அக்கா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 17 in the series 27 செப்டம்பர் 2020

கடல்புத்திரன்

“முதலில் இந்த தலை மறைகளை (முறை,கிறை பார்க்கிற ,மரபுகளை ) ஒழிக்கணும்”சாந்தன் உள்ளுக்குள் குமுறினான்.அவன் ஏற்கனவே …இவற்றை இனம் கண்டு தான் இருந்தான்.இருந்தாலும் எந்த ஒரு மாறுதலையும் அதில் ஏற்படுத்தி விட முடியவில்லை..ஆசிரியையின் பையன் என்ற பிம்பம் வேறு அவனை சுயமாக வாழ விடவில்லை என்று தோன்றுகிறது.அவன் அதை விடுதலைக்கு தாரை வார்க்கப் படட்டும் என்றே செயல்பட்டிருக்கிறான்.அதில் ஏற்பட்ட சிந்தனைகள் அவனை மூடி காலம் முழுதும் கரைந்து விடும் என்று நினைத்திருந்தான். மாறி விட்டது.
சென்ற வாரம் தொலைபேசி அழைப்பில் பேசிய கணேஸ் ,”நான் ஒவ்வொரு நாளும் திருக்குறளில் ஒரு அதிகாரத்தைப் படிக்க தொடங்கி இருக்கிறேன்”என்றான்.திருக்குறளில்,’ அனைத்தும் இருக்கின்றன’என்பதை அவனும் கேள்விப் பட்டேயிருக்கிறான்.இன்னமும் வாசிக்கிறதில் இறங்கவில்லை.”நிலையாமை என்ற அதிகாரத்தை கணனி யூ டியூப்பில் திறந்து கேட்கத் தொடங்கினான்..வாசிக்கப் பஞ்சிபடுறதை இப்படி கேட்கிறதும் பழக்கமாகி வருகிறது.அந்த ஒரு அதிகாரத்திலேயே வாழ்வை முழுதுமே அறிந்து விடலாம் தான்.மனம் கேவிக் கொண்டேயிருக்கிறது. ஆனால்,அதில் அறத்தை அழுத்திச் சொல்லுறது…. மனத்தை ஆற்றவில்லை.

இந்த செய்தியை தங்கச்சி,இன்று அதிகாலை 5 மணி போல தொலைபேசியில் எழுப்பிச் சொல்லிய போது,எழுந்த அதிர்வுகளிலிருந்து இன்னமும் அவனால் மீளவே முடியிறதில்லை.”இன்று அதிகாலை 3.00 மணி போல சந்திரமதியக்கா இறந்து விட்டாள்”என்றாள். பிள்ளைகளிற்கூடாகப் பரவி தெரிவித்துக் கொண்டிருக்கிறாள்.உள்ளம் கேவத் தொடங்கி விட்டது.அண்ணர் சொல்லுற மாதிரி ,அவள் உரிமையுடன் , அதேசமயம் ஒருவகைச் சிரிப்புடனும், ஆச்சிக்கணக்கில் பேசும் பேச்சுக்கள்…,”சித்திராக்கா,ரவியையும்,பாருவையும் விசேடமாகக் கவனிப்பா”என்று சிரிச்சுக் கொண்டே சொல்லுவாள்.சித்திராக்கா,அவனுடைய அம்மா.அம்மாவை அப்படித்தான் கூப்பிடுறவையள்.அதே போல அம்மாட தங்கச்சியான அவளுடைய அம்மாவையும் மாதுரியக்கா என்றே அழைப்பார்கள்.அவள் அம்மாவையும்,அப்பாவையும் இளவயதிலேயே இழந்து விட்டவர்கள்.தாய் இல்லாத தவிப்பைக் கொண்டிருந்தவர்கள்.அவர்களிலே எல்லாரும் பெண்கள்.இவள் மூன்றாவது ஆள்.அவனும் தங்கச்சிமாரும் வவுனியாவில் இருந்த போது,அக்காவும், அண்ணரும் அவர்களோட ஆச்சி வீட்டிலே (அம்மம்மா)இருந்து தான் நகரப் பள்ளிக்கூடங்களில் படித்துக் கொண்டிருந்தார்கள்.அம்மா ஆசிரியை .அம்மா அவனது சகோதரங்களுடன் பழகிற போது பெற்றறோரின் நினைப்பை ஏற்படுத்தி விடும்.பொறாமையுடன் பார்ப்பார்கள். பள்ளியில் நீள விடுற விடுமுறைகளில் எல்லாம் ஆச்சி வீட்டீலே டன்டோரா(சென்று) போட்டு விடுவார்கள்.வருசத்தில் ஒருமுறை வறன்ட் ரயில் டிக்கற்றுகள் (இலவச) கிடைக்கும்.ஒருவாட்டி அவர் வாங்க வேண்டியிருக்கும்.அவர் ஆசிரியப்பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியையானவர்.பல்கலைக்கழகத்தில் படித்தவர்களிற்கு இவர்களை விட இருநூறு ரூபா அதிகமாகக் கையில் மாசச் சம்பளமாகக் கிடைக்கும்.அன்று அவருக்கு எண்னூறு மட்டிலே கையில் கிடைத்துக் கொண்டிருந்தது.ரயில் டிக்கற்றுக்கே கணிசமாகத் தேவைப்பட்டது.பலவித இறுக்கம்.ஆச்சி ஒருவாறு சமாளித்துச் செல்ல துணையாய் இருந்தார்.அதையும் சிரிச்சுக் கொண்டு சொல்லிக் காட்டுவாள்.”சித்திராக்கா,அப்படி இருந்தது சரி என்று இப்ப தான் எனக்கும் பிள்ளைகள் வந்த பிறகு தெரிகிறது”என்பாள்.அப்படி நேரே கதைத்தாலும் வஞ்சகமில்லாத மனம் அவளுக்கு.

“சாந்தன் ,உனக்கு என்ன பிடிக்கும்?”என்று கேட்டு,கேட்டுச் சொன்னால், மினக்கெட்டு நின்று சமைப்பாள்.சமையல் கட்டில் நின்றவாறே …”அவ இப்படி?,இவ எப்படி?…..” என அனைத்தையுமே கதைத்து விடுவார்கள்.அவன் அக்காவிற்கும்,அண்ணருக்கும் கூட ஏச்சு விழும்.ஆனால் கோபமே வராது.அவனுடைய இன்னொரு அக்கா.இவவுடைய கடைசி தங்கச்சி விஜயாவும் இன்னொரு அக்கா தான்.வந்த புதிதில் அவனுக்கு சின்னமுத்து வந்து விட்டது.அவவுக்கு முன்னமே வந்து மாறி இருந்தது.அவவுடைய அப்பார்ட்மெண்டிலேயே மாறும் வரையில் இருந்தவன்.அம்மாட தங்கச்சியிட சகோதரம் வேற ,எங்கட சகோதரம் வேற இல்லை.அவனுடைய மூத்தக்காவுக்கும் அவனுக்கும்பிரச்சனை வாரதில்லை.சந்திரமதி போல வயதில் மூத்தவர்.அண்ணரோடு வந்து விடும்.அப்பவெல்லாம் காபாந்து செய்கிறவள் விஜயாவக்காவே .அண்னரை ஏசி விட அடங்கி விடுவார்.அம்மாவின் சகோதரங்களை ஏசுகிற போது மரியாதை கலந்தே இருக்கும். முகத்தை சிரிப்பில் வைத்தே பேசுவாள்.பாசமாகக் கதைப்பாள்.கண்களில் கண்ணீர் கோர்க்கிறது.ஆனால் , ஆச்சி வைக்கிற ரசம் பற்றிய இரகசியம் அவளிற்கு மட்டுமே தெரியும் அவளிடடம் மாயம் இருந்தது.இயக்கத்தில் இருக்கிற போது திருமலைத் தோழன் கறுவாட்டுக் குழம்பு வைத்தான் என்றால் சோறு எப்படி மறைந்தது எனத் தெரியாமல் முடிந்து விட்டிருக்கும்.அப்படி வைப்பான்.அதேப் போல ஆச்சியும் வைக்கிற ரசத்தோட மட்டுமே சாப்பாட்டை முடித்து விடலாம். அக்கா.அவன் போற நேரம் எல்லாம் ரசம் வைப்பார்.வந்த புதிதில் இங்கே பெடியள்கள் சமறியாகத் தான் இருந்தார்கள்.அக்காவோடத் தங்கி இருந்தாலும் சமறியில் இருந்த நண்பர்கள் இடத்திற்குப் போய் விடுவான்.அராலியில் அவனுக்குத் தெரிந்த அண்ணர் ஒருவர் தம் இரு மகன்களுடனும் தங்கி இருந்தார்.அவரின் மனைவியும் , மகளும் கிராமத்திலேயே இருந்தார்கள்.அவர்களிடமும் போவான்.அடுத்து சந்திரமதியக்கா வீடு அடிக்கடிப் போற வீடு.அக்காட முகவெட்டுடன் சிறிய மகளும்,மகனும் கூட அவனில் மரியாதையாக இருந்தார்கள்.அவர் கணவரும் பழக மிக நல்லவர்.

அவரோட அக்காவிற்கு விளங்காத இயக்கக் கதைகளை பேசிக் கொண்டிருப்பான்.”இப்ப எனக்கு தமிழ் வாசிக்கிறதிலே இடறுபடுகிறேன்”என்று இடையே புகுந்து கூறிச் சிரிப்பார்.”இங்கே ஆங்கிலம் தான் முக்கியம்.அப்படியே போனதாலே இந்த நிலை”என்பார்.”ஆங்கிலம் தெரியாட்டி நல்ல வேலையும் இங்கே எடுக்க முடியாது”என அட்வைஸ் செய்யவும் மறக்க மாட்டார்.அத்தானுக்கு பழையப்பாடல்கள் கேட்பதில் அதிகம் ரசனை .அவர் ஐரோப்பிய நாடுகளில் இருந்த போதும் சேர்த்த பாடல்களையும் பத்திரமாக வைத்திருந்தார்.அவன், அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவேக் கூட அங்கே போய்யிருக்கிறான்.அவனும் பிரேமுமே அடிக்கடி அவர்கள் வீட்டே போறவர்கள்.”நீயும் ,பிரேமும்(அவனை வயதில் குறைந்தவன்,சொந்தம் தான்)தான் வாரவயள்.மிச்ச ஆட்கள் வர பஞ்சிப்படுறவயள்”என்பார். பிரேம் சின்ன வயதிலிருந்தே ஆச்சி வீட்ட வார பெடியன்.யாரும்,” வரப் போறேன்”என்று கேட்டால் “வாங்கோ”என்று வரவழைப்பாள்.அன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.அப்படியும் கூட அவன் அம்மாவோட ,அக்காவோடச் சேர்ந்தும் போய்யிருக்கிறான்.என்னவோ தெரியல்லை இங்கத்தைய குடும்ப வாழ்க்கை….சீராக இருப்பதில்லை.மற்றவர்கள் ‘தங்கள் வீட்டுக்கு அழைப்பதில்லை என்ற மனத் தாங்கலும் ஏற்பட்டிருந்தது.அவன்,பிரேம் எல்லாம் “அக்கா”என்று உரிமையுடன் பிழங்கின வீடு. அவர்களோடு சேர்ந்து ஒரு தடவை பாரதிராஜாவின் “தாஜ்மகால் “திரைப்படம் முழுதாய்ப் பார்த்தான்.”படம் நல்லாய் இருக்கிறது”என்றாள்.மலையாளப்படம் போலவும்,ஜெயமோகனைப் போல மாயாவாதமுமாக எடுக்கப்பட்டிருந்தது,சும்மா பார்க்கலாம் தான்.பிறகு,பிள்ளைகளும் வளர , மாற்றங்களும் வர , போவதும் இல்லாமலே போய் விட்டது.அவன் ‘ஒருநாளாவது அவர்கள் வீட்ட போக வேண்டும் ‘நினைத்துக் கொண்டிருந்தான்.நடக்கவில்லை.இனி ,நடக்கவே முடியாது அவர் பேச்சையும் கேட்க முடியாது. அவளைப் போலவே அவன் மகளுக்கும் கண்ணால் பேசிச் சிரிக்கும் தன்மை இருந்தது. எல்லாமே விரைவாய் விடை பெறுவதற்காய் தாம் இருக்கின்றனவோ?அவனையும் கடவுள் நல்ல மாதிரிப் படைக்கவில்லையே விசாரமாய்யிருக்கிறது.எழுதி,எழுதி,அந்த எழுத்தில் அவர்களை அதிலாவது உயிருடன் பார்க்க முடியுமா?என்று கிறுக்கித் தோற்று தான் போனான்.உள்ளம் கிடந்து கேவி அழுகிறது.அம்மா,மாமாமார்,மச்சான்,நண்பர்,மகள்,அக்கா…இன்னும் எத்தனை, எத்தனைப் பேர்களோ..?

.சிறுபிராயத்தில்,வவுனியாவில் அவனில் அக்கறையாய்,அன்பாய் இருந்த அக்காவிற்குப் பிறகு,அவனில் அதிக அன்பை செலுத்திய அக்கா இவரே.குழந்தைப் பருவத்திலேயே (1 ,4 வயசு மட்டத்தில்) அம்மா ,ஆசிரியையாய் மாற்றல் பெற்று சென்று விட்டிருந்தார்.அப்பர் நிலவளவையாளராக இருந்தவர்.அங்கிருந்த பக்கத்து வீட்டுக் குடும்பமும் இளைப்பாறிய நிலவளவையாளர்க் குடும்பம்.அவர்களின் வளர்ந்த பெண்களிற்கு அவனுடைய வீட்டுச் சிறுசுகளில் அளவுக்கு மிஞ்சிய பாசம் ஏற்பட்டு விட்டது. அன்று,அக்காவும் ,அண்ணரும் கூட சிறுசுகள் தான்.அவர்களிற்கு நாடகம் பழக்கினார்.சாந்தனுக்கும் , தங்கச்சிமாருக்கும் சித்திரம் வரைய பழக்கினார்கள்.மடியில் வைத்து பேசி வரையும் போது தாய்ப்பாசம் கூட தோற்று விடும் போல இருந்தது. இன்று அவர்களின் முகம் நினைவில் இல்லை.
ஆனால் ‘நிலவளவையாளர்’ குடும்பம் என்றது அவர்களுள் ஏற்படுத்திய மாற்றங்கள் அளப்பரியது.பிறகு அந்த வீட்டில் வேற,வேற குடிதனங்களும் வந்து மாறி விட்டன. வளர,வளர யாழ்ப்பாணத்திலிருந்த ஆச்சி வீட்டிற்கும் கிடைக்கிற நீள விடுமுறை நாள்களில் எல்லாம் செல்கிற போது.அங்கே இருக்கிற சந்திரமதியக்கா,அறிவு தெரிந்த நாளிலிருந்து அவனிலே அதிக வாரப்பாடாக இருந்ததே தெரிந்தது .அவருடைய வட்ட முகத்தில் இருந்து விழிக்கும் கருணை பொழியும்,மகிழ்ச்சியான அதே கண்களை இவன் பிறகு,இயக்கத்தில் இருந்த போது கமலியிடமும் பார்த்தான்.அதாவது, இயல்பிலே சந்தோசமாக இருக்கிற கண்கள் மற்றவர்களையும் கலகலப்பாக்கி விடுற தன்மைக் கொண்டவை உலகத்தில் எவருமே தனிமையானவர்களில்லை.உள்ளத்தில் சதா வளைய வந்து கொண்டுதானிருந்தார்கள். .ஆனால் விடுதலையில் இயக்கங்கள், சகோதரக்கொலைகளை முன்னெடுத்து அவற்றை உடைத்தெறிந்தது ஒரு கர்மம்..தோழர் யார்?,எதிரி யார் ?எனத் தெரியாமல் குழப்பி அடித்து விட்டார்களே.

நேரிலே .. உறவுகளோடு இருந்து ஆறுதலாய் ,திருப்தியாய் கதைக்கிற சந்தர்ப்பங்கள் தான் கிடைக்காமல் போய்க் கொண்டேயிருக்கின்றன.அப்படி தவற விட்ட மகிழனின் அம்மா,ராஜா…என சிலரோடு கதைக்காமலே இறந்தும் போய் விட்டார்கள். தனியவாவது போய் இவன் சந்தித்திருக்கலாம் தான்..! கடைசியில் ,இப்படி கிடந்து அங்கலாய்க்கிறவன் .இப்ப, அதே போலவே சந்திரமதியக்காவுடன் கதைக்காமலே போய் விட்டதால் .மனசு கிடந்து துடிக்க அழுகிறது….இந்த மெளன அழுகைகள் அவனுள்ளே அடங்கிப் போகப் போறது தான்.சுயத்தில் , நண்பர்களின் வளர்ச்சியைப் பார்த்து அவன் அப்படியாகவில்லை,இப்படியாகவில்லை என்ற ஆசைகள் சில கிளறும். தோல்வியைச் சந்தித்ததால் மனம் கிடந்து அடித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அந்த உயர்வு,தாழ்ச்சி அவனை அழுத்தமாக வருத்தவில்லை என்றே படுகிறது.வானொலியில் புலம் பெயர்ந்த நாட்டில்,அவனுடன் படித்த சிங்கராசாவின் பல் கிளினிக் பற்றிய விளம்பரத்தைக் கேட்கிற போதெல்லாம்…தோல்வி, முள்ளு கணக்கில் குத்திக் கொண்டே இருக்கிறது.குறைந்த கால நீட்சி கொண்ட மனித வாழ்வில் பொறாமைக் கொள்வது ஏராளம். ஆனால் சேவை வேலையில் எல்லாமே உடலுழைப்பற்ற நீண்ட சலிப்புகள் விரவியேக் கிடக்கின்றன.கிடைக்கிற பணத்தைச் செலவழித்து கெளரவம்,மேல்த்தட்டுத் தன்மை எனக் கிடந்து அந்த சலிப்பை மறக்கக் கற்றுக் கொள்கிறர்கள். வேற ஒன்றுமில்லை சாதியிலும் கூட இப்படித் தான் உயர்வு நவிழ்ச்சிகள் ஏற்படுகின்றன என்பது புரியிற மாதிரியும் இருக்கின்றது. பிறகு, தட்டுகளில் வாழ்றதே விதிகளாகி விடுகிறன.இருக்கிற போதே… ஒரு நொடியில் மூச்சை நிறுத்தி விடுற நிலையாமை வாழ்க்கையை உணராது கட்டுற ஆசைகள்; கோட்டைகள் எத்தனை,எத்தனை? அதிலேயே வீணாக அர்த்தமேயற்று விரயமாகிற வெறுத்துப் போன நாழிகைகள், அதிகரித்துக் கொண்டே போகின்றன.

போர் முடிந்து பத்து வருசங்களிற்கு மேலான போதிலும் விடியல் கிடைக்கவில்லை.83 ஜூலையில் சிறையில் கொன்றது போல மேலும் சிறைகளினுள் கொன்று தள்ளி இருக்கிறார்கள்.யார் இருக்கிறார்கள்?யார் இல்லை என்ற விபரமும் தெரியவில்லை.பல அரசுகள் மாறி விட்டன.” இராணுவ இரகசியங்கள் அரசியல்ப் பிரிவுகளிற்குத் தெரிவதில்லை” என்றுக் கூறி கையையே விரித்துக் கொண்டிருக்கின்றன.சாந்தன், இப்படிப் பலதையோசித்து,யோசித்துக் குழம்பிக் .கொண்டிருந்தான்.சாந்தனுக்கு.அறிவியல் பாதையில் கல்வி பயணிக்க வேண்டும்,அன்பில் வாழ்வு பயணிக்க வேண்டும் என்று ஏங்கியவன். படிக்கிறது ஒன்று,செய்யிற வேலை இன்னொன்று. என்று வேறு படுவதை வெறுப்பவன். தொடர் படியிலேயே மேலும் கல்வி தொடர வேண்டும்.என்பது அவனது ஆசை

இவன், தாய் நாட்டிலே, உயிரியல் படித்தவன், பிறகு கட்டிடக்கலையைப் படிக்கிறான்.அப்படிப் படித்தும் அதிலேயும் வேலை வாய்ப்பே இல்லாது செய்யிற இனப்பிரிபாடுள்ள நாடாக இருந்தது,வெளியிலும் அப்படியே !அவனுடன் நகரப் பள்ளியில் படித்த நகுலன் “எங்கட வகுப்பிலே நான் மட்டும் தான் நோர்வே சென்றாலும் கூட மைக்கிரோ பயோலஜியிலே, அதன் தொடர்ச்சியைப் படிக்கிறேன்”என்று இலங்கைக்கு விடுமுறையில் திரும்பிய போது கொழும்பு பஸ்ஸில் சந்தித்த போது கூறிச் சிரித்தான்.தன்னுடைய பெண் தோழியைக் காட்டி இவவைத் தான் பிறகு மணமுடிக்க இருக்கிறேன்.பார் !,யார் என்று தெரிகிறதா?”என்றும் கேட்டான்.”உன்னோடு டெக்கிலே படித்தவள் தான்.சாந்தி “என்றான்.ஒல்லியாய் இருந்தவள்.அவன் சொன்னதும் உண்மை தான் எ.லெவலில் உயிரியலில் படித்த போது எண்ணி ஆறுபேர் தான்.பல்கலைக்கழகம் சென்றார்கள்.மிச்ச எவருமே இவனைத் தவிர உயிரியலில் தொடர்ந்து படிக்கவே இல்லை. அவனுடன் படித்தவர்கள் சிலர் அவனுக்குத் தெரிந்தவர்களையும் மணமுடிக்கிறார்கள். நண்பர்களைத் தொலைத்த வாழ்க்கையை அகதி நீரோட்டம் இழுத்துச் செல்கிறது.முடிவில்லாத அஞ்ஞானவாசத்திலேயே அவனுக்கும் ,அக்காவைப் போல ஒரு நாள்…ஒரு திடீர் சாவு தான் நிகழக் கிடக்கிறது!.இலங்கையில் இருந்தால் அகால மரணத்திற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன‌.

சிங்களப்பகுதியில், அன்றிலிருந்து இன்று வரையில் தமிழர் அதிகமாக படிக்கிறார்கள் என்ற பொறாமையிலேயே வேகிறார்கள். கல்வியில் எல்லாம் தரப்படுத்தல்ச் சட்டங்கள் வளர்ச்சிக் கண்டு கொடி கட்டிக் கொண்டு பறக்கின்றன. சிங்களமக்கள் , சதா பொய்களை நம்பிக் கொண்டே இருப்பதால் இன்றைய பேரவலப்போரிற்கும் … வந்து விட்டிருக்கிறது.காலனியாட்சிக் காலங்களில் அந்நிலமை இருந்ததில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .பிறகு , நிறைய,நிறைய மாற்றங்கள். இனி அதைப் பேசி என்ன பயன்?,இவர்கள் கேட்கவா போகிறார்கள்; இல்லை , மாறவாப் போகிறார்கள்?

ஒருவருக்கு அடிப்படைவசதிகள் ஒப்பேற்றப்பட்டு விட்டால் , இந்த பணத்தைக் கூட விட்டு, விடலாம் தான். நோட்டுக்களை விட்டு விட்டு ரேசன் சீட்டுக்கள் போல வெறும் சீட்டுகள் கொடுத்தாலேயே கூட போதும் தானே!.பணத்தை ஆண்டவனுக்கு அதை விட முடியாத பலவீனம். சந்திரமதியக்காவின் பளிச்சென முகம்,மல்லிகைப் பூ கணக்கிலே மலர அவனுக்கும் தலை மயிரை வாரி “இப்படித் தான் இருக்க வேணும்”என்று அலங்கரித்து விடுவது ஞாபகம் வருகிறது.அவளுக்கு சூழ உள்ள எல்லாமே பளிச்சென அழகாக இருக்க வேண்டும்.கன்னத்திலே குழி விழுகிற அழகான அக்கா. சிரிச்சபடியே அன்பு இழையோடப் பேசுவாள்.அவனுக்கும் அக்காவின் சந்தோசம் தொற்றிக் கொள்ளும். அவளுள் பாரதியின் சிட்டுக் குருவியின் சந்தோசம் நிறைய இருந்தன.

ஒவ்வொருவருமே சந்தோசமாக பிள்ளைகள் பெற வேண்டும் என விரும்புகிறவர்கள் தானே நம்மவர்களிற்கு .அடிப்படை வசதிகளே கனவுகளாகக் கிடக்கின்றன. நடைமுறையில் வாய்ப்புகள் தடைப்படுத்தப்படுகின்றன அவனை விட நாலோ,ஐந்து வயசு கூடின அக்காவிற்கு மாத்திரம் எல்லாம் கிடைத்து விடுமா,என்ன ? அவளும் இலங்கையிலேயே இருந்து , படித்து ஒரு வேலையும் கிடைத்து பார்க்கிறவளாக இருந்தால் இன்னம் நல்லாய் இருந்திருப்பாள்.அவன் ஆசையும் அது தானே !. அப்படி இருக்கத் தானே முழுமையாக விரும்பினான்.கூடப் படித்தவர்கள் வெளிநாடு போற போதெல்லாம்,”டேய், இங்கேயே படித்து ,படிக்கிற படிப்பாலே நல்லாவே இருப்பேனடா”என்று கூட சவாடல் பேசினானே! நடந்ததா, இருக்க முடிந்ததா ? . “காணி உரிமையை கையளிக்க மாட்டேன்.மாகாணவரசுக்குப் பொலிஸ் ஏற்பட விட மாட்டேன்.”சரி வேண்டாம்.இலங்கையரசின் கீழ் உள்ள ஏதோ ஒரு முட்டாள் அமைச்சின் கீழ் இருக்கட்டும்.கல்வியும்,சுய பல்கலைக்கழகங்களும் ,வேலை வாய்ப்புகளை வழங்கிற விசயங்களையும் மாகாணவரசிலே விட்டு விடலாமல்லவா!தவிர அரச நிர்வாக அமைப்புகளான கிராமசேவகர்,உப அரசாங்க அதிபர், அரசாங்க அதிபர் எல்லாம் எதற்கு?மாகாண அரசாங்கம் என்று ஒன்று தான் இருக்கிறதே,ஏற்கனவே பிச்சைக்கார நாடு இது ! ஏன், வீணான அரச இரு கட்டமைப்புகள்? முட்டாளுடன் முட்டாளாக இழைந்து தான் வாழணுமா,என்ன நியாயம் இது?. எங்கேயோ கண் காணாத தேசத்தில் எல்லாத்தையும் தொலைத்துக் கொண்டு…என்ன ஒரு அழுகின வாழ்க்கை வாழ்கிறார்கள்?.அழுகிற மண்டபத்தில் இருந்து அழுகிய இலங்கையரசையும் திட்டோ,திட்டென ஒரு பாட்டம் திட்டித் தீர்க்க வேண்டும் போல ஆத்திரமும் வருகிறது. அப்பப்ப ,பிரசரும் ஏறுகிறது.

டிஸ்னி உலகத்தில் இருப்பது போல, அக்கா எல்லாத்தையும் மறந்து அங்கிருக்கிற போது அக்கா,பென்சிலால் மினக்கெட்டு, மினக்கெட்டு சதுரம் சதுரம் போட்டு ஒவியர் ஜெயராஜா,மாயாவின் ஒவியத்தை அப்படியே அச்சொட்டாக பிரதி எடுத்தது போல வரைவாள். அதில் ஒரு திறமை ;அவளுக்கு ஒரு சந்தோசம். அன்று எம் கைகளில் கிடைத்த சஞ்சிகைகளில் இவர்களின் படங்களே பெரிதாகவும்,சில கலரிட்டும் வந்தன.மற்றய சஞ்சிகைகள் எங்கே கையில் கிடைத்தன?. கிடைப்பதில்லை.ஓரிரண்டாக, இதுவும் இரவல் வாங்கி கீறிய பிறகு கொடுத்து விடுகிறது தானே இருந்தது. அந்த சஞ்சிகைகளையும் வாசிக்கிறதாலே கூட அவனுக்கும் வாசிக்கிற பழக்கம் வளர்ந்திருக்கலாம்..”ஆனால் வரைபுகள் அந்த மாதிரி இருக்கும்!”.அது அவளின் பிரதான பொழுது போக்காக விளங்கியது.

கடைக்கு என வெளியில் போற போதெல்லாம் அவனையே கூட்டிப் போவாள்.அதற்குத் தான் இந்த மிகை அலங்கரிப்புகள்.சின்ன வயசில் இனிப்பு,பிஸ்கட்டுகள் தந்தாலே குட்டீஸ் வளர்ப்பு பிராணி போல ஒட்டி விடுவார்கள்.குழந்தைப் பிராயமாக நடக்கும் , பேசும் தறுவாய்யில் இருந்தால் அம்மா யார்,அக்கா யார் ?என்பதே தெரியாமல் இருக்கும்.அன்பான அக்காமார்கள்,மற்றும் அம்மாவின் சகோதரர்களும் அவர் தம் பிள்ளைகளும் இவர்களைப் போல நெடுக வந்து தங்கிற,பழகிற அம்மம்மா வீட்டிலே கலகலப்புக்குக் குறைவில்லை தான்.அங்கே, ஒருவித கூட்டுக் குடும்ப நிலையே நிலவி வந்தது.
அப்படி பிழங்கிற யாழ்ப்பாணத்தை பட்டிணமாகவும் வவுனியாவை பட்டிக்காடாகவும் தெரிய வாழ்ந்தவர்கள் தாம் சாந்தனும்,தங்கச்சிமாரும்.அண்ணனும்,அக்காவும் 6ம்,7ம் வகுப்புகளிலிருந்தே நகரப்பள்ளிகூடங்களில் படிக்கிற பட்டணவாசிகளாகி விட்டிருந்தனர். .பட்டிக்காடாக இருந்து இழுபட்டவர்கள் அவனும் தங்கச்சிமாரும் மட்டுமே.

அக்கா,அண்ணாவாலே அம்மாவிற்கும் ஆச்சி வீட்ட போய் வாரது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது.அரசாங்கங்களை இலங்கையரசு இயங்க விடாததால்,அவர்களின் பிற்கோக்குத்தனமான கொள்கைகளை அரச நிர்வாக அமைப்புகளும் அமுல் படுத்தியதாலும்…பிரச்சனைகள் ,பிரச்சனைகள் தாம் எங்கும்.!இது, ஒரு கொடூரம் பிடித்த சாபமாகவேக் கிடந்தது. இனப்பிரச்சனை கூர்மையடைய முதலே ராஜம் சின்னம்மா வெளிநாடு சென்றிருந்தார்.அவரின் உதவியால் அக்காக்கள். ஒவ்வொன்றாக வெளிநாடு செல்லத் தொடங்கினார்கள்.. இந்த அக்காவும் சென்றார் .அச்சமயம் அவன் அம்மாவோடும் , பவளம் சின்னம்மாவோடும் சந்திரமதியக்காவை விமானத்தில் ஏற்றுவதற்காக கொழும்பு சென்றிருக்கிறான்.இப்பத் தான் வறன்ட் டிக்கற்றுகளும் மிச்சமாய் இருக்கின்றதே. அக்காவை ஏற்றுவதற்காக மட்டும் செல்லவில்லை போலவும் தோன்றுகிறது. சின்னம்மா சென்றதில் நியாயம் இருக்கிறது. அம்மா, சென்றதிலும் நியாயம் இருக்கிறது அவன் சென்றது ஏன்? இப்பவும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.அப்படி சென்றிருந்தாலும் அண்ணரோ,அக்காவோ சென்றிருக்க வேண்டும்.அவன் சென்றது தான் புரியவில்லை.வயதாகிறதில்லையா,மறதியும் வருகிறது

திரும்பிய பிறகு, எடுத்த பழைய ஒ.லெவல் தமிழ்ப்பாடப் பரிட்சையில்,’ அவளை வழி அனுப்பி வந்த அனுபவத்தையே’ கட்டுரையாக எழுதி இருந்தான். அதைத் திருத்திய எழுத்தாளர் அப்பச்சி ஆசிரியர் அவனுடைய எழுத்து நடை, பாவிக்கப்பட்டச் சொற்கள் ,அவன் அம்மா டிக்கெற் எடுத்த விபரம் எல்லாம் வைத்து அவனுடைய பேப்பரை இனம் கண்டு விட்டிருந்தார்.அவனை வழியில் சந்தித்த போது “டேய் ,நீ எழுதியிருந்த கட்டுரை சுப்பரடா,’அ’,’சு’எழுத்துக்களைப் பார்த்து எழுதடா,உன்னாலும் நல்லாய் எழுத முடியும்”என்று சொல்லிப் பாராட்டினார். அவர் அவன் வகுப்பு தமிழ் வாத்தியாராக நெடுக இருந்தவர். அப்படியென்றால்,அவன் கிராமப் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிற காலத்திலேயே அக்கா,வெளிய போறது நடந்திருக்கிறது. அவன் என்.சி.ஜி.ஈ படிக்கிற போதாய்யே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு தானே அந்தப் பரிட்சையில் தோற்றுகிறான். அவருடைய பாராட்டு தான் புலம் பெயர்ந்த பிறகு, ஜோர்ஜ் மூலமாக அவனை எழுத்தாளன்னாக்கி இருக்கிறது போல இருக்கிறது.இப்பவும் , அவன் தன்னை எழுத்தாளனாக கருதுவதே இல்லை.ஆனால் ,ஆசிரியர் வாக்கில் ஆசிர்வாதம் இருக்கிறது,சரியோ,பிழையோ அவருக்காக எழுதிக் கொண்டேயிருக்கிறான்.எழுத்தில் இயக்கங்களின் செய்திகளை பிரதானமாக(தாராளமாக) நுழைக்கிறான்.வெற்றிப் பெற்றால்…வரலாறு ! .சரிந்தால் நட்டம் தான்.

இருந்தாலும் எழுதுகிறான்.ஒன்று இரண்டாவது கடைசியில் தேறும் அல்லவா,ஆசிரியரின் வார்த்தையை புறக்கணிக்க முடியாது . ஒரு வகையில் ஓட்டம் தான். “ஒரே ஒரு கதை நல்லாய் வந்து விட்டால் உனக்குள் எழுதும் ஆற்றல் இருக்கிறது, உன்னால் மறுபடியும் எழுத முடியும் தான்” என்கிறார் கணையாழியின் கடைப் பக்கத்தில் பிரபல எழுத்தாளர் சுஜாதா . அவர் சொல்வது போல” முதல் வெற்றி தற்செயலாக நடந்து விடுகிறதாய் இருக்கலாம்.அடுத்ததை வரவாக்க வைக்கிற போது உனக்கு பையித்தியம் இடிக்காமல் இருந்தால் நீ அதிருஸ்டசாலி தான்”என்றும் எழுதிச் சிரிக்கிறார் .

அவன் இயக்கத்தில் இருந்த போது, இயக்கங்களில் பெண்கள் சேர்ந்திருந்தாலும் கூட அவர்களை அச்சமயம் உண்மையிலே எண்ணி விடும் நிலையிலே இருந்தார்கள். கோயில்களில் பெண் தெய்வங்களின் கைகளில் ஆயுதங்களை பார்த்து ஆச்சரியப்படுறவன் ஏற்றியது ஏன்?ஒரு பொருந்தாத் தோற்றத்தையே கொண்டிருக்கிறதே என்று சாந்தன் யோசிக்கிறவன் மிக மோசமான சூழல்களின் போதே அவர்களின் கைகளிலும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் .அங்கே எல்லாம் ஒரு விடுதலைப் போராட்டம் மறைந்தே இருக்கிறது தெரிகிறது.இப்படி பெண்கள் ஆயுதம் தூக்குவதையே இலங்கைப் படையினர் பெரு விருப்புடன் விரும்பி நிற்கின்றனர். போரின் போதே பெண் சுகபோகங்களும் அளவுக்கு மிஞ்சிக் கிடக்கின்றனவே. இவர்களிற்கு இலங்கையின் ஜனாதிபதிகளே சலுகை அளிக்கிறார்கள். ஏற்னவே, பெண்களுக்கெதிராக தமிழ் முட்கள் இருக்கின்றன . இங்கே, இப்ப , இருப்பதோ பெருமுட்கள். இதெல்லாமே தட்டிக் கேட்கப்பட வேண்டாமா ? இந்தியனாமி சுட்டாலும் விசாரணை இல்லை.இலங்கைப்படையினருக்கு எதிராகவும் விசாரணைகள் இல்லை,குறைந்தப்பட்ச தண்டனைக் கூட இல்லை. இப்படிப்பட்ட நாட்டில். களை எடுக்காமல் எந்தப் பயிர் நன்கு வளரும் ? .தமிழருக்கு எல்லா விசயங்களிலுமே இரண்டு மடங்குச் சோதனைகள்.தமிழரின் தாயக எல்லையில் நூறு அடி அகலத்திற்குக் குறையாமல் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பினால் தான் நிம்மதியாய் இருக்கலாம் போல இருக்கிறது. சீனா அந்த விசயத்தில் படு புத்திசாலி தான் . ஆனால், அது இப்ப மதிலை மீறிப் போவதும்…நல்லா இல்லை..மனச்சாட்சி இழந்த மனிதர்கள் ,மனச்சாட்சி இழந்த உலகம்….முதலில் பாலஸ்தீனர்கள் சமாதானம் பெற வேண்டும்.அதை நோக்கிக் கவனத்தைப் பதிப்போம்.அடுத்தவனின் உரிமைகளிற்குப் போராடாமல் எமக்கும் சுதந்திரம் இல்லை. சமூகத்தில், வேறு சாந்தன் தலை மறை விதிகளாலும் மெளனமாக மன அழுத்ததிற்குள்ளாகியே வந்தான்.

ஆனால், இங்கே, நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம்?.

சந்திரமதியக்கா விசயத்திலும் சினிமாப்படங்களில் நடைபெறுகிற மாதிரி மாற்றங்கள் நடைபெற்று விடவில்லை.அகதியாகி விட்ட (தமிழ்) மக்கள் (நாம்) எதைத் தான் பெரிதாய் எதிர் பார்க்கலாம்?.
.அதிசயம் நிகழ்கிறதோ,இல்லையோ மரணங்கள் மனதைப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன.சந்திரமதியக்காவின் உள் ஓலங்கள் சாந்தனின் காதில் கேட்பது போலவே இருந்தது.சாந்தனின் பிராயம் இப்ப மாறி விட்டது.புதியவர்களுடன் பயணங்கள் எனப் போய்க் கொண்டே இருக்கிற போதும் அக்காவின் அன்பை மறக்க முடியவில்லைபாடசாலைக் காலங்களில் ஒரு வகை நண்பர்கள்.பிறகு அவர்கள் பழைய மாணவர்களாகப் போவார்கள் . பல்கலைக்கழகட்திற்குள் பாய்ந்து மாறுபட்ட நண்பர் வளையம் ஒன்று, தொழினுட்பக்கல்லூரி நட்பினர், அடுத்தது இயக்கத் தோழர்கள் .எல்லா அமைப்புகளுடனும் புலம் பெயர்ந்தும் மணமான பின்பும் முன்னைய மாதிரி வளைய வரவும் முடிவதில்லை.சாந்தன் இப்படியேப் பயணித்தான்.

மூத்தக்கா தொலைபேசியில் கதைக்கிற போது ஒன்றைக் குறிப்பிட்டாள் “சந்திராவும்,நானும் ஒரே நேரத்தில் பிறக்கிறதுக்கு இருந்தோம்.சந்திரா தான் பிறப்பாள் என எதிர்பார்த்திருக்க நான் பிறந்து விட்டேன்.அம்மாட தங்கச்சி, சினேகிதிச் சின்னம்மா ,”அக்கா, அவளுக்கு தைச்சச் சட்டைகளை எடுத்து இவளுக்குப் போடு” என்றுக் கொடுத்து விட்டாராம்.அதேச் சட்டைகளை பத்து நாள் தள்ளிப் பிறந்த சந்திராவும் பிறகு போட்டாளாம்”என்று அம்மா சொல்லிச் சிரிப்பார்”என்று நனவில் தோய்ந்து அழுகையில் பேசினாள்.

அவனுடைய மகள் குறைந்த வயதிலே இறந்த போது கூட‌ வாய் விட்டு அழ முடியாத இருந்த நிலையே அக்காவிலேயும் தொடர்கிறது .வாய் விட்டழவும் தனியான மண்டபங்களை எழுப்பினால் நல்லம் போலத் தோன்றுகிறது . தனிப்பாட்டம் அழுது ஓய்ந்தால் தான் உள்ளே உள்ள அழுகைள் எல்லாம் வற்றித் தீரும்.இனப்பிரச்சனையைப் போல தீராத எல்லாப் பிரச்சனைகளையும் உள்ளேயே வைத்திருக்கிறோம். சந்திரமதியக்கா நீயாவது அமைதி அடை.ஏற்கனவே உன்னைக் குறித்து கரிசனைகளுடன் கணிசமான உறவுகள் அங்கே காத்திருக்கிறார்கள்.என் மகளும் கூட உன் வரவைப் பார்த்தே நிற்கிறாள்.சென்று அமைதி அடைவாய்யாக!

“சாந்தன் நிராதரவாய் நின்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தான் .

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13தருணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *