“என்னால் முடியாது”

This entry is part 8 of 19 in the series 24 மே 2015

 

ரு ஆங்கில தினசரிக்கும், ஒரு தமிழ் தினசரிக்குமாகச் சேர்த்து ஆண்டுச் சந்தா செலுத்தி நாளிதழ் வாங்கிப் படித்து வருபவன் நான். இதை கடந்த நான்கைந்து வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

என் வீட்டுக்குப் பேப்பர் போடும் நியூஸ் ஏஜென்டும் ஒருவரே. அவரை நான் இன்றுவரை மாற்றவில்லை.எதிர் வீடு, பக்கத்து வீடு என்று பலரும் ஆள் மாற்றி, ஆள் மாற்றிச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் அதைப் பண்ணுவதில்லை. பொதுவாக மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அப்படித்தான் அவர் ஒருவரே என்னிடம் நிலைத்தவராயிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் பல சமயங்களில் ஆளை மாற்றி விடுவோமா என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் நான். அந்த நிலைக்குப் போய்விட்டு, போய்விட்டுத் திரும்பி விடுவதுதான் என் வழக்கம். என்னவோ மனசானதில்லை. எதற்கு, இதைப் போய் பெரிசு படுத்திக் கொண்டு என்று நினைத்து நினைத்தே விட்டு விடுவதுதான் என் பழக்கம்.

அப்படி நினைக்காதீங்க….நீங்க ஆளை மாத்தறதுன்னா மாத்திக்கலாம்….எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லை….என்பதாய்த்தான் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பல சமயங்களிலான பதில்கள் கூட அப்படித்தான் இருக்கும். ஆனாலும் எனக்கு மனசு வந்ததில்லை. அவனுக்கு எவ்வளவு சங்கடங்களோ….மனுஷங்க எல்லாரும், எல்லா நேரத்திலேயும் ஒரே மாதிரியாவா இருக்க முடியுது…? இல்ல, எல்லா விஷயத்துலயும் கரெக்டா இருந்திட முடியுதா? சரி, விடு கழுதய….என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு அடங்கிப் போவேன்.

சரி…சரி…விஷயத்துக்கு வாங்க என்று நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு. எங்கள் வீடு பேப்பர் போடும் பையனுக்கான லைனிலேயே கடைசி. கட்டக் கடைசி. எங்கள் வீட்டு வாசலில் தினசரியை எறிந்த அடுத்த கணம் அந்தப் பையன் மின்னலாய் சைக்கிளில் பறந்து மறைவதைக் காணலாம். டே…டேய்….என்று அழைப்பதற்குக் கூட ஆள் இருக்க மாட்டான். மாயமாகி விடுவான். என்ன சொன்னேன்…தினசரியை என்றேனல்லவா….அங்குதான் இருக்கிறது பிரச்னை….தினசரிகளை என்று பன்மையில்தானே சொல்லியிருக்க வேண்டும்…ஒரு ஆங்கிலம்…ஒரு தமிழ்… இங்குதான் வந்தது வினை….

என்ன..!…பார்த்தீங்களா? ஒரு பேப்பர மட்டும் போட்டுட்டுப் போயிட்டான்….

வந்து, குனிந்து எடுத்தால், ஒரே ஒரு தமிழ் தினசரி மட்டும் கிடக்கிறது. அல்லது ஒரே ஒரு ஆங்கில தினசரி மட்டும்…

என்னாச்சுங்க….இன்னைக்குப் பேப்பரையே காணோம்….லீவா?

இன்னைக்கு என்னத்துக்கு லீவு? சாதாரண நாள்தானே….வருவான்….கொஞ்சம் லேட்டாப் போடுவான்……பொறு…

மனையாள் வாசலில் அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். பேப்பர் வந்தபாடில்லை.

ஃபோன் பண்ணுங்க…. அவனுக்கு….அவளுக்குக் காரியத்திற்கு நடுவே பேப்பர் படிக்காவிட்டால் ஆகாது….அது அரு மருந்து போல்….சமையலில் உப்பு உரப்பு குறைந்தாலும் குறையும், கூடும்…தினசரி படிப்பது குறையாது. மறையாது. ஃபோனைக் காதில் செருகியிருக்கிறேன் நான்.

அப்டியா சார்….இன்னைக்குப் பையன் லீவு….வேறே ஒருத்தன்…விட்டுட்டான் போலிருக்கு….குடுத்து விடுறேன் சார்….

ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் ஃபோனடிக்கிறேன்.

இந்தா…வந்திட்டேயிருக்கான் சார்…… – நாலு ரூபாய் பேப்பருக்கு எத்தனை தடவை பேசுவது?

லைன்லயே கடைசி வீடு சார் உங்களுது…பசங்க அவ்வளவு தூரம் வந்து போட சலிக்கிறாங்க சார்….ஏரியா பெருகிப் போச்சா…என்னால சமாளிக்க முடில சார்…..பசங்க கிடைக்கமாட்டேங்கிறாங்க…என்ன பண்ணச் சொல்றீங்க….? பெரிய நொம்பளமா இருக்கு சார்….

அப்புறம் ஏம்பா ஏத்துக்கிறே? முடியாதுன்னு சொல்ல வேண்டிதானே? நான் வேறே யாரையாச்சும் வச்சுப்பேன்ல…..எனக்குக் கரெக்டா பேப்பர் வரணும்…மணி எட்டாச்சுன்னா நியூஸ் பழசுப்பா….!?

சார்….சார்…கோபப் படாதீங்க….இந்தா வந்திருவான் சார்….ஒவ்வொரு நாளைக்கு இப்டி ஆகிப் போவுது சார்….போற போக்கப் பார்த்தா, இனிமே நாந்தான் தூக்கிட்டு அலையணும்….

வார்த்தைதான் வந்தது…பேப்பர் வரவில்லை. எத்தனை நாட்கள்…? எத்தனை ஏமாற்றங்கள்…..ச்சே…! நம்ப வீட்டுக்கு மட்டும் ஏன் இப்டிப் பண்றான்…?

ஏங்க…பேப்பர் வந்திருச்சுங்க……!!

வந்திருச்சா…..? போட்டுட்டானா? சத்தமே கேட்கலியே….? சிட்டாப் பறந்துடறானே….? ஏதாச்சும் சொல்லலாம்னா ஆளப் பிடிக்கவே முடியலியே?

அய்யய்ய….! என்னங்க இது…ரெண்டையும் ஒரே தமிழ் பேப்பராவே போட்டுட்டுப் போயிருக்கான்….அன்னைக்கு ஒரு நா இங்கிலீஷ் பேப்பரே ரெண்டு போட்டுட்டுப் போனான்….என்ன கண்றாவி இது…?

அட…ராமச்சந்திரா….!!!

விடி காலையில் இருள் பிரியாத நேரத்தில் யோகா வகுப்பிற்காகக் கிளம்பி வண்டியில் போய்க் கொண்டிருக்கிறேன். தெருத் திருப்பத்தில் அந்த மூடிய பெரிய பலசரக்குக் கடை வாசல் அகன்ற சிமின்ட் மேடையில், தினசரிகளைப் பரப்பி, இணைப்புகளோடு சேர்த்துச் சேர்த்து வைத்து, லைன் வாரியாக வேக வேகமாக அடுக்கிக் கொண்டிருக்கின்றன நான்கைந்து ஜோடிக் கைகள். ஜிவ்வென்ற பனிக்காற்று காதைத் துளைத்துக் கொண்டு கடுங் குளிரைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அங்கே அந்தச் சிறுவர்கள் புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தினசரியை எல்லா வீடுகளுக்கும் போட்டு முடித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய ஒரு சிலரும் உண்டு அதில் என்பதை என் மனம் அமைதியாய்ச் சொல்கிறது…..அவர்களைத் துரிதப் படுத்திக் கொண்டிருக்கிறான் அவன். இப்படி எத்தனை பேர் தினமும் விழுந்து விழுந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உண்மையிலும், நேர்மையிலும், உழைப்பிலும் நம்பிக்கை இருக்கக்கண்டுதானே இப்படி இயங்குகிறார்கள்? இன்னும் அங்கங்கே விடாமல் மழை பெய்கிறதென்றால் அது இவர்களுக்காகத்தானோ?

சார்…கோபப் படாதீங்க சார்…இந்தா…பையன் வந்திட்டேயிருக்கான் சார்…கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்…. –

கண்களில் கண்ணீர் மல்க, அவர்களைப் பார்த்துக் கொண்டே கடக்கிறேன் நான்…!!! சின்னச் சின்ன இடறல்களுக்கெல்லாமா ஆளை மாற்றுவது? என்னால் முடியாது…!!! அடி மனசு உறுதியாய் நின்றது.

————————————————

 

Series Navigationபரிசுத்தம் போற்றப்படும்அந்தப் புள்ளி
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Comments

  1. Avatar
    கல்யாண் says:

    ஆகச்சரி!
    எனக்கும் இவ்வாறான தொடர் அனுபவமும் அதே போன்ற மனமும் தொடர்கிறது.
    நீங்க சரியான ஏமாளி, போங்க என்று சிலவேளை வீட்டில் சொல்வதுண்டு!

    நல்ல அனுபவ பகிர்வுக்கு, நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *