This entry is part 1 of 7 in the series 26 ஜூலை 2026


“பரசு இனி வரமாட்டான். போகும்போதுகூட கஷ்டப்படாம போயிட்டான். நல்ல
சாவுன்னா இப்படித்தான் வரும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம, தன்னையும்
கஷ்டப்படுத்திக்காம சாவு வருதுன்னா சும்மாவா!” என்று வைதியலிங்கம் கனத்த
குரலில் ராஜுவைப் பார்த்துச் சொன்னார்.
ராஜு பரசுவின் ஒரே மகன். கல்லூரி முடிந்ததும் வெளிநாடு சென்றவன்;
அவ்வப்போது தாய், தந்தையைப் பார்ப்பதற்கு வருவது உண்டு.
அவன் அம்மா மீனா போன் போட்டு, “அப்பாவுடைய நிலைமை ரொம்ப
கவலைக்கிடமா இருக்குடா. ஒருமுறை வந்து பார்த்துட்டுப் போடா…” என்றாள்.
அதைச் செவிசாய்த்த ராஜு உடனே டிக்கெட் புக் செய்தான். லீவு போட்டு, விசா
ஏற்பாடுகளை முடித்து, அமெரிக்காவிலிருந்து வர ஒரு வாரம் ஆனது.
அவன் தந்தையோடு கொஞ்ச நாள் இருக்க நினைத்தான். ஆனால் அதற்கும்
கொடுப்பினை இல்லை. ஊர் வந்து சேர்ந்த ஒரு வாரத்திலேயே பரசுவை கடவுள்
அழைத்துக்கொண்டார்.
சாவுக்கு வந்தவர்கள் பலர் ராஜுவையே பார்த்து முணுமுணுத்தனர். “அப்பா
தவறியிருக்காரு. இவனுக்கு சோகம் கூட இல்லையே!” என்று பேசிக்கொண்டனர்.
வைதியலிங்கத்தால் அதைத் தாங்க முடியவில்லை. அவர் ராஜுவிடம்,
“ஏண்டா ராஜு, என்னதான் இருந்தாலும் பரசு உன் அப்பாதானடா!” என்றார்.
“ஆமாம் மாமா. யாரு இல்லேனா. அவர் என் அப்பாதான்.”
“இங்க வந்தவங்க உன்னைப் பற்றித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க.”
“என்னைப்பத்தியா?”
“உன்கிட்ட அப்பாரு இறந்த துக்கமோ வருத்தமோ தெரியலன்னு பேசுறாங்க.”
“இதென்ன வம்பாப் போச்சு! என்னோட துக்கத்தை நான் மத்தவங்களுக்கு காட்டியே
ஆகணுமா?”
“நீ சொல்லறதும் சரிதான்,” என்றார் வைதியலிங்கம்.
“ஆனா இந்த கிராமத்து ஜனங்களுக்கு எங்க புரியப்போகுது?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மீனா வந்து,
“வைதீ, வரவேண்டியவங்க எல்லாருக்கும் சொல்லீட்டையா?” என்றாள்.
“அக்கா, சொல்லியாச்சு. ஒவ்வொருத்தரா வந்துக்கிட்டிருக்காங்க.”

“இவனுக்கு யாரையும் அவ்வளவா தெரியாது. நீ அவனோடவே இரு.”
“அத நீ சொல்லணுமா! நீ போயி ஆகவேண்டியத பாரு.”
“ராஜு, டீ, காபி, தண்ணி ஏற்பாடு பண்ணியாச்சா?”
“நான் ஹோட்டலுக்குப் போனப்போட்டு சொல்லிட்டேன்.”
“சரி, நீங்க இரண்டு பேரும் பார்த்துக்கோங்க,” என்று சொல்லிவிட்டு மீனா மீண்டும்
கணவன் உடலருகே போனாள்.
சிறிது நேரம் நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்திருந்த ராஜுவுக்கு பத்து வருடத்துக்கு
முன் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
வெளிநாட்டுக்குப் போக பணம் வேணும்; வங்கியில ரொக்கமும் இருக்கணும்;
கையிலயும் கொஞ்சம் இருக்கணும். இதுதான் பரசுவுக்கும் ராஜுவுக்கும் இடையில்
சின்ன மனத்தாங்கலை ஏற்படுத்தியது.
“என்னால முழுசா தர முடியாதுன்னு சொல்லலையே. என் சக்திக்கு மீறித்தான் தரேன்.
ஒன்றரை சென்டு நிலத்த வித்துத்தான் இதைச் செய்றேன். அவன் சொந்தக்காலுல
நிற்கணும்னு சொல்றான். நிக்கட்டும்; முன்னுக்கு வரட்டும்,” என்றார் பரசு.
“புள்ள முதமுதலா வெளிநாட்டுக்குப் போறான். நல்ல விதமா அனுப்பணும்னு
தோணலையா?” என்றான் ராஜு.
“ஏண்டா, நல்லா படிக்க வச்சிருக்கார். நிலத்த வித்துப் பணத்துக்கு ஏற்பாடு
செஞ்சிருக்கார்,” என்றாள் ராஜுவின் அம்மா மீனா.
“இந்த வீட்டையும் அடமானம் வச்சு பணம் தரணுமா? நாங்க எங்க போறது?”
“நீங்க வீடு வைக்க வேண்டாம். மீதி நான் பார்த்துக்கிறேன்.”
“எப்படிடா செய்வ?” என்றார் பரசு.
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?”
“அப்பன் கிட்ட பணம் வேணுமாம். காரணம் கேட்டா சொல்ல மாட்டானாம். என்ன
நியாயம்?” என்றார் பரசு.
“நீங்க துருவித் துருவி கேட்கிறதாலச் சொல்றேன். வேலை செய்யிற இடத்துல
மாலாவைக் காதலிக்கிறேன். அவங்க வீட்டுக்கும் தெரியும். மீதி பணத்தை அவங்க
தரப்போறாங்க.”
“என்னடா! தலையில குண்டைத் தூக்கிப் போடுற. காதலிக்கிறேன்னு
சொல்லுற. புறவு எப்ப கல்யாணம் செய்றதா உத்தேசம்?”

“அதனாலத்தானே இப்ப சொல்லுறேன்.”
“ஏண்டி மீனா, இவன் எப்படி பேசுறான் பாரு!”
“எனக்கு யாரும் சொல்லித்தரல. நான் சுயமா சிந்திச்சுதான் முடிவு எடுத்தேன்.”
“கல்யாணமாவது இங்க நடக்குமா? இல்ல அந்தப் பொண்ணை அங்க கூட்டிக்கிட்டுப்
போய் கட்டிப்பானா?” என்றார் பரசு.
“முதல்ல நான் அங்க போய் ஆறு மாதமோ, ஒரு வருஷமோ நல்ல
வேலையில அமர்ந்த பிறகு, பத்து நாள் லீவுல வந்து இவளைத்
திருமணம் செஞ்சுட்டுப் போகலாமுன்னு நினைக்கிறேன். வர்றதுக்கு
முன்னமே சொல்லுறேன். எல்லா ஏற்பாடும் செஞ்சுடுங்க.”
“நமக்கு இருக்கிறதோ ஒரு புள்ள. அவனுக்கு விருப்பம்னா ஏன் குறுக்கே நிற்கணும்?”
என்றாள் மீனா.
அவ்வளவும் நினைவில் ஓடியபோது, “அண்ணே, காபி எடுத்துக்கங்க,” என்ற குரல்
கேட்டு ராஜு சுயநினைவுக்கு வந்தான்.
அவர் கொடுத்த காபியை வாங்கி மெதுவாகக் குடித்துவிட்டு, வேண்டிய காரியங்களை
மாமாவிடம் கேட்டுக்கொண்டான்.
அப்போது மீனா மீண்டும் வெளியே வந்து,
“என்னடா, என்னமோ மாதிரி இருக்க?” என்றாள்.
“ஒண்ணுமில்ல. இப்ப அதெல்லாம் பேசுற காரியமில்ல. மணி மூணு
ஆகிடுச்சு. இப்ப ஆரம்பிச்சாதான் இன்னும் இரண்டு மணி நேரத்துல
எல்லா சாங்கியமும் முடிஞ்சிடும். அப்புறம் காட்டுக்குப் போகணும்.”
“நேத்துவரைக்கும் என்னோட இருந்தவரு, இன்னைக்கு இல்ல. அதை ஏத்துக்க
கொஞ்ச காலம் ஆகும். ஆனா வேற வழி இல்லையே. நேரமாச்சுன்னா நடக்க
வேண்டிய காரியத்தை விரசா முடிங்க,” என்றாள் மீனா.
எல்லா சடங்கையும் முடித்தபின், ஆண்கள் மட்டும் பரசுவை ஆம்புலன்ஸில்
ஏற்றிக்கொண்டு மின் தகன இடத்துக்குப் போனார்கள். அங்கு இறுதிச்
சடங்குகளையும் ராஜு செய்தான்.
பரசுவின் நெஞ்சில் சூடத்தை வைத்து ஏற்றினார்கள். நெருங்கிய சொந்தம் எல்லாரும்
ஒரு முறை பார்த்து, கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றனர்.
ராஜுவின் கண்கள் குளமானது. அதுவரை வராத கண்ணீர் இப்போது வழிந்தது.

“என்னதான் மனத்தாங்கல் இருந்தாலும், அவரு என்ன அப்பாரு. எனக்கு உயிர்
கொடுத்தவரு. பல நேரங்களில் ‘அப்பா இருக்காரு’ன்னு நினைப்பே என்னை
ஓடவைத்தது. ஆனா இனி…?” என்று நினைத்தான்.
அவனது கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டு கண்ணீர் பரசுவின் பாதங்களின்
மீது விழுந்தன.
–பாலமுருகன்.லோ✍️

Series Navigationதிருஷ்டாங்கப் பொருந்தல்.