நாளைய சொர்கம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 3 in the series 5 மே 2024


ஆர். சீனிவாசன்

11.12.3123 அன்று வெளிவந்த நாளிதழ்களின் சில முக்கிய செய்திகளின் தொகுப்பு.

தமிழ்நாட்டு செய்திகள்:

  • கிழக்கு கடலோர சாலையில் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்களை, வழி மறித்து, வெளியே இழுத்து வெட்டி கொன்றனர் மூன்று நபர் கோஷ்டி. பூர்வ ஜென்ம விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகப்படுகின்றனர் போலீசார்.
  • சென்னை டீ.நகர் பனகல் பூங்கா முதல் முக்கிய வீதியில் ஐந்துக்கு ஐந்து மில்லிமீட்டர் நில துண்டை ஒரு மில்லிமீட்டர் டாலர் மூன்று லட்சம் விஹிததிற்கு வாங்கினார் தொழிலதிபர் திரு. ஆரோக்கிய மூர்த்தி. தன் வாலிப கால முடியின் விதையை, பெட்டகம் அமைத்து பாதுகாப்பார் என கூறப்படுகிறது.
  • ஐ.ஐ.டீ கலைக்கல்லூரியில் மூன்றாவது முயற்சியிலும் இடம் கிடைக்காத நிராசையில், சென்னை மாணவர் தற்கொலை செய்துகொண்டார். “நான் தகுதியற்றவன்..என்னை மன்னியுங்கள்” என கண்ணீர்மல்க தன் பெற்றோருக்கு கடிதம் எழுதிவிட்டு தூக்கு மாட்டிக்கொண்டார்.
  • மஹாகவி பாரதியின் ஆயிரத்தி இருநூற்றி நாற்பத்தி ஒன்றாம் பிறந்தநாள் விழாவின்போது “பாரதி கண்ட பாரதம் இன்னும் துலைவில் உள்ளது” என கூறினார் எழுத்தாளர் திரு.சுப்புராயன் .
  • தென்கங்கை திட்டத்திற்கு எதிர்ப்பு. “வட இந்தியாவில் அமைந்திருக்கிறது அணைகள். குழாவை எப்போது வேண்டுமானாலும் மூடலாம்” என சந்தேகம் எழுப்பினர் அரசியல் விமர்சகர்.
  • “சைபர்-மெட்டாவேர்ஸ் உலகில் பெற்றுக்கொண்ட குழந்தைகளுக்கோ, மணந்து விவாகரத்து செய்த கணவன்-மனைவீ- பார்ட்னர்களுக்கோ மெட்டாவேர்சிலேருந்து நிரந்தரமாக விலகினால் அவர்களை படைத்த கம்பெனிகளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க அவசியமில்லை” – தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதி மன்றம்.
  • “உச்சரிப்பை ஆதாரமாக கொண்டு இது வரை எழுத்துக்கள் அமைந்திருந்தன. இன்றைய கால நடைமுறையில் இளைஞர்கள் தமிழ் எழுத படிக்க இம்முறை சிரமமாக இருக்கிறது. மொழி காக்க, வல்லின-மெல்லின இலக்கண விதிகளை அகற்றி , ஆங்கிலம் போல எளிமையாக எழுதலாம். உச்சரிப்பை தனியாக கற்பிக்கலாம்” – தமிழ் மேம்பாட்டு குழுவின் ரிப்போர்ட்.

நாட்டின் செய்திகள்:

  • மத்தியபிரதேசம் குடிசை மாற்று வாரியம் திட்டத்தில் மோசடி. ஏற்கனவே மூன்று வீடுகளின் சொந்தக்காரர்கள் மீண்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ” மூன்று வீடுகளுக்கும் பேப்பரில் தான் நாங்கள் சொந்தக்காரர்கள். இன்னும் கைக்கு வந்து சேரவில்லை.” பட்டியலில் இடம்பிடித்த ஒருவர் கூறியது.
  • ஏழு தலைமுறையாக தொடந்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எம்.பீ க்களாக பணியாற்றி, ஐம்பதாயிரம் கோடி சொத்து விவரம் காணபிக்கும் நபர்களுக்கு நிச்சயமாக தேர்தல் டிக்கெட் வழங்கப்படாது என பிரதான கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார். “எங்கள் தலைமையை தவிர வேறு எல்லாருக்கும் இந்த விதி பொருந்தும்” எனவும் தெரிவித்தார்.

சர்வதேச செய்திகள் :

  • இஸ்ராயில் – பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில், சுவீடன் வெளியுறவு அமைச்சர் “நாங்கள் ஆப்ரிக்க அகதிகளுக்காக கட்டிய செயற்கை தீவை போல, கடலை நிரப்பி நிலத்தை உருவாக்கி அதில் போர் அகதிகள் முகாம் அமைக்க முடியுமா என பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார். மேலும் “அத்தகைய தீவை அதிகாரபூர்வமாக பாலஸ்தீனம் என அங்கீகரிப்பது குறித்தும் பேசி வருகிறோம்” என தெரிவித்தார். இந்த பரிசீலனையை விவாதத்துக்கு முன்னதாகவே இரு தரப்பினரும் நிராகரித்துவிட்டதாக தகவல்.
  • இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் மேல் மீண்டும் தடைகள் விதிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா வலியுறுத்தல்.”மூன்று மாத குழந்தையான அலி ரேசா, தொண்ணூத்தி மூன்று வயதான விவசாயி ரூஸ்பே இவர்கள் இருவர் மட்டுமே ஈரானில் இன்னும் தடைசெய்யப்படாத நபர்கள். வேண்டுமானால் அவர்கள் மீதும் தடை போடுங்கள்” என கூறினார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்.
  • உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலாம் இடத்திலிருக்கும் திரு. ஜொய்ஸ், தன்னை க்ரையோஜெனிக் உறைதல் மூலம் சிரஞ்சீவியாக ஆக்கிக்கொண்டுள்ளார். இன்றிலிருந்து முன்னூறு ஆண்டுகளுக்கு பின் க்ரையோஜெனிக் தூக்கத்திலிருந்து எழும்பொழுது, தன் செல்வத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ததால் இப்போதை விட மூவாயிரம் மடங்கு செல்வந்தராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பல்நாட்டு கம்பெனிகளின் தலைவர்களின் சம்பளம் சட்டபூர்வமாக வரம்பிக்கவேண்டும். ஒரு மணி நேரத்துக்கு டாலர் ஐம்பது கோடிக்கு மேல் போக கூடாது- அமெரிக்க செனேட்டர் திரு. ஜாக் பைடன் முன்வைத்த இந்த மசோதாவை நிராகரித்தது அமெரிக்க காங்கிரஸ்.
  • “இந்தியாவின் செங்கல் சூளை குழந்தைகள்” – பி.பி.சி கட்டுரை.

விளையாட்டு செய்திகள்:

  • “என் தேசத்திற்கு விளையாடுவது என் பெருமை, கடமை . அதற்காக வருடத்தில் மூன்று நாட்கள் ஒதுக்கியுளேன்”, ஆஸ்திரேலிய டெஸ்ட் பந்தயத்தின் போது தேசிய குழுவில் இடம்பெறுவது குறித்து கேட்டபோது பதில் அளித்தார் பிரபல கிரிக்கட் வீரர் அருண் மோங்கியா.
  • பாலைவன கால்பந்தாட்ட போட்டியில் , மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சவுதி அரேபியா. கொத்தடிமைகளை குழுவாக அமைத்து, ஐம்பத்தைந்து டிகிரி வெய்யிலில், க்ஷேக்குகளின் விமர்சைக்காக ஆட வைக்கும் கொடுமை என போட்டியை புறக்கணித்தது சர்வதேச கால்பந்தாட்ட சங்கம்.

வணிக செய்திகள்:

  • ரிசர்வ் வாங்கி புதிதாக வெளியிடும் ரூபாய் நோட்டுகளின் சிறப்பு, தொகை பத்தாயிரத்துக்கு மேல் கட்டாக கட்டினால் தானாகவே கருத்து போகும் மேற்புறம். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை. “ஏழை எளிய மக்கள் இன்னும் நோட்டுகளில் தான் தங்கள் வாழ்வை கழிக்கிறார்கள். இது அவர்கள் மீது இழைக்கப்பட்ட பெரும் கொடூரம். இந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” அறிக்கை விட்டது பிரதான கட்சி.

சமையல்

  • “தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமில்லாமல், இப்பொழுது இந்தியாவிலும் வறுத்த கரைப்பான், ஈசல், தேள், லோக்ஸ்ட், வெட்டுக்கிளி போன்றவைக்கு தேவை அதிகமாகி கொண்டிருக்கிறது. புரதசத்து, வைட்டமின்கள் மற்றும் உலோகங்கள் நிறைந்த முழு உணவு வகைகளில் ஒன்று இவ்வகை உணவு” – ஊட்டச்சத்து நிபுணர் திரு. வண்டுமுருகன் தெரிவித்தார்.

பொழுதுபோக்கு மற்றும் சினிமா செய்திகள்:

  • பிரபல இசை அமைப்பாளர் சிம்பொனி சப்பான் ஆயிரத்தி தொளாயிரத்தி எழுபது – எண்பதுகளில் வெளிவந்த சினிமா மெட்டுகளிலிருந்து காபி அடித்திருக்கிறார் என குற்றசாட்டு வெளிவந்துள்ளது.
  • “வேர்டுவல் ரியாலிடி படங்களில் வன்முறை காட்சிகளில், நேயர்கள், ஹீரோக்களுடன் கோதாவில் களமிறங்குவதற்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்” – தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பேட்டி. “ஹீரோயின்னுடன் பாடல் காட்சிகளில் ஆடுவதற்கும் கூடுதல் கட்டணத்தில் வாய்ப்பு தரப்படும்” மேலும் தகவல்.

ஞால செய்திகள் :
**
அரை மணிநேரம் அன்றய தலைப்பு செய்திகளை கைபேசியில் தூக்கம் கலையா கண்களுடன் படித்த சக்திவடிவேலிற்கு அடுத்தது என்ன செய்யலாம் என தெரியவில்லை. ஞால பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருடங்கள் ஆனா பிறகு, போன மாதம்தான் அவன் வேலையும் போயிருந்தது. அவன் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியின் கடந்த வருட பாலன்ஸ் ரிப்போர்ட்டை வெளியிட்ட உடனேயே , வேலை நீக்கம் ஆரம்பமானது. முதல் சுற்றில் தப்பித்தான். கடந்த வருடம் அவன் விற்பனை இலக்கை அடைந்திருந்தால் ஓரளவுக்கு தன் வேலை நிலைக்கும் என நம்பினான். முதல் சுற்று வெளிவந்த ஒரே மாதத்தில் இரண்டாம் சுற்று நடந்தது. வேலையிலிருந்து அகற்றப்பட்ட விதமும் லாவகமாக இருந்தது. காலை வேலைக்கு வந்தபோது அவன் அடையாள அட்டை கதவுகளில் இயங்கவில்லை. வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடன், அவன் தோழி, லிசா , அவனை கைவிட்டாள், “ஹாய், தற்காலிகமாக விலகுகிறேன். வேலை கிடைத்ததும் தெரிவி. ஆல் தி பெஸ்ட்!”.

முதல் மூன்று நாட்கள் நிராகரிப்பில் போனது. வேலை போன நான்காவது நாள் தேடல் ஆரம்பித்தது. முதல் கால்கள் அவன் நண்பர்களுக்கு:

“டேய் மச்சான், ரொம்ப சாரி டா. எனக்கே என்ன ஆகும்னு தெரியல. தலைக்கு மேல கடன் இருக்கு. இப்பதான் ஜூபிட்டர்ல ஒரு பங்களா வாங்கினேன். மாசத்துல முக்கால் கணக்கு அதுக்கே போயிடுது. இவளுக்கும் வேலை இருக்குங்குற தைரியத்துல வாங்கினோம். ரெண்டுபேரும் சம்பாதிக்கறோம் அதனால இப்போதைக்கு பொழச்சோம்”

“ஹபீபி, கவலைய விடு, எங்க கம்பெனில நா இப்பவே பேசறேன்…ஒரே பிரச்சனை என் பாஸ் ஒரு குவான்..அவனுக்கும் எனக்கும் சரிவரல. நானே தேடிகிட்டுதான் இருக்கேன்..சரி இப்ப மீட்டிங் இருக்கு…ஈவினிங் போன் பண்ணறேன்”, ஈவினிங் வந்து போனது ஆனால் கால் வரவில்லை.

அடுத்தது அவனுக்கு தெரிந்த தொழில் தொடர்புகளுக்கு :

“தெரிஞ்சுது சக்தி. என்ன செய்யலாம்? இப்ப இருக்குற நிலைமை அப்படி. எங்களுக்கே மூணு மாசத்துக்கு மேல ப்ராஜெக்ட்கள் இல்ல. உன் பயோ டாட்டாவை அனுப்பு, எங்களால முடிஞ்சது பண்ணறோம்”

“சக்தி, என் காஸ்மோஸ் டிரேடிங் அக்கௌன்டை நீதானே உடைச்ச? இப்ப என்கிட்டயே வந்து வேலை கேக்க எப்படி மனசு வருது?”

இரண்டு நாட்களுக்கு பின் இந்த யுக்திகளெல்லாம் சரி வாராது என தெரிந்து, அரசு வேலைவாய்ப்பு வலைதளத்தில் பதிவு செய்யதான். பதிவு செய்த மூன்றாவது நாள் ஒரு கம்பெனியிலிருந்து நேர்முகம் வந்தது. அது அவன் வேலை பார்த்த கம்பெனியின் போட்டிதாரர்.

“உங்க ரெஸ்யூமேவில சில சந்தேகங்கள் இருக்கு. உங்க படிப்பை ஏன் முடிக்கல?”

“படிப்பு முடிக்கறதுக்கு முன்னாடியே இந்த வேலை கிடைச்சது. இந்த வேலைக்கு பள்ளி படிப்பு முடிச்சிருந்தா போதும்னு சொன்னாங்க. அத்தோட ஆரம்ப சம்பளமே நன்னா இருந்திச்சு அதனாலதான் படிப்பை முடிக்கல”

“சரி. நாங்க உங்க பழைய கம்பெனிக்கு போட்டி கம்பெனின்னு தெரியும் தானே?”

“தெரியும்”

“உங்க பழைய காண்டாக்ட் எல்லாம் இப்பவும் உங்களுக்கு பழக்கம் இருக்கா?”

“நிச்சயமா. முதல் மாசத்துலையே உங்களுக்கு நாலு அஞ்சு அக்கௌன்டை மாத்தி கொடுக்குறேன். என் திறமையே அதுதான்”

“சரி. ஒருவேளை நீங்க இந்த கம்பெனியை விட்டு ராஜினாமா பண்ணினாலோ இல்ல நாங்களே உங்களை வேலையிலிருந்து விலகிட்டாலோ, கம்பெனி சம்மந்தமான உங்க நினைவுகளையெல்லாம் நினைவு மாற்று சிகிச்சை மூலமா அழிச்சிடுவோம். இது எங்க கம்பெனி பாலிசி. அது உங்களுக்கு சம்மதமா?”

வாழ்க்கையின் யதார்த்தங்கள் அப்போதுதான் சக்திக்கு புலப்பட்டது. பட்ட-படிப்பை முடிக்காமல் விட்டது, கிடைத்த பணத்தில் ஆடம்பர வழக்கையில் குலாவியது, நட்சத்திர கூட்டங்களில் விடுமுறைகள், பார்ட்டிகள், உறவுகள், க்யூர்டா, (எப்பா! அவளிடமிருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்). அதன்பின் வந்தாள் லிசா. செல்வதோடு வந்தவள் செல்வத்ததோடு போனாள். விரத்தியோடு நேர்காணலிலருந்து வெளியில் வந்தபோது அவன் கைபேசியில் அந்த மெசேஜை பார்த்தான்.
“சக்தி, உங்க மேஜை மேல இருந்த ஐட்டம்ஸ் எல்லாம் என்கிட்டேதான் இருக்கு. நீங்க வந்து கலெக்ட் பண்ணிக்கிறீங்களா?” எழுயிருந்தது அவன் சகா அலர்மேல் மங்கை.

அப்படியொன்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லை. வேலை நீக்க அவமானம் இன்னும் மனதில் இருந்தது. மேலும் எதற்காக இந்த நற்ச்செயல்? இவனும் அவன் ஆபீஸ் சகாக்களும் அவள் பெருமனான தோற்றத்தை கிண்டல் செய்ததுண்டு.

” “அலமேலுமங்கா” ன்னு வெச்சிகிட்டா பாய் பிரின்ட் கிடைக்க மாட்டான்னு பேர பிரிச்சி வெச்சிகிட்டாளா?”

“இப்ப மாத்திரம் என்ன வாழுது?”

ஒருவேளை அதற்குத்தான் பழி வாங்க இந்த முயற்சியா? வேலை நீக்கம் ஆனபின் இடைவெளி நாட்களில் ஆபீஸ் செய்திகளை கேட்கும் ஆர்வம் இன்னும் இருந்தது. மூன்று நாட்களுக்கு பின் பதிலளித்தான்.

“தேங்க்ஸ். நீங்க எப்ப பிரீ? நான் எப்பவுமே பிரீ தான் :) “, மாலை பதில் வந்தது
” :) இந்த வாரக்கடைசி? ஞாயத்திக்கிழமை? “

அந்த தேநீர் விடுதி குறுகிய, அதிகம் ஆட்கள் நடமாட்டமில்லாத இடம்.

“ஹலோ, எப்படி இருக்கீங்க?” அவனுக்கு முன்னமே வந்துவிட்டாள்.
“ஓகே. நீங்க?”
“பைன். இந்தாங்க உங்க சாமானெல்லாம் இதுல இருக்கு”
“நன்றி. இதுக்காக கஷ்டம் உங்களுக்கு”
“கம்பெனி உங்க ஐட்டம்ஸ்ஸ கோரியர்ல தான் அனுபார்த்தா இருந்துது. ஒரு கர்டசிகாக தான் நான் உங்ககிட்ட நேரடியா கொடுத்துரலாம்னு நெனைச்சேன்”
“ஓ தங்க்ஸ்”
“ஏதாவது இன்டர்வியூ கிடைச்சுதா?”
“இல்ல. சில தெரிஞ்ச கான்டக்ட்ஸ் மூலமா தேடிகிட்டு இருக்கேன், பார்க்கலாம். அப்படி எதுவும் கிடைக்கலேனா சொந்தமா ஏதாவது செய்யலாம்னு இருக்கேன்”
“ஓ. ஆபீஸ்லகூட எல்லாருக்கும் பயமாத்தான் இருக்கு. எப்ப என்ன நடக்குமோனு நடுக்கத்துல இருக்காங்க”
“மூணாவது ரவுண்டு இருக்காதுனுதான் எனக்கு தோணுது. நாங்க பெரிய சம்பள ப்ராக்கெட்ல இருந்தோம் அதனாலதான் எங்களை முதல்ல தூக்கினாங்க”
“நீங்க இந்த சமயத்துல உங்க டிகிரி படிப்பை முடிக்க ட்ரை பண்ணனும்”
அப்போதுதான் அவனுக்கு உரையாடல் தடம் புரளுவதாக தோன்றியது.
“அந்த வயசெல்லாம் போய்டுச்சு. இப்ப சம்பாதிக்க வேற என்ன வழினுதான் பாக்கணும். படிப்பு..”
“யு டியூபுல நாய் வீடியோ போட்டு அது வைரல் ஆகி அதுலேருந்து சம்பாதிக்க போறீங்களா?” சிரித்தாள். அவள் பரந்த முகம், சிரிப்பை அதிகரித்தது. உண்மையான சிரிப்பு. அவள் சிரிப்பதை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வந்தது. முதல் முறையாக, வேலை நீக்கத்திற்கு பின் மனம் விட்டு சிரித்தான்.

சிரிப்பும் சந்திப்புகளும் தொடர்ந்தன. லிசாவைப்போல நிர்பந்தங்கள் வைக்கவில்லை. க்யூர்டா, வேற்றினகாரி, மிரட்சிவூட்டும் சிந்தனையும் உடல்வலிமையும் பெற்றிருந்தவள், இயல்பில் நல்லவளாக இருந்திருக்கலாம். அலரிடம் இருந்த இயற்கை குணங்கள் அவர்களிடம் இல்ல. நாள் முழுவதும் வேலை தேடும் முயற்சியின் மத்தியில் மெஸ்சேஜுகள் மூலம் பேசிக்கொண்டார்கள். இரண்டுமாதத்தில் அவன் தங்கியிருந்த அப்பார்ட்மென்டிலிருந்து விலகி நான்கு நபர்களுடன் சேர்ந்து இருக்க தொடங்கினான். அதில் இருவர் வேற்றுகிரஹ வாசிகள்.

“உங்க ஊருக்கே போய் இருக்கலாமில்ல சக்தி? உங்க ஊர் எது?”
இந்த கேள்வியை தவிர்க்க என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருந்தான்.
“எங்க ஊருக்கு..அத விடு..அது வேற விஷயம் . என் ரூம்மேட் ஒருத்தன் XJ134 கிரஹத்துல ஒரு வாய்ப்பு பத்தி சொன்னான். அப்ளை பண்ணியிருக்கேன்”
அவள் முகம் எதற்கோ நிறம் மாறியது.
“ரொம்ப தூரமாச்சே?”
“வேலை இல்லாம சும்மா உக்காந்திருக்கறதுக்கு பதிலா எங்க கிடைக்குதோ அங்கே போக தயார்”
“ஓ…”

அதற்கு மேல் பேசவில்லை. மாலை தன் கைபேசியில் படிக்காத மெசேஜுகளை பார்க்கும் பொது அவள் அனுப்பிய செய்தி தொகுப்புகளை பார்த்தான்.

  • XJ134 கிரஹத்தில் மனிதர்களுக்கு எதிராக இன புரட்சி. மனிதர்களை
    பணய கைதிகளாகி, பண மிரட்டல் விடும் கும்பல் கடந்த மாதம் மூன்று மனிதர்களை கொலை செய்தது.
  • சட்டவிரோதமான சுரங்கங்கள் தோண்டி உலோகங்களை எடுத்து விவரம் அறியா மனித விற்பனையாளர்கள் மூலம் விற்கும் ஞால குழுமத்தின் மீது நடவடிக்கை. ராமானுஜன் மயில்கல், RC -132K, கோப்பர்நிக்கஸ் நட்சட்ச்சிர கூட்டம், XJ134 போன்ற இடங்களில் இந்த குழுமம் நிலவிவருவதாக தகவல்
  • ஹென்றி போர்ட் போக்குவரத்து கழகம் விடுத்த நோட்டீஸ் ” அர்சா மேஜர் நட்சத்திர கூட்டத்திலிருந்து சிஃநஸ் கூட்டத்திற்கு நாங்கள் கட்டவிருந்த ஹைப்பர் வே திட்டத்தை கைவிட்டுள்ளோம். திட்டமிட்ட பாதையில் கருப்பு பாதாளம் கண்டறியப்பட்டதால், கட்டுமானப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது”. புவியியல் நிபுணர்களின் எச்சரிக்கை “இந்த புது கண்டுபிடிப்பினால், எஸோ கிரஹங்களான T-1012 , மிலேனியா, XJ134 போன்ற கிரஹங்கள், இந்த கருப்பு பாதாளத்தின் இயற்பில் சிக்கி சிறிது காலத்தில் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

**
படித்து முடிந்தவுடன் லேசாக பக்கத்தில் இருக்கும் சுவரின் மெது சாய்ந்தான் சக்தி. இதனை என்னவென்று சொல்வது? கரிசனமா? அக்கறையா? அல்லது…..

Series Navigationகனடா, ரொறன்ரோவில் நூல் வெளியீட்டு விழாகரையேறும் காதலாய்……
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *