ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 7

This entry is part 3 of 3 in the series 10 டிசம்பர் 2023

இருக்கட்டு;ங்கய்யா…பன்னெண்டு மணி வரைக்குமாச்சும் எரியட்டும்..;பிறகு அணைச்சிக்கிடுவோம்…- சிரித்துக் கொண்டே சொன்னார் லட்சுமணன்.

நம்ம வீடுகள்னா இப்டி பகல்ல லைட்டுப் போடுவமா? இந்த எடத்துலெ எவ்வளவு வெளிச்சம் இருக்கு…அது போதும்…அணைங்க…

கேட்கமாட்டீங்களே… என்றவாறே விளக்கை அமர்;த்தினார் லட்சுமணன்.

எந்தமாதிரியான சூழ்நிலைல உட்கார்ந்திருக்கோம்ங்கிறதைவிட, எப்படி வேலைசெய்கிறோம்ங்கிறதுதானே முக்கியம் லெட்சுமணன்?

அது உள்ளதுதானுங்க…ஆனாலும் பொதுமக்கள் வந்து போகுற இடமில்லீங்களா? பார்வையா இருந்தாத்தானே மதிப்பா இருக்கும்…

அவுரு சொல்றதும் சரிதான சார்…நீங்க ரொம்ப சிம்பிள் சார்…அப்படியிருக்கக் கூடாது…ஆபீசுக்குன்னு உள்ள ஸ்டேட்டசை மெயின்டெய்ன் பண்ணத்தான் வேணும்…அப்பத்தான் பப்ளிக் நம்மை மதிப்பாங்க…

-நிறுத்தாமல் சொல்லிக்கொண்டு உள் அறையிலிருந்து வெளிப்பட்டார் மருது. அந்த அலுவலகத்தின் சீனியர் க்ளார்க்.

இப்படியே ஆரம்பித்தால் பேச்சு நீண்டு விடும். பிறகு வேலை நின்று போகும். எனவே அந்த விஷயத்தை அத்தோடு முடித்துவிட்டு அன்றைய பணிக்குத் தயாரானான் கணேசன்.

வாங்க மருது…உட்காருங்க… – எதிரே அமர்ந்தார் மருது. சொல்லுங்க சார்…என்றார் இவனைப் பார்த்து.

இன்னைக்குக் காலைல சீஃப் பேசினார் மருது. கலெக்டர் மனுநீதி நாள் பெட்டிஷன்ஸ் நம்மகிட்டே அஞ்சு பெண்டிங் இருக்கில்லையா…அதை ஃபைனலைஸ் பண்ணி வைக்கச் சொன்னார்…அதுலே சைட் இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சு ரிப்ளை வந்தது எத்தனைன்னு பாருங்க…எஸ்டிமேட் எதுவும் கொடுத்திருந்தாங்கன்னா அந்த ஒர்க் எக்ஸ்கியூஷனுக்கு ஃபைனான்ஷியல் சாங்ஷன் கேட்டு எழுதிடுவோம்…அந்த அஞ்சாவது பெட்டிஷன் டி.ஏ.பில் சம்பந்தப்பட்டது இல்லையா…? அந்த ஃபைலைப் புட்அப் பண்ணுங்க…அதையும் இன்னைக்கு மூவ் பண்ணி முடிச்சிடுவோம்…

சார்…அது கொஞ்சம் பிரச்னையானது சார்…

எப்படி?

டிஃபெக்ட்ஸ் ரெக்டிஃபை பண்ணச் சொல்லி ஏற்கனவே அதை ரிட்டர்ன் பண்ணிட்டோம் சார்…திரும்ப அந்த பில்லை ஆபீஸ்ல கொடுத்துட்டதா அவர் சொல்றாரு…..

அப்படீன்னா கொடுக்கலைன்னு எழுதிட வேண்டிதானே?

அப்படி எழுத முடியாது சார்…ஏன்னா ரிஜிஸ்டர்ல பதிவாகியிருக்கு…பில்லைக் காணலை….

என்ன சொல்றீங்க…? – அதிர்ந்து போய்க் கேட்டான் கணேசன்.

உண்மைதான் சார்…உங்களுக்கு முன்னாடி இருந்த மானேஜர் பீரியட்ல வந்திருக்கு…செக்ஷன் கிளார்க் ஜோஸப்புன்னு ஒருத்தர்..இப்போ அவர் தர்மபுரில இருக்காரு…

அவர் எங்கே வேணாலும் இருக்கட்டும்ங்க…அதப்பத்தி நமக்கென்ன? அவர்ட்ட சார்ஜ் எடுத்தது யாரு? நீங்கதானே…?

ஆமா சார்…

‘பில்ஸ் பென்டிங் டு பி செட்டில்ட் – ன்னு சொல்லி சார்ஜ் கொடுத்திருப்பாருல்ல..நீங்களும் அப்படித்தானே எடுத்திருப்பீங்க…?

ஆமா சார்…

பிறகு எப்படிக் காணாமப் போச்சு….?

‘…………..’

என்ன பேசாம இருக்கீங்க…? பில் இருக்குங்கிற நினைப்புல நான் காலைல பாஸ்கிட்ட பேசிட்டேன்….இப்ப இப்டி சொன்னீங்கன்னா? இத்தனை நாள் ஏன் சொல்லலை?

விடுங்க சார்…நான் பேசிக்கிறேன்….

அப்டீன்னா…?

நான் அந்த டிரைவர்கிட்டயே பேசி என்ன செய்யணுமோ செய்துக்கிறேன் சார்….

இவனுக்கு ஏதோ புரிந்ததுமாதிரி இருந்தது….ஆனாலும் சொன்னான்…அது சரி மருது…கலெக்டர் மனுவுக்கு பதில் போயாகணுமே…?

அவர்ட்ட எழுதி வாங்கி பதில் அனுப்பிடுவோம் சார்….

அப்போ பாஸ் வந்தார்னா நீங்க பேசிடுறீங்களா…?

சரி; சார்.…..

அதற்கு மேல் அதைத் தோண்டக் கூடாது என்று தோன்றியது கணேசனுக்கு.

இந்த மாதிரி அலுலவலகப் பணிகளில் எத்தனையோ நெருடத்தான் செய்கின்றன. விதிமுறைகளெல்லாம் சீராக வகுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் நடைமுறை என்பதே வேறாக உள்ளது. விதிமுறைகளை நூல் பிடித்தாற்போல் அமுல்படுத்த முடிவதில்லை. அறுந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாது. செய்ய வேண்டியவைகளை நெகிழ்வுத்தன்மைகளோடு நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. நிர்வாகத்தில் மனித மனங்கள், குணாதிசயங்கள் ஊடுருவுவதால்அந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் காலதாமதத்தைத் தவிர்க்க முடிவதில்லை. மறைமுகமாகச் சிலவற்றைச் செய்து, கணக்கில் வராததுபோல் தீர்த்து விடுகிறர்கள். இப்படியெல்லாம் இருந்தால், நாளைக்கு, தனக்கே தெரியாமல் எதுவும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாரை எந்த அளவுக்கு நம்புவது?

ரொம்ப கவனமா இருங்க சார்….யாரோ சொன்னது மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

விதிமுறைகளுக்கு ஏற்ப பணியாளர்கள் கடமையாற்றுவதற்கு பதிலாக பணியாளர்களின் இயல்புக்கும், வேலைத் திறனுக்கும் தகுந்தாற்போல்; அலுவலகப் பணிகளைக் கொண்டு சென்று விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய நிலை வந்துபோகிறது. இதில் காலதாமதம் தவிர்க்க முடியாததாகிறது.

உங்களுக்குத் தேவையானது எது எதுன்னு எனக்குத் தெரியும். தகுதியானவைகள் நீங்கள் எதிர்பார்க்கிற கால அவகாசத்துக்கு முன்னதாகவே கிடைக்கும். அதே சமயத்துல விதிமுறைகளுக்குப் புறம்பானதுக்காக நீங்க என்னை வற்புறுத்த முடியாது. ஒரு அலுவலகத்துக்கு இதுதான் வழின்னு சரியான பாதையைக் காட்டத்தான் நான் இருக்கேன். எது சரியோ அதை மட்டும்தான் நான் சொல்லுவேன். நான் என்னுடைய கடமைக்கு எந்த அளவுக்கு உண்மையானவனோ அதே அளவுக்கு உங்களுக்கும் உண்மையானவன்.

இப்படிச் சொல்லித்தான் பொறுப்பேற்றிருந்தான் முந்தைய அலுவலகத்தில். உண்மையான அற்பணிப்பு உணர்வோடு பணியாற்றினான். அந்த அலுவலகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்யப்படாத பணியாளர்களுக்கான ஓய்வூதிய முன் நடவடிக்கைகளையெல்லாம் எல்லோருக்கும் செய்தான். அந்த ஈடுபாடும் அக்கறையும் வேறு எங்குமே அந்த அளவுக்கு அவன் செலுத்தியதில்லைதான்.

ஆனாலும் அந்தத் தொழில் நுட்பப் பணியாளர்களின் அணுகுமுறை மாறிற்று. திறமையுள்ளவனாய் இவனைக் கருதியவர்கள் இவன் மூலம் சிலவற்றை

வளைக்க முனைந்தார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்தான் இவன். இணங்க மறுத்தனர். அது பகையுணர்ச்சியை அவர்களிடம் தூண்டியது. நிலைமை முற்றிய வேளையில்தான் பதவி உயர்வு வந்தது. போதும் என்று வெளியேறினான்.

தயவுசெய்து இனிமே இந்த ஆபீஸ் பக்கம் வந்து விடாதீர்கள் என்றார்கள் அவர்கள். இவனுக்கு அவர்கள் மேல் கோபம் எழவில்லை.அவர்கள் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டான்.

Series Navigationநாவல்  தினை        அத்தியாயம் நாற்பத்துமூன்று  பொ.யு 5000
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *