அக்னிப்பிரவேசம்-25

This entry is part 32 of 33 in the series 3 மார்ச் 2013

 அக்னிப்பிரவேசம்-25

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

yandamuri veerendranathபரத்வாஜுக்கு அன்று இரவு எரிச்சலாய் இருந்தது. இலக்கியக் கூட்டத்திற்குப் போகவேண்டும் என்றாலே அவனுக்கு பயம். யாராவது வயதான எழுத்தாளர் தலைமை தாங்கி இலக்கியம் எப்படியெல்லாம் சீர்குலைந்து போகிறது என்று சொற்பொழிவு ஆற்றுவார். அங்கே வருபவர்கள் எல்லோருமே எழுதத் தெரியாதவர்கள் அல்லது எழுதாமல் தடுப்பவர்கள். அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களுக்கு நடுவில் அவனுடைய பெயரையும் வலுக்கட்டாயமாக போட்டுவிட்டார்கள்.

அவனுக்கு முன்னால் மூன்று பேர் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் உண்மைதான். செக்ஸ், கொலை, கொள்ளை நிரம்பிய கதைகளைப் படித்துவிட்டு வாசகர்கள் கேட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் இதுதான் அவர்கள் சொன்னது.

ஆனால் அவர்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது இலக்கியக் கூட்டம். அங்கே இருந்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாசகர்கள்தாம். அவர்கள் எல்லோருமே கேட்டுப் போனவர்களா? அல்லது இந்த கூட்டத்திற்கு வராத (கெட்டுப்போன) வாசகர்களுக்காக இந்த சொற்பொழிவு ஆற்றுகிறார்களா என்று அவனுக்குப் புரியவில்லை.

இந்த விஷயத்தைத்தான் அவன் தன் பேச்சில் சொன்னான். “எந்தப் பிரச்ச்னைக்குமே மூல காரணம் தனித்தன்மை இல்லாமல் போவதுதான். எந்த எழுத்தாளனுமே பிரச்சனை\க்கு பரிகாரம் சொல்லமாட்டான். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று மட்டும்தான் சொல்லுவான். ஒருவிதமாக சொல்லப் போனால் செக்ஸ் கூட ஒரு பிரச்சனைதான்.”

இந்தக் கடைசி வார்த்தைக்கு கூட்டத்திலிருந்து விசில் சத்தம் கேட்டது.. நள்ளிரவு நேரத்தில் இரானி ஹோட்டலில் தேநீர் குடித்துக்கொண்டே அமேஜான் காடுகளைப் பற்றி வாதாடும் மேதாவிகள் பத்துபேர் “டௌன்.. டௌன்” என்று கத்தினார்கள். அந்த ரகளைக்கு நடுவில் தலைமை தாங்கியவர் அவனை பேச்சை நிறுத்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த எரிச்சலுடனேயே அவன் எஞ்சிய கூட்டத்திற்கு இருக்காமல் இடையிலேயே எழுந்து வந்துவிட்டான. தான் சொல்ல நினைத்தது அவர்களுக்கு புரியவில்லையோ அல்லது அவர்களுக்குப் புரியும் விதமாக தன்னால் சொல்ல முடியவில்லையோ என்று அவனுக்குப் புரியவில்லை.

அது புரியும் வரையில் அன்று இரவு முழுவதும் குடிப்பது என்று முடிவு செய்தான். அவனுடைய சந்தேகத்தைத் தீர்த்துவைக்கும்  இரண்டு பெண்கள், அன்று இரவு, ஒருத்தரை அடுத்து ஒருத்தராய் எதிர்படப் போகிறார்கள் என்று அப்போது அவனுக்குத் தெரியாது.

அந்த விதமான மனநிலையில் அவன் பாரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது,, ஆளரவமற்ற அந்த வீதியில் சாஹிதியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த ரோமியோக்கள் தென்பட்டார்கள்.

விளக்கு வெளிச்சம் மேலே வந்து விழுந்ததும் அவர்கள் தம் முயற்சியை விட்டுவிட்டுப் பக்கத்து சந்துக்குள் ஓடிவிட்டார்கள்.

பரத்வாஜ் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதிர்ச்சியால் நினைவு இழக்கும் நிலையில் இருந்த சாஹிதியை அதில் ஏற்றிக் கொண்டான்.

“நீ சாஹிதிதானே?”

அவள் பதில் சொல்லவில்லை.

“இந்த ராத்திரி வேளையில் தனியாய் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?”

அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. அவள் இன்னும் குழப்பத்திலிருந்து மீளவில்லை. வீடு என்ற சிறைச்சாலையிலிருந்து சுதந்திர உலகத்திற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்ற தவிப்புடன் வெளியே வந்த அடுத்த நிமிடமே இவ்வளவு பெரிய விபத்து நேர இருந்தது அவளை தளர்ந்துப் போகச் செய்தது.

அவள் மனநிலையை ஊகித்து அவன் எதுவும் பேசாமல் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.

ரொம்ப நேரம் கழித்து அவள் தெறிக் கொண்டாள். அதற்குள் கார் நகர எல்லையைத் தாண்டி போய்க் கொண்டிருந்தது.

“நாம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறோம்?”

“அம்மாடி! பெசிவிட்டாய். எங்கே போகணும் என்று நீ சொல்லவில்லை. அதான் நீ தேறிக்கொள்ளும் வரையில் இப்படி ஒட்டிக்கொண்டு வந்தேன். எங்கே போகணுமோ நீ சொல்லு.”

“எனக்குத் தெரியாது.”

“வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டாயா?” சந்தேகத்துடன் கேட்டான்.

“வீட்டில் இருக்க முடியாமல் வந்துவிட்டேன்.”

“எங்கே இருக்கலாம் என்று உத்தேசம்?”

அவள் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்துவிட்டு பிறகு மெதுவாய் “நான் சாகப் போகிறேன்” என்றாள்.

“ரொம்ப நல்ல முடிவு. ஆனால் எதுக்கு?”

“உங்களுக்குப் புரியாது. எனக்கும் இருக்கும் பிரச்ச்னைகள் வேறு யாருக்குமே இருக்காது.”

“ரொம்ப வேடிக்கையாய் இருக்கு.”

“எது?”

“எனக்கு இருக்கும் பிரச்சனைகள் வேறு யாருக்குமே இருக்காது என்று அரைமணி நேரத்துக்கு முன்னால் நானும் நினைத்தேன். நான் பேசிய கூட்டத்தில் ஜனங்கள் ரகளை செய்து, மேடையை விட்டு இறங்கும் வரையில் என்னை விடவில்லை. செத்துப் போனால்தான் என்ன என்ற அளவுக்கு ஆவேசம் வந்தது. அதனால்தான் போய்க் கொண்டிருக்கிறேன்.”

“நீங்க நிஜமாகத்தான் சொல்றீங்களா?”

“ஏன்? அந்த சந்தேகம் ஏன் வந்தது உனக்கு?”

“என் பிரச்சனைக்கும் உங்களோட பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? அதற்கு முன்னால் இது எந்த மூலைக்கு?”

‘இதே வார்த்தையை என் சமையல்காரனிடம் சொன்ன போது அவனும் இதே போலத்தான் சொன்னான். நான் தரும் ஐநூறு ரூபாய் எதற்குமே போறாது. மூத்த மகளை அவன் கணவன் விட்டுவிட்டுப் போய்விட்டான். அவளுக்கு மூன்று குழந்தைகள். மகன் ஒரு போக்கிரி. பத்து நாட்களுக்கு ஒரு முறை வந்து தந்தையை அடித்துப் போட்டு பணம் ஏதாவது இருந்தால் பிடுங்கிக் கொண்டு போவான். இரண்டாவது மகளுக்கு கேன்சர். இன்னும் ஆறு மாதங்களில் இறந்து விடுவாள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.”

“ப்ளீஸ்… நிறுத்துங்கள்.”

“அவனுக்கு அடிக்கடி தாங்க முடியாத வயிற்றுவலி வந்துவிடும். முந்தாநாள் தான் எனக்கு ஒரு புது விஷயம் தெரியவந்தது. நான்கு நாட்களாய் பட்டினி கிடந்த போதும் சொல்லவே இல்லை. தன் வீட்டில் பட்டினியாய் இருப்பவர்களை நினைத்துக் கொண்டே இந்த வீட்டில் பார்ட்டிக்காக பிரியாணி சமைத்தது..”

“நிறுத்துங்கள்.”

“நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்த உலகத்தில் நிறைய பேர் தமக்கு இருப்பது போன்ற பிரச்சனைகள் வேறு யாருக்குமே இருக்காது என்று எண்ணிக்கொள்வார்கள். தம்மையும் தம்முடைய கஷ்டங்களையும் நெருக்கமாய் இருப்பவர்களே புரிந்து கொள்வதில்லை என்றும், தானாய்  இருக்கக் கொண்டு இவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்கிறோம் என்றும், வேறு யாராவதாக இருந்திருந்தால் என்றோ செத்துப் போயிருப்பார்கள் என்றும் நினைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட நபர்களின் எண்ணங்கள் “தான்” என்ற வட்டத்தைத் தவிர அதைத் தாண்டி போகாது.அந்த எல்லையைத்  தாண்ட முடிந்தால், அதற்குப் பிறகு எல்லாமே சந்தோஷம்தான் என்ற சின்ன விஷயத்தைகூட தெரிந்து கொள்ள மாட்டார்கள். அந்த எல்லையைத் தாண்டியவர்களுக்குத் தான் மூட் பாழாவது என்று எதுவுமே இருக்காது.”

‘நதியில் அடித்துக் கொண்டு போகிறவனுக்குக் கரையில் உட்கார்ந்துகொண்டு ஒலிபெருக்கி மூலம் நீச்சல் கற்றுக் கொடுப்பது போல் இருக்கு உங்கள் சொற்பொழிவு.”

“குட் ஸ்டேட்மெண்ட். நல்ல எழுத்தாளர் ஆவாய். அதுசரி, இன்னும் நீ விஷயத்தைச் சொல்லவே இல்லை. இந்த ராத்திரி வேளையில் இப்படி வீட்டை விட்டுவிட்டு ஏன் வந்தாய்? உன் வளர்ப்பு தந்தை உனக்காகக் கூட லக்ஷ்மி பூஜை பண்ணுவதாய்ச் சொன்னாரா?”

அவள் வியப்புடன் நிமிர்ந்து “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

“அவன் முதல் முறையாய் பார்த்த போதே அவன் உங்கள் வீட்டில் இருக்கும் பெண் இனத்தை, அது எறும்பாக இருந்தாலும் சரி, விட்டு வைக்க மாட்டான் என்று தோன்றியது.”

அப்பொழுதுதான் சொல்லத் தொடங்கினாள். கொஞ்சம் சூடு காட்டியதுமே வெண்ணெய் உருகத் தொடங்கிவிடுவது போல் அவள் மனதில் அதுவரையிலும் படிந்து போய் விட்டிருந்த உணர்வுகள் எல்லாம் வெளியில் வரத் தொடங்கின.

தன் தாயின் கன்னத்தில் படிந்திருந்த பற்குறியிலிருந்து, அவன் தன்னையும் எந்த விதத்தில் விரும்பினான் என்பதுவரை சொல்லிவிட்டு “இப்போ சொல்லுங்கள். யாருக்காவது இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்குமா? நான் சாகணும் என்று நினைத்ததில் தவறு என்ன இருக்கு?” என்று கேட்டாள்.

“இப்போ சொத்து யார் பெயரில் இருக்கு?”

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவன் கேட்ட அசந்தர்ப்பமான முதல்கேள்விக்கு அவள் வியப்படைந்தவளாய்  “தெரியாது” என்றாள்.

“நீ மேஜர் என்பதால் கொஞ்சம் சொத்து உன் பெயரில் எழுதி வைக்கச் சொல்லி கேட்கலாம்.”

அவள் அதிர்ச்சி அடைந்தவளாய் “நீங்க என்ன பேசுறீங்க?” என்று கேட்டாள்.

அவளுடைய கேள்வியைப் பொருட்படுத்தாமல் அவன்  தொடர்ந்தான். “அந்த வீட்டிலேயே நீ தனியாய் இருக்கலாம். உன் அனுமதி இல்லாமல் உன் தாயோ, உன் வளர்ப்புத் தந்தியோ உன் அறைக்குள் வரக்கூடாது என்று உத்தரவு போடலாம்.”

“நீங்க இதையெல்லாம் ஏளனமாய் சொல்றீங்களா? அல்லது உண்மையாகத்தான் சொல்றீங்களா?”

‘உன் வளர்ப்புத் தந்தைக்கும், உன் தாய்க்கும் நடந்த திருமண விஷயத்தை உன் உறவினர்களிடம் தெரிவிக்கலாம். பேப்பரில் போட்டோவைப் போடலாம். கரப் பத்திரங்கள் மூலமாய் அவனைப் பற்றிய உண்மைகளை பிரச்சாரம் செய்யலாம்.”

“எங்க அம்மா தற்கொலை பண்ணிக்கொள்வாள்.”

“உங்க அம்மாவுக்கு எப்போது பார்த்தாலும் அழுவதும், தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்று சொல்வதையும் தவிர வேறு வேலை எதுவும் கிடையாதா?”

“தயவு செய்து ஏங்க அம்மாவை ஒன்றும் சொல்லாதீங்க. அவள் பண்ணியது தவறுதான். எனக்குக்கூட தாங்க முடியாத கோபம் வரத்தான் செய்கிறது. அதற்காக சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து போகணும் என்று இல்லை எனக்கு.”

“சண்டை போட்டுக்கொண்டு பிரிந்துப் போகச் சொல்லி நானும் சொல்லவில்லை. அப்படிப்பார்க்கப் போனால் உங்க அம்மாவின் நடத்தையில் எனக்கு எந்த அசாதாரணமான தன்மையும் தென்படவில்லை. உங்க அம்மாவைப் போன்றவர்கள் பலபேர். கடுகளவு அன்புக்காக வாழ்க்கையைப் பணயமாய் வைத்து விடுவார்கள். தம் நடவடிக்கைகளுக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை உருவாக்கிக் கொள்வார்கள். அந்த மயக்கம் தமக்கு சந்தோஷத்தைத் தந்து கொண்டிருக்கும் வரையில் அதிலிருந்து வெளியேற மாட்டார்கள். அந்த மயக்கம் புடவை, பணமாகவும் இருக்கலாம். மாதர் சங்கம், சமுதாயத்தில் அந்தஸ்து போன்றவையாகவும் இருக்கலாம். துரதிர்ஷ்ட வசமாய் உங்க அம்மா விஷயத்தில் அது ஒரு “ஆண்” ஆக இருந்துவிட்டான். தன் வாழ்க்கையில் இழந்துவிட்டதை எல்லாம் அவன் மூலமாய் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணிவிட்டாள். அவள் அந்த மயக்கத்தில் எவ்வளவு மூழ்கிப் போயிருக்கிறாள் என்றால், தன் வாழ்க்கை போக்கையும், கொள்கைகளையும், தன்னோடு உன்னையும் சம்மதிக்கச் செய்வது கூட தவறு இல்லை என்று மனப்பூர்வமாக நம்பிவிட்டாள். இந்த விவகாரமெல்லாம் ரகசியமாக நடக்கணும் என்று அவள் நினைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா?”

சாஹிதி வாயடைந்துப் போனவளாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்றுமே இந்தக் கோணத்திலிருந்து யோசித்தது இல்லை.

அதற்குள் அவன் சொன்னான். “அதுசரி, உன்ன பிரச்சனைக்கும், உன் வீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் எனக்குப் புரியவில்லை. உன் படிப்பை நீ படித்துக் கொண்டு இருக்கிறாய். கல்யாணம் பண்ணிக்கொள்வதையோ அல்லது வேலைக்குப் போவதையோ நீயே தான் முடிவு செய்யப் போகிறாய். வாழ்க்கை என்றால் உங்க அம்மா, அவளுடைய கணவன் மட்டுமே இல்லையே? சாப்பாடு, துணிமணி, வீடு, படிப்பு எல்லாம் இருக்கும் நீயே இப்படிக் கோழையாகிவிட்டால் எப்படி சாஹிதி? யோசித்துப் பார்.”

“காரைப் பின்னால் திருப்புங்கள்.” சுருக்கமாகச் சொன்னாள் அவள்.

அவன் தன் வியப்பை தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு காரைப் பின்னால் திருப்பினான். ஏறக்குறைய வீட்டை நெருங்கிவிட்ட போது சாஹிதி சொன்னாள். “ஒருத்தருக்கு மிகச் பெரிய பிரச்சினையாய் தோன்றுவது இன்னொருத்தருக்கு மிகச் சிறியதாகத் தோன்றலாம். அதற்காக ஏளனம் பண்ணத் தேவையில்லை. நீங்க ஏதோ என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவீங்க என்று யாரிடமும் சொல்லக்கூடாத  எங்கள் குடும்பக் கதையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். சொல்லி இளப்பமாகிவிட்டேன். ஒருத்தருக்குப் பசியின் கொடுமை இருக்கலாம். இன்னொருத்தருக்கு அருமையாய் வளர்த்த நாய் இறந்து விட்டதால் வேதனை ஏற்படலாம். முதலாவதுடன் ஒப்பிட்டால் இரண்டாவது எந்த மூலைக்கு என்று சொன்னால் அது அடுத்தவரை ஏளனம் பண்ணுவது போல்தான். அன்பு, பாசம் என்பவை கூட உண்டு. அவற்றை துண்டித்துக் கொள்வது அவ்வளவு எளிது இல்லை. நான் இப்படிப் பேசியதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையே?”

“இல்லை. ஆனால் ஒரு விஷயத்திற்கு மட்டும் பதில் சொல்லு. நான் சொன்ன பரிகாரம் ரொம்ப மெடீரியலிஸ்டிக் ஆக இருப்பது உண்மைதான். ஆனால் செண்டிமெண்டை தழுவிக் கொண்டு நீ சாதித்தது இருப்பது வேதனைதானே?  வரதட்சணை கொடுக்க முடியாமல் கல்யாணம் தடைபட்டு கஷ்டப்படுபவர்கள் சிலர். கல்லூரியில் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை பண்ணிக்கொள்பவர்கள் வேறு சிலர். எல்லாவற்றுக்கும் பரிகாரம் ஒன்றே ஒன்றுதான். தனித்தன்மையை வளர்த்துகொள்வது! மனிதன் தனக்கு எது வேண்டும் என்றும். எது தேவையில்லை என்றும் தெரிந்து கொள்ளணும். உன் தாய் உனக்குத் தேவையில்லை என்று நினைத்தாய் என்றால் பிரச்சனையே இல்லை. தாய் வேண்டும் என்று நினைத்தால் தாயோடு அவனையும் ஏற்றுக் கொள்வதுதான் இன்னொரு பரிகாரம்.”

“எவ்வளவு கொடுமையாய் பேசுறீங்க?”

“நாம்ப சுகமாய் இருக்கணும். நம்முடைய சுகம் யாருக்குமே இந்த உலகத்தில் துக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. நம்முடைய தற்போதைய சுகம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தக் கூடாது. இந்த மூன்று கொள்கைகளை நம்பிய மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் சந்தோஷம்தான். ஆனால் இந்த சுகத்திற்காக யார்மீதும் சார்ந்து இருக்காமல் சுயமுயற்சியால் சாதிக்க வேண்டும் அப்படி முயற்சி செய்து பார். கொஞ்ச நாள் கழித்து உன் தாயே உன்னைப் பாராட்டுவாள். உன் வளர்ப்பு தந்தை உன்னை சாதாரணமாகத் தொடவும் தயங்குவான். ஒரே பார்வையில் மனிதர்களைக் கட்டுபடுத்தி விடக்கூடிய அதிகாரம் உனக்கு வந்து சேர்ந்து விடும். கவலைகளைப் பற்றிக் கவலைப் படுவது குறைந்து விடும்.”

“அதுதான் எங்கள் வீடு. காரை நிறுத்தறீங்களா?”

‘இவ்வளவு நேரமாய் நான் சொன்னது ..”

“நல்ல கதையாய் எழுதுங்கள். சாதாரண மனிதர்கள் யாருமே பின்பற்ற முடியாத உயர்ந்த கொள்கைகள் இருக்கு அதில்.”

அவன் மனம் காய்ப்பட்டது. ஆனாலும் அவளுடைய தற்போதைய மனநிலையை புரிந்துக் கொண்டவன் என்பதால் சிரித்துவிட்டு “சரி, எழுதுகிறேன். ஆனால் நீ மட்டும் எதுவும் பண்ணிக் கொண்டு விட மாட்டேன் என்று வாக்குக்கொடு” என்றான்.

அவளும் தான் வாய்த் தவறி சொல்லிவிட்டதற்கு வருத்தமடைந்தவளாய் “சாரி, கண்டிப்பாக அப்படி எதுவும் பண்ணிக் கொள்ள மாட்டேன்” என்று காரை விட்டிறங்கிப் போய்விட்டாள்.

காரைத் திருப்பிக்கொண்டு போன பரத்வாஜ் நினைத்துக் கொண்டான். லாபம் இல்லை. இன்றைக்கு இரண்டு பேக்குகள் கூட போட்டாகணும். அங்கே கூட்டத்தில் சபையில் இருந்தவர்கள் கூட என்னைப் புரிந்துகொள்ளவில்லை. இங்கே பிரச்சனை இருக்கும் வாசகர்களும் கூட என்னைப் புரிந்துகொள்ளவில்லை. விமரிசனம் செய்பவர்கள் குத்திக் காட்டுவது போல் என்னால்தான் சமுதாய உணர்வுடன் தீர்வு சொல்ல முடியவில்லையா? இந்தப் பிரச்சனைக்குப் பரிகாரம்தான் என்ன?

சரியாக நான்கு மணிநேரம் கழித்து அவன் பிரச்சனைக்கும் பரிகாரம் கிடைத்தது.

(தொடரும்)

Series Navigationதிருக்குறளில் ‘இயமம் நியமம்’ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *