வாழும் மனிதர்க்கிடையில் வரப்புக்கள்தான் அதிகம்.. சுற்றிலும் சுவர்கள்- ஜாதியாய் மதமாய், இனமாய் மொழியாய்.. இன்னும் பலவாய்… இணைத்தது இயற்கை- சாவில் ஒன்றாய்.. சவக்குழி ஒன்றாய்.. சுருட்டியது ஒன்றாய்… சுனாமியில் தொலைந்துபோன சொந்தங்களுடன் டிசம்பர்26…! -செண்பக ஜெகதீசன்…
வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீதியில் நிற்கும் ஒருவன்.. கரையான் புற்றில் கருநாகமாய் ஒருவன்.. கல்லை அரிசியில் கலப்பவன் ஒருவன்.. வாங்கிக் கடித்து பல்லை உடைப்பவன் ஒருவன்.. ஏழுகோடி பரிசென எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்.. ஏமாந்து இருப்புப் பணத்தையும் இழப்பவன் ஓருவன்.. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்பவன் ஒருவன்.. வாங்கி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஒருவன்.. இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை…! ஏமாற்றுபவன்.. ஏமாறுபவன்.. இரண்டும் மனிதன்தான், இரண்டும் நிரந்தரம்தான்…! -செண்பக ஜெகதீசன்…
இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ…! -செண்பக ஜெகதீசன்…
. பொய்கள் எல்லாம் மெய்யென்று மேடையேறி நடிப்பதாய்.. புரியாத வாக்குறுதிகள் புதிதுபுதிதாய் அரசமைத்திட ஆதாரமாய்.. ஏமாற்றுதல் என்பது ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட கொள்கையாய்.. ஏணிகளை எட்டி உதைப்பது என்றும் காணும் காட்சியாய்.. சுரண்டல் என்பது சுதந்திரத்தின் ஒரு பாகமாய்.. சூழ்ச்சியுடன் காலை வாருதல் கைவந்த கலையாய்.. எல்லாம் நடப்பது இங்கே அரசியலில்தான்…! -செண்பக ஜெகதீசன்…
கால்வலி கண்டதுதான் மிச்சம்- கொக்குக்கு.. ஓடையில் வரவில்லை ஒரு மீனும்.. வரும் மீனையெல்லாம் வலைபோட்டுத் தடுத்துவிட்டான் குத்தகைதாரன்.. கண்மாய் மீன்களுக்குக் கரைகாணா சந்தேஷம்- இரை கிடைக்கிறதாம் இலவசமாக.. மொத்தமாய் இரையாகப் போவது இப்போது தெரியாது.. இதுதான் இப்போது அரசியலோ.. அப்படியெனில், கொக்கும் மீனும் நாம் தான் ! -செண்பக ஜெகதீசன்..
மாமரத்தில் ஏறி மெலிந்த கிளையைப் பிடித்து மயிரிழையில் தப்பித்து.. செவுனி எறும்புகளிடம் செமத்தியாய்க் கடிவாங்கி.. தோட்டக்காரன் தலையைப் பார்த்து தொடைநடுங்கி ஓடி.. கிடைத்த காயையெல்லாம் மடியில் கட்டி மாறாத கறையாக்கி வந்து.. மற்றவர்களுடன் மணக்க மணக்க பால் வடிய பக்குவமாய்ப் பல்லால் கடித்தும் கல்லில் உடைத்தும் களவாடித் தின்றதுதான் மாங்காய் ! கீத்து மாங்காய் தின்னும் என் பிள்ளை கையில் இருப்பதா மாங்காய் ! -செண்பக ஜெகதீசன்..
கடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் ! இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன் அதையே விதி என்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..
காற்றில் படபடக்கிறது காலண்டர் தாள்.. கை நடுங்குகிறதா, கிழித்தெடுக்கத் தயக்கமா- கடந்துவிட்ட நேற்றை எண்ணி நடுக்கமா ! கிழித்தெறி நேற்றை.. அழித்திடு நினைவில், அன்று பெற்ற அல்லலை.. நினைத்திடு நல்லதை.. நன்றாகிவிடும் இன்று ! நம்பிக்கை- தும்பிக்கையை விட வலியதல்லவா ! -செண்பக ஜெகதீசன்..
திகைக்கின்றன திகார் கம்பிகள்- ஊழலும், எதிர்ப்பும் ஒரே சிறையில்.. போதி மரமே போதையில் தள்ளாட்டம்.. காணாமல்போய்விட்டது காந்திஜியின் கைத்தடி.. எங்கே போகிறோம் நாம், மறுபடியும் கற்காலத்திற்கா- ஏழை இந்தியன் புலம்பல் ! -செண்பக ஜெகதீசன் ..
இத்தோடு இது நின்றிடுமா.. என்றும் தொடரும் தொடர் கதையா- கேட்கிறான் ஏமாந்த ஒருவன் ! -செண்பக ஜெகதீசன்..