—–வளவ. துரையன்
கைகாட்டும் பொம்மையை
வாங்கித்தந்தால்தான்
கிளம்புவேன் என்று
அடம்பிடிக்கிறது குழந்தை;
இன்னும் கொஞ்ச நேரம்
அந்த அலைகளில்
கால் நனைத்து வருவேன்
எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்;
ஏக்கக் குரலாய்
ஏங்க ஏங்க என்கிறான்
சுண்டல் விற்பவன்;
வீட்டுக்குப் போனால்
அலுப்புங்க நேரமாகட்டும்
என்கிறாள் மனைவி;
இவ்வளவு பேர் சொல்லும்போது
இருந்துவிட்டுப் போயேன்
என்கிறது கடற்கரை;
பாதி எழுதி மேசை மீது
வைத்துவிட்டு வந்த
அந்தச் சிறுகதை வலிந்து
அழைக்கும் ஓசை
அதோ காதில் சத்தமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறதே!