அக்கா !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

மூவரும் சமமாகப்
பங்கிட்டுக் கொள்ள வேண்டிய
அப்பாவின்
பாசத்தைத் தான்மட்டுமே
தட்டிக்கொண்டு போனவள் அக்கா

வீட்டின் முதல் பெண்ணான அவள்
மூக்கில் எப்போதும் நிற்கும் கோபம் நூறு

கிலோமீட்டர் வேகத்தில்
பிறரைத் தாக்கும்

பிள்ளைப் பருவத்தில்
என்னை ‘ஏமாற்றும் ‘ விளையாட்டு
ஒன்று செய்வாள்
நான் வியந்து போவேன்

வலது புறங்கை நடுவிரல்
நடுக்கணு சிறு குழியில்
சாக் – பீஸால் ஒரு புள்ளி…
கையைப் பின்னால் மறைத்து
ஒரு நொடியில்
ஏதாவது ஒரு விரலை மூடி
புள்ளி இடம் மாறியதுபோல் செய்வாள்

” எப்படி ?… ” எனக் கேட்டாலும்
உடனே சொல்லமாட்டாள்

ஒரு நாள் நான் சாப்பிடும்போது
சாம்பாரில் கிடந்த
பலாக்கொட்டைத் தோல்
தொண்டையில் அடைத்துவிட்டது
விக்கித்துப் போனாள் அக்கா
பிள்ளயாருக்கு
சூடம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள்

அக்காவின்
எல்லையில்லாக் கோபம்
எங்கள் பாச உறவைத் துண்டித்துப்
போட்டதெல்லாம் பழங்கதை

இப்போதும் நான்
பறவையாய்ப் பறந்து
அந்த நாட்களின் மேல்
அமர்ந்து கொள்கிறேன் !

Series Navigationபாலின சமத்துவம்“பிரபல” என்றோர் அடைமொழி