வளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 12 in the series 21 மே 2023

  • கோ. மன்றவாணன் –

“நீர்வழிப்படும் புணை” என்னும் ஆவணப்படம், எழுத்தாளர் வளவ. துரையனின் வாழ்க்கையை விவரிக்கிறது அதில் அவரின் மனைவி சொல்கிறார்.
“எங்களுக்குக் கல்யாணம் ஆகி 50 வருஷங்கள் ஆவுது. கல்யாணம் ஆனப்போ… எனக்கு முதல் மனைவி தமிழ்தான். அப்புறம்தான் எல்லாமும்னு சொன்னார். அப்ப ஏன் என்ன கல்யாணம் பண்ணீங்கன்னு கேட்டேன். என் தமிழ்ப்பணிக்கு நீ எப்பவும் துணையா இருக்கணும்னு சொன்னார். அதிலிருந்து நான் அப்படித்தான் இருந்துகிட்டு வர்றேன்.”
வளவ. துரையன் அய்யாவின் தமிழ்ப்பணிக்கு, இதைவிட ஒரு நற்சான்றிதழை யாரும் தந்துவிட முடியாது.
நடப்புக் காலத்தில் தமிழ்ப்பணி ஆற்றுவோர்க்கு வீட்டில் அங்கீகாரம் கிடைப்பது ஒரு கொடுப்பினை. வளவ. துரையன் அய்யாவுக்கு அது வாய்த்திருக்கிறது.. அவருடைய மகன்கள் இருவரும் தமிழ்ப்பற்றோடும் இலக்கிய ஆற்றலோடும் விளங்குகிறார்கள் என்பது இன்னும் ஒரு கூடுதல் நற்பேறு. தம் பிள்ளைகளுக்கு எழிலன், முகிலன், அல்லி எனத் தூய தமிழ்ப்பெயர்களையே சூட்டி வளர்த்திருக்கிறார். நாட்டுக்கு மட்டும் அவர் தமிழ்உணர்வை ஊட்டவில்லை. தன் குடும்பத்தினருக்கும் தமிழ் உணர்வை இலக்கிய அமுதை ஊட்டி உள்ளார்.
இலக்கியத்தில் மரபுக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கும் இவர், கவிதை, கட்டுரை, உரை, சிறுகதை, புதினம், திறனாய்வு என எல்லாத் தளங்களிலும் கால்பதித்து வந்தது மட்டும் அல்லாமல், நூல்பதித்தும் வந்திருக்கிறார். அவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி, இலக்கிய அமைப்புசார் பணிகளில் மற்றவர்களுக்கு ஒரு முன்தோன்றலாகத் திகழ்கிறார்.
அவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே அவருடைய அமைப்புசார் பணி துளிர்விட்டது. அப்போதே கையெழுத்து ஏடு நடத்தினார். உயர்நிலைப் பள்ளிக்கு வந்த போது, “கதைக்கொத்து” என்ற பெயரில் கையெழுத்து இதழைப் பரவவிட்டார்.. உடன் படித்த மாணவர்களை எழுதத் தூண்டினார். அவர்கள் எழுதியவற்றை வெளியிட்டு ஊக்கமும் தந்தார்.
வடலூரில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த போதும் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டார். அங்கேயும் இலக்கிய அமைப்பை நிறுவி, நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலரை அழைத்து வந்து பேச வைத்தார். அங்குப் பயிற்சி பெறும்போதுதான் அருட்பாவை ஆர்வத்துடன் படித்தார். வள்ளலாரிடம் இருந்துதான் சமரசத்தைக் கற்றுக்கொண்டு தன் வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகச் சொல்கிறார்.
ஓர் அமைப்பை நடத்துபவருக்கு அவசியம் இருக்க வேண்டிய ஒரு குணத் தகுதி, அனைவரிடமும் சமரசமாக நடந்து கொள்வது. அது, அவருக்கு இருப்பதாலே அமைப்புப் பணிகள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
1967 வாக்கில் வளவனூரில் திருக்குறள் கழகம் தொடங்கிய போது, அதில் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். அந்த அமைப்பு அறுநூறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் அர. இராசாராமன். இன்னொருவர் வளவ. துரையன். தமிழ் என்று வந்துவிட்டால் தானாக முன்வந்து அனைத்து வேலைகளையும் தன்மேல் போட்டுக்கொண்டு உழைத்திருக்கிறார்.
அதே காலக்கட்டத்தில் “சங்கு” கையெழுத்து இதழையும் நடத்தி இருக்கிறார். அந்த இதழை இன்று யார் பார்த்தாலும், அச்சு இதழ்களை மிஞ்சும் அளவுக்கு அழகாக வெளியிட்டு உள்ளார் என்று பாராட்டுவார். இதழ் அழகாக வருவதற்குத் தனக்குத் துணையாக இருந்தவர் சிவலிங்கம் என்று இன்றும் நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்கிறார். ஓர் அமைப்பின்… ஒரு செயலின் வெற்றிக்குத் துணை நிற்பவர்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிறர்முன் போற்ற வேண்டும். அந்த அருங்குணத் தகுதி நம் அய்யா வளவ. துரையனுக்கு எப்போதும் உண்டு.
கிருஷ்ணாபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியில் சேருகிறார். அங்கேயும் இலக்கிய மன்றம் தொடங்கிவிடுகிறார். பள்ளி ஆண்டுவிழாக்களை, இலக்கிய விழாவாகவும் நாடக விழாவாகவும் மாற்றிவிடுகிறார். இலக்கிய மேன்மக்களை எல்லாம் வரவழைத்து மாணவர்கள்முன் பேச வைத்திருக்கிறார்.
90களின் தொடக்கத்தில் கடலூருக்குத் தன் வாழ்விடத்தை மாற்றிக் கொள்கிறார். இலக்கியப் பேரவை என்ற அமைப்பை 1994 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விடுகிறார். அப்போது அவ்வாறு இலக்கிய அமைப்பைத் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தவர் தமிழாசிரியர் மாணிக்கம் என்று நன்றியுடன் சொல்லி மகிழ்கிறார். திங்கள் ஒரு நிகழ்வு என்று திட்டம் வகுத்துச் செயல்படுகிறார். ஒரு நிகழ்வு போல இன்னொரு நிகழ்வு இருக்காது. தொல் இலக்கியங்களைப் பற்றியும் நிகழ்ச்சி நடத்துவார். நவீன இலக்கியங்களைப் பற்றியும் நிகழ்ச்சி நடத்துவார். இதுவரை ஏராளமான பேச்சாளர்களை- இலக்கிய ஆற்றல் ஆளர்களை அழைத்துவந்து பேச வைத்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் இருக்கும் இலக்கிய வல்லுநர்களைக் கண்டறிந்து, மேடை அமைத்து அவர்கள் மின்னவும் மேலும் வளரவும் துணைபுரிந்து வருகிறார்.
பாவண்ணன், கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி உள்ளிட்ட எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் படைப்புலகம் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். உள்ளூரில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையும் சிறப்பும் சேர்க்க வேண்டும் என்பதில் அவருக்குப் பேரார்வம். ஆயிஷா நடராசன் சாகித்ய அகாதெமி விருது பெற்ற போது, அவரை அழைத்து விழா நடத்திச் சிறப்புச் செய்தார்.
பொதுவாக எழுத்தாளர்கள் இலக்கிய அமைப்புகளை நடத்துவதில்லை. தங்களை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவர்கள் வேறு யாரையும் கொண்டாட மாட்டார்கள். பேச்சாளர்கள் ஆயிரக் கணக்கில் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் அமைப்பு நடத்திப் பிறரை அழைத்துவந்து பேச வைப்பதில்லை. இதை அவர்களின் இயலாமை என்றும் சொல்லலாம். அல்லது பிறரின் பெருமைக்கு நாம் ஏன் உழைக்க வேண்டும் என்ற மனநோய் ஆகவும் இருக்கலாம். வளவ. துரையன் ஆகச் சிறந்த எழுத்தாளர். மிகச்சிறந்த பேச்சாளர். தொடர் சொற்பொழிவுகள் ஆற்றும் வல்லமை படைத்தவர். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் பலரைப் பெருமைப்படுத்துவார். சொற்பொழிவு ஆற்றிடச் செய்வார். கடலூரில் உள்ள பெண்பேச்சாளர்களில் சிலரைக் கம்ப இராமாயணச் நெடுஞ் சொற்பொழிவு ஆற்றும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்.
கடலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்குப் பக்தர் ஆகப் போய் வந்தவருக்குப் பெருமாள் பற்றைவிடத் தமிழ்ப்பற்று விஞ்சி நின்றது. அங்கேயும் இலக்கியத்தையும் இறைமையையும் இணைத்து அருமையான நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்தி வருகிறார். யாரேனும் ஒரு பேச்சாளர் வராமல் போய்விட்டால், அவருக்கு மாற்றாக அன்றைய தலைப்பில் அழகாகப் பேசுவார். வந்து பேச வேண்டியவரைவிட மிகச்சிறப்பாகப் பேசிக் கூட்டத்தை நிறைவு செய்வார்.
புயல் மழையில்கூட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். காலையில் படி; கடும்பகல் படி; நல்ல மாலையில் படி என்று பாரதிதாசன் ஒரு பாடல் எழுதி இருப்பார். அதுபோல் காலையிலும் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். பிற்பகலிலும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். மாலையிலும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். எந்தப் பொழுதில் நடத்தினாலும் பொழுதுபோக்குக்காக அல்லாமல் தரமான இலக்கிய நிகழ்ச்சிகளையே நடத்தி வந்து இருக்கிறார்.
இலக்கிய அமைப்புகள் நடத்துவோர் பலர், நவக்கிரகங்களைப் போல நடந்து கொள்வார்கள். ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். பிறர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல மாட்டார்கள். ஆனால் வளவ. துரையன் அய்யா, யார் நிகழ்ச்சி நடத்தினாலும் தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே சென்று கலந்துகொள்வார்.
இதழ் நடத்துவது எவ்வளவு கடினம் என்பதைக் கண்ணதாசன் சொல்லிக் கேட்க வேண்டும். ஆனால் வளவ. துரையன், சங்கு இதழைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துகிறார். எத்தனையோ இடர்களை அவர் நேர்கொண்டிருக்கிறார் என்பதை நான் நேரடியாகவே அறிவேன். இடர்களை இடறிவிட்டு வெற்றிச் சுடர்களை ஏற்றி வைப்பவராகவே எப்பொழுதும் விளங்குகிறார். கொரானா காலத்தில் பல இதழ்கள் முடங்கிய போது, சங்கு இதழ், தங்கு தடையன்றி வந்தது. அதற்குச் சரியான திட்டமிடலும் சலியாத உழைப்புமே காரணம்.
“எதைத் தான் தொடங்கினாலும் அதை இடையில் நிறுத்துவதில்லை. தொடர்ந்து செய்வேன்” என்று சொல்கிறார். அதைச் செயல்களில் காட்டுகிறார். சிலர் ஆரவாரமாக ஆரம்பிப்பார்கள். ஆறுவாரம்கூட நிலைத்து இருக்க மாட்டார்கள்.
பல்லாண்டுக் காலமாக இலக்கிய அமைப்பையும் இதழையும் நடத்தி வரும் அவர், அத்தனைக்கும் கணக்கு எழுதி வைத்து இருக்கிறார். இந்த நேர்மைக்கே அய்யாவுக்குத் தலை வணங்குகிறேன்.
தன் சக்தி என்ன என்பதை உணர்ந்:து எளிய முறையில் நிகழ்ச்சி நடத்துவார். ஆரவாரத்துக்காகவோ புகழ் ஆபரணத்துக்காகவோ நிகழ்ச்சி நடத்த மாட்டார். அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளைத்தாம் நடத்துவார்.
இவரை ஆளே இல்லாத சந்திர மண்டலத்தில் கொண்டுபோய் விட்டாலும் தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வார். அங்கேயும் ஓர் இலக்கிய சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொள்வார்.

Series Navigationநான் எனதாகியும் எனதல்லவே!நிறைவு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *