This entry is part 5 of 9 in the series 28 டிசம்பர் 2025

ரவி அல்லது

   பேருந்து எடுத்து நிறுத்தியதன் காரணம் உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். அமர்ந்து இருப்பவர்களை விட நிற்கின்றவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகவும் இருக்க அநேக சாத்தியங்கள் இருக்கிறது.

“தம்பி நீங்க எல்லோரும் படியில் தொங்குறதைவிட்டு மேலே வராமல் நாங்க வண்டிய எடுக்கமாட்டோம்.” என்று ஒரு முறை சாந்தமாகச் சொன்ன நடத்துநர் பிறகு இதையே பலமுறை கத்தியும் சொல்லிவிட்டார்.

“ஏய்… மேலே வாங்கப்பா கதவை மூடனும்.” என்று ஓட்டுநரும் போராடிப் பார்த்துவிட்டார். எதையும் அந்தப் பசங்க பொருட்படுத்துவதாக இல்லை.

ஒவ்வொருவரும் ஒன்றில் தன்னை ஒளித்துக்கொண்டார்கள். காலை நேரத் தாமதத்தின் வாடல் அனைவரின் முகத்திலும் தெளிவாகத் தெரிந்தது. இதில் சில அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் இருக்கலாம். அதிகாரம் உள்ளவர்களும் இருக்கலாம். கைபேசி பலருக்கு போக்கிடமாக இருந்தது.

கீழே விழுந்து செத்தக்கதைகளை பக்கத்தில் இருந்தவர்களிடம் சிலர் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் படியில் நின்று  சண்டியர்த்தனம் செய்ய உள்ளேயும் சில பெண் பிள்ளைகள் இருந்தார்கள். போகின்ற வழியின் நிறுத்தங்களில் சிலப் பிள்ளைகள் இவர்களின் சேட்டைகளுக்கு சிரித்துத் தொலைவதும் நடக்கலாம்.

இறுதியாக நடத்துநர் 

“மணி… நான் சொல்லாம வண்டியை எடுக்காத. இவன்க விழுந்தா நம்மப் பொழப்பை நாறிப் போகும்.” என்று எச்சரித்து விட்டு பேருந்தை விட்டு கீழே இறங்கிவிட்டார்.

இப்பொழுது சிலருக்கு அந்தப் பசங்களை ஏதாவது சொல்லலாம் என்று தோன்றியது. அவர்களுக்கு இதுபோன்ற சூழலில் எப்பொழுதும் நமக்கு எதற்கு வம்பு என்று தொண்டையைவிட்டு வார்த்தைகள் வராது. அவர்கள் எல்லோரும் யாராவது புரட்சிக்கொடி தூக்கமாட்டார்களா என்று ஆசைப்பட்டார்கள்.

அந்த இடம் தொழிற்பூங்கா என்பதால் அவசரப் பணி நிமித்த பயணிகள் அதிகம் இருந்தார்கள். ஒளிந்துகிடந்த எல்லோரும் வெளியேயும் நடத்துநரையும் பார்த்தார்கள். சிலர் கிசுகிசுப்பாக பக்கத்தில் இருந்தவர்களிடம் தங்களின் கோவத்தைக் கொட்டினார்கள்.

எனக்கு கோவம் கட்டுப்பட மறுத்து தூண்டிய வண்ணமிருந்தது. இது எனது ஊரில் நிகழ்ந்தால் எழுந்து சென்று அவர்களில் ஒருவனை அறைந்திருப்பேன். அப்போது அங்கு அறைவாங்கியவனோ இல்லை அவனுக்கு பக்கத்தில் இருப்பவனோ இல்லை அமர்ந்திருப்பவர்களில் யாருக்காவது என் குடும்பப் பின்னனி தெரிந்திருக்கும். நான் எந்தளவிற்கு ஒதுங்கி வாழ்கிறேனோ அவர்கள் இதற்கு மாற்றமாக அடிதடி வெட்டுக் குத்து என்று வாழ்க்கையில் ஓடுகிறவர்கள்.

இறுதியாக இறங்கி போலீஸை அழைத்துவரலாமென நினைத்தேன். அதற்குள் வேறு ஒருவர் அந்த இடத்தில் அமர்ந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பக்கத்தில் உள்ளவர் தயங்காமல் ‘நான் என்ன சார் செய்யிறது’என்பார். பராவாயில்லை நின்று கொள்ளலாம் என்றாலும் காலில் ஆபரேசன் செய்தது சமீபமாக இருப்பதால் கால் வீங்கி விடுமோ என்ற கவலையும் இருந்தது.

இப்படித்தான் கஜாப்புயல் தன் கோர முகத்தை எங்கள் நகரத்தின் மீதும் காட்டியபோது  நாங்கள் பார்த்த ஊர் எங்கள் எல்லோருக்கும் பயத்தைக் கொடுத்தது. நாங்கள் யாவருமே ஒரு அந்நியத் தன்மையை உணர்ந்தோம். பழக்கம் இல்லாதவர்களிடமெல்லாம் சந்தித்துப் பேசும் போது அழுதோம். 

அதைவிடுங்கள் அந்த நாளின் காலையில் மரங்களுக்கு இடையில் புகுந்து புகுந்து வந்து பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஆவின் பால் கடைக்கு எதிராக இருந்த காவல் நிலையத்தைப் பார்த்தால் அங்கு இருந்த மரங்கள் அனைத்துமே முறிந்து முற்றிலும் பழைய நிலையிலிருந்து மாறி இருந்தது.

ஆவின் பால் கடையில் கூட்டம் தள்ளு முள்ளில் ஈடுபட்டதால் பால் விற்பவர் கடையை மூடப்போவதாக கத்தினார். அவர்களை ஒழுங்கு செய்து வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவில் பால் பாக்கெட்டுகளை கொடுக்க சொன்னபோது எல்லோரும் எனக்கு பார்வையால் நன்றி சொல்லி வாங்கிச் சென்றார்கள். என் முறை வருவதற்கு முன்பு ஐந்து பேர் இருந்தார்கள். எனக்குப் பின்னால் அதிகமாக ஆட்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.

“பால் முடிஞ்சிருச்சு. சார் உங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்களப் போகச் சொல்லுங்க.” என்று எனக்கு முன்பு நின்றவரைப் பார்த்து சொன்னார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனக்குப் பின்னால் நின்றவர்கள் கலைந்து கடையை நோக்கி போவதா அப்படியே நிற்பதா என்று குழப்பத்தில் இருந்தார்கள்.

எனக்கு இந்தப் பால் மிகவும் முக்கியமானது. எனது நண்பர் வெளியூரில் இருக்கிறார்.அவர் மகன் ஆவின் பால் மட்டும் தான் குடிப்பான். 

சாய்க்கார்த்திக் ஹோட்டலின் பரோட்டாவில் மேலே வெந்திருக்கும் செந்நிறமான அந்தப் பரோட்டாவை எப்பொழுதாவது தோலை உரித்துச் சாப்பிடுவது போல ஒரு துணுக்கை சாப்பிடுவான். எப்பொழுதாவது மில்கி பார் சாக்லேட் சாப்பிடும்போது கிண்டர் ஜாய் பிரித்து அதில் உள்ள பொம்மையோடு விளையாடிய படி சாப்பிடுவான். இவைகளுக்கு இடையில் ஆவின் பால் குடிப்பான். இவைகளில் ஏதாவது ஒன்றை அவன் நாளின் ஒரு வேலை சாப்பிட்டுவிட்டாலே அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.இரவில் சொற்ப அளவு ஆவின் பாலைக் குடிக்கிறான் என்பதற்காக எந்தச் சூழலிலும் ஆவின் பால் வாங்குவதை நாங்கள் வழக்கமாக்கி வைத்திருந்தோம். 

நான்கு வயதான அவனும் நானும் பாம்பே டாய்ஸ்க் கடையில் நான் வேகமாக ஓட அவன் என்னைத் துரத்தி ஓடி வருவான். அதில் அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவன் விழுவதற்காகப் பயந்தததை விட நான் விழுந்துவிடப் போகிறேன் என்று கடைக்காரர்கள் அதிகம் பயப்படுவார்கள். அந்த நாட்களின் சிசிடிவி பதிவை நாம் வாங்காமல் போனோமே என்ற கவலை எனக்கு இப்பொழுதும் உண்டு. அவன் ஆவின் பால் இல்லாமல் என்ன ஆவானோ என்ற அச்சம் எனக்குப் பயத்தைக் கொடுத்தது.

நான் கடைக்காரரிடம் பேசலாம் என நினைக்கும்போது எனக்கு முன்னால் உள்ளவர் சொன்னார்.

“சார் நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா. நீங்க ஷட்டரை மூடப்போனப்போ சார் தான் கூட்டத்தை ஒழுங்கு பண்ணி எல்லோருக்கும் பால் கிடைக்க வைத்தார். சார் இல்லேன்னா உங்க கடையை சூறையாடி இருப்பாங்க எல்லோரும். எங்களுக்கு கொடுக்க வேண்டியதிலிருந்து கொஞ்சம் அவருக்கு கொடுங்க.”

கடைக்காரர் தான் செய்த தவறினை நினைத்து பதறுவது அவர் முகத்தில் தெரிந்தது.

“சார். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. முதல்ல சாருக்கு கொடுங்க. நான் இந்த ஸ்டேசன்லதான் வேலை பார்க்குறேன். நாங்க செய்ய வேண்டியதை அவர் எவ்வளவு சிறப்பாகச் செஞ்சுட்டார்.” என்றவர். 

எனக்கு  பால் கொடுத்த பிறகுதான் மற்றவர்களுக்கும் அவருக்கும் பால் கொடுக்க அனுமதித்தார். அவரோடு நட்பாகிவிட்டதால் பிறகொரு முறை அவரிடம் நான் கேட்டபொழுது சொன்னார்.

“பாதகமான சூழ்நிலை சார். அதிகாரமுடையவர்கள் எப்போது யார் வேண்டுமானாலும் வந்து பால் கேட்கலாம். உங்களுக்கு பால் கிடைக்காமல் போவதை நான் விரும்பவில்லை சார்.” என்றார். இந்தப் பால் பாக்கெட்டுகளை மரங்கள் ஒவ்வொன்றையும் ஒதுக்கி ஒதுக்கி என் நண்பரின் வீட்டின் மூன்றாவது மாடிக்கு செல்லும்போது இரண்டாவது மாடியில் அந்த வீட்டின் ஓனர் மருமகளுடன் என் நண்பரின் மனைவி பேசிக் கொண்டிருந்தார். 

அவர்தான் நண்பரிடம் நான் பார்க்க வந்ததைப் பார்க்கவே இல்லை என்று சொன்னது வேறொரு தனிக்கதை. உறவுகள் பலப்பட வேண்டுமானால் அசௌகரியங்களை  பொருட்படுத்தக்கூடாதுதான். 

“தம்பிகளா… பூவெல்லாம் வாடுதுப்பா. காலையிலையே வியாபாரம் செஞ்சாத்தான். காலை நேரத்தை விட்டுட்டா முதல் கூட தேறாதுங்கடா… தம்பி. மேலே ஏறுங்கப்பா.”

பூக்காரப்பெண் முன்பக்கம் ஏறும் படிக்கு வலது பக்கத்தில் உள்ள இருக்கையில் கூடையை வைத்து பூவைக் கட்டியபடி கெஞ்சிக் கொண்டு இருந்தது. இடையிடையே ஓட்டுநர் கதவை மூட முயற்சித்தார். ஒரு அசௌகரியமான அசாதாரண சூழல் அங்கு நிலவியது.

அவர்களுக்குள் ஒருவன்

“மச்சி… மேலப் போயிருவம்டா.”

“கொஞ்சம் இருடா. வெயிட்ப் பண்ணி பார்த்துட்டு. அவர்களே வண்டிய எடுத்துருவாங்கடா. கொஞ்சம் கம்முன்னு இருடா.”

“மவனே… நாளைக்கு இந்த பஸ்ஸூல வராதடா பாடு.”

பாலாயிக்குடிக்காடு ஜெயக்குமார் ஒவ்வொரு முறையும் வருத்தப்படுவான். ‘என்கிட்ட முன்னாடியே சொன்னா டிரைவரைப்போட்டு அனுப்பி இருப்பேனே.’ அவன் வழக்கமாக அங்கலாய்க்கும் வார்த்தைகள் தான் இது. இவனைப்போலவே இதயத்துல்லா, கோபிநாத் என பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் காரை பல முறை பயன்படுத்தியதால் ஜெயக்குமாருக்கு என் மேல் கொஞ்சம் வருத்தம்தான். அன்பை அசௌகரியப் படுத்தக்கூடாது என்று நினைக்கிறவன் நான்.

பேசாமல் ஆட்டோவிலேயே சென்றிருக்கலாம் என்று தோன்றியது. பணத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று (இதைக் கேட்டால் மனைவி, மகனும் மகளிடம் கழுவிக் கழுவி ஊத்துவார்கள். வீட்டில் அதிகம் செலவழிப்பது நானும் மகளும் தான் ) பேருந்தை தேர்ந்தெடுத்தது தவறாகப் போனது.

“ஏன்டா… பாடுகளா இங்க எவ்வளவு பேர் வேலையா உட்கார்ந்து இருக்காங்க. நீங்க பாட்டுக்கும் நின்னுக்கிட்டு இருக்கீங்க. என்னையப் பார்த்தா கிறுக்கு முண்டை மாதிரி தெரியுதாடா. யாவாரம் போகுதுடாங்கிறேன். பருப்பு பல்லை பல்லை இளிச்சுக்கிட்டு நிக்கிறீங்க.”

பூக்கார அம்மாவின் கத்தலில் பசங்க படியைவிட்டு உள்ளே கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததற்கு காரணம் அங்கு நின்ற பெண் பிள்ளைகள் திரும்பிப்பார்த்ததும் மற்றும் பூக்கார அம்மா அடிக்கும் தூரத்தில் அவர்கள் பக்கத்தில் இருந்ததும் காரணமாக இருக்கலாம். பேருந்து நிசப்தமாக கிளப்பியதில் எல்லோரும் பெரு மூச்சுவிட்டார்கள். இவர்களுக்கு எல்லாம் இதுபோல் யாராவது வாழ்க்கை முழுவதும் வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள்.

எனக்குப் பூக்கார அம்மாவின் மேல் தனிப் பாசம் உருவானது. நான் அவர்களை அதட்டி சரி செய்யாத மன வாடல் லேசாக இருக்கத்தான் செய்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் பள்ளிப் பிள்ளைகள் ஏறியதில் பசங்க பூக்கார அம்மா திட்டியதை எல்லாம் மறந்தேப் போனார்கள்.

நான் இந்தப் பேருந்தின் கடைசி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பூக்காரம்மா பற்றிய சிந்தனை அதிகமாக அவர் ஏழாவது நிறுத்தத்தில் இறங்கினார். நானும் இறங்க எழுந்தபோது எனக்குப் பக்கத்தில் இருந்தவர் தவறான இடத்தில் இறங்குவதாக என்னைப் பார்த்தார். நான் பயணிக்கும் அத்தனை பேரின் மீது இருந்த வெறுப்பில் அவரை முறைக்கவும். காரணம் தெரியமலையே அவர் கீழே குனிந்து கொண்டார்.

பூங்காரம்மா அவசர அவசரமாக அவருடைய பலகையிலான மேஜையில் பூப்பந்துகளை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்.

“என்ன சார் வேணும்.”

“பூப் பந்து எவ்வளவு”

“இது இரு நூறு, இதுவும் இரு நூறு, இது நானூறு,இது அறுநூறு சார்.”

நான் இரண்டு ஐநூறு ரூபாயை நீட்டி மூன்று பந்துகளை எடுத்துக் கொடுத்தேன். அதை பையில் போட்டு ஒரு துண்டு பூவை நறுக்கி உள்ளேப் போட்டுக் கொடுத்தார். வாடி இருந்த அவர் முகம் பிரகாசமாக மாறியது.

நான் கையில் வாங்கிக் கொண்டு கேட்டேன்.

” பேருந்தில் அத்தனைப் பேர் இருந்தாங்கதானேம்மா.நீங்க மட்டும் ஏம்மா பஸ்ஸில் ஆங்காரமா கத்துனீங்க.”

“நீங்க பஸ்ல இருந்தீங்களா சார். எப்பவுமே இந்த பசங்க இப்படித்தான் சார். தொடர்ந்து மூனு நாளாக யாவாரம் சரியாக நடக்கலை சார். அந்த வெறுப்பு வேற.”

அவர்களைப் பாராட்டி அந்த முதுகெழும்பற்ற நாய்களைப்பற்றி நிறையப் பேச நினைத்தேன். எனக்கும் வேலையாக செல்ல வேண்டியது இருந்தது. அந்தம்மாவுக்கும் பூ விற்க வேண்டிய கவலைகள் இருந்தது.

“ஏம்மா. அங்கே யாருமே கேட்கலையேன்னு தோனலையா.”

“தோனுச்சு சார். என்ன செய்யிறது. இங்க பொதுவுல ஒருத்தர் ஞாயம் கேட்டாக் கூட இருக்கிறவனும் கேட்கனும்ன்னு படிச்சுக்குடுக்கனும் சார்.”

“புரியலைம்மா.”

“பள்ளிக்கூடத்திலையே பொதுவில் நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்கனும். வேறு யாராவது கேட்டால் அது ஞாயமாக இருந்தால் அவர்களோடு நாமும் கேட்கனும்ன்னு சொல்லிக் கொடுக்கனும் சார். இதை செய்தா புரட்சிக்கு பயிற்சி கொடுக்குறதா சொல்வாங்க. பொதுவுல உதவுறவங்களுக்கு அரசு பரிசுகள் கொடுத்துப் பாராட்டனும் சார். குறைந்தபட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு படிப்பைத் தாண்டி வெளியில் அறம் சார்ந்த செயல்களுக்கு மார்க், பாராட்டு சான்றிதழ் என்று ஒரு அறம் சார்ந்த புதிய வாழ்க்கைக்கு அவர்களைப் பழக்கனும் சார்.”

எனக்குப் பேருந்தை விட்டு இறங்கியது தவறில்லை என்று தோன்றியது. அவர் இந்த ஊரைச் சேர்ந்தவரில்லை என்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

“அம்மா. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இந்தப் பூக்களை நீங்கள் விரும்பிக் கும்பிடும் சாமிக்குப் போடுங்கள். உங்களுக்கு உதவவே இதனை வாங்கினேன்.”

“எங்கள மாதிரி ஏழைகளுக்கு மொளம் பூ போதும் சார். பணக்காரங்களுக்குதான் பந்து பந்தாப் பூ வேணும்.”

“இதை நீங்களே செய்யலாமே சார். “

“நான் வேலையாகப் போய்க்கொண்டு இருக்கிறேன். மேலும் நான் தியானம் அது இதுன்னு மலை மலையாக சுத்துகிற ஆள்.”

“பூக்காரி எல்லாம் தியானம் பண்ணக்கூடாதா சார். தியானம் பண்ணாக்க கோயிலுக்குப் போகக்கூடாதா சார்.”

இதற்கு நான் பதில் சொல்ல முயன்ற பொழுது அவரே இடைமறித்தார்.

“நீங்கள் படித்த பண்பட்டவர் என்பது உங்கள் முகத்தையும் நீங்கள் அணுகும் விதத்திலும் தெரிகிறது. நான் புத்தகங்கள் அதிகம் படிக்கிறப் பெண் சார். அதுதான் உங்களிடம் கேள்விகளை திரும்பிவிட்டேன்.”

“உங்களின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கிறது.”

“அந்தப் பதில்களை வைத்து நான் என்ன செய்றது சார்.”

“புரிதலுக்குப் பயன்படலாம்.”

“பதில்களில் மட்டும் தான் புரிய முயலனுமா சார்.”

“அதுவொரு எளிய வழி. ஒவ்வொரு கணமும் அதற்கான வழிதான்.”

“உங்களிடம் பேசுவது சுவாரசியமாக இருக்கு சார். மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கு.”

நான் சென்றதிலிருந்து யாரும் பூ வாங்க வராதது பேச்சு இடை நின்று தடுமாறாமல் தொடர்ந்தது.

“சில நேரங்களில் சந்தர்ப்பங்கள் அதுபோல அமைவதுண்டு.”

“சார் இந்தப் பூவை சாமிக்குதான் போடனுமா.”

“ஏன் என்ன செய்யப் போறீங்க.”

“இதை மீண்டும் நான் விற்கிறேன் சார்.நீஙகள் கொடுத்தப் பணத்தை விட கூடுதலாக விற்றால் அந்தப் பணத்தை நான் எடுத்துதுக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த ஆயிரம் ரூபாயை நான் என் தெருவில் உள்ள காலேஜ் பையன் ப்ராஜக்ட் ஒர்க்ப் பண்ண ஆயிரம் ரூபாய் கடன் கேட்டான். அவனுக்கு ப்ரியாக கொடுத்துவிடவா சார்.”

“தாராளமாக கொடுங்கம்மா. பூ விற்காதுன்னுதான் நான் வாங்கினேன். உங்கனால வித்துற முடியுமா.”

“உங்கள ஆண்டவன் அனுப்பலைய. அதுபோல யாராவது அவன் அனுப்புவான் சார்.”

“ஒரு வேலை அது விற்கலைன்னா என்ன செய்வீங்க.”

அந்தப் பெண் முகம் மாறியது. இதைக் கேட்டிருக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றியது.

“நம்பிக்கையை உடைக்கிற யாரையும் எனக்குப் பிடிக்காது சார். விக்கலைன்னா என் பூவாக இருந்தா நாளைக்கு வச்சு விப்பேன். இது உன்னோடது. தூக்கி சாக்கடையில் கடாசிட்டுப் போயிக்கிட்டே இருப்பேன். நீ என்னை நம்பினே. நான் ஆண்டவனை நம்புனேன். அதுக்கு ஆண்டவன் தான் கவலைப்படனும்.நான் ஏன் சார் கவலைப்படனும். உன் பணத்தை அவன்கிட்ட குடுத்துறுவேன். நீ சொன்னப்பவே நான் முடிவு பண்ணது. எனக்கு பணம் சம்பாதிக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்லை. பக்கத்துவீட்டு அண்ணாகிட்டே ஆட்டோ வாங்கி நைட் ஓட்டுனேன்னா இரண்டு மணிக்குள்ள எனக்குத்தேவையானப் பணத்தை சம்பாதிச்சுறுவேன். படிக்காம இருக்கிற ஏதாவது ஒருப் புத்தகத்தையும் படிச்சு முடிச்சிருவேன் சார். அவ்வளோ தான் சார். எதையுமே ஈஸியாக எடுக்கனும் சார்.”

எனக்கு நேரமாகிவிட்டதால் அவரை மீண்டும் பாராட்டி விடைபெற்று திரும்பிப் போகுது நினைத்தேன். அந்தப் பெண்ணின் பெயர், எந்த ஏரியா எதையுமே கேட்கலையே. திரும்பி சென்று கேட்போமா என்று தோன்றியது. அவர்களே நம்மிடம் கேட்காத பொழுது நாம் கேட்பது நாகரீகம் இல்லை நினைத்தேன். அவரை நோக்கி சென்று,

“நீங்கள் படிக்கும் புத்தகங்களில் ஓஷோ புத்தகங்கள் அதிகம் இருக்கிறது. சரியாம்மா.” என்றேன்.

அவர்கள் சிரித்ததில் அத்தனை ரம்மியமாக இருந்தார்கள். இதுதான் பெண்ணின் பூரித்த அழகு என்பது தெளிவாக தெரிந்தது. இது பெண்களுக்கு அபூர்வமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.

“சார் எப்புடிக் கண்டுபுடிச்சீங்க.”

“இறைவன் இந்தச் சந்திப்பை மறுமுறை நிகழ்த்தினால் அப்பொழுது சொல்கிறேன்.”

அவர்கள் என்னைக் கையெடுத்து கும்பிட்டார். நான் வணக்கம் சொல்லி விடை பெற்றேன்.

என்னை அவர்கள் ஆச்சரியமான தனித்துவமான ஆள் என மறந்திடாமல் நினைவில் வைக்கும்பொழுது அவரையும் நான் மறக்க முடியாத பெண்ணாகத்தான் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதற்கும் காரணம் இருக்கிறது.

நான் அவர்களின் கடையில் எடுத்தப் பூ பந்துகள் மல்லிகை, சம்பங்கி, கதம்பம். ஆனால் என் கையில் எல்லா பூவின் வாடைகளோடு ரோஜாவின் அரியதொரு மனம் தனித்து அடித்தது ஆச்சரியமாக இருந்தது. மறுமுறை சந்தித்தால் நானும் இதை அவர்களிடம் கேட்க வேண்டும்.

வேகமாக சென்ற ஆட்டோ டிரைவரை ‘கொஞ்சம் மெதுவாகப் போங்கள் என்னால் மனிதர்களை ரசிக்க முடியவில்லை’ என்றேன். அவர் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஆட்டோவின் வேகத்தைத் தனித்து ஓட்டிக் கொண்டு இருந்தார். காற்றில் கலந்து வந்த சாக்கடையின் கழிவு வாடையைக் கடந்து எனது கையிலிருந்த நறுமணம் பயணத்தை இனிமையாக்கியது.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com 

19/12/25.

Series Navigationமழை புராணம் – 13ஜாலம்