கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்

This entry is part 1 of 2 in the series 24 டிசம்பர் 2023

குரு அரவிந்தன்

சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மங்களவிளக்கேற்றல், கனடியதேசிய பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து ச. சாந்தினியின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து தேவா சபாபதியின் வரவேற்புரையும், தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸின் தலைமையுரையும் இடம் பெற்றன. அவர் தனது உரையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்தவர்களையும், நிதி உதவி செய்தவர்களையும் பாராட்டி, கனடியத் தமிழர்பற்றி அடுத்த தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணம் இது என்பதையும் குறிப்பிட்டார்.

வெளியீட்டுரை நிகழ்த்திய செல்வி ருக்ஸா சிவானந்தம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்திய திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் நூலின் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். செல்வி ருக்ஸா சிவானந்தம் விழாவில் பங்குபற்றிய புதிய தலைமுறையினருக்காக ஆங்கிலத்திலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பொன்னையா விவேகானந்தன் ஒரு குறும்படக் கதைபோலப் படகில் நடந்த சில சம்பவங்களைத் தமிழில் எடுத்துச் சொன்னார்.

அடுத்துப் பிரதம விருந்தனராகக் கலந்து கொண்ட அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் உரை இடம் பெற்றது. 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படகுகளில் தத்தளித்த 155 இலங்கைத் தமிழர்களைக் காப்பற்றிய நியுபவுண்லாந்து படகுத்தலைவர் ‘கஸ்டோல்ரன்’ அவர்களையும், மற்றும் மீனவ நண்பர்களையும், அவர்களைப் பல எதிப்புக்களுக்கு மத்தியில் அகதிகளாக உள்வாங்கிய அப்போதைய பிரதமரான மல்ரோணியையும், குடிவரவு அமைச்சர் கெரிவெய்னரையும் பாராட்டினார். ஈழத்தமிழர்கள் கனடாவுக்கு வருவதற்குத் திறக்கப்பட்ட முதல் வாசல் கதவு இதுதான் என்பதையும் குறிப்பிட்டார். தொடக்கத்தில் கிண்டல் பண்ணினாலும் இன்று கனடாவில் எங்கள் சமூகம் மதிப்பு மிக்கதாக வளர்ந்திருப்பதை மேலும் சுட்டிக் காட்டினார்.

இரத்தினவேலுப்பிள்ளை கேதாரநாதன் இந்த நூலை வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை விளம்பரம் பத்திரிகை ஆசிரியர் ராஜ மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

அடுத்து நூலாசிரியர் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. படகுகளில் அகதிகளாக வந்தவர்கள் அன்று சிலரின் கேலிக்கு உள்ளாகினாலும், இன்று குடியுரிமை பெற்று கனடா நாட்டின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகச் சேவையாற்றுவதைச் சுட்டிக் காட்டினார். யூத இனத்தவர்கள், சீக்கிய இனத்தவர்கள் வந்த இரண்டு கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இந்தக் கப்பலில் வந்தவர்கள் மனிதாபமான அடிப்படையில் உள்வாங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

செல்வி ஆரணி சுகப்பிரமம், செல்வி அரபி சுகப்பிரமம் ஆகியோர் இணைந்து நன்றியுரை வழங்கினார்கள். இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த, அந்தப் படகில் பயணித்த திரு சுகப்பிரமம் அன்னலிங்கம் அவர்கள் ஊடகங்களுக்கும், நூலைத் தொகுத்து வெளியிட்ட பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம், திரு. பொன்னுச்சாமி செல்வவடிவேல், திரு. சில்வெஸ்டர் இராஜரட்ணம், செஞ்சிலுவைச்சங்கம், கனடியத்தமிழர் பேரவை, மற்றும் கனடிய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.  நிகழ்ச்சிகளைத் திரு. கந்தையா அருட்சோதி தொகுத்து வழங்கினார்.

Series Navigationபயணமா? பாடமா?
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *