குக்குறுங்கவிதைக்கதைகள் – 12

This entry is part 14 of 17 in the series 27 நவம்பர் 2022

 

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 1

 

பாரதி அறங்காவலர்கள்

 

………………………………………………………..

 

’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து

இப்படி எழுதினார்’, என்றவரும்

’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து

இப்படி எழுதினார்’ என்பவரும்

பாரதியின் வாரிசுகள் அல்லவே யல்ல

என்று சொல்லாமல் சொல்கிறது

இல்லாத அவரின் உயில்.

 

 

  •  

 

 

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 2

 

அறிவுடைமை

 

……………………………………………………………………

உளறுவாய்களால் ஆனது உலகம்

உனக்கு நான் உளறுவாய்

எனக்கு நீ உளறுவாய்

உனதுளறல்களெல்லாம் உனக்குத்

திருவாய் மலர்ந்தருளலாய்.

எனதோ

பொருளற்ற வெறும்பேச்சாய்.

உனது பெருமூச்சும் வீரமுழக்கமாய்.

எனதோ

நோய்மையின் பலவீன முனகலாய்.

ஆயகலைகள் அறுபத்திநான்குக்கும்

நீயே அதிபதியாக இரு.

அதனாலென்ன?

அதற்கு மேலும் எண்களுண்டுதானே!

 

 

 

  •  

 

குக்குறுங்கவிதைக்கதை – 3

 

மென்வன்முறை

 

…………………………………………………..

 

மேடையில் முழங்கிக்கொண்டிருந்தவர்

மீண்டும் மீண்டும் மனதாரச் சொல்லிக்கொண்டிருந்தார்

அவர்கள் நல்லவர்கள்தான்

ஆனால் ஆணவம் பிடித்தவர்கள்

அவர்கள் நல்லவர்கள்தான்

ஆனால் அசிங்கம்பிடித்தவர்கள்

அவர்கள் நல்லவர்கள்தான்

ஆனால் அயோக்கியசிகாமணிகள்

அவர்கள் நல்லவர்கள்தான்

ஆனால் அப்பட்டமான கயவாளிகள்

அவர்கள் நல்லவர்கள்தான்

ஆனால் அவசியம் கொல்லப்படவேண்டியவர்கள்

அட அட என்னவொரு அரிய நடுநிலைப்பார்வை

என்று எண்ணியவாறே

தன்னிடமிருந்த அரிவாளை அல்லது அருவாமனையை

கூர்தீட்டத் தொடங்கினார்

உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தவர்.

 

 

  •  

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 4

 

விருந்துபசரிப்பு

………………………………………………………….

 

உள்ளே மண்டிக்கிடக்கும் பகையுணர்வை

வெள்ளைவெளேரென ‘விம்’ போட்டு விளக்கிய

பாத்திரத்திலிட்டு

உப்பு புளி மிளகாய் பெப்பர் கொஞ்சம் சர்க்கரை

வெல்லம் தேன் சேர்த்து

உகந்த வெப்பத்தில் கொதிக்கவைத்து

சிறிதே நெய்யூற்றி லவங்கப்பட்டையிட்டு

நறுமணமேற்றி

அலங்காரத்தட்டுகளில் பரப்பி

அழகிய கரண்டியோடு

ஆளுக்கொன்று தந்தால்

அதையும் சப்புக்கொட்டிச் சாப்பிட

ஆளிருக்க மாட்டார்களா என்ன?

 

 

  •  

 

 

 

 

 

 

குக்குறுங்ககவிதைக்கதை – 5

 

செய்தித்தாள்

 

…………………………………………………………………

இருவருமே செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

”நான் செய்தித்தாளைப் படிப்பவள்” என்றாள் ஒருத்தி.

”நானும்தான்” என்றாள் மற்றவள்.

”இல்லை, நீ செய்தித்தாளில் படம் பார்ப்பவள்;

செய்தித்தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துபவள்;

செய்தித்தாளைத் தரையில் பரப்பி அதன்மீது

படுத்து உறங்குபவள்;

செய்தித்தாளை உருண்டையாகச் சுருட்டிப் பந்து செய்து

பக்கத்துவீட்டுக் குழந்தையோடு விளையாடுபவள்;

செய்தித்தாளை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து

அடுப்பங்கரையில் கையைத் துடைத்துக்கொள்பவள்….

என்று முதலாமவள் அடுக்கிக்கொண்டே போக

”இவற்றை விட்டுவிட்டாயே –

”விளம்பரங்களை மட்டுமே எழுத்துக்கூட்டிப் படிப்பவள்;

பழைய பேப்பர் கடையில் போடுவதற்கென்றே செய்தித்தாளை வாங்குபவள்;

மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் செய்தித்தாளால் விசிறிக்கொள்பவள்;

என்று புன்னகையோடு இன்னும் சில

தன்முனைப்பான எள்ளல்களை எடுத்துக்கொடுத்த மற்றவள்

செய்தித்தாள் வாசிப்பைத் தொடர்ந்தாள்.

 

 

  •  

குக்குறுங்கவிதைக்கதை – 6

 

தன்மானம்

 

……………………………………………………

திடமாய் நடைபழகிக்கொண்டிருந்தவரை

தளர்நடை யிட்டுக்கொண்டிருக்கும்

குழந்தையாய் பாவித்து

தடுக்கிவிழுந்துவிடலாகாது என்று

தாங்கிப்பிடிக்க வந்தவளை

தள்ளிப்போகச் சொன்னவர்

‘இதைவிட

திமிராய் நடக்கிறேன் என்று

வசைபாடுபவர்களே

இசைவானவரெனக்கு’ என்றார்.

 

  •  

 

 

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 7

 

அடிப்படைவாதம்

 

…………………………………………………………..

அறியாமையிருள் நீக்கும் தன்னார்வலரொருவர்

வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்.

பாரதியெனும் கவிப்பெருவெளியை

அடிப்படைவாதமாகக் குறுக்கிவிடலாகாது

என்று சொல்லப்புகாமல்

உயிருக்கு பயந்தும்

படைப்பியக்கம் அழியாமல் பாதுகாத்துக்கொள்ளவும்

கவிஞர் அடிப்படைவாதத்தை முன்வைத்தாரென

காரணகாரியங்களை

மனோதத்துவத் துறைக் குறிச்சொற்களைக் கொண்டு

விளக்க முற்பட்டதைக் கேட்டு

அறிவுத்துறையிலும், இலக்கியத்துறையிலும்கூட

அடிப்படைவாதிகள் இருப்பதை யறிந்து

மௌனமாய் அங்கிருந்து வெளியேறினார்கள்

மாணாக்கர்கள்.

 

 

  •  

 

 

குறுங்கதைக்கவிதை – 8

 

சூது

 

……………………………………………..

அதுவொரு புதுமாதிரி சீட்டுக்கட்டு

அதிக அதிகமாய் இன்று விற்பனையாகிக்கொண்டிருப்பது

அதில் ராஜா ராணி மந்திரி இளவரசன் என எல்லோரும்

அன்றைய அரசியல் தலைவர்கள்.

அடங்கா ஆர்வத்தோடு

காசுவைத்தும் வைக்காமலும்

டயமண்ட் ஆர்ட்டின் இஸ்பேடு, க்ளாவர்

எல்லாவற்றிலும்

ACEம்

வேண்டாதவர்களை வெட்டிவீழ்த்தவும்

வேண்டியவர்களைக்கொண்டு வெற்றிபெற்றும்

வேண்டியவர் வேண்டாதவர் வேண்டும்போது

வேண்டியவண்ணம்

மாறி மாறி வந்துவிழும்படி

சீட்டுக்குலுக்குவதெப்படி என்று

கவனமாய் அவதானித்தபடி

விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்

அறிவுசாலிகளாய் நடுநிலையாளர்களாய்

அறியப்படுபவர்களும்

தம்மைத்தாம் ’ஜோக்கரா’க பாவித்து

 

  •  

 

குக்குறுங்கவிதைக்கதை – 9

 

மதம் பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்

 

……………………………………………………………………………………

 

மதத்தைப் பற்றியே மேடைமேடையாய்

முழங்கிக்கொண்டிருப்பவர்

’மதப்பற்றுக்கும் மதவெறிக்கும்’ வித்தியாசமுண்டு

என்றார்.

மதம் பிடித்தவருக்கும் மதம் பிடித்தவருக்கும் கூடத்தான்

என்று முணுமுணுத்துக்கொண்டார்

வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்.

செவிமடுத்துவிட்ட பேச்சாளர் சீற்றத்தோடு

முறைத்துப் பார்த்து

’அரைகுறை அறிவில் கருத்துரைக்கிறாய்

அற்பப்பதரே

துணிவிருந்தால் உரக்கச் சொல்’ என்றார்.

தவறாய் ஏதும் சொல்லவில்லையே என்று

தான் சொன்னதை

திரும்பவும் உரக்கச் சொன்ன பார்வையாளர்

அவையோரால் முற்றுகையிடப்பட்டு

அங்கிருந்து குண்டுகட்டாய் அகற்றப்பட்டார்.

 

  •  

 

குக்குறுங்ககவிதைக்கதை – 10

 

புத்துயிர்ப்பு

 

……………………………………………………………………..

 

‘பழிபாவத்திற்காளாக்குகிறார்கள் ஒருவரை,

படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்

என்று பரிந்து பேசினால்

புரிந்துகொள்ளாமல் அறிவுகெட்டதனமாக

எதிர்வினையாற்றுகிறீர்களே’ என்கிறவர்

என்றேனும் கேட்கக்கூடும்

எங்குமாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கும்

அந்த அசரீரியை:

”இறப்பவருக்கேயாகுமாம் RESURRECTION”

 

  •  

 

 

 

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 11

சந்தைப் பொருளாதாரம்

 

…………………………………………………………………

 

பெருவியாபாரிகளும் சிறுவியாபாரிகளும்

பெருகிக்கொண்டிருக்கும் வாங்குவோரும்

நிறைந்ததே சந்தையாக

அன்றாடம்

அரைப்படியை ஒரு படியாக

அளந்துகொண்டிருக்கும்

அரசியல் குத்தகையாளர்களின் வியாபாரம்

அமோகமாய் நடந்துகொண்டிருக்கிறது.

 

 

  •  

 

 

 

 

 

 

 

 

 

 

குக்குறுங்கவிதைக்கதை – 12

 

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா

 

……………………………………………………………

 

”பச்சை என்றுதான் சொன்னார் அவர்”

இல்லை அவர் நீலம் என்று சொன்னார்”

”இல்லை பச்சையை பச்சை என்றுதான் சொன்னார் அவர்”

”இல்லவேயில்லை – அவர் பச்சை பச்சையாகப் பேச மாட்டார்”

பச்சை என்பதற்கும் பச்சை பச்சை என்பதற்கும்

பாரிய வித்தியாசம் உண்டென்பதை அறியாமல்

அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல்

இறந்துவிட்டவரின் பச்சையை

நீலமாக விரிப்பவர்

நிச்சயம் மனிதநேயவாதி தான் என்பதை

நம்பித்தானாகவேண்டும்!

கொச்சைவசைக்குத் தப்ப

இச்சமயம் இஃதொன்றே

கச்சிதமான வழி!

 

  •  
Series Navigationகுவிகம் இணையவழி அளவளாவல்      பிழைத்திருப்போம் !
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *