரலுக்குள் வெற்றிலையைத் துப்பினாள். ஊர் இடுப்பு பெருத்து வருவது அவளுக்கு உற்சாகமாய்த்தான் இருந்தது. ஆனால், ஒரு பின்னிரவுப் பொழுதில் கார் ஒன்று, டிரைவர் குடித்திருக்கலாம்… நிலைதடுமாறி சர்ரென்று ஒரு ஓரம் படுத்திருந்த அவளை நோக்கிப் பாய்ந்து வந்து மோ…

மாபெரும் வெளிச்சத்தில் ஓவென அவள் எழுந்து கொள்ளுமுன் இறந்து போனாள். டிரைவர் குதித்து எங்கோ ஓடி இருளில் காணாமல் போனான். இராத்திரி நேரம். என்றாலும் நாலைந்து பேர் ஓடி வந்தார்கள். அவளோடு இரவில் ஒதுங்கித் தூங்கும் தெருநாய், அதுவும் எப்படியோ அறிந்துகொண்டு ஓடிவந்தது. வாலைச் சுழற்றியபடி அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. பின் தலையை வானத்தைப் பார்த்து பெரிதாய் ஊளை யிட்டது.

  • • •

 

 

Series Navigationஇளமை வெயில்வாழ்விற்கு நெருக்கமான கதைகள்
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Musthafa.ஜவ்வாது முஸ்தபா. says:

    சிறப்பு,
    யாதார்த்தமான நடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *