
நிலவன் மூங்கில் கூடை நிறைய ஜாதி மல்லியை பறித்து வந்து வாழை நாரை மெல்லியதாக கீறி எடுத்து நெருக்கமாக தொடுக்க ஆரம்பித்த அழகை கண்கொட்டாமல் அருணா பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலவன் தனது சிறுவயது நிகழ்வுகளில் மூழ்கி யிருந்தது; அவன் மௌனமாக இருப்பதிலிருந்தே தெரிந்தது. இது மாதிரி நளினமான வேலைகளை அவன் தன் அம்மா பத்மினியிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தான். கோலம் போடுவது அவனுக்கு மிகவும் லாவகமாக வரும். நிறச் சேர்க்கையின் நுணுக்கங்களில் அவனது மன வளம். நன்கு புலப்படும். அவளது புடவைகளை அவன்தான் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பான். ரவிக்கைக்கையின் கழுத்து வளைவிற்கும் கைக்கும் முதுகிற்கும் அவன் வரைந்து கொடுக்கும் வடிவுகளின் வரைவுகளைப்பார்த்து தையல்காரர் அசந்து விடுவார். சேலை பார்டரை ஒட்டி அவன் வரையும் வடிவுகள் அருணாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். விதவிதமாக இனிப்புகள் செய்து அசத்துவான். கை முறுக்கு செய்யும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒரு விரிசல், பிரிசல் இல்லாமல் ஒரே சீரான நெளிகளுடன் கூடிய முறுக்கை சாப்பிட மனமே வராது. வாயில் போட்டதும் மொறு மொறு முறுக்கு கர கர சத்தத்துடன் வாயில் போட்டவுடன் கரைந்து விடும்.
அவன் அம்மாவோடு சிறுவயதில் இருந்தது தான். கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போதே அவன் அம்மா காலமாகி விட்டது; அவனுக்கு பெருத்த சோகம். இத்தனைக்கும் அவன் பள்ளிப் படிப்பையே விடுதியில் தங்கி படித்தவன்.தான். விடுமுறையில் வரும்போதெல்லாம், அம்மாவோடு தான் இருப்பான். தன்னொத்த பிள்ளைகளுடன் விடுதியில் இருப்பதால்; வீட்டில் இருக்கும் நேரத்தில் எல்லாம் அம்மாவுடன்தான் இருப்பான். ‘அம்மா கோண்டு’ என்ற பட்டப் பெயரிட்டு, அவனை அவனுடைய அண்ணனும் சிநேகிதர்களும் கூப்பிட்டது, அவனுக்கு சந்தோஷத்தைத் தான் தந்தது.
அவன் அப்பாவுக்கு இதெல்லாம் கொஞ்சமும் ரசிக்கவே இல்லை. “என்ன ! எப்ப பார்த்தாலும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்கே! அவள் முந்தானையைப் பிடிச்சுட்டு சுத்தறியே;வெக்கமாயில்லையா; உனக்கு?” போய் வெளியே பசங்களோடு பம்பரம் கிட்டிப்புள் பச்சை குதிரை எல்லாம் விளையாட மாட்டாயா?” என்று கேட்பார். “அம்மா கூட இருப்பதில்; என்னப்பா.எனக்கு வெக்கம்?”என்று கேட்கத்தான் நினைப்பான்.அம்மாவின் கண் ஜாடை பார்த்து.மௌனமாகி விடுவான்.
“இல்லேப்பா! நான் ஹாஸ்டலில் பசங்களோடுதான் விளையாடுகிறேன். இங்கே வந்தால் தானே அம்மா கூட இருக்க முடியும்.” என்ற இவன் பதில், அவர் வாயை அடைத்துவிடும்; ஒன்றும் பேச முடியாது அம்மா வேறு,”குழந்தை பாவம்! ஒண்ணும் சொல்லாதீங்க” என்று பரிந்து கொண்டு வர: அப்பா மேலும் ஏதும் பேசாமல் நகர்ந்து விடுவார். இதெல்லாம் பற்றி நிலவன் அருணாவிடம் பல முறை சொல்லியிருந்தான்.
அவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நிகழ்ந்த ஒரு சம்பவம், அவனை திடுமென பெரியவனாக்கியது. அந்த முறை விடுமுறையில் வரும்போது, ஊரில் எல்லா பெண்களும் வயர் கூடை பின்னுவதில் மும்முரமாக இருந்தார்கள். அவனுடைய அம்மாவும் அதில் ஆர்வமாக இருக்க; நிலவனும் அதை கற்க முயன்று கொண்டிருந்தான். அன்று அவன் அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும், மிகவும் பெருமையாக தான் பின்னிய கூடையை அவரிடம் காண்பித்து, ‘அப்பா! காய்கறி வாங்க கூடை பின்னியிருக்கேன், பாருங்க! ‘ என்று கருநீலத்திலும், பளீரென பச்சைநிறத்திலும் மின்னிய, அந்தக் கூடை, அவருக்கு ஏன் அத்தனை கோபமூட்டியது, என்று, அவன் அன்று அறிந்திருக்கவில்லை. “இனி ஒரு தரம் இந்த வீட்டில், நீ இப்படி பொண்ணுங்க செய்யும் வேலைகளை செய்ய, நான் பார்க்கக் கூடாது. இதுதான் கடைசி முறை. ஆண் பிள்ளையாய் லட்சணமாய் இரு. பொண்ணுங்க கூட சுத்திக்கிட்டு இருந்தே; அவ்வளவுதான்.”
என்று காட்டு கத்தலாக கத்தியவர்; அம்மாவைப் பார்த்து, “அவனைச் சொல்லி என்ன பயன்? உன்னைத்தான் சொல்லணும்.”என்றபடி, தன் இடது கையால் அம்மாவின் தலை முடியைப் பிடித்தவர் வலது கையால் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டதில், நிலவன் தரையில் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தான்.
அப்பா மீதிருந்த பயத்தில், அன்றிலிருந்து அவன் இம்மாதிரி கலைகளிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டான்.அதற்கப்புறம் அவன் கணினியியல் பொறியாளர் ஆனதும்; அருணாவை காதல் மணம் புரிந்ததும் வேறு தனி கதை. அப்பா அவன் காதலுக்கு எதிராக நில்லாதது. அவனுக்கு, இனிதான ஆச்சரியமாக இருந்தாலும், ‘அது ஏன்; என, அவனுக்கு விளங்கி இருந்தது.
இப்போது அவன் விதவிதமான கணினி விளையாட்டுகளை, வடிவமைப்பு செய்யும் நிறுவனத்தில் முதன்மை வடிவமைப்பாளராக இருக்கிறான். கற்பனை ஊற்றுக் கண்ணை திறக்கும் வன்மை: அவைகளை காட்சி படுத்தும் வித்தை; இதற்கெல்லாம் அடித்தளமிட்டது; அவன் அம்மாதான். இன்று அவள் இருந்தால், தன்னுடைய வேலையில் இன்னும் பரிமளித்திருக்கலாம்; என்று அவன் எப்போதும் நினைப்பான்.
அப்பா, இதோ பாருங்க,”குய வகுப்பில் நான் செய்த காஃபி கோப்பைகளும், காஃபி கெண்டியும். காஃபி கொட்டை நிறத்தில் அமைந்த அந்த கலன்களின் வெளிப்புறத்தில், ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் சிறு காஃபி கோப்பைகளை வடிவமைத்திருந்தது; அவன் கற்பனையின் மனவளம் நிலவனுக்கு மகிழ்வூட்டியது.
அன்று அவன் அப்பாவுக்கு இருந்த பயம்; நிலவனுக்கு இன்றில்லை. இந்த கற்பனை வளம் அவன் பாட்டியிடமிருந்து அவன் அடைந்த பரம்பரை சொத்து. நிலவன் செய்ய வேண்டியதெல்லாம்; அந்த கனலின் ஒளி மங்காமல் , பார்த்துக் கொள்வது மட்டுமே.
சசிகலா விஸ்வநாதன்