This entry is part 5 of 5 in the series 6 ஜூன் 2026

‘தேவவிரதன்’

சமீப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பட்டம் பெற்றவர்கள், ஒரு காலத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் தேடிப்பிடித்து ஓர் நாளில் குடும்பத்துடனோ, அல்லது தனியாகவோ, ஓர் ‘ரிசார்ட்’ என்னும் ஆடம்பரமான இடங்களில் ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு தொடர்பையும் புதுப்பித்துக் கொள்வதும், அதன் நிகழ்வுகளை  ‘வாட்ஸ் அப்’ மூலம் பகிர்ந்து கொண்டு மகிழ்வதும் வழக்கமாகி விட்டது. 

நான் பொறி இயல் கல்லூரியில் நான் படித்த நாட்களில், அதிகம் பேசாத,  ஒரு நண்பன், வயதாகி ஓய்வு பெற்றபின் திடீரென்று வீறு கொண்டு பல உடன் படித்த நண்பர்களை ஒன்று கூட்டி ஓர் நாள் என்னையும் அழைத்திருந்தான். நிஜத்தில், எனக்கு இத்தகைய நூதனமான சமூக திடீர் உறவுகளில் நம்பிக்கை கிடையாது. நண்பர்களாக இருப்பவர்கள் ஓர் சிலரே. காலப்போக்கிலும், வாழ்க்கையின் மாற்றங்களிலும் அந்த மெலிந்து போய் கொண்டிருக்கும் நட்பும் சில நாட்களில் அறுந்து போவதுண்டு. இதை நான் குற்றமாகக் கருதுவதில்லை. காலத்திற்கு காலம், வாழ்க்கையின் மாற்றங்கள் மனிதர்களிடமும் மாற்றங்களை கொண்டுதானே வரும்? 

ஆனால், வேலை கால நட்பு சற்று வேறானது. பேசுவதற்கு நிறைய சமாச்சாரங்களும், வேலை செய்த இடத்தில் நாம் ஓய்வு பெற்றபின் நிகழ்ந்து வரும் மாற்றங்களும் பேச்சில் அரைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நானும் என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்த சில நண்பர்களும் இன்னும் ஓர் விதமான மெலிதான தொடர்புகளில் இருக்கிறோம். 

ஏறத்தாழ மூன்று நான்கு மாதங்களாக நாங்கள் ஓர் நால்வர் ஓர் மாலை சந்திப்பது என்று முடிவு செய்தோம். அதில் ஒருவர் மிக உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றதோடல்லாமல் மேலும் ஓர் சிறந்த தனித்துவமான பதவியில் தொடர்ந்து இருப்பவர். இன்னொருவர் எங்களுக்கு மிக இளையவர். மற்றவர் கிட்டத்தட்ட என் வயதுக்காரர். எப்படியோ, நாங்கள் சந்திப்பது முடிவு செய்யப்பட்டு சென்னையில் இருந்த ஓர் நவீனமான பிரபல ‘க்ளப்’பில்  ஓர் மாலை  என்று முடிவாகியது. 

இதில், மற்ற மூவரும் அவரவர் துறைகளில் மிக்க தேர்ச்சி பெற்றவர்கள். நான் பணியாற்றிய இரசாயன தொழிற்சாலை பற்றிய விவரங்கள் அவர்களுக்கு பொருந்தாத, மற்றும் தெரியாத சமாச்சாரம். எனக்கும் அதே போல் அவர்களின் வேலை மற்றும் அதன் சார்புடைய விஷயங்கள் அறிமுகமற்றவை. வேலையில் இருந்த நாட்களில் இருந்தே நாங்கள் நண்பர்கள்தான். நெருக்கமானவர்கள் என்று நினைத்திருந்த சிலர், பணி ஓய்வுக்குப் பின் விலகிச் சென்று விட்டனர். இவர்களிடம் மட்டும் நட்பு சற்றும் எதிர்பாராத விதமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் கூட வியப்பான விஷயம்தான். 

பிறகு பீர் வந்தது, எனக்கு ‘வோட்கா’ வந்தது. சிறு தீனிகள் கொண்டுவரப்பட்டன. பேச்சு சற்றுநேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தபின் நாங்கள் பலகாலங்கள் வேலை பார்த்த அலுவலகத்தின் இன்றைய நிகழ்வுகளை பற்றியும், மற்றும் மாற்றங்கள் பற்றியும் பேச்சு திசை திரும்பியது. 

அலுவலக பேச்சு வந்தால் அது அநேகமாக முக்கிய மனிதர்கள் ஓர் சிலரைப்பற்றியே சுற்றி வரும் என்பதும் தெரிந்ததுதான். அவர்களின், வேலை திறன், தனித்துவம், சாதனைகள் பற்றி மட்டுமின்றி அவர்களின் குறைபாடுகளும் விவாதிக்கப் படும். இதை தவிர்ப்பது சற்று கடினமான காரியமே. ‘பிடிக்கும்’, ‘பிடிக்காது’, ‘ஏற்புடையது’, ‘ஏற்கமுடியாதது’ என்று இது ஆளுக்கு ஆள் மாறுபடும். இந்த சமாச்சாரங்களை, விமர்சனங்களையும் விவரிக்கும் போது சற்று ஜாக்கிரதையாக பேசுவது நல்லது. ஏனெனில் ஒரே குழுவைச் சேர்ந்த சிலர் நண்பர்களாகவோ, பகைவர்கள் ஆவதோ காலத்தின் கட்டாயம். அதில் நியாயம் சொல்ல மற்றவர்களுக்கு உரிமை இருப்பதாக நான் நினைப்பதில்லை. இன்று விரோதிகளாக இருப்பவர்கள் நாளையே நண்பர்களாக மாறலாம். 

எனவே, அவர்களையே பேசவிட்டு விட்டு அமைதியாக இருப்பதோ அல்லது ஆமோதிக்கும் வகையில் ஓர் சில வார்த்தைகளை சொல்வதோ உசிதம். 

அன்றும் அப்படித்தான் நிலைமை. இது எனக்கு ஓரளவு பழக்கம்தான். அதனால், நான் புன்னகையுடன் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டு ஓரிரு வார்த்தைகளை மட்டுமே கூறிக்கொண்டிருந்தேன். 

சில நேரங்களில் அமைதி காத்தேன். 

ஓர் தருணத்தில் பேச்சு சற்று திசை மாறியது. திரும்பாமல் வேறன்ன செய்யும்?  அந்த இடைவெளியில், எனக்கு பிடித்த கதை, கட்டுரை, சினிமா, பத்திரிகைகள் இவற்றில் அவர்களுக்கு அவ்வளவு நாட்டம் கிடையாது. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. அதுதான் யதார்த்தம். நானாக வலிய என் புத்தகங்களை தந்தபோது வாங்கிக்கொண்டனர்.

நான் தொடர்ந்து ஓர் கதையை நான் எப்படி மனதில் வாங்கிக்கொண்டு உருவாக்குகிறேன் என்பதை பற்றியும் கூறினேன். ஒருவரின் மனநிலையை உள்வாங்கி கொண்டு இரக்கம் காட்டுவதற்கும் நம்மையே அந்த நிலையில் நினைத்து கொண்டு பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தில்தான் கதைகள் உருவாகின்றன என்றேன். 

அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டனர். 

‘உங்களுக்காக நான் என் ஓர் சில கதைகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறேன். உங்களால் சுலபமாக படிக்க முடியும். அவைகளை தொகுப்புத்தான் இந்த புத்தகம்.  ஓர் சில கதைகள் உங்கள் கருத்துக்கு மாறுபட்டோ, ஏற்புடையதாகவோ இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், படித்து பார்த்து விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்கள்,’ என்றேன். 

அவர்கள் நான் சொன்னதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டனர். 

கலந்துரையாடல் பல இடங்களில் சுற்றிச் சென்றாலும், திரும்ப அந்த ஓர் சில மனிதர்கள், நிகழ்வுகள் இவைகளே பேசுபொருளாவதை தடுக்க இயலவில்லை. 

***

மணி இரவு பத்துக்கு மேல் ஆகி விட்டது. என் வீடாவது சற்று அருகில் அவர்கள் வீடுகள் வெகு தூரத்தில்.  நாங்கள் மூவர் ஓர் ‘ஊபர்’ காரை மூவரையும் அவரவர் இடத்தில் இறக்கிவிட பதிவு செய்து விட்டு, வந்ததும் கிளம்பினோம். 

‘வெகு நாட்கள் கழித்து சந்தித்தோம், ரொம்ப மகிழ்ச்சி,’ என்று கூறி விடை பெற்று கொண்டோம். 

நாங்கள் மூவர் வீடு திரும்புகையில் எங்களுடன் வந்த ஓர் நண்பர் கூறினார். ‘இனி நாம் சந்திக்கும் போது நம் அலுவலகத்தை தவிர்த்து வேறு ஏதாவது விஷயங்களையே பேச வேண்டும், என்ன சொல்கிறீர்கள்? ‘ என்று கேட்டார். 

நான் ‘ஆமாம்’ என்று கூறி புன்னகை செய்தேன். ஆனால், எனக்கு நிச்சயமாக தெரியும் அவர்களால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் அந்த வளையத்திலிருந்து வெளியில் வர முடியாது என்று. ஆனால், சொல்லவில்லை. 

ஏனெனில், நான் இத்தனை ஆண்டுகள் பார்த்து அறிந்தவகையில் அதுதான் நிஜம். எங்கு அதிக ஆண்டுகளை கழித்திருக்கிறோமோ, அதைப்பற்றிய   எண்ணங்கள்தான் நினைவில் நிற்கும். 

***

இந்த நிகழுவுக்கு பின் நாங்கள் சில மாதங்கள் ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தோம். 

இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் என் புத்தகத்தை பற்றிய எந்தவிதமான விமர்சங்களோ, பாராட்டுகளோ அந்த நண்பர்களிடம் இருந்து எனக்கு வரவில்லை. நான் அதை குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரவர் வேலையும், கடமைகளும் அவரவர்க்கு. நானாக தொடர்பு கொண்டும் ஏதும் கேட்கவில்லை. 

நாம் நம் நண்பர்களிடமோ, வேறு எவரிடமோ கொடுக்கும் பரிசுக்கோ இல்லை எழுத்துக்கோ விமர்சனத்தை கேட்டுப்பெறுவது எனக்கு அவ்வளவாக ஏற்புடைய கருத்தல்ல. ஆனாலும், குறிப்பாக இவர்கள் நெடுநாள் நண்பர்கள், அதிலும் நான் எழுதுவது பற்றி அறிந்தவர்கள் என்பதால்தான் நான் என் ஓர் சில கதைகளை மட்டும் மொழி மாற்றம் செய்து புத்தகமாக்கி படிக்க கொடுத்தேன். 

****

திடீரென்று அந்த மூன்று நண்பர்களில் ஒருவர் எனக்கு வழக்கம் போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்?’ என்றார் ஆங்கிலத்தில் அன்புடன். ‘நான் நலமாக இருக்கிறேன், நீங்களும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்,’ என்றேன் நான். 

‘வேறு என்ன விசேஷம்?’ என்றார். மேலும் பொதுவாக நாட்டு நடப்பு, உடல் நல விசாரணைகள் பற்றி பேசினோம். ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நான் தயக்கத்துடன் கேட்டேன். 

‘நான் கொடுத்த புத்தகத்தை படித்தீர்களா?’ 

உடன் பதில் வந்தது. ‘எந்த புத்தகம்?’ 

இதுதான் உலகம்; யதார்த்தம். நான் சட்டென்று பேச்சை மாற்றிவிட்டேன். 

‘அங்கீகாரம்’ அல்லது ‘விமர்சனம்’ என்பது தானாக வரவேண்டுமே தவிர கேட்டுப்பெறுவது அநாகரிகம். 

என்னை பொறுத்தவரை எதையுமே ‘கேட்டுப்பெறுவது’ ஏற்கமுடியாத ஒன்று; 

அவர்கள் நண்பர்களாகவே இருந்தாலும் கூட. 

G Swaminathan      Contact: 9840289671

Series Navigationகவிதைகள்