This entry is part 4 of 10 in the series 18 அக்டோபர் 2026

ச.சிவபிரகாஷ்

எனது மகள்களின்

கிறுக்கல்களில்…

அலங்கரித்துக்கொண்ட

வீட்டுச்சுவர்கள்

இப்போது

வெளீரென

வெறுமையை

தெரிவிப்பதும்.

விளையாட துணையின்றி

சொப்பு சாமான்கள்

சொல்ல தெரியாமல்

பரண் மேல் அமர்ந்து

பரிதவிப்பதும்…

அன்று

மூத்தவள்

ஆசையாய்

அணிந்த

அரை கால்

கவுன்கள்…

நன்று

இளையவளுக்கும்

பொருந்தி.

பின்னர்

பிரிக்கப்படாது

பீரோவில்

அடுக்குகளாக

அடையாளப்பட்டு

கொண்டிருப்பதும்.

கவனிக்க…

ஆட்களின்றி,

டோராவும்,

வருத்தப்படாத கரடி

சங்கமும்,

சத்தமில்லாமல்

வீட்டு

தொலைக்காட்சியிலிருந்து,

தொலைந்தே

போய் இருப்பதும்…

எங்கள்

செல்லங்களை

இன்னும்…

குழந்தைகளாகவே

நினைத்துக்கொண்டிருக்கும்

அவற்றுக்கு…

எப்படி

புரிய வைப்பது?

அவர்கள்

பூப்படைந்த சேதியை.

காலம்

நகர்கிறது….

நரை தரித்த,

நானும்

உங்கள் போல

இன்னமும்

இவர்களை

குழந்தைகளாகவே

நினைத்துக்

கொண்டிருக்கிறேன்.

என்ன செய்ய?

                                  ச.சிவபிரகாஷ்

Series Navigationசாயத்திரை  30புகைமூட்டம்