-சுந்தரிமணியன், இந்தியா
ஆவணி மாதம் பெய்த மழையில் காற்று குளிர்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு
தென்றலாகத் தவழ்ந்து வந்தது. மழையின் பொலிவில் மரங்கள் எல்லாம் தலையை ஆட்டித் தாளம்
தட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீரை மழைநீராய் அள்ளித் தெளித்தன. இலைகளில் சொட்டிய
நீர்த்துளிகள் பூமித்தாயின் மகிழ்ச்சிக்கு ஆசீர்வாதம் செய்ததுபோல் உதிர்ந்தன. பூக்கள் எல்லாம்
வாசனைபரப்பும் அந்திமாலையில் மகிழினிக்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சி மனதில்
ஆர்ப்பரித்தது.
கல்லூரிப் படிப்பை முடித்திருந்த மகிழினி, அடுத்த ஆய்வுப் படிப்பை பயிலக் கனவு
கண்டிருந்தாள். கல்லூரியின் முடிவில் தோழிகள் எல்லோரும் பிரியும் போது பலவிதமான
கனவுகளைச் சுமந்திருந்தனர். இருந்தாலும் டிகிரியை முடிக்கும்போது வைத்த பிரிவு உபச்சார
விழாவிலேயே தோழி மலர்விழிக்குத் திருமணம் என்று அறிந்ததும் மகிழினிக்குக் கோபம் ஒரு
பக்கமும், இன்னொரு பக்கம் கலக்கமாகவும் இருந்தது. அவளது பெற்றோரின் மேல்
கோபமாகவும் அதை எதிர்க்காத மலர்விழியின் மேல் வருத்தமும் அலைபாய்ந்தது. முடியாதென்று
மறுத்திருக்கலாமே எனக் கேட்டபோது தனது அத்தைமகன் வீட்டில் வற்புறுத்துவதால்
மறுக்கமுடியவில்லை என்றாள். தன்னையும் பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தினால் என்ன
செய்வது? என்ற கேள்வி அவள் முன் எழுந்து அவ்வப்போது கலங்கடித்தது.
எவ்வளவுதான் மகிழினி வாயாடித்தாலும் அவள் அப்பாவின் முன் மகுடிக்குக் கட்டுப்பட்ட
பாம்பாகிவிடுவாள். எப்படியாவது அரசுத் தேர்வுக்கோ, முடியாவிட்டால் ஆய்வுப்படிப்பையோ
தொடரவேண்டும் என்பது அவளது பெருங்கனவு. அது கனவாகவே போய்விடக்கூடாதே என்பது
பெருங்கவலையாக இருந்தது. இன்னொரு பக்கம் தான் தேர்ந்தெடுத்துப் படித்த படிப்பிற்கான
வேல்யூவும் குறைந்துவருகிறது. அதனால் ஆய்வுமேற்படிப்பைத் தொடரலாமா என்ற குழப்பமும்
அவளுக்குள் இருந்தது.
மகிழினியின் தந்தை அவள் நெட் எக்ஸாமிற்குப் பணம் கட்டவேண்டும் என்று
சொன்னவுடன்,
“எக்ஸாம் எழுதுறோதோடு நிப்பாட்டிக்க. இன்னும் ஐந்துவருடம் உன்னை படிக்கவச்சா
வயசு போயிரும். கல்யாணம் செய்ய நாளாயிடும். பேசாம போட்டித்தேர்வுக்குப் படி” என்று
போட்ட கண்டிஷனை மறுத்து,
“எக்ஸாம் முதல்ல எழுதுறேன். மத்தத அப்புறம் பாக்கலாம்பா” என்றாள் கெஞ்சலாக,
“சரி” என்று அப்பா முடிக்கவும்தான் மகிழினிக்கு நிம்மதியாக இருந்தது. இருப்பினும் நெட்
எக்ஸாமில் மார்க் வாங்காவிட்டால் போட்டித் தேர்வுக்குத் தயாராக வேண்டியதுதான் வேறு
வழியில்லை என்று முடிவு செய்தாலும் அப்பா கல்யாணத்திற்குத் திடீரென்று ஏற்பாடு செய்தால்
என்ன செய்வது என்ற கவலை கரையான் போல மனதை அரித்துக் கொண்டிருந்தது.
அண்ணனுக்குப் பார்க்கிறார்கள் என்று நிம்மதியாக இருந்தவளுக்கு, அவனுக்கு
அமையாவிட்டால் பேசாமல் இவளுக்கு முடித்துவிடலாம் என்று அம்மாவிடம் அப்பா பேசிய
வார்த்தை ஒரு விதத் தவிப்பை மகிழினிக்குக் கொடுத்தது. ஆண்டவா இந்த அண்ணனுக்குப் பெண்
சீக்கிரம் அமைந்து, என்னை இந்தத் தொல்லையிலிருந்து விடுபட வை என்று வேண்டிக்
கொண்டாள்.
இரண்டுநாள் கழித்து அப்பாவின் ஒண்ணுவிட்ட அண்ணன் போன் செய்திருந்தார். தம்பி
சிவகாசி பக்கத்துல ஒருத்தர் நல்லா ஜோசியம் சொல்றாரு. நம்ம வைபவ்க்குப் போய் பாக்கலாமா
என்று கேட்க அப்பாவும் மகிழ்ச்சியாக, சரிண்ணே எப்ப வரணும்ணு சொல்லுங்க வந்திருவோம்
என்றார். ஞாயிற்றுக்கிழமை வாக்கில் பெரியப்பா அப்பாயின்மெண்ட் வாங்கி அப்பாவை
வரச்சொல்ல அப்பாவும் அம்மாவும் கிளம்பிப் போயினர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் திரும்பிய அப்பாவையும் அம்மாவையும் ஆர்வமாக
எதிர்கொண்ட மகிழினி ஜோசியத்தின் மீது துளிக்கூட நம்பிக்கையற்றவள் எனினும் அப்பா
ஜோசியர் சொல்வதைக் கேட்பார் என்பதால்,
“அப்பா ஜோசியர் என்ன சொன்னாரு” என்றாள் ஆர்வம்மிக
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல. அண்ணனுக்குக் குருதிசை நடக்கறதால
திருமணம் நல்லபடியா முடியும் பாருங்கன்னு சொன்னார். உனக்குத்தான் இன்னும் மூணு
வருசத்துக்குப் பாக்கவேண்டாம் அதுக்கப்புறம் பாருங்க. அப்பதான் நல்லா இருக்குன்றார்”
என்றதும்
“அப்பாடி நல்லதாப் போச்சு. ஜோசியர் சொன்னது சரியாத்தான்பா இருக்கும்.
அண்ணனுக்கு அவர் சொன்னது எல்லாம் சரியாத்தானே நடந்திருக்கு. அதனால அவர்
சொன்னபடி எனக்கும் சரியாத்தான் இருக்கும்” என்றாள் மகிழ்ச்சியோடு,
“உனக்கென்ன நீ ஜாலியாய் இருப்ப. உன்னைய கட்டிக் கொடுக்கறதுக்குள்ள நாங்கல்ல
கவலைப்படணும்” என்றார் கவலையோடு,
“அப்பா கவலைப்படாதீங்க. அதுக்குள்ள நான் போட்டித் தேர்வு எழுதி ஒரு வேலைக்குப்
போய்ட்டுத் திருமணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.
“அதுவும் சரிதான்” என்றார் அப்பா. மகிழினி அந்த ஜோசியர் குடும்பத்தோடு நல்லா
இருக்கணும் என மனதினுள் வாழ்த்தினாள்.