அப்படித்தான்

author
1 minute, 7 seconds Read
This entry is part 9 of 14 in the series 19 மே 2019

வே.ம.அருச்சுணன் 

பள்ளியின் தலைவிதியை நிர்ணயிக்கும்  யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவை, அன்று காலை கல்வி அமைச்சு வெளியிடவிருந்தது. தலைமையாசிரியர் வேந்தன், காலை மணி ஆறு முப்பதுக்கே பள்ளிக்கு வந்துவிடுகிறார். வழக்கமாக தமது முதல் வேலையாக  பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தத்தை உறுதிபடுத்திக் கொள்ள, பனிமழை பொழியும் மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு பள்ளியின் இயற்கையின் அழகை  இரசித்தவாறு நடந்து செல்லும் அவர், அன்று அவ்வாறு செய்யாமல் நேராக தமது அறைக்குச் சென்று கணினியின் முன் அமர்கிறார். ஏதோ முக்கியத் தகவலைத் தேடும் பணியில் மூழ்குவது தெரிகிறது.அவரின் முகத்தில் என்றுமில்லா பதற்றமும் இறுக்கமும் தெரிந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான்  அவர் அப்பள்ளிக்கு  தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றிருந்தார்.

துணைத்தலைமையாசிரியர் பிரியா அப்போது அறையினுள் நுழைகிறார்.

”வணக்கம் சார்” இருக்கையில் அமர்கிறார்.

“வணக்கம் டீச்சர்……..” கணினியை இயக்கியவாறு.

“என்ன சார்…….. ஒரே பதற்றமா இருக்கீங்க?”

“ஆ….ஆ….இன்னைக்கு  யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவு வெளியாவுதுலே……!”

“கவலைய விடுங்க சார்…..நம்ம மாணவர்கள் சிறப்பா தேர்ச்சியடைவாங்க!”

“தொடர்ந்து பள்ளியில மாணவர்களின் எண்ணிக்கை கூடனும்னா தேர்வு முடிவு சிறப்பாக இருக்கனுமே….!”  

”கால நேரம் பார்க்காம ஆசிரியர்கள் கடுமையா உழைச்சிருக்காங்க சார்….!”

“ம்…..ம்……நல்ல செய்தி வரனும்னு வேண்டிக்கிறேன் டீச்சர்….!”

“நிச்சயமா இன்னைக்கு நல்ல செய்தி வரும் சார்….” பிரியா உறுதியாக கூறுகிறார்.

பிரியாவின் தன்னம்பிக்கை அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. மனம் அழுத்தம் குறைந்தவராக  பிரியாவை நோக்கி புன்னகைக்கிறார். அவர்களிருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது தலைமையாசிரியரின் கைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வருகிறது. குறுந்தகவலை விரைவாக வாசிக்கிறார். மறுகணம் அவரது கண்கள் அகல விரிகின்றன!

“என்ன விசியம் சார்…..? ”

“…………………..”

அவர் காட்டிய குறுந்தகவலை பிரியா ஆவலுடன் வாசிக்கிறார்! 

“வாழ்த்துகள் சார்…..! வாழ்த்துகள் சார்…..!” மகிழ்ச்சியுடன் பிரியா தலைமையாசிரியரின் கையைப்பிடித்து வேகமாகக் குலுக்குகிறார்.

தன்னிலையடைந்த தலைமையாசிரியர் “வாழ்த்துகள் பிரியா….வாழ்த்துகள்! …..இந்த வெற்றிக்கு நீங்கள்தான் முழுக்காரணம்!”

“உங்க வழிகாட்டலுக்கும், கடினமான உழைப்புக்கும் கிடைத்த பரிசு சார் இது…!” அங்கு வீசிய மகிழ்ச்சியின் அலை அடங்குவதற்குள் தலைமையாசியரின் கைபேசி மீண்டும் ஒலிக்கிறது! அதனை ஆவலுடன் எடுக்கிறார்!

மறுமுனையில் அனாமதைய குரல் ஒன்று அதிரடியாய் ஒலிக்கிறது “மாணவர்களைக் காப்பி அடிக்க வச்சுதானே நூறு சதவீதத் தேர்ச்சிய பெற்றீங்க…..! த்தூ….இந்த மானங்கெட்ட பொளப்பு நடத்துதற்கு……எங்காவது போய் தூக்கு மாட்டிக்கிட்டுச் சாகலாம்!”  கொதி எண்ணை காதில் ஊற்றியது போன்று அவரின் முகம் சுருங்கிவிடுகிறது!

“என்ன ஆச்சி சார்?” பதற்றமடைகிறார் பிரியா.

“பொறாமையால யாரோ வெந்து சாகிறாங்க…..! அத விடுங்க டீச்சர்…..! நமக்குத் தலைக்கு மேல வேலையிருக்கு…”

நூற்றி ஐம்பது மாணவர்கள் கொண்ட ஒரு சிறிய  பள்ளி. பள்ளியையொட்டிய  புதிய குடியிருப்பு பகுதியிலிருந்து மாணவர்கள் அங்கு கல்வி பயின்றார்கள். அடிப்படை வசதிகளை அதிகம் அனுபவிக்காத மாணவர்கள். தாய்மொழியைக் காக்கப் போராடும் கல்வி கற்ற பெற்றோர் பலரை தன்னகத்தே கொண்டு, ஒதுக்குப்புறத்தில்  அமைந்திருக்கும் அத்தோட்டப் பள்ளியில் இருபது ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.  அவர்களில் பெரும்பாலோர் இளமையானவர்களாக இருந்தது அப்பள்ளிக்கு வாய்த்த பெரும் பேறு என்றே கூறவேண்டும்.

காலையில் மாநில கல்வி இயக்குநர் அனுப்பிய குறுந்தகவலை, ஆசிரியர்களுடனான சிறப்பு கூட்டத்தில் தலைமையாசிரியர் அறிவிக்கிறார். “ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்தாண்டு, நமது பள்ளியில் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய முப்பது மாணவர்களும் சிறப்பாக தேர்வு பெற்று பள்ளி நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றனர் என்ற இனிய செய்தியை உங்கள்  அனைவரிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தலைமையாசிரியர் அறிவித்தபோது ஆசியர்களின் கையொலி பள்ளி மண்டபத்தை அதிரச்செய்கிறது.

ஆசிரியர்கள் ஒருவருக் கொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறி கொள்ளும் அரிய நிகழ்வு அப்பள்ளியின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  

“இருபத்தைந்து மாணவர்கள் எல்லா பாடங்களிலும் எட்டு ஏக்கள் பெற்ற வேளை ஐந்து மாணவர்கள் ஏழு ஏக்கள் பெற்று சாதனை படைத்திருக்கும் செய்தி  ஆசிரியர்களின் முகங்களில் மகிழ்ச்சியை மலையென உயர்த்திக்காட்டிக் கொண்டிருந்தது.  

சாதனை ஏற்படுத்திய அப்பள்ளி குறித்து அதிகாலையிலேயே வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றன. விசியமறிந்து  பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர். பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியினரும் அந்தத் தோட்டப்பள்ளிக்கு வருகையளிக்கின்றனர்.மக்களின் படையெடுப்பால் பள்ளி விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது. நாட்டில் எங்கோ ஒரு மூலையில் அமைந்திருக்கும் சிறிய தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஒரே நாளில் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுவிடுகிறது!

காலை ஒன்பது மணிக்கு  கல்வி அமைச்சர் பள்ளிக்கு வருகை புரிகிறார்.வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்குகிறார். சிறந்த மாணவராகத் தேர்வு பெற்ற மாணவர் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு  சிறப்பு பரிசும் வழங்கிச் சிறப்பிக்கிறார்.

தமிழ்ச்செல்வன் தேசிய அளவில் நடைபெற்ற தமிழ்மொழி பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்று சாதனைபடைத்தவர். ‘தமிழே என் உயிர்’ என்று மேடையில் முழங்கியவர். தமிழைக் காப்பதே என் கடமை என்றும் மேடை தோறும் உரக்க பேசியவர்.இவரின் உணர்ச்சிமிகு பேச்சைக் கேட்டு மக்கள் கனத்த கையொலி எழுப்பி அவருக்கு பாராட்டு தெரிவித்த மேடைகள் பலவுண்டு! தமிழைக் காக்கும் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்க இளைய தளபதி தமிழ்ச்செல்வன் புறப்பட்டுவிட்டார் என்று மக்கள் பெருமிதம் அடைந்த தருணங்களும் கணக்கிலடங்கா…!

சிறந்த முறையில் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு உழைத்த பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி அமைச்சர் நற்சான்றுகளை வழங்கினார்.  தலைமையாசிரியருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட வேளை மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

மறுநாள் பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாட்டில், அந்த வட்டாரத்திலுள்ள   கொடைநெஞ்சர் சாதனை புரிந்த  முப்பது மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்க கல்வி நிதியாக  தலா ஆயிரம் வெள்ளியை அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 இடைநிலைப்பள்ளியில் தொடர்ந்து தமிழ்மொழியைக் கற்று சிறந்து விளங்குவதுடன், தாய்மொழியான தமிழ்மொழியைத் தொடர்ந்து வாழ்விக்க வேண்டுமாய் அவர் மாணவர்களை அன்புடன் கேட்டுக்கொண்டார். மேலும், இடைநிலைப்பள்ளியிலும் தமிழ்மொழியைக்கற்கும் மாணவர்களுக்கு நிதி வழங்குவதாகவும் அறிவிப்பு செய்தார். உதவி பெற்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்ச்செல்வன் தலைமையில் தவறாமல்  தமிழ்மொழியைக் கற்கப்போவதாக கொடை நெஞ்சரிடம்  உறுதி கூறுகின்றனர்.      

ஜனவரி  முதல் வாரத்தில் பள்ளி ஆரம்பமாகிறது. தமிழ்ப்பள்ளியில் பயின்ற முப்பது மாணவர்களும் அருகிலுள்ள இடைநிலைப் பள்ளியில் படிவம் ஒன்றில் மகிழ்ச்சியுடன் கல்வியைத்  தொடங்குகின்றனர்.

அவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாவட்டத்தில் அந்த ஒரு பள்ளியில்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.சுற்றுபுறத்திலுள்ள நான்கு தமிழ்ப்பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அங்கு பயில்கின்றனர்.

அப்பள்ளியை ‘டவுண் தமிழ் ஸ்கூல்’ என்றும் சில பெற்றோர்கள் நகைச்சுவையாக கூறுவோரும் உண்டு. தமிழ் மாணவர்களை அதிகமாகக் கொண்ட பள்ளி என்பதால் அவ்வாறு கூறுவார்கள். தமிழ் மாணவர்கள் காலையில் பள்ளிக்குச் செல்லும் வேளையிலும், பிற்பகலில் பள்ளிமுடிந்து வீடு திரும்பும் வேளையிலும் பார்ப்போருக்கு அது ஒரு தமிழ்ப்பள்ளியோ என்று எண்ணத்தை  எழச்செய்யும்.     

இடைநிலைப்பள்ளியிலும் தமிழ் மாணவர்களின் மத்தியில் தமிழ்ச்செல்வன் தலைவனாக வலம் வருகிறான். அவன் மலாய், ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவன். மொழி ஆளுமையினால், பள்ளியில் எல்லா இன ஆசிரியர்களிடமும் பயமின்றி பேசுகிறான். பேசுவதற்குத் தயங்கும் மாணவர்களுக்கு இவன்தான் பேச்சாளராகத் திகழ்வான். தன்னிகரற்ற தலைவனாக புதிய  பள்ளியிலும் மிகுந்த  உற்சாகமுடன் நடைபயில்கிறான். மற்ற தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்திருந்த மாணவர்களும்  அவனிடம் பணிவுடன்  நடந்து கொள்வது கூடுதல் வியப்பாக இருந்தது.

தமிழ்ப்பள்ளியில் அவனுக்கிருந்த கட்டுப்பாடுகள் இங்கு அறவே இல்லாமல் போய்விடுகிறது.இப்படியொரு வாய்ப்பை அவன் எதிர்பார்க்கவே இல்லை.அவனுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவே உணர்கிறான். பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவனுக்குப் பலர் நண்பர்களாயினர். எப்போதும் நண்பர்களுடனே சுற்றித்திரிவான். சில வேளைகளில் பள்ளி வளாகத்தில் இருந்தாலும் வகுப்புக்குச் செல்லாமல் சிற்றுண்டிச் சாலை, மரத்தடி, நூலகம் போன்ற இடங்களில் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பான்.

“டேய் விஜி….இங்க வாடா!” தமிழ்ச்செல்வன் கூப்பிடுகிறான்.

“நீ யாருடா என்னை கூப்பிட…?” அலட்சியமுடன் நடந்து செல்கிறான் விஜி.

“டேய் விஜி….தள  கூப்பிடுறார்ல, வாடா இங்கே….!” கூட இருந்தவன் அதட்டுகிறான்.

“அது யாருட புது தள ” அலட்சியமாகக் கேட்கிறான் விஜி.

“தமிழ்தாண்டா இங்கே புது தள…” மற்றொருவன் கூறுகிறான்.

“டேய்….நான் போன வருசமே இங்கே தளயாயிட்டேன்…தெரியுமா” ஏலனமுடன் கூறுகிறான் விஜி.

அடுத்த சில வினாடிகள் அங்கு சண்டை தூள் பறக்கிறது. தமிழ்ச்செல்வனும் நண்பர்களும் விஜியை நையப்புடைக்கின்றனர். பெரும் படையினால் தாக்குண்ட விஜி, வாயிலும் மூக்கிலும் வடியும் ரத்தத்தைத் துடைத்தபடி அங்கிருந்து வெளியேறிய விஜி……”உன்….சாவு என் கையிலதான்டா….!” என்று தமிழ்ச்செல்வனை எச்சரித்துவிட்டுச் செல்கிறான்.   

புதிய ‘தள’ ஆக தமிழ்ச்செல்வன்  அங்கிகரிக்கப்படுகிறான். நண்பர்கள்  அவனை  தோளில் தூக்கிக் கொண்டு கொண்டாடுகின்றனர். அன்று முதல் பள்ளியில் அவன் வைத்ததுதான் சட்டம். அவனை மீறி அங்கு எதுவும் நடக்காது!

பள்ளி தொடங்கிய இரண்டாவது மாதம். புதிதாக வந்த தமிழ் மாணவர்கள் அனைவரும்  பள்ளி மண்டபத்தில் கூடுகின்றனர். தமிழ் மொழியைப் போதிக்கும் பொறுப்பாசிரியைகள் இருவர் தமிழ்மொழியை எடுக்கும் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்கள். வகுப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை முதல்  நண்பகல் 12.30 முதல் 2.30 வரை நடைபெறுவதால் மாணவர்கள்  தவறாமல் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றனர்

மாணவர்கள் பள்ளியில்  தமிழ்மொழி பயில்வதற்குப்  பெற்றோர் அனுமதி தரவேண்டும். அதற்கான அனுமதி கடிதம் சுமார் நூற்று ஐம்பது மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அனுமதி கடிதத்தை மறுநாள் ஆசிரியைகளிடம்  சேர்ப்பிக்கப் படவேண்டும் என்று  வலியுறுத்தப்படுகிறது.  

“தமிழ்ப்பள்ளியில்தான்…..தமிழ்ப்படி, தமிழ்ப்படின்னு ஆசிரியர்கள் கழுத்தை அறுத்தார்கள்னா…..இங்கேயும்…வந்துட்டாங்க……! பள்ளியில எஞ்சோய் பண்ண விடுறாங்களா வாத்தியாருங்க…?” நான் டாக்டருக்குப் படிக்கப்போறேன்.தமிழ் படிக்க வேண்டிய அவசியமில்ல! அதான் ஆறு ஆண்டுகள் தமிழ்ப்படிச்சிட்டோமே? இன்னும் எதுக்குத் தமிழ்ப்படிச்சிக்கிட்டு? ஒரு மாணவன் ஆசிரியையிடம் பட்டிமன்றம் நடத்துகிறான்!

“என் பஸ் ஸ்கோலா பன்னிரண்டே காலுக்கெல்லாம் வந்துடும். பஸ்சை விட்டுட்டேனா நான் வீட்டுக்கு நடந்துதான் போகனும். ரோட்டுல நடந்து போறத எங்க அம்மா அப்பா அனுமதிக்க மாட்டாங்க!  நான் வகுப்புக்கு வரமுடியாது……!” மற்றொரு மாணவி பொறுப்பாசிரியையிடம் கண்ணை கசக்குகினாள்!

பெற்றோரின் அனுமதி  கடிதத்தை ஆசிரியைகளிடம் கொடுப்பதற்காக  மாணவர்கள் மண்டபத்தில் கூடுகின்றனர்.அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த ஆண்டு கூடுவார்கள் என்று  ஆசிரியைகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஆயினும், அன்று கூடியிருந்த  மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஐந்து மாணவர்கள் மட்டுமே அனுமதி கடிதத்தை ஆசிரியைகளிடம்  வழங்குகின்றனர்.

அப்போது, தாமதமாக மாணவர் கூட்டம் தமிழ்ச்செல்வன் தலைமையில் அங்கு  வருகிறது. ஐம்பது மாணவர்கள் அவனுடனிருந்தனர். கடந்த ஆண்டு தமிழ் வகுப்பில் கலந்து கொண்டிருந்த மாணவர்கள் சிலரும் அந்த கூட்டத்தில் கலந்திருந்தனர்.

‘தமிழே என் உயிர்’ என்று மேடை தோறும் முழங்கிய தமிழ்ச்செல்வன் ‘தமிழ்ப்படிக்க விரும்பம் இல்லை’ என்ற குறிப்போடு நிரப்பப்படாத முப்பது பாரங்களையும் மொத்தமாக அவன் ஆசிரியைகளிடம் கொடுத்துவிட்டு தம் பரிபாரங்களுடன் அட்டகாசமான சிரிப்புடன் அங்கிருந்து தெனாவெட்டுடன் மெதுவாக வெளியேறுகிறான். பொறுப்பாசிரியர்கள் இருவரும் அவன் போவதையே மௌனமுடன்  பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பள்ளி வளாகத்தின் நுழைவாசலில் பட்டாசு வெடியுடன் விஜி தம் படையுடன் புதிய ‘தள’ யின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறான்!

                                                            முற்றும்

Series Navigationநிலவு பல மில்லியன் ஆண்டுகள் உட்கரு உஷ்ணக் குளிர்ச்சியால் சுருங்கி நிலநடுக்கம் நேர்கிறது.தீர்ப்பும் விசாரணையும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *