பெரியவர்க்கும் செய்தி சொல்லும் பெருமை மிகு பாடல்கள்

This entry is part 17 of 19 in the series 2 அக்டோபர் 2016

[தங்கப்பாவின் “பூம் பூம் மாட்டுக்காரன்” குழந்தைகட்கான பாடல்கள் நூலை முன்வைத்து]

 

குழந்தைப் பாடல்களுக்கு இன்றியமையாதவை எளிமையும், ஓசை நயமுமே ஆகும். சிறுவர் பாடல்களுக்கு இவை இரண்டோடு சற்றுக்கருத்தும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அக்கருத்து வலிமையாக வலியுறுத்தப்பட்டு திணிப்பதாக இருத்தல் கூடாது. ‘அதோ பாரு காக்கா’ எனத் தொடங்கும் பாடலைக் குழந்தைப் பாடலாகவும், ‘ஓடி விளையாடு பாப்பா’ என்னும் பாடலை சிறுவர் பாடலாகவும் கொள்ள இடமுண்டு. இக்கருத்துகளுடன்தாம் தங்கப்பாவின் அண்மை வெளியீடான “பூம் பூம் மாட்டுக்காரன் “ நூலை அணுக வேண்டி உள்ளது.

 

தங்கப்பா இயல்பாகவே மென்மையான மனம் கொண்டவர்; அன்பையும், இயற்கையையும் நேசிப்பவர்; தவறு கண்டால் கூட கடிதோச்சி மெல்ல எறிபவர். இப்படிப்பட்ட இயல்புகள் இருப்பவரிடம்தாம் “பூம் பூம் மாட்டுக்காரன்” போன்ற நூல்கள் உருவாகும்.

 

இந்நூலில் மேலே கூறிய குழந்தைப்பாடல்கள் மற்றும் சிறுவர் பாடல்கள் இரண்டும் விரவி இருப்பதைக் காண முடிகிறது. முதல் 18 பாடல்களைக் குழந்தைப்பாடலாகக் கொள்ள இடமுண்டு. அதிலும் சிறப்பாகப் “பாடும் பறவைகள்” சிறந்த குழந்தைப்பாடலாகும். அதேபோன்று “மூலிகைகள்” பாடலைச் சிறந்த சிறுவர் பாடல் எனலாம்.

 

“பாடும் பறவைகள்’ பாடல் ஓசை நயத்தோடு ஒரு குழந்தைக்குச் சில ஒலிகளையும் அறிமுகப்படுத்துகிறது. அவ்வொலிகள் குழந்தைக்குச் சிந்தனையைத் தூண்டி மற்ற ஒலிகளுடன் தான் அறிந்த ஒலிகளை ஒப்புமைப்படுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்க்க உதவுகிறது.

 

இப்போதெல்லாம் மாறிமாறி வலம் வரும் காலச் சூழலில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலைகள் சுகமான சுமைகளாகி விட்டன. அவற்றைத் தவிர்க்க இயலவில்லை. எனவே வீட்டில் தோட்டம் அமைப்பதையும், அதைப் பராமரிப்பதையும் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

நிலந்திருத்தித் தோட்டம் போட

நேரமில்லை; விட்டு விட்டோம்

தலைதெறிக்கும் பள்ளி வேலை

தாத்தாவுக்கோ எழுத்து வேலை

எனும் எளிமையான அடிகளால் தங்கப்பா அதனை விளக்குகிறார். ஆனால் அதே நேரத்தில் விதைவிதைக்காமல் வீட்டில் முளைக்கும் கீழாநெல்லி, மணித்தக்காளி, குப்பைமேனி போன்றவற்றைக் களைகளாகக் கருதி எடுத்து விடாமல் பயன்படுத்தும் விதத்தையும் பாடல் சொல்கிறது. இப்பாடலில் ‘கஷாயம்’ என்று உலக வழக்கத்தில் சொல்லும் சொல்லைத்தான் தங்கப்பா ‘தீநீர்’ என்று குறித்துள்ளார் என எண்ணுகிறேன்.

”அப்பப் போது பறித்திடுவோம்;

அருந்து தீநீர் செய்திடுவோம்”  என்பன அப்பாடல் அடிகள்.

 

37-ஆம் பாடல் “காட்டுக்கொல்லையில் மாட்டுப்பொங்கல்” சிறுவர்களுக்கு மாட்டுப்பொங்கலன்று திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுவதைக் கூறுகிறது. அத்துடன் அன்று வீட்டில் வளர்க்கும் குதிரைக்கும் பொங்கல் வைக்கும் புதுப்பழக்கத்தைத் தங்கப்பா காட்டுகிறார். ஆமாம்; எல்லா உயிரினங்களும் ஒன்றுதானே!

”கரும்பு வெல்லப் பொங்கலும்

காய்கறியும் செய்திட்டோம்

விரும்பும் வண்ணம் மாட்டுக்கே

விருந்து வைத்து மகிழ்ந்திட்டோம்

 

குதிரையும் தான் வந்தது,

கூட நின்று தின்றது

அதுமுடிந்த கையுடன்

அமர்ந்தோம் நாங்கள் பந்தியில்”

என்ற அடிகள் வீட்டுக்குப் பணிபுரியும் வளர்ப்புகள் தின்றபிறகு நாம் உண்ண வேண்டியதைக்காட்டுகிறது. அத்துடன் ளிமையான ஓட்டுக்கூரை, மண்தரை, ஓலைப்பாய் போன்ற சொற்கள் அக்காலத்திலிருந்த இனிமையான கிராமத்தையே நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றன.

 

23-ஆம் பாடல் “நெடுநாள் விருப்பம் நிறைவேறிற்று” என்பது சிறுவர்க்கான சிறந்த சிறுகதையாக மிளிர்கிறது. நீண்ட நாள்களாக அவ்வீட்டுச் சிறுவர்களுக்கு நாய் வளர்க்க விருப்பமுண்டு. ஆனால் வாய்ப்பில்லை. அப்போது அவ்வீட்டுக்கருகில் இருந்தவர்கள் தம் வளர்ப்பு நாயை, அதுவும் சினையாக இருக்கும்போது தெருவில் விட்டுவிட்டு அயல்நாடு சென்று விட்டனர். செல்வராகிய அவர்தம் கல்மனத்தை இதன் மூலமறிய முடிகிறது.

 

அந்த நாய் வீதிகளில் எல்லாரிடமும் தன்னைப் பேணுமாறு பார்வையாலே கேட்டுக் கெஞ்சுகிறது. தாத்தாவின் பேரனும் பேர்த்தியும் அந்த நாயை வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து,

வேளை வேளை சோறு போட்டு

விரும்பி நாயைக் கொஞ்சினர்.

நாள் இரண்டு போய் மறுநாள்

நாயும் குட்டி ஈன்றதே” என்று பாடல் சொல்கிறது. சிறுவர்க்கோ இப்போது மகிழ்ச்சி. இத்தனை நாள்கள் அவர்கள் கொண்டிருந்த விருப்பம் நிறைவேறியதே என்று மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றனர்.

”கைகள் தட்டிப் பாட்டுப் பாடிக்

களிப்பால் துள்ளிக் குதித்தனர்.

“ஐயா, எங்கள் நெடுநாள் ஆசை

அடைந்து விட்டோம்” என்றனர்.

இனிமையான எளிமையான சொற்களினால் சிறுவர்கள் உயிரினங்களிடம் அன்பு காட்ட வேண்டியதை இது கற்றுத் தருகிறது.

 

பூனை செத்ததால் இப்போது துணிந்து மீண்டும்கூடு கட்ட வரும் சிட்டுக்குருவிகள், காலை நக்கிய நாய்க்குட்டியைக் காக்கும் இளவேனில், சிற்றூர்க் காட்சி போன்றவை நெஞ்சில் இடம் பிடிக்கும் கருத்து வளம் கொண்டவையாகும்.

‘நிலைப்பேழை’, ’கூனை’, ’கம்மாலை’, போன்ற சொற்களை சிறுவர்க்கு அறிமுகம் செய்வது தேவைதான். ஆனாலும், 15-ஆம் பாடலில்

“நீரில் சிறகி வாத்துகள்

நீந்தும் அழகைப் பார்க்கலாம்”

என்பதில் உள்ள “சிறகி”எனும்சொல்லும்,

30-ஆம் பாடலில்,

வீளை போன்ற குரலிலே—இன்ப

வீணை மீட்டிப் பாடுமே”

என்பதில் உள்ள “வீளை” எனும் சொல்லும்,

36-ஆம் பாடலில்,

”கடுத்தம் வேண்டாம் என்றே

கனிவாய் விட்டுப் பிடிப்பேன்”

என்பதில் உள்ள “கடுத்தம்” எனும் சொல்லும் அருஞ்சொற்களாய் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். 34—ஆம் பாடல் பன்றி சேற்றில் புரள்வதையும், குட்டையாக இருப்பதையும் குற்றமாகக் காட்டுகிறது. அவை இரண்டுமே பன்றிக்கு இயல்பாக அமைந்தவை அன்றோ? அந்த உயிரினம் படைக்கப்பட்டிருப்பதே அப்படித்தானே? ஓர் உயிரினம் தன் இயல்பை விட்டு மீறிச் செயல் புரிதல்தான் நல்லதன்று. ‘அல்வா’ தனித்தமிழ்ச்சொல்லா என்பது எனக்கு ஐயமே!

 

மூலிகைகள் வளர்ப்பது, உலகிற்காக உழைப்பது, பிள்ளையை எப்படிப் படிக்கச் சொல்வது, உயிரினங்கள் மீது அன்பு காட்டவேண்டியது போன்ற பலவற்றைப் பெரியவர்களும் கற்றுணர வேண்டிய பாடல்கள் நிறைந்த அருமையான தொகுப்பாகும் இது. நூல்மிகவும் நேர்த்தியாக சிறந்த அச்சமைப்புடன், தேவையான படங்களுடன் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

 

[பூம் பூம் மாட்டுக்காரன்—-குழந்தைகட்கான பாடல்கள்—தங்கப்பா—- வெளியீடு : வானகப் பதிப்பகம், 7, 11, ஆம் குறுக்கு, அவ்வை நகர், புதுவை—8;  பக் : 88, விலை : உரூ 80]

Series Navigationபண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு“ரொம்பவே சிறிதாய்….”
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *