‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 9 in the series 18 ஏப்ரல் 2021
  1. விரிவு

 

நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க

அந்தரத்தில் அலைகிறது காற்றாடி

செங்குத்தாய்க் கீழிறங்குகிறது;

சர்ரென்று மேலெழும்புகிறது

வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது

தென்றலின் வேகம் அதிகரிக்க

தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு

உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம்

அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில்

சிக்கிக்கொண்டுவிடுகிறது.

எத்தனை கவனமாக எடுத்தும்

காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.

ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் தொடரும்

காற்றாடியின் பெருமுயற்சி

கையின் களைப்பை விரட்டியடிக்கிறது.

காற்றாடிக்காக வானம் மேலே மேலே போவது போலவும்

கீழே கீழே வருவது போலவும்

கண்மயங்கிய நேரம்

நூலின் ஒரு முனையைப் பிடித்திருக்கும் கை

வாழ்வாக மாற

காற்றாடியாகிறேன் நான்.

 

 

  1. ரீங்காரம்

 

மௌனத்துள் மெலிதாக ரீங்கரித்துக்கொண்டே

யிருக்கலாகும் இசையை

காலகாலமாய் கேட்டவண்ணமிருக்கும் மனதுக்கு

சமயங்களில் மெய்யாகவே அந்த இசை

ஒலித்துக்கொண்டிருக்கிறதா இல்லையாவெனும்

ஐயமெழுவது இயல்புதானா இல்லையாவென

இயல்பாகவும் இயல்பற்றும் இசையிடை யொலிக்குமொரு

கேள்வியின் இயல்பும் இயல்பின்மையும்

சுநாதமா சுருதிபேதமா வென

இயல்பாயெழும் கேள்விக்கு விடையறியா மனம்

கும்மிருட்டு சூழ்ந்த கொதிவெயிலில்

வியர்த்து விறுவிறுத்து

கிறுகிறுக்கும் தலையைச் சுமந்தவாறு

இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க

வெந்து நொந்து வழியேகித் தொட்ட

எட்டாத்தொலைதூரத்திற்கப்பாலும்

விட்டகுறை தொட்டகுறையாய்

கேட்கும் இசை கேட்கக் கேட்க…….

 

 

  1. இன்னுயிர்

 

எனக்கிருப்பது ஓருயிரில்லையென்று நன்றாகவே தெரிகிறது.

ஈருயிர்மட்டுமேயென்றிருக்கவும் வழியில்லை……

இருகைகளின் பத்துவிரல்களுக்கும்

மனக்கைகளின் ஏராளம் விரல்களுக்கும்

சிக்காத எண்ணிக்கையை எதைக்கொண்டு கணக்கிட

வெனும் கேள்வி கொன்றுகுவிக்கும்

எனதின்னொருயிரின் வயது

சின்னக்குழந்தையினுடையதா

உன்மத்தக்கிழவியினுடையதா

இன்று புதிதாய்ப் பிறக்கும் என்னுயிர்கள் எவையெவை

எதுவாயினும்

என்றுமே

என் ஓருயிரைக் காப்பாற்ற

என் இன்னொரு உயிரை நான்

கொன்றாகவேண்டியிருக்கிறது.

 

  1. கதையும் விடுகதையும்

என்னை எழுதேன் என்று வேண்டிக் கேட்கிறது.

என்னை எழுத மாட்டாயா என்று கெஞ்சலாய்க் கேட்கிறது.

என்னை எழுதித் தீர்த்துவிடேன் என்று நாத்தழுதழுக்க அது கூறும்போது
என் கண்களில் நீர் குத்தாமல் என்ன செய்யும்?

’இன்னும் அருவமாகவே நிற்கும் உன்னை
என்னவென்று எழுதுவது?’ என்று கேட்கத்தோன்றியும்
கேட்காததற்குக் காரணம்
அதன் கண்களில் கொப்பளிக்கும் கையறுநிலை.

அந்த அவலநிலையைக் கண்கொண்டு காணும்
கொடுமனம் வாய்க்காததால்
அரைவட்டமொன்றை வரையத் தொடங்கினேன்.

எத்தனை அரைவட்டங்கள்!

ஒவ்வொரு அரைவட்டமும் இன்னொன்றோடு
இரண்டறப் பொருந்தி முழுவட்டமாகாமலே
இன்னுமின்னுமாய் அரைவட்டங்களையே
வரைந்தவண்ணமிருக்கும்
கையின் முழுமை
காட்டுப்பாதையில் வழிதொலைத்த
குட்டிப்பெண்ணின் அழுகையாக….

அவளைப் பின் தொடரும் வரிக்குதிரை
ஒட்டகத்தின் உயரத்திலும்
முன் இடரும் முட்புதர்
மலரின் மென் நயத்திலும்
இருக்க _

கருக்கல் கட்டியங்கூறும் பகலின் இருட்டு
பழகப்பழக _

அழமறந்து அண்ணாந்து
மரங்களையும் மந்திகளையும் விழியகலப் பார்த்து ரசித்தவாறே
காற்றில் தன் முகவரியை எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறாள்
சிறுமி.

 

5.ராகவிகாரங்கள்

ஒவ்வொரு கணமும் அருள்பாலிக்கப்பட்டதாக
பாவிக்கும் மனதில்
மோதி மோதி அறைகிறது
தன்னை வாழ்வின் பலிகடாவாகவே பார்க்கும்
சக உயிரொன்றின் பிலாக்கணம்.

அதன் கொழுத்த பணப்பையின் முன்
என் சுருக்குப்பையின் கால் அரையணாக்கள்
ஒன்றுமேயில்லை.
ஆனாலும் அவை எனக்குச் செய்துகாட்டும்
செப்பிடுவித்தைகளை
ஆனானப்பட்ட கோடீஸ்வரர்களாலும்
ஈடுசெய்யவியலாது.

காற்றூதும் புல்லாங்குழலில் வாழ்வின்
ஊற்றுக்கண் திறக்க
சொக்கிநிற்கும்போது
தென்றலில் நழுவித் தன் தலைமீதொரு
சின்னஞ்சிறு இலை விழுந்ததற்காய்
என்றைக்குமாய் அங்கலாய்த்துக்கொள்ளுமவளின்
தன்னிரக்கம் அச்சுறுத்துகிறது.

தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும்
அந்த இலையை அவள் தூற்றித் தீர்த்தும்
அவள் அழுகை குறையவில்லை.

மரத்திற்குத் தன்னைக் கண்டால் இளக்காரம் என்கிறாள்;
மரத்திற்குத் தன் மீது மிகவும் வெறுப்பு என்கிறாள்.
மரத்தை சிரத்சேதம் செய்வதுதான் சரி என்கிறாள்.

அவளே தொலைக்காட்சி சீரியலில் மரம்
வெட்டப்படக்கண்டு அழும் கதாநாயகியோடு சேர்ந்து தானும் கண்கலங்குகிறாள்.

மறந்தும் தெருவோரம் இரந்திரந்து
இறந்து கொண்டிருக்கும்
மனிதர்களைப் பற்றி ஒரு வார்த்தையும்
பேசுவதில்லை.

பேசவில்லை என்பதால் நினைக்கவில்லை என்று
சொல்லமுடியுமா என்ன? என்று
தன் போக்கில் கேட்கும் மனதைத்
தூக்கிச் சுமப்பது பெரும்பாடுதான்.

சதா எதையாவது சுயபரிதாபத்தோடு பேசிக்கொண்டேயிருக்குமவள்
மௌனித்திருக்க நேரும் சமயம்
மிகத் தனியாய் உணர்வாளோ?

இன்னொருவரோடு பேசும்போதெல்லாம்
என்னிடம் பேசும் வாய்ப்பை நான் இழக்கிறேன் என்கிறேன்.
இது என்ன இழவு என்று அவள்
புருவஞ்சுருங்குவதைப் பார்க்க
எரிச்சலாகவுமிருக்கிறது;
வருத்தமாகவுமிருக்கிறது.

ஒலிப்பது தம்பூராவின் ஆதாரசுருதியா
அல்லது
ரம்பக்கழுத்தறுப்பா என்று
எதைவைத்து நிர்ணயிப்பது?

ஒரு குரலைத் திரும்பத்திரும்பக் கேட்டாகவேண்டிய
அவசியமில்லாதவரை
பரணில் போட்டுவைக்கலாகும் இந்தக் கேள்வி
எதிர்பாராத் தருணங்களில் உருண்டிறங்கி உச்சிமண்டையில் தாக்கி
நிலைகுலையச்செய்துவிடுகிறது

Series Navigationஉலக வர்த்தகப் போக்கு – வரத்தை ஆறு நாட்கள் தடை செய்த ஜப்பானிய கப்பல் உரிமையாளிக்கு எகிப்து 900 மில்லியன் டாலர் நட்டஈடு அபராதம்.
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *