நாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்திரண்டு பு.யு 5000

This entry is part 1 of 2 in the series 3 டிசம்பர் 2023

  

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதிக்காக உருவாக்கி வாங்குவார் இல்லாமல் போன கண்கவரும் தகரக் குடுவைகள் கோகோ பானக் குடுவைகள் போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

மாட்டு ஈக்களின் இறகுகளும், கால்களுமாக மிதந்து கொண்டிருக்கும் திரவம் கறுப்பு வண்டல் கீழே தேங்கியிருக்க மேலே அழுக்கு நெடியும் நிறமுமாக காய்ச்சிக் கிளறப்பட்டபடி எங்கணும் நிறைந்திருந்தது. 

சில குடுவைகளில் இருந்து திரவம் கசிந்து அவை வைத்திருக்கும் இடம் முழுக்க பாதாளச் சாக்கடை வாடை தூக்கலாக மேலெழும்பிக் கொண்டிருந்தது. 

மெல்ல ஊரும் வாகனங்கள் கதவு திறந்திருக்க சுற்றிலும் ஈரவாடையோடு அரண்மனை நோக்கி வரிசையாகப் போய்க்கொண்டிருந்தன. 

குடுவைகளை கிடங்குகளில் சேர்த்து வைக்க இன்னும் இடமில்லாமல் பள்ளிக்கூடங்களிலும் அரசாங்க அலுவலகங்களிலும் அவசரமாகச் செய்யப்பட்ட அலமாரிகளில் அடுக்கப்பட்டு அந்த இடமும் நிறைந்துபோக, தேளரசரின் அரண்மனை மட்டும் மிச்சமிருந்தது. 

இப்போதைக்கு அரண்மனையைக் கிடங்காக்கலாம் என்று முடிவு எடுத்தது கர்ப்பூரம்தான். அதுவும் போக வர வழிகூட விடாமல் சுவரோடும் கதவோடும் அலமாரி உயர்ந்து வரக்கூடிய கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டன. 

சகல சஞ்சீவினி வாடை எதிர்பார்த்தபடி தேளரசருக்குப் பிடித்துப்போனது. முந்தாநாள் தான் அரண்மனை கிடங்கு ஆனது. அந்த வாடையில் இளம்பெண் தேள்களுடன் கூட பெருந்தேளருக்குப் போதை கூடியது. 

வக்காளி வைத்தியன். சகலன்னு மருந்தோட பெயரைச் சொல்ல ஆரம்பிச்சதுமே விரைக்குது வாடையை முகர்ந்தா வேறே எண்ணம் ஏதும் வரல்லே சம்போகம் தான் இதோட சோறு கொஞ்சம் தின்னா வயிறு நிறைஞ்சு போகிற மாதிரி மருந்து பலன்லே கூட்டிச் சேர்த்தா அசல் சஞ்சீவினி என்ன அதோட பாட்டன் கூட இந்த சகல இன சஞ்சீவனிக்கு முன்னே நிக்காதே. அந்த மருந்துக்கு உள்நாட்டுக்காரர்கள் பெயர் வச்சிருக்கறதா கேள்வி. உடன் உப்பும் சகலருக்கும் சஞ்சீவனி. வக்காளி. 

இதோட ரெண்டு தடவை சொல்லிட்டார் அவரை அறியாமலேயே.

பேசாமல் இருக்கப்பட்ட மருந்தை எல்லாம் எடுத்துக்கிட்டு, சாப்பாடையும் கொஞ்சம் போல எடுத்துக்கிட்டு வேறே கிரகம்,, வேறே சூரிய மண்டலம், வேறே பிரபஞ்சம் போய் அட தனியாகப் போய் என்ன பண்றது நாலைந்து தேளழகிகளோட போயிட வேண்டியதுதான்.  (மேலும்)

அப்பாராக இருந்தால் இளந்தாரி பையன்கள் தான் வேணும். பாவம் தெள்ளுப்பூச்சி கொட்டிக் கொட்டி முழுசா பரலோகம் போயிட்டார். அதெப்படி திடீர்னு துயிலகத்துலே தெள்ளுப்பூச்சி எப்படி வந்தது? அங்கே மட்டுமில்லே. நாட்டுலே திடீர்னு எப்படி படை பட்டாளமாக வெட்டுக்கிளிப்படை மாதிரி வந்தது? ஏன் தேளர்களை மட்டும் தேடித்தேடிக் கொலை செஞ்சுது, அழுக்கு வேட்டி மாதிரி படையாகத் திரும்பிப் போனது?  (மேலும்)

மனுஷ இனத்துக்கு கிருமிக் காய்ச்சல் மாதிரி தேளை அழிக்க தெள்ளுப் பூச்சி போல் இருக்கு   (மேலும்)

எல்லாம் இந்த கிருத்திருமம் பிடிச்ச கர்ப்பூரம் கைவேலையா இருக்கக் கூடும். வைத்தியனை ஏதாவது கொடுத்து சரிக்கட்டி இருப்பான் கிரகசாரம். என்ன மருந்தோ நேத்து அடுக்கின மருந்து மூத்திரவாடை. அவனவன் குடுவையிலே பெய்ந்து அனுப்பியிருக்கான்.
(மேலும்)


ஏற்றுமதிக்குன்னு சொல்லி கண்ட பயல்கல் சீசாவிலே பேஞ்சதை எல்லாம் படுக்கை அறையிலே சேர்த்து வைக்கணும்னு விதியா என்ன? இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணும். வரட்டும் கர்ப்பூரம். ஏதாவது வழி செய்வான் அந்தப் பயல்.  

ஓவென்று பெருஞ்சத்தம் கதவைத் திறக்காமல் சாவித் துவாரம் வழியே பார்க்க, ஒரு பத்தாயிரம் கரப்புகள் அரண்மனையை ஆக்கிரமிக்க வேகமாகந் நகர்ந்து வந்தன. சுவரெல்லாம் கரப்பு. தரையில் கிடந்து சட்டென்று பறந்து பயமுறுத்தும் அவற்றில் சில.

 தேளரசரின் வைப்பாட்டிகள் பெற்ற, அண்மையில் பிறந்த தேள்சிசுக்கள் தாய்க் கரப்புகள் பாலூட்ட கண்மூடி இருக்க, உள்ளே வந்த கரப்புப் பட்டாளம் சிசுத் தேள்கள் மேலேறி கால்களை பல்கொண்டு அறுத்து உண்டன. நெற்றியில் தேள்சிசுக்களை நோண்டி தலைச்சோறு எடுத்து சுறுசுறுப்பாக உண்டன அவை; ஜாக்கிரதையாக சின்னஞ்சிறு தேள் கொடுக்குகள் மேல் எச்சில்கொண்டு நனைத்து அவசரமாக அவற்றை விழுங்கின. 

சமையலறையில்  பாத்திரம் எல்லாம், எரியாத அடுப்பு எல்லாம், கழிப்பறை முழுக்க கரப்புகள் அரன்மணை முழுக்க ஊர்ந்திருக்க, படுக்கை அறைக் கதவைத் திறக்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தார் பெருந்தேளரசர். தடதடவென்று பாத்ரூம் கதவை இடிக்கற சத்தம். இனத்துக்கேயான எதிர்ச்செயல் போல சட்டுனு தரையிலே ஒரு விரிசல்லே உடனே பதுங்கிக்கிட்டார் பெருந்தேளர். 

நமக்கே இப்படி சத்தம் சட்டுனு கேட்டா விதிர்விதித்துப் போகுதே. கரப்புப் பயலுவ என்ன பண்றாங்க. அவங்க பதட்டத்திலே கூரையிலே போய் ஒரு வினாடி தொடுக்கிட்டு இருந்து அப்புறம் கீழே கேணத்தனமாக பறந்து வருவானுங்க. 

மறுபடி கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் அரண்மனை சேவகத்தில் இருக்கும் மனுஷர்கள் எல்லோரும் திமிராகப் பார்த்துக்கிட்டு கையை இடுப்பில் வைத்தபடி நிற்க, வாசல் பெருக்குகிறவன் எனக்கு முன்னால் விழுகிறது போல் காரித் துப்புகிறான். 

வாயைத் திறந்தபடிக்கு அவன் சொல்கிறான் யோவ் பெருந்தேளு இந்த மாசம் சம்பளம் எப்போவரும்? கூட நிற்கிற பெண் தேள் உடல் சாஸ்திரப்படி பேரழகி. மனுஷ உடல் சாஸ்திரப்படி என்னவோ. அவள் காரித் துப்பின பயலுக்குப் பின்பாட்டு பாடற மாதிரி சொல்றாள் – பெரிசு சகல ரோக சஞ்சீவனி பாட்டில் பாட்டிலா கொடுக்கறேன் வாங்கிட்டுப் போன்னு சொல்லிடாதே. அந்த பீக்காட்டுத் தண்ணியை வெளியே போய்ட்டு கால் கழுவக்கூட பிரயோஜனப்படுத்த முடியாது. நாறிக் கிடக்குது எளவு. அதைக் குடிச்சா முன்னாலும் பின்னாலும் நீண்டு போகும்னு சொன்னீங்க. 

உங்கிட்டே எப்ப   சொன்னாள் அந்த ஆள் என்று துப்பன் அவளைக் கேட்க ஆமா அதுவேறே கேட்கணுமாக்கும் என்று நொடித்தாள் தேள்லட்சண அழகி. திடீரென்று பின்னால் ஒரு கும்பல்,  சஞ்சீவனி குடிக்கக் கொடுத்து குடிக்கறதுக்கு ரெண்டு பைனரி காசு கூலி கொடுத்து  பரபரப்பாக போன வாரம் வரை வேலை பார்த்துட்டிருந்த பயலுக சம்பளம் கேட்கறானுங்க. 

காசு எங்கே டிஜிட்டல் மரத்துலேயா விளையுது இல்லே பைனரி வயல்லே முளைச்சு வருது. போன வாரம் வரை எப்படியோ சமாளிச்சுட்டு போயாச்சு. இப்போ என்ன பண்றது? தேளரசர் அலைபாய்ந்தபடி நிற்க வந்துட்டேன் என்று தெம்பாக ஒரு குரல். 

கர்ப்பூரம் தான். போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது பெருந்தேளரசனுக்கு. அவரைப் பார்த்துக் கையசைத்து விட்டு கூட்டத்துக்கு முன்னால் வந்து நின்றான் கர்ப்பூரம். 

அண்ணன்மாரே அக்காமாரே தங்கச்சிமாரே தோழிமாரே

எல்லா மாரும் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததைச் சொல்லு என்று துப்பல் பயல் திரும்பக் குறுக்குச்சால் ஓட்டினான். 

நீங்க எல்லோரும் இவ்வளவு பொறுமையாக இருந்ததுக்கு நன்றி. குகைக்குள்ளே அந்த ஓரத்துலே நல்ல வெளிச்சம் தெரியுது என்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிப் பெண் ஊழியர்களின் நாணப் புன்னகை கிடைக்கப்பெற்றான் கர்ப்பூரம்.

 என்ன சொல்லிவிட்டேன் இந்தப் பெண்டுகள் நாண? புரியவில்லை. விஷயத்துக்கு வருவோம். இன்று நீங்கள் வீடு திரும்பும்போது ஒரு மாத சம்பளம் தரப்படும். இந்த ஞாயிறு சம்பள பாக்கி எல்லாம் கொடுத்துத் தீர்க்கப்படும். கர்ப்பூரம் முழுமுதல் பேரரசனாக முழங்க, தேளர் சகல அதிகாரமும் பறிபோனவனாக உடலும் மனமும் தளர்ந்து காட்சியளித்தார். 

கல்பூரன் வாழ்க என்று தப்பும் தவறுமாக முழங்கிக் கொண்டு அந்தக் கூட்டம் திரும்பப் போனது. துப்பல் மயிரான் வாலைச் சுருட்டி காலுக்கு நடுவில் இடுக்கி வைத்துக்கொண்டு பயந்தபடி போனதை ஓரக் கண்ணால் பார்த்தான் கர்ப்பூரம். அவன் எப்போதடா பேசப் போகிறான் என்று ஆவலோடு கொடுக்கை ஆட்டாமல் சகல மரியாதைகளோடும் நின்றிருந்தார் பெருந்தேளர். 

ராஜா உன்னைத்தானப்பா ராஜன் பெரும்தேள்பெண்டிர் மாட்டி இருந்த நகை எல்லாம் எங்கேப்பா? 

இங்கே தான் 

இங்கேன்னா?

 தேளழகிங்கற என் வைப்பாட்டி வச்சிருக்கா

 அவளை சுகிக்கணும்னா இப்பவே செய்யுங்க நான் அந்தப்பக்கம் திரும்பிக்கறேன். 

எனக்கு அவ்வளவு அவசரமா ஒண்ணும் அந்த சிந்தனை வரல்லே 

அந்தக் கதை எல்லாம் வேணாம் ஒரு பத்து நிமிஷம் அனுபவிச்சுட்டுக் கண்ணைக் காட்டுங்க   சிற்றின்பத்துக்கு அப்புறமான பேரின்பம் கிடைக்க வழி செஞ்சுடலாம். அவளை நையப் புடைன்னு சாதாரணமா எங்க காலத்தில் வெளக்குமாறால் தேள்   அடிக்கற மாதிரி அடிச்சுக் கொன்னுடலாம். அவள் கிட்டே கொடுத்திருக்கற நகையை எல்லாம் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் வித்துட்டா ஒரு மில்லியன் பைனரி நாணயம் கிடைக்கும் அதை வாங்கி வந்து சம்பள பாக்கி தீர்த்துடலாம். கூடவே பாதி விலைக்கு சகல இன சஞ்சீவினி தர்றோம்னு ஆல்ட் க்யூ பிரபஞ்சத்திலே நீரே போய் விளம்பரம் செஞ்சுட்டு வாரும். எப்படி விற்காமல் இருக்கும்” 

ஒரு நீளக் கதையைச் சுருக்கி உரைக்கறதும்பாருங்க அப்படி பெருந்தேளருக்கு வைப்பாட்டி போகத்தில்   சிறுதேள்பெண்டுகிட்டே கொடுத்த நகைகள் பிடுங்கப்பட்டன, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் அவை விலைக்கு  விற்கப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிட்டியது. 

எல்லாவற்றுக்கும் மேல், சகல இன சஞ்சீவனி பாதி விலைக்குத் தருவதாகச் சொன்னதும் ஒரு குடுவை பாக்கி இல்லாமல் மருந்து அங்கே ஏற்றுமதி ஆகி விற்று இன்னும் ஒரு வருஷம் நிம்மதியாக தேளரசு நடத்தலாம் என்ற நம்பிக்கை. 

எல்லோருக்கும் எல்லா அரசாங்க சம்பள பாக்கியும் கொடுத்துத் தீர்க்கப்பட நாட்டு மக்களுக்கு பெருந்தேளரசர் மேல் நம்பிக்கையும் பிரியமும் சேர ஆரம்பித்தது. 

கர்ப்பூரம் எல்லாப் பெருமையும் எனக்கே என்று அடக்கமாக அந்த மதிப்பு மரியாதையை மடைதிருப்பி விட்டுக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் அரசு தரப்பில் இருந்து சேர வேண்டிய பணம் போய்ச் சேர்ந்திருக்க, அதன் மூலம் தனியார் தரப்பு கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நிறைவேற, பணம் வந்தவர்கள் அத்தியாவசியச் செலவு எல்லாம் செய்து மிஞ்சியதை இன்பம் நுகர மது மாது என்று செலவு பண்ண சிறப்பு தீனி என்று மானுடக் கழிச்சலை கரப்புகள் சுவைத்து உண்ணக் காசு மிஞ்சிட, நாட்டில் பணப் புழக்கம் அதிகமானது. 

பெருங்கர்ப்பூரம் வாழ்க என்ற வாழ்த்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்கும் பரவ மனமே இல்லாமல் கர்ப்பூரம் அவற்றை அடக்கி வைத்தான். 

காலம் கனிந்து வந்தது என்று தோன்ற ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி நீலன் வைத்தியரான கசாப்புக்கடை நீலன் எல்லா இயக்கத்துக்கும் செயல்பாட்டுக்கும் தலைவரான கர்ப்பூரத்திடம் சொல்லலுற்றார் இங்ஙனம் – தலைவ தலைவ பெருந்தலைவ ஒரு வேண்டுகோள். இந்த ஆல்ட் க்யூ பிரபஞ்சம் எப்படி இருக்கு, அங்கே வைத்தியர்கள் சகல இன சஞ்சீவனியை சரியாக பிரயோகிக்கிறார்களா என்று சோதித்து வர விருப்பம். ரெண்டு நாள் நான் போய் வருகிறேனே என்றார். என் பங்கு வருமானம்  கொடுத்தால் நல்லா இருக்கும் என்று சேர்த்துக் கொண்டார். செலவுக்கு பணம் தேவையாக இருக்கு பயணம் போனால்.

சோழியர் குடுமி சும்மாத்தான் ஆடுது என்று நம்ப அவன் தயார் தான். எனினும் நீலன் வைத்தியர் கேட்டபடி ரெண்டு நாளில் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்குப் போய், பார்த்து பேசி திரும்பி வர ரெண்டே நாள் போதும் என்று அப்பாவியாக நினைப்பதிலிருந்து அவருடைய மன நிலை மற்றும் அறிவுக்கு நேர்ந்த ஆழம் எவ்வளவென்று வியப்பானது. 

நீர் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி மூன்று வாரம் ஆல்ட் க்யூவில் நம்மோடு வர்த்தகம், மற்ற பரிவர்த்தனைகள் நடத்தும் ஆல்ட் க்யூ பூவுலகு சென்று எல்லாம் கண்டு, நல்ல சேவையை அளித்து வருக என்று நீலன் மனம் அமைதியடைய வைத்தான் கர்ப்பூரம். 

இதை ஒரே வார்த்தையில் நீலன் ஆல்ட் க்யூ போக அனுமதித்தேன் என்று பெருந்தேளரிடம் சொன்னபோது அவர் சிம்மாசனத்தில் தொடுக்கியதுபோல் கொடுக்கு மடக்கி உட்கார்ந்து எதுக்கு அவன் நீலன் ஆல்ட் க்யூ போகணும் என்று பொறுமை இழந்து கேட்டார். 

யோவ் பெருசு போனாப் போகுதுன்னு தகவல் கொடுத்தா, பெரிய மயிரனா உம்மகிட்டே சொல்லிட்டு போகணுமாமே. நீர் தேளழகி பார்த்துட்டிருக்க அவ வீட்டுக்காரனோட ரமித்திருந்த படம் எல்லாம் தேளழகி எங்கிட்டே கொடுத்திருக்கா. உம்ம மேலே இருக்கப்பட்ட மரியாதையை போக்கடிக்க இந்த படத்தை எல்லாம் வெளியிட்டா போதும். அதுனாலே கம்முனு ராஜாவா, ராஜனா இரும் என்றான்.

 அலுத்து ஆயாசமடைந்து பெருந்தேளர் அரியாசனத்தில் தலையணை இட்டு உட்கார்ந்தபடியே உறங்கலானான். சம்பளத்தோடு சகல இன சஞ்சீவனி அளிக்கப்படும் பொதுமக்கள் மும்முரமாக இயங்கும் ராப்பொழுது அது. ஆல்ட் க்யூ அரசின் அன்பளிப்பாக ஆணுறைகளும் மனித இனப் பிரஜைகளுக்கு கர்ப்பூரர் கோரிக்கைப்படி வழங்கப்பட்டதைச் சொல்லியாக வேண்டும். 

மகிழ்ச்சியும் பணப் புழக்கமும் இருந்ததால் சகலரும் தேவை இருக்கிறதோ இல்லையோ எதையாவது வாங்கினார்கள். நிறம் மாறும் பச்சோந்திகளை வாங்கி விற்பதிலும் அவற்றை வீட்டு முன்னறையில் தொங்கவிட்டு அலங்காரம் செய்வதிலும் பலருக்கு ஈடுபாடு இருந்தது. சிற்றுந்து வாங்கி ஓட்டிப் போக ஆர்வம் மிகுந்தது பலருக்கும். 

அவரவராகவே முன்வந்து சகல இன சஞ்சீவனி உற்பத்திக்கு உழைக்கத் தயார் என்று வேலை கேட்டு ராப்பூரா நிற்க, ஆல்ட் க்யூவில் பேச வேண்டியவர்களோடு பேசி சஞ்சீவனி உற்பத்திக்கு யந்திரங்களை வடிவமைத்து பெருந்தேளரின் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

எங்கும் அந்த யந்திர ஒலி காசின் ஒலியாகக் கேட்க, அடுத்த பெரிய ஏற்றுமதி ஆர்டர் ஆல்டர் எஸ் பிரபஞ்சத்திலிருந்து கிடைத்தது. அரியாசனத்தில் உட்கார்ந்தால் திரும்ப எழ முடியாமல் உடல் கனத்துப் போய் தேளரசர் கஷ்டப்பட கர்ப்பூரம் புது சிம்மாசனம் வாங்கினான். அன்பளிப்பு கர்ப்பூரய்யா என்று பொறித்த ஆசனமது.

அப்போது தான் கர்ப்பூரத்துக்கு மனதில் ஒரு மின்னல் வெட்டியது. காமம் எல்லாம் இல்லை சிருங்கார சிந்தனைகளுமில்லை. இதுவரை பெருந்தேளரசருக்கு கர்ப்பூரமும்  நீலனும் ஆதரவு கொடுத்திருப்பது ஏன் தொடர வேண்டும்? சும்மாக் கையெழுத்துப் போட பெருந்தேளன் எதுக்கு? 

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி, உள்நாடு விற்பனை வருமானத்தில் உங்கள் பங்கு என்று கணிதத்தில் ஞான சூனியமான  ஆல்ட் க்யூ கசாப்பு நீலனிடம் அரை மில்லியன் பைனரி நாணயம் அளித்து கர்ப்பூரம் அவரை இப்பிறவிக்கும் இனி ஏழேழ் பிறவிக்கும் கர்ப்பூர அடியாராக்கினான்.

அடுத்த 24 மணி நேரத்தில் கர்ப்பூரமும் அவருக்குத் துணையாக ஆல்ட் க்யூ நீலன் வைத்தியரும் இருக்க பெருந்தேளர் அதிபர் பதவியை விட்டு இறக்கப்பட்டார். அவர் தன் பழைய சிற்றுந்தை ஓட்டிக்கொண்டு அரண்மனையிலிருந்து துயிலரங்கத்துக்குத் தப்பி ஓடினார். 

கரப்புகளின் பரிபூரண ஆதரவு கர்ப்பூரத்துக்குக் கிடைத்தது. அவை தேளர்களை விட அதிகாரம் மிகுந்தவை என்று அறிவிக்கப்பட்டது. கர்ப்பூரம் அரசவையைக் கலைத்து அதிகாரி தேள்களின் கொடுக்கு விஷத்தை வலுக்கட்டாயமாக 27 விழுக்காடாகக் குறைக்க உத்தரவிட்டான். 

பறக்கும் செந்தேள்கள் அப்படிப் பறக்க இருபது பைனரி நாணயம் கட்டணம் கட்டி அரசாங்க அனுமதி வாங்கி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுமதியைப் புதுப்பிக்க வேண்டும். முழு அதிகாரமும் கர்ப்பூரத்துக்கும் அடுத்து கொஞ்சம்போல் அதிகாரம் மனிதர்களுக்கும் என்னேரமும் அது மாற்றப்படக்கூடும் என்று வதந்தி நிலவியது. 

நாளாவட்டத்தில்   தேள்கள் அனைத்துக்கும் கட்டாய கொடுக்கு நீக்கும் அறுவைசிகிச்சை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தேள்கள் இருப்பிடங்களில் அரசாங்கமே ரகசியமாக தெள்ளுப்பூச்சிக் கூட்டங்களை ஆக்ரமிக்க வைத்தது. சுத்தமின்மையால் தான் தேள்களை தெள்ளுப்பூச்சிகள் விரட்டி வேட்டையாடுகின்றன என்றும் அவை என்றால் தேள்கள் தூய்மையான இடங்களுக்கு இடம் பெயரச் செய்யப்படும் என்று அறிவித்து அனைத்து தேள்களும் வெய்யிலில் காய்ந்து சுருண்டு விழுந்து மரிக்கச் செய்யப்பட்டன. அரசு தரப்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.   

(தொடரும்)

Series Navigationஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 6
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *