அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
ஜீ ச்சா ஹே து ஷீஷா பன்சா ஜீ ச்சா ஹே பைமான பந்தா
நீ விரும்பினால், ஒரு கண்ணாடியாகவோ அல்லது ஒரு கிண்ணமாகவோ மாறு.
ஆனால் நீ மதுவாகவும், ஒரு மதுக்கடையாகவும் மாறும்போது ஏன் இவைகளாக மாற வேண்டும்?
மதுவாகவும், மதுக்கடையாகவும் மாறுவதன் மூலம், போதையின் கதையாக மாறுங்கள்.
போதையின் கதையாக மாறுவதன் மூலம், வாழ்க்கைக்கு அந்நியராகுங்கள்
- பாரசீகக் கவிஞர் ரூமி
நபீல், காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான்
தலைநகர் காபூலில் அமைந்து இருந்த ஒரு மண்சுவர் வீட்டில், உள்ளறையில், நான் புலவர் ரூமியின் கஜல் பாட்டை, எனது ரூபாப்பில் வாசித்துக் கொண்டு இருந்தேன்.
நான் வாசிக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்து, சமையல் அறைக்குள் இருந்த குல்பாரி, ஏற்கனேவே மூன்று முறை, என்னை, கிட்டவந்து, எச்சரித்து விட்டுப் போய்விட்டாள்.
“இதல்லாம் சரிப்பட்டு வராது. எவனாவது போராளி, நீங்கள் இசைப்பதைக் கேட்டால், நம் வீட்டிற்குள் வந்து, உங்களை நாலு சாத்து சாத்திவிட்டு போகப் போறான். அப்பத்தான் நீங்க உங்க ரூபாப்பை கீழே வைப்பீங்க. இல்லையா?”
இதோ, நாலாவது முறையும் குல்பாரி என்னை எச்சரித்து விட்டுப் போனாள். இதற்கு மேல் எனக்கு வாசிக்க விருப்பம் இல்லை. நான், எனது ரூபாப்பை கீழே வைத்தேன்.
தக்காரில் இருந்த, முதலாளி வீட்டை விட்டு, நானும் குல்பாரியும், காபூல் வந்து இன்றோடு ஆறு மாதங்கள் ஆகிறது. காபூல் வந்தவுடன் நாங்கள் செய்த முதல் காரியம், வாடகைக்கு ஒரு வீடு பிடித்ததுதான்.
முதலாளியும், முதலாளி அம்மாவும் கொடுத்த பணம் எல்லாவறையும் உடனே செலவழித்துவிடக் கூடாது என்பதில், என்னைவிட குல்பாரிதான் உறுதியாக இருந்தாள். எனவே, ஜனநெரிசல் நிறைந்த ஒரு தெருவில், நாங்கள் இருவர் மட்டும் தங்குவதற்கு ஏற்ப, ஒரு சின்ன வீடாக, வாடகைக்குப் பார்த்துக்கொண்டோம்.
இருவருக்கும் ஒரு வேலையும் ஒழுங்காகத் தெரியாது. குல்பாரியோ உடம்பு முழுவதையும் கோஸாவால் மறைத்துக் கொண்டுதான் வெளியே செல்லவேண்டும். அதுவும், நான் இல்லாமல், அவள் எங்கும் வெளியே செல்ல முடியாது.
எனக்குத் தெரிந்தது ரூபாப் இசை மட்டும்தான். நான் நன்றாக ரூபாப் இசைக்கிறேன் என்று என் குருநாதரே சொல்லி இருக்கிறார். முதலாளியும் அதை பல நேரங்களில் ஆமோதித்து இருக்கிறார். எனவே நான், ஏதாவது கச்சேரியில் வாசிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தேன்.
காபூலின் இசை மாவட்டம் என்று சொல்லக்கூடிய, குச்சே கராபத்துக்கு போய் பல இடங்களில் வேலை தேடினேன். ஆனால் எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை.
காரணம், இப்போதைய அரசாங்கத்தின் மதம் சார்ந்த போராளிகள். ‘கச்சேரி இசை என்பது, மதத்திற்கு எதிரானது. அது ஹராம்’ என்ற பழமைவாத சிந்தனையோடு, இன்றுவரை இருப்பதுதான்.
உஸ்பெக்கிஸ்தான் தஜகிஸ்தான், இந்தியா என்று பல நாடுகளில் இருந்து, குச்சே கராபத்திற்கு வந்து வாழ்ந்து, இசையில் வெற்றிக்கொடி நாட்டிய, பல இசை ஜாம்பவான்கள் வாழ்ந்த பல தெருக்கள், இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பலர், ஆப்கன் அரசாங்கத்திற்கு பயந்து, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு, எப்போதோ இடம் பெயர்ந்து போய் விட்டனர்.
சிலரோ, குச்சே கராபத்தில் இருந்த இசைப்பள்ளிகளை மூடிவிட்டனர். மூடிய அங்கேயே, ரொட்டிக்கடை, சோடாக்கடை, துணிக்கடை என்று அந்த இசைப்பள்ளிகள் அனைத்தையும் வேறு வியாபாரங்களுக்கு ஏற்ப மாற்றி விட்டனர்.
இந்தச் சூழ்நிலையில், எனக்கு மட்டும் என்ன இசை சார்ந்த வேலை கிடைக்கப் போகிறது?
குல்பாரிதான், “வேறு ஏதாவது வேலைகள் தேடுங்கள்” என்றாள். எனது ஆசை குல்பாரியோடு வாழ்க்கை நடத்த, நானும் அயராது வேலை தேடினேன்.
கடைசியில், எனக்கு ஒரு ரொட்டிக்கடையில், மேசை துடைப்பவனாக ஒரு வேலை கிடைத்தது.
அந்தக் கடை, காபூலின், பிரதான வீதியில் இருந்தது. வெளியூர்களில் இருந்தும், உள்ளூரில் இருந்தும், பலர் வந்துபோகும் தெரு என்பதால், அந்த வீதி, எப்போதும் அதிக சன நடமாட்டத்துடனேயே இருக்கும்.
அந்த ரொட்டிக்கடையில் நான் வெறும் மேசை துடைப்பவனாக மட்டுமே வேலை பார்ப்பதில்லை. ஒரு நாளைக்கு, கடையில் எத்தனை ரொட்டி போடுகிறான். சால்னா எவ்வளவு செய்கிறான். எவ்வளவு வேஸ்ட் ஆகிறது? மீதமாகும் அந்த ரொட்டித் துண்டுகளை, கடை முதலாளி என்ன செய்கிறார் என்று எல்லாவற்றையும் நான் நோட்டமிடுவது உண்டு.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில், எவன் காசு கொடுக்காமல் போக நினைப்பவன், எவன் சால்னா அதிகம் கேட்பவன் போன்ற அனைத்து விசயங்களையும் நோட்டமிட்டுவிட்டு, அந்த விசயங்களை, கடை முதலாளியின், காதில் ரகசியமாக ஓதுவேன். முதலாளியும், அவர் போன்ற ஆட்களிடம், கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்வார்.
என்னால் கடை வருமானம் பெருகுவது குறித்து, கடை முதலாளிக்கு பெரிய மகிழ்ச்சி. எனவே, சம்பளம் போக, ஏதாவது அதிகக் காசுகள், தினம் எனக்குக் கொடுத்து விடுவார். நானும் அதை சந்தோசமாக வாங்கிக்கொண்டு செல்வேன்.
இப்படியே, ஆறு மாதங்கள் ஓடி விட்டன. எனக்கும் அந்த வேலை அத்துபடி ஆகிவிட்டது.
அப்போதுதான், ஒருநாள் அந்த சம்பவம் நடந்தது. அது என் வாழ்க்கையை மறுபடியும் புரட்டிப் போட்டது.
கிட்டத்தட்ட நள்ளிரவு இருக்கும். நானும், கடை முதலாளியும், வழக்கம்போல் கடையை மூடினோம்.
முதலாளி, அவரது வண்டியில் ஏறி, வீட்டிற்குப் போய்விட்டார். எனது வீட்டிற்குச் செல்ல, எதிர்திசையில் நடக்க் வேண்டும். நான் இரண்டு தெரு கடந்து போய் இருப்பேன்.
இருட்டான ஒரு இடத்தில் இருந்து யாரோ ஒருவர் “நபீல்” என்று கூப்பிட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இருட்டான அந்த இடத்திற்கு போகவும், பயமாக இருந்தது.
“நபீல்… நான்தான், இங்கே வா” என்று அந்தக் குரல் மறுபடியும் என்னை அழைத்தபோது, என்னால் அங்கே போகாமல் இருக்க முடியவில்லை.
அந்த இருட்டில், அவன் என்னை நெருங்கி, என் காதில் கிசுகிசுத்தான். “நபீல்.. எப்படி இருக்கே? நான்தான் கரீம்” என்று அவன் சொன்னவுடன், நான் ஆச்சரியத்துடன், அந்த இருட்டிலும், அவனை உற்றுப் பார்த்தேன்.
ஆம். அவன் கரீம்தான். என்னோடு பச்சாபாசி விபச்சார விடுதியில் ஒன்றாக இருந்தவன்.
“இங்கே என்னடா பண்றே?” நான், அதிர்ச்சியில், அவனிடம் மெதுவாகப் பேசினேன்.
கரீம் உடனே, நக்கலாக நகைத்தான். “ம்ம்.. கழுதை கெட்டா குட்டிச்சுவர்” என்று சொல்லிகொண்டான். யாரோ அருகே நடந்து போவதை, கரீம் கவனித்து விட்டான். உடனே, பெண் போல நடந்து, அந்த இருட்டில் நடந்து போய்க்கொண்டு இருந்த அவனருகே போய், ஏதோ அவனிடம் பேசினான்.
நான் அனைத்தையும், பயத்துடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். பேசிக்கொண்டே இருந்த கரீம், இருளில் நின்றுகொண்டு இருந்த அந்த மனிதனது ஆண்குறியை நசுக்க ஆரம்பித்தபோது, எனக்கு விசயம் புரிந்து போனது.
கொஞ்ச நேரம் கழித்து, என்னிடம் வந்தான் கரீம். “நபீல், நாளை பார்ப்போமா? வேலை இருக்கிறது.” என்றான்.
“என்ன வேலை?” என்று நான் கேட்டபோது, “ம்ம்… வாய் போடற வேலைதான்” என்றான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
“சரி கரீம்.. ரொம்ப நேரம் ஆகி விட்டது. இன்னொரு நாள் பார்ப்போம்” என்று அவனிடம் சொல்லிவிட்டு, நான் எனது வீடு நோக்கி நடந்தேன்.
அடுத்தநாள், எனது வீட்டில் இருந்து கடைக்கு வரும்போதும், இரவில் கடையில் இருந்து, எனது வீடு திரும்பும்போதும், நேற்று கரீமை சந்தித்த அதே தெருவில் போகாமல், வேறு தெருக்கள் வழியாகப் போனேன். பிரச்சினைகள் எதுவும் நிகழவில்லை.
ஆனால், ஒரு நாள், நான் மாறிச்சென்ற அந்தத் தெருவிலும், இரவில், கரீமைப் பார்க்க நேர்ந்தது. “ஓ கரீம், இங்கு உள்ள எல்லாத் தெருக்களிலும், மாறி மாறி, விபச்சாரம் செய்கிறவன் போல இருக்கிறது” என்று, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
அதற்குமேல், கரீமிடம் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.
“கரீம்.. ஏன் இந்த வேலை பார்க்கிறாய்? ஏதாவது வேறு ஏதாவது, என்னைப் போல, ஒழுக்கமான வேலை பார்க்க வேண்டியதுதானே?” என்று நான் சொன்னவுடன், கரீம் என்னை முறைத்தான்.
“நபீல்.. நீ வேலை செய்யும் அந்த ரொட்டிக்கடையில், உனக்கு எவ்வளவு பணம், மாத சம்பளமாகக் கிடைக்கும்? அந்த உனது மாத சம்பளத்தை, நான் இந்த சப்பி வேலை செய்து, ஒரே வாரத்தில் சம்பாதித்து விடுவேன்.” என்றவுடன் எனக்குக் கோபம் வந்தது.
“சரி கரீம்.. அப்படியே இருக்கட்டும். இதே வாய் போடற உன் சப்பித் தொழிலை, எங்காவது ஒரு பச்சாபாசிக் கூடத்தில் போய் செய்ய வேண்டியதுதானே… போலிஸ் உன்னைத் துரத்தாதே? எல்லாத்தையும், அந்த பச்சாபாசி முதலாளி பாத்துக்குவாரே?” இப்படி நான் கேட்டவுடன், கரீம் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டான்.
“நபீல்.. அன்னைக்கு, நீ என்னை கடைசியாய், நள்ளிரவில் பார்த்தாயே.. அப்ப நான் ஒருவனுக்கு வாய் போடப் போனேனே? அவனே, ஒரு போலிஸ்காரன்தான்..” என்று கரீம் சொன்ன போது, நான் வாயடைத்துப் போனேன்.
கரீம் தொடர்ந்தான். “நபீல்.. நான் உன்னைவிட எட்டு வயது மூத்தவன். இந்த வயசுக்கு மேலே, நான் பச்சாபாசிகூடத்துக்கு போனா, என்னை யாரு ஏத்துக்குவா? வயசானவன் என்று என்னை ஒருத்தனும் சீண்ட மாட்டான். ஆமாவா இல்லையா?” என்று அவன் என்னைக் கேட்டபோது, அது நியாயம்தான் என்று எனக்குத் தோன்றியது.
“நபீல்.. எனக்கு என்ன உன்னை மாதிரி சங்கீதம் தெரியுமா? உன்னை மாதிரி, ஏதாவது எனக்கு படிப்பறிவு இருக்கா? இப்படி எதுவும் இல்லாம, நான் பச்சாபாசி கூடத்துக்குப் போனா, எனக்கு கக்கூஸ் கழுவுற வேலைதான் கிடைக்கும். ஆமாவா இல்லையா?” எனக்கு இப்போது கரீம் மீது இரக்கம் வந்தது.
“நபீல்.. நம்ம தக்கார் மாதிரி, இங்கே, காபூல் நகருக்குள்ளேயே, எந்த பச்சாபாசிக் கூடமும் இல்லே. நகருக்கு வெளியே ரொம்ப தூரம் தள்ளித்தான் பச்சாபாசிக் கூடம் இருக்கு. அப்படி இருக்க, ஒரு கக்கூஸ் கழுவுற வேலைக்கு நான் ஏன் அவ்வளவு தூரம் போகனும்? இங்கேயே, வாய்போட்டே, நல்லா சம்பாரிச்கிட்டுப் போவேனே? என்று கரீம் சொன்னபோது, நான் “உண்மை” என்று தலை ஆட்டினேன்.
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது, பின்னாடி எவனோ ஒருவன், அந்த இருளில் நின்றான். “யாருப்பா நீ?” என்று என்னை அதட்டினான்.
“யோவ் புரோக்கரு.. அவன் என் நண்பன்தான்யா” என்று கரீம், அந்த ஆளை திருப்பி அதட்டிய போது, அந்த புரோக்கர், பதில் ஏதும் பேசாமல், என்னை இன்னும் கிட்ட வந்து உற்றுப் பார்த்தான்.
“நீ.. நீ.. அந்த ரொட்டிக்கடையில் வேலை பார்ப்பவன்தானே?” என்று அவன் வினவியபோது, நான் “ஆமாம்” என்று சொன்னேன்.
அதற்குமேல், அங்கே எனக்கு நிற்கப் பிடிக்கவில்லை. கரீமிடம் சொல்லிவிட்டு, அரக்கப் பரக்க வீடு வந்து சேர்ந்தேன்.
இரண்டு வாரம் நிம்மதியாகப் போயிற்று.
மாத இறுதி சம்பள நாள் வந்தது. அந்த நள்ளிரவில், வழக்கம் போல, நானும் முதலாளியும், கடையைச் சாத்தினோம்.
“நபீல்.. இந்தா உன் இந்த மாத சம்பளம். எண்ணிப் பார்த்துக்கொள்” என்றவுடன், நான் பணத்தை எண்ணிப் பார்த்தேன். எண்ணிப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அது எனது ஒரு மாத சம்பளம் இல்லை. எனது ரெண்டு மாத சம்பளம். எனக்கு ஒன்றும் புரியாமல், முதலாளியைப் பார்த்தேன்.
“நபீல்.. நாளையில் இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்” என்று முதலாளி சொன்னவுடன், நான் சொன்னவுடன், நான் பதறிப்போனேன்.
“ஏனுங்க அய்யா இந்த முடிவு?“ என்று நான் கேட்டவுடன், முதலாளி என்னைப் பார்த்துக் கேட்டார். “நபீல்.. இதுக்கு முன்னால் நீ ஒரு பச்சாபாசியாக இருந்தாய் என்று நான் கேள்விப்பட்டேன்”
எனக்குப் புரிந்து போனது. கரீமின் அந்த புரோக்கர் பய, முதலாளிக் கிட்டே ஏதோ போட்டுக் கொடுத்திட்டான்.
“முதலாளி அது உண்மைதான். ஆனால், நான் இப்போ கல்யாணம் செஞ்சுக்கிட்டு, எனது மனைவியோட, நிம்மதியாக வாழ்ந்துட்டு இருக்கேனே… அது உங்களுக்கே தெரியுமே முதலாளி?” என்றவுடன் முதலாளி குறுக்கிட்டுப் பேசினார்.
“அதில் எல்லாம் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை நபீல். உண்மையில் நீ ஒழுக்கமானவன். ஒரு நல்ல குடும்பஸ்தன். ஆனா… நீ என் நிலையைக் கொஞ்சம் நினச்சுப் பாக்கணும். நீ முன்னாள் பச்சாபாசி என்று, இனி பலருக்கும் தெரியவரும். அப்படி விஷயம் பரவும் போது, ப்ரோக்கர் பசங்க, உன்னை அவர்கள் தொழிலுக்கு இழுக்க, இங்கே உன்னைத் தேடி வருவாங்க…”
அப்படி வருகிற அந்த புரோக்கர்களைப் பார்த்தால், சாப்பிட வருகிற நல்ல வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்து போகும்.. இதெல்லாம் எனக்குத் தேவையா?” சொல்லிவிட்டு, முதலாளி பெருமூச்சு விட்டார்.
“கொஞ்ச நாள் பொறுமையா இரு நபீல்… நான் உன்னை, ஊருக்கு வெளியே இருக்கிற, வேறு கடையில் சேர்த்து விடுகிறேன். அங்கே, இந்தப் பசங்க வந்தாலும் கவலை இல்லை. வராவிட்டாலும் கவலை இல்லை. சரியா?”
சொல்லிக்கொண்டே, முதலாளி, அவரது வண்டியில் ஏறிப் போனார். நான், கண்கலங்கி நின்றேன்.
நான் அழுதுகொண்டே வீட்டிற்குத் திரும்பி, நடந்த அனைத்தையும், குல்பாரியிடம் சொன்னேன்.
அப்போதுதான், குல்பாரி அந்த யோசனையைச் சொன்னாள். அவள் யோசனை எனக்குப் பிடித்து இருந்தது.
குல்பாரி, காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான்
நன்றாகத்தான் எங்கள் இருவரின் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது. நபீல் என்னை எப்போதும் சந்தோசமாக வைத்துக் கொள்கிறான். ஒழுங்காக வேலைக்குப் போய் வருகிறான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
ஆனால், நேற்று வந்து என்னிடம் அவன் கதறி அழுதபோது, அவனை ஆறுதல்படுத்தி, அவன் அழுகையை நிறுத்த, எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
பச்சாபாசி என்ற விசயம், தக்கார் மாகாணத்தில் இருந்து, காபூல் மாகாணம் வரை வருகிறது என்றால், இந்த கேடுகெட்ட பச்சாபாசி வழக்கம், ஆப்கானிஸ்தானின் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கிறது என்றுதான் அர்த்தம். எனக்கு ஆத்திரம் ஆத்திரம் ஆக வந்தது.
ஆனால், அதேநேரத்தில், ‘பச்சாபாசி ஒரு கேவலமான விசயம்’, என்று, கடைக்கார முதலாளி, நபீலை, வேலையை விட்டுத் தூக்கும் அளவுக்கு, இருப்பது குறித்து எனக்கு சந்தோசம் ஆகவே இருந்தது.
இந்த காபூல் நகரம், பச்சாபாசிகளை, இன்னும் கேவலப்படுத்தட்டும். கடை முதலாளி போன்ற ஆப்கான் பொதுமக்களின் விழிப்புணர்வால்தான், இந்த ஆப்கானிஸ்தான் திருந்தும்.
நபீல், இன்னும் கண் கலங்கி அழுதுகொண்டுதான் இருக்கிறான். இப்போது, அவன் மீது எனக்கு நிறைய இரக்கம் வந்தது. பாவம் நபீல். அவன் என்னோடு திருந்தி வாழவே நினைக்கிறான். ஆனால், இந்த சமூகம், இவன் போன்ற நல்லவர்களின் உணர்வுகளையும் புண்ணாக்குகிறது.
“குல்பாரி.. இப்படி அரும்பாடுபட்டு கிடைத்த ஒரு வேலையும் போய் விட்டதே. நான் என்ன செய்வேன்?” என்று நபீல் கண்கலங்கியபோதுதான், நான் அந்த யோசனையைச் சொன்னேன்.
“நபீல், நான் போனவாரம் உன்னோடு கடைக்குப் போனபோதுதான் கவனித்தேன். நம்ம வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷன் அருகே, ஒரு சின்னக்கடை ஒன்று பூட்டியே கிடைக்கிறது. பக்கத்து வீட்டு மாமியிடம், இது குறித்து விசாரித்தேன். அந்தக் கடைக்கு சொந்தக்காரர், அவங்க மகன்தானாம்.” என்று நான் சொன்னபோது, நபீல், நான் பேசுவதை எந்த வித ஆர்வத்துடனும் கேட்கவில்லை. நான் தொடர்ந்தேன்.
“மாமி என்னிடம் சொன்னாங்க. கடையை வாடகைக்கு விடுவதற்கு ஒரு நல்ல ஆளாத் தேடிக்கிட்டு இருக்காங்களாம்.”
நான், பக்கத்து வீட்டு மாமி சொன்னதை நபீலிடம் சொன்னபோது, அவனுக்கு நான் சொன்ன வார்த்தைகளில், அவ்வளவு சுவாரசியம் வரவில்லை.
“குல்பாரி, நீ என்ன சொல்கிறாய். எந்த முதலாளி, எப்போது அந்தக் கடையை வாடகைக்கு எடுத்து கடை நடத்துவார்? அங்கே நான் போய் வேலையில் சேர, இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? அதுவரை எப்படி நாம் காலம் தள்ளுவது?” என்று நான் கேட்டவுடன், எனக்கு கோபம் வந்துவிட்டது.
“அட அறிவு கெட்டவனே.. நீ ஏன் அங்கே போய் வேலைக்குச் சேரணும்? இந்த மேசை தொடைக்கிற வேலைக்காரன் புத்தி ஒன்னை விட்டுப் போகவே போகாதா?” அன்று நான் கோபமாகப் பேசியபோது, கண்கலங்கிக் கொண்டிருந்த நபீல் சிரித்து விட்டான்.
“அட லூசு நபீலே.. நாம் அந்தக் கடைக்கு முதலாளியாகவே ஆவோம். நான் மாமியிடம், கடை வாடகை எவ்வளவு அப்படிண்ணு எல்லாம் கேட்டுட்டேன். மாமிக்கு, நானே கடை நடத்துகிறேன் அப்படிண்ணு சொன்னதுமே, ரொம்ப சந்தோசம் ஆயிடுச்சு. குல்பாரி, நீ கடை நடத்துனா, வாடகையை, என் மகன்கிட்டே கேட்டு, இன்னும் நல்லா குறைச்சுத் தாரேன், அப்படின்னு சொல்லிட்டா”
நபீலுக்கு சந்தோசம் ஒருபுறம்.. சந்தேகம் ஒருபுறம்.
“அது சரி.. பணம்?” என்றிழுத்தான் நபீல். நான் அமைதியாகச் சொன்னேன்.
“பணம் ரொம்பத் தேவைப்படாது. நாம ஒரு சாப்பாட்டுக்கடை நடத்துவோம். பக்கத்திலேயே காவல் நிலையம் இருக்கு. நம்ம கடையும் பாதுகாப்பாக இருக்கும். காவல் நிலையம் வர்ற எல்லோரும், நம்ம கடைக்கும் சாப்பிட வருவாங்க” நான் மூச்சு வாங்கி தொடர்ந்தேன்.
“கடை, நம்ம வீட்டுக்கு பக்கத்திலேயே இருப்பதால, நானே, நம்ம வீட்டில் இருந்தே சமைச்சுக் கொடுக்கறேன். நீ அதைக் கடைக்கு எடுத்துட்டுப் போய் வியாபாரம் செய்தால் மட்டும் போதும்” என்றவுடன், நபீலுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.
“நபீல்.. இப்ப இந்த வீட்டிலே, நாம் இரண்டே பேர்தான் இருக்கிறோம். நாம இந்தக் காபூலுக்கு வர்றப்ப, முதலாளியம்மாவும் பணம் கொடுத்தாங்க. முதலாளியும் பணம் கொடுத்தாங்க. நீயும் இந்த ஆறு மாசமா சம்பாதிச்சு, பணத்தை என்னிடம்தான் கொடுத்து வைக்கிற இல்லையா? அதயெல்லாம் எடுத்து நாம் இந்தக் கடைக்கு மூலதனம் ஆக்குவோம்” நான் அவன் தோளைத் தட்டினேன்.
“நபீல் காவல் நிலையம் பக்கத்துலயே நம்ம கடை இருக்கறதால, அப்புறம், எந்த புரோக்கர் பய, உன்னைத் தேடிக்கிட்டு வரப் போறான்?” என்று நான் சொன்னபோது, நபீல், அளவு கடந்த ஆச்சரியத்துடன், பேசாமல் என்னைப் பார்த்தான்.
“நீ என்ன சொல்றே நபீல்.. என் பச்சா பாசிப் பையா” என்று, நான் அவனை சீண்டினேன்.
நான் எப்போதெல்லாம் அவனை, பச்சாபாசி என்று சொல்கிறேனோ, அவனுக்கு அப்போதெல்லாம் மூக்கு விடைக்கும். ரோசம் பொத்துக்கிட்டு வரும்.
உடனே, பாய்ந்து வந்து, என்னை அலேக்காக தூக்கிக்கொண்டு, கட்டிலில் கொண்டு போய்ப் போடுவான். இன்றைக்கும் அதையே செய்தான்.
நான், எந்தவித மறுப்பும் செய்யவில்லை.
பத்துவருடங்கள், மூன்று பிள்ளைகள் பிறக்கும் வரை, எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. புதிய கடையின் முதலாளி நபீலின், செக்ஸ் சந்தோசம் குறையவும் இல்லை.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்