பூவாய்ச் சிரித்தாள்

author
0 minutes, 41 seconds Read
This entry is part 3 of 8 in the series 21 ஏப்ரல் 2024

        மீனாட்சி சுந்தரமூர்த்தி                                            

விடிகாலை நான்கு மணிக்கு அந்தச் சிறிய இரயில் நிலையம்  விளக்கின்  ஒளியில் நிரம்பிக் கொண்டிருந்தது. ஏழுமலை  வில் வண்டியை வேப்ப மரத்தடியில் நிறுத்திவிட்டு, கையிலிருந்த சாட்டையை வண்டியின் பக்கவாட்டில் செருகி வைத்துவிட்டு உள்ளே சென்று நடைமேடையில் காத்திருந்தான். மைசூர் வண்டி உள்ளே நுழைந்து வேகம் குறைத்து நின்றது, வாயிலில் நின்றிருந்த ஆறுமுகம் கைகாட்டினார். ஏழுமலை ஓடிச்சென்று பெட்டி, சாமான்களை இறக்கினான். ஆறுமுகம் மகள் கயலை இறக்கிவிட்டார். கல்யாணி ஒன்றரை வயது மேகலாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள்.

‘ நல்லா இருக்கியா ஏழுமல?’

இருக்கேனுங்க ஐயா,’

பிள்ளைங்க, சம்சாரம் எல்லோரும் ..?’

‘எல்லாருமே  நல்லா இருக்கோமுங்க’

எல்லோரையும் ஏற்றிக்கொண்டு ஹேய் ஹேய் என்று சாட்டையைச் சுழற்றி  காளைகளை அடிப்பதுபோல் அடிக்காமல்  நான்கு மைல் தூரத்திலிருந்த சிற்றூருக்கு வண்டியை இலாவகமாக ஓட்டினான் ஏழுமலை. தார்ச்சாலையில்  காளைகள் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் ஒலிக்க ஒருவித தாள இலயத்துடன் நடந்தது தாலாட்டுவது போல் இருந்ததோ என்னவோ ,கயல் அப்பா மடியில் தூங்கிவிட்டாள்.கல்யாணி தலை வண்டியில் இடிபட்டதால் கணவன் தோள்மீது சாய்ந்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.ஆறு இந்த வண்டியில் பலமுறைப் பயணம் செய்திருப்பதனால் இடிபடாமல் அமர்ந்திருந்தார்… கண்ணுக்கெட்டியதூரம் வரை இருள் மட்டுமே, ஏழுமலை வண்டியின் முகப்பில் விளக்கு ஒன்றை மாட்டியிருந்தது வழிகாட்டியது. சாலையின் இருபுறமும் வயல் வெளிகள், கரும்புத் தோட்டங்கள்.

சில் வண்டுகளின் ரீங்காரமும், தவளைகளின் ஒருமித்த குரலும் சில இடங்களில் கேட்டது.

இந்தச் சிற்றூர் ஆறுமுகத்தின் அத்தை அதாவது அவரின்  தந்தையின் தங்கை  கண்ணம்மாவின் புகுந்த வீடு.  மணமான இரண்டு வருடங்களிலேயே கணவரை இழந்து தாய்வீட்டிற்கே திரும்பியவள் இவள். ஆறுமுகத்தை வளர்த்தது இவள்தான். அவ்வப்போது இங்கு இருந்த நிலபுலன்களை அண்ணனோடு வந்து பார்த்து வருவாள். ஆறு இரயில் நிலைய அதிகாரியாகப் பணியேற்று வடக்கே சென்றார். அண்ணனும் அண்ணியும் ஒருவர்பின் ஒருவராகப் போனபின் புக்ககத்து உறவுகள் அழைப்பில் இங்கு வந்துவிட்டாள் அத்தை.

மூன்று ஆண்டுகளாக இங்குதான் வாசம். ஆறு தன்னோடு வந்து இருக்க அழைத்தும் மறுத்துவிட்டாள். தார்ச்ச்சாலையிலிருந்து மண்சாலையில் திரும்பியது வண்டி. அரிசி களைந்த நீரைப்போல் வெளுத்துக் கொண்டிருந்தது வானம். இருபுறமும் சவுக்குத்தோப்புகள்.  அதனைக் கடந்ததும் இடதுபுறத்தில் ஊரின் இடுகாடு. காத்தவராயன் துணையிருக்கான் நமக்கு ஒரு பயமும் இல்லை என்று தானாகவே சொன்னான் ஏழுமலை, அவனுடைய சமயோசிதப் பேச்சைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே ஆறு

‘ பத்துமணிக்கு வந்துடுப்பா, தென்னந்தோப்புக்கு போகணும்’

‘அதல்லாம் கரீட்டா வந்து நிப்பேன் பாருங்க’

‘ஏரியில தண்ணி இருக்கா’

‘அதுக்கென்னாங்க கடல், எப்பவும் கொறையாது’

‘எதுத்தாப்புல பள்ளிக்கோடம் வந்துருச்சி பாருங்க’

‘ஓ நல்லதுதான், எப்போ வந்தது?

‘நாலு வருசமாகுதுங்க, ஒங்க அப்பா பத்தாயிரம் தந்தாருங்க’

‘அப்படியா?’

‘பள்ளிக்கோடந் தொறந்த அண்ணக்கி ,அம்மாவும் அப்பாவும் வந்தாங்க,’

‘அத்தை வரலியா ஏழுமல?’

‘ஆனமட்டும் கூப்புட்டும் வரலீங்க’

இடதுபுறம்  தொடக்கப் பள்ளி மங்கலாகத் தெரிந்தது.அதையடுத்து வளைந்து திரும்பிய பெரிய வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது ,வலதுபுறத்தில் உயரமான மதிற்சுவரோடு பழமையான சிவாலயம். அதனைத்தொடர்ந்து அகலமான வீதி ஆரம்பமானது.  திண்ணைகளும், விசாலமான குறடுகளும் கொண்ட   சீமை ஓடுகள் வேய்ந்த வீடுகள். பல வீடுகளில் பவழமல்லியும், நந்தியாவட்டையும்  பூத்திருந்ததை காற்றில் கலந்து வந்த வாசம் சொன்னது நீண்ட அந்த வீதி பிள்ளையார் கோவிலில் முடிந்தது. வலப்புறத்துக் கடைசி வீட்டின் முன்னால் வண்டி நின்றது.  அரைவட்டமான அலங்கார வளைவை இருபுறமும் சிமென்ட் தூண்கள் தாங்கிக் கொண்டிருக்க சுற்றுச் சுவரோடு பெரிய குறடு, அதன் இருபுறமும் துண்டு ஒன்றைத் தோளில் போட்டதுபோல்  உட்காரவும்,படுக்கவும் பயன்படும் சிமென்ட் பலகைகள். குறட்டைத் தொடர்ந்து  கம்பி போட்டத் தாழ்வாரம். தேக்குமரக் கதவு இருபுறமும் அழகான விளக்கு மாடங்களோடு காத்திருந்தது. உள்ளே நடையை அடுத்து. நான்கு புறமும் தாழ்வாரத்தோடு பெரிய முற்றம். ஒரு பக்கத்தில் மாடிக்குச் செல்ல மரப்படிக்கட்டுகள். மாடியில் நீண்ட ஒரு கூடம்  பெரிய ஜன்னலோடு இருந்தது,அதன் ஒருபுறத்தில் பெரிய அறை ஒன்று.அவ்வளவுதான்.கூடத்தின் மறுபுறத்தில் இரட்டைக் கதவு திறந்தால் திறந்த வெளி , துணிகளைக் காயவைக்க கயிறுகள் நான்கு வரிசையில் கட்டப்பட்டிருந்தது. ஓரத்தில் சிறிய அளவில் ஒரு சிமென்ட் தொட்டி இருந்தது தண்ணீர் நிரப்பிக் கொள்ள.

 கீழே இரண்டாம் கட்டில் ஒரு முற்றம், அதன் ஒரு புறத்தில் பெரிய கூடமும், எதிர்எதிராக இரண்டு அறைகளும் இருக்க,இன்னொரு பக்கம்  பெரிய சமையலறை, அதன் ஒருபுறம் மர இராட்டினத்தோடு பெரிய கிணறு இருந்தது.

கிணற்று மேடையின் ஒரு பக்கத்தில் செம்பினாலான பாய்லர்

அதன் நடுவில் இருந்த குழாய் போன்ற பகுதியில் கரித்துண்டுகளும், வரட்டிகளும் உடைத்துப்போட்டுப் பற்ற வைத்த  நெருப்பு கனன்று கொண்டிருந்தது.அதில் வெந்நீர் தயாராக இருந்தது. அத்தை  காத்திருந்தாள். ‘வாப்பா ஆறு, வா கல்யாணி’ 

‘அத்தே நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டுக்கொண்டே அவள் காலைத்தொட்டு வணங்கினான் ஆறு.

கயல் வெள்ளித்தேர் பாட்டி என்று கட்டிக் கொண்டாள், சென்ற முறை வந்தபோது கோவிலில்  வெள்ளித்தேர் பார்க்க அழைத்துச் சென்றாள் அத்தை . அதிலிருந்து வெள்ளித்தேர் பாட்டி என்று அழைக்கிறாள்.

அத்தையின் தூரத்து உறவுப்பெண் அவளுக்கென்று யாருமில்லை அவள் அத்தைக்கு உதவியாக இங்கு இருக்கிறாள். இல்லாவிட்டால்

இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பது கொடுமையாக அல்லவா இருக்கும். எல்லோரும் குளித்து முடித்து வரவும்  ஆவி பறக்கும் இட்டிலியும், இடியாப்பமும் வாழையிலையில் பறிமாறினாள் அத்தை ஒரு வழியாக உண்டு முடித்தனர்.

      ஆறு ஏழுமலையோடு தென்னந்தோப்பைப் பார்க்கச் சென்று விட்டான்.கல்யாணியைப் பார்க்க உறவுப் பெண்கள் வந்துவிட்டனர். கயலுக்கும் இங்கு நட்புவட்டம் உண்டு. எதிர்வீட்டு நீலவேணி, பக்கத்து வீட்டு குமாரி,இன்னும் சிவஞானம், பேபி, இராஜி, ரேவதி. அந்தக் கிராமத்துச் சிறுமியர் பாவாடை, சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் நடுவில்  வானநீலத்தில் வெள்ளை நட்சத்திரப் பூக்கள் மின்னும் கவுன் அணிந்திருந்த  கயல் தேவதையானாள். கல்யாணி கயலிடம் பிஸ்கட் டப்பாவும், சாக்லெட் டப்பாவும் தந்து எல்லோருக்கும் தரச்சொன்னாள் .பிள்ளைகள் குதூகலித்தனர்.எல்லோருக்கும் தரும்போது,எனுக்கும் தா ‘ என்று கை நீட்டினான் டிரவுசர் மட்டும் போட்டுக்கொண்டு மேலே சட்டை இல்லாமல் நின்றிருந்த வேலன். கயலின் வயதுதான் இருக்கும் உடனே நீலவேணி,’ டேய் போடா, உனுக்கெல்லாம் தரமாட்டா’

ஆனால் கயல் அவனுக்கும் தந்தாள் அவன் முகம் மலர வாங்கிக் கொண்டான்.

‘அவனுக்கு தரக்கூடாது கயல்?’

‘அவங்கல்லாம் நம்ப தோட்டத்துல, வயக்காட்டுல வேல செய்யறவங்க’

‘ நாங்க அவன சேர்த்துக்க மாட்டோம்’ என்று ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள். சிறிது நேரத்தில்,

கல்யாணி,’ பாப்பாவை பார்த்துக்கோ கயல்’ என்று குழந்தையைத் தந்தாள்.

பிள்ளைகள் எல்லோரும் நான், நீ என்று போட்டி போட்டுத் தூக்கிக்கொண்டனர்.

தெருவில் குறட்டில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள்.

நான்கு வீடு தள்ளி இருந்த ரேவதி வீட்டுத் தோட்டத்தில் விளையாடத் திடீரெனத் திட்டம் போட்டனர்.

கயல் அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பாப்பாவோடு சென்றாள். ரேவதியின் அம்மா வேகவைத்த வேர்க்கடலையை ஒரு பெரிய தாம்பாளத்தட்டில் கொட்டிக் கொடுத்தாள். கல்யாணியைப் பார்க்க அத்தையம்மா வீட்டுக்குச் சென்று விட்டாள். பாட்டி நடையில் சின்ன உரலில் வெற்றிலை பாக்கை வைத்து லொட் லொட் என்று இடித்து வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள்.கடலையை  கயலுக்கு உரித்துக் கொடுத்தார்கள். குட்டிப் பாப்பா எல்லோரிடமும் சிரித்து விளையாடியது.தோட்டத்து மாமரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இன்னும் இரண்டு வீடு தள்ளி இருந்த மாந்தோப்புக்குச் சென்று விட்டார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ஒட்டு மாங்கனிகள், பாதி சிவந்தவை.கயல் பாப்பாவை இடுப்பில் தூக்கிக் கொண்டு நடந்தாள்,மற்றவர்கள் வேகவேகமாக மாங்கனிகளைப் பறித்தனர்.

இராஜி,’ புளிக்காது கயல் இந்தா தின்னு’என்று ஒரு காயை தந்தாள்.

அந்த நேரம்’ ஏய் வாலுப் பசங்களா ! மாங்காயப்  பறிக்கறீங்களா?’ என்று தோட்டக்காரன்  ஓடிவந்தான், அவ்வளவுதான் கயலைப் பிடித்து இழுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தனர் பிள்ளைகள். தோட்டக்காரன் விடவில்லை பின்னால் ஓடிவந்தான், அதனால் அருகிலிருந்த கழனியின் வரப்பில்  இறங்கி ஓட ஆரம்பித்தார்கள் பிள்ளைகள். கயலால் ஓட முடியவில்லை.. அவளை இழுத்துக்கொண்டு ஓடினார்கள். வரப்பில் நடந்து பழக்கமில்லாததால் தடுமாறினாள்.தோட்டக்காரன் பிள்ளைகளை அச்சுறுத்திவிட்டுச் சென்றுவிட்டான். இது தெரியாமல் மூச்சிரைக்க இன்னும் ஓடிக் கொண்டிருந்தார்கள். திடீரென கயலின் கால் வழுக்கியது.பள்ளத்தில் இறங்கிவிட்டாள் அது தாமரைகள் பூத்திருந்த ஒரு பெரிய குளம்.

நீலவேணி கயலைப் பிடித்திருந்த கை நழுவியது.இராஜியும், நீலவேணியும் மட்டுமே அங்கிருந்தனர். மற்றவர்களைக் காணவில்லை, சிறுமியர் ,

‘ஓடியாங்க, ஐயோ யாராவது ஓடியாங்க’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு அவளை இழுக்கப் பார்க்கின்றனர்.  கயல் அவர்கள் கைக்கு எட்டவில்லை, இடுப்பிலிருந்த குழந்தை நழுவுகிறது, எப்படி என்று தெரியவில்லை ,குழந்தையின் இரண்டு காலகளும் கயலின் இருபுற இடுப்பிலும் சுற்றியிருக்கிறது.குழந்தை அப்படியே சாய்கிறது தண்ணீரில்.கயல்  கையிரண்டையும் கோர்த்துக் குழந்தையின் முதுகில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். காலில் கயிறுபோல் தாமரைக்கொடி சுற்றிக்கொள்கிறது. கடலின் கரையில் மோதும் அலை கால்களை இழுத்துச் செல்வதுபோல அவளை இழுக்கிறது, பலமனைத்தையும் திரட்டி சாய்ந்த குழந்தையை மார்போடு அணைத்துப் பிடித்துக் கொள்கிறாள். குழந்தையின் முகம் மட்டும் இப்போது நீருக்கு வெளியே, இவளுடைய தோள்பட்டைவரை தண்ணீரில்.

பாதம் உள்ளே உள்ளே சென்றுகொண்டே இருக்கிறது.திடீரென அவள் கவுனைப்பிடித்து யாரோ பின்னாலிருந்து இழுக்கிறார்கள்,அத்தனை வேகமா கால் கொடியிலிருந்து வெளியில் வருகிறது. வரப்புக்கு அருகில் இழுத்து விட்டார்கள். இப்போது அழுதுகொண்டிருந்த சிறுமியர் பிடித்து மேலே தூக்கி விடுகிறார்கள். குழந்தைக்கு கூடத் தெரியுமா அழுவதை நிறுத்திவிட்டது. யார் தன்னை வெளியே இழுத்தது என்று திரும்பிப் பார்க்கிறாள் கயல். அதே அரை டிரவுசர் வேலன் நிற்கிறான். குழந்தையை வாங்கிக் கொண்டு முன்னால் நடக்கிறான்,

இப்போது சிறுமியர் எல்லோரும் தேடிக்கொண்டு வந்துவிட்டனர். கயலைத்தேற்றி அழைத்துக் கொண்டு ரேவதி வீட்டுத்தோட்டத்திற்கு வந்தார்கள். கயலின் காலில் அங்கங்கே கொடிசுற்றிய சிராய்ப்புகள்,

‘வலிக்குதா கயல்?என்றான் வேலன்,

‘இல்லையே’ என்று பூவாய்ச் சிரித்தாள் கயல்.

Series Navigationவெ.அனந்த நாராயணன் நூல்கள்ரொறன்ரோவில் நூல்களின் சங்கமம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *