சந்தைக்குப் போனால்…

author
0 minutes, 35 seconds Read
This entry is part 5 of 6 in the series 2 ஜூன் 2024

                                                                                          மீனாட்சி சுந்தரமூர்த்தி

                  

விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது.வேலம்மாளுக்கு அப்போதுதான் நல்ல தூக்கமே வந்திருந்தது.புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை.

 கந்தப்பன் மீது காலைப் போட்டுக் கொண்டு பெரியவனும் , கழுத்தைக் கட்டிக்கொண்டு சின்னவனும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அலாரம் ஐந்துமுறை அடித்ததும் விழித்துக் கொண்ட கந்தப்பன் பிள்ளைகளைச் சரியாகப் படுக்கவைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான்.ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினால்தான் ஷிப்டுக்குச் சரியாக இருக்கும்.

குளித்து முடித்துத் தயாராகி ,

முன்பக்கத்து அறையில் மர ஸ்டேண்டில் வைத்திருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு திருநீறு இட்டுக்கொண்டிருந்தபோது வேலம்மாள் எழுந்துவிட்டாள் ,

‘கெளம்பிட்டியா மாமா’

‘இல்ல வேலு, டீயும் டிபனும் வாங்கிட்டு வரேன் சாப்பிடுங்க’

‘மதியம் வந்துடுவியா மாமா?

‘நான் வரதுக்கு ராத்திரி எட்டுமணி ஆவும். எதிர்ல ஒரு மெஸ் இருக்குது, அவங்ககிட்டச் சொல்லிடறேன், மதியம் வூட்டுக்குச் சாப்பாடு வந்துடும்’

‘மீனுகீனு சொல்லிப்புடாதே, இன்னக்கி வெள்ளிக்கெழமை?’

‘உனக்குச் சாம்பார் வரும், புள்ளைங்களுக்கு மீன் கொழம்பு, மீன் வறுவல் தந்துடுவாங்க’

 எவர்சில்வர் கூஜாவை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

வானமகள் நெற்றியிலிட்ட வட்டவடிவப்  பெரிய  குஙு்குமப் பொட்டு போல் சூரியன் உதிப்பதைப் பார்த்து,

ஹோவென்ற சத்தத்தோடு நீலக்கடல் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது,

அது ஒரு மீனவக் குடியிருப்புப் பகுதி,

அவரவர் வீட்டில் போட்டிருந்த அடிபம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தனர் சிலர். தெருக் குழாயடியில் பச்சை,நீலம், மஞ்சள்,சிவப்பு என பிளாஸ்டிக் குடங்கள்   வரிசை கட்டியிருந்தன.தேனீர்க்கடைப்  பெஞ்சில் போர்வையை கழுத்தைச் சுற்றித் தோளில் போட்டுக்கொண்டு  உட்கார்ந்து  பெரியவர்கள் சூடான தேனீரைக் கண்ணாடிக் கிளாசில் வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தனர். சிலுசிலுவென வீசியது ஊதைக் காற்று.

‘இன்னா தம்பி, பொஞ்சாதி, புள்ளைங்களக் கூட்டியாந்துட்ட போல’

‘ஆமாங்க,ரெண்டு நாள்ல  பள்ளிக்கூடத்துலயும் சேர்க்கணும்’

இன்னா படிக்கறாங்க பா?’

‘பெரியவன் அஞ்சாவதும், சின்னவன் ரெண்டாவதுங்க,வரேன்’  

  தேனீரும், இட்டிலி, வடை, சாம்பார்.சட்டினியும்  வாங்கிக்கொண்டு வந்தான்.வேலம்மாள் பிரித்து எடுத்துப் பறிமாற உண்டுவிட்டுப் புறப்பட்டான்,

‘வேலு பத்திரமா பார்த்துக்க பசங்கள, கடலப் பார்க்க போவப் போறானுங்க’

‘சரி மாமா, நீ பத்திரமா போயிட்டு வா’

சைக்கிளில் செல்லும் கணவனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள் வேலம்மாள்.

சமையலறையை அடுக்க முனைந்தாள்.

காவேரிக்கரைச் சிற்றூர் ஒன்றிலிருந்து வெள்ளாமைக்கு வழியில்லாமல் நகரத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் வாட்ச்மேனாகச் சேர்ந்திருந்தான் கந்தப்பன்.

வாடகைக் குறைவு என்பதால் மீனவக் குடியிருப்பில் குடிசை வீடு ஒன்றை நண்பன் ஒருவன் உதவியால் பார்த்துக்கொண்டான். ஆறுமாதமாகத் தனியாக இருந்தான்.

மூன்று வீடுகளுக்கும் அடிபம்ப் ஒன்றுதான், ஒரு வீட்டில் நாற்பது வயதுப் பெண்ணொருத்தி மட்டும் இருந்தாள், இன்னொன்றில் கரும்புச் சாறு எடுத்து விற்பவர் வயதான அம்மாவுடன் தங்கியிருந்தார்.

பிள்ளைகளை எழுப்பி, பமப் ஸ்டவ்வில்  வெந்நீர் வைத்துக் குளிக்க வைத்தாள் வேலம்மாள்.  தண்ணீர் அடிக்க நான் நீ என்று போட்டி போட்டதில் சின்னவன் பம்பில் இடித்துக் கொண்டான், தாடையில் காயம்.சமாதானம் செய்து தேங்காய் எண்ணெய் தடவி விட்டாள்.

மதியத்திற்கு மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்தது.பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம்.

ஒரு வாரம் போனது.

      பிள்ளைகள் பள்ளி சென்று வரத் தொடங்கியிருந்தனர், வேலம்மாளுக்கு பொழுதுபோவது கடினமாக இருந்தது. இந்த மூன்று வீடுகள் தனியாக இருந்தன. எதிரில் சற்றுத் தள்ளி மீனவர்களின் இல்லங்கள் நெருக்கமாக அமைந்திருந்தன.அதோடு பெண்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை, மீன் விற்கச் சென்று விடுகிறார்கள். மாலையில்தான் அந்தக் குடியிருப்பு குடிமகன்களின் கும்மாளத்தோடு களைகட்டுகிறது.  பெண்கள்  அடுப்பு மூட்டி வெந்நீர் வைத்துக் குளித்து, பவுடர் பூசி தலையில் மல்லிகை மணக்க, மீனும்,இறாலுமாகச் சோறாக்குகிறார்கள். பள்ளியிலிருந்து மீண்ட பிள்ளைகள் வீதிகளில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். விளக்கு வைத்ததும் பெரியவர் முதல் சிறியவர் வரை அத்தனை பேருக்கும் வீடுகளில் தொலைக்காட்சி ஆதிக்கம்.

         ஒருநாள் கந்தப்பன் இவர்களைச் சினிமாவிற்கு அழைத்துச் சென்றான்.ஒருநாள் கடைவீதி சென்று வந்தார்கள்.

வாய்க்கால் மேட்டில் திரிந்ததற்கு இது சொர்கமானது சிறுவர்களுக்கு.

கரும்புச்சாறு பிழிபவரின் அம்மா வேலம்மாளிடம் பிரியமாகப் பழகினார். ஏனோ  இன்னொரு வீட்டிலிருந்தப் பெண் இவளிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை, கந்தப்பனிடம்

‘ஏன் மாமா அந்த மூணாவது வீட்டுக்காரி தனியா இருக்கா?’

‘ அவ எப்படி இருந்தா நமக்கென்ன?’

‘ஏன்னு தெரியல, அவளைக் கண்டாலே புடிக்கல’

‘ மூஞ்சியில கூத்துக் கட்டறவங்க மாதிரி பவுடர அப்பிக்கறா,கண்ணுல மையி வேற’

‘ நம்ம  வேலைய நாம பார்க்கணும் வேலம்மா, வீண் பேச்ச விடு’

‘பொழுதே போகமாட்டேன்னுது மாமா?

‘தெரியும் வேலம்மா, ஊர்ல சொந்த பந்தம் இருக்கு,  புது ஊரு இது, பேசாம இருக்கறதும் நல்லதுதான்’

‘ அதுவும் சரிதான் மாமா’

‘பசங்கள கூட்டிட்டு போய் கடலைக் காட்டிட்டு வா’

அன்று மாலையில்  பிள்ளைகளுக்கு விருப்பமான வெல்லம் போட்ட கோதுமை தோசைகளைச் சுட்டு எடுத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டிலோடு கடற்கரைக்குப் பிள்ளைகளை கூட்டிச் சென்றாள்.மக்கள் கூடுகின்ற இடமாக இல்லாததால் அமைதியாகவும்,  சுத்தமாகவும் இருந்தது.கோதுமை ரவையை நிறைத்து வைத்தது போல மணற்பகுதி பரந்து விரிந்திருந்தது.

விதவிதமான கிளிஞ்சல்களை வந்து வந்து வீசும் அலைகள் மணலில் பதித்து வைத்துச் சென்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலம்,  வானத்தில் மேகங்களுக்குச் செந்நிற வண்ணம் தீட்டிக்கொண்டு  தகதகவெனக் கதிரவன், கடல் நீராட இறங்கிக் கொண்டிருந்தான். பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடி அலைகளில் கால்களை நனைத்துக் கும்மாளமிட்டனர்.

காலையிலேயே சமையலை முடித்து கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து அனுப்பிவிடுகிறாள். பத்துமணிவரையில் துணி துவைப்பது இன்னும் சில வேலைகள் இருக்கும். அதன்பின் சாயந்திரம் நான்கு மணிவரையில் என்னதான் செய்வது, இன்னும் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கும் வசதி வரவில்லை. ஊரில் என்றால் அக்கம் பக்கம் அத்தனையும் சொந்தமும், சினேகிதமும்தான். வேலை முடித்துக் கூடிவிட்டால் அரட்டையும், கிண்டலுமாகச் சிரித்துப் பேசிடப்  பொழுதே போதாது.

வாராவாரம் சந்தைக்குப் போய் வேண்டிய காய்கறி, மளிகை வாங்கி வந்து விடுவாள். அதிலும் அடித்துப் பேசி விலையைப் பாதியாகக் குறைப்பதில் கைகாரி என்று பெயரெடுத்தவள், உடன் வரும் தோழியரும் இவளையே விலை பேசச் சொல்லுவார்கள்.. அதிலொரு கர்வம் கூட இவளுக்கு உண்டு.

அன்று ஊரிலிருந்து மாமன், மாமி வந்திருந்தார்கள்.

‘வேலம்மா கோழியும் மீனும் வாங்கி வரேன்,நீ நாளைக்கு குழம்பும் வறுவலும் செஞ்சிடு’

மாமா நீ கோழி மட்டும் வாங்கிட்டு வா, நான் போயி மீனு வாங்கி வரேன்’

‘உனக்குத் தெரியாது வேலு, இது  டவுனு”

‘எனுக்கா தெரியாது, சொல்லுங்க மாமி, ‘

‘ஆமாம் பா நல்லா பேசி வெலைய  கொறைச்சுடுவா’

மறுநாள்  அதிகாலை சின்னவனை அழைத்துக்கொண்டு மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு கரையேறும் இடத்திற்குச் சென்றாள். படகிலிருந்து எடுத்து வரும் மீன்களை  மொத்தமாக வாங்குவோரும், கூடைகளில் வாங்குவோரும், வீடுகளுக்கு வாங்குவோருமெனக் கூட்டம் கூடியிருந்தது.அங்கு ஒரு படகின் அருகில் சென்றாள்  வேலம்மாள். கணவன் ஒருபுறமும், மனைவி ஒரு புறமும் மீன்களை எடைபோட்டு விற்றுக் கொண்டிருந்தனர்.

மீன்களைப் பார்வையிட்டாள் , பிங்க் நிற மீன்களும், கருமை நிற மீன்களும் பெரியதும், சிறியதுமாக காண்போர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன.

‘ இதோ இந்த வஞ்சிர மீனு வேணும், இன்னா வெலை?’

‘ எழுநூறு ரூபா,

‘ எழுநூறா? நான் பாக்டரிகார் வீடுதான் பார்த்திருக்கியே?’

‘ஆமாம் பார்த்திருக்கேன், அதுக்கென்ன?

‘ வெலை கொறைக்கலாமே’

‘சரி  ஐந்நூறு குடு’

‘ இருநூறு ரூபா வச்சிக்க? ‘

‘ இன்னாது, முன்ன பின்ன மீனு வாங்கியிருக்கியா நீ?

‘எனுக்குச் சரிவராது வேணாம் விடு’

‘ காலங்காத்தால வந்து அடாவடியா கேக்கற’ என்று வேலம்மாளின் பையை வெடுக்கெனப் பறித்துக் கொண்டாள் மீன்விற்பவள்.

அதில்தான் பர்சையும் வைத்திருந்தாள் இவள்.

‘எனுக்கு வேணான்னா நீ வுட்ரு, பையைக்  குடு’

‘ அதெல்லாம் முடியாது, உனுக்காக வெலைய கொறச்சேன்’

எல்லோரும் மும்முரமாக விற்பதும்,வாங்குவதுமாயிருந்தனர். இவர்கள் வாக்குவாதம் எவரையும் ஈர்க்கவில்லை.

‘ ஒழுங்கு மரியாதையா ஐந்நூறு ரூவா குடுத்துட்டு மீனை வாங்கிட்டுப் போ’

 அடித்துப் பிடித்துப் பாதி விலைக்கு வாங்கும் தன் திறமை புது ஊரில் எடுபடாது என்று உணர்ந்த வேலம்மாள் ஐந்நூறு ரூபாய்த் தாளைத் தந்து மீனை வாங்கிக்கொண்டு நடந்தாள்.

Series Navigationபேருந்து நிறுத்தம்சாதனா எங்கே போகிறாள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *