-ரவி அல்லது.
நான் அவசரமாக போகும்போது வந்த அழைப்பு தோழர் லசபாவுடையது. எனக்கு ஏற்கனவே அவரிடம் முன்பு பேசியதில் நேரம் கடந்து இருந்தது. அவருடனான பேச்சு சுவாரசியமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. மகள் பிறந்த பிறகு வாய்ப்புகள் முற்றிலும் குறைந்து விட்டது. கபிலன் சாரை சொல்ல வேண்டியதில்லை. அவரது மன உளைச்சல் அளவிட முடியாது என்று அவரே மௌனமாகிவிட்டார். பரவலாக வாழ்க்கை கடிதனத் தன்மை உடையதாக அவர் சூழ்நிலையில் வெறுப்புகள் கொண்டவரானார். ‘மாலை கபிலன் தோழருடன் வருகிறேன். பேசுவோம் தோழர்’ என்றார் லசபா. இப்போது ஏன் அடிக்கிறார் என்றுத் தெரியவில்லை.
பஸ் ஸ்டாண்ட் பக்கம் போலீஸ் ஸ்டேசன் எதிரில் பைக்கை நிறுத்தி கைபேசியைக் கையில் எடுத்தேன்.
“சொல்லுங்கள் தோழர்.”
“கபிலன் தோழருடன் வருகிறேன். போனை எடுங்கள். வெளியே இருக்கீங்களா தோழர்.”
“ஆமாம்.தோழர். அர்ஜூன் படம் ப்ளாஸ்ட் படத்துக்குப் போகிறேன்.”
“சரிங்க தோழர். மாலை பேசலாம்.”
படம் எந்தளவுக்கு இருக்கும் என்றுத் தெரியவில்லை. அதைவிட இவர்களுடன் பேசுவது எனக்கு சுவாரசியமாகப் பொழுது போகும். பைக்கைத் திருப்பி வீட்டிற்கு போய்விடலாமா என்று நினைத்தேன். இப்போதே மணி 11:08 ஆகிவிட்டது. ராஜாமணித் தியேட்டர் செல்வதற்குள் கண்டிப்பாக 11:15 மேல் ஆகிவிடும். புக் மை ஷோவில் அன்ன பூர்ணா தியேட்டர் காலை 11:15 என்றும் ராஜாமணித் தியேட்டர் காலை 11:00 என்றும் எப்பொழுதோப் பார்த்தது நினைவுக்கு வந்தது. எனக்கு ஸ்கிரீன் டூ ஸ்கிரீன் படம் பார்க்க வேண்டும். அப்படியேப் பழகிவிட்டேன்.
இன்று படத்திற்குப் போக நேற்றிலிருந்து வேலைகளை முடித்துக் கொண்டு இருக்கிறேன். காலையில் லசபா தோழருடன் பேசியதில் கால தாமதமாகி விட்டது. நான் அவரிடம் படத்துக்குப் போகிறேன் என்று சொல்லவில்லை. சகாயப் பிழை கதையில் சசிகலாவின் பிரிவு வேதனையை ஏன் சொல்லவில்லை என்றார். அந்த தவறு எனக்குப் புரிந்தது. மனோகர் பார்வையில் கதைப் பயணிப்பதால் அதை எழுதத் தோன்றவில்லை.
நேற்று இரவு சசிகலாவிற்காக மூன்று பக்கம் எழுதியதை வாசித்துவிட்டு மனோகருக்காக அழுததைவிட சசிகலா கூடுதலாக அழ வைப்பதாகச் சொன்னார். எனக்கு லசபாவிடம் பிடித்ததே, தான் கதைக்குள் பயணித்துவிட்டால் அதை அதே உணர்வோடு உடனே பேசி விடுவார். கேணிப் பாலம் கதையைப் படித்துவிட்டு இரண்டு மணி நேரம் பேசினார். ‘அவசியம் நான் ஒரு ஆடியோ பேசி அனுப்புகிறேன் தோழர்’ என்றார்.அவரின் ஸ்டேட்டஸில் கதை வெளியான நடுகல் இதழின் லிங்கை வைத்து இருந்தார்.
‘அந்தக் கதைச்சுருக்கத்தைச் சொல்லி பேசுங்கள் தோழர். கபிலன் சார் படிக்க நேரமில்லை.ஆடியோவாக கதையை அனுப்புங்கள் என்று சொன்னார்.’ என்றதும் அவர் சரி என்றார். இதுவரை அவர் அனுப்பவில்லை என்பது வேறு விசயம்.
விமர்சனம் செய்வதில் இத்தனை மெனக்கெடல் உடையவர் என்பதால்தான் நான் காலையில் அவர் பேசும் போது படத்துக்குப் போகிறேன் என்பதை சொல்லவில்லை.
அய்யா தியேட்டர் போய்விடுவோமா என்று நினைத்தேன். வழியில் கருப்பு படம் ஓடுவதாக போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அது ஏற்கனவே பார்த்தாகிவிட்டது. ஒரே படம் இரண்டு தியேட்டரில் போடும் வழக்கம் வந்த பிறகு தொடர்ந்து தியேட்டரில் சினிமா பார்ப்பவர்களுக்கு சங்கடம் தான். கால மாற்றத்தில் தியேட்டர் தொழில் நசிந்து விட மூன்று தியேட்டர் மட்டுமே உள்ள ஊரில் இரண்டு தியேட்டரில் ஒரேப் படம் ஓடுவது தியேட்டர் ரசிகர்களுக்கு அசௌகரியம் தான்.
ராஜாமணித் தியேட்டரில் அப்போது தான் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து இருந்தது கொஞ்சம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தத் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவன் எனது நண்பன் வேல் முருகன். வி. எம். டி ராஜாமாணிக்கம் அவர்களின் மூத்த பையன். இங்கு வந்தால் அவனோடு பழகிய நாட்கள் நினைவுக்கு வரும்.
கல்லூரி முடித்து வீட்டில் இருந்த நாட்களில் காலையில் தலையாரித்தெரு சலூனில் நண்பர்களோடு ஊர் கதை பேசிவிட்டு மதியம் அவனோடு அவன் வீட்டில் சாப்பிட்டு விட்டு படம் பார்ப்பது எனது வழக்கமான வேலையாக இருந்தது. எட்டு கிலோ மீட்டர் கரம்பயம் சென்று சாப்பிட்டு திரும்பி வந்து படம் பார்ப்பது சிரமம் என்பதால் வேல் முருகன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துச் செல்வான்
அவர்கள் வீட்டின் கிச்சனுக்கு முன்பான டைனிங் டேபிளில் மதிய சாப்பாடு சாப்பிடும்போது ‘இந்த டேபிளில் எத்தனை நடிகர்,நடிகைகள் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்காங்க தெரியுமாப்பா உனக்கு’ என்று ஒவ்வொரு முறையும் ஒரு கதை மாதிரி ஏதாவது ஒரு நடிகர், நடிகையைப் பற்றி அவன் அம்மா சொல்வார்கள். வேல் முருகன் அப்பாவும் நடிகர் விஜயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள்.அப்பாவும் என்னிடம் நிறைய பேசி இருக்கிறார்.அப்பாவும் அம்மாவும் எனது திருமணத்திற்கு வந்தது என் அக்கா, மாமாவிற்கு பெரிய சந்தோசம்.
அம்மா அடிக்கடி சொல்வார்கள். எனக்கு விவரம் தெரிந்து. நான் சென்ற கல்யாணத்தில் வருகிறவர்களை மட்டும் வரவேற்றுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஸ்டேஷூக்கு வராதது அக்காவும் மாமாவும்தான்’ என்பார்கள்.
ராஜாமணி தியேட்டரில் பால் கேணி இருக்கும். அது பெரும்பாலும் படம் பார்க்க வருகிறவர்களுக்காக டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். ஹவுஸ் ஃபுல்லாகும் படங்கள் ஓடினால் மட்டும் கொடுப்பார்கள். பெரும்பாலும் நான் அதில்தான் படம் பார்த்திருக்கிறேன். வேல் முருகன் அக்கவுண்ட்ஸ் முடித்து மேலே வந்து சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விடுவான். பல முறை நான் கீழேயே எல்லோருடன் அமர்ந்து விடுவேன்.
அதுவொரு காலம்.மக்களுக்கு பொழுது போக்கே சினிமா, நாடகம் என்று இருந்த காலம் அது. இப்போது ராஜாமணி தியேட்டர் வேல்முருகன் குடும்பத்தார்களிடம் இல்லை.ராஜாமணி மணி தியேட்டர் பற்றி ஒரு கதை எழுத வேண்டும்.அந்தளவிற்கு சம்பவங்கள் எனக்குள் அந்த தியேட்டர் மற்றும் அது தொடர்பான விசயங்கள் நிறைந்து கிடக்கிறது.
பைக்கிற்கு டோக்கன் இருபது ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டு இருக்கும்போது சத்தமாக ஒரு குரல் கேட்டது.
“உள்ளே வராதே வெளியேப் போ. உள்ளே வராதே வெளியேப் போறீயா இல்லையா.”
நான் எதையும் கவனிக்காமல் டிக்கெட் எடுக்கும் கவுண்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பொதுவாக தியேட்டரில் குனிந்த தலை நிமிராமல் யாரையும் பார்க்காமல் செல்வது எனது வழக்கம். எனது சிறிய வயதில் சினிமாப் பார்ப்பது கெட்ட விசயமாக நினைக்கப்பட்டது. நான் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை தியேட்டரில் வந்து பார்த்தப் படங்கள் பத்தோ பனிரெண்டோதான் இருக்கும். அதில் பாதபாதிக்கு மேல் பள்ளியின் முழு ஆண்டு தேர்வு முடிந்த அன்று பார்த்தது. மற்றவை வீட்டிற்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பார்த்ததாக இருக்கும். அப்போது நான் கிராமத்தில் இருந்தேன்.
“அண்ணா… யாராவது டிக்கெட் ஒண்ணு எடுத்துக் கொடுங்கண்ணா.” என்று ஒரு பெண் குரல் கெஞ்சலாக யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
இந்தக் குரல் வந்த பின்பக்கம் திரும்பாமல் நான் கவுண்டருக்கு செல்லும் கம்பி உள்ளப் பகுதியை நெருங்கிய போது
“அண்ணா…. ப்ளீஸ் அண்ணா படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுங்க அண்ணா. ” என் பக்கத்தில் வந்து கேட்டபோது தான் நான் திரும்பிப் பார்த்தேன்.
அந்தப் பெண்ணிற்கு ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயதிற்குள் இருக்கும். மஞ்சள் நிறத்தில் புடையும் பச்சை நிற ப்ளவுஸூம் கையில் ஒயர்க் கூடை ஒன்றும் வைத்து இருந்தார். அதிக சிவப்பில்லாமல் இருந்தார். ஒயர்க் கூடை உள்ளே பாதி அளவுக்கு துணியோ வேறு ஏதோ இருந்ததால் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் பாதிக்கு மேலே வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. அது அக்வாஃபீனா வாட்டர் பாட்டில்.
அவர் மன நிலை பாதித்து இருப்பது பார்க்கும்போதேத் தெளிவாக தெரிந்தது. முழு பைத்தியமாக இருப்பவர்களை விட பாதி பைத்திய நிலையில் இருப்பவர்களைப் பார்த்தால் மனது கிடந்து பதறும். எதனால் மனத் தைரியத்தை இது இழந்திருக்கும். கடவுளே… ஏன் என் கிட்டே கொண்டு வந்து சோதிக்கிறே என்று நினைத்துக் கொண்டேன்.
“அண்ணா… படம் பார்க்கனும்ன்னு ஆசையா இருக்குண்ணா. ஒரு டிக்கெட் எடுத்துக் குடுண்ணா. ப்ளீஸ்ண்ணா.”
நான் முடிவுகள் எடுக்க கொஞ்சம் தயங்கினேன். எனக்கு முன் டிக்கெட் வாங்கிச் சென்றவர்கள் அந்தப் பெண்ணைப் பொருட்படுத்தவில்லை. எனக்கு அது போல கடக்க முடியவில்லை. (எனது மகளிடம் இதை சொல்லிக்காட்டினால் ‘சமூகத்தினால ஒரு ஸ்டெப் எடுத்து வச்சிருக்க முடியாதே. உலகமே சுத்தி இருக்குமே. குட்ர்றா அங்க ஒரு டிக்கெட்டேன்னுருப்பீங்களே. ப்ரண்ட்…தந்தையாரைப் பத்தி எனக்குத் தெரியும்.டிக்கெட்டு எடுத்துக்குடுக்கலைன்னு பொய் சொன்னா நான் டென்சனாயிருவேன் தந்தையாரே…’ம்பார்.)
என்னை அந்தப் பெண் விடாதபடிக்கு கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. நான் கவுண்டருக்குள் இருந்த டிக்கெட் கொடுக்கும் பெண்ணிடம்
“எல்லா டிக்கெட்டும் ஒரே ரேட்டாம்மா. “
“ஆமாம்… சார். “
“ஒரு டிக்கெட் எவ்வளவும்மா. “
“நூற்றி ஐம்பது ரூபாய் சார். “
“இரண்டு டிக்கெட் தனித்தனியாக கொடுங்கள். “
நான் ஜிபேயில் முன்னூறை அனுப்பிவிட்டு மறுபடியும் ‘டிக்கெட் தனித்தனியாக குடுங்க’ என்றேன். கவுண்டருக்குள் உள்ளே இருந்தப் பெண் மனநிலை பாதித்தப் பெண் கெஞ்சியதை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு ப்ரிண்டரைப் பார்த்தது. பிரிண்டர் இரண்டு டிக்கெட்டுகளைப் பிரிண்ட் செய்து இருந்தது. அதை இரண்டாக கிழித்து என்னிடம் கொடுத்தார். நான் ஒரு டிக்கெட்டை அந்தப் பெண்ணிடம் கொடுத்தபோது அதை வாங்கிக் கொண்டு அது எனக்கு நெருக்கமாக நடந்து வந்தது.
பைக்கிற்கு டோக்கன் கொடுத்தப் பெரியவர் என்னை ஏக்கமாகப் பார்த்துச் சிரித்தார்.நான் டிக்கெட் வாங்கிக் கொடுத்ததை அவர் பார்த்துவிட்டார் என்பது தெளிவாக தெரிந்தது. நான் பர்ஸை எடுத்து ஏதாவது பணம் கொடுக்கலாம் என நினைக்கும்போதே இந்தப் பெண் நெருக்கமாக வந்த நெருடல் அவருக்கு இன்டர்வெலில் பணம் கொடுக்கலாமென வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
நான் டிக்கெட் கிழிப்பவரிடம் டிக்கெட்டை கொடுத்தேன்.
“என்னைப் பார்த்து வெளியேப் போன்னு சொன்னே. இந்தா டிக்கெட். அண்ணேன் எடுத்துக் குடுத்துச்சு.”
“ஆமாம்.நான்தான் வெளியேப் போகச் சொன்னேன். இப்ப அதுக்கு என்ன.”
“சார்… விடுங்கள் சார். “
இருவருமே மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் அந்தப் பெண் கையைப் பிடித்து ‘இந்தப் பக்கம் போம்மா’ என்று சொல்லி விட்டு நான் எனது டிக்கெட்டை கைபேசியின் கவரில் வைத்துவிட்டு, மூடி இருந்த கதவை திறந்து உள்ளே சென்றேன். படம் போடுவதற்கு முன்பு போடும் விளம்பரம் ஓடியது மனது ஆறுதலாக அமைந்தது.
பின்னாடியே வந்த அந்தப் பெண்.
“அய்யய்யோ… இருட்டுப் பயமா இருக்குண்ணே. இருட்டு பயமா இருக்குண்ணே. ” என்று கத்தியது.
நான் முதல் முறையாக பயந்தேன். தேவை இல்லாத வேலையைச் செய்துவிட்டோமா,நாமும் எல்லோரையும் போல இருந்திருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டேன்.
ராஜாமணி தியேட்டர் இடது பக்கம், வலது பக்கம் மற்றும் மையத்தில் என்று மூன்று பகுதிகளாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இடதிலும் வலதிலும் ஐந்து அல்லது ஆறு படிகள் மேலே ஏறி நாம் இருக்கையில் அமர வேண்டும்.
அறிவாளித்தனமாக செயல்படுவதாக நினைத்து எனது கைபேசியின் வெளிச்சத்தை அடித்து. அவரின் ஒருக் கையைப் பிடித்து இடது பக்கம் உள்ள படியில் ஏறி அந்தப் பக்கம் இருந்த நான்காவது வரிசையில் உட்கார வைத்தேன்.
“அண்ணே… நீங்க எங்கே போறீங்க. “
நான் எதுவும் பேசாமல் படியில் இறங்கி வலப் பக்கம் உள்ள படியில் ஏறி நான் வழக்கமாக அமரும் முதல் வரிசையின் முதல் இருக்கையில் அமர்ந்த போது படம் போட்டிருந்தார்கள்.
படம் ஓடிய ஐந்து நிமிடத்தில்’அண்ணே… எங்கே இருக்கீங்க. அண்ணே…. எங்கே இருக்கீங்க… ‘ குரல் கேட்டது. அந்தப் பக்கம் திரும்பி பார்த்தால் மைய வரிசையின் இரண்டாவது சீட்டில் நின்று ஒவ்வொருவராக பார்த்துப் பார்த்து ‘அண்ணே.. எங்கே இருக்கீங்க. ‘ என்று நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டு இருந்தது.
படம் பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடலாம் என நினைக்கும்போது அந்த சத்தம் நின்று போயிருந்தது. அது எனக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தந்ததால் நான் படத்திற்குள் மூழ்க ஆரம்பித்தேன்.
கால் மணி நேரத்தில் எனக்கு சைடில் இருந்த நடுவரிசையின் கடைசி சீட் வழியாக வெளியே வந்து நேராக என்னிடம் வந்து விட்டது.
“அண்ணே… இங்கேயா இருக்கீங்க.”
நான் மௌனமாக இருந்தேன். எனக்குப் பக்கத்தில் கால்கள் இரண்டையும் இருக்கையில் குத்துக்காலிட்டது போல வைத்து மடியில் ஒயர் பேக்கை இருக்கப் பிடித்தபடி உட்கார்ந்து விட்டது.
நான் வேறு வழி இல்லாமல் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அர்ஜூனின் சிறு வயது மகள் அடி வாங்கியவர். இப்போது அதே பசங்களை கராத்தேயில் அடித்து நொறுக்கினார்.
படம் பார்க்கும்போதே ஓரக்கண்ணால் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். கால்களைத் தொங்கவிட்டு வயர் பையை மடியில் வைத்து படத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது.
என் மனக்குழப்பம் மீண்டும் என்னை நிலை கொள்ள விடாமல் தவிக்க வைத்தது. இந்தப் பெண் ஏதாவது மனக் கோளாறில் தவறானத் தொடுதலில் எதுவும் செய்துவிட்டால் என்ன செய்வது. நகரில் ஓரளவு அறியப்பட்டவன். என் உறவினர்கள் பலர் இந்த ஏரியாவில் முக்கியஸ்தர்கள். இப்போது படம் பார்க்கும் எவரையும் எனக்குத் தெரியாது என்றாலும் பிரபலமான உறவினர்களுக்கு நான் நெருக்கமான உறவு என என்னைத் தெரிந்து வைத்து இருப்பவர்கள். இங்கு அதில் ஒரு சிலராவது இருப்பார்கள். நான் ஊரில் இல்லாதபோது என் மனைவியை அலுவலக வேலையாக பேங்க்கிற்கோ வேறு எங்கோ அனுப்பி இருந்தால் அவர் என்னிடம் வழக்கமாக சொல்லும் ஒரே செய்தி இதுதான். ‘எங்க நின்னாலும் உங்க தம்பிங்க போன் பண்ணி கிண்டல் பண்ட்றாங்க. அத்தாச்சி அங்கே என்னப் பண்ட்றீங்கன்னு. யாரு அவர்களுக்கு சொல்றாங்கன்னேத் தெரியல.’
நாங்கள் இந்த நகரத்தில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகத்தான் வாழவேண்டும். இதெல்லாம் நான் முன்பே அவதானித்து தான். என்னை எந்த எந்த ஊர் என்று கேட்டால் ‘நான் சென்னை’ என்று சொல்லிவிடுவேன். என்னைப் பெரும்பாலும் சொல்வதே. ‘அப்பல்லோ சார். மெட்ராஸ் இஞ்சினியர்.’என்றுதான்.
கடவுளே…. நான் ஏன் இப்படி இந்த வம்பில் மாட்டினேன். படத்தை நான் ஒரு செட்டப்பான மூடில் பார்க்கின்ற ஆள். என் மகளுக்கும் எனக்கும் தான் அது செட்டாகும். என் மகனுக்கு அது செட்டாகாது. அவனோடு ஒன்றோ இரண்டோ படம் தான் பார்த்து இருக்கிறேன்.
“அம்மா… என் சொந்தக்காரங்க. யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க. கொஞ்சம் அடுத்த சீட்டில் உட்காருங்கம்மா. ” என்றேன்.
எதுவுமே சொல்லாமல் இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்தது. அதைத் தாண்டி இரண்டு இருக்கைத் தள்ளி ஒருவர் உட்கார்ந்து இருந்தார். இந்த வரிசையில் நாங்கள் மூன்று பேர் மட்டும் தான்.
எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் எழுந்து சென்றது என் மனதிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘நீ பைத்தியம்ன்னு நினைக்கிறே.அது சூழ்நிலையைப் புரிந்து. எத்தனை நாகரீகமாக எழுந்து உட்கார்ந்து விட்டது.’ என்று நினைத்துக் கொண்டேன்.
இப்படி தெளிவாக சிந்திக்கக் கூடியது ஏன் இப்படி குழந்தைத் தனமாக புத்தி பேதலித்துப் போனது என்று மனதிற்கு வேதனையாக இருந்தது.
மைய இருக்கைகளின் மூன்றாவது வரிசையில் கைக்குழந்தையுடன் தனது மகளுடனும் வந்தவர்களின் குழந்தை அழுததால் அதனை வெளியே கொண்டு சென்றுவிட்டு உள்ளே வந்த தாய் அவரது இருக்கைக்குப் போகத் தடுமாறினார். என் வரிசை முடிந்து இரண்டாவது வரிசையில் படி மாதிரியான இறக்கம் இருந்தது. படத்தைப் பார்த்துக்கொண்டே நகர்ந்து வந்து நின்றார். அடுத்த அடி எடுத்து வைத்தால் படிப் பல்லத்தில் நிச்சயமாக கால் வைத்து குப்புற விழுவதை யாரும் தடுக்க முடியாது. நான் எனது கைபேசியில் வெளிச்சத்தை அடித்ததும் அவரது இருக்கையில் அமர்ந்தார். நான் இதுபோல செய்ததை எனக்கு இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த அந்தப் பெண் பார்த்துவிட்டு என்னையும் ஒரு முறை பார்த்தது.
படம் சுவரசியமாக சென்று கொண்டிருந்தது. படத்தைப் பற்றிய விமர்சனத்தை விட அது மனிதர்களைத் துச்சமாக நினைத்து கனிம வளம் திருடும் அதிகார கும்பளுக்கும் சாமானிய கராத்தே கற்றுக்கொடுக்கும் குடும்பத்திற்குமான கதை. திரைக்கதை அமைப்பும் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்திருந்தால் படம் சலிப்பில்லாமல் சென்றது. அர்ஜூன் ஹீரோவாக இருந்தாலும் கதையின் போக்கில் யாவருமே முக்கியப் படுத்தப்பட்டது இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். அதுவே படம் சுவாரசியமாக போவதற்கு காரணமாக எனக்குத் தோன்றியது.
அர்ஜூன் மகள் வேலை பார்க்கும் அலுவலக மேலாளர் அவரது காரில் வந்து அவர் அமர்ந்திருக்கும் பின் பக்க இருக்கையில் அமர்ந்து அவரிடம் தவறாக தொட்ட போது அவர் கராத்தேயில் அடித்து நொறுக்குவார். கார் கதவுகள் மூடப்பட்டு அமர்ந்த நிலையில் நடக்கும் இந்த சண்டை இரண்டு இருக்கை தள்ளி உட்கார்ந்து இருக்கும் பெண்ணிற்கு பிடித்து இருந்தது.
‘அவன்களை விடாதே. அடித்து நொறுக்கு.அவன்களை விடாதே. அடித்து நொறுக்கு.’ என்று சொன்னது.
கடவுளே….. எந்தக் காவாலிப்பயலுகள் இதனிடம் தப்பாக நடந்தானோ. இந்தக் காட்சியை இத்தனை ஆர்வமாக சந்தோசப்படுகிறதே என்று நினைத்தேன்.
மனம் பாதித்தப் பெண்களை எப்படி இவர்களால் இப்படி செய்ய முடிகிறது என்று கோவம் எனக்கு தனிப்பட்ட முறையில் தனியாமல் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எக்மோர் என்று தான் நினைக்கிறேன். வடக்கு மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இருந்த மன வளர்ச்சி குன்றிய சிறுமியை பல கிழட்டு நாய்கள் மோசம் செய்தது உங்களுக்கும் நினைவுக்கு வரலாம். வெளியூரில் படித்த சகோதரி வந்து பார்த்து விவரங்களை கண்டுபிடித்த பிறகு தான் விசயமே வெளியே தெரியவந்தது. படு பாவிகள் நண்பர்களை எல்லாம் அழைத்து வந்திருக்கிறான்.17 பேரோ அதற்கு அதிகமோ என்ன நடக்கிறதென்றே தெரியாத அந்த குழந்தை உடல் ரீதியாக எத்தனை துன்பங்களை அடைந்திருக்கும். அந்தத் தாய் டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிட்டு இருக்கிறாள். அதனால்தான் அவளுக்கு தண்டனையாக வாரத்தில் ஒரு நாள் மன நலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் வேலைகள் கொடுத்திருக்க வேண்டும் என்று அப்போது நினைத்தேன். அந்த நாய்களை கண்ணாடி கூண்டு வேனில் பொது இடங்களில் ‘தவறு என்பதை உணர்ந்து விட்டேன்.’என்று மலத்தை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பலவிதமான கோபமான தண்டனைகள் மனதிற்குள் அப்போது இடைவிடாமல் வந்த வண்ணம் இருந்தது.
படத்தின் இடைவேளையில் செவன் அப் அல்லது ஸ்பிரைட்டுடன் பாப்கார்ன் சாப்பிடுவது எனக்கும் எனது மகளுக்கும் விருப்பமான ஒன்று. நாம் வாங்கி வந்து சாப்பிடும்போது இந்தப் பெண் வேடிக்கை பார்க்குமே என்ன செய்வது என்ற அடுத்த சிந்தனை வந்துவிட்டது. ஏதாவது வாங்கிக்கொடுப்போம் என்று முடிவு எடுத்து படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
ஆபீஸிலிருந்து கீர்த்தனா போன் செய்தார். ‘செல்வப் பிரியாவிற்கு தேர்தலால் தள்ளி வைத்த கல்லூரி தேர்வு இன்று நடப்பதால் இரண்டு நாட்கள் வரமாட்டார்’ என்று சொன்னார். என்னிடம் சொல்லிவிட்டதாக நான் சொன்னேன். ‘ஷாலினியிடம் இதை சொல்லிவிடுங்கள்.அவர் ஏதாவது லீவு சொல்லி விடப் போகிறார்’ என்றேன். ‘அவருக்கு தெரியும் சார்.’ என்றார். அநேகமாக நான் தியேட்டரில் இருப்பதை அவர் யூகித்திருப்பார். வெளியே சென்று பேசி இருக்கலாமோ என்று தோன்றியது. படக்காட்சி மனதை இழுத்திவிட்டதால் எழுந்து செல்ல இயலாமல் போனது.
ஒரு முறை நானும் மகளும் அன்னபூர்ணாவில் படம் பார்த்த போது பாட்னர் போன் செய்தார்.நான் வெளியே சென்று பேசி முடித்து உள்ளே வந்து உட்கார்ந்தால் படத்தின் இடைவேளை வந்துவிட்டது. இதை வீட்டில் மகள் சொன்னதும் ‘புள்ளைய தனியாவிட்டுட்டு அவ்வளவு நேரம் என்னப் பேச்சு. படத்துக்கு வந்திருக்கிறேன்னு சொல்ல வேண்டியதுதானே.’என்று வீட்டில் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அது தேவை இல்லாமல் இப்போது மின்னல் வெட்டுவது போல நினைவுக்கு வந்து போனது.
படம் சுவரசியமாக க்ரைம் நாவலைப் போல நகர்த்தப்பட்டு இடைவேளையை முடித்து இருந்தார்கள்.
மறுபடியும் அந்தப் பெண்ணிற்கு எதை வாங்கிக் கொடுப்பது, எதுவும் வாங்காமல் போனால் நாம் சாப்பிடுவதைத் கேட்டால் என்ன செய்வது. அந்தக் குழப்பத்தில் கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்தேன். முகத்தைக் கழுவ வாஷ் பேஷனில் கை கழுவிய போது பக்கத்தில் ஒரு பையன் கையைக் கழுவ காத்து நின்றான்.எனக்கு நேரம் எடுக்கும் என்பதால் அவனை கழுவுவதற்கு நகர்ந்து வழி விட்டேன். அவன் கையைக் கழுவி சென்ற பிறகு நான் முகம், தலை, கைகளைக் கழுவியதும். ஒரு புத்துணர்வுக்கு தள்ளப்பட்டிருந்தேன். கழிப்பறை சென்றாலே இதை நான் வழக்கமாக்கி வைத்திருந்தேன். திரையரங்குகளில் இதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அந்தப் புத்துணர்வை நான் அனுபவித்துப் பழகியதால் அதனை தொடர்படியாக நான் விடாமல் செய்து கொண்டு இருக்கிறேன்.
நான் வெளியே வரும் போது அந்தப் பெண் யாரோ இரண்டு பேரிடம் கேண்டீனுக்கு முன்பாக எதையோக் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் அந்தப் பக்கம் திரும்பாமல் செவன் அப்பும் , பாப்கார்னும் டோக்கன் வாங்கினேன். அந்தப் பெண்ணுக்கு முறுக்கு பாக்கெட் வாங்கலாமா என நிற்கும் வரை யோசித்து விட்டு பிறகு வாங்காமலையே வந்து விட்டேன். அந்தப் பசங்க தான் பேசிக் கொண்டு நின்றார்கள்.அந்தப் பெண்ணைக் காணவில்லை. ஏனோ எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.
திரையரங்கு உள்ளே எனது இருக்கையில் அமரும்போது கவனித்தேன். அந்தப் பெண் ஒயர்க் கூடையை தண்ணீர் பாட்டிலோடு எனது இருக்கையின் வலது கைப்பிடியோரம் பக்கத்து இருக்கையில் வைத்து இருந்தது.
அந்தப் பை சாய்ந்து இருந்த விதம் என்னை ஏதோ செய்தது. ஏன் தாயே…. இத்தனை பேரில் என்னை மட்டும் நம்புகிறாய். உன் வாழ்க்கையில் நடந்த கொடுந்துயர் என்ன.’ அதை இதனிடம் எப்படிக் கேட்பது. திருமணத்தாலி இருக்கிறதா என கவனிக்க மறந்துவிட்டேன். ஒரு வேளை ஆண்டவன் இவர் படம் பார்க்கத்தான் இன்று இங்கு இழுத்து வந்தானா. ஏனோ அளவிட முடியாத இரக்கம் அவர் மேல் எனக்கு வந்தது.
“சார்.நீங்க இடது பக்கம் கொஞ்ச கொஞ்சமா முன்னாடி இருக்கிறவர் சாயுறதுனால நீங்களும் சாய்ஞ்சு உட்கார்றீங்க. நானும் சாய்ஞ்சு இடுப்பு வலிக்குது சார். அவரை நேராக குனிந்து உட்கார சொன்னால் சரியாகிவிடும்.” என்று எனது முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவரிடம் சொன்னேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து சிரித்தார். என்னைப் போல உயரம் குறைவானவர்கள் திரையரங்குகளில் வழக்கமாக சந்திக்கும் பிரச்சினை தான். இப்போது இருக்கும் திரையரங்கு ஓனரின் ஸ்லைடைப் படித்ததும் எனக்கு மனதிற்குள் பல சிந்தனைகள் ஓடியது. அடுத்தடுத்த விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அவரை வரக் காணோம். எங்கு போயிருப்பார். அந்தப் பையன்களிடம் கழிவறை எங்கு இருக்கிறது என்று கேட்டு இருக்கலாம். அங்கு வழுக்கி எதுவும் விழுந்துவிட்டார்களா. வேறு ஏதாவது நடந்திருக்குமா. தினம் செய்திகளில் வருவதுபோல ஏதாவது நடந்தால் எனக்கு கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் போது தான் தெரியும் என்று சொன்னால் நம்புவார்களா. இந்தப் பையில் அப்படி என்னதான் இருக்கும். கைபேசியை எடுத்து புகைப்படம் எடுக்கலாம் என்றால் வெளிச்சம் இல்லாததால் இரண்டு முறை முயன்றும் தெளிவு இல்லாததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அப்போது எங்கள் வரிசையில் கடைசியாக அமர்ந்து இருந்தவர் வந்துவிட்டார். நான் கால்களை ஒடுக்கி அவருக்கு வழிவிட்டேன்.
எனக்கு என்னவோ அந்த ஒயர் கூடையை எட்டிக் கூர்ந்து பார்கக்கூட சங்கடமாக இருந்தது.
எனது நண்பர் மற்றும் எங்களது பாட்னர் ஆரம்ப காலத்தில் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘ஒருவர் வீட்டின் போர்ட்டிக்கோவிற்குள் கூப்பிட்டால் நாம் கேட்டுக்கு வெளியே நின்று பேச வேண்டும். வீட்டிற்குள் கூப்பிட்டால் போர்ட்டிக்கோவில் நின்றே பேச வேண்டும். அறைக்குள் கூப்பிட்டால் ஹாலில் இருந்தே பேச வேண்டும். உறவுகளைப் பேணுவதில் ஒரு எல்லைக்கோட்டை நாம் வைத்துக்கொள்ள வேண்டும்.’ என்று அவரின் நெருங்கிய நண்பர் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது சொன்னார். இன்று வரை உறவுகளைப் பேணுவதற்கு அந்தசூத்திரம் பேருதவியாக இருக்கிறது.
அவரின் பைதான் அவரின் வீடு. அவரின் உலகம். அதைப் பார்ப்பது. அதை ஆராய்வது அருவருப்பாக இருந்தது. இதுவே மன நலம் நன்றாக உள்ளவராக இருந்தால் பையைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுமா.
கடவுளே…. அவருக்கு ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும். எனக்கு ஏன் இன்று இப்படியாக இருக்கிறது. எல்லோரையும் போல நானும் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் வந்து தொலையவே இல்லை. மனம் கழிவிரக்கத்தால் அவருக்காக வருத்தம் கொண்டது.
தோழர் லசபா வீட்டில் கிளம்பும்போதே போனில் அழைத்திருந்தால் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ. நாம் தான் செய்கிறோம் என்றாலும் ஆழ்ந்து யோசித்தால் நாம் இயக்கப்படுவது பலமுறை தெரியவரும்.
படம் ஆரம்பித்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லை. முன் இருக்கையில் இருந்தவர் திரும்பி என்னைப் பார்த்து ‘அவுங்க போயிட்டாங்க. நீங்கள் சீட்டு மாறி உட்கார்ந்து பாருங்கள் சார். உங்களுக்கு மறைக்காது.’என்று சொல்லி விட்டுப் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் அந்தப் பெண் தியேட்டரின் வெளிக்கேட்டைத் திறக்கச் சொல்லி போனதைப் பார்த்து இருக்கலாம். அவரின் ஒயர் கூடை இருப்பதை ஏனோ நான் சொல்ல மறந்து போனேன்.
படத்தில் எனக்கு மனம் லயிக்கவில்லை. பக்கத்தில் அவர் உட்கார்ந்தபடி இருக்க விட்டிருந்தால் முழு படமும் பார்த்து இருப்பாரோ. இதே போலத் தொந்தரவு செய்கிறார் என்றுதான் டிக்கெட் கிழித்தவர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லி இருப்பாரோ.
மைய இருக்கையின் தம்பதிகளின் பெண் குழந்தை எனக்கு முன்பு உள்ள இருக்கையை தட்டுத் தடுமாறி வந்து பிடித்து நின்றது. அடுத்த அடி எடுத்து வைத்தால் படியில் இடறி விழுந்துவிடும். மறுபடியும் கைபேசி வெளிச்சத்தை அடிக்க அவரின் அப்பா எழுந்து வந்து அழைத்துச் சென்றார். இப்போது அவர் கைக்குழந்தை தூக்கிக் கொண்டு பாதையில் நின்றது படம் பார்ப்பதை மறைத்தது. எழுந்து சென்று சொல்லலாமென நினைக்கும்போது அவர் திரையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார்.
ரின் ஜாய் போன் செய்தான். அவன் மனைவியிடம் பேசிவிட்டு தான் எனக்கு அழைக்கிறான் என்பது தெரியும்.படம் பார்க்கும் வரும் அழைப்புகளால் நான் அசௌகரியப்படுவேன் என்பதும் அவனுக்குத் தெரியும்.நான் திரையரங்குகளில் எடுக்கும் அழைப்பில் வீட்டார்களும் இருப்பதால் அவன் இந்த விளையாட்டை செய்கிறான்.
“எங்கப்பா இருக்கீங்க.”
“படம் பார்த்துக்கிட்டு இருக்கேன். நல்லா இருக்கு நீயும் பாரூ.”
“என்ன திடீரென்னு”
“அது அப்படித்தான்.”
அவன் லைனை கட் பண்ணி விட்டான்.
நிவேதனா பேசி இருந்தால் ஏதாவது கலாய்த்து இருப்பார்.
‘அப்பா… நானூ… .’ என்று முதலில் கத்துவார்.
இவைகளுக்கு இடையில் நான் படத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். படத்தில் எனக்குச் சில கருத்து முரண் இருந்தாலும் போரடிக்காமல் படம் பார்க்க வைத்தது. பாடல்களும் அதற்கு வெளிநாட்டு லொகேசனும் என்று விரசம் கூட்டாமல் கதையோடு கமர்ஷியலாக இயக்கிய இயக்குனரைப் கண்டிப்பாக பாராட்டலாம். சண்டைக் காட்சிகள் அனைத்தும் வெறுப்பாக்காமல் இருந்தது.
பக்கத்தில் இருக்கும் ஒயர் கூடையை தியேட்டர் மேனேஜரிடம் சொல்லலாமா. அவர்கள் ‘நீங்கள் எதுக்கு சார் டிக்கெட் எடுத்துக் குடுத்தீங்க.’ என்பார்கள். அதற்குள் அவர் என்ன வைத்து இருக்கிறார் என்று வேற எனக்குத் தெரியாது. நாம் அவர்களிடம் சொல்லி நல்லவன் என்று பெயர் எடுக்கும் முட்டாள் தனத்தைக் கைவிட்டேன்.
இந்த ஒயர் கூடையை அவர் இடது கையில் தொங்கவிட்டு நடந்து வந்தது, நெஞ்சில் அணைத்துக் கொண்டு இருந்தது என்று சில காட்சிகள் படத்தோடு எனக்குள் வந்து போனது.
படம் கிளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு முறை மீண்டும் அந்த ஒயர் கூடையைப் பார்த்தேன். அது உயிரோடு என் ஆதரவைத் தேடி நிற்பதாக சோகம் கூட்டியது.
படம் முடிந்ததும் நான் எழுந்து வந்து பைக் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். டோக்கன் கொடுத்தப் பெரியவரைக் காணவில்லை. நான் வெளியே வந்ததும் மதிய வெயிலும் அனலும் வேர்த்துக் கொட்டியது.
அந்தப் பெண் இருட்டு வெளிச்சத்தில் என்னை தேடிக் கண்டுபிடித்து பக்கத்தில் வந்து அமர்ந்து விட்டது. எங்காவது என்னைப் பார்த்து ‘அண்ணா என் பையைக் கொடுங்க.’ என்றாள். கடவுளே… நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேன்.
‘தாயே… நீ நினைப்பது போல நான் நல்லவன் இல்லை. என்னை ஏன் நம்பினாய் அம்மா. நீ எங்கிருந்தாலும் என்னை மன்னித்துவிடு’ என்று நினைத்த போது கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
வழக்கம்போல தேர்ந்த நடிகனாக பைக்கில் இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவி தலையை விரல்களால் கோதிக் கிளம்பிவிட்டேன். வழியில் பார்ப்பவர்களுக்காகவும் இங்கு நான் வாழ வேண்டியதாக இருப்பதால் என் முகமூடியை அழகாக்கி ஒட்டிக்கொண்டேன்.
***
–ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- மழை புராணம் – 35
- அட!
- தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி
- கவிதைகள்
- சந்திப்பு