This entry is part 7 of 8 in the series 24 மே 2026

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் எட்டு [தொடர்ச்சி]

இன்னொரு வகை மனிதர் உண்டு. அவருக்கு சில நடப்புண்மைகளின் அடிப்படையில் உண்டான வருத்தங்கள், ஆதங்கங்கள் உண்டு. ஆனால், ஆனால், அவர் தன்னுடைய வருத்தங்கள் உலகத்திற்கே ஒரு திறவுகோலைத் தருவதான முடிவுக்கு வந்துவிடு கிறார். உதாரணமாக, உளவுத்துறை குறித்த இழிவான,  ஏதோவொரு விஷயத்தை அவர் கண்டுபிடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதை வெளியே விடாமல் மறைப்பது அரசாங்கத்தின் நலனுக்கு உகந்தது . எனவே அவர் கண்டுபிடித்ததற்கு அவரால் எந்த விளம்பரத்தையும் பெற முடிவதில்லை, மேலும் மிகவும் உன்னதமான மனங்கொண்டவர்களாகக் காணப்படுகிறவர்கள் கூட நடக்கும் அக்கிரமத்தை எதிர்க்கவோ தடுக்கவோ சுண்டு விரலைக்கூட உயர்த்துவதில்லை. இது இவருக்கு மிகவும் ஆத்திரமூட்டுகிறது.  இதுவரையில்,  சம்பந்தப்பட்ட நபர் சொன்னவிதத் திலேயே விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், அவர் தமது துறையில் நடந்த அநியாயத்தைப் பற்றிச் சொன்னபோது அதற்கு மேலிடத்திலிருந்து கிடைத்த எடிர்வினைகள் அவர் மனதில் அதிகார வர்க்கத்தினர் எல்லோருமே குற்றங்களை மறைப்பவர்கள், அதற்கு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் என்று நம்பச்செய்துவிடுகின்றன. குறிப்பாக, இவ்வகை யான மனிதர்கள், தங்களுக்குத் தெரிந்த பகுதியளவு உண்மை காரணமாக, அதன் வழியாக அமைந்துள்ள தங்கள் கண்ணோட் டத்தின் காரணமாக, தங்கள் நம்பிக்கையில்  பிடிவாதமாக இருப்பார்கள். தம்மை நேரடியாக பாதித்த விஷயங்கள் அவர்களிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்து வது இயல்பான விஷயமே. ஆனால், அவற்றைக் கொண்டு  அவர்கள் விதிவிலக்கான நடவடிக்கைகளை வழக்கமான செயல்பாடுகளாக, அணுகுமுறைகளாகப் பார்க்கத் தலைப்படுகிறார்கள். தான் தண்டிக்கப்படுவோம், துன்புறுத்தப்படுவோம்  என்ற பெரும்பீதியால் ஆட்கொள்ளப்படுபவர்களில் இன்னொரு வகையினர் உண்டு.

இன்னொரு வகையினர் உண்டு. இவர்கள் பரோபகாரிகளாக இருப்பார்கள். மக்களுக்குப் பிடிக்காமலிருந்தாலும் கூட, எப்போதும் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்து கொண்டேயிருப்பார்கள். அதற்கான நன்றியுணர்ச்சியை மக்கள் வெளிப்படுத்துவதே யில்லையே என்று திகைத்துப்போவார்கள்; அதிர்ச்சியடைவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நமது நோக்கம் என்பது நாம் கற்பனை செய்துகொள்ளும் அளவு தூய்மையான தல்ல. அதிகாரத்திற்கான ஆசை என்பது வஞ்சகமானது; பல வேடங்களைக் கொண்டது. பல நேரங்களில் அது மற்றவர்களுக்கு நல்லது என்று நாம் நம்புவதைச் செய்வதில் நமக்குக் கிடைக்கும் ஆனந்தத்திற்கு மூல காரணமாக விளங்குகிறது. இதில் இன்னொரு அம்சமும் பெரும்பாலான நேரங்களில் இடம்பெறு கிறது. மக்க ளுக்கு ‘நல்லது செய்தல்’ என்பது பொதுவாக அவர்களுக் குக் கிடைக்கும் சந்தோஷத்தைக் கெடுப்ப தாகவே இருக்கிறது. மதுவருந்துதல், சூதாடுதல், அல்லது ஒன்றும் செய்யாமல் சுகமாய் ஓய்வெடுத்தல் – இப்படி நிறைய சொல்லலாம். இதில் சமூக ஒழுக்கம் என்று சொல்லப் படுவதில் இடம்பெறும் ஓர் அம்சமும் அடங்கியிருக் கிறது. அதாவது, நாம் நம்முடைய நட்பினரின் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் எதையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டுமோ அதையெல்லாம் செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் மேல் நமக்கு இயல்பாகவே ஏஎற்படும் பொறாமையுணர்வு.  புகை பிடித்தலுக்கு எதிராக சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப் போர் (அத்தகைய சட்டங்கள் சில அமெரிக்க நாடுகளில் இருக்கின்றன அல்லது இருந்திருக்கின்றன) பொதுவாக புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு புகை பிடித்தலின் மூலம் மற்றவர்கள் அடையும் ஆனந்தம் வலிவேதனையை அளிக்கும். அந்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள், இயற்றியவர்கள் அதற்காக முன்பு ஒரேயடியாக புகைபிடித்தவர்கள், சிகரெட்டுக்கு அடிமையாயிருந்தவர் களெல்லாம் ஒன்றுதிரண்டு வந்து அவர்களுக்கு இந்தத் தீமையிலிருந்து மீட்சியளித் தமைக்காக நன்றி தெரிவிப்பார்கள் என்று .எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கும்.

இதேவிதமான அணுகுமுறை / மனோபாவம் தங்களிடம் வேலை செய்யும் பணிப்பெண்கள் குறித்து எஜமானிகளிடம் நிலவுவது வழக்கமாயிருந்தது. தமது பணிப்பெண்களின் ஒழுக்கத்தை அவர்கள் பாதுகாப்பதாய் நடந்துகொண்டார்கள்.. ஆனால், இப்போது வேலைக்கு ஆள் கிடைப்பதே  பெரும்பாடாக இருப்பதால் பணிப் பெண்களிடம் இந்தவகையான ‘கருணை’ காட்டுவதெல்லாம் அபூர்வமான விஷயமா கவே இருக்கிறது.

அரசியல் களத்தில் மேல்மட்டச் செயல்பாடுகளில் இதேவிதமான விஷயம் நடந்தேறுகிறது. அரசியலவாதி தான் எந்த உயர்நோக்கங்களுக்காக சௌகரியமான வாழ்வை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தாரோ, எவற்றை செம்மையாக நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக எல்லா அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துக்கொண்டாரோ அந்த நல்ல நோக்கங்களின் பயனாளிகளான மக்கள் அதுகுறித்த நன்றியுணர்வு இல்லாமல் தனக்கு எதிராகத் திரும்பிவிடும்போது அதிர்ந்துபோகிறார்.  தனது அரசியல் பணி எந்தவொரு பொதுநல நோகமும் கொண்டதல்ல என்பதோ, அல்ல்து, எல்லா விஷயங்களையும் / செயல்பாடுகளையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரம் தரும் ஆனந்தம் தன்னுடைய செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தி ருக்கிறது என்பதோ அவருக்குத் தோன்றுவதேயில்லை.  அரசியல்மேடைகளிலும், கட்சியின் அச்சக வெளியீடுகளிலும் வழக்கமாய் காணப்படும் சொற்றொடர்களை படிப்படியாக அவர் முழு உண்மையாக நம்ப ஆரம்பித்துவிடுகிறார். கட்சி சார்பு முழக்கங்களை அவர் காரணங்களின் உண்மையான ஆய்வலசலாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார். வெறுப்பும் மனக்கசப்புமாய் அவர், உலகம் அவரிடமிருந்து விலகி அப்பால் சென்றுவிட்ட பின்,  விலகி விடைபெற்றுக்கொண்டு, பொதுமக்களுக்கு நல்லது செய்யும் ஆர்வத்தில் அரசியல் பணி என்ற நன்றிகெட்ட, கஷ்டமான பணியைச் செய்ய  முனைந்ததற்காக மிகவும் மனம் வருந்துகிறார்.

இந்த எடுத்துக்கட்டுகள் நான்கு பொது நெறிகளைத் தருகின்றன. இவற்றில் உள்ள உண்மைகளை நாம் உரிய அளவு உணர்ந்துகொண்டால் நம்மைப் பீடிக்கும் பெரும்பீதியைத் தடுப்பதற்கான தகுந்த தடைகாப்பு அரண்களாக இவை அமையும்.

முதலாவது: நீங்கள் செய்யும் வேலைகள் உங்களுக்குத் தோன்றுமளவு அத்தனை பொதுநல நோக்குடையவை அல்ல என்பதை நினைவுவைத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது: உங்களுடைய தகுதித்திறனாற்றல்கள் பற்றி அளவுக்கதிகமான மதிப்பீட்டை நிர்ணயித்துக்கொள்ளாதீர்கள். மூன்றாவது: உங்களுக்கு உங்கள் மீதி இருக்கும் அதே அக்கறை, பிடிப்பு மற்றவர்களுக்கும் உங்கள் மீது இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நான்காவது: மற்றவர்கள் உங்களைத் தண்டிக்குமளவு  உங்களைப் பற்றி அதிகமாக, பிரத்யேகமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், நினைவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.

பொதுநலச் சேவை செய்பவர், உயர் நிர்வாகி போன்றோர் விஷயத்தில், தங்களது நோக்கங்கள் குறித்து சந்தேகமிருப்பது இன்றியமையாத் தேவையாகிறது. இந்தப் பிரிவினர், உலகம் அல்லது அதன் ஒரு பகுதி/ ஒருசில பகுதிகள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்த ஒரு கண்ணோட்டம், கற்பனை இருக்கிறது. அந்தக் கற்பனையை, கண்ணோட்டத்தை உண்மையாக்க முயற்சிப்பதன் மூலம், உண்மையாக்குவதன் மூலம் சக-மனிதர்களுக்குத் தாம் அருள்பாலித்திருப்பதாக அவர்கள் சில சமயங்களில் சரியாகவும், சில சமயங்களில் தவறாகவும் உணர்கிறார்கள். ஆனால், தங்களுடைய அந்தப் பணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரவர் விரும்பும் உலகத்தைக் கற்பனை செய்ய, அது குறித்த பார்வையை உருவாக்கிக்கொள்ள உரிமையிருக்கிறது என்பதை அவர்கள் போதுமான அளவு சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒரு மேலதிகாரி நிலையிலிருப்பவர் தன்னுடைய கண்ணோட்டமே சரி, அதற்கு மாறாய் அமைந்துள்ள எல்லாமே தவறானவை என்று திட்டவட்டமாக நம்புகிறார். ஆனால், அவரது ‘தன்னிலை’ அவருடைய கண்ணோட்டமே ‘பொதுநிலை’ அளவில் சரி என்பதற்கான எந்த நிரூபணத்தையும் தருவதில்லை.

மேலும், அவருடைய இந்த நம்பிக்கை பல நேரங்களில் தன்னால் விளையைக்கூடிய மாற்றங்கள் தனக்கு அளிக்கும் இன்பத்தை மறைப்பதற்கான திரையாகவே விளங்கு கிறது. அதிகாரத்திற்கான ஆர்வம் என்பதோடு அவருடைய ‘பொதுநல’ப் பணிகளுக்கு வேறொரு காரணமும் இருக்கிறது. அதுதான் தற்பெருமை, தன்னால் தான் எல்லாம் என்ற தலைக்கனம். பொதுநலப் பணி செய்வதாக சொல்லிக்கொள்ளும் பலருடைய விஷயத்தில் இந்த மனோபாவம் தீவிரமாகச் செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பின ராக வேண்டிப் போட்டியிடும் உயர்மன இலட்சியவாதி – இந்த விஷயத்தில் நான் அனுபவரீதியாகப் பேசுகிறேன் – எம்.பி என்ற இரண்டு எழுத்துக்களை தன் பெயரின் பின்னால் எழுதிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமே அவரை தேர்தலில் போட்டியிட உந்துகிறது என்று எண்ணும் வாக்காளர்களின் மனோபாவத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார். தேர்தல் முடிந்து உட்கார்ந்து சிந்திக்க அவருக்கு நேரம் கிடைக்கும்போது ஒருவேளை வாக்காளர்கள் நினைத்தது சரிதான் போலும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது. இலட்சியவாதம் என்பது எளிய நோக்கங்களை விசித்திரமான  மாறு வேடங்களைத் தரிக்கச்செய்கின்றது. எனவே, நமது பொதுமனிதர்களிடையே கொஞ்சம் யதார்த்தமான அவநம்பிக்கை இருப்பதில் தவறில்லை. மரபார்ந்த ஒழுக்கம் ஒரு வகையான பொதுநல மனோபாவத்தை மனிதர்களிடம் வளர்க்கிறது. ஆனால், அதைத் தாங்கும் சக்தி அல்லது அதை பேணும் ஆற்றல்  மனித இனத்திற்குக் கிடையாது. தங்களுடைய ஒழுக்கம், உயர்ந்த மனோபாவம், இவற்றைப் பற்றி பெருமை கொள்பவர்கள் பல நேரங்களில் மேற்குறிப்பிட்ட இந்த மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இலட்சியார்த்த மனதை, மனோபாவத்தைத் தாம் அடைந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஆனால், மிக உன்னத மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகளும் சுயம்-சார்ந்த, தன்னைப் பெரிதாக எண்ணிக்கொள்ளும், தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும் நோக்கங்களிலிருந்து உருவாகின்றன. இதில் வருத்தப்படுவதற்கு எதுவு மில்லை. ஏனெனில்,  இது வேறுவிதமாக இருந்திருந்தால் மனித இனம் தழைத்தி ருக்காது. பிறர் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருக்கும், அதனால் தான் சாப்பிட மறக்கும் ஒருவன் கண்டிப்பாக அழிந்துபோவான். தீமைக்கு எதிரான போரில் மீண்டும் இறங்குவதற்குத் தேவையான வலிமையைப் பெறுவதற்காக மட்டுமே சத்தான உணவை அவன் உட்கொள்ளக்கூடும்.. ஆனால், இந்த நோக்கத்துடன் உண்ணப்படும் உணவு போதுமான அளவு செரிக்கப்படுமா என்பது சந்தேகமே. காரணம், அத்தகைய மனிதரிடம் உமிழ்நீர்ச் சுரப்பு போதுமான அளவு தூண்டப்படாது. எனவே,  ஒருவர் தன் உணவு நேரத்தை பொதுநலனுக்கான விருப்பத்தால் மட்டுமே செலவிடுவதை விட, தன் உணவை விரும்பி உண்பதே சிறந்தது.

உணவு உண்பதற்குப் பொருந்தும் இந்த அணுகுமுறை மற்ற எல்லாவற்றுக்கும் பொருத்தமானது.  நாம் செய்யும் எந்தவொரு காரியமும் ஒருவித சந்தோஷமும் ஆர்வமும் சேர்ந்தே செய்யப்படவேண்டும். தன்னைப் பற்றி எண்ணாத எந்தவொரு விஷயத்திலும் இந்த ஆர்வமும் ஆனந்தமும் கிடைப்பது கொஞ்சம் கடினமான விஷயமே. இத்தகைய சுயம்-சார்ந்த நோக்கங்களில், மேற்குறிப்பிட்ட கண்ணோட்டத் திலிருந்து, நான் உயிரியல் ரீதியாக மனிதர்களை அவரவர் மேல் அக்கறை காட்டச் செய்யும் நோக்கங்களையும் சேர்த்துக்கொள்வேன். மனைவி, குழந்தைகளை எதிரி யிடமிருந்து காக்கும் முனைப்பு போன்ற நோக்கங்கள்.

இந்த அளவிலான பொதுநல நோக்கு என்பது இயல்பான மனிதத்தன்மையின் ஒரு பாகமாகும். ஆனால், பொதுநல நோக்காக,  மரபார்ந்த அறவியலில் வகுத்துரைக்கப் பட்டிருப்பவை அப்படியல்ல. அவற்றை உண்மையில் மனிதரால் எட்டவே இயலாது. எனவே, தங்களுடைய அறவியலைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக்கொள்ள விரும்பும் மனிதர்கள்  தாம் மனிதரால் எட்டவே முடியாத அளவு தன்னமின்மையை அடைந்து விட்டதாகத் தங்களைத் தாங்களே நம்பவைக்கப் பிரயத்தனப்படவேண்டியிருக்கிறது. எனவே புனிதராவதில் உள்ள பெருமுயற்சி ஒருவகையான சுய ஏய்ப்போடு தொடர்பு டையதாகிறது. இது பெரும்பீதியை மனதில் சூழவைக்கிறது.

மேற்சொன்ன நான்கு நெறிமுறைகளில் – ‘உங்கள் சொந்தத் தகுதிகளை மிகைப்படுத்தி மதிப்பிடுவது விவேகமற்றது’ என்ற இரண்டாவது, ஒழுக்கநெறிகளைப் பொறுத்தவரை நாம் ஏற்கெனவே கூறியுள்ளவற்றில் அடங்கியிருக்கிறது.. ஆனால், தார்மீக நெறிகளை மட்டுமல்லாமல் மற்ற நற்பண்புகளையும் நாம் மிகைப்படுத்திக் கூறலாகாது. தன் நாடகங்கள் ஒருபோதும் வெற்றி பெறாத நிலையில் இருக்கும் ஒரு நாடகாசிரியர் அவை மோசமான நாடகங்களாக இருக்க வழியுண்டு என்ற கருதுகோளை நிதானமாகப் பரிசீலிக்க முன்வரவேண்டும்.

அப்படியிருக்க வழியேயில்லை என்று அவர் எடுத்த எடுப்பிலேயே மறுதலிக்கக்கூடாது.

அது உண்மைகளுக்குப் பொருந்துகிறது என்று அவர் கண்டறிந்தால், ஒரு அனுமானத் தத்துவஞானியைப் போல, அவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வரலாற் றில் அங்கீகரிக்கப்படாத நற்பண்புகள், தகுதித் திறனாற்றல்கள் உள்ளன என்பது உண்மைதான், ஆனால் அவை அங்கீகரிக்கப் பட்ட தகுதிக்குறைபாடுகளை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. ஒரு மனிதன், அவன் வாழுங்காலத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு மேதையாக இருந்தால், அங்கீகாரம் இல்லாத போதிலும் அவன் தன் வழியில் தொடர்ந்து செல்வது முற்றிலும் சரியானதே. ஆனால், அவன் திறமையற்ற, வீணான தற்பெருமையால் தலை வீங்கிய ஒரு நபராக இருந்தால், அவன் தன் பாதையில் மேற்கொண்டு செல்லாமலிருத்தலே மேல். அங்கீகாரம் கிடைக்காத தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் அதீத உந்துதலால் ஒருவர் பீடிக்கப்பட்டிருந்தால் மேற்குறிப்பிட்ட இரண்டுவகையினரின் அவர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை அவர் அறிய வழியேயில்லை. நீங்கள் முதல் வகையைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் விடாமுயற்சி மகத்தானது.; மற்றொன்றைச் சேர்ந்தவராக இருந்தால், அது கேலிக்கூத்தானது. நீங்கள் இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகு, நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் கணிக்க முடியும். அதுவரை, ஒரு சோதனை இருக்கிறது.

நீங்கள் இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகு, நீங்கள் மேற்சொன்ன இரண்டு பிரிவுகளில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை ஊகித்துவிட முடியும். அதற்குள், நீங்கள் ஒரு மேதை என்று நீங்கள் நம்ப, உங்கள் நண்பர்கள் நீங்கள் மேதையல்ல என்று நினைக்கும் பட்சத்தில் எது உண்மை என்ரு பரிட்சித்துப் பார்க்க ஒரு சோதனைமுறை இருக்கிறது. அதில் தவறு நேராது என்று சொல்லமுடியாது. இருந்தாலும் – இதோ அந்தப் பரிசோதனை: சில எண்ணங்களையோ உணர்வுகளையோ வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசர உந்துதலால் நீங்கள் படைக்கிறீர்களா, அல்லது கைதட்டலுக்கான ஆசையால் தூண்டப்படுகிறீர்களா? ஒரு உண்மையான கலைஞரிடம், கைதட்டலுக்கான ஆசை பொதுவாக வலுவாக இருந்தாலும், அது இரண்டாம் பட்சமானதே. அதாவது, அந்தக் கலைஞர் ஒரு குறிப்பிட்ட வகையான படைப்பை உருவாக்க விரும்புகிறார், அந்தப் படைப்பு பாராட்டப்படலாம் என்று நம்புகிறார், ஆனால் கைதட்டல் கிடைக்கவில்லை என்றாலும் தனது பாணியை மாற்றிக்கொள்ள மாட்டார்.

மாறாக, யாரொருவனுக்கு பாராட்டும் கைத்தட்டலுமே பிரதான நோக்கம், இலக்காக இருக்கிறதோ அவரிடம் ஒரு கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இன்ன விதமாக வெளிப்பட்டால்தான் தரமானதாக இருக்கும் என்றவிதமான எந்தவிதமான உட்தூண்டுதலோ, உள்ளெழுச்சியோ இருக்காது. எனவே, கைத்தட்டலுக்காக அவனால் தன்னுடைய பாணியை முற்ற முழுக்க சுலபமாக மாற்றியமைத்துக்கொண்டுவிட முடியும். அத்தகையதொரு நபருக்கு தனது தகுதித்திறனாற்றலுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க யாரோ சதி செய்கிறார்கள் என்று எண்ணுவதும் நம்புவதும் எளிதாக இருக்கிறது.

இன்னும் பொதுப்படையாகப் பேசுவதென்றால், இந்த வாழ்க்கையில் நீங்கள் வகுத்துக் கொள்ளும் பாதை எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்களுடைய தகுதித்திறனாற்றல் களை எந்த அளவுக்கு உயர்வாக மதிப்பிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு மற்றவர்கள் மதிக்கவில்லையென்றால் அவர்கள் செய்வதுதான் தவறு என்று அத்தனை உறுதியாக நம்பாதீர்கள். அப்படி நீங்கள் எண்ணத் தலைப்பட்டால் உங்களுடைய தகுதித் திறனாற்றல்கள் உரிய அளவாய் அடையாளங்காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவதைத் தடுக்க பெரிய சதி நடக்கிறது என்று எண்ண ஆரம்பித்துவிடுவீர்கள்; நம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். இந்த எண்ணமே, நம்பிக்கையே மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. உங்களுடைய தகுதித்திறனாற்றல்கள் நீங்கள் நம்பும் அளவு அத்தனை உயர்வானவையல்ல என்பதை அடையாளங்காண்பது தாற்காலிகமாக அளப்பரிய வலியை வேதனையை அளிப்பதாக இருக்கலாம். ஆனால், இறுதியில் அந்த வலி முடிவுக்கு வந்து, அதற்கப்பால் மீண்டும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை சாத்தியமாக வழியுண்டு.

மூன்றாவது நீதி, மற்றவர்களிடம் அளவுக்கதிகமாக எதிர்பார்க்கலாகாது. உடற்குறையுடைய சீமாட்டிகள் தங்களுடைய மகள்களில் ஒருத்தியாவது திருமணம் கூட செய்துகொள்ளாமல் தன்னை ஒரு அன்புச் செவிலியாகப் பார்த்துக்கொள்வாள், பார்த்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியமமாகி விட்டது. இது, இன்னொரு வரிடம், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அளவிலான பொதுநலவாதியை, பொதுநலம் பேணுபவரை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. ஏனெறால், இதில் இழப்பு தன்முனைப் பாளருக்குக் கிடைக்கும் நன்மையை விட அவர் பொதுநலவாதியாகப் பார்ப்பவருக்கு ஏற்படும் இழப்பு அதிகமானது. மற்றவர்களோடான உங்கள் பரிவர்த்தனைகளில், குறிப்பாக உங்களுக்கு நெருக்கமானவர்களுடனான தொடர்புறவாடல்களில், அவர்களுக்கென்று வாழ்க்கை குறித்த பார்வையிருக்கிறது; அந்தக் கோணத்திலிருந்து, கண்ணோட்டத்திலிருந்து, தமது கண்ணோட்டமும் கோணமும் எந்தவிதத்தில் தங்களுடைய ‘தான்’ என்ற உணர்வைத் தொடுகிறதோ அந்தவிதத்தில்  அவர்கள் வாழ்க்கையை அணுகுகிறார்கள்,  உங்களுடைய கண்ணோட்டத்திலோ, உங்களுடைய கண்ணோட்டம் உங்களுடைய ‘தான்’ என்ற உணர்வைத் தொடும் விதத்தில் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியமானது ; ஆனால், அது எளிதான விஷயமல்ல..

எந்தவொரு மனிதருமே இன்னொரு தனிநபருக்காக தனது வாழ்க்கையின் முக்கியப் போக்குகளை, இயல்புகளை மாற்றிக்கொள்ளவேண்டும், சிதைத்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கலாகாது. சில தருணங்களில் மிகத் தீவிரமான அன்பும் பற்றும் மிகப் பெரிய தியாகங்களை மிக இயல்பாக செய்யவைத்துவிடும். ஆனால், அப்படி அவை இயல்பான உணர்வுகளாக, உந்துதல்களாக இல்லாத பட்சத்தில் அத்தகைய தியாகங்கள் செய்யப்படலாகாது. அவற்றைச் செய்யவில்லை என்பதற்காக எவரையும் வசைபாடலாகாது. அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கலாகாது. பல நேரங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி குறைசொல்லும் விஷயம் முறையான எல்லைக்கோடுகளைத் தாண்டிச் செல்லும் தன்முனைப்பாளர் ஒருவரின் அதீதப் பேராசைக்கு எதிராக ஒருவருடைய ஆரோக்கியமான தான் உணர்வு ஆற்றும் எதிர்வினை தானே தவிர வேறெதுவும் இல்லை.

இங்கே குறிப்பிடப்பட்ட நான்காம் நீதி – நீங்கள் உங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதில் செலவழிக்கும் நேரத்தை விட குறைவான நேரத்தையே மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சிந்திப்பதில் செலவிடுகிறார்கள் என்பதை நீங்கள் உணர்வதில் இருக்கிறது. மற்றவர்களால் துன்புறுத்தப்படுவதான பெரும்பீதிக்கு ஆளாகும் பித்துப் பிடித்த மனிதர் எல்லாவகையான மக்களும் – உண்மையில் அவரவர்களுக்கென்று தனித்தனி  பொழுதுபோக்குகளும் ஆர்வங்களும் உள்ளவர்கள்தான -.  காலை, மதியம், இரவு என எல்லா நேரமும் அந்த அனுதாபத்திற்குரிய, அறிவுகெட்ட ஆசாமியின் வாழ்வில் ஏதோ அநியாயத்தை செய்வதற்கே பிரயத்தனப்பட்டுக்கொண்டிருப்பவர் களாக, திட்டம்தீட்டிக்கொண்டிக்கொண்டிருப்பவராக இந்த பெரும்பீதியாளர் எண்ணிக் கொள்வார்.

இதைப்போலவே,  துன்புறுத்தப்படுவதான பெரும்பீதிக்ககு ஆளாகிறவர்களில் ஒப்பீட்டளவில் சுவாதீனமுள்ளவராக இயங்கும் ஒருவர் எல்லாவகையான செயல்பாடு களிலும் தன்னைப் பற்றிய குறிப்பு இருப்பதாக, சுட்டிக்காட்டல் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்..  உண்மையில் அப்படி எதுவும் இல்லை. ஆனால், அவ்வாறு எண்ணிக் கொள்வது ஒரு மனிதனின்  தன்னுணர்வை, தன்னைப் பற்றிய பிம்பத்தைப் போற்றிப் புகழ்வதாக அமைகிறது. தன்னைப் பற்றிய அத்தகைய ஊதிப்பெருத்த பிம்பத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பல வருடங்கள் ஆங்கிலேய அரசின் செயல்பாடுகள் நெப்போலியனை முறியடிக்கும் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.  ஆனால், எந்தவகையிலும் தனிப்பட்ட முக்கியத்துவம் எதுவும் இல்லாத ஒருவர், எப்போதும் மற்றவர்கள் தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும்போது அவர் தன் சித்தசுவாதீனத்தை இழக்கும் வழியில் முன்னேறிச் செல்கிறார் . ஏதோவொரு பொதுவிருந்தில் நீங்கள் சொற்பொழிவாற்றுகி றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி சொற்பொழிவாற்றிய வேறு சிலரின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகிவிடுகின்றன. ஆனால், உங்கள் படம் வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்? நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

காரணம், மற்ற பேச்சாளர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பாவிக்கப் பட்டார்கள் என்பதல்ல காரணம் என்பது வெளிப்படை; ஒருவேளை அந்தப் பத்திரிகைகளுக்கு யாரேனும் உங்களைப் புறக்கணிக்குமாறு  திட்டவட்டமான கட்டளை கள் பிறப்பித்திருப்பார்களோ? அபடி எதற்குக் கட்டளையிட வேண்டும்? இது கூடத் தெரியாதா? உங்களுடைய அளப்பரிய முக்கியத்துவம் அவர்களை அச்சப்படுத்தி யிருக்கிறது.  இந்த வழியில்  ஒரு புகைப்படம் பிரசுரமாகாமல் விடப்பட்ட விஷயம் ஒருவகையில் ஒரு சின்ன பாராட்டு என்பதிலிருந்து  ஒரு நுட்பமான சிலாகிப்பாக மாற்றப்படுகிறது. இவ்வகையான சுய-ஏய்ப்பு எந்தவிதமான திடமான சந்தோஷத்திற்கும் இட்டுச்செல்லாது. உங்கள் அடியாழ மனதில் உங்களுக்கு எது உண்மை என்பது தெரியும். நீங்கள் கற்பனை செய்வதல்ல உண்மை என்று நன்றாகவே தெரியும். இந்த உண்மையை உங்களிடமிருந்தே மறைக்க நீங்களின்னும் அதிகதிகமாக வியப்பூட்டும் கருதுகோள்களைக் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியதாகிறது. இந்த கற்பனைகளையெல்லாம் நிஜமென்று நம்ப முயற்சிக்கும் மனப்போராட்டம், முடிவில்,  மிகவும் பெரியதாகிவிடும். தவிர, விரிந்துபரந்த வெறுப்புணர்வுக்கு நீங்கள் ஆளாகி யிருப்பதாக நம்பிக்கையை அவை உள்ளடக்கியிருப்பதால்,  உலகமே உங்களுக்கு எதிராக இருக்கிறது என்ற மிகுந்த வலிகூடிய உணர்வை உங்களுக்கு அளிப்பதன் மூலமே அவற்றால் உங்களுடைய தன்மதிப்பைத் தக்கவைக்கின்றன. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதன் மூலம் பெறப்படும் மனநிறைவு எப்போதுமே உறுதியானதாக இருப்பதில்லை; இருக்க வழியில்லை. உண்மை எத்தனைக் கசப்பாக இருந்தாலும் சரி, அதை நேருக்கு நேர் பார்த்து, அதை ஏற்கப் பழகிக்கொண்டு, நம்முடைய வாழ்க்கையை அதனோடு பொருந்தும் அளவில் கட்டமைத்துக்கொள்வது எத்தனையோ மேலானது.

*

Series Navigationவெளிச்சம் எங்கே?வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது? தொடர்ச்சி