மிதிலாவிலாஸ்-3

This entry is part 1 of 26 in the series 22 பெப்ருவரி 2015

Yaddana_profile_0

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

கற்களையும், புதர்களையும் தழுவியபடி சுழல்களாய் பாய்ந்து கொண்டிருந்த நதியின் வேகம்! அந்த பிரவாகத்தின் நடுவில் எங்கேயோ பெரிய கற்பாறையின் மீது மடியில் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான். இந்த உலகத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாதது போல் படிப்பதில் மூழ்கிய நிலையில் ஓவியம் போல் காட்சி தந்தான். நதிக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கயிற்று பாலத்தின் மீது அபிஜித்துடன் நின்றிருந்தாள் மைதிலி.

“மைதிலி! அவன்தான் சித்தார்த்தா! சரியாக பாரு.” அபிஜித் சொல்லிக் கொண்டிருந்தான்.

மைதிலி குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சித்தார்த்தாவின் முகம் பக்கவாட்டில் கண்ணும், மூக்கும் கோடுபோல் தெரிந்து கொண்டிருந்தன.

“சரியாக பாரு.” அபிஜித் அவசரப் படுத்தினான்.

மைதிலி எவ்வளவு குனிந்து பார்த்தாலும் அவனுடைய முழு முகத்தைப் பார்க்க முடியவில்லை. அதற்குள் திடீரென்று கயிற்றுப் பாலம் ஊசலாடியது. மைதிலியின் கால்களுக்கு கீழே இருந்த கயிறு அறுந்து விட்டது. மைதிலி தண்ணியில் விழுந்துக் கொண்டிருந்தாள்.

“மைதிலி!’ அபிஜித்தின் குரல் கூக்குரலாய் கேட்டது. மைதிலி அவனைப் பார்த்தபடி கையை உயர்த்தி ஆட்டிக் கொண்டே தொலைவுக்கு போய்க் கொண்டிருந்தாள். அத்தனை ஆபத்தான நிலையிலும், பயத்தில் இருந்த போதும் அவள் சித்தார்த்தா இருந்த பக்கம் போய்க் கொண்டிருந்தாள். அவள் உடல் தண்ணீருக்கு மிக அருகில் வந்து விட்டது. அவள் இதழ்களிருந்து வீலென்ற கத்தல் வெளி வந்தது.

“மைதிலி! மைதிலி!” யாரோ தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

எழுந்து உட்கார்ந்திருந்த மைதிலியின் முகத்தில் வியர்வை படிந்து இருந்தது. பயத்தினால் கண்கள் அகலமாயின.

“மைதிலி!” அபிஜித் அழைத்துக் கொண்டிருந்தான். அவன் குரல் தூக்கக் கலக்கத்தில் இருந்தது, மைதிலியின் கண்முன் மெள்ளமாய் தண்ணீர் பிரவாகத்திற்கு பதில் அழகான தம்முடைய படுக்கை தென்பட்டது.

“என்ன ஆச்சு?” என்று கேட்டான்.

“ஏதோ கேட்ட கனவு.” முழங்காலில் தலையைச் சாய்த்துக் கொண்டே சொனால்.

அவன்எஅழுந்து உட்கார்ந்து தோள்களில் கையைப் பதித்து அருகில் இழுத்துக் கொண்டான்.

“ரொம்ப கத்தி விட்டேனா?” வெட்கத்துடன் சொன்னாள்.

“ஊஹும். எனக்கு யதேச்சையாக விழிப்பு வந்து பார்த்த போது நீ ஏதோ கத்திக்கொண்டே எழுந்து உட்கார்ந்து இருந்தாய்.” அவன் கண்கள் தூக்கக் கலக்கத்தில் பாரமாய் இருந்தன.

“வந்து படுத்துக் கொள்” பின்னால் சாய்த்து படுக்க வைத்தான்.

மைதிலியின் தலை தலையணையில் பதிந்தது. “ரொம்ப கெட்ட கனவு வந்தது. பயமாக இருந்தது” என்றாள்.

“என்ன கனவு?” தூக்க மயக்கத்திலேயே கேட்டான்.

மைதிலி சுருக்கமாகச் சொன்னாள்.

அபிஜித் அவள் தோள் வழியாக கையைப் போட்டு லேசாக அவளைத் தூக்கி தலையை மார்பில் வைத்துக் கொண்டான்.

“அபீ! மனிதனுக்கு கனவுகள் வருவானேன்?” என்று கேட்டாள்.

“விழிப்புடன் இருக்கும் போது சில காரணங்களினால் நாம் அடக்கி வைத்த எண்ணங்கள் நாம் தூக்கத்தில் கவனக்குறைவாக இருக்கும் போது எதிர்த்து நிற்குமோ என்னவோ? எனக்கும் தெரியாது. நம் சைக்ரியாடிஸ்ட் பதஞ்சலியிடம் கேட்டு நாளை சொகிறேன்.” அவன் தூக்கக் கலக்கம் பறந்து விட்டது. அவன் கை அவள் காதில் போட்டிருந்த வைரத் தோட்டை திருகிக் கொண்டிருந்தது. நெற்றியில் படிந்திருந்த குழல்களை மேலே தள்ளிவிட்டான்.

மூக்கில் இருந்த ஒற்றைக்கல் மூக்குத்தி ஜொலித்தது. “இதை எதற்கு எடுக்க மாட்டேங்கிறாய்?” என்று கேட்டான். இது ஒன்றுதான் அவளுக்கு திருமணத்திற்கு முன்னாடியிருந்த நகை. இதைவிட விலை உயர்ந்தது பிறந்த நாள் பரிசாக கொண்டு வந்து கொடுத்த போதும் மைதிலி அதை அணியவில்லை.

“ஊஹும்.”

“ஏன்?”

“என்னைக் கல்யாணம் செய்துக்கொண்டு தவறு செய்து விட்டதாக உனக்கு குறிப்பாக உணர்த்தும் அடையாளம்.”

“அந்த வார்த்தையைச் சொல்லாதே என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்?” காதைத் திருகினான். அது அவளுக்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல் இருந்தது.

“அவ்வப்பொழுது உனக்குக் கோபம் வரவழைப்பது எனக்கு இஷ்டம்.” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“சாரி!” மனப்பூர்வமாகச் சொன்னான்.

“எதுக்காக இந்த சாரி?”

“நான் கோபத்தை ஜெயித்துவிட்டதாக நினைத்துக் கொள்வேன். சில சமயம் உன்னிடம் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறேன்.”

மைதிலி சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு அவன் இச்சையைத் தூண்டி விடுவது போல் இருந்தது. “மைதிலி!” அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டான். “நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எந்தக் குறையும் எனக்கு இல்லை.”

“சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லு. குறை இல்லை என்று மட்டும் சொல்லாதே.”

“அப்படி என்றால்?”

“எனக்குக் குழந்தைகள் இல்லை. அது குறைதானே? உனக்குக் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். இல்லை என்று என்னை ஏமாற்ற முடியுமா உன்னால்?”

இடிவிழுந்தவன் போல் பார்த்தான். அவன் கண்கள் அவள் கண்களுக்குள் பார்த்துக் கொண்டிருந்தன.

“அபீ! என் பேச்சைக் கேள். நீ இன்னொரு திருமணம் பண்ணிக்கொள்.”

அவன் அவள் பக்கத்து தலையணையில் சாய்த்தான். ஒரு நிமிடம் மேற்கூரையை பார்த்துக் கொண்டே, “அந்த வேலையை நீயே ஏன் செய்யக் கூடாது?” என்றான். அவன் குரலில் அடக்கி வைத்த கோபம் இருந்தது.

“நானா!” அவள் வாயிலிருந்த வார்த்தை இன்னும் முடியக்கூட இல்லை. அவன் எழுந்து அப்படியே அவள் மீது கவிழ்ந்து முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டான். “நோ..நோ.. யாருடைய நிழலும் உன்மீது பட அனுமதிக்க மாட்டேன். உன்மீது மட்டுமே இல்லை, என்மீதும் கூட, நாமிருவரும் வேறு வேறு இல்லை. ஒன்றுதான்! சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது போலவே வெறுமையையும் நாம் பகிர்ந்து கொள்ளணும். சந்தோஷம் என்பது ஒருத்தர் தானமாக கொடுப்பது இல்லை. நாமே அனுபவிப்பது. தெரிந்ததா?” அவன் முகத்தில் ஆவேசம் கட்டு மீறியது. பிரியமானது வெள்ளமாய் பொங்கி புரண்டது.

மறுநிமிடம் நிலவின் வெளிச்சமாய் இருந்த அந்த படுக்கை ரதி மன்மத சாம்ராஜ்ஜியமாக மாறியது.

“மைதிலி! என்னை விட்டுப் போகாதே.” ரொம்ப நேரம் கழித்து லேசான களைப்புடன் சொன்னான் அவன். அவன் முகம் அவள் கழுத்து வளைவில் ஒதுங்கி இருந்தது. அவன் கழுத்தில் படிந்த வியர்வையை அவள் தலைப்பால் ஒற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏன் அபீ! எப்போதும் அப்படி சொல்கிறாய்?”

“எனக்கு தெரியாது. எனக்கு தெரியாமலேயே அந்த வார்த்தை வந்து விடுகிறது. நீ எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு என்னை விட்டுவிட்டு போய் விடுவாய் என்ற பயம்” என்றான்.

அவன் முதுகில் நளினமான அவள் கை பூப்பந்து போல் படர்ந்தது. “நாமிருவரும் வேறு இல்லை, ஒரே மனம், ஈருடல் என்று நீ தானே சொல்லி இருந்தாய். நீ இல்லாமல் நான் இல்லை.”

“தாங்க்யூ,” அவன் அவள் மார்பின் மீது பதிந்தது. அவளுடன் அந்த நெருக்கம், அந்த தொடுகை, இவற்றுடன் இளைப்பாறிய அவன் மனமும், உடலும் அற்புதமான அனுபவம் பெற்றது போல் உணரும். மனதளவிலும், உடல் ரீதியாகவும் திடசாலியாக மாற்றும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவன் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். மைதிலி அவனுக்கு விழிப்பு வந்து விடாமல் மென்மையாக அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள்.

அவன் பயம் அவளுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அவனுடன் சகவாசம் அவளுக்கு ஒவ்வொரு நிமிடமும் திவ்வியமான நேரம்தான். இவ்வளவு சந்தோஷத்தை அவனிடமிருந்து பெற்று வரும் தான் அவனுக்கு வேண்டிய சந்தோஷத்தை கொடுக்க முடியாமல் இருக்கிறாள். வெளிச்சத்தைத் தொடர்ந்து வரும் நிழலைப் போல் இந்த வேதனை சமீபத்தில் ரொம்பவும் அதிகமாகி விட்டது.

மாலையில் ஆஸ்பத்திரிக்கு பிரபாகருக்கு ரத்தம் கொடுக்கப் போன போது ஏற்கனவே அவன் மைத்துனன் வந்து கொடுத்துவிட்டு போயிருந்தான். பிரபாகரின் மனைவிக்கு இது ஐந்தாம் மாதம். பிரபாகர் உயிருக்கு கண்டம் தப்பியது பிறக்கப் போகிற அந்தக் குழந்தையின் அதிர்ஷ்டம்தான் என்று எல்லோரும் சொன்னார்கள்.

அங்கே வந்திருந்த பிரபாகரின் நண்பர்களின் மனைவியர்கள் பிரபாகருக்கு காயம் பட்ட விஷயத்தை விட பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிதான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மைதிலி அவர்களுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாலும் தொலைவில் நின்று நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அபிஜித்தின் கண்களில் தான் என்றுமே காண முடியாத சந்தோஷத்தை நினைக்கும் போது மனம் கலங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்து உடனே போய் விட வேண்டும் போல் இருந்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து மிசெஸ் மாதுர் வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே பத்தரை மணி வரையிலும் இருந்தார்கள். சாப்பிட்டுத்தான் போக வேண்டும் என்று மிசெஸ் மாதுர் பிடிவாதம் பிடித்தாள். அபிஜித் நிஷாவுடன் அறையில் பேசிக் கொண்டிருந்தான்.

உணவு மேஜையில் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த மிசெஸ் மாதுர் அழுகையை அடக்க முயற்சி செய்துகொண்டே, “மைதிலி! அபிஜித் ஒருத்தன் தான் நிஷாவை வழிக்குக் கொண்டு வர முடியும். அவள் அப்பா பேசத் தொடங்கினால் சண்டையைத் தவிர வேறு எதுவும் இருக்காது. மைதிலி! எங்களுக்கு இருப்பது ஒரே மகள். நிஷா தன் வயதுக்கு ஏற்ற பையனை, அவன் எந்த ஜாதி, மதத்தைச் சேர்ந்தவன் ஆக இருந்தாலும் சரி நான் ஆட்சேபணை சொல்லி இருக்க மாட்டேன். இவன் அவள் தந்தை வயதை ஒற்றவன். என்னால் அந்த திருமணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.”

“அபிஜிதிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா. அவன் நிஷாவின் மனதை மாற்றுவான் என்றே நம்புவோம்.” மைதிலி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்னால் என் கணவரை சமாளிக்க முடியவில்லை.” மிசெஸ் மாதுர் அழத் தொடங்கினாள்.

“மிசெஸ் மாதுர்! அழாதீங்க.” மைதிலி ஆறுதல் சொன்னாள். அதற்குள் வெளியில் கார் சத்தம் கேட்டது. மாதுர் வந்து விட்டார்.

“மைதிலி! ஐ யாம் சாரி. கிளையின்ட் ஒருவன் பிடித்துகொண்டு லேசில் விடவில்லை. அபிஜித் வரவில்லையா?”

“அறையில் நிஷாவுடன் பேசிக் கொண்டிருக்கிறான்.”

மகளின் பெயரைக் கேட்டதும் அவர் முகம் கடுவன் பூனையாக மாறியது. நேராக உணவுமேஜை அருகில் சென்று தண்ணீர் அருந்த தொடங்கினார். பிறகு வந்து மைதிலியின் எதிரே உட்கார்ந்து கொண்டார்.

“டாடீ எப்படி இருக்கிறார் மைதிலி?” என்று குசலம் விசாரித்தார்.

“நன்றாகத்தான் இருக்கிறார். இருக்கும் ஒரு நுரையீரலையாவது காப்பாற்ற முடிந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்கள் டாக்டர்கள்.”

“நீ எப்போ பார்த்து விட்டு வந்தாய்? சானிடோரியத்தில் எல்லாம் வசதியாக இருக்கிறதா?”

“இரண்டு நாட்களுக்கு முன்தான் போய்விட்டு வந்தேன். அங்கே எந்த குறையும் இல்லை. டாடீதான் அட்ஜெஸ்ட் ஆக மாட்டேங்கிறார்.”

“நாங்கள் அவ்வளவு சுலபமாக அட்ஜெஸ்ட் ஆகும் மனிதர்கள் இல்லை.” மனைவியின் பக்கம் தீவிரமாக பார்த்துக் கொண்டே சொன்னார்.

மிசெஸ் மாதுர் டீ யை கொண்டு வந்து அவர் முன்னால் வைத்தாள். அவர் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கணவன் மனைவிக்கு நடுவில் சண்டை எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறதோ மைதிலிக்கு நன்றாகவே புரிந்தது.

“மைதிலி! எனக்கு புதிதாக ஒரு மாடல் கிடைத்திருக்கிறாள். பெயர் சோனாலி. பர்பெக்ட் பிகர். நம் டிரெஸ் மெடீரியல் உடைகளை அவள் அணிந்த போது ஒரு விதமான கிரேஸ் லுக் இருப்பது போல் தோன்றியது.” மிசெஸ் மாதுர் சொன்னாள்.

அந்தம்மாளுக்கு எப்போதும் தொழிலைப் பற்றிய சிந்தனைதான்.

“வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாதவள் தெருவை சீர் திருத்த போய் விட்டாள்.” கோபமாக சொன்னார் மாதுர்.

“வீட்டு பராமரிப்பில் நான் என்ன குறை வைத்து விட்டேன்? என் கடமையை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். வீடு நன்றாக இருக்கணும், குழந்தைகள் ஒழுங்காக இருக்கணும் என்றால் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கணும்.”

மறைமுகமாய் இருந்த அவர்களுடைய சண்டை நேரடியாக மாறுவது மைதிலிக்கு சங்கடமாக இருந்தது. நிஷா அறையின் பக்கம் பார்த்தாள். அபிஜித் வந்து மாதுரிடம் பேசினால் சூழ்நிலை கொஞ்சம் இளகும்.

மிசெஸ் மாதுரும் நடுநடுவில் நிஷாவின் அறையின் பக்கம் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டே டின்னருக்கு ரெடி செய்து கொண்டிருந்தாள். மாதுர் எதையும் பொருட்படுத்தாமல் போய் டி.வி. ஆன் செய்தார்.

நிஷாவின் அறை கதவுகள் திறந்து கொண்டன. அபிஜித் வெளியே வந்தான்.

தட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மிசெஸ் மாதுர் வேலையை நிறுத்திவிட்டு கவலையுடன் அவன் பக்கம் பார்த்தாள்.

“ஹலோ!” அபிஜித் மாதுரை பார்த்து சொன்னான்.

“ஹலோ!” மாதுர் அவனைப் பார்த்ததும் டி.வி.யை அணைத்துவிட்டு வந்தார். “சாரி! நான் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது” என்றார் அபிஜித்தின் கையை குலுக்கிக் கொண்டே.

“கிளப்புக்கு போய்விட்டீங்களோ என்று நினைத்தேன்” என்றான் அபிஜித் முறுவலுடன்.

“அங்கே போனாலும் மனதிற்கு நிம்மதி இல்லை. கார்ட்ஸ் விளையாடுவதில் வருமானத்தை விட இழப்பு அதிகமாகிவிட்டது.”

அபிஜித் டைனிங் டேபிள் பக்கம் வந்தான். மிசெஸ் மாதுர் அவனுக்காக நாற்காலியை நகர்த்தினாள். அவள் பார்வை அபிஜித்தின் முகத்தை விட்டு நீங்கவில்லை.

“என்ன ஆச்சு தூது போன விஷயம்?” நிஷா அறையின் பக்கம் பார்த்துக் கொண்டே கேட்டார் மாதுர்.

அபிஜித் பதில் பேசவில்லை.

“நிஷா என்ன சொல்கிறாள்?” இனியும் பொறுத்துக் கொள்ள முடியாமல் மிசெஸ் மாதுர் கேட்டுவிட்டாள்.

“இந்த பேச்சே வரவில்லை” என்றான் அவன்.

“வரவில்லையா? பின்னே இத்தனை நேரம் என்ன பேசினீங்க?” ஏமாற்றத்துடன் கேட்டாள் மிசெஸ் மாதுர்.

அபிஜித் மௌனமாக தம்ளரின் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் முகம் சீரியஸ் ஆக இருந்தது.

மாதுர் உடனே, “ஷி ஈஸ் வெரி கிளெவர். நம்மை வாயைத் திறக்க விட மாட்டாள். நாம் சொல்வதை காது கொடுத்து கேட்கவும் மாட்டாள்” கோபமாக சொன்னார். மிசெஸ் மாதுர் அவரை பார்வையாலேயே கிழித்து விடுவது போல் பார்த்தாள்.

“மிசெஸ் மாதுர்! நாம் இப்போ ஒரு புதிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டு இருக்கிறோம்” என்றான் அபிஜித்.

“அப்படி என்றால்?” கவலையுடன் கேட்டாள் மிசெஸ் மாதுர்.

“நிஷா தாயாகப் போகிறாள்.”

அவன் சொன்ன இந்த செய்தியைக் கேட்டு எல்லோரும் திகைத்து விட்டார்கள்.

“சிக்கலான இந்தப் பிரச்சினையை ரொம்ப நாசூக்காக, கவனமாக, ஆவேசம் கொள்ளாமல் தீர்வு காண வேண்டும்.”

“நோ!” மிசெஸ் மாதுர் கத்திவிட்டாள்.

“இப்போது கத்தினால் என்ன பிரயோஜனம்? நீ முதலிலேயே ஏன் கவனமாக இருக்கவில்லை? சுதந்திரம், சுயேச்சை என்று என்னை வாயைத் திறக்க விடாமல் செய்து விட்டாய். எங்க அப்பா சொன்னது உண்மை. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கவே கூடாது.”

“ஷட்டப்!” கத்தினாள் மிசெஸ் மாதுர்.

மாதுர் உடனே அவள் முடியைப் பற்றி தலையை பின்னால் வளைத்துக் கொண்டே, “இப்போ என்ன செய்யப் போகிறாய்? எல்லோருக்கும் என்ன பதில் சொல்லப் போகிறாய்? இதெல்லாம் உன்னால்தான், உன் அஜாக்கிரதைதான்” என்று அடிக்கப் போனார்.

அபிஜித் சட்டென்று அவர்களை விடுவித்து மாதுரை தொலைவுக்கு அழைத்துப் போனான்.

மைதிலி மிசெஸ் மாதுர் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு அருகில் இழுத்துக் கொண்டாள். அந்தம்மாள் அழுது கொண்டிருந்தாள்.

“ஆவேசப்படுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.”

“என் வேதனை உங்களுக்கு என்ன தெரியும்? எங்கள் வீட்டில் நான்கு அண்ணன் தம்பிகளுக்கும் இவள் ஒருத்திதான் பெண் குழந்தை. இவள் மூலமாய் என் ஒருத்தனின் மானம் மட்டுமே இல்லை. அவர்களுடைய மான மரியாதையும் கப்பலேறிவிடும். உறவினர்கள் எதிரிகளைப் போல் காத்திருக்கிறார்கள். இந்த அவமானம் எங்களுக்கு மட்டுமே இல்லை. சீ… சீ.. இந்தப் பெண்ணின் நடத்தையால் நாங்கள் எல்லோரும் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை.” ஆவேசம் வந்தவர் போல் கத்தி கூச்சல் போட்டுக்கொண்டு, உடல் மீது கம்பளிப்பூச்சி ஊர்ந்துவிட்டது போல் அருவருத்துக் கொண்டிருந்தார்.

“அபிஜித்! உங்களுக்கு குழந்தை இல்லை. அது உங்கள் பாக்கியம். நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்” என்றும் சொன்னார்.

இந்த விமரிசனத்தைக் கேட்டு அபிஜித்தின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. “நல்லா இருக்கு. குழந்தைகள் இருந்தாலும் வேதனைதான். இல்லாவிட்டாலும் வேதனைதான்” என்றான் அவரை சமாதானப் படுத்துவது போல்.

மாதுர் சொன்னதைக் கேட்டு காயமடைந்த மைதிலியின் மனம், அபிஜித் சொன்ன சமாதானத்தைக் கேட்டதும் கண்காணாமல் மனதில் எங்கேயோ இருந்த காயத்தை கூர்மையான கத்தியால் குத்திவிட்டது போல் இருந்தது. இதழ்களை பற்களால் அழுத்திக் கொண்டாள்.

அதற்குள் மாதுர், “எங்கே அவள்? கொன்று போட்டு விடுகிறேன்” என்று நிஷா அறையின் பக்கம் ஓடினார்.

அபிஜித் அவரை விட வேகமாக முன்னால் சென்று நிஷாவின் அறையை சாத்திவிட்டு தாழ் போடப் போனான். மாதுர் திறக்கப் போனார். இரண்டு நிமிடங்கள் இழுபறி நடந்த பிறகு எப்படியோ அபிஜித் நிஷா அறைக்கு தாழ் போட்டுவிட்டு குறுக்கே நின்று கொண்டான்.

“மாதுர்! ஆவேசம் அடைவதால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்றான்.

“ஆமாம். எந்த பிரயோஜனமும் இல்லைதான். எனக்கு தெரியும். இனி நான் செத்துப் போவது ஒன்றுதான் வழி. அதுதான் என் தலையில் எழுதி இருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு என் முகத்தை காட்ட முடியாது.” அவருடைய ஆவேசம் அப்படியே தணிந்து விட்டது. வெள்ளம் போல் துக்கம் பெருகி வந்தது. திடீரென்று அழத் தொடங்கினார்.

“நீங்க வருத்தப்படாதீங்க. நாம் யோசிப்போம். மாதுர்! உங்களுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் இருக்கு.” அபிஜித் வலுகட்டாயமாக அவர் அழைத்து வந்து உணவு மேஜை அருகில் உட்கார வைத்தான்.

அதற்குள் மிசெஸ் மாதுர் மாத்திரையை, தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். “அபிஜித்! முதலில் இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள்.” வேண்டுகோள் விடுப்பது போல் சொன்னாள். அது வரையில் கணவன் மீது இருந்த கோபம் போய்விட்டது. கணவனின் உடல்நலம்தான் தனக்கு முக்கியம் என்பது போல் தென்பட்டாள். அவள் முகத்தில் அவருடைய உடல் நிலையைப் பற்றிய, பயமும், பதற்றமும் தெரிந்தன.

“நீங்க மாத்திரையைக் கையில் கொடுத்து தண்ணீரை குடிக்க வையுங்கள்” என்றான் அபிஜித்.

அந்தம்மாள் குழந்தையைப் போல் அந்த ஆணையை மேற்கொண்டாள். அவரும் அதை மறுக்கவில்லை. கொபித்துக்கொள்ளவும் இல்லை. மாத்திரையை வாங்கிக் கொண்டே, “நான் செத்துப் போனால் நீயும், உன் மகளும் நிம்மதியாக இருப்பீங்களா?” என்று கேட்டார்.

“அப்படிச் சொல்லாதீங்க.” அவள் அழுதுவிட்டாள். ‘உங்களைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை. நிஷா பெரிய தவறு செய்து விட்டாள். என்னுடைய கவனக்குறைவும் அதற்குக் காரணம். என்னை மன்னித்து விடுங்கள்” அழுதுகொண்டே கைகளை கூப்பினாள்.

அவள் அழுது மன்னிப்பு கேட்டதைப் பார்த்து அவர் கொஞ்சம் அமைதி அடைந்தார்.

“இப்போ என்ன செய்யலாம் என்கிறாய்?” என்றார்.

அந்தம்மாள் விரலை நீட்டி அபிஜித்தை காண்பித்தாள். “அவன் நாம் கஷ்டங்களில் இருக்கும் போது பலமுறை உதவி செய்திருக்கிறான். நம்மைக் காப்பாற்றி இருக்கிறான். அவனிடம் கேட்போம். அவன் சொன்னபடி நடப்போம்” என்றாள்.

அவர் அபிஜித் பக்கம் திரும்பினார்.

அபிஜித் பதில் சொல்வது போல் “முதலில் நிஷாவை அழைத்து, சாதாரணமாக பேசிக் கொண்டே சாப்பிடுவோம்” என்றான்.

“நிஷா வருவாளா?”

“வருவாள். நான் அழைத்து வருகிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை நீங்கள் அதற்கு ஒப்புக் கொண்டால்தான்.”

“என்ன?” என்றாள் மிசெஸ் மாதுர்.

அபிஜித் அவ்விருவரையும் பார்த்துக் கொண்டே சொன்னான். “நீங்கள் இருவரும் ஆவேசம் அடையக் கூடாது. அசல் இந்த விஷயமே தெரியாதது போல் பேச வேண்டும்.”

“நிஷா காதில் நம் உரையாடல் விழுந்து தான் இருக்கும்.”

“விழுந்தாலும் பரவாயில்லை. நான் நிஷாவிடம் பேசுகிறேன். நீங்கள் இருவரும் சாதரணமாக இருப்பதாக வாக்குக் கொடுப்பீங்களா?”

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மாதுர் சரி என்பது போல் தலையை அசைத்தார். மிசெஸ் மாதுர் நிம்மதியாக பெருமூச்சு விட்டாள்.

“வாக்குக் கொடுத்துவிட்டு பின்னால் தவற மாட்டீங்களே?” அபிஜித் கேட்டான்.

“உனக்கு வாக்குக் கொடுத்துவிட்டு தவறுவதாவது? அப்படி செய்தால் என்ன நடக்குமோ எங்களை விட அந்த கசப்பான அனுபவம் வேறு யாருக்கும் இருக்காது.”’ மாதுர் தோள்களை குலுக்கிக் கொண்டார்.

அபிஜித் நிஷாவின் அறைக்குள் சென்றான். கால்மணி நேரம் கழித்து நிஷா அவனுடன் உணவுமேஜை அருகில் வந்தாள். நிஷாவைப் பார்த்தால் மைதிலிக்கு வியப்பாக இருந்தது. தாய் தந்தை நிஷாவைப் பற்றி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே பிரச்சினை என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்தப் பெண்ணுக்கு அதைப் பற்றி லட்சியம் இருப்பதாக தெரியவில்லை.

“ஹலோ மம்மி! ஹலோ டாடீ!’ என்றாள்.

“ஹலோ டியர்” என்றார் தந்தை.

“ஹலோ டார்லிங்” என்றாள் தாய்.

சாப்பாடு முடியும் வரையில் சினிமா, அரசியல் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். மாதுர் சீரியஸ் ஆக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மிசெஸ் மாதுர் நடுநடுவில் மிரட்சியுடன் கணவர் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். நிஷா மட்டும் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.

எல்லோருடைய சாப்பாடும் முடிந்துவிட்டது. நிஷா அறைக்குள் போகும் முன் எல்லோருக்கும் பொதுவாக குட்நைட் சொன்னாள். கடைசியில் அபிஜித் அருகில் வந்து, “தாங்க்யூ அங்கிள்” என்று சொல்லிவிட்டு போனாள்.

மாதுர் தம்பதியினர் கார் வரையிலும் வந்து விடை கொடுத்தார்.

“நான் நிஷாவுடன் மறுபடியும் பேசுகிறேன். நீங்களாக இந்தப் பேச்சை எடுக்காதீங்க” என்றான் அபிஜித்.

“நீ எப்படிச் சொன்னால் அப்படியே செய்கிறோம்” என்றாள் மிசெஸ் மாதுர். இருவரும் குட்நைட் சொன்னார்கள்.

காரில் வரும் போது அபிஜித் சொன்னான். “சில சமயம் பிரச்சினைகள் மனிதனை பைத்தியமாக்கி விடும் இல்லையா?” என்றான்.

மைதிலி தலையை அசைத்தாள். “யாரவது ஒருவர் சமாதானத்துக்கு வந்தால் பிரச்சினையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்” என்றாள்.

“மனிதன் சுயநலம் மிகுந்தவன். தன்னுடைய சுகத்தை விட்டுக் கொடுப்பதற்கு சம்மதிக்க மாட்டான்.” மைதிலியை அருகில் இழுத்துக் கொண்டான். “மாதுர் வீட்டில் அவர்களுடைய சண்டையைப் பார்த்தால் எனக்கு மூளை கலங்கி விடும் போல் இருந்தது. மைதிலி! நமக்கு திருமணம் முடிந்து பதினெட்டு வருடங்கள் ஆகிறது.”

“அடுத்த திங்கள் அன்று பத்தொன்பது வருடங்கள் முடியும்.”

“ஆமாம். பத்தொன்பது வருடங்கள்! ஆனால்…”

“என்ன ஆனால்?”

“நமக்கு இடையில் ஒரு தடவை கூட சண்டை வந்தது இல்லை. வேடிக்கை இல்லையா?”

“குழந்தை குட்டி இல்லையே?” நேராக வந்தது அவள் பதில்.

“அது ஒன்று மட்டும் தான் காரணமா?”

“எனக்குத் தெரியாது. குழந்தைகள் இல்லாமல் இருப்பது கூட ஒரு அதிர்ஷ்டம்தான். மாதுர் பேசிய பேச்சில் இன்று தெரிய வந்தது” என்றாள்.

அவள் சொன்ன தோரணையில் அதற்குப் பின்னால் இருந்த வருத்தம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

“சில்லி! யாராவது ஏதாவது சொன்னால் அதைப் போய் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வார்களா?”

“யாராவது ஏதாவது சொன்னால் சீரியஸாக எடுத்துக் கொள்வதோ எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ ஏதோ ஒன்றுதான் தெரியும் மதில் மேல் பூனையாக இருக்க முடியாது என்னால்.”

“உன் உலகம் ரொம்ப சின்னது மைதிலி!” அவன் ஸ்டீரிங் வீல் மீது உள்ளங்கையை விரித்துக் காட்டி, “உன் கணவன், உன் வீடு, உன் வேலைக்காரர்கள், அவ்வளவுதான்” என்றான்.

“ஊஹும். என் கணவர் மட்டும் தான் என் உலகம்” என்றால் அவன் கை மீது கையைப் பதித்துவிட்டு.

அவன் அந்தக் கையை உயர்த்தி கன்னத்தில் பதிய வைத்துக் கொண்டான்.

“கடவுள் எனக்கு இன்னொரு உலகத்தை தரவில்லை. நான் துரதிர்ஷ்டசாலியோ என்னவோ.”

“அதோ திரும்பவும்..” அவன் அவள் வாயைப் பொத்தினான்.

“நல்லா இருக்கு. இருந்தாலும் வேதனைதான். இல்லாவிட்டாலும் வேதனைதான்” என்றாள். அவள் வார்த்தைகள் சீரியஸ் ஆக இருந்தன.

“அப்படி என்றால்?”

மாதுர் ‘உங்களுக்கு குழந்தைகள் இல்லை. நீங்க அதிர்ஷ்டசாலி’ என்று சொன்ன போது அபிஜித் பதிலுக்கு சொன்னதை நினைவுப் படுத்தினாள்.

அவன் இயலாமையுடன் பார்த்தான். மைதிலி எங்கே கையை விட்டுவிடுவாளோ என்று பயந்தாற்போல் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். படுத்த அடுத்த நிமிடமே அபிஜித் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான். மைதிலிக்குத்தான் உடனே தூக்கம் வரவில்லை.

நிஷா கருவுற்று இருப்பதாகத் தெரிந்ததும் அவள் பெற்றோருக்கு நடுவில் நடந்த சண்டை நினைவுக்கு வந்தது. ஆஸ்பத்திரியில் பிரபாகர் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை எல்லோரும் கொண்டாடியது நினைவுக்கு வந்தது. ஒரு குழந்தை இந்த உலகத்தில் கண்விழித்து பார்க்கும் முன்பே அதனுடைய அதிர்ஷ்டத்தை, துரதிர்ஷ்டத்தை அதன் தலையில் கட்டி விடுவார்கள். இந்த சமுதாயம் வரையறுத்து இருக்கும் கட்டுபாடுகளுக்கு ஏற்ப அந்த எல்லைக்குள் பிறந்தால் தான் அந்த சிசுவுக்கு மதிப்பு. கலங்கிய மன நிலையில் மைதிலிக்கு அரைகுறையாய் தூக்கம் தழுவியது.

கொஞ்சம் தூக்கம் வந்ததோ இல்லையோ, கண்முன் காட்சி நிழலாடியது. சுழன்று பாயும் நதியின் பிரவாகம், கயிற்றுப் பாலம், அதன்மீது தானும் அபிஜித்தும், தொலைவில் சித்தார்த்தா!

அபிஜித்தின் கை தூக்கக் கலக்கத்தின் மைதிலியின் வயிற்றின் மீது படிந்தது. மைதிலியின் மனதில் பலமாக ஒரு எண்ணம் உருவாயிற்று. “உண்மையில் எங்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தையின் வருகைக்காக அபிஜித்தை விட நான்தான் அதிகமாக தவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சின்னஞ்சிறு கைகளின் ஸ்பர்சத்திற்காக என் மனம் இந்த சிருஷ்டியை நோக்கி, “என்னைத் தாயாக்கு” என்று தீனமாய் வேண்டுகொள் விடுக்கிறது.

தனக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்றால் அபிஜித்தை விட தான்தான் அதிகமாக வேதனைப் படுகிறாளோ? மைதிலி அபிஜித்தின் கையின் மீது கையை பதித்தாள். பக்கவாட்டில் திரும்பினாள். தனக்கு மிகவும் அருகில் இருந்த அவன் தலைமீது அவள் இதழ்கள் பதிந்தன. அவள் இதயத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ, “அம்மா!” என்ற அழைப்பு கேட்டுக் கொண்டிருந்தது. மென்மையான அந்த அழைப்புக்கு அவள் மனம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தது. அவள் நிசப்தமாய் அந்த குரலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

Series Navigationசுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *