நட்பூ

author
1
2 minutes, 53 seconds Read
This entry is part 17 of 22 in the series 26 மார்ச் 2023

ஜனநேசன்   

   சந்திரவதனாவின்   பார்வை, நீர்வழிய ,  மரணப்படுக்கையில்  கிடந்த  அம்மாவின்  மீது  நங்கூரமிட்டிருந்தது. மனதுக்குள்  எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அம்மாவுக்கு சிறுநீரகம் செயலிழந்து விட்டது . இதயத் துடிப்பும்  குறைந்து  வருகின்றது . மருத்துவர்  சொன்னக் கெடு  தாண்டி இரண்டு நாள்கள்  உதிர்ந்து விட்டன. ஆனால்  பேச்சற்று, உணர்வற்ற அம்மாவின் உயிர்  மட்டும்  தொண்டைக்கும் நெஞ்சுக்குமிடையே  உள்ளேயா, வெளியேவா  என்று கயறு இழுப்புப் போட்டி நடத்திக் கொண்டிருந்தது. உயிர்ப்புறா  நெஞ்சுக்கூட்டுக்குள்ளே  கரபுறத்துக் கொண்டிருந்தது. நெருங்கிய  உறவுகளும், நட்புகளும்  வந்து பார்த்து ,காத்திருக்கவும் இயலாமல், வெளியே செல்லவும் முடியாமல் கையறுநிலையில்  தவிகின்றனர் .

  மூத்தமகள்  சந்திரவதனா, தனது பிள்ளைகளை  மாமியாரிடம் விட்டுவிட்டு  அம்மாவின் காலடியில் தவம்  கிடக்கிறாள். மகன் ராஜசேகர்  வருவோரிடம் தொண்டையில் சிக்கிய முள்ளை துப்பவோ , விழுங்கவோ  முடியாமல்  துக்கத்தைப் பகிர்வதில்   தவித்துக் கொண்டிருக்கிறான். இறப்பு வீட்டுக்கான  அனைத்து ஏற்பாடுகளும்  தயார். ஆனால் எமனோடு போராடிக் கொண்டிருக்கிற  அருமை அம்மாவின்  உயிர்ப்பறவை பறக்கும் முன்னே  எப்படி  பந்தல் போடமுடியும் ? அது அம்மாவின் பிரியத்துக்கு  எதிரானதல்லவா ? அலமலந்து நிற்கிறான்.

  சந்திரவதனா  அம்மாவை  உற்றுநோக்கியபடி  இருக்கிறாள். அம்மா ஏதோ சொல்ல வாயைத் திறக்கிறாள்; குரல் எழவில்லை; உதடும் நாக்கும்  அசைகிறது. அடுத்த நொடியே  அசைவற்றுப் போகிறாள். என்ன சொல்ல நினைக்கிறாள் ? என்ன வார்த்தை அது  என்று கண்ணையும், காதையும் கூர்படுத்திக் காத்துக்கிடக்கிறாள். இருமுறை அம்மா சொல்ல முயன்ற போதும்   அறியமுடியலையே என்று  தன்மீதே கழிவிரக்கம்  கூடியது.

  அடுத்தமுறை  எப்படியும்  அந்த வார்த்தைகளை பிடித்திட வேண்டும்  என்று  கைப்பேசியில் காணொளியை  இயக்கி வைத்துவிட்டு  அம்மாவின் இறுதி  வார்த்தைத் தவம் வேண்டி உதடசைவுக்கு காத்திருக்கிறாள்.

  அம்மாவின் நெஞ்சிலிருந்து  திரண்டு வந்தக் காற்று தொண்டையைக் கடக்கும்போது அம்மா முகத்தை அண்ணாந்தாள்.உலர்ந்த மேலுதடிலிருந்து கீழுதடு பிரிந்த கணத்தில் தடவிய நாவு “ஏங்க சந்துருவ  வரச்சொல்லுங்க ..சந்துரு.. சந்துரு …” என்று அப்பாவிடம் பேசுவதுபோல்  மும்முறை முணுமுணுத்து  மூடிக்கொண்டது. சந்திரவதனாவுக்கு நினைவு மின்னலிட  இருகைகளால் அம்மாவின் முகத்தைத் தாங்கி , காதருகே  மெல்லிய அழுத்தமான  குரலில்  சந்துரு அங்கிளாம்மா  என்றாள்.மூடியவிழி திறந்து இரு முத்துகள்  திரள ,அம்மா  தலையாட்டி கண்களை மூடிக் கொண்டாள்.  மூச்சுக் காற்றும்  நாடித்துடிப்பும்  சீராக இருந்தது.

  தம்பி மனைவியை  அம்மாவின்  அருகில் இருக்கச் செய்துவிட்டு  வாசலில் நின்ற தம்பியிடம் ஓடினாள்.அக்காவும், தம்பியும்  அப்பாவின்  அறையில் இருந்த அப்பாவின்  நாள்குறிப்பை  எடுத்து  கைப்பேசி எண்களைத் தேடினர்.

  வங்கியலுவலரான  அப்பா, முத்து முத்தாய் எண்களை  சந்திரசேகரன்  என்ற பெயருக்கு எதிரே  எழுதியிருந்தார். தம்பி ராஜசேகரன் ;”யாருக்கா  இந்த சந்திரசேகர் ?” கேட்கவும் சந்திரவதனா  தானறிந்ததைப் பகிர்ந்தாள்.   .

       **

  அம்மாவுக்கும்  அப்பாவுக்கும்  இருபத்தைந்தாவது  திருமண நாளன்று  நால்வரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போயி  சாமி கும்பிட்டுவிட்டு  தெற்கு கோபுரவாசல் வழியாக வெளியே வந்தார்கள். வெளியே  மிதியடி போடும்  இடத்தருகே மூவரையும்  நிற்கச் சொல்லிவிட்டு  சுந்தரம் கார் எடுத்து வரப்போனார்.காத்திருக்கும்  நேரத்தில்  எதிரே ஒருவர்  கையில் புத்தகங்களோடு வந்தார்.அவரை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த  அம்மா வசந்தா ,”ஏய்  சந்துரு  “ என்று உற்சாகமான அழுத்தமாக  மெல்லிய குரலில் அழைத்தாள் . அவர்  திடுக்கிட்டு  சுற்றிலும் பார்த்துவிட்டு நடந்து வந்தார். அவர் அருகில் கடக்கும்போது மீண்டும், அழுத்தமாய்  குரலை உயர்த்தாமல்  “சந்துரு, “என்றழைத்தாள் .  அவர்  திடுக்கிட்டு  அதிசயத்தைப் பார்ப்பதுபோல் திகைத்து நின்றார்.

“ஏய், சந்துரு, வசந்தாவை மறந்துட்டியா “ என்று அவள் கேட்கும்போது அவர்  தடுமாறி பாதிக்கனவிலிருந்து .விழித்தெழுந்தது போல ,பரவசத்தில் மொட்டவிழ்வது போல  வாயைத் திறந்து மென்குரலில், “வசந்தி … நீ.. நீ..நீங்களா ..அடே, அப்பா  எத்தனை யுகமாச்சு ? மதுரையிலதான்  இருக்கிறீகளா  “

வசந்தாவின்  கண்களில்  மழை. வாயைத் திறக்கிறாள் ; சொற்கள்  வரவில்லை.. அவர் புரிந்து கொண்டு உடனே பேச்சை மாற்றும் விதமாக

“இது உங்க குழந்தைகளா !  அவுங்க அப்பாவைப்போல சுறுசுறுப்பா   தெரியறாங்க “

 “ நீ கல்யாணம் பண்ணிகிட்டில்ல . எத்தனை பிள்ளைக ? “

 “ஆயிரத்திரநூறு பிள்ளைக .பள்ளியில  எல்லாரும் அய்யான்னு தான் கூப்பிடுவாக “

 கேட்டதும் வசந்தா முந்தானையை வாயில் பொத்திக்  குமுறலை புதைத்துக் கொண்டாள் .. இந்தத்  தருணத்தில் சுந்தரம் காரை   ஒலி எழுப்பியபடி நிறுத்தி  ஏறச் சொன்னார். வசந்தி , கணவனை  இறங்கிவரச் சொல்லி , ” இவரு எனது பள்ளிகால நண்பர்; ரெண்டுபேரும்  எஸ்எஸ்எல்சி வரை ஒண்ணாப் படிச்சேம். நம்ம கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துமடல் கூட வாசித்துக் கொடுத்தார், ஞாபகமிருக்கும்  உங்களுக்கு. அவரையும் இன்னைக்கு சாப்பிடக் கூட்டிட்டு வாங்க .”

 சுந்தரம் , சந்திரசேகரனை வணங்கி கைகுலுக்கி , வீட்டுக்கு வாங்க என்கவும், வர மறுத்தவரை  கட்டாயப்படுத்தி முதல் இருக்கையில்  அமர்த்தி வீட்டுக்கு  அழைத்துப் போனார்கள்.

 வீட்டில் பேச்சு வாக்கில் அவர்களுக்கு  இருபத்தைந்தாவது  மண நாள் என்று தெரிந்ததும்  கையில் இருந்த புத்தகத்தை சுந்தரத்திடம் கொடுத்து வாழ்த்திவிட்டு  , வசந்தா சமையல்கட்டுக்குள் போன நொடியில் , அவசரவேலை ஒன்று இருக்கிறது. இன்னொரு நாள் வருகிறேன்  என்று  புயலாகக் கிளம்பிவிட்டார்.

 வசந்தி உணவுப் பண்டங்களோடு  வெளியே வந்ததும்  , சந்துரு போனவிவரம் அறிந்ததும், “அய்யோ, அவன் என்னை நினைச்சுக்கிட்டு கல்யாணம் கூட பண்ணாம இருக்கான்ங்க அவனை ஓடி கூட்டிட்டு வாங்க  “ என்று  பொங்கினாள் .

  சுந்தரம் ஒரு கணம் தயங்கினார் .கணவனே,  மனைவியின்  முன்னாள் சிநேகிதனை அழைத்து வருவதா… இதுநாள் வரை உணர்ந்த  மனைவியின் மாசற்ற அன்பும், பாசமும்,, நட்புக்கான அவளது குமுறலும் , தயக்கத்தை உடைத்தது. உடனே  பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தார். அவர் பேருந்து நிறுத்தத்திற்கு போவதற்குள்  மடக்கி விட்டார்.

 “ சந்திரசேகர், நீங்க சாப்பிடாம வந்ததற்கு    வசந்தி வையிரா . வாங்க  சாப்பிட்டுட்டுப் போகலாம் . “

“சார், உங்க கல்யாண நாள்  சந்தோசத்தில  நான் எதுக்கு இடைஞ்சலா . இன்னைக்கு  அவசரவேலை ஒண்ணு. அதுக்காகப் போக வேண்டியிருக்கு . இன்னொரு நாள் வர்றேன் ப்ளீஸ். “

“சந்துரு,  ஐம்பதுவயசுக்கு மேல இருக்கிற உங்களை , சமவயசுப்பெண் நீ, வா, போன்னு  ஒருமையில பாசத்தோட பேசுறான்னா  , அவ உங்கமேல எவ்வளவு  நேசமா இருக்கிறான்னு  புரிஞ்சுக்க வேணாமா ? நீங்க  ஒரு வாத்தியார்  உங்களுக்கு நான் சொல்லணுமா? வண்டியில் ஏறுங்க “ என்ற  சுந்தரத்தின்  குரலில் தொனித்த கண்டிப்பும் ,கள்ளமில்லா மனசும்  , அவரை வண்டியில் ஏறச் செய்தது.

 வீட்டுக்குப் போனதும், “ உங்க பெருந்தன்மையை உணராம  போயிட்டேன்; வசந்தியும், சுந்தரம்  சாரும்  மன்னிக்கணும் “ என்று சந்திரசேகர்  கும்பிட்டார்..இந்நிகழ்வுக்குப்பின்  வசந்தி வீட்டில்  நடந்த  அனைத்து நிகழ்சிகளிலும்  கலந்துகொண்டார். இறுதியாக கடந்த  ஐந்தாண்டுகளுக்கு முன்  சுந்தரம்  இறந்ததிற்கு  வந்து  துக்கம் விசாரித்தார். அப்போதுதான்  சந்திரசேகர்                                             “ வசந்தி, அந்த நல்ல மனசுக்காரர் இருந்தவரை  நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன். அவரில்லாத நிலையில் இங்கு நான் வருவது நல்லாயில்லை என்னை  மன்னிச்சிடு. நானும் , நீயும்  நம்ம நட்பை மனசுக்குள்ளே  வச்சுக்குவோம் “ என்று  குரல் தழுதழுக்க  சொல்லிப் போனவர் தான் , அப்புறம்  வரவேயில்லை .

  சந்திரவதனா  அந்த எண்ணுக்கு  பேசினாள். வெகுநேரம்  மணி ஒலித்து ஓயும்போது  ஒரு இளைஞர் .” சந்திரசேகர்  எங்க பெரியப்பா  தான். அவருக்கு  உடல் முடியவில்லை “. என்று வீட்டு முகவரியைச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது. அவர் நடக்கும் அளவுக்கு இருந்தால்  அவரைக் காரில் அழைத்துவந்து  அம்மாவிடம் பேசவைத்துவிட்டு , வீட்டில் பத்திரமாக இறக்கிவிடலாம்  என்று  யோசனை .. சந்திரவதனா ,தனது கணவன்  பாஸ்கரனைக்  கார் ஓட்டச்செய்து , வில்லாபுரம் விலாசத்துக்குப் போனார்கள்.

 காரில் போகும்போது  சந்திரசேகர் பற்றி  , வதனா,  அம்மாவிடம்  கேட்டது நினைவில்  குமிழிட்டன.

“ஏம்மா, சந்துரு அங்கிளை , நீன்னு ஒருமையிலே சொல்றீயே  அவரு நமக்கு  நெருங்கின சொந்தமா  ? “

“ஆமாம், அப்படித்தான் வச்சுக்கியேன்  . நானும் சந்துருவும்  அடுத்தடுத்த வீட்டுக்காரக .சின்னப்பிள்ளையில இருந்து கிச்சுகிச்சாம் தாம்பாளம் , கண்ணாமூச்சி, பாண்டி ஆட்டம்,, திருடன் போலிஸ் விளைட்டுன்னு  ரெண்டுபேரும் சேர்ந்தே   விளையாண்டோம். எஸ்எஸ்எல்சி  வரை ஒரே வகுப்பில் படிச்சோம்.  நாங்க அஞ்சாப்பு படிக்கையில,  ஒருநாள் ,எங்க ரெண்டு குடும்பத்தாரும்   , மீனாட்சி தியேட்டரில் பாசமலர் படம் பார்க்க  மேட்னிஷோ போனோம். அதில கடைசியில சிவாஜியும், சாவித்திரியும்  ஒரே சமயத்தில்  செத்துப் போவாங்க . அதே மாதிரி நாங்க  ரெண்டுபேரும்  சாகும் போதும் கூட ஒண்ணா சாகணும்னு பேசிகிட்டோம். ஒருத்தருக்கு ஒருத்தர் அவ்வளவு  பிரியமா இருந்தோம். 

   அவரு  எஸ்எஸ்எல்சி முடிச்சதும்  புதுகோட்டைக்கு  டீச்சர் ட்ரெயினிங்  படிக்கப் போயிட்டார். அந்த சமயத்தில் பேங்கில வேலைபார்க்கிற மாப்பிளை வந்துருக்குன்னு  உங்கப்பாவுக்கு  கல்யாணம் முடிச்சு வச்சிட்டாங்க. சந்துரு   கல்யாணத்துக்கு  வந்து  வாழ்த்துமடல் வாசிச்சுக் கொடுத்துட்டுப் போனவர் தான். இருபத்தஞ்சு வருசத்திற்குப் பிறகு அன்னிக்கு கோயில் வாசலில்  பார்த்தோம். “

  அம்மா பேசிய  தொனியில், நமக்கு இப்படி ஒரு பால்ய சிநேகம்  அமையலையேன்னு  ஏக்கம் வந்தது; குறுக்குகேள்வி கேட்க மனம் வரவில்லை .அம்மா சொன்னதிலிருந்து தான் , தனக்கு சந்திரவதனா, என்ற பெயரும், தம்பிக்கு ராஜசேகர் என்ற பெயரும்  வச்ச காரணம் புரிந்தது. தயக்கம் ஏதுமில்லாமல் , சந்துரு அங்கிளை வீட்டுக்கு  அழைத்து வந்த   அப்பாவின்  பெருந்தன்மையையும், அப்பாவுக்கு அம்மா மீதிருந்த நம்பிக்கையையும்  உணர்ந்து கொண்டாள். இதன்  தொடர்ச்சியாகத்தான்  நாமும் சந்துரு அங்கிளை  அழைத்து வந்து அம்மா முன் காட்டப் போகிறோமோ  என்ற எண்ணமும்  தோன்றியது.

  காரை  ஓட்டிவந்த  வதனாவின்  கணவனது  வழக்கறிஞர்  மூளையில்  ஒரு முடிச்சு விழுந்தது .கேட்டான் . “சந்துரு அங்கிள் , இப்போ  நம்ம வீட்டுக்கு  வந்து  அம்மாவைப் பார்த்துப் பேசினதும்  உயிர்போய் விட்டதென்றால் , அம்மாவுக்கும், சந்துரு அங்கிளுக்கும் உள்ள நட்பை  இங்குள்ளவர்கள்  தப்பாகப் புரிந்துகொண்டு   அவதூறைக் கிளப்ப  வாய்ப்புண்டல்லவா. அது  நம்  குடும்பத்திற்கு களங்கம்   உருவாக்கும் அல்லவா . சற்று  யோசிப்போம்  “என்று  வண்டியை  சாலையின்  ஓரத்தில்  நிறுத்தினான்.இருவரும்  தேநீர்  அருந்தினர். பதறிய மனதுக்கு  தேநீரின் சூடும்  துவர்ப்பும்   இதமாக இருந்தது.

 “நான் இதை யோசிக்கவில்லை; அம்மா படும் துயரத்திலிருந்து விடுவித்து  அவளது  இறுதிப்பயணம் அமைதியாக ஆத்மார்த்தமாக அமையவேண்டும்  என்பதே  ஆதங்கமாக  இருந்தது. அம்மாவின்  இறுதி ஆசையை  நிறைவேற்றுவதே  பிள்ளைகளின்  கடமையுமாகும் .! கொஞ்சம்  மாற்றி  யோசிப்போம்; சரியான்னு  சொல்லுங்க. “

“ சொல்லு  யோசிப்போம் “

 “எனது வகுப்புத்தோழி பிரியா மருத்துவராக  இருக்கிறாள். அவளதப்பா   நடத்திவந்த மருத்துவமனையை , அவளும்  அவளது கணவனும்  சேர்ந்து நடத்தப்போவதாக பேச்சு வந்தது . அவளைப் போய் பார்ப்போம் . அவளது மருத்துவமனைக்கு  அம்மாவை  அழைத்துப் போகலாம். அங்கே வந்து  சந்துரு அங்கிள்  அம்மாவைப் பார்க்க  ஏற்பாடு செய்வோம் . “

   “ அபாரம் ! நல்ல யோசனை தான் ! கிளினிக் கோணத்தில் பார்த்தால் இதிலும்  சிறு இடையூறு உண்டு, சரி, இந்த நேரத்தில்  ஒவ்வொன்றுக்கும்  எதிரா யோசிப்பது சரியில்லை. வா, பக்குவமாப் பேசி  சரி பண்ணுவோம். ! உன் தோழியின் மருத்துவமனை  முகவரியைச் சொல்லு . அங்கே போய் ஏற்பாடுகளைப் செய்தபின்  , வில்லாபுரம் வருவோம் ! “

 சந்திரவதனா சொன்ன  தெற்குவெளிவீதி , தவிட்டுச்சந்தை நோக்கி  வண்டியைச் செலுத்தினான்..

 ***

  தெற்குவெளி வீதியில் தவிட்டுச்சந்தை  அருகில்  ராமகிருஷ்ணா கிளினிக்கை  மருத்துவர்  ராமகிருஸ்ணன்  நடத்திவந்தார். கைராசி மருத்துவர்  என்று பெயர் வாங்கியவர் ; குறைந்தக் கட்டணத்தில் , நோயாளியோடு  மனம்விட்டுப் பேசி , அவர்களது நோய்நிலை அறிந்து பக்கவிளைவுக் குறைந்த  அளவான மருந்துகளை எழுதுவார். அவர் கைதொட்டு பேசினாலே  நோய் தீர்ந்துவிடும்  என்ற நம்பிக்கை அந்தப் பகுதியில் உலாவியது. ஆகவே, அவரது மருத்துவமனைக்கு  நோயாளிகள் வந்தபடி   இருந்தனர். அவர் மூப்பில் தளர்ந்ததால்  அந்த கிளினிக்கை  மகளையும் , மருமகனையும்  நடத்தச் சொன்னார்.

   இந்த கார்பொரேட் மருத்துவயுகத்தில்  பழைய பாணியில்  மருத்துவமனையை  நடத்தி கரையேற முடியாது.  பேசாமல்  அரசு மருத்துவமனையில் வேலைபார்த்த நேரம் போக  எஞ்சிய நேரத்தில்  எதாவது  பெரிய கார்பரேட் மருத்துவ மனையில் பகுதிநேர மருத்துவம் பார்க்கலாம்  என்பது   மருமகன் ரவியின்  கருத்து., அப்பாவின் கிளினிக்கை   எடுத்து நடத்தலாம் என்பது  மகள் பிரியாவின் ஆசை.  இதில் மனம் பிளவுபட்டு தம்பதிகளுக்கிடையே பனிப்போர் முற்றிக் கொண்டிருந்த தருணம்.  சந்திரவதனா  தம்பதியர்  சென்றனர். தாங்கள்  வந்த விவரத்தை தெரிவித்து  உதவ வேண்டினர்.

  கோமா நிலையில் மரணப்படுக்கையில் உள்ளவரை  மருத்துவ மனையில் அனுமதித்து  , நடக்கக்கூடாதது  நிகழ்ந்தால்  மருத்துவமனை  இதுநாள்வரை பெற்ற நல்ல பேருக்கு களங்கம் வரும்  என்று மருத்துவ  மருமகன் ரவி   மறுதலித்தான். மகள் தயக்கத்தோடு  யோசித்தாள். இருவரின்   பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்   ராமகிருஷ் ணன் “ ரெண்டுபேரையும் கொண்டாங்க ;அவுங்க ரெண்டுபேரும் பார்த்துப் பேசிக்கட்டும் . நல்லதே  நடக்கட்டும் “  என்றார்.       மருத்துவத் தம்பதியர் முகம்  வறண்டிருந்தது.  சந்திரவதனா  தம்பதியர் முகமலர்ந்து  பெரியவருக்கு  நன்றி கூறி புறப்பட்டனர்..

 ****

  வில்லாபுரம் போனார்கள். சந்துருவும்  படுகையில் கிடந்தார். படுத்தபடி கையில்,’ பாரதியின் குயில் பாட்டு ‘புத்தகத்தில் மூழ்கியிருந்தார். இவர்களைக்  கண்டதும்  , புத்தகத்தில் பக்க அடையாளக் குறிப்பானை வைத்துவிட்டு எழ முயன்றார் . அவரது தம்பி மகன்  அவரைத முதுகில்  தாங்கி உட்கார வைத்தான்.

 சந்திரவதனா  அவரது நலம் விசாரித்துவிட்டு  , தனது  அம்மாவின் நிலையைச் சொன்னாள். கண்ணையும் காதையும்  அகலத் திறந்து கேட்ட சந்திரசேகரன் , தன் மனதைத் திறந்து வசந்தியின் நினைவைச் சொல்லாமல்  விம்மினார். திரண்ட கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தில் வழிந்து கழுத்தில் இறங்கியது. வதனா கண்ணீரைத் துடைக்க முயன்றாள்.  “வேண்டாம்மா. கண்ணீராவது வெளியே வரட்டும் . சரிம்மா , நீங்க வசந்தியோட புறப்படும்போது சொல்லுங்க .நான் ஆஸ்பத்திரிக்கு   வந்திர்றேன் “

“ உங்களை  அழைச்சிட்டுப் போக  இவரு வந்திருவார்  “ தம்பதிகள் இருவரும்  காலில விழுந்து வாழ்த்து பெற்றுச்  சென்றார்கள்.

 சந்துருவுக்கு  முகத்தில் தனிப் பொலிவு  கூடி வந்தது. தம்பி மகன் முருகன்  உதவியுடன் எழுந்து முகங்கழுவி  வேறுடை  அணிந்து பளிச்சென்று , சாய்வு நாற்காலியில்  அமர்ந்திருந்தார்.

  ஒருமணி நேரத்தில்  பாஸ்கரன்  கார் வந்தது. முருகன் பெரியப்பாவை    கைத்தாங்கலாக  அழைத்துப் போய்  பின் சீட்டில் அமர்த்தினான்.

 இவர்களது கார் போகவும் , ராஜசேகரின் காரும் வசந்தாவின் ஆம்புலன்சும் வரவும் சரியாக  இருந்தது. மருத்துவமனையில்  தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கு வசந்தாவை ஸ்ட்ரெச்சரில்  வைத்துக் கொண்டு போனார்கள். கோமாவிலிருந்து மீளாத நிலையிலும்   வசந்திக்கு பிடித்தமான ஆடைகள்  அணிவிக்கப்பட்டு பளிச்சென்றிருந்தாள் . மகள் மகன், மருமகள் உடன் வந்திருந்தனர் . வசந்தியை  படுக்கையில் சாய்வாக உட்கார்த்தியிருந்தனர் . தேவையான அளவு வெளிச்சம் பரவியிருந்தது. பாஸ்கரனும், முருகனும்  சந்துருவை மெல்ல நடத்தி அழைத்து வந்து  வசந்தியின் எதிரே இருக்கையில்  அமர்த்தினர்.  வசந்தாவைப் பார்த்ததும்  சந்துருவின்  உதடுகள்  வார்த்தைகளின்றித் துடிக்க , கண்ணீர் பெருகியது. சந்திரவதனா, தம்பியுடன்   முன்னே வந்து , “ அம்மா, சந்துரு அங்கிள்  வந்திருக்காரு. பாரேன் .”

சந்துரு  நிதானமாக  எழுந்து ,  அழுகையை அடக்கி  பிசிறில்லாத  குரலில், “ வசந்தி… வசந்தி …”

 வசந்தா முகத்தை  அண்ணாந்து, இமைகளை விடுவித்து , சந்துரு  எப்ப வந்தே . வா உட்காரு . மூணுபேரும்  சாப்பிட்டு செத்தநேரம்  பேசிட்டு போலாம் . நீ பாட்டுல  ஓடீறாதே . ஏங்க நீங்க பார்த்துக்குங்க அவன்            ஓடீறப்போறான் . நான் சாப்பிடக் கொண்டு வாறேன் “என்றவரே  கண்களை மூடிக்கொண்டாள் . நடப்பது போல் கால்களை  அசைத்தாள்..

“சரி, வசந்தி இன்னைக்கிருந்து மனசார சாப்பிட்டு பேசிட்டுதான் போவேன் “ என்று  சந்துரு  அழுகையை  அடக்கிக்கொண்டு பேசினார் . அம்மாவின்  தலை ஆமோதித்தது..

மருத்துவர் ராமகிருஷ்ணன்  வசந்தியின் நாடித்துடிப்பைப் பார்த்தார்.. கைகால்கள்  அசைவும் இயல்பாக இருக்கிறது ; . வீட்டுக்கு அழைத்துப் போங்க  என்றார்.

சந்திரசேகரின்  நாடித்துடிப்பு பரபரப்பில் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது . கொஞ்சம் ஓய்வெடுத்த பின்னே  கூட்டிட்டுப்போங்க என்றார். மருத்துவர் ரவி, மனைவி பிரியாவின்  தோளைப் பற்றியிருந்தான். மருத்துவர் மூவரின்  முகங்களும்  மலர்ந்தன .

  இருவரையும்  அவரவர் வீட்டிற்கு  அழைத்துச் சென்றனர்.. வசந்தா  கண் திறக்கா விட்டாலும்  மூச்சோட்டம்  சீராக  இருந்தது. முகம் சுடர்ந்தது .  அரைமணி கழித்து தொண்டையில்  கரமுறப்பு..முகத்தை  அண்ணாந்தாள் . சந்திரவதனாவும்,  ராஜசேகரும்  ஆளுக்கொரு மிடறு பால் ஊட்டினார்கள். பாலோடு  வெளியேறிய. உயிர்காற்று பெருவெளியில் கலந்தது.

கதறலை  அடக்கிக்கொண்டு  வதனா முருகனுக்குப்  பேசினாள். “அக்கா , பெரியப்பா நம்மலை விட்டுட்டுப் போயிட்டாருக்கா “ கதறினான்.

      *****

Series Navigationபூமியில்  உயிரின மூலவிகள் தோற்றம்நாவல்  தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE  1900)
author

Similar Posts

Comments

  1. Avatar
    Jananesan says:

    திண்ணை இணைய இதழ் குழுவினருக்கு நன்றி நட்பூ கதை நன்றாக வந்துள்ளது மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *