தமிழுக்கு விடுதலை தா

This entry is part 22 of 31 in the series 11 ஜனவரி 2015

tamilvidu
தமிழுக்கு விடுதலை தா

சி. ஜெயபாரதன், கனடா.

தமிழைச் சங்கச் சிறையில்

தள்ளாதே !

தங்கச் சிறை வேண்டாம் !

​கை கால்களில்​

​பொன் விலங்கு பூட்டாதே !​

தமிழுக்கு வல்லமை தேவை

மூச்சு விடட்டும்;

முன்னுக்கு வரட்டும் !

நுண்ணோக்கி மூலம் நீ

பின்னோக்கிப் பாராது,

முன்னோக்கிப் பார்

தொலை நோக்கி மூலம் !

வேரூன்றிக் கிளைகள் விட்டு

விழுதுகள்

வைய மெங்கும் பரவட்டும்;

கழுத்தை நெரிக்காதே !

காற்றில் நீந்தட்டும் !

கால் பந்தாய் எற்றாதே !

தமிழைத் தவழ விடு !

நடைத் தமிழில்

நடக்க விடு !

​நடக்க நடக்கக் குருதி ஓடும் !

​முடக்காதே தமிழை !

தவறி விழுந்தால்

எழுந்து நடக்கக் கைகொடு !

தோள் கொடு, தூக்கி விடு !

தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி

வடிகட்டி ஏந்தி

வலை உலகில் மேயாதே !

பழமை பேசிப் பேசி

ஆறிய கஞ்சியை மீண்டும்

சூடாக்கிக் குடிக்காதே !

அழுக்குச் சட்டை

​தூய நீரில்​

துவைத்து துவைத்துக் கிழிந்தது !

தமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்

தத்தெடுத்துக் கொள் யுக்தியுடன்

புத்தாடை அணிய விடு !

புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்

இத்தரணி ஆளவிடு !

+++++++++

Series Navigationவாழ்த்துகள் ஜெயமோகன்கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *